திங்கள், 15 பிப்ரவரி, 2016

என் தோழமையே...



நான் இறுதியாக அனுப்பிய குறுஞ்செய்தியை நீ காணவே இல்லை. உன் காலடிகளை சேமிக்கும் போதுதான் நான் அதை தெரிந்துக்கொண்டேன்.
‘செவென் பவுண்ட்’  திரையில் வரும் Ben விடவும் குழப்பவாதி நீ.  கவிதை, கட்டுரை, விமர்சனம்,கதை என சம்பந்தமில்லாத ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்கிறாய்.  உன் குழப்பங்களை நியாயப்படுத்த அதை பிறர் மீது திணித்து ஆலிங்கனம் செய்கிறாய்.

இம்மனநிலை ஒரு மனநோயாளியிடம் கலவி கொள்ளுவதைவிட கடினமான ஒன்று அல்லவா... இருந்தபோதும் உன்னுடன் எனது நட்பு மாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நிலவு மாதிரி பிரகாசம் கொண்டதல்லவா? என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளிவாசல்,  சூரிய உதயத்தின் போது இறக்கைகள் முளைத்து பறப்பதைப் போல ஒரு கணத்தில் பறக்க முற்படுகிறது இந்த தெய்வீக தோழமை.

நீயும் நானும் எழுதிக்கொள்ளாத 100 கடிதங்களை, நம் தோழமையை பேசாத மிச்ச நாட்கள் எழுதி முடித்திருந்தது. தோழனே தற்கொலையை தூண்டும் அந்த பாடலை இன்று நான் நூறாவது முறையாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

அக்கணம்
எங்கோ தன் காதலியை துப்பாக்கியால்
ஒருவன் சுட்டுத்தள்ளினான்
குடும்பத்துடன் ஒரு விபத்து நிகழ்ந்தது
சூடானில் ஓர் அழகிய குழந்தை பிறந்தது
நத்தையின் வீடு சிறுவனால் உடைக்கப்பட்டிருந்தது
இன்னும்
இத்தியாதிகள்... இத்தியாதிகள்...
எல்லாம் சூடான ரத்தத்தில் குளித்த சம்பவங்கள்..

தோழனே- நீ
புது தோழியின் விண்ணப்பத்தை
ஏற்றுக்கொண்டிருக்கிறாய்...
நான் நூறாவது முறையாக
அந்த பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக