புதன், 21 பிப்ரவரி, 2018

வாரணாசி 1




நான் வாரணாசி போகிறேன் என சொன்னதுமே, ஏன் இப்போது காசி போகனும்? காசிக்கு இளைஞர்கள் போகக்கூடாது? அது இறுதிகாலத்திற்கான பயணமாக அமைத்துக்கொள்வதுதான் நல்லது. காசி பயணத்தை நாமாக அமைத்துக்கொள்ளக்கூடாது, அதுவாக நம்மை தேர்ந்தெடுக்கும், அதுவரை காத்திருப்பதுதான் உத்தமம். இப்படியான விமர்சனங்களை தாண்டிதான் நான் வாரணாசி செல்ல திட்டமிட்டேன். 2016-ஆம் ஆண்டே அங்கு செல்வதற்கு திட்டமிட்டும் தவிர்க்கவியலாத காரணங்களினால் செல்ல முடியாமல் போனது.



ஆனால், 2017-ஆம் ஆண்டு அந்த பயணத்தை வெற்றி...கரமாக முடித்து வருவதற்கு என் நண்பர் சாகுல் துணையிருந்தார். கிட்டதட்ட அந்தப்பயணத்தை 100 சதவிகிதம் திட்டமிட்டு முடித்துக்கொடுத்ததுமட்டுமல்லாமல் எனக்கு துணையாக அவரும் இந்த பயணத்தில் உடன் வந்தார். எங்களின் மூன்றாண்டு நட்பில் நானும் சாகுலும் இதுவரை மேற்கொண்ட 5 பயணங்களில் வாரணாசி பயணம் என்றென்றும் பேசக்கூடிய பயணமாகும்.


மிக பாதுகாப்பாக உணரக்கூடிய நட்புகள் கிடைப்பதே அரிதாகிவிட்ட காலத்தில் சாகுல், சிவா, இனியன், பாலா, முத்துகிருஷ்ணன் தோழர், சோழ நாகராஜன் சார் உள்ளிட்ட சில நண்பர்கள் எனக்கு கிடைத்தது வரம்தான்.
அதுவும் இயற்கை ஆர்வலராகவும் பயணத்தில் ஆர்வம் உள்ளவரான சாகுலோடு பயணம் போவது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. ஒத்த சிந்தனையாளர்களாக இருவரும் இருந்ததால் சில விஷயங்களை குறிப்பறிந்து நடந்துக்கொள்ளவும் முடிந்தது.


ஆன்மிகத்தில் ஆர்வம் இல்லாத நான் ஏன் வாரணாசிக்கு போக வேண்டும்? மூன்று நாட்கள் தங்கியிருந்து காசியில் நான் பெற்றது என்ன ?



(தொடரும்)
 

சனி, 17 பிப்ரவரி, 2018

`பத்மாவத்` திரைப்பட தடையும், பின்னணியும்


மலேசியத் திரைப்படத் தணிக்கை வாரியம் `பத்மாவத்` திரைப்படத்தை மலேசியாவில் திரையிடத் தடை விதித்திருப்ப து பலருக்கு தெரியாத விஷயமாக இருக்கலாம். குறிப்பாக தமிழ் அல்லாத பிற மொழிபடங்களை பார்ப்பதற்கு ஆர்வம் காடடதவர்கள் மத்தியில்  `பத்மாவத்` என்றொரு படம் எடுக்கப்பட்டிருப்பதும் அதனால் இந்தியாவின் வடமாவிலத்தில்  எழுந்த கலவரங்களையும் அறிய வாய்ப்பில்லை. இந்நிலையில் மலேசியாவில் அந்தப்படத்தை தடை செய்ததற்கான பின்னணியில் உள்ள  காரணங்களை ஒரு மலேசியர்களாக நாம் அறிந்துகொள்வது அவசியம் என தோணுகிறது.

`பத்மாவத்` அல்லது பத்மாவதியின் காவிய வரலாற்றை அல்லது கற்பனை பாத்திரத்தை சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம். சூஃபி கவிஞரான மாலிக் முகம்மது ஜாயஸி கி.பி. 1540-இல் பத்மாவதி  என்ற கற்பனை கதா பாத்திரத்தை உருவாக்கி 'அவதி' மொழியில் கவிதை எழுதி ஒரு கதையைக் கள த்தையே படைத்தார். மற்ற வரலாற்று காவிய நாயகிகளின் இட வரிசையில் இந்த கற்பனை கதா நாயகியும் இடம் பிடித்தாள். கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ராஜபுத்திர மன்னர் ரத்ன சிம்மாவின் மனைவி பத்மாவதி.  ரத்தன் சிம் போரில் கொல்லப்பட்டபின், ராணி பத்மாவதியை அடைவதற்காக டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி என்ற இஸ்லாமிய மன்னன்  படையெடுத்து வருகிறான்.  தன் கற்பை பாதுகாக்க தோழியருடன் தீயில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறாள் பத்மாவதி.

அலாவுதீன் கில்ஜி மற்றும் பத்மாவதிக்கு இடையே தவறான  உறவு இருந்ததாக  அந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதாக எழுந்த சர்சசையில்தான் ராஜா புத்திரர்கள் அமைப்பு கலவரத்தில் இறங்கினார்கள். சுமார் 69 காட்ச்சிகளை தணிக்கை செய்து டிசம்பரில் வெளியாகவிருந்த அந்தப்படத்தை ஜனவரியில் வெளியிடடார்கள். இருந்தபோதும் மலேசிய  திரையரங்குகளில் திரையிடுவதற்கு ஆயுத்தங்கள் செய்திருந்தத பொதும் மலேசியத் திரைப்படத் தணிக்கை வாரியம் அத்திரைப்படத்தை  திரையிடத் தடை விதித்தது. மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகளை பத்மாவத் திரைப்படம் தூண்டிவிடலாம் என்று  தேசிய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர்  மொஹமத் ஜாபி அப்துல் அஜீஸ் கூறியுள்ளார்.  அரசின் இந்த நடவடிக்கை மலேசியர்களிடத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக இப்படத்தின் மலேசிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஆண்டென்னா எண்டர்டெயின்மண்ட்ஸ் தணிக்கை வாரியத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கும் இப்படத்துக்கான தடை உறுதி செய்யப்பட்டுள்ளது.  பம்பாய், வாட்டர் போன்ற திரைப்படங்களும் மதக் காரணங்களுக்காக கடுமையான நெருக்கடியை சந்தித்தன. இப்போது வரை அந்த திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகவில்லை. இஸ்லாமிய சட்டம்  மற்றும் தணிக்கை வாரியத்தின் கெடுபிடி  கடுமையாக இருப்பதே அத்தகைய  திரைப்படங்களுக்குத் தடை விதிக்கக் காரணமாக அமைகிறது.

நாட்டின் முத்திரை இயக்குனரான மறைந்த யாஸ்மின் அமாட் இம்மாதிரியான விதிக்கு இலக்காகி  அதிக நெருக்கடிக்கும்  உள்ளானவர்.  அவரது `முவால்லாவ்` என்ற மலேசியத் திரைப்படம் 2007ஆம் ஆண்டு இங்கு   விதிக்கப்பட்டது. மேலும் சில படங்களை பெரிய போரா ட்டத்துடனே அவர் வெளியீடு செய்திருக்கிறார். சில படங்களை இணையத்தில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கின்றன. 

பத்மாவத் திரைப்படத்தை பொறுத்தவரை தற்போது இஸ்லாமியர்கள் பயப்படும் அளவுக்கோ அல்லது ராஜபுத்திர அமைப்பை சேர்ந்தவர்களுக்கோ எந்த கௌவரக்குறைவும் படத்தில் இல்லை எனவும் சொல்லப்போனால் பாஜிராவ் மஸ்தானி அளவுக்கு இந்த படம் பெரியதாக கவர வில்லை என்று ஒரு சாராரும், பிரமாண்டமான படத்தை யாரும் பார்க்க தவறவேண்டாம் என ஒரு சாராரும் விமர்சனங்கள்  பதிவிடுகின்றனர். கலவரத்தை செய்த நாட்டிலேயே அந்தப்படம் திரைக்கண்டு வரும் வேளையில் மலேசிய திரைப்பட ரசிகர்களுக்கு மலேசிய தணிக்கை வாரியத்தின் இந்த முடிவு பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.
 
குறிப்பு :
இந்த விவகாரம் தொடர்பாக தோழர் மு.நியாஸ் அகமது,  பிபிசி தமிழ் செய்திக்காக என்னிடம்  எடுக்கப்பட்ட்ட சிறிய  நேர்காணலை இந்த லிங்கில் பார்க்கலாம்.
 
 
நன்றி : தோழர் மு.நியாஸ் , பிபிசி தமிழ்

 

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

சேரியாக அறியப்படும் மும்பையின் நாடித்துடிப்பு


'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் வரும்வரை எனக்கு தாராவி குறித்து பெரிய அறிமுகமில்லை. சிற்றிதழ்களில் வெளிவந்த அத்திரைப்பட  விமர்சனங்களில் நிச்சயமாக எங்காவது ஓர் இடத்தில் தாராவியின் பெயர் இடம் பெற்றுவிடும். ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி அதுயென அறிந்துகொண்டதும் அப்போதுதான். நாயகன் திரைப்படமும் தாராவியின் சூழலை அழகாக படம்பிடித்து காட்டியபடம்தான் என்றாலும் 'ஸ்லம்டாக் மில்லியனர்' தற்கால எளிய மனிதர்களின் வாழ்க்கை சூழலையும் ஏழ்மையையும் தாராவியையும் காட்டியது. அதுவரை தாராவி குறித்து அறியாதவர்களையும் வெளிநாட்டவர்களையும் திரும்பி பார்க்கவைத்தது மஹாராஷ்ட்ரா மாநில தலைநகரமான மும்பையில் இருக்கும் தாராவி.

ஊர் கூடி இழுத்தும் 
சேரிக்குள் வரவில்லை 
தேர் 
என்ற வரிகளில் “சேரி” (slum) என்கிற வார்த்தை கொடுக்கும் அழுத்தத்தை குடிசைப்பகுதிகளோ, அழுக்கான தெருக்கள் நிறைந்த பகுதியோ கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.   

ஊடறு பெண்கள் சந்திப்புக்குப்பிறகு தோழிகள் அனைவரும் எங்காவது சுற்றுலா போவது வழக்கம்தானே. எங்கே போகலாம் என எண்ணிக்கொண்டிருக்கையில் எல்லார் மனதிலும் ஏக மனதாக தோன்றியது தாரவிதான். 'தாராவி என் தொட்டில்' என புதிய மாதவி, அவரது  முகநூல் info-வில் கூறியிருப்பார். எதையும் பொத்தாம் பொதுவாக கூறுபவர் இல்லை அவர்.   தாராவி அவர் வாழ்வியலோடு பின்னி பிணைந்தது என இந்த சுற்றுலா மேற்கொள்ளும்வரை எனக்கு தெரியாது.

மும்பையில் நடந்த பெண்கள் சந்திப்புக்குப்பிறகு மறுநாள் தோழிகள் அனைவரும் வாடகை பேருந்தை  எடுத்துக்கொண்டு  குதூகலத்திற்கு எந்த குறைச்சலும் வைக்காமல் கிளம்பினோம். நேரம் மதியத்தை நெறுங்கிக் கொண்டிருந்தது. பாண்டுட்டிலிருந்து தாராவி சற்று தொலைவுதான். நேர்த்தியான தார் சாலைகள், இளசுகளும் பெரியவர்களும் இளைப்பாறும் அழகிய  ஏரி, சாலை நெரிசல் சாலையோரத்து மரங்கள், சமிக்ஞை விளக்குகள், கட்டிடங்கள்  மனிதர்கள் என  காட்சி  படுத்தியபடி விரைந்து நகர்ந்து பேருந்து  தாராவியை நெருங்கிக்கொண்டிருந்தது.
பட்டணத்திற்கு சம்பந்தமில்லாத மாறுதல் தென்பட்டவுடன் என் கேமரா கண்கள் கவனத்தை குவிக்க ஆரம்பித்தன. பேருந்து ஓட்டுனரை வாகனத்தை மெல்ல செலுத்துமாறு கூறிவிட்டு சாலையின் இரு புறத்திலும் நோட்டமிட தொடங்கினோம். மொட்டை மாடிகளில் இடைவிடாது துணிகள் காய்ந்துகொண்டிருந்தன. பல மொட்டை மாடிகளில்   அடைசலாக
இந்த காட்சியை  காண முடிந்ததால் சலவை தொழில் செய்யும் இடமென அனுமானிக்க முடிந்தது.  தாராவியின் தொடக்கம்  அதிலிருந்தே உணர முடிந்தது. தாராவி வந்துவிட்டதென புதிய மாதவி சொன்னார். வண்டியை ஓர் இடமாக நிறுத்த இடம் தேடியத்தில்  அது ஒரு குறுக்கு சந்தில் நுழைந்தது. கூட்டம் கூட்டமாக ஆட்கள்,   எறும்பின் சுறுசுறுப்பில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய பொதியை  தலையில் சுமந்தவாறு இரு ஆடவர்கள் வந்துகொண்டிருந்தனர். குறுக்கு சந்தில் எங்கள் வாகனம் நகர முடியாமல் சிக்கிக்கொண்டதால் அவர்களால் மேற்கொண்டு நகர முடியவில்லை. வேறுஇடம் நோக்கி திரும்பி நடந்தனர். சிக்கிக்கொண்ட வாகனத்தை கவனிக்க கூட யாருக்கும் நேரமில்லை. பணம் ஈட்டுவது மட்டுமே அங்கு பிரதான ஒன்றாக இருந்தது. எல்லா மொழியும் மதமும் இனமும் கலந்த கலவையாக தாராவி இருந்தது. வாகன ஓட்டியின் முயற்சியில் சிக்கியிருந்த பேருந்து உரிய இடத்தில் நிறுத்தப்பட்டது.

பேருந்து நிறுத்தப்பட்ட இடம் ஒரு கோயில். கோயிலின் பக்கத்தில் ஆங்கில தமிழ்ப்பள்ளி.  அண்ணல் அம்பேத்கர்  ஓவியமும் புத்தனின் ஓவியமும் சாயம் மங்கிய சுவரில் வரையப்பட்டிருந்தது. கோயிலுக்குள் நுழைந்தோம். அது சாதாரண கோயிலில்லை.  தாராவிக்கும் அந்த கோயிலுக்கும் தொப்புள் கோடி உறவு உண்டென புதிய மாதவி விளக்க தொடங்கினார். கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தது. எங்களுக்காக சிறப்பு அனுமதி வாங்கி கோயிலின் உள்ளே காண்பதற்கு அழைத்து சென்றார் புதிய மாதவி. பழைய கோயிலாக இருந்தாலும் அதை புதுப்பித்திருந்தனர். சிறிய கோயில்தான். நிகழ்ச்சிகள் செய்யவும் ஒன்று கூடவும் கோயிலுக்கு முன்பு சிறிய மண்டபம் போல ஒதுக்கியிருந்தனர்.

சிவன், விநாயகர், நவகிரகங்கள் என தமிழர்களின் முக்கிய கடவுள்களுக்கு விக்கிரகங்கள் இருந்தன. இந்த தாராவிதான் எங்களின் பலருக்கு  தாய்வீடு என புதிய மாதவி சொன்னார். தாராவி அவரை பரவசப்படுத்திக்கொண்டிருந்ததை அவரின் குரலில் உணர முடிந்தது. கிடைத்திருக்கும் கொஞ்ச நேரத்தில் தாராவிக்குறித்து என்னெல்லாம் எங்களுக்கு சொல்ல முடியுமோ அதையெல்லாம் சொல்வதற்கு முயற்சித்தார். எங்களின் ஐவரை தவிர மற்றவர்களை தாராவி பெரிதாக கவரவில்லை என்றே தோன்றிகியது.தாராவியில் ஷாப்பிங் செய்வதற்கு இலங்கை தோழியர் சிலர் சென்றுவிட்டனர். 

கோயிலுக்கு அருகில் இயங்கிக்கொண்டிருந்த பி.எஸ்.ஐ .ஏ.எஸ் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் எங்களை கவனித்தபடி இருந்தனர். குடிசை வீடுகள் என கூறப்படும் வீடுகளை காட்டுவதற்கு புதிய மாதவி அழைத்து சென்றார். தமிழர்கள் வாழும் பகுதியாக இருந்தாலும் வேறுமொழி பேசுபவர்களும் அங்கு  வசித்தனர். ஆடவர் ஒருவர் எங்கோ ஒரு மூலையில் வாளியில்  தண்ணீரை நிரப்பி எடுத்துபோய்க்கொண்டிருந்தார். நைட் டீ அணிந்திருந்த சில பெண்கள் அங்கிருக்கவும் மெல்ல பேச்சு கொடுத்தோம். கோழி கூண்டைவிட கொஞ்சம் பெரியதாக இருக்கும் கூண்டுதான் அவர்களின் வீடாக இருந்தது. கழிப்பறை இல்லாத வீடுகள். இரண்டடிக்கு குளிப்பதற்கு மட்டும் இடத்தை ஒதுக்கிவிட்டு உறங்குவதற்கு மட்டும் கட்டியது போல இருந்தது. உங்களின் ஒருவரின் வீடடை நாங்கள் காண முடியுமா என்று கேட்டோம்.  

சற்று யோசித்த பெண்களில் ஒருவர் என்  வீட்டுக்கு வாங்க என அழைத்துச் சென்றார். சராரியாக ஒருவர் வீட்டில் இருக்கும் தனியறையை விட சிறியதாக இருந்தது அவர்களின் வீடு. எப்படி இதில் தங்குவதற்கு சாத்தியம் என கேட்க தோன்றினாலும் கேட்கவில்லை. காரணம் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அப்படித்தானே வாழ்ந்து முடிந்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறையும் இந்த வரலாற்றை தொடர்வதற்கு வளர்ந்து நிற்கும்போது சாத்தியமா என்ற கேள்வி அபத்தம் தானே. இது எனது சொந்த வீடு. சமீபத்தில்தான் வாங்கினேன். என ஒரு தொகையை சொன்னார். ஆனாலும் அந்த வீட்டிற்கான நிலம் அவர்களுக்கு இல்லையாம். வீடு மட்டும்தான் சொந்தம். நிலம் வேறொருவரின் பெயரில் இருக்கிறது. அவருக்கு நிலத்திற்கான பணத்தை ஒவ்வொருமாதமும் வாடகையாக வழங்க வேண்டும். இதுபோக மேல்மாடியில் இதேபோலவொரு வீட்டை அமைத்து வோறொரு குடும்பம் வாழ்கிறார்கள்.
அவர்களின் சொந்த வீடு என்று கூறப்படும் வீட்டை தன் விருப்பம்போல கொஞ்சம் மாறுதல் செய்தலோ அல்லது மறு சீரமைப்பு செய்தலோ அதற்கான அனுமதியை நிலத்து உரிமைக்காரரிடம் பெற வேண்டும். இல்லையென்றால் அது அவர்களுக்கு வேறொரு சிக்கலை ஏற்படுத்தும். இப்படியான  ஒப்பந்தம் எந்த விதத்தில் சரியென தெரியவில்லை. இம்மாதியான ஒப்பந்தங்களை தாராவி வாசிகளே ஏற்படுத்திக்கொண்டு அதை காலகாலமாக பின்பற்றி வருகிறார்கள் என அவர்களோடு உரையாடுகளியில் ஏறக்குறைய புரிய முடிந்தது. தாராவி என்பது அரசுக்களால் கட்டமைக்கப்பட்டு, வளர்த்தப்பட்ட இடம் அல்ல. முழுக்க முழுக்க மக்கள் சக்தியாலும், அவர்களின் உழைப்பாலும் கட்டமைக்கப்பட்ட இடம் என இணையத்தில் வாசிக்க நேர்ந்ததை இங்கு பதிவு செய்ய நினைக்கிறேன்.

2.1 சதுர கிலோமீட்டர்   பரப்பளவில் தன வாழ்க்கையையும்  வாழ்வாதாரத்தையும் நிர்ணயம் செய்திருக்கும் கிட்டதட்ட ஆறு லட்சம் குடிசை வாசிகளில் அதிகானோர் தமிழர்கள் தான். அதிலும் குறிப்பாக மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி முதலிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம் என கூறப்படுகிறது. 
சிறு சிறு அழுக்கு கால்வாய்கள் அல்லது அவை சாக்கடைகளாக கூட இருக்கலாம்,  மணத்தை பரப்பிக்கொண்டு புதிதாக அங்கு வந்திருக்கும் எங்களின் சிலரை கவனத்தை ஈர்த்தது. இம்மாதிரியான சாக்கடைகளை நான் மும்பாயின் பல இடங்களில் கண்டேன். இஸ்லாமியர்களையும் அங்கு அதிகமாக காணமுடிந்தது. பர்தா அணிந்த பெண்கள் மிக இயல்பாகவே நாங்கள் காணச்சென்ற சாலையில் நடமாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், முகத்தில் ஒருவகை கலவரம் இருக்கவே செய்தது. அல்லது எனக்குத்தான் அப்படி தோன்றியதா தெரியவில்லை. மும்பை கலவரம் ஏனோ என் சிந்தனைக்கு வந்துகொண்டே இருந்தது. புதியவர்களான எங்களை பல கேள்விகளோடு பார்க்கும் அந்த பார்வைகளை எதிர்கொள்ள மிகவும் சிரமாக எனக்கு இருந்தது. அச்சம், புகைப்படம் எடுக்கக்கூட தடைபோட்டது. தள்ளுவண்டியில்  புளியம் பழம், கரும்பு, சர்பத்,  விற்கும் சிறுவணிகர்கள் அடுத்தப்படுத்து எங்களை கடந்துச் செல்லும்போது புளியம் பழம் மீது  எழுந்த ஆவலில் அனைவருமே புளியம்பழம் வாங்கினோம். பச்சை காய். துவர்ப்பாக இருந்தது. 

கைரேகை பார்க்கும் குறிசொல்லும் தமிழ் மாதர்கள்கள் எங்களை பார்த்ததும் நெருங்கி வந்தனர். முகத்தை பார்த்தே குறிசொல்ல தொடங்கிவிட்டிருந்தனர். பெரிய நெற்றிபோட்டோடு இருந்த அவர்களை புகைப்படம் எடுக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. ஐஸ்வரியம் போய்விடும் என்கிறார்கள். அதற்குள் நான் அவர்களில் ஒருவரை புகைப்படம் எடுத்திருந்தேன். அவர்கள் எதிர்பார்த்து வந்த வருமானம் கிடைக்காமல் போகவே அவர்களுக்கு அது ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். யாருமே கைஜோசியம் பார்க்க மாட்டார்கள் என அனுமானித்ததும் அங்கிருந்து அவர்கள்  கிளம்பி விட்டார்கள். இம்மாதிரியாக தமிழர்களின் நாகரிங்களிலும் கலாச்சாரங்களிலும் இடம்பெறும் சின்ன சின்ன விஷயங்கள் கூட வேர்விட்டு வளர்ந்திருப்பதை தாராவியில்  பார்க்க முடிந்தது.
பெருநகரம் வர்த்தகத்தில் முக்கிய நகரம் என்று பெருமையாக கூறப்படும் இந்த பெருநகரத்தில் சரிசமமாக வறுமையும் சேரி மக்களையும் காணமுடிந்தது.  அழகிய  அரபிக்கடலில் மௌனமாக கலந்து ஓடும் சாக்கடைகள் போல மும்பாய் மக்களின் ஏழ்மையும் எளிமையும் மறைமுகமாக வெளிநாடுகளுக்கு காட்டப்படுகிறது. தாராவியில் துயர்மிகு கதைகளை கேட்க வேண்டாம். பார்த்தாலே அது நமக்கு உணர்த்திவிடும். உங்கள் கதைகளை சொல்லுங்கள் என கேட்பதும் வன்முறை என்றே எனக்கு தோன்றுகிறது. எங்கள்
கதை உங்களுக்கு தெரியும் வேண்டும் என்றால் அதை வாழ்ந்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்று ஒரு குரல் எழுந்து வந்தாலும் அதை ஏந்தி கொண்டுவந்து எங்கு இறக்கிவைத்து.  வாழ்விடம் பத்தி பேசிய அப்பெண்களை, அவர்களின் உணர்வுகளை மேலும் கிளறிப்பார்க்க எனக்கு துணிவில்லை. ஆனாலும் எனக்கு அது வேறு ஒன்றை நினைவூட்டியது. 



1990-ல் பிரபல இயக்குநர் சாய் பரஞ்சபேயின் (Sai Paranjpye) இயக்கத்தில் வெளியான திஷா” (Disha) என்ற திரைப்படத்தில், மும்பைக்கு சற்று தொலைவில் உள்ளபக்குரி” (Bakuri) எனும் கிராமத்தில் இருந்து  வசந்த் (நானா படேகர்) என்பவன் திருமணம் செய்து மனைவியை கிராமத்தில் விட்டுவிட்டு, மும்பையில் சம்பாதிக்க வந்திருப்பார். அங்கு அவர் தங்குவதற்கு அவருடைய ஊர்க்காரர் இருக்கும் ஓர் அறையை சென்று சேர்வார். அந்தப்பகுதி தாராவி  என நம்மால் பார்த்தவுடன் புரிந்துகொள்ள முடியும். அந்த ஓர் அறையில் 40 பேர் ஆண்கள் இருப்பார்கள், அனைவருமே அவரது ஊரைச் சேர்ந்தவர்கள். ஒரு நூற்பாலையில் வேலைக்கு சேர்ந்தவுடன் வசந்த்க்கு ஓர் ஆசை வரும், தனது புதுமனைவியை  அழைத்து வந்து மும்பையை சுற்றிக் காட்ட வேண்டும், அவளோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என. அழைத்தும் வருவார். வசந்த்தின் வேறொரு நண்பன் அவனது உறவினர் குடும்பம் எங்கோ சுற்றுலா போயிருப்பதாகவும், வசந்த் மற்றும் அவன் மனைவி அவர்கள் வீட்டில் ஒருவாரம் தங்கிக்கொள்ளலாம் என அந்த வீட்டுச் சாவியை கொடுத்துவிட்டு போவான். ஒரு நாள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஊர் சுற்றுவார்கள்….மறுநாள் இரவு தூங்கப்போகும்போது அந்த குடும்பத்தினர் எதிர்பாராதவிதமாக வந்து இறங்குவார்கள். இப்போது வசந்த் அவனுடைய பழைய அறையான 40 ஆண்கள் தங்கியிருக்கும் தாராவி அறைக்குச் சென்று மனைவியோடு அந்த இரவை அங்கே கழிக்கும்நிலைக்குத் தள்ளப்படுவார். அவ்விரவில் வசந்த்தின் மனைவிக்கு நிகழும் மன உளைச்சல்கள், மறுநாளே  மும்பையை விட்டு கிளம்பி அவள் கிராமத்துக்கு செல்ல வைத்துவிடும். அவளை பேருந்தில் ஏற்றிவிட்டு வந்து அங்கே ஓரமாக இருக்கும் கழிவறைக்குள் நுழைந்து தனது இயலாமை, அவமானம், மன அழுத்தம் ஆகியவற்றால் அழத் துவங்குவான் வசந்த்.

நன்றி அம்ருதா ஜனவரி 2018 மாத இதழ்

சனி, 6 ஜனவரி, 2018

வேடந்தாங்கல் பறவைகள் விட்டுசென்ற ஞாபகங்கள்...3




ஊடறு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள் அமர்வு மிக முக்கியமானதாக எனக்கு அமைந்தது. பார்வையாளர்களாக மற்றும் பங்கேற்பாளராக வந்திருந்த அனைவருக்குமே அது முக்கியமான அமர்வுதான். காரணம் பேசவிருந்த தலைப்பும் அதைப் பேசுவதற்கு முன்வந்திருந்த தோழிகளும் அதற்கான தயார் நிலைகளும் அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் குறிப்பிட்ட நேரத்தை தவறிதான் சந்திப்புத் தொடங்கப்பட்டது.


முதல் அமர்வாக 'உரிமைகளுக்கெல்லாம் சொந்தக்காரி' என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து வந்திருந்த விஜியும், 'இலங்கை வாழ்வியலில் கூத்துக்களை' என்ற தலைப்பில் கூத்துக்கலையில் ஆர்வமுள்ள யாழினி யோகேஸ்வரனும் உரையாடலை தொடங்கினர்.  மட்டக்களப்பு, சூரிய பெண்கள் அபிவிருத்தி அமைப்புப் பில் செயற்பாட்டாளராக  இருக்கும் விஜி தனக்கு வழங்கப்படட தலைப்புக்கு மிகப் பொருத்தமானவர் என்பதை அவரின் உரையில் வெளிப்படுத்தினார். மட்டக்களப்பு சூரிய பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் மூலமாகப் பெண்கள் சம்பந்தப்பட்ட பல இன்னல்களைப் பார்த்தவர் விஜி . உரிமை என்றால் என்னவென்றே சில பெண்கள் அறியாத வேளையில் இதுகுறித்துப் பேசுவது காலத்தின் கட்டாயமாக அமைந்திருக்கிறது
விஜி
கூத்துக்களைத் தொடர்பாகத் தன் சுய அனுபவ பூர்வமான மற்றும் ஆய்வுப்பூர்வமான தகவல்களை யாழினி வெளிப்படுத்தினார். குறிப்பாக இலங்கை போர் காலக்கடத்தின்போது, மீட்பு மையங்களில் இருக்கும் கலைஞர்கள் எவ்வாறு தங்களின் கலைதாகத்தை தீர்ந்துகொண்டார்கள் என்பதை யாழினி தெளிவுபடுத்தியபோது பெரும் மௌனமே நிலவியது. எல்லாம் இழந்துவிட்ட நிலையில் கலைக்காக ஆபத்தான விஷயங்களை முன்னெடுக்கக் கலைஞர்கள் செய்யத் தயங்கவில்லை. தனது உரையின் இறுதியில் யாழி கூத்துக்கலையின் பாடல் ஒன்றை பாடி முடித்தது மிகவும் நிறைவான முடிவாகப் பலரையும் கவர்ந்திருந்தது.

யாழினி
இரண்டாவது அமர்வில் 'சதையை முதலீடும் உலகச் சந்தை' என்ற தலைப்பில் டெல்லியிலிருந்து வந்திருந்த மாலதி மைத்திரியும் , 'சமூகப் படிநிலையில் பெண்ணியக் கோட்ப்பாடுகள்' என்ற தலைப்பில் சென்னையிலிருந்து வந்திருந்த கல்பனாவும் பேசினார்கள். பெண்ணிய ஆளுமைகள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் நன்கு அறியப்படும் இந்த இரு ஆளுமைகளின் உரைகள் மிகவும் கவனத்தைக் குவிக்கும் வகையில் அமைந்தது.  



கல்பனா

மாலதி மைத்திரி

ஆழியாளும் ரஜனியும்
தொடர்ந்து மத்திய உணவுக்குப் பின் மூன்றாவது அமர்வு ஆரம்பமானது.
தனியுரிமைச் சட்டங்களும் பெண்களும் (இந்தியாவை முன்வைத்து) மதுரையின் பிரபல வழக்கறிஞ்சர் ரஜனி பேசினார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட ரஜனி சமூகத்தின் மீது தனக்கிருக்கும் கோபத்தையும் அதே நகைச்சுவையோடு வெளிப்படுத்திப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். வழக்கறிஞர்களுக்கேகூடத் தேவைப்படும் அடிப்படை தேவைகளைப் பெற போராட வேண்டியுள்ளதை ரஜனி சிரித்துக்கொண்டே கூறினாலும் அதில் பொதிந்திருக்கும் தனியுரிமை தொடர்பான அவலம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்

வீடும் பாராளுமன்றமும் - மைய நீரோட்டத்தில் சுழிகளும் எதிர் நீச்சலும் (அவுஸ்திரேலியாவை முன்வைத்து) இலங்கையிலிருந்து ஆஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஆழியாள் பேசினார். முன்னதாக இந்தத் தலைப்பை நான் வாசிக்கும்போது புரிந்துகொள்ளவே எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. என்னதான் பேச போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த எனக்குச் சில புதிய விஷயங்கள் அறிந்துகொள்ளும் வகையில் இருந்தது. எந்த நாட்டிலும் பெண்களுக்கான சுய கௌரவத்தைப் போராடித்தான் பெற வேண்டும் என்பதும் அதைத் தக்க வைத்துக்கொள்ளத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதும் நிதர்சன உண்மையாகிவிட்டதை பெண்கள் தொடர்ந்து கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவரின் அமர்வு பேசியது.

சுரேகாவும் எஸ்தரும்


 நான்காவது அமர்வில் இரண்டு இலங்கை தோழிகள் தங்கள் அனுபவங்கள் ஊடாகக் கட்டுரையைச் சமர்ப்பித்தனர். ஊடறு பெண்கள் சந்திப்புக்கு முதன்முதலாக வந்திருந்த சுரேகா பரம் குழந்தை தொழிலாளர்கள் குறித்துப் பேசினார். இளம்பெண்ணான சுரேகா அந்த இளமைக்கே உண்டான துள்ளல் அவர் மொழியில் தெரிந்தது

தொடர்ந்து இலங்கை சமூகத்தில் மூட நம்பிக்கைகள் ஊடான வாழ்வியல் சூழல் என்ற தலைப்பில் எஸ்தர் பேசினார். மிகவும் சுவாரஷ்யமான தனது பேச்சின் வாயிலாகக் கனமாகிபோயிருந்த பல அமர்வுகளில் சோர்வை தூசி தட்டி எறிந்துவிட்டு நிமிந்து உட்கா வைத்தார். தன் இட்சைக்கு இணங்கவில்லை என்றால் பூனையாக மாற்றிவிடுவேன் எனப் போலி பூஜாரிக்கு இரையான ஒரு அப்பாவி பெண்ணின் கதை பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தக் காலத்திலும் மூடநம்பிக்கைகளை நம்பி தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் பெண்களையும் அவர்களைப் பகடைக்காயாக்கி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கும் இந்தச் சமுதாயத்தையும் கேள்விகேட்கும் வகையில் அமைந்தது எஸ்தரின் உரை.


றஞ்சி, ஆனந்தி, யோகி
தொடர்ந்து ஐந்தாவது அமர்வாகப் புலம் பெயர் வாழ்வியலில் இரண்டாம் தலைமுறையினர் எதிர்நோக்கும் பிரச்னைகளும் சிக்கல்களும் என்ற தலைப்பில் ஐரோப்பிய வாழ்க்கையை முன்வைத்து ஊடறுவின் ரஞ்சியும் ஆனந்தியும் உரையாற்றினர். மலேசிய வாழ்க்கையை முன்வைத்து நான் (யோகி) பேசினேன்.

மும்பை தோழிகள்

அடுத்த அமர்வு (ஆறாவது) வந்திருந்த ஊடறு பெண்கள் அனைவரும் காத்திருந்த அமர்வாகும். அதுவரை எங்களின் உரைகளையும் கேள்வி பதில்களையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் பங்கெடுத்துக்கொண்டும் இருந்த மும்பை தோழிகள் இந்த அமர்வில் அவர்களின் குரல்களை எங்களுக்கு வெளிப்படுத்தினர். இந்தியாவின் முக்கியப் பெருநகரத்தில் வாழும் பெண்களுக்கு என்ன கஷ்டம் இருந்திட போகுது எனப் பலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். எத்தனை முட்டாள் தனமான எண்ணம் என உடைத்தெறிந்தது அவர்களின் உரை.  நடுத்தர வர்கத்தினர் மலம் கழிக்கக்கூடச் சுகாதாரமான இடம் இல்லை என்று தோழி அனிதா டேவிட் தனது அனுபவித்திலிருந்து பேசும்போதும்,  இந்த மும்பை நகரத்தில் பல ஆண்டுகளாக வாழ்கிறேன்; இது என்னைப் பிரமிக்க வைத்ததே இல்லை என்று அவர் கூறும்போதும் ஜிகுனா தூவப்பட்டு மேலே மினுமினுப்பாகவும் உள்ளே அவலங்களை நிறைசெய்யாமல் இருக்கும் இந்திய அரசாங்கத்தின் மீது எவ்வித மரியாதையும் வரவில்லை.


இந்த அமர்வில் தோழி ஈஸ்வரி தங்க பாண்டியன், தோழி அனிதா டேவிட், மகிழ்ச்சி இயக்கத்திலிருந்து வந்திருந்த மற்றுமொரு தோழி தங்களின் காந்திரமான உரையை நிகழ்தி அமர்ந்தனர். மிகவும் கனமான மேலும் இருண்மையான சுழலுக்குள் மும்பை சிக்கிக்கொண்ட மாதிரியான உணர்வு  எங்கள் அனைவரின் முகத்திலும் தெரிந்தது. சூடான தேநீர் எங்களை ஆசுவாசப்படுத்த கொஞ்சம் உதவியது. இறுதி அமர்வாக 2017 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களின் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.


இலங்கையின் சூரிய பெண்கள் அமைப்பு வெயிட் 'கூற்று' புத்தகத்தை ஆழியாளும், ஆழியாளின் 'பூவுலகை கற்றலும் கேட்டலும்' புத்தகத்தை இலங்கையைச் சேர்ந்த விஜியும், மாலதி மைத்திரியின் 'முட்கம்பிகளால் கூடு பின்னும் பறவை' புத்தகத்தை லண்டனைச் சேர்ந்த ஆனந்தியும், புதிய மாதவியின் 'பெண்ணுடல் பேராயுதம்' என்ற புத்தகத்தை ரஞ்சியும் அறிமுகமும் விமர்சனமும் செய்தார்கள்.


கடந்த நவம்பர் 25 ,26இல் ஊடறுவின் பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் :- மும்பை.பங்கு பற்றிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடிய மாலதி கல்பனாவின் உரைகளை ஒலிவடிவில் இங்கு கேட்கலாம்....
https://yourlisten.com/oodaru/malathy-2
https://yourlisten.com/oodaru/kalpana-2
https://yourlisten.com/oodaru/rajani-4
https://yourlisten.com/oodaru/aaliyaal-2017
https://yourlisten.com/oodaru/esther-2017
https://yourlisten.com/oodaru/sureka-2017

பெண்ணிய உரைகளை ஒலிவடிவதில் எடிட் செய்து கொடுத்தவர் ஊடறு ரஞ்சி. அவருக்கு நன்றி.


இந்நிகழ்வோடு பெண்கள் சந்திப்பு நிறைவடிந்தது.  இக்கருத்தரங்கையும் நிகழ்வுகளையும் நடத்த ஊடறுவுடன்  கைகோர்த்தவர்கள்


1) திருவள்ளுவர் மன்றம், பாண்டூப்
2) தமிழ் இலெமுரியா அறக்கட்டளை, மும்பை
3) தமிழர் நலக்கூட்டமைப்பு - மும்பை
4) விழித்தெழு இயக்கம் - மும்பை
5) பகுத்தறிவாளர் கழகம் - மும்பை
6) ஸ்பேரோ - மும்பை
7) மகிழ்ச்சி பெண்கள் அமைப்பு - மும்பை
8) வணக்கம் மும்பை வார இதழ் - மும்பை

9) புஸ்தகா மின்னூல் அமைப்பு - பெங்களூர்.

அவர்கள் அனைவருக்கும் நன்றி. 

மறுநாள் நாங்கள் மும்பை தமிழர்களின் உறவு பாலமான தாராவிக்கு சென்றிருந்தோம்.. அங்கு

(தொடரும்)