வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை 7

Palong Tin Museum

 ஈப்போவில் கிடைக்கும் முக்கியக் கனிம பொருள் ஈயமாகும். ஈப்போ என்றாலே ஈயம்தான் பலரின் நினைவுக்கு வரும். ஈய உற்பத்தியின் போது பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சிலவற்றை Chin Pek Soo & Sons நிறுவனம் தன்னார்வ முறையில் வழங்கி Palong Tin Museum என்ற அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறது. ஈப்போ மாநில நகராண்மைக் கழகத்தோடு இணைந்து ஏற்படுத்தியிருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் ஈயம் உற்பத்திக்கு பயன்படுத்திய இயந்திரங்களை வைத்திருக்கிறார்கள்.




ஆனால், அவ்வியந்திரங்கள் பயன்பாடு குறித்த எந்த விளக்கமும் அங்கில்லாதது கொஞ்சம் புரிதல் சிக்கலை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் நாங்களாகவே எங்கள் கற்பனைக்குத் தோன்றிய படி அந்த இயந்திரங்களுக்கு விளக்கம் கற்பித்துக்கொண்டிருந்தோம். அதுவும் நன்றாகவே இருந்தது.

அந்த அருங்காட்சியகத்திற்குச் செல்லும் வழி, ஒரு தொங்கும் பாலத்தில் தொடங்குகிறது. பாரிஸில் இருக்கும் பாலத்தைப் போன்று அதை வடிவமைத்திருக்கிறார்கள். அதோடு, அந்தப் பாலத்தின் நெடுகிலும் தொங்கவிட்டிருக்கும் காதல் பூட்டுகள், பல கதைகளைப் பேசக்கூடியதாகச் சாவிகளைத் தொலைத்துக் காத்துக்கொண்டிருக்கிறது.

இரவு நேரத்தில்தான் பல வண்ண விளக்குகளோடு தூங்கா நகரம்போல விழித்திருக்குமாம் அந்த இடம். அங்கேயிருந்த ஆலமரம் ஒன்றில் பல செடிகளும் கொடிகளும் அடைக்கலமடைந்து உயிர் பெற்று செழித்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. மிக ஆச்சரியமுடன் அதைப் பார்த்த ஆதவன் அண்ணா, இந்தச் செடிகள் அதற்கான நீரை எவ்வாறு பெறுகின்றன என்று தேடினார். ஆலமரத்தின் வேர் அதற்கான எல்லாப் பதிலையும் கூறியது.

புதன், 28 செப்டம்பர், 2016

கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை 6

 கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை

சிபில் கார்த்திகேசு கல்லரை...
பிறப்பு: 3 செப்டம்பர் 1899
இறப்பு: 12 ஜூன் 1948

நான் ஈப்போ செல்வதற்கு இரண்டு காரணங்கள்தான் இருந்தது. ஒன்று, ஆதவன் அண்ணாவோடு கொஞ்ச நேரத்தை செலவிடனும். இரண்டு, சிபில் கார்த்திகேசு துயில் கொண்டிருக்கும் கல்லரைக்கு வணக்கம் செய்யனும். அந்தக் கல்லரைக்கு அழைத்துச் சொல்வதாகத் தோழர் நாகேந்திரன் உறுதி கூறிய பிறகுதான் நான் இந்தப் பயணத்தையே உறுதி செய்திருந்தேன்.
அடுத்து நாங்கள் அந்தக் கல்லரைக்குதான் சென்றோம். வசதியான,அழகான சீன தேவாலயம் அது. பல கல்லறைகள் மலாயா சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்டவையாகும்.

1800 களில் பிறந்தவர்களும் அதிலும் வெள்ளையர்களின் கல்லரைகள் அங்கு அதிகமாகக் காண முடிந்தது. சிபில் கார்த்திகேசு துயில் கொண்டிருக்கும் அந்தக் கல்லரையைத் தோழர் நாகேந்திரன் இதற்கு முன்பு ஒருமுறை தரிசித்துவிட்டிருந்ததால், நாங்கள் தேடுவதற்கு வழியில்லாமல் சுலபமாகிவிட்டது. நேராகக் கல்லரைக்குச் சென்றோம்.

சிபில் கார்த்திகேசு ஒரு கம்யீனிஸ் ஆதரவாளர். மலாயாவில் ஜப்பானிய ஆக்கரமிப்பு இருந்தபோது, தாதியாக இருந்த இவரும் இவரின் கணவரும் ஜப்பானியர்களை எதிர்த்த கம்யூனிஸ் ஆதவாளர்களுக்கு ஆதரவு தந்து வைத்தியம் செய்தனர். இதனால், ஜப்பானியர்களால் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளானார்.

1945-ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயாவில் இருந்து
வெளியேறிய பின் ஆங்கிலேயர்கள் மலாயாவில் ஆட்சி அமைத்தனர். கேப்டன் டேவிட் மெக்பர்லேன் என்பவர் சிபில் கார்த்திகேசுவை சிறையிலிருந்து மீட்டு இங்கிலாந்திற்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். சித்திரவதையும் கடுமையான உடற்சிதைவு காரணமாகச் சிபில் சில நாட்களிலேயே மரணமடைந்தார்.

அவருடைய நல்லுடல் ஸ்காட்லாந்தில் புதைக்கப்பட்டது. பின்னர் அவரின் பூதவுடல் சமாதியிலிருந்து 20.3.1949-ல் தோண்டி எடுக்கப்பட்டு, கப்பல் வழியாகப் பினாங்கிற்குக் கொண்டு வரப்பட்டு ஈப்போவில் அடக்கம் செய்யப்பட்டது. சிபில் கார்த்திகேசுக்கு மனப்பூர்வமான வணக்கத்தைக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

முன்னதாக சிபில் தனது கிளினிக்கை வைத்திருந்த இடத்தை தோழர் நாகேந்திரன் காட்டினார். தற்போது அது யாருடைய உடையாகவோ மறுசீரமைப்பு செய்யப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. சிபிலின் வரலாற்று குறிப்பில் அந்த கிளினிக் இனி மெல்ல மறைக்கப்படலாம்...

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 7


நேரம் மாலையை நெருங்கிக்கொண்டிருந்ததால் தாமதிக்காமல் நாங்கள் கடாரம் நோக்கி பயணப்பட்டோம். பினாங்கில் இருக்கும் எங்களுக்குக் கெடா மாநிலத்தில் இருக்கும் லெம்பா பூஜாங் எனப்படும் பூஜாங் பள்ளத்தாக்கிற்குச் செல்வதற்கு இருவழி பாதைகள் இருக்கின்றன. கடல்வழி பயணத்தில் விரைவாகவும், விரைவு சாலை வழி சிலமணி நேரத்திலும் சென்றடையலாம். எங்களின் வாடகை வண்டி ஓட்டுனர், போகும்போது கடல்வழி பயணத்தையும் திரும்பும்போது சாலை வழிப்பயணத்தையும் தேர்ந்தெடுத்தார்.

கடல்வழி பயணத்தில் நாங்கள் பயணம் செய்திருந்த வாடகை வண்டி, நாங்கள் இறங்காமலேயே ஃபெர்ரில் ஏறியது. அது ஒரு நல்ல அனுபவம். நாங்கள் காரிலேயே அமர்ந்திருக்க ஃபெர்ரி அக்கரையை நோக்கி நகர்ந்தது. பின் நாங்கள் வண்டியிலிருந்து இறங்கி பினாங்கு கடலை பார்வையிட்டோம். எதிர்காற்று அடிக்க, புகைப்படங்களை எடுத்து கொண்டோம். இன்னும் நிறைய நிறைய ஃபெர்ரிகள், படகுகள், கப்பல்கள் என ரொம்பவும் பரபரப்பான கடல் அது. சில பறவைகளையும் காண முடிந்தது.

கரையை அடைந்து கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் பூஜாங் பள்ளத்தாக்கை அடைந்தோம். எனக்கு இது இரண்டாவது பயணமாக இருந்ததால் தோழிகளுக்கு விளக்கம் சொல்வதிலும், அது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்வதிலும் எனக்குச் சிக்கல் ஏற்படவில்லை.

மேலும், வந்திருந்த தோழிகளில் சிலர் டாக்டர் ஜெயபாரதி கடாரம் குறித்துச் செய்திருந்த ஆய்வு காணொலிகள் மற்றும் கட்டுரைகளை வாசித்திருந்தனர். குறிப்பாகப் புதியமாதவி (மா) க்கு இது குறித்த கூடுதல் தகவல்கள் தெரிந்திருந்தது. டாக்டர் ஜெயபாரதி வீட்டில் அறிய பல புத்தகங்கள் இருப்பதாகவும் அதைக் காண்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா எனக் கேட்டிருந்தார். நண்பர் பாலமுருகனை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசுகையில் டாக்டர் ஜெயபாரதியின் துணைவியார் வேறு மாநிலத்தில் மகன் வீட்டில் வசிப்பதாகவும் கெடாவில் தற்போது அவர் இல்லை என்ற
தகவல் கிடைத்தது.

கொஞ்சம் ஏமாற்றமான விஷயமாக இருந்தாலும் ராஜேந்திர சோழனுடையது எனும் சண்டிகளை நேரில் சென்று கண்டுவருவது என்ற திட்டத்தை எல்லோரும் ஆமோதித்திருந்தனர்.

கெடா என்ற சொல் கடாரம் என்ற சொல்லின் வழி வந்தது எனவும் அதாவது, கி.பி 1030-ஆம் ஆண்டுகளில் ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் தென் கிழக்காசியாவின் மீது படை எடுத்த போது, அந்நிலத்திற்குக் கடாரம் என்று பெயரிட்டதாகவும் அது சுத்தமான தமிழ்ப் பெயர் என்றும், அந்தப் பெயரே மருவி நாளடைவில் கெடா என்று பெயர் பெற்றதாகவும் இணையத்தளச் செய்திகள் கூறுகின்றன. அதோடு ராஜேந்திர சோழன் காலத்தில் சோழனால் அமைக்கப்பட்ட வியாபார மையமாகவும், ஆட்சி புரியும் இடமாகவும் விளங்கிய இடம்தான் பூஜாங் பள்ளத்தாக்கு என்றும் அறியப்படுகிறது.

‘பட்டிணபாலை' என்ற தமிழ் கவிதையில் இதுக்குறித்த விவரம் இருந்ததாகவும், சோழன் காலத்தில் கடாரத்திற்கு வந்துசென்ற சீன, அரபு உள்ளிட்ட நாடுகளின் நூல்களில் பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்த நிறையத் தகவல்கள் இருப்பதாகவும், இத்தகவலை ஆராய்ச்சியாளர்களான Braddly மற்றும் Wheatly-தெளிவுபடுத்தியிருப்பதாகவும் இணையச் செய்திகள் ஆதரப்பூர்வமாக நமக்கு முன்வைக்கின்றன.

அதற்கு ஆதாரமாக 1980-ஆம் ஆண்டுக் கெடா மாநிலத்தில் கெடா மாநில சுல்தானால் திறந்து வைக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகத்தில் சில அகழ்வாய்வுச் சின்னங்கள், உடைந்த சிலைகள், கட்டட அமைப்புகள் போன்றவை இந்திய அடையாளங்களின் தொடர்பாகச் சாட்சியமளித்தாலும், புத்த வழிபாட்டுக்கான அடையாளங்களும் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளையும் காண முடிகிறது.

இது தொடர்பாக நான் 2015-ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையை
http://yogiperiyasamy.blogspot.my/2014/09/1.html
சொடுக்கி வாசிக்கவும்.

நாங்கள் சென்ற நேரத்தில் ஏதோ ஒரு கல்லூரி தொடர்பான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்ததால் தொல்பொருள் அருங்காட்சியகம் மூடப் பட்டிருந்தது. எங்களுக்கு உள்சென்று காணக்கூடிய வாய்ப்பு அமையவில்லை. கடாரம் ராஜேந்திர சோழனுடையது என்ற கருத்தில் நம்பிக்கை இருந்தாலும், அந்தச் சண்டிகள் குறித்த சந்தேகங்கள் நிறையவே இன்னும் இருக்கிறது எனக்கு. அந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் பெண்கள் அணியும் அழகு ஆபரண மணிகள், பற்றிக் கூறிக்கொண்டிருந்தேன்.

இதுகுறித்து   புதிய மாதவி(மா) அனுப்பிய, டாக்டர் ஜெயபாரதி எழுதியிருந்த தகவலை இங்கே பகிர்வது உகந்ததாகும்.

கடாரச் சின்னங்கள் மியூசீயத்துக்குச்செல்பவர்கள் கூட்டம் அதிகமாகிவருகிறது. வருகிறவர்களில் பலர் இரண்டு மூன்று பஸ்களில் வருகிறார்கள். அதுவோ சிறிய இடம். ஒரே சமயத்தில் எண்பது பேர் உள்ளே நுழைந்து பார்த்து என்னத்தை அறிந்துகொள்ளப்போகிறார்கள்?
முதலில் விஷய ஞானம் உள்ளவர்கள் உடன் இருத்தல் மிகவும் அவசியம். அவர்கள் மியூஸீயத்தில் இருக்கும் அரும்பொருட்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லி விளக்கங்கள் கொடுக்கவேண்டும்

அந்த மியூஸீயத்தில் இந்து சமயம், பௌத்த சமயம் ஆகியவை சம்பந்தப்பட்ட சின்னங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் பின்னணிகள் இருக்கும்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மணிக்கற்களை அந்த வட்டாரத்தில் எடுத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைச் சிறிய பாலிதீன் பைகளில் போட்டு வைத்திருக்கிறார்கள். பார்வையாளர்கள் போகிற போக்கில் சற்று எட்டத்தில் இருந்து நகர்ந்தவாக்கில் பார்ப்பார்கள்; அல்லது பார்க்காமல் சென்றுவிடுவார்கள். அந்தக் கற்களில் பல மாதிரி உண்டு. அவற்றில் குறிப்பாகச் சொல்லப் போனால் சில நீலமணிக் கற்கள் இருக்கின்றன. அவற்றை Corundum கொருண்டம் என்று இங்கிலீஷில் குறிப்பிடுவார்கள்.  அந்தக் கற்களைத் தமிழில் குருந்தக் கல் என்று குறிப்பிடுகிறோம். அந்த வகைக் கற்கள் கொங்குநாட்டுப் பகுதியில் ஒரு மலையில் கிடைக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே யவனர்கள் அந்தக் குருந்தக் கற்களை மிகுதியாக வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

 12-03-2000-த்தில் கடாரம் சம்பந்தமாக டாக்குமெண்டரி எடுப்பதற்காக கோவாக்காரப் பெண்மணி ஒருவரின் தலைமையில் ஒரு குழு வந்திருந்தது.  சிங்கப்பூர் அரசுக்காக அந்த டாக்குமெண்டரி எடுக்கப்பட்டது. என்னைச் சந்திக்குமாறு சிங்கப்பூரில் யாரோ சொல்லி அனுப்பியிருந்தார்கள். பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. மியூஸீயத்தில் அந்த கோவாப் பெண் நீலமணிக் கற்களையே பார்த்தவாறு நின்றிருந்தார்.
நான் அந்தக் கற்களைப் பற்றி சொல்லி கொங்குநாட்டு நீலமலையைப் பற்றியும் சொல்லிக்கொண்டு வந்தேன். அங்கு மட்டும்தான் அந்தக் கற்கள் விளைந்தன. அந்தப் பெண் கவனமாகக்கேட்டுவிட்டு, "நான் இதே கற்களை அரிக்கமேட்டில் பார்த்திருக்கிறேன்", என்றார். அங்கும் டாக்குமெண்டரி எடுத்திருக்கிறார்கள்.

அரிக்கமேடு என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த பெரிய பட்டினம். அங்கு யவனர் குடியிருப்பு, வர்த்தகமையம் ஆகியவை இருந்தன. யவனர்கள் அரிக்கமேட்டை 'பொதுக்கே' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். கடாரத்துக்கும் அந்த நீலமணிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அவைதாம் மற்ற சிறு சிறு மணிக் கற்களுடன் அந்தப் பாலிதீன் பைகளில் கலந்து இருந்தனபாருங்கள்......, ஒரே ஒரு அயிட்டம். சின்னஞ்சிறு கற்கள். ஒதுக்குப் புறமாய்க் கலந்து கிடந்தன. ஆனால் அவற்றில் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது.

- ref: Dr jeyabharathi

அந்தத் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு நீலக்கல் தமிழ்நாட்டின் அடிக்கமேடு என்ற பகுதியில்  மட்டுமே கிடைக்கக் கூடியது என்றும், அது ஒரு முக்கிய ஆதரம் என்றும் கூறினார். இது குறித்து புதிய மாதவி (மா) டாக்டர் ஜெயபாரதி எழுதியிருந்த பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார்.

 எனக்கு முற்றிலும் அது புதிய தகவலாக இருந்தது. மீண்டும் ஒரு முறை வரும்போது நிச்சயமாக அதைக் காண வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

வனத்தின் மத்தியில் இன்னும் ரகசியங்கள் முடிச்சுகளோடு இருக்கும் ராஜேந்திர சோழனின் கடாரம், என்றும் அவற்றை அவிழ்க்கபோவது இல்லை என்பது மட்டும் தெரிகிறது. ரகசியங்களின் புதையல்தான் கடாரம். எங்களின் கண்களும் ராஜேந்திர சோழனின் சண்டிகளைப் பார்த்தது. எங்களின் கால்களும் கடாரம் மண்ணில் பட்டிருக்கிறது என்று மட்டும்தான் இப்போது சொல்லும்படியாக இருக்கிறது.

(தொடரும்)

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

அவனின் உதிரமாகப் பிறப்பேன் (புனைவு கடிதம்)

ஓவியம் Gustav Klimt

‘மடையான்’ பட்சியைப் பார்த்திருப்பீர்கள்.. உங்களுக்குத் தெரியும். அது ஒரு பரிதாபத்துக்குரிய தோற்றம் கொண்டது. பலமுறை அதை நான் தனிமையில் பார்த்திருக்கிறேன். சொல்லபோனால் தினமும் பார்க்கிறேன். அதன் முதிர்ந்து உதிர்ந்த சிறகுகளும் இரவுகளில் அதன் கேவல் சத்தமும் ஏனோ நான் மட்டும் பார்பதாகவும் எனக்கு மட்டும் கேட்பதாகவும் அமைந்துவிடுகிறது.

அந்த வளர்ச்சியில்லாத ஊனமடைந்த மரத்தைதான் என் மடையான் பட்சி அதன் இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. ‘என் மடையான்’ என்பது தேவையில்லாத ஒரு சொல்லாடல்தான். பட்சியின்  தனி வாழ்க்கையை நான் எப்படி அறிவேன். அதனுடைய கதை எத்தனை ரகசியமோ அத்தனை ரகசியங்களானவன் நீயும். உன் ரகசியங்களுக்குள் இருக்கும் ரகசியங்களில் அதன் இருண்மையில் ஒரு புள்ளியாக என்னை எங்கோ நீ நிறுத்தி வைத்திருக்கிறாய்.

உன் சுதந்திர வாழ்க்கையில் வந்து போகும் பெண்களும் நானும் ஒன்றல்ல என்று நீ அடிக்கடி சொன்ன அந்த வார்த்தையை என்னால் எப்போதும் மறக்க முடியவில்லை. என்னைக் கிரக்கமடையச் செய்யவும் உன் வசப்படுத்தவும் சொன்ன வார்த்தையல்ல அது. அந்த வார்த்தையில் நான் வாழ்த்திருந்தேன். என் வாழ்க்கையை நீங்கள் ஒன்றை வார்த்தையில் காட்டியிருந்தீர்கள். உணர்ந்து என்னை உணர்த்தவும் செய்திருந்தீர்கள்.  சூரிய ஒளியைவிடவும் தூய்மையானது உங்கள் வார்த்தைகள். பரிசுத்தமானது நீங்கள் காட்டிய காதல். ஆனாலும், இந்தப் பிரிவு அவசியமான ஒன்றாகவே தோன்றுகிறது. ஒரு வகையில் நீங்கள் என் அப்பாவையே ஞாபகப்படுத்துகிறீர்கள்.

நான் 10 வயது மாணவியாக இருந்தேன்.

கீழே கிடந்தது என்று ஒரு பென்சிலை எடுத்துவந்தேன், பள்ளி முடிந்து வருகையில் ஒரு முறை தோழியின் வீட்டிற்குப் போய்வந்தேன், வீட்டு சாவியை ஒரு முறை எங்கோ தவறவிட்டேன், 4-ஆம் ஆண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினேன், பள்ளியில் வகுப்புத் தலைமை மாணவியாக இருந்தபோது ஆண் மாணவனுக்குக் கதை புத்தகம் வாசிக்கக் கொடுத்தேன், தோழியுடன் ஒரு முறை தேவாலயம் போனேன். இதற்கெல்லாம் என் அப்பா கொடுத்த பரிசு மரண அடிகள். அடிக்கு பயந்து வீட்டை வீட்டு ஓடிவிட வேண்டும் என்று நாள் முழுக்க யோசித்து விட்டு, தைரியமில்லாமல் அடியை வாங்கிக்கொண்டு செத்துப் பிழைத்திருக்கிறேன்.

இந்தச் சமூதாயத்தின் முன் கௌரவமாக வாழ வேண்டும் என்றும் தன் பெண்ணின் ஒழுக்கத்திற்குப் பாதகமாக யாரும் பேசிவிடக்கூடாது என்பதற்காகவும் கண்டிப்புடன் இருப்பதாகத் தன் மீதே வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டவர் என் அப்பா. அவர் சொன்ன அந்த ஒழுக்கத்தின் மீதும் சமூதாயத்தின் மீதும், சிறுநீர் கழித்து, சிறுநீர் கழித்து இன்று  இஷ்டம்போல்  விளையாடிக்கொண்டிருக்கிறேன்.

பெண்ணின் ஒழுக்கத்தை  எந்தக் கொம்பனாலும் பாதுகாக்க  முடியபோவதில்லை.  அது அவளுக்கு உட்பட்டது. அவளின் உடல் பலஹீனத்தை வைத்து மட்டுமே ஒவ்வொரு ஆணும் ஆதிக்கம் செலுத்த முனைக்கிறான். தகப்பனானாலும், தமையனானாலும் கணவனானாலும் தோழனானாலும் எல்லாருக்கும் இந்த விதி சாரும். ராமன் இல்லாத ஊரில் சீதையைத் தேடுவதும், ராவணர்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் மண்டோதரியை மறப்பதும் இங்கு வாடிக்கையான ஒன்றுதானே.

புராதண கதைகளில் வரும் நாயகியாக நினைத்தால் அனைத்தும் புனைவுகளில்தான் போய் முடியும். பெண்களுக்கு மூன்றாவது கண்ணை வரைந்து, கட்டுபாடற்ற சுதந்திரமானவன் என்று சொல்லிக்கொண்ட நீ, என்னிடமிருந்து அதே சமூகத்தின் பேரைச் சொல்லி ஓடி மறைந்தது கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது.

அந்த அடர்ந்த வனத்தில் நாம் போய்க் கொண்டிருந்தோம். மயிலின் இறகு ஒன்று மரங்களுக்கு இடையே தெரிந்தது. வண்டியை தூரத்திலேயே நிறுத்தினாய். என்னை மட்டும் சத்தமில்லாமல் இறங்கி போய்ப் புகைப்படம் எடுத்துவர அனுமதித்தாய். பெரிய மயில் அது. அதன் வண்ணங்களும் நீண்ட இறகுகளும், கம்பீரமும் பிரமித்துப் போனேன். சருகுகள் ஓசை எழுப்பாதபடி மயிலை புகைப்படம் எடுத்து திரும்பினேன். நீ என் பின்னால் நிற்பதை நான் அறியவில்லை. அந்த மயிலுக்கு என் விம்மல்கூடக் கேட்க முடியாத படி என் மூச்சடங்க இதழ் பதித்தாய். கீழே விழவிருந்த என் புகைப்படக்கருவியை ஒரு கையில் நீ பிடித்துவிட்ட போதும், உன் இதழின் இறுக்கம் தளரவில்லை. பருந்து காலில் சிக்கிய பாம்பைபோல என்னால் உன்னிடமிருந்து மீட்க முடியவில்லை. சட்டென விழுந்த ஒரு சொட்டுக் கண்ணீர் என்னை உன்னிடமிருந்து மீட்டது தந்தது. அதன் உப்பு உன் நாவில் ருசித்துச் சுயநினைவை ஏற்படுத்தியிருக்கலாம். என்னை வளைத்துப் பிடித்திருந்த உன் ஒற்றைக் கரத்திலிருந்து என்னை விடுதலை செய்தாய். உன் வர்ண தூரிகையையும் அங்கேதான் நீயும் நழுவவிட்டிருந்தாய். இங்கிதம் தெரிந்தவன் நீ. அதன் பிறகு அதைப் பற்றி என்னிடம் ஒரு போதும் பேசியது இல்லை.

ஓவியம் Pablo Picasso

நான் இறுதியாக புகைத்த சாம்பலில் சரிந்து விழுந்தது எல்லா கற்பனைகளும்.  மெல்ல நமக்குள்  தொடங்கியது ஒரு நெருக்கமும் அதன் பின்பான ஒரு பிரிவும். ஒரு போதும் நான் உன் வாழ்க்கைக்குள் வர நினைக்கவே இல்லை. ஆனால், அதற்காக நான் உன்னை மறுதலித்துவிட்டேன் என்பது அர்த்தமல்ல. மடையான் பறவையைப்போல நீ எனக்குள்ளிருந்தே என்னை அழைப்பதாகக் கனவு கண்டு விழிக்கிறேன். உன் திசை பார்த்து திரும்பும் அதே வேளையில் கண்ணை மூடிக்கொண்டு காட்டுத் தனமாகப் பின் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன்.

நீ என்னை பார்த்து பயப்படுவதாக சொன்னாய். என் எழுத்து, என் சுபாவம், என் சுயம் அனைத்திலும் மரணத்தின் வாடை வீசுவதாக கூறினாய். விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா எழுதிய 'தீவிரவாதி, அவன் கவனித்துக்கொண்டிருக்கிறான்' என்று பிரம்மராஜன் மொழி பெயர்த்த கவிதையை இங்கு நினைவிற்கு கொண்டு வருகிறேன். காலம் எப்படி ஊர்கிறது என்ற கவிதை வரியை உனக்கு சமர்பிக்கிறேன். வெடிகுண்டு அது வெடித்து விடுவதில்தான் இருக்கிறது போராட்டம்.

இந்த வாழ்க்கை எனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுக்கிறது. அதே அளவுக்கு நம்மிடமிருந்து எவ்வளவோ மறைத்தும் வைத்துள்ளது. அனைத்தையும் நாம் சுகித்துவிட முடியாது. அதன் ரகசியங்கள் நழுவி செல்பவை. ஏதோ ஒரு பிரதேசத்தில் இருந்துக்கொண்டு என் பதிவுகளில் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறாய்.. நினைவிருக்கிறதா? நீ உனக்காக ஒரு கவிதை எழுதி தரும்படி கேட்டிருந்தாய்..

ஆனால், நான் ஒரே முறை உன் உதிரமாகப் பிறக்க ஆசை படுகிறேன். உன் உடலில் ஊடுருவி உன் கண்களின் வழி என் காதலை சொல்ல பேராசை கொள்கிறேன். வெண் சாம்பல் நிறத்தில் தோன்றும் அந்த மடையான் பட்சியை உன் கண்களின் வழி பார்த்து அதன் ரகசியம் அறிய விரும்புகிறேன். அதன் கேவலில் எழும் வார்த்தைகள் உம் மௌனங்கள் என்னிடம் பேசும் என நம்புகிறேன். இறுதியில் உன் உடலிருந்து ஒரு சொட்டுகூட மிச்சம் தங்காமல் வெளியேறி உன் மரணத்தோடு என் ரகசியம் கலக்க வரம் கொடுக்கிறேன். அவன் கண்கள் என் வரத்தோடு (சாபத்தோடு) கலந்திருப்பதை மடையான் மட்டுமே இப்போ அறிந்தவனாக இருக்கிறான்.


கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை 5

ஈப்போ ரயில் நிலையம்



ஒரு தூர பயணத்தில் நானும் சிவாவும் ஈப்போ நகரை அடைந்திருந்தோம். தோழர் நாகேந்திரன் எங்களை ஈப்போ ரயில் நிலையத்திற்கு வந்துவிடுமாறு கூறியிருந்தார். தோழி மணிமொழியும், ஆதவன் தீட்சண்யா அண்ணாவும் கோலாலம்பூரிலிருந்து ஈப்போவிற்கு விரைவு ரயிலில் வந்து சேர்ந்திருந்தனர்.
ஈப்போ ரயில் நிலையத்தை நான் இப்போதுதான் முதற்முறையாகப் பார்த்தேன். பொதுவாகவே பிரிட்டிஷ் கட்டிடங்களைப் பார்க்கும்போது வரலாறு குறித்தான ஒரு பின்னோட்டம் தாமாகவே ஓட தொடங்குவதால் அதை அங்குல அங்குலமாகவே பார்வையால் உள்வாங்குவதே என்னையும் அறியாமல் நடந்துவிடுகிறது.
மலேசியாவில் பல பிரிட்டிஷ் கட்டடங்கள் அழிவை நோக்கிகொண்டிருக்கும் வேளையில், சில கட்டடங்கள் மிக அழகாக வெண்சாயம் பூசி பாதுகாக்கப்பட்டு வருவதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். உதாரணமாக HSBC வங்கியிருக்கும் கட்டடங்கள் பெருவாரியாகப் பிரிட்டிஷ் கட்டங்களாகத்தான் இருக்கின்றன.


மலேசியாவில் ரயில் என்ற வரலாறை எடுத்துக்கொண்டாலே பல வலிகளையும் பல்வகைக் கதைகளையும் பேசக்கூடியதாக இருக்கிறது. ரயில் நிலையங்களுக்கென்றே தனிப் பாரம்பரியமும் இருக்கிறது.
இன்று நவீனம், மேம்பாடு என்ற பெயர்களில் பல ரயில் நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுவிட்ட வேளையில் 1917-ஆம் ஆண்டுக் கட்டப்பட்ட ஈப்போ ரயில் நிலையம் அதன் பழைய வடிவம் மாறாமல் அதே பிரிட்டிஷ் கட்டடத்தின் வாசம் தாங்கி நிற்கிறது. ஈப்போவில் பார்த்த முதல் இடமே வரலாறு பேசுபவையாக நல்ல தொடக்கமாகவே அமைந்தது.
ஈப்போ ரயில் நிலையத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் பார்த்த ஏதோ ஒரு ரயில் கட்டடத்தை ஞாபக படுத்துபவையாக இருந்தது.

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 6

ஆகஸ்ட் 30 ஆம் தேதி, அன்றைய நாள் உதயமாகும்போது எங்களுக்கு எந்தத் திட்டமும் இருக்கவில்லை. வெளிநாட்டுத் தோழிகளுக்கு எப்படிப் பினாங்கு ஒரு புதிய இடமோ அதே போலத்தான் எனக்கும். ஆனால், என்னிடம் மலாய் மொழி மட்டுமே கைவசம் இருந்தது. 

அன்றைய நாளை திட்டமிடுதல் குறித்த சுதந்திரத்தை தோழிகள் எனக்கு வழங்கியிருந்தனர். அறிமுகமாயிருந்த வாடகை கார் ஓட்டுனரை அழைத்து வண்டியை வாடகை எடுத்து சோழன் கண்ட கடாரத்தைக் காண செல்ல திட்டமிட்டோம். அதற்கு முன்பு பினாங்கில் எங்களுக்காகவும் எங்கள் பார்வைக்காகவும் இத்தனை ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்த அந்தப் புத்த ஆலயங்களுக்குச் செல்ல திட்டமிட்டோம். 



பர்மா சாலை என்று சொல்லக்கூடிய புகழ்பெற்ற பினாங்கு சாலையில் விழிப்பதற்காகவே உறங்கிகொண்டிருந்தார் Sleeping Buddha. அந்த ஆலயத்திற்கு எதிர்புறம் இருக்கும் Standing Buddha, நாங்கள் அன்னாந்து பார்ப்பதற்காகப் பல ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கிறார். அவர்களுக்கு உபாயம் வழங்க எங்கள் கால் அந்த மண்ணில் பட வேண்டிய அவசியம் கருதி மகிழ்ச்சியுடம் தொடங்கியது அன்றைய பயணம். 


சைய மங்களராம் புத்தர் எனும் உறங்கும் புத்தர்.. 

சைய மங்களராம் புத்தர் (Chaiya Mangalaram Buddhist Temple) எனும் உறங்கும் புத்தர் ஸ்தலம் 171 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. மே 30 ஆம் தேதி 1845 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாக அதிகாரப்பூர்வ பதிவு கூறுகிறது. பர்மா சாலையில் அமைந்திருக்கும் இந்தப் புத்த கோயில் பினாங்கின் அடையாளங்களில் ஒன்றாகும். 

தாய்லாந்தின் மத நன்மைக்காக மலேசியாவில் ஆலயம் அமைக்க நிலத்தை நன்கொடையாக வழங்கும் யோசனையை ஆளுனர் Mr W.I.Butterworthதான் முதலில் முன்னெடுத்தார். கிழக்கிந்திய கம்பெனி வாயிலாக மேதகு அரசி விக்டோரியா சார்பில் பௌத்த சமூகத்தின் பிரதிநிதியிடம் அதற்கான மான்யம் வழங்கப்பட்டது. அப்போதிலிருந்து  இன்று வரை அந் நிலம் அறக்கட்டளை அல்லது பொறுப்புரிமை  அமைப்பின் வசம் உள்ளது



இந்த உறங்கும் புத்தர் 108 fit நீளமும் 32 fit உயரமும் கால் பாதத்தில் சங்க சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையானது மலேசியாவிலேயே மிகப் பெரிய புத்த சிலையாகவும் உலகின் மூன்றாவது பெரிய புத்த சிலையாகவும் அறியப்படுகிறது. இந்தப் புத்த வடிவம் தாய்லாந்து புத்த வடிவ அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. கோயிலின் வெளிதோற்றமும் அங்கு அலங்கரிக்கும் சிலைகளும் தாய்லாந்தில் இருக்கும் சிலைகள் அமைப்பையே கொண்டதாக இருக்கின்றன. 


கோயிலின் சுவர்களில் புத்தரின் வாய்க்கை வரலாறுகள் சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளன. அத்தனையும் பழைய ஓவியங்கள். பொழிவிழந்து இருந்தாலும் இன்னும் காண்பதற்கு உகந்த வகையில் தெளிவாகவே இருக்கின்றன. சுமார் 30,000 புத்த உருவங்கள், சிலைகளாகவும் , ஓவியங்களாகவும் கோயிலில் காணலாம். அதுவும் கம்போடியா, இலங்கை, வியட்நாம், சீனா, ஜப்பான், லோஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளிலுள்ள புத்த வடிவங்கள் அவை.


Standing Buddha

இந்த ஆலயத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கான எந்த வரலாற்று குறிப்புகளும் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், அது burmese buddhist temple என அடையாளப் படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்றமாதிரிதான் அதன் வடிவமைப்பும் இருக்கிறது. மிக அழகான கோயில் மட்டுமல்ல 'நிற்கும் புத்தரின்' முகமும்  பார்த்துக்கொண்டே இருக்ககூடிய அழகு. சிரித்த அந்த பால் முகம் நாம் எங்கிருந்து பார்த்தாலும் நம்மை பார்த்து சிரிப்பதை போல தோன்றும். கோயில் உட்புறம் முழுதும் பல புத்த சிலைகள் வெவ்வேறு முத்திரைகளோடு வரிசை கட்டி நிற்கின்றன. கோயிலின் புறம் இன்னும் பல
சிலைகளோடும் புத்த விக்கரங்களோடும்  இருக்கின்றன.  அவற்றுக்கு ஏதாவது கதை இருக்கலாம். ஆனால், அதை நாங்கள் அறிய தருவதற்கு அப்போது யாருமில்லை. 

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த ஆழியாள் அங்கிருந்த பூமி பந்து சிலை மீது சாய்ந்து ஆஸ்ரேலியாவை மிஸ் பண்ணுவதாக சொன்னார். அந்த வார்த்தையில் இருக்கும் அர்த்தம் நம்பிக்கையும் நான் அறியாதவள் அல்ல.. 

பார்க்க பார்க்க பிரமிக்ககூடியதாக இரு ஆலயங்களும் கண்களில் நிறைந்திருந்தன. உலகம் சுற்றும் வாலிபன் திரையில் இந்த ஆலயங்களின் சில காட்சிகள் பதிவாகியிருக்கும் என்ற தகவலை கூறினேன். அது பலருக்கு தெரிந்த விஷயம்தான் என்றாலும் அந்த நேரத்தில் அது கூறவேண்டியது உவப்பான ஒன்றாகவே இருந்தது. 
அடுத்து நாங்கள் கடாரம் நோக்கி புறப்பட்டோம்.. 


(தொடரும்) 



சனி, 24 செப்டம்பர், 2016

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 5

பினாங்கை சுற்றி பார்க்ககூடிய ஸ்தலங்களில், தெரு ஓவியங்களைக் காண வேண்டிய ஒன்றாகக் குறிப்புகள் இருக்கிறது. ஆனால், அவை தெரு ஓவியங்களுக்கான இலக்கணத்தில் சேர்ந்தவையா என்றால் நிச்சயமாக இல்லை. வியாபார நோக்கத்தில் போலியாக உருவாக்கியிருக்கிற தெரு என்றாலும் பார்ப்பதற்கு ஆழகாகவே இருக்கிறது. ஒரே வரிசை என்று இல்லாமல் ஓவியங்களை நாம் தேடி செல்ல வேண்டும்.

3 டி வகையைச் சேர்ந்த ஓவியங்கள் உயிரோட்டமாக வரையப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். புகைப்படம் எடுக்கும்போது தத்ரூபமாக அமைகிறது. தெரு ஓரத்தில் ஓவியர்கள், தெருவை சுற்றிவர சைக்கிள் வாடகைக்காரர்கள், பேட்சா ஓட்டுனர்கள் என நேரம் ஆக ஆகத் திருவிழா கோலத்தில் தெரு கலைகட்டுகிறது.

நாங்கள் ஓவியங்களோடு நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பாம்புக் கோயிலுக்குக் கிளம்பினோம். பார்த்த கோயிலில் ரொம்பச் சாதாரணமான கோயிலாக அது இருந்தது. ஆனால், பாம்புக்கோயிலைப் பற்றிய அறிவிப்புப் பலகைகள் பினாங்கின் முக்கியச் சாலைகளில் விளம்பரப்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.


நாங்கள் சென்ற நேரம் கோயிலை மூடும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் கோயில் வெறிச்சோடி இருந்தது. பாம்புகள் உண்ட களைப்போ என்னவோ தெரியவில்லை, ஆடாமல் அசையாமல் எளக்காரமாக உச்சியில் படுத்திருந்தன. அவை கூண்டில் அடைக்கப்படவில்லை என்றாலும் ஏதோ மயக்கம் அடைந்திருப்பதுபோலப் படுத்திருந்தன. தோலுரித்த அதன் ஆடைகள் ஆங்காங்கு விழுந்துகிடந்தது. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த மலைப்பாம்புகள் மூச்சு விடுவதும் நெலிவதுமாக இருந்தன. நாங்கள் பொம்மைகள் அல்ல என்று எச்சரிப்பது போன்று இருந்தது.

பாம்பு என்றதும் சௌந்தரி (மா) கோயில் வாசலைக்கூட மிதிக்கவில்லை. அவருக்குப் பாம்பு என்றால் பயங்கர அலர்ஜி என்று திரும்பத் திரும்பக் கூறி முகம் சுழித்தார். யாழினிக்குப் பாம்பு பயம் இருந்தாலும், அந்தப் பயத்தோடே புகைப்படங்களைச் சிரித்தபடி எடுத்துக்கொண்டாள்.
கோயிலைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கான கையேடோ அல்லது கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ இல்லாததால் அதற்குமேல் எதையும் அறிய முடியவில்லை.

கோயிலைப்பற்றி தெரிந்துகொள்வதற்கான கையேடோ அல்லது கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ இல்லாததால்  அதற்குமேல் எதையும் அறிய முடியவில்லை. ஆனால், வாசலில் இருந்த கோயில் அறிமுகப்பலகையில் இருந்த விவரம் இப்படி சொல்கிறது..



சென்ற நூற்றாண்டில் சீன நாட்டிலிருந்து சாமியார் ஒருவர் ‘Chor Soo Kong’ என்ற கடவுளின் சிலையைக் கொண்டு வந்தார். அந்தச் சிலையின் மகிமையினால் தீராத நோய்கள் குணமானது. 1873 ஆம் ஆண்டுக் கெலுகோர் தோட்டத்தில் வசித்த David Brown என்பவருக்கு ஏற்பட்ட நோய் இந்தக் கோயிலுக்கு வந்த பிறகு குணமானது. அதற்கு உபாயமாக அவர் நிலத்தை வழங்கினார். மேலும் பொதுமக்கள் உதவியுடன் இந்தக் கோயில் கட்டப்பட்டது.
கோயில் கட்டி முடித்த பிறகு, தாமாகவே சில மர்ம பாம்புகள் கோயிலில் அடைக்கலம் அடைந்தன. Wagler’s Pit Viper இனத்தைச் சேர்ந்த இந்தப் பாம்புகள் 10 லிருந்து 15 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. 1 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. இந்தக் கோயிலில் இருக்கும் 600 பவுண்ட் கொண்ட ராட்ஸச மணிகள் 1886 ஆம் ஆண்டில் செய்யப்பட்டது.



கண்ணாடி பேழையில் ஆயுதங்களோடு நின்ற சீனகாவல் தெய்வங்கள் கவனத்தை ஈர்த்ததோ என்னவோ மாலதி மைத்திரி அதைப் புகைப்படம் எடுக்கக் கேட்டுக்கொண்டார். நமது காவல் தெய்வங்கள் கையில் இருக்கும் அரிவாள், சூலம் மாதிரி சீன தெய்வங்களும் பிரமாண்ட ஆயுதங்களைக் கையில் ஏந்தி பூதகணங்களாக அருள் பாலிக்கின்றன. ஒரு நீண்ட வரிசையில் சின்னச் சின்னச் சிலைகள் இருந்தன. நிச்சயமாக அவற்றுக்குத் தனித்தனி பெயரும் கதையும் இருக்கலாம். இந்திய தெய்வ புராணங்களுக்குக் கொஞ்சமும் குறைந்தது இல்லை சீன தெய்வ புராணங்களும். இருள் சூழும் நேரம் நெருங்கிவர நாங்கள் இரவு சந்தைக்குச் செல்வதற்குத் திட்டமிட்டோம்.

றஞ்சி (மா) ஒடியல் கூழ் வைத்துத் தருவதாகச் சொன்னார். அதற்கான பொருட்களை வாங்கவும் மலேசிய இரவு சந்தையின் அழகை ரசிக்கவும் ஓரு வாய்ப்பு அமைந்தது.

இப்படியாக எங்களின் முதல் நாள் பயணம் முடிவடைய மாலதி மைத்திரி, கல்பனா, விஜியலட்சுமி (மா), தங்கை பாரதி மற்றும் மணிமொழி ஆகியோர் இரவே கோலாலம்பூர் புறப்பட்டனர்.  நிலா மறைந்து தூவானம் தூவ தொடங்கியிருந்தது.

(தொடரும்)