செவ்வாய், 27 ஜனவரி, 2015

‘அவர்கள்தான்' சிறந்தவர்கள் எனும் மாயை நமது சாபக்கேடு- சீ. முத்துசாமி

 மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு  140 வயதாகிறது என்று கூறப்படுகிறது. ஆதாரங்கள் எல்லாம் மிகச்சரியாக இருந்தாலும் மலேசிய இலக்கியம் குறித்த வளர்ச்சி இன்னும் கீழ் மட்டத்தில்தான் இருக்கிறது என்ற கருத்தும் பொதுவில் வைக்கத்தான் படுகிறது. ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிடதக்க  சில இலக்கிய ஆளுமைகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். 

குறிப்பாக 1950-களில் மு.ராமையா, கமலாச்சி ஆறுமுகம், நிலாவண்ணன் போன்றவர்களும், 1960-களில் சாமிமூர்த்தி, பாவை, தா.மு.மேரி போன்றவர்களும், 1970-களில் இளஞ்செல்வன், ரெ.கார்த்திகேசு, கோ.முனியாண்டி போன்றவர்களும் மலேசிய தமிழ் இலக்கியத்தில் புது மாறுதல் வடிவத்தை ஏற்படுத்தினார்கள் என்று மலேசிய இலக்கியத்தில் கூறப்படுகிறது. மூத்த எழுத்தாளர்களில் மிகச் சிறந்த 10 பேர் பட்டியலிட்டால் யார் யார் தேருவார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால், அவர்களில் சீ.முத்துசாமி மட்டும் தவிர்க்க முடியாத ஆளுமை என்பது எனக்கு தெரியும். தோட்டப் புறம் சார்ந்த தன் எழுத்தை படைப்பில் தருவித்து தனக்கென்ற ஒரு பாணியை பிடித்துக் கொண்டவர்தான் எழுத்தாளர் சீ.முத்துசாமி. 

அண்மையில் (2012) தனது அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்' என்ற சிறுகதைத் தொகுப்பை தலைநகரில் வெளியீடு செய்தார். இந்த நிகழ்வுக்கு வந்திருந்தவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிகம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பாதவர், கொஞ்சம் மனம் திறந்தார்.

யோகி: ஒரு படைப்பாளன் இயங்கக்கூடிய மனநிலை என்ன?
முத்துசாமி:குறிப்பிட்டு இந்த மனநிலைதான் என்று கூற முடியாது. காரணம் மனிதனின் மனநிலை காலத்துக்குக் காலம், சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மாறக்கூடியது. அப்படி இருக்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் உந்துதல் அல்லது உறுத்துதல் உள்ளுக்குள் ஏற்படும் போது அது ஒரு படைப்பாக ஓர் எழுத்தாளனுக்கு உருவகப்படுகிறது. அப்படி ஏதும் மன நிலையை பாதிக்கவில்லை என்றால் மனக்கிளர்ச்சிகள் தோன்றவில்லை என்றால் ஒரு படைப்பு பிறப்பதற்கு வாய்ப்பில்லை. நிச்சயமாக, ஒரு சூழலில் உறுத்தலும் உந்துதலும் ஏற்படும்போது அது எழுத்தாளனை எழுதச்சொல்லி தொந்தரவு செய்யும். அப்போது பிறக்கும் படைப்புக்கு  ஒரு தனித்துவமும்  ஒரு மதிப்பீடும் இருக்கும்.

யோகி: உங்கள் படைப்பின் நோக்கம் என்ன?
முத்துசாமி: என்னுடைய படைப்பின் முதல் நோக்கம் படைப்பை கலையாக்கம் செய்ய வேண்டும். எந்த ஒரு விஷயமானாலும் அதை கலையாக்கம் செய்ய முடியாவிட்டால் அதனுள் நான் போக மாட்டேன். கலையாக்கம் இருந்தால்தான் படைப்பாக்கம் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.

யோகி: உங்களின் படைப்புகள் தோட்டப்புறம் சார்ந்தவை மட்டும்தான் என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே? அது மட்டுமின்றி தோட்டப் புறம் சார்ந்து வேறு யார் தன் படைப்பைக் கொண்டு வர நினைத்தாலும் அது ஏதோ ஒரு வகையில் முழுமை பெறாமல் இருப்பதோடு பரவலாக பேசப்படுவதும் இல்லை. இதற்கு உங்களின் விளக்கம் என்ன?
முத்துசாமி: பிறரைப் பற்றி கருத்துச் சொல்ல நான் விரும்பவில்லை. காரணம் அவர்களின் மனநிலை என்ன என்பதற்கு அவர்கள்தான் விளக்கமளிக்க வேண்டும். தோட்டப்புற மண் இன்னும் என்னுடலிலும் மனதிலும் ஒட்டி இருக்கிறது. ஒரு வேளை அதனால்தான் என் படைப்புகள் தோட்டம் சார்ந்ததாக இருந்தாலும் பிறரிடமிருந்து  வேறுபடுத்திக் காட்டுகிறது என்று நினைக்கிறேன். செம்மண் வாசம் நிறைந்த என் தோட்டத்து வாழ்கை அனுபவத்தை படைப்பில் கொடுக்கும் போது, நான் இன்னும் சுகமாக உணர்கிறேன். தோட்டங்கள் இன்று பட்டணமாக மாறினாலும் நான் மனதளவில் இன்னும் தோட்டத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

யோகி: உங்கள் எழுத்துக்கு கிடைத்த அங்கிகாரம் என்ன?
முத்துசாமி:  70-களில் இரைகள்' என்ற என் சிறுகதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு கிடைத்தது. அது எனக்குக் கிடைத்த குறிப்பிட்ட அங்கீகாரம் என்றுதான் நினைக்கிறேன்.  காரணம் அந்தக் காலகட்டத்தில் கெடாவில் யாருமே குறிப்பிடும்படி இல்லை. அதற்குப் பிறகுதான் ரெ.கார்த்திகேசு, மீனா என்பவர்கள் வந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு முக்கியமான அடையாளம் என்றே சொல்லலாம். இங்கேயும் இலக்கியம் எழுதக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்று நமது நாட்டு படைப்பாளர்களை திரும்பிப் பார்க்கவைத்தது. 
இரண்டாவதாக  ஆஸ்ட்ரோ நடத்திய குறுநாவல் போட்டியில் எனது மண் புழுக்கள்' நாவலுக்கு பரிசு கிடைத்தது. அதன் பிறகு என் படைப்புகளுக்கு கிடைத்த சின்ன சின்ன பரிசுகள் அதாவது  பத்திரிகைகளின் போட்டி நடத்தி அதன்வழி கிடைத்த பவுன்' பரிசுகள்  அனைத்தையும் என் படைப்புகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே நான் நினைக்கிறேன்.

யோகி: தற்சமயம் வெளியீடு கண்டிருக்கும் சிறுகதை புத்தகம் எந்த காலகட்டத்தில்  எழுதப்பட்டது?
முத்துசாமி:  தொகுப்பில் இருக்கும் 15 கதைகளில் இரண்டு கதைகள் 1970-களில் வந்த கதைகள். மற்றவை 2000-க்குப் பிறகு எழுதப்பட்டது. அனைத்தும் தோட்டப்புறம் சார்ந்ததாக இருந்தாலும், ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகள் சொல்பவை.

யோகி:நீங்கள் மூத்த எழுத்தாளராக, மலேசிய இலக்கியம் குறித்த வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை தெளிவு படுத்துங்கள். மலேசியாவுக்கு வருகை தந்திருந்த சாரு, மலேசியாவில் இலக்கியமே வளரவில்லை என்று சொல்லி இருக்கிறார். அந்த விமர்சனத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
முத்துசாமி: இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வரும் எழுத்தாளர்கள் எதை வைத்து நமது படைப்புகளை நிர்ணயம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் அளவுகோல் என்ன என்று எனக்குப் புரியவில்லை. எந்தப் படைப்பையும் அந்த மண்ணில் இருந்து பார்க்க வேண்டும். அந்த மண்ணில் இருந்து பார்க்கும் போதுதான் அதன் வீரியத்தை உணர முடியும். அதன் தார்ப்பரியத்தை  புரிந்துக்கொள்ள முடியும். இந்த மண்ணுக்குச் சொந்தம் இல்லாதவர்கள் சொல்லும் கருத்து முழுவதையும்  நான் நிராகரிக்கவில்லை என்றாலும் நம் வாழ்க்கை, நம் கல்வி, நம் அரசியல், இன்னும் இத்யாதி இத்யாதிகளை  வாழ்ந்து பார்க்காத அவர்களால் நம் படைப்புகளையும், எழுத்தையும் விமர்சிக்க முடியாது.  10 நாட்கள் சுற்றுலா வரும் இவர்களால் நம் வாழ்கையின் அளவுகோல் இட முடியுமா? அது ஒரு தப்பான கண்ணோட்டமே.

யோகி: (மலேசிய) இளைய சமுதாயத்தின் இலக்கிய வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது?
முத்துசாமி: ஒரு சிறிய வட்டம், நவீன இலக்கியத்தை நோக்கி பயணப்பட்டாலும், மற்றவர்களின் வளர்ச்சி இன்னும் வளராமல்தான் இருக்கிறது. அது அவர்களின் தவறில்லை. பாலர் பள்ளி, ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி, பல்கலைக்கழகம் வரை நவீன இலக்கியத்தை போதிக்கும் சூழல் நம்மிடத்தில் இல்லை. சிலர் இலக்கியம் என்பது ஒரு பொழுது போக்கு என்று நினைக்கிறார்கள். அது வாழ்க்கைக்கு முக்கியம் இல்லை என்றே பேசுகிறார்கள். சினிமாக்காரர்களுக்கு கொடுக்கும்  மரியாதையையும், ஆதரவையும் நம் நாட்டு எழுத்தாளர்களுக்கு  நம் நாட்டு மக்களே தருவதில்லை. இது யாருடைய குறை? சமுதாயத்திற்கும் நம் இலக்கிய வீழ்ச்சி மீது அக்கரை இல்லையே. அப்படி இருக்கும் போது நவீன இலக்கியத்தை நோக்கி இந்த சமுதாயம் எப்படி போகும்? அதற்கு கல்வி துறையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.  முதலில் அவர்களுக்கு நவீன இலக்கியத்தைப் போதிக்க வேண்டும். முக்கியமாக பாடப்புத்தகத்தை  உருவாக்கும் கல்விமான்களுக்கு ஒரு பட்டறை நடத்தப்பட வேண்டும். நவீன இலக்கியம் என்றால் என்ன என்று அவர்களுக்கு போதிக்கப்பட்டு, உணர்த்தப்பட்டால் தானாகவே மாற்றம் நிகழும். இதைத் தவிர வேறு வழி இல்லை.
 
யோகி:ஆஸ்ட்ரோ மற்றும் பொது இயக்கங்கள்  நடத்தும் போட்டிகளில் நம் திறனை நிர்ணயிக்க இந்தியாவிலிருந்து  நீதிபதிகள் வருகிறார்களே? நம்முடைய தரத்தை நிர்ணயிக்கும் தரம் நிறைந்த நீதிபதிகள் நம்மிடையே இல்லையா?
முத்துசாமி: ஏன் இல்லை? இருக்கிறார்கள். அவர்களை ஏற்பாட்டாளர்கள் பயன் படுத்திக்கொள்வதில்லை.  ஒரு சிறந்த விமர்சனத்தை அவர்கள்'தான்  சொல்ல முடியும் என்ற மாயையில் சிலர் இருக்கிறார்கள்.  இது அவர்களின் பார்வைக் கோளாறு. நமக்கிருக்கும் சாபக்கேடுகளில்  இதுவும் ஒன்று.  இது களையப்பட வேண்டும். நம் தரத்தை நாமே நிர்ணயிக்கும் நாள் வரவேண்டும்.

(டிசம்பர் 2012)
     






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக