வியாழன், 11 பிப்ரவரி, 2016

'ஓலா போலா' சுயநலமற்ற ஒற்றுமை

 வெற்றி பெற்றால் ஒன்றாக வெற்றி பெறுவோம், தோல்வியடைந்தால் ஒன்றாகவே தோல்வியடைவோம்இதுதான் ஓலாபோலாதிரைப்படத்தின் தாரக மந்திரமாக இருக்கிறது. ‘ஓலாபோலாதிரைப்படத்தின் இயக்குனர் சியு கேங் குவானுக்கு இது இரண்டாவது படமாகும். முதல் படத்திலேயே இவர் முத்திரை பெற்ற இயக்குனர் என பெயர் பெற்றவர். இவரின் முதல் படமானthe journey இதுவரை வந்த  மலேசிய திரைப்படங்களிலேயே அதிக வசூல் சாதனை படைத்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சியு கேங் குவான் இயக்கியிருக்கும் இந்தப் படம், அவர் நினைத்தவுடன் எடுத்தப் படம் இல்லை. அதற்காக அவர் கிட்டதட்ட இரண்டரை வருடங்கள் உழைத்திருக்கிறார். அந்த உழைப்பு சாதாரண உழைப்பு இல்லை என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிந்துக்கொள்ளலாம்.
 1970 ஆம் ஆண்டு நடப்பதைப்போன்று கதை கலத்தைக் கொண்டு போயிருப்பது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் நாட்டில் புழக்கத்தில் இருந்த பொருள்கள், வாழ்வியல் முறை என அனைத்தையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் சில புதுமுகங்களை தேர்வு செய்ய 2 வருடங்களை செலவு செய்திருக்கிறார். பிரேசிலில் நடந்த  உலக  காற்பந்து போட்டியை நேரில் காணச்சென்றவருக்கு இந்த திரைப்படத்திற்கான எண்ணம் உதித்ததாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது  கேங் குவான் தெரிவித்தார். 
இந்தப் படத்தில் படத்துடன் இணைந்து வரும் ‘அரேனா சாகாயா’ என்ற பாடலை புகழ்பெற்ற பாடகி ஜி அவி பாடியிருக்கிறார். அந்தப் பாடல் படத்தின் கருவை பேசக்கூடியது. தொடர்ந்து இரண்டாவது பாடலான we will believe again  என்ற பாடலை விருது வென்ற புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஒன் சான் இசையமைக்க, பிரபல உள்ளூர் பாடகர்களான அரில், கணேசன் மனோகரன், ஜெரால்டின் கான் மற்றும் நிக்கோல் லாய்  என மிகப் பெரிய கூட்டணி மொழி இனம் பேதமின்றி பாடலை பாடியிருக்கின்றனர். மலேசிய இளைஞர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் குதூகலத்தை ஏற்படுத்தக்கூடியது இந்தப்பாடல். அப்படி பதிவு செய்வதில் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.  

பட  இயக்குனருடன்
ஓலாபோலா மலேசியாவில் வாழும் மூவின மக்கள் குறித்தும்  இந்த தேசத்தைக்குறித்தும், அதன்  மதிப்புகளையும் சித்தரிக்கும் விதத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.  1970-ஆம் மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில், மலேசியாவின்  ஹரிமாவ் மலாயா  காற்பந்து அணி எதிர்நோக்கிய வேற்றுமைகள் மற்றும் சவால்களை மிக கவனமாக இயக்குனர் படமாக்கியிருக்கிறார்.

தொடர்ந்து தமது வாழ்வியலுக்கும் பொருளாதாரத்திற்கும் ஒத்து வராத ஒரு விளையாட்டை, நிராகரிக்கச் சொல்லும் ஓர் இந்தியக் குடும்பம், அண்ணனுடைய பந்துவிளையாட்டுக் கனவுக்காக தனது எதிர்காலத்தையே தொலைத்த  தங்கையைக் கொண்ட சீனக்குடும்பம், தேசிய கால்பந்து அணியில் சிறந்த ஒரு ஆட்டக்காரராக வலம் வர வேண்டும் என ஆசையோடும் கனவுகளோடும் இருக்கும் மலாய் இளைஞன், வானொலியில் விளையாட்டு வர்ணனையாளராக வதற்கு கனவு கொண்டிருக்கும் மற்றொரு மலாய் இளைஞர் என இவர்களின் குடும்ப பின்னணிகளின் துணையுடன் கதை பின்னப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் குறித்து முன்னதாக  நடந்த ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனருடன் பேசுவதற்கான ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்தது 80-ஆம் ஆண்டை மையப்படுத்தியதுபோல் இல்லாமல் இன்றைய காலத்தை காட்டும் காட்சிகளாகக் காட்டுவதற்கு சில தொழில்நுட்பங்கள் பயன்படுத்தியதாக அவர் கூறினார். இந்தப் படத்தில் முக்கியமான ஒரு காட்சியாக விளையாட்டாளர்கள் இராணுவத்தில் பயிற்சி எடுப்பதை சொல்லலாம். அந்தப் பயிற்சியின் தொடக்கத்தில் ராணுவ அதிகாரி பேசும் வசனம் மிக முக்கியமானது. (என்ன வசனம் என்பதை திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்).

ராணுவ பயிற்சியின் போது, ராணுவ விமானத்தில் போட்டியாளர்கள் ஏறிச்  செல்வதைப்போன்று  ஒரு காட்சி உள்ளது. உண்மையில் அந்தக் காட்சி  பச்சை திரை தொழில்நுட்பம் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சி என இயக்குனர் கூறினார். திரையில் அந்தக் காட்சியை காணும்போது அது தொழில் நுட்பம் என நம்ப முடியவில்லை.  

1980-ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், மலேசிய அணி கலந்துகொள்ள எதிர்கொள்ளும் சவால்களை படம் முழுவதும் நிலை நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். சில இடங்களில் நகைச்சுவையாகவும் சில இடங்களில் அழுத்தமாகவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இரண்டு இந்திய கதாபாத்திரங்கள் நம்மை கடந்த கால நினைவுகளை தட்டி எழுப்பவதாக உள்ளது. ஒன்று முத்து கதா பாத்திரத்தை ஏற்றிருக்கும் சரண் குமார் மனோகரன். 1980-களில் நமது தேசிய காற்பந்து குழுவில் கோல் கீப்பராக இருந்த ஆறுமுகத்தை நினைவுபடுத்தியிருக்கிறார். மலேசிய ஸ்பைடர் மென்என பெயர் பெற்ற  கோல் கீப்பர் ஆறுமுகம் அளவுக்கு வேறு எந்த மலேசிய கோல்கீப்பரும் கிடைத்த்தில்லை என்பது குறிப்பிடதக்கது.

மற்றொரு நபர் எஎம்ஆர் குழுவைச் சேர்ந்த பெருமாள். இந்தப்படத்தில் அவரின் கதா பாத்திரம் பெரிய அளவில் பதிவாக்கப்படவில்லை என்றாலும்  1990-களில் காற்பந்து நேரடி வர்ணனைகளை செய்து வந்த அறிவிப்பாளர்களான ஆறுமுகம், மைதீ சுல்தான் ஆகியோரின் நினைவுகள் வராமல் இல்லை. வானொலிக்கும் மலேசியர்களுக்கும் அது ஒரு பொற்காலம்தான்.

“ரஜினி பந்தை எடுத்துச் செல்கிறார். அவர் இன்னாருக்கு அதை தட்டி விடுகிறார். எதிராளி அருகில் வந்துவிட்டார். பந்து கோல் வலைக்கு அருகில் இருக்கிறது. இடது புறத்தில் பந்தைத் தற்காக்க இருவர் இருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களே உள்ளது. ‘கோல்’. பந்து கோல் வலையில் சீறி பாய்ந்தது. ஒன்றுக்கு பூஜ்ஜியம். இப்படியான வர்ணனைகளை சின்ன வயதில் நான் என்ன என்றே தெரியாமல் ரசித்து கேட்டிருக்கிறேன். இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன.  

ஓலாபோலாபடத்தில் ரஹ்மான் என்ற கதாபாத்திரம் பந்து விளையாட்டின் நேரடி வர்ணனை செய்யும்போது நம்மையும் அறியாமல் மனதின் பக்கத்தில் வந்துவிடுகிறார். புரூஸ்லி பற்றி கூறி குதூகலிக்கும் காட்சிகள் மிக அழகு, மிக எதார்த்தம். 1970-80 காலக்கட்டங்களில் சீனப்படங்களும் சில தமிழ் இந்திப்படங்களையும் கூட மலாய்க்கார்ரகள் திரையில் கண்டு களித்திருக்கின்றனர். எல்லாம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக அமைகிறது.

படத்தில் காட்சிகளையும் மலேசியாவின் இயற்கை அழகையும் அத்தனை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக புரோக்கா மலையில், பயிற்சியாளர்கள் ஓடும் காட்சியை ‘லோங் சோட்’-டிலிருந்து எடுத்திருக்கிறார். இறுதி காட்சியில் ரயில் வண்டி போவதை காட்டும் காட்சியும் அவ்வாறுதான். தோட்டப்புறத்தை காட்டுவதிலிருந்து, அதிகாலை ரப்பர் மரத்தில் வேலை செய்யும் காட்சிகள் வரை அனைத்தும் அசத்தல்தான்.  

மிகவும் உணர்ச்சி பூர்வமாக எடுத்திருக்கும் இந்தத்  திரைப்படத்தை  மூவின மக்களையும் இணைத்து  உயிர் கொடுத்த்துடன்   மலாய், சீனம், தமிழ் , ஆங்கிலம் என 4 மொழிகள் இந்தத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே, மொழியைத் தாண்டி ஒரு மலேசிய படம் என்பதற்கான காரணத்தை பெருகிறது. ஓலாபோலா ஒரு ஹீரோ அம்சம் கொண்ட படம் அல்ல. ஆனால், நடித்திருக்கும் அனைவரும் ஹீரோக்களாக இருக்கிறார்கள்

அதுவே ஓலாபோலா’ தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றமாதிரி படமாக்கியிருந்தால் அது நிச்சயமாக மிகைபடுத்தியதாக தெரிந்திக்கும். ஒரு காலத்தில், ஏன் 15 வருடங்களுக்கு முன்புகூட நாட்டில் பல்லின மக்களிடையே ஒரு அனுக்கமான ஒற்றுமை இருந்தது. சுயநலமற்ற ஒற்றுமை அது. தற்போது அது சுயநலமாக உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

-யோகி

12.2.16

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 8

மறுநாள் காலையில் பாலகோபால ஸ்வாமி கிருஷ்ணன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார் சாகுல். நான் இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வந்திருந்தாலும் முதன் முதலாக பார்க்க போகும் கோயில் அது. எனக்கும் அந்த பரந்தாமன் என்பவனுக்கும் ஏதோ தொடர்பு இருக்குதான் போல

‘ஹிம்வாட் கோபால ஸ்வாமி பெட்டா’ கோயில் (Himvad Gopalaswamy Betta) கர்நாடகா மாநிலத்தின் எல்லையில் உள்ளது. (பெட்டா என்றால் கன்னட மொழியில் மலைக்குன்று என்று அர்த்தமாம் (முதுமலை வனத்திலிருந்து வெளியாகி ஏறக்குறைய ஒரு மணி நேரம் பயணம் செய்தால் கர்நாடக பாதுகாப்பு சாவடியை அடையலாம். நிறைய விவசாய நிலங்களைக் கடந்து செல்கிறது அந்தச் சாலை. மாட்டு வண்டியை பூட்டிக்கொண்டு அதில் ஓர் ஆளையும் ஏற்றிக்கொண்டு, மேலும் இரு மாடுகளை  மேச்சலுக்குக் கொண்டு வந்திருந்த ஒரு வண்டிக்காரர், கவனத்தை ஈர்த்தார். மாட்டு வண்டியில் ஏறுவதற்கு எனக்கு ஆசை ஏற்பட்டது. சாகுல் வண்டிக்காரரிடம் கேட்க அவர் சரி என்று சொன்னாரே ஒழிய மாட்டு வண்டியை நிறுத்தவே இல்லை. நாங்களும் இது வேலைக்கு ஆகாது என்று அந்த ஆசையை விட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

சாமராஜநகர் வட்டாரத்தில் இருக்கிறது அந்த மலை. மலைமேல் இருக்கும் அந்தக் கோயிலுக்குச் செல்வதற்கான நுழைவாயிலை அடைந்தோம். சொந்த வாகனம் மலையில் ஏறுவதற்குத் தடை விதித்திருந்தார்கள். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில்தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இதற்கு முன்பு இருமுறை சொந்த வாகனத்தில் அந்தக் கோயிலுக்குச் சென்றிருப்பதாகச் சாகுல் கூறினார். இப்போது அதற்குத் தடை விதித்திருப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று கூறியவாறுப் பேருந்தில் செல்ல முடிவெடுத்தோம். பொது விடுமுறையாக இருந்ததினால் ஆட்கள் நிறையவே இருந்தார்கள். குறிப்பாக மலையாளிகள். கன்னடம், மலையாளம், ஹிந்தி, தமிழ் எனப் பல மொழிகள் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

பேருந்து ஒன்று ஸ்வாமித் தரிசனத்திற்குப் பிறகு மலையிலிருந்து ஆட்களை இறக்குவதற்கு வந்துக்கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தக்கூட இல்லை; காத்திருந்த ஆட்கள் முண்டியடித்துக்கொண்டு பேருந்தை நோக்கி ஓடினர். சிலர் கைப் பை, துண்டு எனக் கையில் இருக்கும் பொருள்களைக் கொண்டு பேருந்தின் ஜன்னல் வழியே உட்காருவதற்கு இடத்தைப் பிடித்தனர். சிலர் இன்னும் கொஞ்சம் அட்வான்சாக அவர்களின் குழந்தைகளை ஜன்னல் வழியே நுழைத்துக்கொண்டிருந்தனர். பேருந்து இருக்கைகளுக்கு இத்தனை பிரயாசையா? இன்னும் சிலர் உயிரைப் பணயம் வைத்து ஜன்னல் வழியே அவர்களே உள்ளே குதிக்க முயற்சிசெய்துக்கொண்டிருந்தது பார்க்கப் பயமாக இருந்தது. ஆண்-பெண் பேதமின்றி இடத்தைப் பிடிக்க முண்டியடித்துப் பேருந்தில் ஏறியது எனக்கு உண்மையில் அதிர்ச்சியளித்தது. எவ்வளவு முயன்றும் என்னால் பேருந்தில் ஏறமுடியவில்லை. பின்னுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே இருந்தேன்.

சாகுல் எனக்கு முன்பே போட்டிகொடுத்துப் பேருந்தில் ஏறியிருந்தார். அவர் நான் அமர்வதற்கு இடத்தைப் பிடித்து வைத்திருப்பார் என்ற எண்ணம் இருந்தது. எப்படியோ இறுதியில் நான் பேருந்தில் ஏறினேன். சாகுல் கலவரத்தோடு என்னை வலைவீசித் தேடிக்கொண்டிருந்தது தெரிந்தது. அவர் கண்ணுக்கு அகப்படும் அளவுக்குக் கையை அசைத்து நான் பேருந்தில் ஏறிவிட்டேன் என்பதை உறுதிப் படுத்தினேன். அந்தக் கரடு முரடான சாலையில் பேருந்து வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து நிறைய ஆட்கள். ஆயிரம் கோழிகளை ஒரு கூட்டில் போட்டு அடைத்தால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது. என்னோடு ஒட்டியிருந்தவர்கள் அல்லது நான் எத்தனை பேரோடு ஒரே நேரத்தில் ஒட்டியிருந்தேன் என்பதைக் கணக்குப் பண்ணக்கூட முடியவில்லை. இதில் டிக்கெட் கொடுப்பவர் அனைத்து உடல்களோடும் புதைந்து, திமிரி வெளியேறிக்கொண்டிருந்தார். வளைவுகளில் வளைந்தபடியும், மேடுகளில் எகிறியபடியும்.

எனக்கு இடம் பிடித்து வைத்திருப்பார் என்று நினைத்திருந்த வேளையில் சாகுலும் அமர இடமில்லாமல் நின்று கொண்டுதான் இருந்தார்.
கீழே இருந்து சுமார் 1,454 மீட்டர் உயரத்தை நோக்கிப் பேருந்து போய்க்கொண்டு இருந்தது. வனம் என்றால் அப்படி ஓர் அடர்ந்த வனம். கட்டுமானங்கள், கட்டிடங்கள் என எதுவும் இல்லாது நீல வானத்திற்குக் கீழே பச்சை நிறம் மட்டுமே எங்கும் காண முடிந்தது. ஏகாந்த நிலையில் பறவைகள் கூட்டமாகப் பறப்பதை அந்தக் கூட்டத்திலேயும் காண முடிந்தது. அதை ரசிக்கும் மனநிலை எனக்கும் இருந்தது.
இறுதியில் கோயிலின் வாசலில் பேருந்து நின்றது. எவ்வளவு வேகத்தில் பேருந்தில் மக்கள் ஏறினாங்களோ அதே வேகத்தில் இறங்குவதற்கும் அவர்கள் பிரயத்தனப் பட்டனர். முண்டியடித்து இறங்குவதற்கு அவசரம் காட்டுவதற்கான காரணம் என்ன? சாகுலிடம் கேட்டேன். இந்தியாவின் பிரத்தியேகக் குணங்களில் இதுவும் ஒன்று என்றார். சிரித்துக்கொண்டோம்.
அத்தனை பெரிய உயரத்தில் அந்தக் கோயிலும் இயற்கையும் மட்டுமே இருந்தன. வன விலங்குகள் வந்து போனதற்கான சில தடயங்களும் காணப்பட்டன. குறிப்பாக யானைகள். அதன் எச்சம் கோயில் வாசல்வரை இருந்தது.

ஒரு காலத்தில் பண்டிப்பூர் வனப்பகுதி மைசூர் மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய காடாக இருந்ததாம். ஸ்ரீ ஹிமவத் கோபால ஸ்வாமி ஆலயத்தை 1315- ஆம் ஆண்டு ஹொய்சாள வம்சத்தின் கடைசி மன்னனான வீர பல்லாலன் கட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் மைசூரு சாம்ராஜ்ய மன்னர்களான உடையார்கள் இந்த ஆலயத்தை நன்கு பராமரித்து வந்தார்களாம். ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ள சிறிய ஏரியான ஹம்ச தீர்த்தக் கரையில்தான் அகத்திய மகா முனிவர் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார் என்றும் முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ மஹா-விஷ்ணு இத்தலத்தில் ஸ்ரீ வேணுகோபாலராகக் கோயில் கொண்டுள்ளார் என்பதும் தலபுராணக் கதையாகும். ஆலயத்தைச் சுற்றிலும் ஒரு காலத்தில் 77 புண்ணியத் தீர்த்தங்கள் இருந்தனவாம். ஹம்ச தீர்த்தம் தவிர மற்றவை ஏதும் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்த ஏரியில் ஏராளமான அன்னங்கள் இருந்ததாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்தப் புனிதத் தீர்த்தத்தில் ஒரு முறை காகம் ஒன்று நீராடி அன்னமாக மாறியது என்றும், அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு ஹம்ச தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
எனவே, இப்பகுதியில் காகங்கள் காணப்படுவதில்லை என்றும் கூறுகின்றனர். உண்மையில் அங்குக் காகங்கள் காணப்படவில்லைதான்.
கருவறையில் ஸ்ரீ வேணுக் கோபால ஸ்வாமி நின்றத் திருக்கோலத்தில் கரங்களில் புல்லாங்குழலை ஏந்தி வேணுகானம் இசைக்கும் பாவனையில் காட்சித் தருகிறார். கருங்கல் சிலை அது. புல்லாங்குழல் பொன்னிறத்தில் இருந்தது. வசீகர விக்ரகம். ஒருவகையான ஈர்ப்பு இருந்தது அதில். அதை ஒருவாறு உணரவும் முடிந்தது. அந்தக் கருமை நிறத்தின் பளபளப்பு வைத்த கண்ணை மீட்பதற்கு மிகவும் சிரமத்தைக் கொடுத்தது.
அப்போதுதான் சாகுல் சொன்னார், இந்தக் கோயிலின் பிரபலமே கருவறை நுழைவாயிலின் மேலிருந்து சொட்டுச் சொட்டாக விழும் தண்ணீர் என்று. அந்தக் தண்ணீர் எங்கிருந்து வடிகிறது என்பது மர்மம். அதன் மூலம் கட்டுப் பிடிக்கவே முடியவில்லையாம். அது விழுந்து கொண்டேயிருக்க, அந்தப் புனித நீரை அர்ச்சகர் பக்தர்களின் மீது தெளிப்பாராம். தற்போது அந்தத் தண்ணீர் வடிவது குறைந்து விட்டது என்பது அங்கிருந்த அச்சகரை விசாரிக்கும்போது தெரிந்தது.

கையில் மஞ்சள் கயிறைக் கட்டிவிட்டார் அச்சகம். நான் தடுக்கவில்லை. கோயிலைச் சுற்றிப்பார்க்கும் அனுபவம் மிகவும் ரம்மியமானது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் மலைகளும் மரங்களும் சூழ்ந்திருக்கக் காற்றுத் தழுவும் யத்தனம் மிகமிகச் சுகமாக இருந்தது. வெகுதூரத்தில் ஓர் எறுப்புப்போலத் தெரிந்த யானையினைப் பலர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒரு மரத்தில் சிலர் வேண்டுதல் கயிறுகளைக் கட்டிக்கொண்டிருந்தனர். அத்தனை நம்பிக்கைகள் அந்த மரத்தில் கயிறுகளாகத் தொங்கிக்கொண்டிருந்தன. சிலர் கையில் பிரசாதம் வைத்திருந்தனர். நானும் சாகுலும் பிரசாதம் கொடுக்கும் இடத்தைத் தேடிப் போனோம். பிரசாதம் முடிந்திருந்தது.
கிளம்பலாம் என முடிவெடுத்தோம். கொஞ்சம் சீக்கிரம் போனால் பேருந்தில் அமர்ந்து கொண்டு போகலாம் என நினைத்துக் கிளம்பினோம். வாயிற்படியில் பண்டாரங்கள் இசை எழுப்பியபடிக் கையேந்திக்கொண்டிருந்தனர். அதை வேடிக்கைப் பார்த்தபடி இறங்கிப் போனோம். பஸ்சில் இடமிருந்தது. பா! புகைப்படம் எடுக்கலாம் என்ற நிம்மதிப் பிறந்தது எனக்கு.

அரை மணி நேரத்தில் மலையின் அடிவாரத்தில் இருந்தோம். மனதில் ஒருவகை நிம்மதி இருந்தது. அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு இளநீர் அருந்திவிட்டுச் சென்றால் அதுவே ‘ஹிம்வாட் கோபால ஸ்வாமி பெட்டா’ ஆலயத்தின் இறுதித் தரிசனமாகும்.
 அன்றைய நாளில்  மாலையில் வனத்துறை ஏற்பாடு செய்திருக்கும் பேருந்தில் ஏறி வனத்தின் உள்பகுதியில் காண்பதற்கான திட்டம் இருந்ததால் நேரத்தை கடத்தாமல் நானும் சாகுலும் கிளம்பினோம். பசிப்பதைபோல இருந்தது. சாகுல் சாப்பிடலாமா என்றேன். A1 என்று இருந்தது.  அங்கு சென்றோம். சற்று நேரத்தில் சாகுல்  அங்கு வேணாம் யோகி. என்று கூறிவிட்டு பக்கத்தில் இருந்த கடைக்கு  போகலாம் என்றார். நான் கேள்விக்குறியோடு பார்த்தேன். இது வேறமாதிரி உணவுக்கடை என்றார் சாகுல். இப்போது நான் கொஞ்சம் அதிர்ச்சியாகத் திரும்பி பார்த்தேன். எனக்கு சிரிப்பும் வந்தது.

(தொடரும்)

சனி, 6 பிப்ரவரி, 2016

பேராசிரியர் மௌனகுரு

 பேராசிரியர் மௌனகுரு. ஆம்! எனக்கு அவர் பேராசிரியராகவும் இலங்கை நாடகத்துறையில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்தவராகவும் மட்டும்தான் தெரியும்.  கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து பேராசிரியர் மௌனகுரு எனக்கு முகநூல் வழி அறிமுகமானார். எனது இலங்கைப் பயணம் குறித்தானப் பயணக் கட்டுரையின் வழிக் கிடைத்த சில ஆளுமைகளில் பேராசிரியர் மௌனகுரு மிகமுக்கியமானவர்.

அப்போது அந்தப் பேராசிரியரின் ஆளுமைக் குறித்து நான் பெரிதாக ஒன்றும் அறிந்திருக்கவில்லை. அவர் முகநூலில் பதிவிடும் நிலைத்தகவல்களுக்கு லைக் போடுவதைத்தவிர. பலரின் ஆளுமை குறித்துத் தெரியாமல், இப்படி லைக் போட்டே கடந்து போவது சாதாரண ஒன்றாக ஆகிவிட்டது இல்லையா? இதற்கிடையில் பேராசிரியர் சிங்கப்பூருக்கு வந்திருப்பதாகவும் பினாங்கிற்கு வருவதற்கான திட்டம் உள்ளதாகவும் யோகியைச் சந்திக்க விரும்புவதாகவும் எனக்குத் தகவல் அனுப்பியிருந்தார். ஆனால், அப்போதுமலேசியாவில் புகைமூட்டப் பிரச்னைப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிந்தபடியால் அவருடைய பினாங்குப் பயணத்தின் விமானம் ரத்துச் செய்யப்பட்டது.

இலங்கைத் திரும்பியவர் எனக்கு ஒரு பரிசு அனுப்பியிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் ‘சங்க காலம் முதல் சம காலம் வரை’ என்ற புத்தகம் எனக்குத் தபாலில் வந்து சேர்ந்தது. பேராசிரியர் செ.யோகராஜன் பேராசிரியர் சி.மௌனகுருவைச் செய்த நேர்காணல் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு மகுடம் பதிப்பகம்  வெளியிட்டிருக்கிறது.


மௌனகுரு எனும் ஆளுமை, இலங்கையின் எத்தனை பெரிய கலைச் சொத்து என்று நேர்காணலைப் படித்து முடிக்கும்போது தெரிந்துக்கொள்ள முடிந்தது. நாடகவியலாளராக மட்டுமே அடையாளப்படுத்தப்படும் பேராசிரியர் மௌனகுருவின் இந்த நேர்காணலில் நாடகவியலைச் சார்ந்த கேள்விகளைத் தவிர்த்து அவரின் பிற ஈடுபாடுகளைக் குறித்துக் கேள்விகளை மென்னெடுத்திருக்கிறார் பேராசிரியர் செ.யோகராஜன்.

இந்த நேர்காணம் பதிவில் தன்னை மட்டுமே பேசாமல், அதனூடே வேறு பல ஆளுமைகளையும் தன்னுடனேயே அழைத்து வருகிறார் பேராசிரியர்.
பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப் புரிந்துக் கொள்ளல் என்ற ஆய்வை
மாக்ஸிஸம் பார்வையிலிருந்து விவரிக்கிறார் பேராசிரியர். அதன் வழிப் பல ஆளுமைகளின் அடையாளம் நமக்குக் கிடைக்கிறது. அதேபோன்று ஒவ்வொரு கேள்விக்கும் நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத ஆளுமைகள் அறிமுகமாகிக்கொண்டே வருகிறார்கள்.
தற்கால இலக்கிய ஆளுமைகளுடனும் பரீச்சயம் கொண்டிருக்கும் மௌனகுரு எழுத்தாளன் இதைத்தான் எழுத வேண்டும்; இப்படித்தான் எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்திப்பதை வன்முறை எனகுறிப்பிடுகிறார். மேலும், அதை எந்த விமர்சகரும் அதைச் செய்யக்கூடாது என்றும் வழியுறுத்துகிறார்.

இந்தப் புத்தகத்தில் கவனிக்கப்படும் கேள்வியாக 17-வது கேள்வி இருக்கிறது. ‘சக்தி பிறக்குது’, ‘சரிபாதி’ உள்ளிட்டப் பெண்ணிய நாடகங்களைப் படைத்திருக்கும் பேராசிரியரிடம்
*பெண்கள் இலக்கியத்தில் குறிப்பாக ஈழத்துப் பெண் படைப்பாளிகள் கவிதைத் துறையில் வளர்ச்சிக் கண்டுள்ள அளவிற்குச் சிறுகதை, நாவல் துறையில் வளர்ச்சியடையவில்லை என்று அவதானிக்கப்படுகிறது. உங்கள் அவதானிப்பு எத்தகையது?
-இலக்கியத்தைப் பல்கூறுகளாகப் பிரிக்கலாமா? என்பது எனக்குள் என்றும் எழும் வினா. இலக்கியம் இலக்கியம்தான். ஆண்கள் அனுபவம், பெண்கள் அனுபவம் தான் அதற்குள் வருகின்றன. அடக்கப்பட்டவர்கள் யாவரேயாயினும் அவர்கள் பக்கம் நிற்பது என் இயல்பு. ஆண்டாண்டு காலமாக அடக்கப்படுபவர்கள் யாவரேயாயினும் அவர்கள் பக்கம் நிற்பது என் இயல்பு. ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்டு வந்த அந்தச் சரிபாதி இன்று விழிப்புணர்வுப் பெறுவதும், தம் உரிமைகளுக்காகப் போராடுவதும் வரவேற்கப்பட வேண்டியது என்கிறார்.

பேராசிரியர் மௌனகுருவின் அனைத்துப் பதில்களும் உடன்படக்கூடிய வகையில் நமக்கு இல்லை என்றாலும், மற்ற பல பதில்கள் முக்கியமான விடயத்தை முன்நிறுத்துவதோடு அது விவாத்ததிற்கு உட்படுத்தக்கூடியதாகவும் அடிகோடிட்டுப் பார்க்கக்கூடியதாகவும் இருக்கிறது.

இந்த நேர்காணலில் அதிகமாக இலங்கையைச் சார்ந்த கலை மற்றும் இலக்கியம் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும் மறுவாசிப்புக்கு உட்படுத்திய மகாபாரதம், ‘கம்பன் ஒரு கலக்காரன்’ என எழுதிய கட்டுரை உள்ளிட்டச் சில கேள்விகளுக்குப் பேராசிரியர் அளித்திருக்கும் பதில்கள் கவனித்தில் கொள்ளக்கூடிய விஷயங்களாகும்.
பேராசிரியர் மௌனகுருக் குறித்துப் பெரிய ஆளுமைகள் மத்தியில் பரீட்சயம் இருந்தாலும், அதிகமானோருக்குக் குறிப்பாக இளைய சமூதாயத்தினருக்கு அவ்வளவாகப் பரிட்சயம் இல்லை என்பது கொஞ்சம் கவலையளிகக்கூடிய விடயம்.

பேராசிரியர் மௌனகுரு யார் என்ற அறிமுகத்திற்கும் அவர் செய்த இலக்கியச்சேவை மற்றும் பதிப்பித்திருக்கும் புத்தக அறிமுகங்களுக்கும் இந்த நேர்காணம் சம்பந்தப்பட்ட புத்தகமே போதுமானது.

பேராசிரியரின் இந்த நேர்காணலை மட்டுமே புத்தகமாகக் கொண்டு வருவதற்கான முயற்சியை முன்னெடுத்த மகுடம் பதிப்பகத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தே ஆக வேண்டும்.
நன்றி
6.2.15

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

அவள்… 4

ஆம் நானேதான் அவள்…
அன்று தாய் 
ஈன்ற முயல்குட்டியாக
என் முதல் ஜனனம் தொடங்கியது
கரு நிற குட்டியாக 
நான் அத்தனை அழகாக
துள்ளிகுதித்து வளர்ந்திருந்தேன்
 தெடி பேர் பொம்மைக்கு 
உள்ளது போன்று முட்டை விழிகள்
முதல் தொடுதலிலே
யாரையும் தன் வசம் இழுக்கும்
உரோமம் 
சின்ன உடம்பு
குழந்தைகள்கூட தூக்கி விளையாடி மகிழ்ந்தார்கள்
அழகி… அழகி… அழகி
அழகு என்ற சொல்லை
கேட்டு கேட்டே அருவருத்தவள்
நான்
அன்றுதான்
அவன் பார்வையில்
 சிக்கினேன்
கண்களை உற்று
நோக்கியபடியே
மிக மென்மையாக – என்
தலையை கொய்தெடுத்தான்…
ரத்தத்தை 
கோப்பையில் ஏந்தியவாறு
மது என ருசித்தான்
என் தோலை
உரித்து
இறைச்சியையும்
அத்தனை இன்பமாக புசித்தான்
அவன் காதலிக்கு என் கருந்தோலை
பரிசளித்தான்…

நீ பேரழகி
நீ பேரழகி என்று பிதற்றினாள் அவள்…
கொய்த என் தலையில்
மீந்திருந்தது
மிச்ச உயிர்
இறுதியாக
கண்கள் மூடி திறந்துக்கொண்டது

நன்றி.. ஊடறு http://www.oodaru.com/?p=9579#more-9579
(6.2.2016)

புதன், 3 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 7

ஊட்டியில் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்லாமல் இப்படி ஒரு பழங்குடியின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பும் எனக்கு அமையும் என்று நம்பவே இல்லை. இன்னும் முதுமலையில் சந்திக்கப்போகும் பூர்வக்குடிகள் பற்றிய சிந்தனையும் எதிர்பார்ப்பும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. சாகுலின் கார் முதுமலை வனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. 

கிட்டதட்ட இரவை நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் நானும் சாகுலும் முதுமலை வனதுறை அலுவலகத்தை அடைந்தோம்.  


வனதுறை அதிகாரி ஆரோக்கியசாமி என்பவரின் மேற்பார்வையில் முதுமலை புலிகள் காப்பகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. போலீஸ் அதிகாரிகள் உடுத்தும்  உடை போல அணிந்திருந்தார். தொந்தி கொஞ்சம் எட்டிப்பார்த்தது. குங்குமப்பொட்டு வைத்திருந்தார். அவரை காண வருபவர்களை அமரச்சொல்லி, மிகவும் மரியாதையாக பேசிக்கொண்டிருந்தார். பிறர் பேசுவதை கேட்கும் போது, அவர் முகத்தில் மெல்லிய சிரிப்பை ஓடவிட்டிருந்தார். அதிகாரியை சந்திக்கும் அறையில் வேறொரு அதிகாரியையும் இடை இடையே பேசுவது விளங்கியது. எங்களின் முறை வரும் வரை நானும் சாகுலும் காத்திருந்தோம்.
எங்களின் முறை வந்தது. சாகுல் “இவர் யோகி. மலேசிய தமிழ் பத்திரிகையில் வேலை செய்கிறார்” என்று அறிமுகப்படுத்தி வைத்தார். பின் ஊட்டியில் இவர்களுக்கு எல்லாம் தலைமை அதிகாரிகளில் ஒருவரான சந்திரன் சாரை சந்தித்து வந்திருக்கிறோம் என்பதையும் சாகுல் தெளிவுபடுத்தினார்.   
முதுமலை வனத்தில் வசிக்கும் மிருகங்களைக் காண்பதைவிட, அங்கு வசிக்கும் இருளர் சமூகத்தை சந்தித்து அவர்களோடு தங்கி, அவர்களின் வாழ்வியல் முறையையும் பழக்க வழக்கம், உணவு போன்றவற்றை தெரிந்துக்கொள்ளவும் அதை சின்னதொரு வீடியோ பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால், ஊட்டியிலேயே அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை நான் அங்கு தெரிவிக்கவில்லை. நிருபர் மூளையில்லையா? எந்தப் பக்கத்தில் கதவு திறந்தாலும் நுழைந்துவிடலாம். பின்னால் வருவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம். அதனால், வனத்தின் வெளிபகுதியில் வசிக்கும் இருளர்களை விடவும், வனத்தின் உட்பகுதியில் வசிக்கும் அவர்களை சந்திக்க அனுமதிக்குமாறு நான் கேட்டேன்.
ஆனால், ஆரோக்கியசாமி சாரும் அதை மறுத்தார். பொதுவிடு முறையாக இருப்பதால் உடன் ஒரு அதிகாரியை அனுப்பி வைக்க வேண்டும். தற்போது அதிகாரியில்லை. உள்வனத்திற்குள் அனுப்புவது பாதுகாப்பு குறைவாக இருக்கும். மேலும், அதிகாரப்பூர்வக் கடிதம் எதுவும் நீங்கள் கொண்டுவரவில்லை என ஆரோக்கியசாமி சார் கூறினார்.
அவரின் அந்த நிதானமும் சிரிப்பும் குறையாத அதே நிலையில் “இந்த வனத்தை முன்பு எல்லாம் இரண்டு மணி நேரங்கள் வண்டியில் ஏற்றி பயணிகளுக்கு சுற்றிக்காட்டுவோம். பின் அது 1 மணி 30 நிமிடங்கள் என குறைக்கப்பட்டது. தற்போது ஒரு மணி நேரம் மட்டுமே காண்பிக்கப் படுகிறது.
சில-பல காரணங்கள் அதற்கு இருக்கிறது. வனம் பாதுகாப்பாக இருந்தாலும், மனிதர்கள் அதை பாதுகாப்பாக வைத்திருக்க தவறிவிட்டனர். தற்போது இந்த புலிகள் காப்பகத்தில் புலிகள் அதிகரித்துள்ளன. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் விலங்குகளின் பாதுகாப்பைக் கருதி சில விஷயங்களை செய்கிறோம் என எனக்கு விளக்கம் கொடுத்தார். நான் அவர் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தேன். இத்தனை அன்பாக ஒரு அதிகாரி பேசுவதே எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அன்று இரவு நான் தனியாக அந்த வனத்தில் தங்கப் போகிறேன். கடந்த முறை மணிமுத்தாறு  வனத்தில் (மோகன் அங்கிள் பராமரிக்கும் சிறுவனப்பகுதி அது) தங்கிய அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆகையால், பெரிய விளக்கங்கள் கொடுப்பதற்கு தேவையில்லாமல் போனது. பொதுவிடுமுறை காரணத்தினால் வனத்தில் வாடகைக்கு விடும் அறைகள் முழுவதும் பதிவு செய்யப்பட்டிருந்தது. சாகுல் முன்பே அறைகளுக்காக விண்ணப்பம் செய்திருந்தாலும் எனக்கு ஒரு பகுதியிலும் சாகுலுக்கு வேறொரு பகுதியிலும் தங்குவதற்கு அறைகள் கிடைத்தன.
எனக்கு பரம சந்தோஷம். தனிமையின் ருசி அறிந்தவள் இல்லையா? எனக்கு வழங்கப்பட்ட அறை மிகவும் அழகான அறை. அதை குறித்து பிறகு சொல்கிறேன். தற்போது மாலை மணி ஆறுமணியை கடந்திருந்தது. நன்றாக இருட்டத் தொடங்கியிருந்தது. நான் இந்தியாவுக்கு வந்து 3 நாட்கள் கடந்திருந்த நிலையில் சந்துருவின் நினைவும், என் தங்கை ரேவதியின் நினைவும், என்னை வழியனுப்பி வைத்த விஜயா அம்மா நினைவும் வந்து வந்து போனது.
அனைவரைவிடவும் சந்துரு என்னை எதிர்பார்த்திருப்பார் என்று தெரியும். முதுமலை வனத்தில் தொடர்பு சாதனங்கள் முற்றிலுமாக செயல் இழந்துக்கிடந்தன. சாகுலிடம் வருத்தத்தைச் சொன்னேன். ஒரு முறை அவரோடு பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
தங்கும் அறைக்கு போவதற்கு முன்பு, நீங்கள் விருப்பப் பட்டால் பக்கத்தில் இருக்கும் இன்னொரு வனத்தை காரிலேயே பார்த்து வரலாம். காரணம் அங்கு புலிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். பலர் புலிகளை பார்த்துள்ளனர். அது ஓர் அதிர்ஷ்ட நிலை என்றார் சாகுல்.

யட்சிக்கு வனம் காண கசக்குமா என்ன? இன்னொரு முறை நான் இந்த வனத்திற்கு வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்று தெரியவில்லை. போகலாம். அதற்கு முன்பு சந்துருவிடம் பேசிவிட்டால் வனத்தை நானும் வனம் என்னையும் ரசிக்கும் என்றேன்.
பின், இருவரும் கிளம்பினோம். முழு நிலா. வெளிச்சம் அதிகமாகவே இருந்தது. வனத்தை தாண்டி அதை ஒட்டியுள்ள சின்ன கடைத்தெருவிற்கு சாகுல் அழைத்துச் சென்றார். 'சிக்கன் பக்கோடா' இங்கு ரொம்ப பிரபலம் என அந்தக் கடையை சாகுல் தேடிக்கொண்டிருந்தார். இந்த கடையில்தான் சாப்பிட்டேன் என சந்தேகமாக ஒரு கடைக்காரரிடம் கேட்க, நீங்கள் சொல்வது சரிதான். இந்த இடத்திலேயே நான் ஒருவன்தான் 'சிக்கன் பக்கோடா' செய்வேன். தற்போது சபரிமலைக்கு மாலை போட்டிருப்பதால் மச்சம் தொடுவதில்லை என்றார்.
பக்கத்தில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நிறைய முஸ்லிம் சமூகத்தினரை அங்கு காண முடிந்தது. அதே வேளையில் சபரி மலைக்கு மாலை போட்டிருப்பவர்களும் கறுப்பு வேட்டியணிந்து நடமாடிக்கொண்டிருந்தனர். பெண்களின் நடமாட்டம் மிக குறைவாகவே இருந்தது. கடைக்கு வெளியே போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து நிலாவைப் பார்த்துக்கொண்டே அன்றைய சம்பாஷனைகளோடு காப்பி குடித்தது புதிய அனுபவம். திண்ணைகளின் அருமை விளங்கியது.
நிலா பல நினைவுகளை சுமக்க வல்லது. சிப்ஸ், பழம், தண்ணி என சாகுல் பாலர் பள்ளிக்கு அனுப்பிவிடும் குழந்தைக்கு தேவைபோல எனக்கு வாங்கிக் கொண்டிருந்தார். நான் அதை எல்லாம் சாப்பிட்டு முடிக்க ஒரு மாதம் ஆகும் என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் சாகுல் தெரிந்துக்கொண்டார்.
சந்துருவுக்கு அழைத்தேன். சரியாக தொடர்பு கிடைக்கவில்லை. தொழுகை வேறு நடந்துக்கொண்டிருந்தபடியால் பேசுவதும் விளங்கவில்லை. சாகுல், இங்கே பள்ளி வாசல்கள் இருக்கும் அளவுக்கு ஏன் முஸ்லிம்களின் மயானங்களை  கொள்ளைகளை காண முடியவில்லை என்றேன். அதற்கான சரியான பதில் சாகுலிடம் இல்லை.

பின் சாகுல் சொன்ன அந்த வனத்திற்கு போனோம். மயில், கிளை மான், புள்ளி மான் உள்ளிட்ட மிருகங்களை சாதாரணமாகவே காண முடிந்தது. சில இடங்களில் யானையின் எச்சம் அதன் நடமாட்டத்தை உறுதி செய்தது.
நீண்ட நேரம் பயணம் செய்த மாதிரி இருந்தது எனக்கு. அந்த வனச் சாலையில் வேறு வாகனங்களை காணமுடியவில்லை. “புலி நம்மை ஏமாற்றிவிட்டது யோகி” என்றார் சாகுல். நான் சிரித்தேன். ஆனால், பலர் பார்த்திருக்கிறார்கள். அதற்கு ஓர் அதிர்ஷ்டம் வேண்டும் என்றார். பின் டேம் போன்ற நீர் தேக்கம் அருகே காரை நிறுத்திவிட்டு நீங்கள் யார் யாரோடு பேச விருப்பமோ அனைவரோடும் பேசுங்கள் என என்னை தனிமையில் விட்டு எங்கோ என்றார்.
நிலா வெளிச்சம் விளக்கு வெளிச்சத்தைவிடவும் அதிகமாக இருந்தது. நீர் தேக்கத்தில் பட்டு அழகு நிலா, மின்னிக்கொண்டிருந்தது. சாகுலை தேடினேன். காணவில்லை. ஆள் நடமாட்டமும் குறைவாகத்தான் இருந்தது. சந்துரு, விஜியா அம்மா, மகுடபதி அண்ணா என எல்லாருக்கும் அழைத்து பேசிக்கொண்டிருந்தேன். கிட்டதட்ட 30 நிமிடங்கள் அலைபேசி சம்பாஷனை முடிந்து அலைபேசியை வைக்கவும் சாகுல் திரும்பி வரவும் சரியாக இருந்தது. நிலாவைவிட உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறதே என்றார் சாகுல். இருக்காதா பின்ன?
மீண்டும் முதுமலை வனத்தில் எனக்காக காத்திருந்த அந்த வன அறையின் மீது எனக்கு ஏகப்பட்ட கற்பனை விரவியிருந்த்து. பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த நதியின் சலசலப்பு கேட்டுக்கொண்டே இருந்தது. நிலா வெளிச்சம், வாசிக்க சாருவுடைய புத்தகம், சூடாக ஒரு கப் டீ. அட வாழ்கிறாள் யட்சி. இப்படியாக கூறிக்கொண்டேன்.       
சாகுல், மிகவும் கலைத்து போயிருந்தார். என்னை இறக்கிவிட்டு ஏதேனும் உதவி தேவை என்றால் காவலுக்கு இருப்பவர்களிடம் தெரியப்படுத்துங்கள். இல்லை என்றால் என்னை அழையுங்கள் என கூறிச்சென்றார். ஆனால், நான் தங்கும் அறைக்கு போனபோது ஆள் நடமாட்டமே இல்லாத மாதிரி வெறுமையாக இருந்தது. காவலுக்கு இருந்தவர் அறையை திறந்துவிட்டு போய்விட்டார். காப்பி கிடைக்குமா என்றேன். இனி காலைதான் என்றார். அவ்வளவு ஏமாற்றமாக அறைக்கு போனேன். மறுநாள் காலையில் பால கோபால கிருஷ்ண ஆலயத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார் சாகுல். இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வந்திருந்தாலும் முதல் நான் பார்க்கப்போகும் கோயில் அது. எனக்கும் அந்த கிருஷ்ணனுக்கு ஏதோ தொடர்பு இருக்குதான் போல.
(தொடரும்)   


வியாழன், 28 ஜனவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 6

தொதவ சிறுவர்கள்
வீடு என்பது ஒரு மனிதனுக்கு என்னவாக இருக்கிறது என்ற கேள்வியும், தேவை, வசதி என்பது வகுத்துக்கொள்ளும் முறையில் விவசாயிகளும் பணக்காரர்களும் எப்படி வேறுபடுகிறார்கள் என்ற கேள்வியும் எனக்கு எழுந்தது.  இதுகுறித்து நான் சாகுலிடம் கேட்டுக்கொண்டே வருகையில் எங்களின் கார் தொதவர்கள் குடில் இருக்கும் பொட்டானிக்கல் கார்டன் கார் நிறுத்துமிடத்தில் நின்றது. 

பொட்டானிக்கல் கார்டனின் நுழைவாயிலில் தெருவோர வியாபாரிகள் பரபரப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மஞ்சள் மலர்களை கூடையில் அடுக்கி வியாபாரத்திற்கு வைத்திருந்தது பார்க்க அழகாக இருந்தது.  பிடிக்கும் அனைத்தையும் புகைப்படக்கருவியில் பதிவு செய்துக்கொண்டே நடந்தேன்.  தொதவர்களின் குடிலை நோக்கி போவதற்கு அங்கிருக்கும் அதிகாரிகளின் அனுமதியை வாங்க வேண்டுமா என்றொரு கேள்வி சாகுலுக்கும் எனக்கும் இருந்தது. ஒரு வேளை, அதிகாரிகள் நிராகரித்தால், எனவே சென்றுவிடலாம், யாரும் தடுத்தால் அடுத்தது என்ன செய்யலாம் என யோசிக்கலாம் என ஏக மனதாக முடிவெடுத்து நானும் சாகுலும் முன்னேறிக்கொண்டிருந்தோம். 


பூங்காவின் நுழைவாயில்
தொதவர்கள் என்பவர் யார்? 

பூர்வக்குடிகளின் மீது எப்போதும் எனக்கு தனி மரியாதை இருக்கிறது. ஆனால், மலேசியாவைச் சார்ந்த பூர்வக்குடிகளை நான் சந்தித்து பேசியது இல்லை. இந்தியாவில் தமிழ் சமூகத்தை ஆய்வு செய்ய நேர்ந்தால் அது தமிழக பழங்குடியிலிருந்துதான் தொடங்க நேரிடும் என்ற சொல்லாடல் மிகைப்படுத்தியது இல்லை. பழங்குடிகளின் பெயர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் ஊர்களையும் ஆங்கில உச்சரிப்பு முறையில் பதிவு செய்ததால் எண்ணற்ற பதிவுகள் தவறாக பதிவாகின. இந்தியாவின் ஊர், சாதி, மலை, கடல் எனப் பலவற்றின் பெயர்கள் ஆங்கிலமயமாக்கப் பட்டதின் விளைவாகத் தவறான உச்சரிப்புடன் அரசு பதிவுகளில் இடம்பெற்றன. தொதவர்கள் என்ற பழங்குடியை தோடர்கள்
என்று தற்போது பரவலாக அழைப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகவும். ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் எந்தத்  தொதவரும் தம்மை ‘தோடா’ எனக்கூறுவதில்லை. ‘ஒல்’ (மக்கள்) என்றே தம்மைக் கூறிக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் ‘கொடா’ என்னும் வழக்கு ஏற்பட்டு அச்சொல்லின் திரிபே ‘தோடா’வாக மாறியது என தமிழகப் பழங்குடிகள் எனும் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொதவர்களின் அண்டைச் சமூகத்தவர்களாக வாழும் படுகர்கள் அவர்களைத் ‘தொடவா’ என்றும், கோத்தர், தொன் என்றும் அழைக்கிறார்கள். மற்ற தமிழர்கள் அவர்களை துதவர் என்றழைக்கிறார்கள். உண்மையில் தொதவர் எனும் சொல் கன்னடச் சொல்லிலிருந்து உருவானது என்ற கருத்தும் உண்டு.
தமிழக பழங்குடிகளைப் பற்றிய ஆய்வில் நீலகிரிப் பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தொதவர்கள் என்கிற தோடர்கள் இந்த
வட்டாரத்தில் அதிகம் வசிப்பதோடு அவர்களின் திருவிழாவும் நீலகிரியில்தான் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தொதவர்களின் அடையாளம் என எருமைகள் இருக்கின்றன. அதனாலேயே ‘எருமையின் குழந்தைகள்’ என தொதவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் மொழி தோடா, துடா, துத எனப் பலவாறாகக் குறிப்பிடப்படுகிறது. இம்மொழியின் ஆதிமூலம் குறித்துப் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் அமெரிக்க மொழியியல் அறிஞர் எமனோ இம்மொழியை விரிவாக ஆய்வு செய்து இது ஒரு திராவிட மொழியென்று தெரிவித்தார். மேலும், தோட, கோத்த மொழிகள் நீலகிரிக்கே உரிய தொல் மொழிகள் எனவும் அவர் ஆய்வில் கண்டு பிடித்தார் எனவும் பதிவுகள் சாட்சி கூறுகின்றன.

ஆதிக்க சாதியினராக இருக்கும் பிராமணர்கள் தொதர் எனும் பழங்குடியினருக்கு தீண்டத் தகாதவர்களாக இருந்திருக்கிறது கேட்பதற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நெருப்புக்கு அவர்கள் அளித்த மரியாதையையும் பிராமணர்களை அவர்கள் வெறுத்ததையும் பக்தவத்சல பாரதி எழுதியிருப்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன்.

தீப்பெட்டி நெருப்பை தொதவர்கள் சமையல் அறைக்கும், சுறுட்டு புகைக்கவும் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் சார்ந்த சடங்குகளில் தீப்பெட்டியை நுழைய விடவில்லை. பலநூறு ஆண்டு காலமாகப் புனிதச் சடங்குகளிலும் பால்மாடத்திலும் தீயைக் கடைந்து உருவாக்கும் நெருப்பே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தீயைக் கடைந்தெடுக்கும் போது யாரும் பார்க்காதவாறு மறைவாக அமர்ந்து கடைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. தொதவர்களின் பால்மாடத்திற்குள் பிராமணர்களை அனுமதிப்பதில்லை என்றும் அவ்விடத்தில் பிராமணர் ஒருவரால் தொடப்பட்ட பொருள்களை தொதவர்கள் தூக்கி எறிந்தனர் என்றும் ஹார்க்கென்ஸ் என்ற ஆய்வாளர் பதிவு செய்துள்ளார். தொதவர் இனத்தில் ஒரு சிறுவனைப் பால்கறக்கத் தகுதியுடையவனாக ஆக்குவதற்கு ‘தெககெராட்’ என்ற  சடங்கு செய்யப்படுகிறது.

ஊட்டியில் செயற்கை பூங்காவைத்தாண்டி உள்பகுதியில் இருந்த தொதவர் சிலர் வசிக்கும் பகுதியை நானும் சாகுலும் சென்றோம். எங்களைத்தவிர வேறு யாரும் அதை காண்பதற்கு ஆர்வம் கொண்டதாகத் தெரியவில்லை.  அங்கு அப்படியான பழங்குடியினர் வசிக்கிறார்களா? என்ற விவரம் பலருக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். முன்னதாக பூங்காவைப் பற்றிச் சொல்ல வேண்டும். அந்தக் குழுமையான சூழலுக்கு ஏற்றச் செடிகளை மிக நேர்த்தியாக பயிரிட்டு பராமரித்து இருக்கிறார்கள்.

குடும்பமாகவும், பணியிடத்து நண்பர்கள் குழுவும், மாணவர்கள் குழுவும் மிக அதிகமாக அங்கு காண முடிந்தது. போட்டி விளையாட்டுகளை வைத்து அவர்களில் சிலர் விளையாடிக்கொண்டிருந்தது, அதை வேடிக்கை பார்த்தவர்களுக்கும் உற்சாகத்தை அளித்தது.


செயற்கை பூங்காவில் எனக்கு ரசிக்க எதுவும் தோணவில்லை. தொதவர்களை தெரிந்துகொள்ளவே ஆர்வமாக இருந்தது. முன் இரவிலிருந்து அந்த இனத்தைப்பற்றிய சிந்தனை என்னுள் பல கற்பனைகளை ஏற்படுத்தியிருந்தது. நானும் சாகுலும் பூங்காவைத்தாண்டி ஊசி மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த மலையை அடைந்தோம். கொஞ்சம் களைப்பாக இருந்தது. ஊட்டியின் குளுமையைத் தாண்டி சூரியன் தன் ஒளிக்கதிரை பரப்பிக்கொண்டிருந்தது. ஊசி மரத்தில் பாய்ந்த சூரியக்கதிரின் மிச்ச ஒளி மண்ணில் விழுவதை பார்க்க அத்தனை அழகாக இருந்தது. இனி அந்தக் காட்சியை என் ஜென்மத்தில் மீண்டும் காண்பேனோ இல்லையோ?

"சாகுல் இவ்விடத்தில் கொஞ்சம் உட்கார வேண்டும், மேலும், கொஞ்சம் தனிமை வேண்டும்” என்றேன்.

இங்கிதம் தெரிந்தவர் சாகுல். சின்னதொரு புன்னைகையோடு எனக்கான இடைவெளியை கொடுத்தார். அமர்ந்தேன்; அந்த மண்ணில் கொஞ்சம் தலைசாய்க்கவும் செய்தேன். என்ன ஓர் ஏகாந்தம்? இந்த நூற்றாண்டின் முதல் அதிர்ஷ்டசாலி என்ற பட்டியலை தயாரித்தால் அதில் எனது பெயர்தான் முதல் இடத்தை பெறும். அது எத்தனை பெரிய சுகம் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தேன். நானும் சாகுலும் தொதவரின் இருப்பிடத்தை அடைந்தோம். ஓர் அகன்ற நிலப்பரப்பில் சில முரட்டு மாடுகள் மேய்ச்சலில் இருந்தன. மூன்று சிறுவர்கள் குடிசை மாதிரி இருந்த குடிலுக்கு ஓரமாக உட்கார்ந்திருந்தனர். அந்த இடம் மிக அழகாக இருந்தது. சாகுல் சொன்னார் " இதுதான்  தொதவர்களின் மத்து (வீடு). அருகே சென்று காணலாம் என்று நெருங்கினோம். மாடு மேய்ச்சலில் இருந்த சிறுவர்கள் கொஞ்சமும் மரியாதை இல்லாமல்...

"ஏய் நில்லுங்கள்! இங்கே எல்லாம் நீங்கள் வரக்கூடாது. அதுவும் பெண் வரவேக் கூடாது. எங்கள் இனப்பெண்கள் அந்த எல்லையை கடக்க மாட்டார்கள். நீ அதை தாண்டி வந்தது மட்டுமல்லாமல் குடிலை நெருங்க  போகிறாயா?" என்று சத்தம் போட்டனர். கையில் நீளமான குச்சி வேறு.

"ஏன் போகக்கூடாது"? என்றேன்.
"அந்நிய பெண்களை இங்கே அனுமதிக்க மாட்டோம்" என்றனர்.
"அந்தக் குடில்  ஒரு வீடுதானே; ஏன் போகக்கூடாது" என்றேன்.
"அது வீடு இல்லை கோயில்" என்றனர்.

நான் கோயிலா என்ற ஆச்சரியத்தில் நின்றேன். நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து ஓர் அடிக்கூட அந்தச் சிறுவர்கள் எடுத்து வைக்கவிடவில்லை. "பெரியவர்கள் யாரையும் சந்திக்க முடியுமா?" என்று கேட்டேன்.

கோயிலுக்கு முன்
மறுநாள் அவர்களுக்கு பெரிய விழா என்பதால், தற்போது எல்லாரும் வேலையில் இருக்காங்க என்று சிறுவர்கள் பதில் கொடுத்தனர். தொதவர்களின் மத்து இதுவரை நான் காணாத ஒன்று. சினிமாவிலும்கூட அதைப்பார்த்ததில்லை. தொதவர்களின் மத்து அரைவட்ட  வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அது அவர்களிடம் மட்டுமே காணக்கூடிய ஒரு தனிவகை என கூறப்படுகிறது. கோயில் என்று அவர்கள் சொன்ன அந்தக் குடிலின் நுழைவாயில் மிகக் குறுகியது. கூனிக் குறுகி தவழ்ந்து சென்றாலும் உள்ளே நுழைய முடியுமா என்று தெரியவில்லை. ஜன்னல்களோ அல்லது காற்று உள்நுழையும் அல்லது வெளியேறுவதற்கு வேறு ஒரு துவாரமோ இல்லை. வைக்கோல் போர்த்திய பாணி. தூண்களாக மூங்கில்கள் குடிலை தாங்கி பிடித்திருந்தன. நுழைவாயில் இடத்தில் பாம்பு பின்னி இருப்பதைப் போன்ற சுவர் படம். அமர்வதற்கு கோயிலைச் சுற்றி பெரிய கற்களைக் கொண்டே அமைத்திருக்கிறார்கள். உள்ளே தெய்வமாக வழிபடும் அந்த உருவத்தை (பிம்பத்தை) தெரிந்துக்கொள்ள ஆசையாக இருந்தது. ஆனால், அதைப்பற்றி அந்தக் கோபக்கார சிறுவர்களிடம் கேட்க அச்சமாக இருந்தது.

நேரம் எங்களுக்கு சாதகமாக இல்லாமல் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது.  இரவு வருவதற்குள் முதுமலை வனத்தை அடைய வேண்டும் இல்லையா?  கிளம்பலாம் என முடிவெடுக்கையில் அங்கு ஒரு ஆட்டோ வந்தது. "வருகிறீர்களா? கீழே இறக்கி விடுகிறேன்" என்றார் ஆட்டோ ஓட்டுநர்.  

"நீங்கள் ‘தோடா’ இனத்தை சேர்ந்தவரா"? என்று சாகுல் கேட்க, ஆட்டோக்காரர் ஆமாம் என்று  சொல்ல, எனக்கு வாயெல்லாம் பல்லாய் போனது. ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம்.

"உங்களின் திருவிழா எங்கு நடக்கிறது?" என பேச்சை தொடங்கினோம். “நீலகிரியில் கொண்டாடுவோம். கொண்டாட்டம் என்றால் ஒன்றுகூடுதல்தான். அங்கு ஆண்கள்-பெண்கள் என பாரம்பரிய நடனங்களை குழுவாக ஆடுவர். எங்கள் இனத்தின் பூர்வீகம் குறித்த ரகசியத்தை யாரும் அறிய மாட்டார்கள். அது எங்களுக்கே தெரியாத ரகசியம்" என அவர் கூறினார்.
எனக்கு அவர்களின் திருமண முறைகுறித்து தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது. கிடைத்திருக்கும் சொற்ப நேரத்தில் ஆட்டோ ஓட்டுநரிடம் அதை குறித்து கேட்டேன். இது அவர் கொடுத்த விவரம்..

“எங்கள் சமூகத்தில் ஆண்-பெண் காதல் வயப்பட்டு விருப்பம் தெரிவித்தால் அவர்கள் இருவரையும் தனியாக அனுப்பி வைப்போம். 6 மாதங்கள் ஒன்றாக தங்கி அந்தப் பெண் கர்ப்பம் தரிக்க வேண்டும். அவள் கர்ப்பம் தரித்தால் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைப்பார்கள். இல்லை என்றால் அந்தப் பெண்ணை அவள் வீட்டுக்கே அனுப்பி வைத்து விடுவார்கள். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு திருமணச் சடங்குகள் நடக்கும். மாப்பிள்ளை வீட்டார் புடவை, பூ என பெண்ணுக்கு சீர் கொண்டுச் சென்று 250 ரூபாயை பெண் வீட்டில் கொடுத்து அவளை அழைத்துவந்து விடுவார்கள். இதுதான் சடங்கு."

எனக்கு தூக்கிவாரிபோட்டது. "அப்படி என்றால் அந்தப் பெண்ணை 250 ரூபாய்க்கு விலைக்கு வாங்குகிறீர்களா?" என்றேன். எந்தக்குற்ற உணர்வும் இல்லாமல் ஆமாம் என்றார். நானும் சாகுலும் மாறி மாறி முகத்தைப் பார்த்துக்கொண்டோம். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. நீண்ட சிந்தனையில் மூழ்கிக்கொண்டிருந்தேன். அதற்குள் பூங்காவின் முகப்பு வந்துவிட்டதால் என் சிந்தனைக் கயிற்றை அறுத்துக்கொண்டேன்
.
தொதவ பெண் ஒருவர் அவர்களின் மத்துக்கு முன் விற்பனை செய்துக்கொண்டிருந்த கைவினைப்பொருள்களில் ஏதாவது ஒன்றை வாங்க ஆசையாக இருந்தது. வாசனைத் திரவியங்கள், சவர்க்காரம், தைலம், கைப்பை, அவர்கள் அணியும் பாரம்பரிய பால்நிற மேற்துண்டு உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு இருந்தன. எனக்கு கைப்பையும் அவர்களின் மேற்துண்டும் பிடித்திருந்தது. விலை கொஞ்சம் அதிகமாக இருந்ததால் நான் எதையும் வாங்கிக்கொள்ளவில்லை.

என் இந்தியப் பயணத்தின் முக்கியமான பதிவாக தொதவர்களைப் பற்றிய அறிமுகத்தைத்தான் சொல்வேன். புதிய விஷயம், அதுவும் பழங்குடிகள் சம்பந்தப்பட்ட ஒரு அறிமுகம். இந்த பதிவை எழுதும்போது அதை அழகாக செய்ய வேண்டும் என்றும் அவர்களைப்பற்றி இன்னும் சில விஷயங்களை தெரிந்துகொண்டு இந்தப் பதிவை எழுத வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எனக்கு தோன்றியது.
அமர்வதற்கான இடம்

தொதவர்களைப் பற்றி பக்தவத்சல பாரதி எழுதிய ‘தமிழக பழங்குடிகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கிய குறிப்புக்கள் தொதவர்களைப் பற்றிய ஒரு தெளிவான அறிமுகத்தை எனக்கு கொடுத்தது. தொதவர்களைப் பற்றி நான் படித்து தெரிந்துக்கொண்ட சில தகவல்களை இங்கே பகிர்ந்துக்கொள்வது இந்த பதிவுக்கு மேலும் சுவாரஷ்யத்தைக் கொடுக்கும் என தோன்றுகிறது.

சில சமூகத்தினர் போன்று தொதவர்களின் ஆயர் சமூகத்திலும் பெண் சிசுவை பொருளாதார சுமை எனக்கருதி பிறந்தவுடன் கொன்றுவிடும் வழங்கம் இருந்துள்ளது. நீலகிரியில் தொதவர்களிடம் ‘கெது’ என்ற சடங்குகளில் எருமைகளைக் கொல்வதும் புனிதமாக இருந்துள்ளது. ‘கெது’ சடங்குகளில் பலியிடும் எருமைகளை அடித்தே கொன்றனர். முன் பழங்காலத்தில் தொதவர்கள் மேற்கொண்ட பெண் சிசு கொலையில், சாணக் குவியலுக்கு அருகே நின்றுக்கொண்டிருக்கும் எருமைகளில் கால்களுக்கு நடுவில் சாணத்தின் மீது பெண் சிசுக்களை எறிந்து விடுகிறார்கள். ( இதனை இன்றுள்ள தொதவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை) தாங்கள் தெய்வமாக மதிக்கும் எருமைகளிடம் பெண் சிசுக்களை எறிந்து விடுவதின் மூலம் சிசுக்கொலை எனும் குற்ற உணர்விலிருந்து மீண்டு விடுவதாக எண்ணினார்கள்.
மானிடவியல் நோக்கில் பார்க்கும் போது பெண் குழந்தைகளின் குறைவான தேவையை உணர்த்துவதாகவே பெண் குழந்தைக் கொலை (infanticide) காணப்படுகிறது.

இதன் தாக்கமாக இவர்களிடம் பல கணவர்முறை (Polyandry) தோன்றியது. ஆங்கிலேயர்கள் வரும்வரை நீலகிரித் தோதவர்களிடம்கூட பெண் சிசுக்கொலை இருந்து வந்துள்ளது. பெண் குழந்தைகளை கொன்றுவிடும் சமுக அமைப்பில் பெண் பற்றாக்குறை இருப்பது இயல்பு. ஆதலின் ஒரு பெண் பல ஆண்களை மணக்கும் முறை ஆயர் சமூகத்தில் ஏற்பட்டது. பல ஆண்களும் சகோதரர்களாக இருந்ததால் இவர்களின் திருமணம் ‘பல சகோதர்கள் மணமாக’ அமைந்தது.

உலகிலேயே 5,500 அடிகள் உயர மலைப்பகுதியில் சைவ உணவை உண்டு வாழும் ஆயர்குடியினர் தொதவர்கள் மட்டுமே. ‘சைவ ஆயர்கள்’ எனச் சிறப்பாகக் கூறப்படும் இவர்களின் பாரம்பரிய அறிவும் நுணுக்கமும் இவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள வாழ்க்கைத் தகவமைப்புகளும் உலக அளவில் எண்ணற்ற மானிடவியலர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளது.
ஊட்டியில் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்லாமல் இப்படி ஒரு பழங்குடியின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பும் எனக்கு அமையும் என்று நம்பவே இல்லை. இன்னும் முதுமலையில் சந்திக்கப்போகும் பூர்வக்குடிகள் பற்றிய சிந்தனையும் எதிர்பார்ப்பும் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. சாகுலின் கார் முதுமலை வனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.