'காணாமல்போனவர்கள்
வீடு திரும்புகிறார்கள்
பிணங்களாய்
பேச மறுக்கிறார்கள்
எழ அடம்பிடிக்கிறார்கள்
தூங்கியே கிடக்கிறார்கள்
அப்பா அம்மா
சொந்தம், நட்பு
எல்லாரும் வந்தும்
நகர்வதாய் இல்லை
இறுதியில் அனுப்பி
வைக்கின்றோம்
வந்த இடத்தை நோக்கியே!
மற்றொருவர்
காணாமல்போகும்வரை
அவரவர் வழியில்
அவரவர் பயணம்'
தர்மராஜனுக்கு பா.அ.சிவம் எழுதிய கவிதை இது. பா.அ.சிவம் எங்களின் குடும்ப நண்பர். என்னைவிடவும், எனது துணைவர் ஓவியர் சந்துருவிடம் இன்னும் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார். நான் பத்திரிகைத் துறைக்கு வந்த பிறகு மனித வள அமைச்சரின் நிகழ்வுகளைக் குறித்து என்னிடம் தெரியப்படுத்தக் கேட்டிருந்தேன். சிவம் அவ்வமைச்சிக்கு பத்திரிக்கை செயலாளராக இருந்தார். அவரும் குறுஞ்செய்தி வழி தெரியப்படுத்துவார். மாதத்துக்கு ஒரு முறையாவது நாங்கள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால், அனைத்தும் 28 பிப்ரவரியோடு முடிவடைந்துவிட்டது.
அன்று முழுதும் சிவத்தின் இறப்புச் செய்தி பற்றிய விவரங்கள் எல்லா ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டன. என் நண்பர் ஒருவர் கூறினார். சிவத்தைப் பற்றி ஏதேனும் சில பதிவைப் பத்திரிகையில் போடுங்கள். அதுதான் அவருக்குச் செய்யும் மரியாதை என்று. அன்றைய நாளில் சிவத்தின் பெயரை எழுதுவதற்குக் கூட திராணியற்றுக் கிடந்தேன் நான். எப்படி அவரின் பதிவை எழுதுவேன்? சிவத்தின் பெயரை உச்சரிக்க மட்டுமே என்னால் முடிந்தது என்பது நண்பனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்றோடு 10 நாள்களாகிவிட்டன. சிலரின் ஞாபகத்திலிருந்து சிவம் மறக்கப்பட்டு வரலாம். சிலர் இன்னமும் ஞாபகப்படுத்திக்கொண்டு முகநூலில் ஏதாவது ஒரு பதிவு போடுகிறார்கள். சிலர் அவரின் தொலைபேசி எண்ணை அழித்திருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரின் நினைவலைகளிலிருந்து மீளாமல் இருக்கக்கூடும்.
சிவத்தின்மீது இத்தனைபேர் அன்பும், மரியாதையும் வைத்திருப்பது அவருக்கே கூட தெரியாமல் இருக்கக்கூடும். விடுபட்டுப்போனது வார்த்தைகள் மட்டுதான்.
நான் தலைநகருக்கு வந்த பிறகு, பத்திரிகையில் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் பல எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். அதில் சிலர், என் நெருங்கிய நண்பர்களானார்கள். அவர்கள் அனைவரையும் நான் எங்கு எப்போது முதன் முதலில் பார்த்தேன் என்பதை ஒருவாறு யூகித்துக் கூறிவிட முடியும். ஆனால், தொடர்ந்து என் நினைவை அலசிக்கொண்டிருக்கிறேன் சிவத்தை எங்கு முதலில் சந்தித்தேன் என்பதை என்னால் நினைவுபடுத்தவே முடியவில்லை. ஆனால், சிவத்தைவிட அவரின் கவிதைகள்தான் எனக்கு முதலில் அறிமுகமாகியிருந்தன. ‘நயனம்', ‘தென்றல்', ‘செம்பருத்தி' போன்ற இதழ்களில் அவரின் கவிதைகளை வாசித்திருக்கிறேன்.
அவரது முதல் கவிதைத் தொகுப்பு 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது. ‘உனது பெயர் நான்' என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கவிதைப் புத்தகம் அது. சந்துருதான் முழுப்புத்தகத்தையும் வடிவமைத்தார். அவரின் சொந்தப் பதிப்பகமான கடவுள் பதிப்பகம் அதை வெளியீடு செய்திருந்தது. அதிலுள்ள பல கவிதைகள் இழப்பைக் குறித்தும், மரணத்தைக் குறித்தும், துயரத்தைக் குறித்து மட்டுமே இருந்தன. அதில் ஒரு கவிதை....
பாப்பாத்தி
வீட்டைச் சுற்றிச் சுற்றி
வந்துகொண்டிருந்தது
ஒரு வண்ணாத்துப்பூச்சி
தலையில் அமர்ந்தது முதலில்
தோளில் இறங்கியது பின்னால்
விரட்ட முயன்றேன்
மனம் இல்லை
எனினும்,
கன்னத்தை வருடியது
நெற்றியில் அமர்ந்துகொண்டு
எழவில்லை வெகுநேரம்!
விட்டு விட்டேன் அதன் போக்கில்
வேறு யார் செய்வார் இதையெல்லாம்
அம்மாவின் நினைவு நாளில்....!
என்று முடியும் அக்கவிதை துயரம் தோய்ந்த இக்கவிதை மாதிரி இன்னும், பல கவிதைகள் அவர் தொகுப்பில் உள்ளன. வல்லினம் பதிப்பகத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பின்னர் அப்பறவை மிண்டும் திரும்பியது' என்று மொழிபெயர்ப்புக் கவிதைப் புத்தகத்தில், ‘‘என்னுடைய ரசனை சார்ந்தே எனது உலகின் காட்சிகளைப் போலவே வலியை, வெறுமையை, தனிமையை, துரோகத்தை, இயலாமையைப் பதிவுசெய்திருக்கிற கவிதைகளே சட்டென அமர்கின்றன மனதில். எனது கவிதை உலகிலும் கிட்டத்தட்ட ஒரே வகைக் காட்சிகளே அல்லது பார்த்த முகங்களே இருப்பதை உணரலாம்.
சில வேளைகளில் சலிப்பை அல்லது அலட்சியத்தைத் தந்தாலும், பல வேளைகளில் அவற்றை மீண்டும் மீண்டும் இயற்றுவதில் எனக்குக் கொண்டாட்டமே'' என்று அப்புத்தகத்தின் முன்னுரையில் சிவம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் ‘உண்மை' என்ற தலைப்புடைய ஒரு கவிதை இப்படி எழுதப்பட்டிருக்கும்....
'உண்மையான ஒவ்வொன்றும்
எவ்வளவு அழித்தாலும்
நிச்சயம் நிலைத்திருக்கும்
உரம் போடாமலேயே
நிச்சயம் பூப்பூக்கும்
காற்று இல்லாமலேயே
நிச்சயம் பொழிவாக இருக்கும்....!'
அதுதான் சிவம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரின் கவிதைகளிலுள்ள நிலைகள் அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அதைத் தொடர்ந்து சிவம், ‘மலேசிய அரசவமைப்புச் சட்டம்' என்ற புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியீடு செய்திருந்தார்.
சிவம், ‘மௌனம்' என்ற சிற்றிதழில் ஆரம்பகாலத்திலிருந்து கவிதைகளையும், கவிதை குறித்த கட்டுரைகளையும் எழுதி வந்தார். மலேசிய நவீன இலக்கியப் படைப்பாளர்கள் சொர்ப்பமாக இருக்கும் நிலையில், சிவத்துடைய எழுத்து மிகவும் எளிமை வாய்ந்தது; வீரியம் மிக்கது; தனக்கான தனி அடையாளத்தை அது ஏற்படுத்திக்கொண்டது.
அழகான அன்பான உண்மையான ஒரு நண்பனுக்கு (மனிதருக்கு) கண்ணீரை மட்டுமே அஞ்சலியாக என்னால் செலுத்த முடிகிறது. தனது 4-வது கவிதைப் புத்தகத்தை வெளியீடு செய்வதற்கு சிவம் முயற்சி மேற்கொண்டிருந்தார். அதற்கான ஆரம்பகட்ட வேலையிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால், அது முடியும் முன்பே அவரின் வாழ்க்கை அத்தியாயம் நிறைவுபெறாமலேயே முடிந்துவிட்டது. மலேசிய இலக்கிய வரலாற்றுக்கு இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சோகமும், இழப்பும் இதுவே என்று நான் கூறுவேன். சிவத்தின் புத்தகங்களைப் பலர் இரவல் கேட்கிறார்கள். ஏற்கெனவே அவருடைய ‘உனது பெயர் நான்' என்ற புத்தகத்தை ஒரு நண்பனுக்கு இரவல் கொடுத்து இறுதிவரை என் கரம் வந்து சேரவில்லை. அதனால், இருக்கும் புத்தகத்தை இரவல் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். அவரின் புத்தகத்தின் பக்கங்கள் என்னைப் பார்த்து படபடத்துக்கொண்டிருக்கின்றன.
'பிரியத்தின் நினைவாக
நீயளித்த
ஒற்றை ரோஜாவில்
காய்ந்தபோதும்....
உதிராதிருக்கிறது
அன்பின் இதழ்கள்!
- பா.அ.சிவம்.
(10 மார்ச் 2013)
குறிப்பு: சிவம் விருப்பப்பட்ட அவருடைய கவிதை புத்தகம் இன்னும் அச்சிடப்படவில்லை என்பது பெரிய சோகம். அவரின் மடிக்கணினி களவு போனபோது சந்துருவிடம் பக்கம் வடிவமைப்புக்கு கொடுத்த கவிதைகள் மட்டுமே இருந்தன. புதிய கவிதைகள் மற்றும் அச்சில் ஏறாத அவரின் படைப்புகள் அனைத்தும் அந்த மடிக்கணினியோடே போய்விட்டன. சிவத்துடன் கொண்டிருந்த நட்புக்கு உண்மையாக அவருடைய கவிதைகள், கவிதை விமர்சனங்கள், நேர்காணல்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பை பதிப்பிக்க ‘வல்லினம்' குழு எண்ணம் கொண்டிருந்தோம். சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அது நிலுவையில் உள்ளது.
(20.12.2014)

பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பாது..:)
பதிலளிநீக்குஅப்பறவை மீண்டும் திரும்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்கள் வாழ்வில் மறக்க முடியாத பறவை அல்லவா சிவம்
நீக்கு