ஞாயிறு, 22 மே, 2016

காடு

புத்தகம்: காடு (ஜெயமோகன்-சாருடைய 5-வது நாவல்)
எழுதியவர்: ஜெயமோகன்
வெளியீடு : தமிழினி
விலை : 400 ரூபாய்


‘இருநூறு பக்க நோட்டுப் புத்தகம் முழுக்க முடிவடையாமல் துடிதுடிக்கும் வரிகள்’ இப்படி ஒரு வரி இந்த நாவலில் வருகிறது. ‘காடு’ நாவலில் நானூறுக்கும் அதிகமான பக்கங்கள் அப்படித்தான் துடித்துக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
ஜெயமோகனின் ‘காடு’ நாவலை நான் இரண்டாவது முறையாக வாசிக்கிறேன். முதல் முறையைக் காட்டிலும் அந்தக் காட்டிடம் இப்போது நான் சில இடங்களில் முரண்படுகிறேன். சில இடங்களில் கிரியைப்போல அங்கிருந்து வர மறுக்கிறேன்.
2012-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். இலக்கிய நண்பர்கள் மத்தியில் அந்த நாவலை பலர் சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்க ஒரு நண்பரிடம் இரவல் வாங்கி வாசித்தேன். நான் மாற்று இலக்கியம் அல்லது நவீன இலக்கியம் (எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்) வாசிக்கத் தொடங்கிய தொடக்கக் காலக் கட்டம் அது. புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாடு வேறு இருப்பதால் சில நாட்களுக்குள் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்பந்த்த்தில் அவசர அவசரமாக வாசித்துக்கொண்டிருந்தேன். வட்டார மொழிகளும், மலையாள மொழிகளும் மேலும் மலையக மக்களின் மொழி எனக் கொண்டிருக்கும் அந்த நாவலை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில்தான் வாசித்தேன். 10 பக்கங்களைக் கடந்த பிறகு, வாசித்ததை நினைத்துப் பார்க்கும்போது என்ன வாசித்தேன் என்பது நினைவில் இல்லை. கபிலன் வரிகள் என்று பல இடங்களில் சங்கப்பாடல்கள் வேறு. தலைவலியாக இருந்தாலும் நான் புத்தகத்தை வாசித்து முடித்து நண்பரிடம் திரும்பக் கொடுத்திருந்தேன். எப்படி இருந்தது. காட்டுக்குள் இருந்தமாதிரி இருந்தது என்று மட்டும் சொன்னேன். உண்மையில் அப்போது நான் காடுகளுக்குகூடப் பரீட்சயமானவள் இல்லை. அதன் பிறகு நானும் வாசித்தேன் என்ற அடிப்படையில் ‘காடு’ வண்டியில் ஏறி அமர்ந்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் குற்றணர்ச்சியாக இருந்தாலும் வாசித்தது உண்மைத்தானே என்று எனக்கு நானே நியாயம் கூறிக்கொண்டிருந்தேன். என்னை நானே எத்தனை நாள் ஏமாற்றிக்கொள்ள முடியும்?
அண்மையில் எனது இந்திய பயணத்தில் ‘காடு’ வாங்கி வந்தேன். மனது இருண்மையாகத் தோன்றும் நாட்களில் காட்டுக்குப் போனால், என் மனது ஆசுவாசமாகிறது என்பது எனது அண்மையில் கண்டுபிடிப்பாகும். அதனால், அதிகமாகக் காடுகளுக்குச் செல்வதை வழக்கப்படுத்திக்கொண்டேன். தற்போதைய உடல்நலக்குறைவால் பயணங்களைத் தள்ளி போடும்படி மருத்துவ ஆலோசனை இருப்பதால் ‘காடு’ நாவலையாவது வாசிக்கலாம் என்று தோன்றியது. வாசிக்கத் தொடங்கினேன்.
பழைய வாசிப்பிலுருந்து அறுபட்டு, முற்றிலும் புதிய வாசிப்பு மனநிலையைத்தான் காடு எனக்கு ஏற்படுத்தியது.
காட்டில் ஒரு மிளாவைக் கரிதரன் காண்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. தொடர்ந்து அந்த மிளா அதே நீரோடைக்கு நீர் அருந்த வருவதைத்தொடர்ந்து நமக்கும் பரீச்சயமாகிறது. ஜெயமோகனின் நாவலில் வளர்த்திருக்கும் காடு சொல்லில் வர்ணிக்கமுடியாதது. அவர் சொல்வது போலத் தெய்வங்கள் வனவிலங்குகளாகவும், மரங்களாகவும் பாறைகளாகவும் மலைகளாகவும் மழைகளாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்திற்குமேல் அந்தக் காடு நமக்கும் பரீட்சயமாகி, அந்தக் காட்டுடைய எல்லா இடங்களும் கண்முன் விரிந்துவிடுகின்றன.

இருந்தபோதும் சில இடங்களில் பார்ப்பனீயத்தைத் தூக்கிபிடிக்கும் கதாப்பாத்திரங்களின் வசனங்கள் நம்மை எரிச்சல் அடையச் செய்கிறது. அது கதாப்பாத்திரங்களின் குணாதிசயமாக நினைத்துக் கொண்டு கடக்கக் கொஞ்சம் சிரமாக இருக்கிறது. குறிப்பாக “அல்சேஷன் நாய் ஜாதியிலே பிராமணனாக்கும். புத்தினண்ணா புத்தி..அதுக்குப் புத்தியிருக்கே… பூட்டின கதவை தாக்கோல் போட்டு தெறந்துபோடும்” என்று எறும்புக் கண்ணன் லட்சுமணன் சொல்வது போன்று ஒரு வசனம் இருக்கு.

‘காடு’ நாவல் என்னைப் பொருத்தவரையில் பல திருப்புமுனைகள்தான் அதன் சுவாரஸ்யமாக நினைக்கிறேன். இந்தக் கதை இதை நோக்கிதான் நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இப்படித்தான் வரும் என்ற எண்ணத்தைச் செட் செய்துவிட்டுப் படித்துக்கொண்டிருந்தால் நம்மையும் அறியாமல் அந்த எண்ணம் மாறுபடும். வேறொரு எண்ணம் வரும். இப்படித்தான் நகரப்போகிறது என்று அந்தத் திசையில் பயணித்தால் வேறொரு பாதைக்குக் கதை மாறும். இப்படியான திருப்புமுனைகளைத் திரும்பி பார்க்கும்போது கதையின் இறுதி பாகத்தில் நின்றுக்கொண்டிருப்போம்.

நான் முதன் முதலில் யட்சி, நீலி என்று வன தேவதைகளின் நடமாட்டங்களைக் கண்டு கொண்டது இந்த நாவலின் வழிதான். அவைகளை ஜெ.மோ மிக அழகாகக் காட்சிபடுத்தியிருப்பார். தொடர்ந்து கதைகளில் அவர்களின் வருகையை எதிர்பார்த்தபடி மனது ஏக்கிக்கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாததாக எனக்கு இருந்தது.

‘காடு’ நாவலில் இடையிடையில் சில கிளைக்கதைகள் மழையைப் போன்ற சாரலை தூவி விட்டுச் செல்கின்றன. 5-வது பாகத்தில் வருகிறது அந்த வனநீலியின் கதை. அதை வாசிக்கும்போதே இந்தக் கதையை மையைப்படுத்திதான் கதை முடிவடையும் என்று தோன்றியது. அமானுஷ்ய விதைதான் அந்தக் கதை என நினைத்தேன்.

திருவனந்தபுரம் அரண்மனையின் இளையராஜா பலராம் வர்மாவுக்குப் பதினெட்டு வயதில் தீராத வாதரோகம் வந்து படுத்தபடுக்கையாகிறார். பல வைத்தியங்களுக்குப் பிறகு தனது 26 வயதில்தான் நடமாட தொடங்கும் வேலையில் மீண்டும் நோய் தாக்கப்பட்டுப் படுக்கையில் விழுகிறார். கொச்சி ராஜா குடும்பத்திலிருந்து அரண்மனைக்கு வந்த இளைய மகாராணி பாகீரதி பாய் சொன்னதின் பேரில் வடக்குமடம் நம்பூதிரி என்ற மகா வைத்தியர் அழைக்கப்படுகிறார். வைத்தியர் காஞ்சிர மரக்கட்டிலில் இளையராஜாவை படுக்கவைக்க வேண்டுமென்கிறார்.

காஞ்சிர மரம் ஓர் ஆள் படுக்கும் அளவுக்கு வளரக்கூடிய மரமல்ல. மேலும் அப்படி ஒரு மரம் கிடைக்காது; வைத்தியர் ஏமாற்றுக்கிறார் என்று சிலர் சொல்ல ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மரத்தை தேடுகிறார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்த மரம் ஓர் அடர்வனத்தில் கண்டு பிடிக்கப்படுகிறது. அந்த மரம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருக்கிறது. (இதை ஜெயமோகன், கருவறையின் இருளில் எழுந்த பிடாரி தெய்வம் போல மரம் நின்றிருந்தது என்கிறார்.) மரத்தை வெட்டுவதில் தொடங்கி அதில் கட்டில் செய்து முடிக்கும் வரை வேலை செய்தவர்கள் பலரும் ஏதோ ஒரு வகையில் இறந்துவிடுகின்றனர்.

இளையராஜா அந்தக் கட்டிலில் படுத்து குணமாவதோடு அழகனாகவும் காட்சி கொடுக்கிறார். ஆனால், அவருடைய தனியறையில் பெண்ணின் நடமாட்டம் உணரப்படுகிறது. இந்நிலையில் அவருக்குத் திருமணம் முடிக்கப்படுகிறது. அவரின் மனைவிதான் வனநீலியின் தொடர்பை கண்டு பிடிக்கிறாள்.  தான் கண்ட பெண்ணுக்கு தரைவரை நீண்ட கரிய கூந்தல் எனவும், பச்சை ஒளியூட்டும் கண்கள் எனவும், ரத்தமாக சிவந்த உதடுகள் கொண்டிருப்பதாகவும் கூறுகிறாள்.  வெட்டி வந்த காஞ்சிர மரத்தோடு அந்த வனநீலி ஒட்டி வந்துள்ளது என மாந்த்ரீகவாதி கண்டு பிடித்து சொல்கிறார்.

வனநீலியை விரட்ட மிகப்பெரிய சாந்தி பூஜை நடத்தப்படுகிறது. வெளியேறும் நீலியை கட்ட ருத்ரசாந்தி பூஜையும் நடத்தப்படுகிறது. வெட்டி வைத்த எருமைத் தலையில் வந்து நீலி அமர்ந்தாள். எருமையின் காதுகள் அசைந்தன. கண் விழிகள் விழித்து உருண்டன. நூற்றியெட்டு உயிர்பலி தந்து சாந்தி செய்யப்பட்ட பிறகு நீலி ஒரு பித்தளை ஆணியில் ஆவாஹனம் செய்யப்பட்டுக் காட்டில் புதிதாக முளைத்து வந்த காஞ்சிரம் மரத்தில் அறைந்து விட்டு வருகின்றனர்.
வனநீலியின் கதை இந்த இடத்தோடு முடிவடைய, பல வருடங்கள் கழித்துக் கிரி அந்த வனத்திற்குப் போகிறான். அங்கே நீலி என்ற மலைவாசி பெண்ணோடு தொடர்பு ஏற்படுகிறது.
இப்படியான காடுடைய கரம்பற்றியே நாவம் முழுக்கப் பயணித்துக்கொண்டிருப்போம். நிறையப் பெண்கள் இருக்கிறார்கள் இந்த நாவலில். அவர்களின் முலைகளைப்பற்றியும் அவர்களின் வாழ்வைப்பற்றியும் சிலாகிக்கப்படுகிறது. பெண்களின் உடலை அரசியலாக்கியிருக்கின்றார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அது ஒரு வகை எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
ஒரு கட்டத்தில் வனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தொடங்கும்போது நம் மனதிலும் சொல்ல முடியாத பதைப்பு ஏற்படுகிறது. கீரநாதனை (யானை) பாடம் செய்து மாட்டி வைத்திருக்கும் காட்சியைக் கூறும்போது அந்த யானைக்காக மனம் தவிப்பதை உணரலாம். இப்படிக் காடு நாவல் முழுக்கக் காட்டின் ஓர் அங்கமாகவும், வனவிலங்குகள் நமக்கு நெருக்கமாகவும் உணர வைத்திருக்கிறார் ஜெயமோகன்.

நான் காடு'-விட்டு வெளியில் வந்துவிட்டாலும் அதன் கதாபாத்திரங்களை விட்டுதான் வெளியில் வர முடியவில்லை. கரிதரன் நீலியை நினைத்து
'உன் நினைவென ஓயாது பெய்து
கொண்டிருக்கிறது மழை..' என்று சொல்வார். காடும் நமக்கு அப்படி ஓர் அனுபவத்தைக் கொடுக்கும்.

புதன், 18 மே, 2016

பிணம் தழுவுதல் எனும் சடங்கு



பிணம் தழுவுதல் குறித்து இதற்கு முன் எப்போதோ கேள்விபட்டமாதிரி மனதிற்கு தோன்றினாலும் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் அது குறித்துப் பேசிய போதுதான், கொஞ்சம் அதிர்ச்சியும் எனக்குள் ஒரு கேள்வியும் எழுந்தது. குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த  கன்னிப்பெண் கன்னிகழியாமல், (காதல் ஏக்கத்தோடு) மரணித்தால், அச்சவத்தோடு, ஒருவர்  உறவுக்கொள்ளும் சடங்கை நிறைவேற்ற வேண்டுமெனில், ஒரு  கன்னிப்பையன் காதல் ஏக்கத்தோடோ அல்லது உடலுறவில் ஈடுபடாத பையன் என்ற காரணத்தினாலோ
மரணித்தால் என்ன செய்திருப்பார்கள்? நினைத்துப்பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.  (நல்ல வேளையாக அம்மாதிரியான சடங்கு இல்லாதது கொஞ்சம் ஆதரவளிக்கிறது)

'பிணம் தழுவுதல்' என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்துள்ள சடங்கு என்று கூறப்படுகிறது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் இந்தச் சடங்குக்காகவே உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்களாம். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தைத் தழுவி வர (உடலுறவு கொள்ள) வேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்களாம். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை. மலைநாட்டில் இவ்வழக்கம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முகநூலில் இது தொடர்பாக நான் போட்ட நிலைத்தகவல்களில் நண்பர் விக்கினேஸ்வரனின் கருத்து மிக முக்கியமானதாகும்.

13-ஆம் நூற்றாண்டில் கம்போடியவின்
 கெமெர் கோவிலில் உள்ள கன்னிப்பெண்ணுக்கு
மதபோதகனால் சடங்கு நிறைவேற்றும்
கற்சித்திரம் 
பூப்பெய்திய பெண் திருமணம் செய்யும் முன் நம்பூதிரிகளால் உடல் உறவு செய்யவும் அதன் பின் அவர்களின் தீட்டுகளும் பாவங்களும் கழிந்துவிடும் என்பதும் நம்பிக்கையாக இருந்துள்ளது. அதன் பின் அவள் திருமண வாழ்க்கைக்குத் தகுதியானவளாகக் குறிப்பிடப்படுகிறது.
(இந்தத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் மூல நூல் நண்பரின்
ஞாபகத்தில் இல்லை எனக் கூறியிருந்தார்).

பிணம் தழுவுதல் என்பது நம்பூதிரிகள் மத்தியில் மட்டுமல்ல கம்போடிய நாகரீகத்திலும் இருந்து வந்துள்ள ஒரு நம்பிக்கையாகும்.

‘May you have what really matters- in future may you marry thousands and thousands of husbands' - A Record of Cambodia The Land and its People - Page 56 (Young Girls) 'Zhentan' எனும் சடங்கு முறையில், வயதுக்கு வந்த பெண் திருமணம் செய்து கொடுக்கப்படும் முன் மதப் போதகனால் கன்னி கழிக்கப்பட வேண்டும் என்பதே இச்சடங்கின் அர்த்தம்.

(நம்பூதிரிகள் மத்தியில் இருந்துள்ள இந்தப் பழக்கம் இவர்களிடத்திலும் இருந்துள்ளது தெளிவாகிறது. ஆனால், பிணம் தழுவுதல் குறித்து இங்கு குறிப்பிடப்படவில்லை)

A Record of Cambodia The Land and its People எனும் நூலில் இக்குறிப்புக் காணப்படுகிறது. சியாம் ரிப் பயணத்திற்கு முன் கம்போடியாவை பற்றி அறிந்து வைத்துக் கொள்ளச் சில புத்தகங்களை வாங்கினேன். அதில் இந்தப் புத்தகம் தனிச் சிறப்பு மிக்கது. 1296-1297-ஆண்டுகளில் அன்றைய யசோதரபுரம் என அழைக்கப்படும் அங்கோர் நகரத்திற்குச் சென்ற ஒரு சீனத் தூதுவனின் குறிப்புகளில் இருந்து இப்புத்தகம் இயற்றப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சீனக் குறிப்பில் இருந்து பிரன்சு மொழிக்கும் பின் பிரன்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு The Customs Of Cambodia (1902) எனும் நூலாகப் பதிப்பிக்கப்பட்டது. 2007-ல் நேரடியாகச் சீனக் குறிப்பில் இருந்து ஆங்கிலத்திற்கு A Record of Cambodia The Land and its People எனும் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகளை எழுதிய சீன தூதுவனின் பெயர் ச்சாவ் தாக்குவான் (Zhou Daguan 1266–1346). தாக்குவான் மூன்றாம் இந்திரவர்மனின் (Indravarma iii 1295-1308) காலகட்டத்தில் அங்குப் பயணித்திருக்கிறார். அக்காலகட்டத்தில் யசோதரபுரத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்த ஒரே நேரடி சாட்சி ச்சாவ் தாக்குவான் மட்டுமே.

(நன்றி நண்பர் விக்கினேஸ்வரன்)

பிணம் தழுவுதல் சடங்குமுறை இக்காலத்திலும் நடக்கிறது என்பதை நண்பர் இனியன் கூறுகையில் கற்பனைக்கு எட்டாத விஷயமாக அது இருந்தது. அது குறித்து அவர் இவ்வாறு பதிவு செய்தார்.

நம்பூதிரி இனத்தில் மட்டும் இல்லை, தமிழ் சூழலில் வெள்ளாளர் சாதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடமும் பிணம் தழுவும் சடங்கு உண்டு. அந்தச் சடங்கு செய்பவர்களுக்குப் பொதுவான பெயர் ஒன்றும் உள்ளது. அதைதான் தேடிவருகிறேன்.

2003-ஆ ம் ஆண்டு நண்பரின் அக்கா இறந்த போது திருச்சி முழுவது சுற்றி ஒரு நபரை அழைத்துச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால், அப்போது ‘தழுவல்’ என்பதெல்லாம் நின்று வெளிச் சடங்கு என்று வந்து விட்டது. அவரை அழைத்து வருகிற போது சடங்கு செய்பவர்களுக்கான பொதுப் பெயர் ஒன்றை அந்நபர் கூறினார். 

மேலும், பழங்கால எகிப்திய மக்களிடமும் இதுபோன்ற சடங்குகள் இருந்ததாகப் படித்திருக்கிறேன். சிந்துபாத் கதையில் கூட ஓர் இடத்தில் வரும் இது போன்ற நிகழ்வு என நினைக்கிறேன்.

(நன்றி நண்பர் இனியன்)

இது தொடர்பாக இனியனிடம் நேரில் பேசும்போது, பிணம் தழுவுதல் எனும் சடங்கை அந்நபர், வீட்டில் செய்ய மறுத்துவிட்டதாகவும் இடுகாட்டில் பிரேதத்தை குழியில் இறக்கியப் பிறகு அவர் தழுவுதல் சடங்கில்  ஈடுபட்டாலும்  அவர் பிரேதத்தோடு உடலுறவு கொள்ளவில்லை என்பது புரிந்து கொள்ள முடிகிறது என்றார். சின்ன அரிவாளோடு குழியில் இறங்கியவர் எப்படி சடங்கை நிறைவேற்றியிருப்பார் என நாமாக யூகிக்க வேண்டியதுதான்.

பிணம் தழுவுதல் குறித்துத் தமிழ் இலக்கியங்களில் சிலர் பதிவுகள் செய்துள்ளதை முகநூலில் நண்பர்கள் சிலர் செய்த பின்னூட்டங்களின் வழி தெரிய வந்தது. நண்பர் குமார் அம்பாயரம் 'வழக்கு எண் 19/2021' என்ற கதையில் பிணம் தழுவுதல் குறித்துப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அந்தக் கதை இணையத்தில் இல்லாததாலும் நண்பரின் சிறுகதைத் தொகுப்பு கிடைக்காததாலும் இன்னும் நான் அந்தக் கதையை வாசிக்கவில்லை.

நண்பர் ராசு, ‘இறுதி இரவு’ என்ற சி.சரவணகார்த்திகேயன் எழுதிய சிறுகதையை அனுப்பியிருந்தார். எனது முகநூல் பின்னூட்டத்தில் மிக முக்கியமான பதிவுகளில் அந்தக் கதையும் ஒன்று. பிணம் தழுவுதல் சடங்குகள் குறித்த சம்பவங்களை நம் கண்முன் கொண்டு வருவது போல இருக்கும் அந்தக் கதை. மேலும் சாதி ரீதியில் எப்படி இச்சடங்கானது கையாளப்படுகிறது என்பதும் அந்தக் கதை பேசுகிறது. நண்பர்கள் வாசிக்க.
http://www.writercsk.com/2016/01/blog-post_31.html

கதையின் ஓரிடத்தில்…

குப்பன் பிணந்தழுவுபவன். கன்னிப் பிணத்தை அப்படியே அடக்கம் செய்தால் அதன் ஆன்மா நிம்மதியுறாது அலையும் என்பது ஊர் ஐதீகம். அதனால் அதைக் கன்னி கழித்த பின் தான் எரிக்கவோ புதைக்கவோ செய்வர். பல நூறாண்டுப் பழக்கம் அது. முதல் ராத்திரி என்பது போல் இறந்து போன பெண்ணுக்கு அது கடைசி ராத்திரி. சாமி காரியம் என்று தான் சொல்வார்கள். 

இப்படி கூறப்பட்டுள்ளது.

எழுத்தாளர், அண்ணன் ஆதவன் தீட்சண்யா அவரது இணையத்தளத்தில் பிணம் தழுவுதல் குறித்து இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

திருமணம் ஆகாமல் முதிர்கன்னியாக இறந்துவிடும் பெண்களின் சாபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர்களது பிணத்தைக் கன்னிகழித்து அடக்கம் செய்யும் வழக்கம் நம்பூதிரி பார்ப்பனர்களிடம் இருந்ததை யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள “தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்” என்கிற நூல் தெரிவிக்கிறது. பார்ப்பனப் பெண்ணின் பிணத்தைக் கன்னி கழிக்கும் செயல் நீசக் காரியம் எனவும் கன்னி கழிப்பவர் நீசக் காரியன் எனவும் அழைக்கப்பட்டனர். நீசக் காரியத்தை நிறைவேற்றும் பொறுப்புத் தலித்துகளுடையதாக இருந்தது. வாழும்போது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட பார்ப்பனப் பெண்கள் செத்தப்பின்போ மனிதாபிமானமற்று நடத்தப்பட்டனர்.

காண்க: http://aadhavanvisai.blogspot.my/2015/02/-post_25.html?m=1blog.
(நன்றி, ஆதவன் அண்ணா)

மேலே உள்ள பதிவுகளைத் தொடர்ச்சியாக வாசிக்கும் பொழுது இரண்டு வகையான விஷயங்கள் காணக்கிடைக்கலாம். முதலாவதாக ஜாதியடிப்படையில் பிணம் தழுவுதல் சடங்கை தலித் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களைச் செய்யச்சொல்வது. மற்றொன்று பிணத்தைக்கூடப் பிற ஜாதியினர் தீண்டவிடாமல் அதே ஜாதிக்காரர்கள் வைத்து நடத்திக்கொள்வது. அதை அடிப்படையாகக் கொண்டதுதான் ‘இறுதி இரவு’ என்ற கதை.

பிணம் தழுவுதல் தொடர்பாக வாசிக்கக் கிடைத்த ஒரு கவிதை இது.

இறந்துபோன இளவயதுக்காரியை சாந்தப்படுத்த
பயமறியா ஆண்களைத் தேடியது
ஊரெங்கும் ஒட்டிய சுவரொட்டிகள்

வரிசை கட்டிய விண்ணப்பங்களை
அவள் பெயர் பதித்த பளிங்கு கல்லறையின் மீது கொட்டப்பட்டது
ஒருவனைக் கையும் காட்டியாகிவிட்டது

கல்லறை உடைத்து வெளியிழுத்துப் போடப்பட்டது
உயிரற்ற முகம் வெளுத்த உடல்

ஒடிந்துவிடும் தேகம் கொண்ட அவனை
அங்கேயே விட்டு நகர்கிறது மனித வாசம்

பார்த்துக் கொண்டிருந்த சிலந்தியொன்று
இடுகாட்டின் எந்த மூலையில் ஒதுங்கலாமென
ஆராயத் தொடங்கியது

முறிந்து விழுந்திருந்த ஒற்றைக் கிளையில்
சொர்கத்து தேவதைகளாய் வாடிய பூக்கள்
ஒட்டிக் கொண்டிருந்தன

வட்டம் குறைந்துபோன நிலவு
தூண்டிய ஒளியை
வாசமாய் வீசிவிட்டுக் காத்திருந்தது

ஓரப்பார்வையுடன் ஓணான் ஒன்று
உடல் ஒட்டிய மண்ணை இழுத்துக்கொண்டு
இயங்கும் மனிதனை வெறித்து நகர்கிறது

ஆசுவாசப்பட்ட உடல் சுமந்தவன், எழுந்து
ஆன்மா சாந்தியுற்றதாய் சொல்லி செல்கிறான்

இசைப்பதை மறந்த பறவையொன்று
சடசடவெனச் சிறகடித்துப் பறக்கிறது
பீத்தோவனின் கல்லரையைத் தேடி…

இந்தக் கவிதையை முகநூலில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். இந்தக் கவிதை எழுதிய பெண்கவிஞரின் பெயரையும் அவர் தெரிவித்திருந்தார். காலத்தாமதமாக இதைப் பதிவிடும் காரணத்தினால்  அது யார் என என் நினைவிலிருந்து தவறிவிட்டது. (விவரம் அறிந்தவர்கள் தெரியபடுத்தலாம். )

பிணம் தழுவுதல் தொடர்பாக கிடைக்கும் தகவல்களை நான் தொடர்சியாக இந்தப் பதிவில் சேகரிக்கிறேன். அதன் அடிப்படையில் 19/4/2020 அன்று வாசிக்க தொடங்கிய 'சுளுந்தீ' நாவலில் இது தொடர்பாக ஒரு குறிப்பு எனக்கு கிடைத்தது.

சேர வம்சாவழியில் கலியாணம் முடிக்காத பொம்பள செத்துப்போனா, அந்தப் பொண்ண புணர்ந்து புதைப்பது பழக்கம். இப்படி புணர்வதற்காக சுடுகாட்டில் வட பக்கம் மறைவான மேடு அமைத்திருப்பாங்க. அந்த எடத்திற்குப் பேரு வெங்க மேடு. பொணத்த புணருபவனுக்கு வெங்கப்பயன்னு பேரு.
(பக் 127)  

சாதாரணமாக வெங்கப்பயன்னு நாம் அர்த்தம் தெரியாமல், போகிர போக்கில் நகைச்சுவை எனும் பேரில் சொல்லும் சொல்லுக்கு பின்னால் இருக்கும் பொருள் எவ்வளவு கொடூரமானதாக  இருக்கிறது. 

ஞாயிறு, 15 மே, 2016

ஆணோ பெண்ணோ யார் ஊதினாலும் அது புகை தான்



புகை பிடிப்பது பாவச்செயலில்லை. இது ஆண்களுக்கான இலக்கணம். பெண் புகைபிடித்தால் அது மகா பாவமாமே? ஒழுக்கக் கேடாமே? திமிராமே? சுதந்திரம் என்ற பெயரில் அவர்களுக்கான குழியை அவர்களே வெட்டிக் கொள்கிறார்களாமே? 

புகைக்கும் ஆங்கிலேய பெண்களையோ அல்லது மேலைநாட்டுப் பெண்களையோ யாரும் ஒரு விஷயமாக எடுத்துகொள்வது இல்லை. ஆனால், பொட்டு வைத்திருக்கும் இந்தியப் பெண் ஒருவர் கையில் சிகரெட் வைத்திருப்பதைப் போல ஒரு புகைப்படம் கிடைக்குது என்று வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். முகநூல், டிவிட்டர், வாட்சாப் என்று பதிவேற்றம் செய்யப்பட்டு விவாதப் பொருளாக அந்தப் புகைப்படம் மாறிப் போகும் இல்லையா? 

இப்போது பெண்கள் புகைப்பிடிப்பது குறித்து என்ன? இவ்வளவு பேசும் இவள் புகைப்பிடிப்பவளாகத்தான் இருக்கும் என்று எண்ணம் தோன்றுகிறதா? அதற்கு முன் இங்கே இரண்டு விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். மிக அண்மையில் மலேசியாவில் நான்காம் படிவ மாணவர் ஒருவர் புகைப்பிடித்த காரணத்திற்குத் தங்கும் விடுதி வார்டனால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். 
இரண்டாவது சம்பவம், நண்பர் நரன் முகநூலில் பதிவேற்றம் செய்த சத்ய ஜித்ரே மற்றும் அவரது திரையுலகத் தோழி நடிகை கீதாஞ்சலி  ராவ்-வுடன் புகைப்பிடிக்கும் நிழல்படம். அதற்குக் கீழே நண்பர் ஒருவர் சேகுவேராவுடன் அவரது போராளி தோழி ஒருவர் சுறுட்டு புகைக்கும் இன்னொரு நிழல்படம். 

இந்த இரண்டு விஷயங்களும் என்னை என் கடந்த காலத்திற்குக் கொண்டு சென்று யோசிக்க வைத்தச் சம்பவங்களாகும். நான் முதன் முதலில் எப்போது புகைப்பிடித்தேன்? எனக்கு அப்போது வயது என்ன?  என்னுடைய அப்பா சிவப்பு நிற பெட்டியைக் கொண்ட டன்ஹில் சிகரெட்டை புகைப்பவர். மாத கடைசியில் பொருளாதாரம் கையைக் கடிக்கும்போது 10 சென்னுக்கு 4 கிடைக்கும் பீடியை புகைப்பார். அதன் வாசம் ஒரு மாதிரி இருக்கும். டன்ஹில் சிகரெட்டின் மணம் கொஞ்சம் நல்லா இருக்கும். தொலைக்காட்சியிலும் அந்தச் சிகரெட்டைக் குறித்த விளம்பரம் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும். எனக்கு ஒரு முறையாவது அந்தச் சிகரெட்டை இழுத்துப் பார்க்க ஆசை. 
எனக்கு 17 வயது ஆகும் போது என் தம்பிக்கு 16 வயது. அவன் கொஞ்சம் சுதந்திரமாக வெளியில் போயிட்டு வருவான். அப்பாவுக்கு எப்போதும் அவன் செயற்பாடுகளில் ஒரு சந்தேகப்பார்வை இருக்கும். அம்மாவிடம், “அவன் மேல் ஒரு கண்ணை வைத்தே இரு” என்பார். எப்போவாவது சுதி (மது) கொஞ்சம் அதிகமாகும் காலங்களில் “உன் திருட்டு வேலைகள் எனக்குத் தெரியாதுனு நினைக்காதடா? எனக்கு எல்லாம் தெரியும்” என்பார். அவர் எல்லாம் தெரிந்து கொண்டுதான் இப்படிப் பேசுகிறாரோ என்று தோன்றும் எங்களுக்கு. நாங்கள் எப்போதுமே எதுவுமே செய்யாவிட்டாலும் எங்களுக்கு அப்பாமீது பயங்கரப் பயமிருக்கும். 

இப்படியான ஒரு சுபதினத்தில் அப்பாவின் அந்த வாசமான சிகரெட் பெட்டியிலிருந்து நான் ஒரே ஒரு வெண்சுறுட்டை சுட்டேன். வீட்டிற்குப் பின்னாளில் செடிகள் தாழைகள் மண்டியிருக்கும் ஒரு மறைவில் அமர்ந்து எனது முதல் சிகரெட்டை ஆயாசமாக இழுத்தேன். அத்தனை பயத்துடன், அத்தனை பரவசத்துடன் வெறும் புகையாகப் போகும் ஒரு சிகரெட்டை எந்தச் சுவையும் தெரியாமல் இழுத்து முடித்துவிட்டு இதில் ஒன்னும் இல்லையே என ஸ்டைலாகக் கீழே போட்டு மிதித்தும் நசுக்கிவிட்டு வந்தேன். அதன் பிறகு ஒரு முறை அப்பாவின் பீடியையும் சுட்டு இழுத்தேன். வாயெல்லாம் ஒரே கசப்பு. த்தூ! எனத் துப்பிவிட்டு வந்துட்டேன். அதன் பிறகு சிகரெட்டோ பீடியையோ நான் தொடவே இல்லை. 

அப்போது எனக்கு வயது 30 இருக்கும். ஒரு 4 நட்சத்திர தங்கும் விடுதியில் கணக்காய்வாளராக வேலைக்குச் சேர்ந்தேன். நான் அமந்திருந்த இடத்தில் சிகரெட்டின் நெடி அல்லும். அது சிகரெட் zone கொண்ட இடம். வேலைக்குச் சென்ற ஒரு வருடத்தில் எனக்கு ஆஸ்துமா நோய் உண்டாவதற்கான அறிகுறிகள் காணப்பட்டது. டாக்டரும் அதை உறுதிபடுத்த என்ன செய்யலாம் எனத் தோன்றியது. வேலையை விடுவதற்கு எண்ணமில்லை. முள்ளை முள்ளால் எடுக்கலாமே என்று தோன்றியது. 
என்னுடன் வேலை செய்யும் தலைமை கணக்காய்வாளர், மற்ற இரு மலாய் கணக்காய்வாளர் தோழிகள் அனைவரும் சாதாரணமாகவே புகைப்பவர்கள்தான். இங்கே இஸ்லாமியர்களான எனது மலாய் தோழிகள் புகைப்பிடிப்பது குறித்து கேள்வி எழலாம். பட்டணத்தில் இருக்கும் மலாய்ப்பெண்களுக்கு புகைத்தல் என்பது மிக சாதாரண விஷயமாக இருந்தாலும் பொதுதலத்தில் அவர்களின் கையில் சிகரெட்டோடு பார்ப்பது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இந்தியப் பெண்களை கையில் சிகரெட்டோடு காண்பதே அரிதாக இருக்கும். அப்படியே யாராவது கையில் சிகரெட்டோடு இருக்கும் பெண்களை பார்த்துவிட்டாலோ, இவள் எல்லாவற்றுக்கும் தயாரானவள் போலத்தான் இருக்கும் அவளை நோட்டமிடுபவர்களின் பார்வை. 

பணி செய்யும் இடத்தில் நான்அந்தப் பழக்கத்திற்கு ஆளாகாத வேளையில் அந்தப் போலியான நல்ல பெயரை காப்பாற்றிக்கொள்ள நினைத்தேன். யாருமில்லாத நேரத்தில் ஒரே ஒரு சிகரெட்டை இழுத்துவிட்டு வாயில் ஒரு மிட்டாயைப் போட்டு மறைத்துக் கொள்வேன். இந்த நடவடிக்கை நல்ல பலனைக் கொடுத்தது. எனக்கு வந்த ஆஸ்துமா பிரச்னை கட்டுக்குள் வந்தது. 
அந்தக் காலக்கட்டத்தில்தான் வல்லினம் இணைய இதழுக்கு தொடர் எழுத ஒப்புக்கொண்டேன். அந்தத் தொடர் என் கடந்த கால வாழ்கைப் பற்றியதும் நான் மறக்க வேண்டும் என்ற சம்பவங்களை உள்ளடக்கியதாகவும் இருந்ததால் பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது. அச்சம்பவங்களை மீட்டெடுக்கும்போது அத்தனை வலியிம் கண்ணீரும் நிம்மதியை இழக்கச் செய்ததுடன் அதைக் கடப்பதற்கான வழித் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் புகைப் பிடிக்கும் எண்ணம் தாமாகத் தோன்றவே, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் புகைக்கத் தொடங்கினேன். ஒரு மாதிரி நிவாரணம் கிடைத்தது. அப்போதுதான் சிகரெட்டின் அருமை தெரிந்தது. 

நான் தொடரை எழுதி முடிக்கும் வரை எங்கெல்லாம் மனத்தடை ஏற்பட்டு ஸ்தம்புக்கிறேனோ அங்கெல்லாம் வெண்சுறுட்டு கைகொடுத்து என்னைத் தட்டிக் கொடுத்தது. 
ஒரு வருடத்தில் தொடரும் முடிந்து அது புத்தக வடிவில் வெளிவந்தது. நானும் தங்கும் விடுதியில் இருந்து வேலை நிறுத்தம் செய்திருந்தேன். அதோடு, புகைபிடிக்கும் எண்ணமும் அதற்கான காரணங்களும் எனக்கு வரவே இல்லை. அந்த வெண்சுறுட்டுக்கு நான் அடிமையாகாதது குறித்து எனக்கே சில சமயம் கேள்விகள் எழுவதுண்டு. அதை நான் ஓர் அனுபவமாகத்தான் பார்த்தேனேயொழிய அது என்னை எத்த விதத்திலும் அடிமையாக்கிக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால் என் நெருங்கிய தோழியும் என் துணைவரும் தவிர நான் புகைத்ததை இதுவரை யாருமே பாத்தது இல்லை. மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. நான் சிகரெட்டை தொட்டு. 

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்கே விற்பனைக்கு இருக்கும் சுருட்டுப் பொட்டலங்கள் சிகரெட்டுப் பொட்டலங்கள் தற்போது வெவ்வேறு சுவைகளில் கிடைப்பது பார்க்கும்போது ஆச்சரியமாகும். அதே வேளை எந்த ஒரு சங்கடமுமில்லாமல் வெளிநாட்டு யுவதிகள் அதை வாங்கிப் புகைத்துச் சிலாகித்துப் பேசும்போது அப்படி என்னதான் இதிலிருக்கிறது எனத்தோன்றும். ஆனால், இந்தியப் பெண்கள் அப்படியல்ல. தங்களின் மரபுக்குல் எப்போதும் பயந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதையும் மீறி சிலர் புகைப்பழகத்திற்கு ஆளாகும்போது அதை வைத்து மிகக் கேவளமாக அவர்களைச் சித்திகரிப்பது எதனால்? 

ஆணாக இருந்தாலும் அவர் யாராக இருந்தாலும் இருந்தாலும் புகைத்தல் என்பது உடல்நலத்திற்குத் தீங்கான விஷயம் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதை ஒழுக்கக் கேடான செயல் என்றும் பெண் குலத்திற்கே மாசு விளைவித்து விட்டதாகவும் கூறுவதுதான் புரியவில்லை. ஆண்கள் புகைப்பிடிப்பதற்கும் மது அருந்துவதற்கும் ஏதோ ஒரு காரணமும் இருப்பதுபோல ( இதில் மாணவர்களை இணைத்தல் கூடாது, அவர்கள் அந்தப் பழக்கத்தை விளையாட்டாகவும், தாங்கள் பெரியவர்கள் ஆகிவிட்டோம் என்ற சிறுபிள்ளை தனத்திலும் செய்வது) பெண்களுக்கும் ஒரு காரணம் இருக்கலாம் என்று ஏன் தோன்றுவதில்லை. 

புகைப்பிடித்த காரணத்திற்காக வார்டன் அந்தப் மாணவனை அடித்ததற்கான காரணம் வேறு ஏதும்கூட இருக்கலாம். நான் இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாளில் 12 வயதுக்கூட நிரம்பாத மலாய் சிறுவர்கள் ஒரே சிகரெட்டை நான்கைந்து பேர் புகைத்தபடி குதூகலமாகச் என்னைத் தாண்டிச் செல்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் இருக்கும் பள்ளிவாசல் திறந்துதான் இருக்கிறது. அதைத்தாண்டிதான் சிறுவர்கள் செல்கிறார்கள். இறைவனுக்கும் தெரியும் அதிலிருக்கும் எல்லாச் சிறுவர்களும் சிகரெட்டுக்கு அடிமையாக மாட்டார்கள் என்று. அனுபவக் கல்வி கொடுப்பதை விட ஏட்டுக்கல்வி பெரிதாக எதையும் கற்று கொடுத்துவிடுவதில்லை. 

-யோகி 

வெள்ளி, 13 மே, 2016

சில சம்பவங்களும் பகுப்பாய்வும்

சம்பவம் 1
பெண்களுக்கான பித்தலை அணிகளன்களை விற்கும் கடை. அழுது அடம்பிடிக்கும் தன் மகளை அடித்து அவள் அழுகையை நிறுத்த முயல்கிறார் அந்த தாய். மகளின் அழுகையை நிறுத்தவும் முடியாமல் அதை வேடிக்கை பார்த்தவர்களிடமிருந்து மீளவும் முடியாமல் தன் மகளை அடித்தவாறே இழுத்தும் செல்கிறார்.

சம்பவம் 2
இரண்டு சகோதரர்களுக்கு ஒரு பலூனை வாங்கிவிட்டனர் அந்தப் பெற்றோர். பெரியவனிடம் அந்த பலூன் இருக்கும் போது சிறியவன் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். சிறியவனுக்கு அந்த பலூன் கை மாறும்போது முகம் சுறுங்கி, தம்பியை கொலை வெறியில் பார்க்கிறான் அண்ணன். பெற்றோர்கள், இருவரையும் ஆளுக்கொரு திசையில் வைத்துக் கொண்டும் முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டும் விழித்து நிற்கின்றனர்.

சம்பவம் 3
4 குழந்தைகள் ஐஸ்கிரிம் வாங்க போகிறார்கள். 4 வெள்ளி அவர்கள் கையில் இருக்கிறது. ஐஸ்கிரிம் விற்பவர் ஓர் ஐஸ்கிரிம் 2 வெள்ளி என்கிறார். ஒரு காலத்தில் 50 சென், பின் ஒரு வெள்ளியாக இருந்த அந்த பண்டம் சித்திரை பௌர்ணமி திருவிழாவில் கோடையை கொண்டாட 2 வெள்ளிக்கு விற்கப்பட்டது. குழந்தைகளின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை நினைத்து பார்க்ககூட கவலையாக இருக்கிறது.

சம்பவம் 4
5 வயது குழந்தை அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம். குழந்தையின் அம்மா அந்த கொடூரச் செயலை செய்திருக்கிறார். பின்னர், விசாரனையில் குழந்தையின் அம்மா போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தையை வேறொரு இந்திய குடும்பம் தத்து எடுத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

மேற்கூறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள் பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவின் போது நடந்தன. மூன்றாவது சம்பவம் தெலுக் இந்தான் நகரில் சித்திரை பௌர்ணமி திருவிழாவின் போது நடந்தது. நான்காவது சம்பவம் பெட்டாலிங் ஜெயாவிலும் நடந்த பத்திரிகையில் வந்த செய்தியாகும். நான்காவது சம்பவத்தை பேசுவதற்கு முன்னதாக முதல் மூன்று சம்பவங்களை கொஞ்சம் பேசலாம்.

சாதாரணமாகவே குறிப்பாக வரிய நிலையில் உள்ள குடும்பங்களில் நடக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள்தான் அவை. ஆனால், கடந்த வருடத்திலிருந்து வரிய நிலை என்பது இந்த நாட்டில் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்ற கேள்வியை முன்வைத்தால் மேல் நடந்த சம்பவங்களின் தீவிரம் நமக்கு புரியலாம்.
ஒரு 6 வயதுக் குழந்தைக்கு வலையல் வாங்கிக் கொடுக்க முடியாமலும், இரண்டு பலூன்களை வாங்கி தனது பிள்ளைகளுக்கு ஆளுக்கொன்று தர முடியாமல் போவதற்கும், ஐஸ்கிரிமை இரண்டு வெள்ளி கொடுத்து வாங்கி கொடுக்காமல் போவதற்கும் ஏழை கூலி தொழிலாளிகளான பெற்றோருக்கு பொருளாதாரம் இடம் கொடுக்க மறுக்கிறது என்றால், அவர்களால் குடும்பமாகச் சென்று ஒரு கடையில் அமர்ந்து நிம்மதியாக உணவருந்த முடியுமா? அல்லது பொழுது போக்கு அம்சங்கள், நல்ல துணிமணிகள் இப்படி ஏதாவது வாங்க முடியுமா என்று தெரியவில்லை. அனைத்தும் வணிகம் ஆகிவிட்ட மலேசியத் திருநாட்டில் ஏழைகளுக்கு இந்த வாழ்க்கை மறுக்கப்பட்டு வருகிறதோ என்ற அச்சமும் பதற்றமும் ஏற்படத்தான் செய்கிறது.

தைப்பூசம் போன்ற பெரிய விழாக்களில் ஏழைகளை அதிகம் காப்பாற்றுவதே அன்னதானங்கள்தான் என்றால் அதை யாரும் மறுத்து கூறிவிட முடியாது. 1990-களில் பிலாஸ்டிக் வலையல்களை ஒரு வெள்ளிக்கு 10 பீசஸ் வாங்கலாம். கண்ணாடி வலையல்களை ஒரு வெள்ளிக்கு 6 பீசஸ் வாங்கலாம். அதன் பிறகு 2000–ஆம் ஆண்டுகளில் வலையல்களில் ஜிகுனா தூவப்பட்டு வேலைப்பாடுகளுடன் வரத்தொடங்கி விலை ஏற்றமும் அடைந்தது. இன்று குழந்தைகளுக்கான குறைந்த விலையில் விலையல்கள் வாங்க 5 வெள்ளி தேவைப்படுகிறது. 

பலூனின் விலையை சொல்லவே வேண்டாம். ஒரு பாலூன் 5 வெள்ளியிலிருந்து துவங்குகிறது. நெகிலியில் அடைக்கப்பட்ட காற்று ஒரு நொடியில் வெளியாகி அல்லது உடைந்து காற்றோடு கலந்துப்போகும் பலூனுக்கு ஓர் ஏழை 5 வெள்ளி செலவு செய்கிறார் என்றால் அது அவர் எடுத்திருக்கும் பெரிய முடிவுதான் என்றாலும், அதன் முன் நிற்பது என்ன? குழந்தைகளின் ஆசையை நிராசையாககூடாது என்ற பெற்றோர்களின் அக்கரை அல்லது ஒன்றாவது வாங்கிகொடுத்து குழதைகளின் ஆசையை பூர்த்தி செய்லாமே என்கிற பாசமும்தானே. 

100 கிராம் பால்கோவா 7 வெள்ளி, 5 பீசஸ் இனிப்பு பலகாரங்கள் 5 வெள்ளி, ஒரு ஜிலேபி ஒரு வெள்ளி என இனிப்பு பலகாரங்களும் ராட்டினம் போன்ற விளையாட்டுகளை விளையாட ஓர் ஆளுக்கு 10 வெள்ளிக்கு குறைந்து இல்லை. 900 வெள்ளி அல்லது 1000 வெள்ளி வருமானம் பெரும் ஒரு ஏழைக் குடும்பத்தில் தைப்பூசம் மாதிரியான நிகழ்வுகள் மனதளவில் தளர்வையே ஏற்படுத்துகிறது. அந்த நேரத்து செலவை கட்டுப்படுத்த நகைகளை அடமானம் வைப்பது, கடன் வாங்குவது, பார்த்து பார்த்து கிள்ளி கிள்ளி பத்தும் பத்தாமல் ஏக்கத்தோடு செலவு செய்வது; பணம் இல்லை என்றால் திருவிழாவுக்கே வராமல் இருப்பது. இப்படித்தான் ஓர் ஏழையின் கொண்டாட்டம் இந்த நாட்டில் அமைகிறது.

நாட்டின் பண வீக்கத்தாலும் பொருளாதார வீழ்ச்சியினாலும் வெகுவாக பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான் என்பது மிகவும் வேதனையான விஷயமாகும். சத்தான உணவு கிடைப்பதிலிருந்து அவர்களின் உளவியல் பாதிப்பு வரை எல்லா குழந்தைகளும் பெரிய அளவில் மனபாதிப்பை அடைகிறார்கள்.
“என்னைப்பார் சரியாக படிக்காததால் கூலி வேலை செய்கிறேன். நீ அப்படி ஆகப்போகிறாயா? படி ! படி! படி!. விளையாடாதே; காட்டூன் பார்க்காதே; படிப்பது ஒன்றுதான் உன் கடமை. நல்லா படித்தால் நன்றாக சம்பாதிக்கலாம். நன்றாக சம்பாதித்தால் கஷ்டம் இல்லாமல் வாழலாம். என்னைப்போல நூறுக்கும் ஆயிரத்தும் நாய் பாடு படமாட்டாய்” என ஒவ்வொரு பெற்றோரும் தன்னையே உதாரணமாக நிறுத்தி குழந்தைகளின் குழந்தை குணத்தையே சிதைத்து அவர்களின் இயல்பு வாழ்கையையே வாழவிடாமல் ஆக்கிவிடுகிறார்கள். படிப்பு ஏறாத பிள்ளைக்கு உடனே கிடைப்பது அடிதான். இல்லை என்றால் கண்டிக்கிறேன் என்ற பெயரில் ஏற்படுத்தும் சொல் சித்திரவதை.
மூன்றாவது சம்பவத்திற்கு இது காரணமாக இல்லாவிட்டாலும் இதுவும் காரணங்களில் ஒன்று என்பதும் மறுப்பதற்கில்லை.
மூன்றாவது சம்பவத்திற்கு உரிய தாய் ஒரு போதை பித்தர். கண்முன் தெரியாமல் குழந்தை சுயநினைவு இழக்கும் அளவுக்கு அடித்து நொருக்கி விட்டார். தற்போது தாய் சிறையில் இருக்க, அந்தக் குழந்தையை வேரொருவர் தத்தெடுத்துள்ளார்.
அந்தக் குழந்தையை பராமரிக்க அவர் குடும்பத்திலேயே யாரும் இல்லையா என்ற கேள்விக்கு நம்மிடத்தில் பதில் இல்லை. நமக்கே வாயிக்கும் வயிற்றுக்கும் போதவில்லை; மூன்றாவது நபருக்கு எப்படி அடைக்களம் கொடுப்பது?

நாட்டின் வேலையில்லாத பிரச்னையும், குறைந்த வருமான பிரச்னையும் தனி ஒருவனை இப்படித்தான் சிந்திக்க தூண்டுகிறது. இதில் ஜி.எஸ்.டி போன்ற வரி ஏழைகளை பரம ஏழைகளாக்கி கொண்டிருப்பது கண்கூடாக பார்க்க முடிகிறது. இன்று அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக ஆகிவிட்ட தொலைபேசி டோப் அப்-களுக்கு கிட்டதட்ட ஆறு மாதங்கள் 5 வெள்ளிக்கு 30 சென் விகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்ட வந்த வேளையில், 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அந்த வரி விதிக்கப்படாது என அரசாங்கம் தெரிவித்தது. ஆனால், தற்போது நாம் 10 வெள்ளிக்கு டோப் ஆப் செய்தால் 60 சென்-னை கழித்துக்கொண்டு 9.40 சென் தான் மிச்சம் என தொலைபேசி தகவல் காட்டுகிறது. அரசாங்கத்தின் ஸ்மார்ட் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என நினைத்து மக்களும் பொறுமையாக இருக்க பழகி வருகிறார்கள். ஆனால், உளவியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நாட்டில் கண்ணுமுன்னு தெரியாமல் பெருகி வருகிறது.

தங்களின் ஞாயமான கோபத்தை நாட்டின் அரசிடம் காட்டக்கூட தெரியாத மக்கள் தங்களை தாங்களே வதைத்து கொள்கிறார்கள். அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்துவிட்டன. மேற்கூறிய 4 சம்பவங்கள் குறித்து அரசு நிச்சயம் தெரிய வாய்ப்பு இல்லை. அதைவிட அரசுக்கு வேறு வேலை என்ன இருக்கிறது எம்கிறீர்களா? அதற்கு அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

-நன்றி 

மலேசியா சோசியலிஸ்ட் கட்சி (மே மாத இதழ்)

வியாழன், 12 மே, 2016

ஒவ்வொருவரிடமும், ஏதோ ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன்


இலங்கையில் வெளிவரும் தமிழ் மிரர் பத்திரிகையின் இலக்கிய பகுதியில் என்னிடம் சில கேள்விகளையும் அதற்கு ரத்தின சுறுக்கமான பதில்களையும் வழங்குமாறு நண்பரும் சகோதரருமான  முஸ்டீன் கேட்டிருந்தார். கடந்த மாதம் அந்த கேள்வி-பதில் அங்கம் தமிழ் மிரரில் பிரசுரமாகியிருந்தது. தமிழ் மிரர் குழுமத்திற்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். நன்றி.

(தேவைக்கருதி, எனது ஒப்புதல் மூலம் சில பதில்கள் சுறுக்கப்பட்டுள்ளன. எனது அகப்பக்கத்தில் முழுவதுமாக அதை பகிர்ந்திருக்கிறேன்.)

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?

இது எனக்கு மிகவும் சிக்கலான கேள்வியாக இருக்கிறது. மதிப்பீடு எனும்போது எதைவைத்து மதிப்பிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.. மேலும் இதற்கான பதிலில் நான் என்னை தற்காத்து பேசுவதற்கான தொணி வெளிபடலாம். 
பிற மனிதர்களோடு மதிபிட்டு, அளவில் எடை போட்டு அவர்களிடம் பழகாத பழக்கம் உள்ள என்னை சூனியத்திற்கு நிகராக மதிப்பிடுகிறேன்.

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?

இதற்காக சரியான இலக்கத்தை என்னால் கூற முடியவில்லை. காரணம் ஒவ்வொருவரிடமும், ஏதோ ஒரு விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 
எல்லாவற்றிலும் ஒத்த கருத்துடன் ஒருவர் இருப்பாரேயானால் ஒன்று அவர் இயந்திரமாக இருக்க வேண்டும். அல்லது அவர் நடிக்க வேண்டும். 

03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?

மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன். காரணம் அது பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு. அப்போது மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தவர் வருடத்திற்கு 10 எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் வகையில் பரிசு வழங்குவதாகவும் கட்டாயமாக அதில் இரண்டு பெண் படைப்பாளிகளுக்கு கொடுத்துவிட பரிந்துரைப்பதாகவும் பேசினார். நான் எழுத்தாளர் சங்கத்தில் இல்லாத பெண். எழுத்தின் தரத்திற்கு பரிசு கொடுக்காமல் கட்டாயமாக பரிசு என்ற பெயரில் பிச்சை போட நீங்கள் யார் என முகநூல் வழி கேள்வி எழுப்பினேன். அச்சங்கத்தில் இருக்கும் பெண் எழுத்தாளர்களின் நிலைபாடு குறித்தும் கேள்வி எழுப்பினேன். மலேசிய வல்லினம் நண்பர்கள் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அந்தச் சங்கத்தில் இருந்த முக்கிய பெண் ஆளுமைகள் நட்பை முறித்துக் கொள்ளும் அளவுக்கு முரண் ஏற்பட்டது. நான்காண்டுகளுக்கு மேல் கடந்து இப்போது அதை நினைக்கும்போது சுவாரஸ்யமான நிகழ்சியாகத்தான் தெரிகிறது. 

04. இலக்கியவாதி இலக்கியப்படைப்பு ஆகியவற்றைப் பற்றி நீங்கள் எழுதியதில் எது உங்களைக் கவர்ந்தது?

இரண்டுமே என்னைக் கவர்ந்ததாகத்தான் இருக்கிறது. ஓர் இலக்கியவாதியை வாழும் காலத்திலேயே அங்கீகரிக்க வேண்டும் என கூறுபவள் நான். அங்கீகாரம் என்பது எழுத்தின் வழியே பதிவு செய்யப்பட வேண்டும். அதைவிட சிறந்த கௌரவம் அந்த இலக்கியவாதிக்கு கொடுக்க முடியுமா என தெரியவில்லை. இலக்கிய படைப்பு என்பது என் மன அரிப்புக்கு சொறிந்துகொள்வது போன்றது. இரண்டும் சுகம்தான். 

05. எந்த எழுத்தாளரை மிகவும் மதிக்கின்றீர்கள்?

மனிதத்தை மதிக்கும் எழுத்தாளர்கள் யாரையும் மதிக்கிறேன்.

06. உங்களை ஆச்சரியப்படவைத்த இரண்டு நூல்களைச் சொல்லுங்கள்?

இதுவும் சிக்கலான கேள்விதான். காரணம் நான் புத்தகங்களை தேடி தேடி தெரிவு செய்து வாசிப்பவள். சில புத்தகங்கள் என்னை ஏமாற்றியும் உள்ளன. ஆனால், பல புத்தகங்கள் அன்னை அசத்தியிருக்கின்றன. அதில் இரண்டு மட்டும் தேர்வு செய்வது என்பது மனதிற்கு கொடுக்கும் வன்முறையாக பார்க்கிறேன். அம்பையின் காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பு மனதுக்கு நெருக்கமானது. கடவுளின் படைப்பு என்பதைத் தாண்டி பகவத் கீதை என்றும் ஆச்சரியம்தான் எனக்கு. 

07. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன

எழுத்தாளர் ரே.கே.ரெளலிங் கோடிஸ்வர எழுத்தாளர் என்ற இடத்தை சமீபத்தில் இழந்தார். காரணம் அவர் சொத்துகளை அறகட்டளைக்கு கொடுத்து விட்டார். என் எழுத்தை பொருளாதாரம் தீர்மானிக்குமேயானால் நான் ஒரு படைபாளி அல்ல; வியாபாரியாவேன். வியாபாரியின் எழுத்துக்கும் தார்மீகத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 

08. முகநூல் வலைப்பூ இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?

கருத்து சுதந்திரம். சுய முயற்சி. உலகில் எல்லாருக்குள்ளும் இலக்கியதரம் வாய்ந்த கதை உண்டு. அவர்கள் இரண்டு வகையில் உள்ளனர்.
ஒருவர் எழுத தெரிந்தவர் இன்னொருவர் எப்படி எழுத வேண்டும் என்று தெரியாதவர்.

09. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக?

என் குடும்பத்தில் நானும் என் துணைவரும் இருக்கிறோம். எங்களின் 9 வருட வாழ்கையில் நாங்கள் சம்பந்தப்பட்ட முடிவை நாங்களே தீர்மானித்து சுதந்திரமாக வாழ்கிறோம். என் தந்தையின் குடும்பத்தில் நான் அவருக்கு முதல் குழந்தை. அப்பா மறைவிற்குப் பிறகு குடும்ப பொறுப்பை கையில் எடுத்து, உடன் பிறந்த மூவரையும் முறையாக வழிநடத்தி கரை சேர்த்தாகி விட்டது. இப்போது என்வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.   

10. விருதுகள் குறித்து?

விருதுகள்தான் ஒரு படைப்பாளனை அங்கிகரிக்கிறது என்றால் அதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால், விருதுகள் ஒரு தனித்த அடையாளத்தை பேச வைக்கிறது. விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஒரு படைப்பாளனை ஆதரித்தோ அல்லது எதிர்தோ செய்யப்படும் விவாதங்கள் 
அந்த படைப்பாளனின் ஆளுமையை மட்டுமே பேச வைப்பவையாக இருக்கிறது. இருந்தபோதும் சில விருதுகள் வெளிச்சம் காட்டுவதாகவும், சில விருதுகள் எரிச்சல் படுத்துவதாகவும் உள்ளதை மறுப்பதற்கில்லை.

11. தமிழின் சிறந்த படைப்பாளியாக நீங்கள் கருதும் ஐந்து பேரின் பெயர்களைச் சொல்லுங்கள்?

பாரதி, பிச்சைமூர்த்தி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், பிரமிள் (இவர்களைத்தாண்டி இன்னும் பட்டியல் நீள்கிறது)

12. சாஹித்தியப் பரிசுக்கான தெரிவுகள் நேர்மையாக இடம்பெறுவதாகக் கருதுகின்றீர்களா? நீங்கள் பரிந்தரை செய்யும் வழிமுறை?

அவர்களின் நேர்மை குறித்து விமர்சிக்கும் தகுதியை முதலில் நான் வளர்த்துகொள்ள வேண்டும். பின் தான் அதன் வழிமுறையை யோசிக்க முடியும். 

13. புலம்பெயர்ந்தவர்களின் தமிழ்ப் படைப்புக்கள் குறித்து?

அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காத வலியை உணராத,
 நான் யார் அந்த படைப்புகளைக் குறித்து கருத்துச் சொல்ல? புலம் பெயர்ந்த தமிழர்கள் இலக்கியம் படைக்க புலம் பெயரவில்லை. தன்னை மீறி வெளிப்படும் அவர்களின் படைப்புகள் வலியின் மிச்சம், சில படைப்புகள் காழ்புணர்வின் எச்சம்!

14. உங்கள் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான தூரம் எத்தகையது?

என் கணிணிக்கும், எனக்கும் இடையேயான தூரம்!

15. சட்டகங்களை உடைத்துக் கொண்டு அது தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் எழுதுவது பற்றி?

அது எழுத்தின் பரிணாமம். பல நூற்றாண்டுகளாக எழுத்து அதன் போக்கில் புதிய விதிகளை விதித்துக்கொண்டே தான் இருக்கின்றது, நாளை வேறு மாதிரியான எழுத்துகள் வரக்கூடும். அதுதான் எதார்த்தம்...


சனி, 7 மே, 2016

வெறுப்பு என்ற வார்த்தையில் எனக்கு நம்பிக்கையே இல்லை- ஓவியர் ஜெகன்நாத்தின்

ஓவியர் ஜெகன்நாதன் ராமசந்ரம் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஓவியர் எனப் பெயர் பெற்றவர். இவர் கோலாம்பூரில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலிருந்தே ஒரு வங்கி ஊழியராகத்தான் வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது. 

17 வயது இருக்கும். அந்தோணியன் என்ற புத்தகக்கடைக்கு தற்காலிக வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குச் சென்றார். அங்கு அவருக்கு 24 கேள்விகள் கேட்கப்பட்டன. அவரால் 10 கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல முடியவில்லை. மனம் உடைந்து போன அவர் நம்பிக்கையிழந்து வெளியில் வந்தார். அன்றுதான் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ஓவியர் எஸ். சந்திரனின் ஓவியக் கண்காட்சியை எதிர்பாராத விதமாகக் கண்டவர், அவர் வாழ்கையையே புரட்டி போட செய்தது. அதோடு அவரின் வங்கி கனவும் முடிவுக்கு வந்தது. 1982-ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்று முறையாக ஓவியம் பயின்றார். ஆனால், அது அவருக்குத் திருப்திகரமாக அமையவில்லை. இரண்டு வருடங்கள் இந்தியாவின் பல இடங்களுக்குச் சென்று அனுபவக்கல்வியும் பெற்றார். பின் 1984-ஆம் ஆண்டு மலேசியாவுக்குத் திரும்பி வந்தார் ஜெகன்.
அண்மையில் மலேசிய இந்திய தொழிற்முனைவர்களுக்கான ஆங்கிலச் சஞ்சிகையில் அவரின் நேர்காணல் வந்திருந்தது. அந்தச் சஞ்சிகை ஓவியர் ஜெகநாத்தின் படத்தையே முகப்பு அட்டையாக அச்சிட்டு வெளியிட்டிருந்தது, மலேசிய ஓவியர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அந்த நேர்காணலில் பல கேள்விகள் அவரிடம் கேட்கபட்டன. ஓவியங்கள் வர்த்தக ரீதியில் எப்படி வெற்றியடைகின்றன என்பதைக் குறித்தான பல கேள்விகள் அந்த பேட்டியில் இருந்தாலும் எனக்குத் பிடித்தச் சில கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்தன.
அதில் சில.. *உங்களுடைய ரொல் மாடல் யார்? -Desmond Morris எக்காலத்திலும் என்னுடைய குருவாக இருக்கிறார். என்னுடைய ரோல் மாடலாக Nikola tesla இருக்கிறார். கலீல் ஜிப்ரான், தாகூர், ரூமி, ராமானுஜம், என் மகள் மற்றும் நிலா. *நீங்கள் வெறுப்பது ? - வெறுப்பு என்ற வார்த்தையில் எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால், மக்கள் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவது கஷ்டமாக இருக்கிறது. மேலும், நிகழ்காலத்தை நினைக்காமல் கடந்த காலத்தைப் பற்றியே பேசுபவர்களையும் நான் விரும்புவதில்லை. 

*இந்தியர்களிடம் உங்களுக்குப் பிடித்த அம்சம் என்ன? -ஆதியிலிருந்தே மிக ஆழமான இடத்தை அறிவியல் ரீதியாக இந்தியர்கள் கொண்டிருக்கிறார்கள். அதை உண்மையில் நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனால், மூட நம்பிக்கைகளில் கண் மூடித்தனமாக இருப்பது விரும்பத்தகாததாக இருக்கிறது. *காதலை எப்படி நீங்கள் வரையரை செய்கிறீர்கள்? -உங்களைவிட மற்றவர் அதிகமான மகிழ்ச்சியை உணரும்போது அங்குக் காதல் மேலோங்குகிறது.... *உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? -இக்கணத்தை வாழ்வதே என் இரகசியம் அவருடைய வண்ணங்களான ஓவியங்கள் ஏற்படுத்தும் தாக்கம் எனக்குக் கொஞ்ச நஞ்சமில்லை. விநாயகரை ஓவியமாகத் தீட்டியிருப்பார் ஜெகன். எப்பவும் விருப்பமான ஓவியமாக அது எனக்கு இருக்கிறது. மேலும், நான் தேடி முடிக்காத வண்ணங்களை அது கொண்டிருக்கிறது. தன்னுருவத்தையும் ஓவியங்களில் கொண்டு வருகிறார் ஜெகன்.

ஓவியர் ஜகனின் ஓவிய அனுபவத்தில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று இருக்கிறது. அதாவது அவர் ஓவியம் வரைய தொடங்கிய மூன்றாவது வாரத்தில் சஞ்சய் காந்தி இறந்து போகிறார். அவரின் மறைவு ஓவியர் ஜகனை நிலைக்குழையச் செய்தது. காரணம் அவர் மறைவிற்கு ஒரு வார இடைவெளியில்தான் சஞ்சய் காந்தியை ஓவியமாக வரைந்து ஒரு பத்திரிக்கைக்கு தந்திருந்தார். அவரின் மறைவு ஜெகனை அதிர்ச்சிக்குள்ளாக்கியதில் ஆச்சரியமில்லை. 
ஒரு முறை மரணத்தின் வாசலையும் தொட்டுவிட்டு வந்திருக்கிறார் இவர். இப்படியான திருப்பங்களும், அதிர்ச்சிகளும், ஆச்சரியங்களும் இவரின் வாழ்வில் அதிகம். அவரின் ஓவியங்களை நான் இரு முறை நேரில் பார்த்து அதிசயித்திருக்கிறேன். ஆனால், அவருடன் ஒரு முறைகூடப் பேசியது இல்லை. அவர் மேல் நான் கொண்டிருக்கும் பிரமாண்டம் சிதறாமல் இருப்பதற்கு அவருடன் பேசாமல் இருப்பதுதான் சிறந்த வழி என்றும் தோன்றுகிறது. இது என்ன சிறுபிள்ளைத்தனம் எனத் தோணலாம். சிறுபிள்ளைத்தனம்தான். எளிதில் நண்பர்களாகிவிடுபவர்கள் மத்தியில் நான் அதிகம் உரிமை எடுத்துக்கொள்பவளாக இருக்கிறேன். ஓவியர் ஜகநாதன் என்பவர் அந்த உயரத்தில் இருந்துக்கொண்டே என்னைப் பார்த்து சிரிக்க வேண்டும்.

உப்பு நாய்கள்




புத்தகம்: உப்பு நாய்கள்
எழுதியவர்: லஷ்மி சரவணகுமார்
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை : 220 ரூபாய்
எனதினிய நண்பர் லஷ்மி சரவணகுமாரை நான் வளரும் ஓர் இயக்குனராகவே பார்க்கிறேன். அதனால் தானோ என்னவோ அவரின் இந்த நாவலை வாசிக்கும்போது ஒரு தமிழ் திரைப்படத்தை வாசிப்பது போன்றே இருந்தது.
ஒரு தமிழ்த்திரைப்படத்தை காட்டிலும்
அதிகமான காதாபாத்திரங்களில் சுவாரஸ்யங்களை கூட்டி அழகான கதையை லஷ்மி தந்திருக்கிறார்.
இந்த நாவலின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒருவரான
சம்பத் ஆரம்பத்திலிருந்தே எனக்கு பிடித்த பாத்திரமாக இருக்கிறார்.
நாவலை தொடக்கி வைக்கும் சம்பத்துதான் நாவலை முடித்தும் வைக்கிறார். இதற்கிடையில் செல்வி, தவுடு, முத்துலெட்சுமி என இவர்களைச் சுற்றி ஒரு கதையும், ஆத்தம்மா என்ற 11 வயசு சிறுமி, அவளது அப்பா-அம்மா மற்றும் ஆர்த்தியைச்
சுற்றி ஒரு கதையும் இந்த நாவல் பேசுகிறது.
விளிம்பு நிலை மனிதர்களின் அப்பட்டமான வாழ்க்கையை லஷ்மி மிக எதார்தமாக பதிவு செய்துள்ளார்.
ஓரினச் சேர்க்கை, போதைபொருள் வியாபாரம், பிக் பாக்கெட், ஆள் கடத்தல் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நகரம் தூக்காநகரமாக இயக்கிக் கொண்டிருக்க ஆதிக்கவாதிகள் என்ன செய்வார்களோ அதை அனைத்தையும் போரடிக்காமல் லஷ்மி கதை சொல்லியிருக்கும் பாணி அழகு.
"வாழ்க்கை எல்லாருக்குமிருப்பதைப் போலில்லை" என நாவலில் கூறுகிறார் லஷ்மி சரவணகுமார். வாழ்தலின் வழியையும் சில இடங்களில் கூறிக்கொண்டிருக்கிறார்...