புதன், 9 டிசம்பர், 2015

கால்களோடு....


சம்பவம் 1

எனக்கு  8 வயது இருக்கும். பூப்பந்து விளையாடிக்கொண்டிருந்தேன். விளையாட்டின் சுவாரஸ்யம் அப்போதுதான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் எஜோஸ் குழாயில் கால் சொறுகிக் கொள்ளும் அளவுக்கு விளையாட்டு. காலை அதிலிருந்து எடுக்கும் போது கொஞ்சம் சதையும் குழாயில் ஒட்டிக்கொண்டது.

சம்பவம் 2

யானைகால் நோயாளியை முதல் முறை பார்த்தேன். குச்சிபோன்ற உடம்பில்  ஒரு கால் மட்டும் யானை கால் அளவுக்கு பெரிதாக வீங்கி, அதில் சீழ் வடிந்தபடி. அறுவருக்க நிலையில். நினைவு தெரிந்து நான்  முகம் சுழித்த முதல் நாள் அதுதான் போல. அன்று  எனக்கு 11 வயது என நினைக்கிறேன்.

சம்பவம் 3

அன்றுதான் பிறந்த என் தங்கையின் பிஞ்சு பாதம். வரிவரியாக அதில் கோடுகள். சிவந்தும் சிவக்காமலும் மெல்லிய தோல். காற்றின் செல்லிடைபோல் அசையும் அசைவு. என் ரத்தம் என் தங்கை என்று எண்ணிய தருணம். முதல் முறை ஒரு பாதத்தில் முத்தமிட்டேன் என்றால் அது அவளுடைய பாதம்தான். அப்போது எனக்கு வயது 16.

ஒருவரைப் பார்த்த பிறகு, நான் அடுத்து பார்ப்பது அவரின் கால்களைதான். கால்களின் மீது இருந்த ஆர்வமோ?  பாதிப்போ?  எது என்று சொல்லத்தெரியவில்லை. அதன் காரணத்தினால், நூற்றுக்கும் அதிகமான கால்களை படம் பிடித்திருக்கிறேன். மனிதக் கால்களை மட்டுமல்ல, சிலைகளின் கால்களையும் படமெடுத்திருக்கிறேன். அது ஒரு வகை அனுபவம் எனலாம். கால்களின் புகைப்படங்களை மட்டும்  வைத்து ஒரு புகைப்படக்கண்காட்சியை செய்ய வேண்டும் என்ற ஆவலும் எனக்குள் இருக்கிறது.

சிறு வயதில் என்னுடைய காலில் பட்ட காயம் புண்ணாகி, ஆறி பின் மிக பெரிய வடுவாக மாறி, முட்டிக்கு மேல் எந்த உடை உடுத்தினாலும், அந்த புண்தான் பிறரின் கண்களுக்கு காட்டி கொடுக்கும் அளவுக்கு அடையாளமானது. இது என்ன? எப்படி பட்டது? அச்சச்சோ என கேள்வி கேட்பவர்களுக்கு, பதில் சொல்லி தீராது. என் இளம் வயதில் குட்டை பாவடையோ அல்லது கவுன் போன்ற மார்டன் உடை உடுத்தாமல் போனதற்கு அது  பிடிக்காமல் அல்ல. அந்த காயத்தினால் ஏற்பட்ட அதிருப்திதான்.

என்ன காரணம் என்று தெரியாமலே எனக்கு கால்கள் குறித்த தேடல் அதுவாகவே ஏற்பட்டுக்கொண்டது. என்னுடைய இந்த 34 வயதிற்குள் எத்தனை எத்தனை விதமான கால்களை பார்த்திருக்கிறேன். உண்மையில், ஒருவரின் கால்கள் பொருளாதார நிலையை, அந்தஸ்தை, அவர் செய்யும் பணியை, திருமணம் ஆனவரா? இல்லையா?, எத்தனை  வயதிருக்கும்?  இப்படி பல கதைகள்  மட்டுமல்ல  ஒருவரின் வரலாற்றையே பேசக்கூடியதாக இருக்கிறதாக நம்புகிறேன்.

காலில் நீளமாக நகம் வளர்க்கும் பெண்களின் கால்களைப் பார்க்க வசீகரமாக இருக்கும். அதில் வர்ணம்  பூசி, ஓவியம் தீட்டி அழகுப்படுத்துவது மேல்தட்டு பெண்கள் முதல் ஏழை பெண்கள் வரை  செய்துக்கொள்ளும் அலங்காரமாக இருந்தாலும், இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை பார்க்க முடியும். பணம்  அல்லது அவரவர் வசதி பொறுத்தே அந்த அலங்காரம் மாறுபடும் என்பது நான் சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.

என் சகா ஒருவர், ஒருமுறை  சேறும் சகதியுமாக இருந்த தனது காலை படம் எடுத்து  அனுப்பி கவிதை ஒன்று எழுது என்றார். என்னால், அப்படியான உடனடி கவிதைகளை எழுத முடியாது என்றேன். உங்கள் கால்கள் ஏன் இத்தனை வறுமைகூடியதாக இருக்கிறது  என்ற கேள்வியை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலை அது என்றார்.  அதை ஒப்புக்கொள்ளதானே வேண்டும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு சொந்தக்காரர்கள் நாம் இல்லையா?

ஆண்களின் கால்கள் அவ்வாறு மட்டுமல்ல... அண்மையில் நான் மேற்கொண்ட இலங்கைப் பயணத்தில் பனைமரம் ஏறும் ஒருவரின் காலைப் பார்த்தேன். பாதங்கள் வெடித்து வரிவரியாக கிழிந்து போயிருந்தது. செருப்பு  அணியாத அவரின் பாதத்தில் பட்டை போன்று ஏதோ அணிந்திருந்தார். கறுத்து சிறுத்து போயிருந்த அவரின் கால்களில்  ஒரு திமிர் இருந்தது. அது அவரின் உழைப்பை மட்டுமல்ல அவரின் துறையைச் சார்ந்தவர்களின் உழைப்பையும்  பேசிக்கொண்டிருந்தது.

என்  இலங்கை  தோழி யாழினியின் அப்பாவும் செருப்பு அணிபவர் இல்லை. வெறும் கால்களோடு அந்த சைக்கிளை ஏறி மிதித்து காப்பு காய்த்திருந்தது அவரின் கால்கள்.  முள் குத்துமோ, காயம் ஏற்படுமோ என்ற எந்த அச்சமும்  அந்தக் கால்களுக்கு இல்லை. எந்த ஆயுதத்தையும் துவம்சம் செய்யும்  யாழ்பாணக் கால்கள் அவை.

எனக்கு நடனம் ஆடுபவர்களின் கால்களைப் பார்க்க மிகவும் பிடிக்கும். அழகாகவும் நளினமாகவும்  அந்தக் கால்கள் பேசும்.   நடனக்கால்கள் மொழி பேசுபவை. சுழித்து நெழித்து அடவுகளை கூறுபவை. அதில் மருதாணி இட்டு, சலங்கை-மணி போன்றவற்றை  பூட்டி,  வேலைபாடுகள் கூட்டி    கவர்ச்சியூட்டுபவை.  சில வருடங்களுக்கு முன்பு நானும் நடனம் ஆடிக்கொண்டிருந்தேன். இயற்கையாகவே கால்கள் மீது ஆர்வம் கொண்டவளாக இருந்ததால், அசைவுகளில் கால்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். குதிங்கால்களில் உடலின் எடையை நிறுத்தி சில நடன அசைவுகளை நானே வடிவமைப்பேன். அதே போல் நான் கலந்துக்கொள்ளும் நடன நிகழ்ச்சிகளில் அவர்களின் முக பாவனையை பார்ப்பதைவிடவும்,  கை முத்திரையை பார்ப்பதை விடவும் கால் என்ன பேசுகிறது என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.

மலாய் நடனத்தில், கால்கள் பேசுவது குறைவுதான். அதில் கைகள்தான் அதிகம் பேசும். ஆனால்,  சபா மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களில் ஒன்று மூங்கிலை வைத்து ஆடுவது. தடையை எதிர்கொள்ளும் விளையாட்டைப்போல மூங்கில் கட்டங்களில் சிக்காமல் தலையை கீழே பார்க்காமல் ஆடும் நடனம் அது.  இசையோடு கீழாடையை தூக்கிபிடித்து  பெண்கள் (சில சமயம் ஆண்களும்) ஆடுவது அத்தனை குதூகலமாக இருக்கும்.

சீன நடனத்திலும் பெரிதாக கால்களில் அடவுகள் காட்டுவதில்லை.   என்றாலும் அது சாகசம் கூடியதாக இருக்கிறது.  கால்களை அகலக்கூட வைக்காமல், குட்டைக் கால்கள் மாதிரி நெருக்கி நெருக்கி வைத்து  ஆடும், ஜப்பான் பாரம்பரிய நடனத்திற்கு கால்களின் வேலை குறைவுதான். ஆனால், 'பேலே' போன்ற  மேலை நாட்டு நடனத்திற்கு கால்கள் தானே மூலதனமானது. நான் பார்த்ததிலேயே பேலே ஆடும் கால்கள்தான் வலிமை கூடியது. அதற்காக  குழந்தை பருவம் முதலே கொடுக்கப்படும்  பயிற்சிகள்  ரத்தக் கண்ணீர் வடிக்கவைக்கும் என்றுதான் எனக்கு தோன்றும்.

நடனத்திலும் ஆண் கால்களுக்கும் பெண் கால்களுக்கும் அதிகம் வித்தியாசம் காண முடியும். பூ, மா  போன்ற வடிவங்களில் மருதாணி தீட்டி அழகுப்படுத்தி பெண்கள் கால்களில் நடன அசைவுகளை கொண்டு வருகிறார்கள் என்றால் ஆண்கள் எந்த வடிவமும் இல்லாத 'மருதாணி கோடு' அல்லது அதுக்கூட இல்லாத வெறும் சலங்கை மட்டும் அணிந்த கால்களோடு நடனம் ஆடுவது  தாண்டவம் ஆடுவதற்கான கம்பீரத் தன்மையோடு இருக்கும்.

கதவுகள் தட்டப்படும்போது, அந்தத் தட்டுதலின் தன்மை குறித்து சொல்லவிருக்கும் செய்தியை ஓரளவுக்கு அனுமானிக்க முடியும். அதுபோலத்தான் கால்களும். பதட்டமாக இருக்கும் போதும், சோகத்தில் உடையும் போதும், பயத்தைக் காட்டும்போதும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போதும்,  மனப்பிரழ்வு  ஏற்படும்போதும், காதலின் போதும், காமத்தின் போதும், நானத்தின் போதும்  கால்கள் வெவ்வேறான மொழியைப் பேசுகின்றன.

ஒரு முறை திருவிழா ஒன்றில் கத்தியின் மீது நின்று சாகசம் காட்டிக்கொண்டிருந்த ஐயனார் காலை பார்த்தேன். நான் ஐயனார் என்பது ஐயனார் அருள் வந்தவரை. கத்தியின் மீது ஏறி குதித்து குதித்து அது அறுபடாததை காட்டி பக்தியின் மகிமையை உணர்த்திய கால் அது. அந்தக் கால்களில்தான் தனது மொத்த சக்தியும்  இருப்பதைபோல அந்த சாமியாடி காட்டிய  சாகசங்களும், அவர் வெளிப்படுத்திய சத்தமும் எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. அவரின் கால்,  அவரிடமிருந்து விடுதலை கோரி  கெஞ்சுவதுபோலவும்  இருந்தது எனக்கு.

தீமிதியில் இறங்கும் கால்களும் அவ்வாறுதான். திரைப்படத்தில் வருவதைப்போல மெல்ல நகர்வில் எந்தக் கால்களும் தீயில் இறங்குவதில்லை. விட்டால் போதும் டா சாமி! என்கிற மாதிரிதான் அந்தக் கால்கள் தலை தெறிக்க ஓடும். பின் பால் இருக்கும் குழியில் இறங்கி ஆயாசம் தேடும். கால்களுக்கு வரும் சோதனைகளை  இப்படி  அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்படியாக நான் பார்த்து ரசித்த கால்களும், பார்த்து துயர் அடைந்த அல்லது கவலையாகிப்போன  கால்களுக்கு மத்தியில் விதவிதமாக
காலணி அணிந்த கால்களும் மொழிகளை பேசக்கூடியதாக சில சமயம் மாறிவிடுகின்றன. கால் விரல்கள் தெரியக்கூடிய அளவிளான  சிலிப்பர்களையும், விரல்கள் மட்டுமே  தெரியக்கூடிய அழகு காலணிகளையும், குதிங்கால் காலணி அணிந்த கால்களையும்,  முழு பாதத்தையும் மறைத்த காலணிகளும்  திரை மறைவில் கால்களின் பாதுகாப்பை மட்டுமல்ல கம்பீரத்தையும் பேசுகின்றன.

சில காலணிகள் நமது இயற்கை நடையையே மாற்றி விடும் அளவுக்கு இருப்பதை நம்மில் எத்தனை பேர்  உணர்ந்திருப்போம். குறிப்பாக பெண்கள் அணியும் குதிங்கால் காலணிகள் அதற்கு நல்ல உதாரணமாக சொல்லலாம். சிலர், அதை தவறாக விமர்சிப்பது உண்டு. உண்மை நிலவரம் அதை அணிந்து நடக்கும்போதுதான் தெரிய வரும். இயற்கையாகவே எனக்கு  நடையில்  கொஞ்சம் வேகமிருக்கும்.  அந்த நடை என்னை எப்போதும் பரபரப்பு கொண்டவளாக காட்டிக் கொண்டிருக்கும். இதை நிறைய பேர் விமர்சித்தும் உள்ளனர். சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை நிமித்தமாக நான் செல்லும்போது குதிங்கால் காலணிதான் அணிவேன். காரணம் எனது பரபரப்பை குறைக்கதான். குதிங்காலில் வலி ஏற்பட்டு அந்த வலி தலைவரை பரவக்கூடிய நிலையில், குதிங்கால் காலணியை நான் பழகியதற்கான காரணம் என் நடையை பலர் விமர்சித்ததினால்தான்.

புடவை அணியும் போது மட்டும், கொலுசு அணிவதற்கு எனக்கு பிடிக்கும். ஒரு முறை கொலுசு அணிந்த காலை பார்த்த என் நண்பர் கேட்டார்..
"ஏன் கொலுசு அணிகிறாய்?"
"எனக்கு பிடிக்கும்"
"ஏன் பிடிக்கும்"
"என் கால்களுக்கு அது அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும்"
"ஏன் கால்கள் அழகாக இருக்கனும்"
"???"
"ஆண்களை மயக்கத்தான் பெண்கள் கொலுசு அணிகிறார்கள்...
கொலுசு சத்தத்தின் உண்மையான அர்த்தமே அதுதான்"
"அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால், என்னால் எதையும் செய்ய முடியாது. அதற்கு நான் பொறுப்பும் ஆக முடியாது"
"எதையும் அணியாத உங்கள் கால் அழகாக இல்லையா"
"அழகுதான்"
"அழகுக்கு அழகு சேர்த்து நீங்கள் சொல்ல வருவது என்ன"

எனக்கு பிடித்ததை செய்ய எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அது போல, நீங்கள் சொல்வது உங்கள் சொந்தக் கருத்து என்றால் அதற்கான மாற்றுக்கருத்தை சொல்வதற்கு இப்போது என்னிடம் மொழி இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனது பதில் ஒன்று உள்ளது என்பதையும் மறவாதீர்கள் என்றேன். ஆனால், அன்று கழட்டி வைத்த எனது கொழுசை இன்றுவரை அணிவதற்கு ஏதோ ஒரு தயக்கம் உள்ளதையும் மறைக்க முடியவில்லை.

இந்த பதிவை எழுதிய நேரத்தில் கவிஞர் மனுஷயப்புத்திரன்  எழுதிய கால்களின் ஆல்பம் என்ற கவிதை எனக்கு நினைவில் வராமல் இல்லை. அந்தக் கவிதை தொகுப்பு வெளியான காலக்கட்டத்தில் கழிப்பறையில் 90 நிமிடங்கள் என்றக் கவிதையும்  கால்களின் ஆல்பம்  என்றக் கவிதையும் பெரிய மனச்சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தன. இப்போது எனது இந்தப் பதிவுக்கு அவரின் கவிதையையும் பதிவிட்டால் சரியாக இருக்கும் எனவும் தோன்றியது.

கால்களின் ஆல்பம்


ஆல்பம் தயாரிக்கிறேன்
கால்களின் ஆல்பம்

எப்போதும்
முகங்களுக்கு மட்டும்தான்
ஆல்பமிருக்க வேண்டுமா?

திட்டமாய் அறிந்தேன்
எண்சான் உடலுக்குக்
காலே பிரதானம்

படிகளில் இறங்கும் கால்கள்
நடனமாடும் கால்கள்
பந்துகளையோ
மனிதர்களையோ
எட்டி உதைக்கும் கால்கள்

கூட்டத்தில் நெளியும் கால்கள்
பூஜை செய்யப்படும் கால்கள்
புணர்ச்சியில் பின்னும்
பாம்புக் கால்கள்

கறுத்த வெளுத்த சிவந்த
நிறக்குழப்பத்தில் ஆழ்த்துகிற
மயிர் மண்டிய வழுவழுப்பான
கால்கள்

சேற்றில் உழலும் கால்கள்
தத்துகிற பிஞ்சு கால்கள்
உலகளந்த கால்கள்
அகலிகையை எழுப்பிய கால்கள்
நீண்ட பயணத்தை நடந்த
சீனன் ஒருவனின் கால்கள்

பாதம் வெடித்த கால்கள்
மெட்டி மின்னுகிற கால்கள்
ஆறு விரல்களுள்ள கால்கள்
எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப்
பெருவிரல் நகம் சிதைந்த
நீளமான கால்கள்

குதிக்கிற ஓடுகிற தாவுகிற
விதவிதமாய் நடக்கிற
(ஒருவர்கூட மற்றவரைப் போல் நடப்பதில்லை)
பாடல்களுக்கு தாளமிடுகிற
நீந்துகிற மலையேறுகிற
புல்வெளிகளில் திரிகிற
தப்பியோடுகிற
போருக்குச் செல்கிற
(படைவீரர்கள் கால்கள் உண்மையானதல்ல)
நேசித்தவரை நாடிச் செல்கிற
சிகரெட்டை நசுக்குகிற
மயானங்களிலிருந்து திரும்புகிற
விலங்கு பூட்டப்பட்ட
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற
வரிசையில் நிற்கிற
தையல் எந்திரத்தில் உதறுகிற
சுருங்கிய தோலுடைய
நரம்புகள் புடைத்த
சிரங்கு தின்ற
குஷ்டத்தில் அழுகிய
முத்தமிட தூண்டுகிற கால்கள்

யாரைப் பார்த்தாலும்
நான் பார்ப்பது கால்கள்
ஒட்டுவேன்
என் கால்கள் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும்

பெட்டிக்கடியில்
ஒளித்து வைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்...
-மனுஷயப்புத்திரன்














திங்கள், 7 டிசம்பர், 2015

பெண்ணியத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாதவர் பாத்திமா மெர்னிஸ்ஸி

பாத்திமா மெர்னிஸ்ஸி ( Fatima Mernissi ) தனது 75-வது வயதில் இறந்துவிட்டார் என்ற செய்தி இணையத்தில் வெளியான போது, பலருக்கு அவர் யார் என்றே தெரியவில்லை. அந்த மரணம் பெரிதாக யாரையும் பாதிக்கவில்லை என்றே எனக்குத் தோன்றியது. காரணம், அவரைக் குறித்தானப் பதிவு மட்டுமல்ல அனுதாபத்தையும் யாரும் தெரிவிக்கவே இல்லை. மொரோக்கோ நாட்டில் ஃபெஸ் என்ற நகரத்தில் 1940-ஆம் ஆண்டுப் பிறந்ததாக விக்கிப் பீடியாத் தகவல் சொல்கிறது. ஆனால், பிறந்த தேதியையும் மாதத்தையும் குறிப்பிடவில்லை.

இந்த நூற்றாண்டில் மிக ஆழமான மரபை அவர் அடுத்தத் தலைமுறை வரைக்கும் விட்டுச் சென்றுள்ளார் என்று பெண்ணியவாதிகள் மத்தியில் கொண்டாடப்படுகிறார். இஸ்லாமியச் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாத்திமா மெர்னிஸ்ஸித் தனது குரலை உயர்த்தியிருக்கிறார். சுமார் 17 புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் பல நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் சம்பந்தப்பட்டதாகும். அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் கொண்டிருக்கும் அடைப்படைவாதம், பெண்கள் ஒடுக்கு முறை, மனித உரிமைகள், ஜனநாயகம் உள்ளிட்ட விஷயங்களைப் பாத்திமா மெர்னிஸ்ஸி எழுதியிருக்கிறார்.

தொடக்கக் கல்வியை தேசிய பள்ளியில் பயின்றவர், தொடர்கல்வியைச் சிறப்பு நிதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த பெண்கள் பள்ளியில் தொடர்ந்திருக்கிறார். 1957-ஆம் ஆண்டு Brandeis பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் இவர் டாக்டர் பட்டம் பெற்றார். இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியப் பெண்கள் மீது வைக்கப்படும் ஒடுக்கு முறைகளையும், அவர்கள் மீது வைக்கப்படும் அரசியலையும் தனது பார்வையில் விமர்சித்து எழுத அந்தத் துறை அவருக்குக் கைகொடுத்தது என்றே சொல்லலாம்.

டாக்டர் பட்டம் பெற்றதைத்தொடர்ந்துப் பாத்திமா மெர்னிஸ்ஸி 1974-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை Mohammed V University -யில் முறையியல் (methodology), குடும்பச் சமூகவியல் ( family sociology) மற்றும் உளவியல் (psychosociology) போன்ற துறையில் கல்வியைப் போதித்தார்.  அந்தக்காலக் கட்டத்திதான் 1975-ஆம் ஆண்டு ‘பர்த்தாவுக்கு அப்பால்’ (Beyohe nd tVeil) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகம் முஸ்லிம் சமூகத்தின் ஆண்-பெண் ஆற்றலை (Male-Female Dynamics in a Muslim Society) பேசக்கூடியதாக அமைந்தது. அவரின் இந்தப் படைப்புத் திருத்தப்பட்டு 2011-ஆம் ஆண்டு லண்டனில் மீண்டும் வெளியிடப்பட்டதும் குறிப்பிடதக்கது.

அதுவரை திறை மறைவில் அறியப்பட்ட பாத்திமா மெர்னிஸ்ஸி உலகளவில் பேசப்படத் தொடங்கினார். The Forgotten Queens of Islam என்ற புத்தகம் அவரை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றது. இஸ்லாமியப் பெண்களின் ஆரம்பக் கால அரசியல் ஈடுபாட்டினைப் பேசக்கூடிய ஆய்வு நூலாக அந்தப் புத்தகம் அமைந்திருந்தது. தனது படைப்புகளில் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றங்கள் குறித்தும், சமூக மானுடவியல் குறித்தும் அதிக முக்கியத்துவம் செலுத்தினார்  பாத்திமா மெர்னிஸ்ஸி.

உண்மையில் பாத்திமா மெர்னிஸ்ஸின் எழுத்துகள் சமூகத்தளத்தில் அவசியம் உரையாடப்பட வேண்டியவை எனச் சமூக ஆர்வலர்கள் கூறும் கருத்தாகும். இருந்தபோதிலும், அவரின் செயற்பாடுகள் குறித்து உலக ரீதியில் தீவிரம் காட்டப்படாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பாத்திமா மெர்னிஸ்ஸிப் பெண்ணியத்திலிருந்து பிரித்துப் பார்க்ககூடியவர் இல்லை.

நன்றி ஊடறு
7.12.2015

சனி, 21 நவம்பர், 2015

பயிரை மேய்ந்து ஏப்பம் விடும் வேலிகள் !

நாட்டை உலுக்கும் கொலைச் சம்பவங்கள் ! 


உறவுகள் மீதான நம்பிகையும் பாசமும் நாளுக்கு நாள் மழுங்கடிக்கப்பட்டு வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உடன் பிறப்பிற்காகவும், தாய் தந்தைக்காகவும், ரத்த பந்தத்திற்காகவும் உயிரை கொடுத்தவர்களின் கதை,  இனி கதையாக மட்டும் இருக்குமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை? 
நலிவடைந்து வரும் மனிதாபிமானம், இனி காணாமல் போய்விடுமோ என்ற கவலை, நாளுக்கு நாள் முன்னேறி வரும் கணினி யுகத்தில் பார்க்க முடிகிறது. 

உயிருக்கு உலை வைக்கிற  எதிரி, வெளியில்தான் இருக்கிறார் என்கிற சொல்லெல்லாம் தற்போது பொய்த்து வருகிறது. நம் வீட்டுகுள்ளேயே, சொந்த ரத்த பந்தம் சம்பந்தப்பட்டவர்களே கூட மரணத்தை கொண்டு வரும் சாபத்தை இந்த நூற்றாண்டு பெற்றுவிட்டது. உண்மையில், இந்த நூற்றாண்டில் வாழ்வதற்கான தகுதிகளைதான் நாம்  இழந்துவிட்டோமோ என்ற வருத்தமும் எனக்கு வராமல் இல்லை. 

எதிர்பாராத விதமாக சொந்த ரத்த பந்தத்தின் உயிருக்கு மரணத்தை விளைவைப்பது கிரைம் ரகத்தில் வகைப்படுத்துவதில்லை. ஆனால், பொறாமையின் காரணமாகவோ அல்லது  மரணம் விளைவைக்க வேண்டும் காரணத்திற்காகவோ சொந்த உறவை சாய்ப்பது நிச்சயம் மனநோயிக்கு அருகில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. 

உலகப் பேரழகி  கிளியோபாட்ரா தன் சொந்த சகோதரர்களையே மணந்து, ஆட்சிக்காக கொலையும் செய்தாள் என்று எகிப்து வரலாறு நமக்கு பாடம் கற்பிக்கிறது. பரசுராமன் கதையில், தந்தையின் ஆணையை நிறைவேற்ற தாயின் தலையை கொய்த மகனின் கதை நமக்கு தெரியும்.  ஆகையால், ரத்த பந்தத்திற்கிடையே ஏற்படும் மரணம் என்பது வரலாற்று ரீதியில் நமக்கு அதிர்ச்சியளிப்பதாக இல்லை. 

ஆனால், மலேசியா போன்ற இஸ்லாமிய  நாடுகளில், 5 வயதிலிருந்தே நன்னெறியையும், பாசத்தின் அடிப்படையில் வளர்க்கப்படும் சிறுவர்கள் பின்னாளில் எப்படி கொலையாளிகளாக மாறுகின்றனர் என்பது காலத்தின் கோலம்தான். 

குவாங்கில், தீபாவளி விருந்தில் சந்தோஷமாக ஈடுபட்டிருந்த அண்ணன் - தப்பிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் தொடங்கி அண்ணனின் மரணத்தில் முடிந்தது. கடந்த நவம்பர் 18-ஆம் தேதி காலை தொழுகையில்  ஈடுபடவிருந்த  தந்தையை, மகன் ஒருவன் கட்டையாலும்-மூங்கிலாலும் தொடர்ந்து தாக்கியதில் அந்த 71 வயது முதிய அப்பா முரணமடைந்தார். 

ஒரே வாரத்தில் நடந்த இந்த இரண்டு கொலைகளுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அதாவது இந்தக் கொலையில் மரணமடைந்தவர்கள் மற்றும் கொன்றவர்கள் சொந்த ரத்த சம்பந்தம் கொண்டவர்கள். மேலும், கொலையாளிகள் என நம்பப்படுபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். இந்த இரண்டு கொலைகளை மட்டும் மாதிரியாக கொண்டு ரத்த சம்பந்தங்களிடையே பாதுகாப்பு இல்லை என்று கூறுவது அபத்தம் என சிலர் கூறலாம். உண்மையில் கடந்த 3 வருடத்தில் ரத்த சம்பந்தங்கள் சம்பந்தப்பட்ட மரணங்கள் ஆறுக்கும் மேலாகும். 

ஊடக பார்வைக்கு வந்த தகவலின் படி முதல் சம்பவம்,  மே மாதம்   2-ஆம் தேதி 2012-ஆம் ஆண்டு நடந்தது. தனது தந்தையில் பிரேதம் கிடப்பதாக தாமே போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவல் கொடுத்த 15 வயது இந்திய ஆடவனை போலீஸ் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்து விசாரித்ததில் அவன் தனது தந்தையின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்தது  தெரியவந்தது. 

இரண்டாவது சம்பவம் ஜூலை 8-ஆம் தேதி 2014-ஆம் ஆண்டு, மலாக்காவில், கம்போங் காஜாவில் நடந்தது.   தந்தை தனது இளைய மகனை கட்டையால் அடித்துக்கொன்றார். 

மூன்றாவது சம்பவம்  இந்த வருடம் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி நடந்தது. கோத்தா கினபாலுவில் அந்த கொடூரம் நடந்தது. போதை பொருள் வாங்குவதற்கு பணம் தர மறுத்த பாட்டியை பேரன் கொடூரமாக 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்தான். 

நான்காவது சம்பவம் நவமபர்  10-ஆம் தேதி செராசில் நடந்தது. சகோதரன் - சகோதரிகளுக்கிடையே ஏற்பட்ட பலத்த சண்டையை தடுப்பதற்கு ஈடுபட்ட தாய் அடித்துக் கொல்லப்பட்டார். 

ஐந்தாவது சம்பவம்  நவம்பர் 14-ஆம் தேதி,  அண்ணனை தம்பி சண்டையின் போது மூர்க்கமாக தள்ளிவிட்டதில் விழுந்து உயிரிழந்தார். 

ஆறாவது சம்பவம் நவம்பர் 18-ஆம் தேதி,  முதிய  தந்தையை கட்டையாலும்-மூங்கிலாலும் தொடர்ந்து பலமுறை தாக்கியதில் அந்த 71 வயது  அப்பா முரணமடைந்தார். 

இந்த ஆறு சம்பவங்களும் சமூக அமைப்புக்கிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. நாகரிகம் வளர்ந்து வரும் இந்த நூற்றாண்டில் மனித உறவுகளுக்கான அனுக்கம் மலிங்கி வருகிறது என்பதும் மறுப்பதற்கு இல்லை. இந்நிலை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்ற அச்சம் ஏற்படாமலும் இல்லை. 
இதற்கிடையில் நாட்டு மக்களுக்கு வேலியாக இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையினர், மக்கள் எனும் பயிரை மேய தொடங்கிவிட்டது மேலும் அச்சுறுத்தும் தகவல் ஆகும். 

கடந்த 2.2.2013-ஆம் ஆண்டு அன்று இரவு 7.30 மணியளவில் தலைநகர் மிரானா தங்கும் விடுதியிலிருந்து  போலீஸ்க்கார்கள் எனக்கூறிகொண்ட நான்கு பேர் கொண்ட கும்பல் நாஸா ரக காரில் தொழிலதிபர் டத்தோ டாக்டர் கோபாலகுருவை கடத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. 
ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவரைக்குறித்து எந்த தகவலையும் போலீசாரால் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. இது குறித்த அதிருத்தியை டத்தோ கோபாலகுருவின் மனைவி தொடர்ந்து  வெளிப்படுத்துக்கொண்டிருக்கிறார்.
 அதன் தொடர் வெளிபாடாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி  வழக்கறிஞர் பி.உதயகுமார் தலைமையில் புக்கிட் அமான் போலீஸ் வளாகத்திற்கு முன்பு, போலீஸ்காரர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 12 பேருக்காக  அமைதியான முறையில் நடத்திய  மரியலில்   டத்தோ  கோபாலகுருவின் மனைவி சத்யவாணியும்  கலந்துக்கொண்டார். 

இதற்கிடையில், டத்தோ கோபாலகுரு காணாமல் போன அன்று அணிந்திருந்த காலணியும், இடைவாரும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் அண்மையில் தெரிவித்திருந்தது. சிலாங்கூர் உலு லங்காட், நெகிரி செம்பிலானின் அம்பாங்கானுக்கு இடையே உள்ள பின்புறச் சாலையில் போலீஸ் சோதனை மேற்கொண்டதில் அந்தப் பொருள்கள் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டன. ஆனால், அது டத்தோ கோபாலகுருவுடையது தானா என்று போலீஸ் உறுதி செய்யவில்லை. 

இந்தக் சம்பவத்தில் ஈடுபட்டது 3 போலீஸ்காரகள் என கண்டுபிடிக்கப்பட்டது பொது மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கடத்தல், கொலை போன்ற சம்பவத்தில் இந்தப் போலீஸ்காரர்கள் ஈடுபட்டு வந்திருக்கலாம் என  போலீஸ் சந்தேகிப்பதாக தெரியவந்துள்ளது. 

கடந்த  மாதம் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட கணேசன் - மனோகரன் சகோதரர்களின் கொலையில் ஈடுபட்டதும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் எனவும் கூறப்படுகிறது.  அதன் அடிப்படையில் பார்க்கும்போது, தனிப்பட்டவர்களை கடத்தி, அவர்களை  படுகொலை செய்யும்  சம்பவம்த்தொடர்பில் இதுவரை 6 போலீஸ்க்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.  கைது செய்யப்பட்டிருக்கும் போலீஸ்காரர்களிடத்தில் மேற்கொண்ட விசாரனையில் டத்தோ கோபாலகுரு குறித்து தகவல் பெற்றதாகவும் அதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட இடத்தில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

போலீஸ் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தி கைது செய்து கூட்டிச் செல்பவர்கள் போலீ போலீஸ்காரர்களாக இருக்குமோ என்ற அச்சத்தை எப்படி தவிக்கிறது என்று தெரியாத வேளையில் உணமையில் போலீஸ்காரர்களே இதுமாதிரியான கொலைச் சம்பவத்தில் ஈடுபடுவது நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டத்தோ கோபால குருவைப் போன்ற 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மற்றும் ஒரு தொழிலதிபர் அன்பழகன் சுவாமிநாதனின் நிலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தனது நண்பரை சந்திப்பதாக 4.8.2009 ஆம் ஆண்டு  ரவாங் புக்கிட் செந்தோசாவிலிருந்து புறப்பட்டுச் சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை. இது குறித்து அவரின் மனைவி ச.ஜெயந்தி போலீசில் புகார் செய்தார். 

இப்படியான கொலைச் சம்பவங்கள் நாட்டில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் வேளையில், தடுப்புக் காவலில் இருப்பவர்கள் மரணமடையும் சம்பவங்களும் இன்னும் தீர்ந்தபாடில்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் ஒருவரை 24 மணிநேரத்திற்குள் மாஜிஸ்திரெட் அல்லது அல்லது நீதிபதிக்கு முன் நிறுத்தவேண்டும் என்கிறது மலேசிய சட்டம். மேலும், கைது செய்யப்பட்டவரின் தடுப்புக்காவல் நீட்டிக்க வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை முன் மொழிய வேண்டும். அவர் எத்தனை நாள் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிதான் முடிவு செய்வார். ஆனால், 24 மணி நேரத்திற்குள்  கைது செய்யப்பட்டவர்கள் உயிரோடு இருப்பதே தற்போது பெரிய  விஷயம் என்றாகி வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து 2014 வரை தடுப்புக்காவலில் மரணம் அடைந்தவர்களின் மரண எண்ணிக்கை 63 ஆகும். இது அதிகமான உயிரிழப்பாக மனிதவள ஆர்வளர்கள்  வரையருக்கிறார்கள்.

சனி, 14 நவம்பர், 2015

சாம்பல் பறவை ( குறிப்பு 2 )

தினமும் காலை 6 மணிக்கு கண் விழிக்கும் போது உடனே எழுந்துக்கொள்ளும் பழக்கம்  இல்லை. முதல் வேலையாக என் அலைபேசியை தேடி பிடித்து, அதில் நேரத்தை பார்த்த பிறகு, அந்த 'டாத்தா'வை கொஞ்சம் திறந்து விடுவேன். நிருபரான நான், இணையத்தையோ  அலைபேசியையோ முடக்கி வைப்பது அழகல்ல. இருந்தாலும் என்ன செய்ய.
 கொஞ்ச நேரமாவது உறங்க வேண்டும் இல்லையா?

கண்விழிக்கும் நான் முதலில் செய்வது வெந்நீர் வைப்பதுதான். கண்ணாடி ஜன்னல் ஓரம் இருக்கும் கேஸடுப்பில் வெந்நீருக்கு தண்ணீர் வைத்து அடுப்பை தட்டி விட்டு, அந்தக் கண்ணாடி ஜன்னலை திறந்தால் கண்கள் தீவிரமாக அலச ஆரம்பிக்கும். தினம் தினம் என்னையே அறியாமல் அந்த தேடுதல் நடக்கும். அவனை பார்த்த நாளிலிருந்தும் அவனோடு சினேகம் தொடங்கிய நாளிலிருந்தும்  இனம் புரியாத ஆசைகளோடு கண்கள் அவனை தேடிக்கொண்டிருக்கின்றன. அவன், என்னை பார்க்க வருகிறான் என்பதை நானும் நம்புகிறேன். நான் அவனைத் தேடுவதை அவனும் உணர்ந்துதான் இருக்கிறான். அது அவன் இனத்திற்கே உள்ள தனிச்சிறப்பு அல்லவா...

ஆனால், கள்ளன் அவன். சில நாட்கள் தொடர்ந்து வந்தவன் அதன் பிறகு மறைந்து விளையாடும் மாயன் ஆகிவிட்டான். பல மாதங்கள் ஆகிவிட்டது, அவனைக் கண்டு. அந்த ஏக்கம் ஒரு நோயைப்போல என்னில் பரவும் என நான் நம்பவே வில்லை. என்னுடைய சில கவிதைகள் அவனுக்கென்று ஓர் இடத்தை ஒதுக்கிக்கொண்டன. அது எந்த திட்டமிடலும் இல்லாமல் நடந்தது.  அதே வேளையில், சில கவிதைகள் பிறப்பதற்கு அவனும்  காரணமானான்.  மறைந்து  விளையாட்டுக்காட்டும் அவன் குணம் என்னில் பல உணர்வுகளை விதைத்துள்ளது. 

"என்ன தேடர? உன் சாம்பல் பறவையா? அவன் வரமாட்டான்." என கிண்டல் செய்து விட்டு போகும் என் துணைவர் அறிய மாட்டார் எனக்கும் அவனுக்குமான நெருக்கத்தையும் பரிபாஷயையும். தேடுதல் சுகம்தானே? காத்திருத்தல் பெரும் சுகம் அல்லவா?  சாம்பல் நிறம் கொண்ட அவன்,  அழகன் அல்ல, ஆனால், சுதந்திரமானவன். அந்த இலையுதிர் மரத்தில் தன் இஸ்டம் போல அவன் இருப்பை நிறுத்துவான்.  இடை இடையில் அவனின் ஓரப்பார்வை என்னில் ஒரு நமட்டுச் சிரிப்பை வரவழைத்துப் போகும். 

பின் அந்த இலையுதிர் மரத்தில் எப்பவும் இல்லாமல் அடத்தியான இலைகள் துளிர்த்தன. காய்களும் சரம் சரமாக காய்த்தன. அழகுகூடிப்போனது அந்த மரத்தில். ஆனால்,  அவனைத்தவிர பெயர் தெரியாத சிட்டுகளும் இன்னும் பிற பறவைகளும்  அந்த மரத்தில் இளைப்பாறி சென்றன. மனதை கவரும் அளவுக்கு ஒரு மஞ்சல் பறவையும் வந்து போனது. ஆனால், அவன் மட்டும் வரவே இல்லை.  

மரத்தின் மீது கோபமா அல்லது என்மீதுதான் கோபமா எனவும் தெரியவில்லை. அவன் இப்போது இல்லாமலே போய் விட்டான்.  இதுவும் ஒரு பொறாமை குணமா அல்லது பறவைகள் குணமா எனவும் விளங்கவில்லை. அவனை ஒரு புகைப்படம் எடுக்க நான் மெனக்கெட்ட போதெல்லாம், தன்னை  இலைகளுக்கு இடையில் மறைத்தே வைத்திருந்தான்.  கிட்டதட்ட 7 மாதங்களாக அவனை நான் பார்க்கவே இல்லை. 

இன்று அவன் வந்தான். அவனின் பழைய யவ்வனம் இல்லை. நோய்வாய் கண்டிருக்குமோ என்று நானாக நினைத்துக்கொண்டேன். நான் காணும் படியாக அவன் சிறகை ஒரு முறை விரித்து காட்டினான். திமிர் பிடித்தவந்தான் அவன். அதில் என்ன சந்தேகம். பார்த்தேன்,  அவனின் சாம்பல் நிறத்தில் வனப்பு கூடியிருந்தது. ஆனால், உற்சாகம் இல்லை. நான் காணாதனை  கண்ட மகிழ்சியில் இருந்தேன். அவன் விட்டென பறந்துச் சென்றான். அந்த இலையுதிர் மரத்தில் ஒற்றை இலை அறுந்து விழுந்ததை அவன் பார்க்கவே இல்லை.  

திங்கள், 26 அக்டோபர், 2015

வலி எனக்கு மட்டும் அல்ல


என் சாம்பல் பறவையை போல
சுதந்திர இறகு கொண்டவன்
என் முதல் குழந்தை..
என் பாரதியைப் போல 
தடித்த மீசை அவன்
பிறக்கும் போதே இருந்தது..
பதின்மவயதில் எனக்கு
மயக்கத்தை கொடுத்த
கண்ணனைப் போல
நீல நிறம் அவனுக்கு
என்னவனைபோல
இயற்கை விரும்பி அவன்
என் துணைவனின்
தூரிகையில்தான்
அவனின் முதல் விளையாட்டு
தொடங்கியது...
என் நண்பனைப்போல
கண்ணியமானவன்
போலி வாக்குறுதிகள்
அவன் அறியாதது...
யட்சியின் அவிழ்ந்த கூந்தலில்
தன் முகம் மறைந்து விளையாடும்
யட்சன் என் மகன்..
இப்படியான கற்பனையில்
வளர்ந்த என் குழந்தையை
ஏன் பிரசவிக்கவில்லை
என்று கேட்கும்போதுதான்
மலட்டு வயிற்றில்
அவன் உதைப்பதை
யாரும் பார்க்காதவாறு
தடவி கொள்கிறேன்...
வலி எனக்கு மட்டும் அல்ல...
-யோகி

புத்தக விமர்சனம்

தலைப்பு: லண்டாய்
தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு: ச.விஜயலட்சுமி
பதிப்பகம் : தடாகம்

'லண்டாய்' இங்கு மலாய் மொழியில் வழக்கத்தில் உள்ள ஒரு சொல்லாகும். செக்குத்தான, சறுக்கலான அல்லது வழுக்கலான இடம் என்று அதற்கு பொருள் கொள்ளலாம். ஆனால், ஆப்கானில் 'லண்டாய்' என்பது உயிரோடு சம்பந்தம் கொண்டதாக இருக்கிறது. தேவைபட்டால் பெண்ணின் உயிரோடு நெருக்கமாகவும், அதே பெண்ணின் உயிருக்கு உலையாகவும் லண்டாய் மாறி விடுகிறது.

இந்த நூற்றாண்டில் ஆப்கானில் இதைவிட வேறு பெரிய வன்முறை இருக்குமா என்று தெரியவில்லை.

‘மதவாத ஆணாதிக்கத்தின் போர் நிற்பதேயில்லை’ இப்படிதான் ச.விஜயலட்சுமி எழுதியிருக்கும் லண்டாய் மொழிபெயர்ப்பு புத்தகம் நம்மிடம் அறிமுகம் படுத்திக்கொள்கிறது. முதல் பக்கத்திலேயே நம் உளவியலை தூண்டி பார்க்கும் அளவுக்கு இந்த புத்தகத்திற்கு மதிப்புரையை ‘தி ஃப்ரண்ட்லைன்’-னின் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் எழுதியுள்ளார் . 'லண்டாய்' குறித்தும் அதன் ஆழம் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதன் வரலாறு தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்த்தும் முகமாக கி.மு 298-ஆம் ஆண்டு தொடங்கி 1992-ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றில் இந்தப் படைப்புக்கு எது தேவையோ அதை தெளிவாகவும் சுறுக்கமாகவும் புத்தகத்தின் ஆசிரியர் கொடுத்திருப்பது இந்தப் படைப்புக்கே உண்டான தனிச் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆப்கானின் எந்தச் சூழலிலிருந்து 'லண்டாய்' கவிதை கிடைக்கிறது அல்லது எந்தச் சூழலில் அந்த கவிதை எழுதப்பட்டது என அறியக்கிடைக்கும் போது அந்தக் கவிதையின் மேல் இருக்கும் வாசிப்பு சார் மனநிலையும் மாறுப்படுவதை மறுப்பதற்கு இல்லை. காரணம் 'லண்டாய்' என்பது கவிதையில் இலக்கணத்தையோ, அல்லது கவிதையில் பாகு பிரிப்பதோ அல்ல. அது வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட உணர்வையும் உரிமையும் சார்ந்த வரிகளாக இருக்கின்றன. தொடக்கத்திலிருந்து நமக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் விரங்களை திரட்டி தந்திருப்பது சிறந்த ஆவணத்திற்குறிய விடயம் என தாராளமாகச் சொல்லலாம்.
ஆப்கானின் பெண்களுக்கு 30 தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்த புத்தகம் கூறுகிறது. ஒவ்வொன்றையும் வாசிக்கும் போது அபத்தம் அபத்தம் என நம் உள்ளமும் வெடிக்கிறது. 

போர் இருந்தாலும் இல்லையென்றாலும் இறந்து கொண்டும், உயிரிருந்தாலும் உரிமைகள் மறுக்கபட்ட உணர்ச்சிகள் உடுக்கப்பட்ட சடல நிலையில் வாழ்பவர்கள்தான் ஆஃப்கான் நாட்டுப் பெண்கள் என்று ஆர்.விஜயசங்கர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அந்த இடத்திலிருந்தே நமக்கு 'லண்டாய்' கவிதைகள் அல்லது பாடல்களின் மேல் ஒரு வகை அச்சம் கௌவிக்கொள்கிறது.
குறிப்பாக வீட்டிற்கு வெளியே பெண்களுக்கு வேலை இல்லை என்பதுடன் விளையாடக்கூடாது என்பதும், உடைகளில் வண்ணங்கள் கூடாது என்று கூறுவதும் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெறக்கூடாது எனக்கூறுவதும் எத்தனை அபத்தமான அடுக்குமுறை. இதையெல்லாம் கேள்வி கேட்கும் முகமாக ஆப்கான் பெண்களுக்கு கையில் இருக்கும் ஒரே ஆயுதம் என 'லண்டாய்' பிரயோகிப்படுகிறது. 

நடைமுறை உரிமைகளை வலுப்படுத்தவும், மேலும் தொடரும் ஒடுக்குமுறைக்கு பதிலளிக்கும் வகையில் ஆப்கான் பெண் படைப்பாளிகள் தொடர்ந்து தங்களின் படைப்புகளின் மூலம் கருத்துகளை முன் வைக்கிறார்கள். அதற்காக தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததையும் அவர்கள் மதிக்கவில்லை. எதற்கும் துணிந்த போராளிகளாகதான் தங்களின் 'லண்டாய்' வரிகளை பாடுகிறார்கள்.

கட்டளையை பிறப்பிக்கும் தலிபான்களிடத்தில் நகப்பூச்சுக்கு விரல்களை பரிகொடுத்த பெண்கள் எங்கும் விரவிக்கிடக்கிறார்கள். ஆனால், வாய்மொழியாக வந்த லண்டாய் வரிகள் கடவுளுக்கே சாபம் விடுகிறது இப்படி...

'கடவுளே நான் சபதமிடுகிறேன்
பெண்களுக்கு எதிரான அநீதியை நீ நிறுத்தும் வரையில்
உன்னை மீண்டும் தொழுவதற்கு கையேந்த மாட்டேன்
நான் உன் குரானைத் தொட மாட்டேன்
உம்மை இறைவா என அழைக்கமாட்டேன்'

'லண்டாய்' என்பதற்கு மெல்ல கொல்லும் விஷமுள்ள சிறு பாம்பு என்றொரு அர்த்தமும் இருக்கிறது. ஒவ்வொரு பாடலும் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் கொல்லும் விதத்தில்தான் இருக்கிறது.

'கிழவனோடு கலவிச் செய்வது,
கரும்புள்ளிகளைக் கொண்ட நோயுற்று வற்றிய மக்காச்சோளத்தைப் புணர்வது போல'
என்ற வரியும்
'தந்தையே! முதியவன் ஒருவனுக்கு என்னை விற்றுவிட்டாய் 
நான் உன் மகளாய் இருந்ததற்காகக் கடவுள் உன் வீட்டை அழிப்பார்'

என்ற வரியும் அந்த மாதிரியான உணர்வை ஊட்டக்கூடியதுதான். தலிபான்கள் ஆட்சியில் சொந்த வீட்டுப் பெண்களும் அவள் யாராக இருந்தாலும் சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கப்படுகிறாள். எந்நேரமும் தம் வீட்டு ஆண்களால் வேவு பார்க்கப்படும் பெண்ணாகத்தான் அவள் இருக்கிறாள்.
பெண்களுக்கான ஒடுக்குமுறை என்பது எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. மலாய் மொழியில் ஓர் உவமை உண்டு. 'Orang dapur' (ஓராங் டப்புர்) அப்படி என்றால் அடுப்படி ஆள். பெண்ணை குறிக்கும் வார்த்தை அது. இஸ்லாமிய நாடான மலேசியாவில் ஆப்கான் நாட்டைக் காட்டிலும் பெரிய ஒடுக்குமுறைகள் இல்லை என்றாலும் உவமைகளில் அவர்களுக்கு கொடுத்திருக்கும் இடம் ஒன்றுதான்.

இந்த 'லண்டாய்' தொகுப்பில் என் வாசிப்பை நிறுத்தி அதிலிருந்து கடக்க முடியாமல் செய்த வரிகள் நிறைய இருக்கின்றன. ஆனால், இந்த வரி அதையும் கடந்து என்னை துன்புறுத்தியது என்று சொல்லலாம்.

'நான் பாலை வனத்தின் டுலிப் மலரைப் போன்றவள்
பூக்கும் முன்பே இறந்து விடுகிறேன்
பாலைவன மணற் சூறைக்காற்று நான் மலரும் முன்பே
என் இதழ்களை உதிர்த்து விடுகிறது'

17 வயது இளம் பெண் மீனா முஸ்காவின் வரிகள் இவை. போரில் உயிர்நீத்த தனது காதலனின் சகோதரனை மணக்க நிர்பந்திக்கும் போது மறுமொழி பேசாதவளாக லண்டாய் வழி தனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறாள் மிக ரகசியமாக. ஆமாம் அது மிக மிக ரகசியம்தான்.
இவர்களின் இந்த ரகசிய 'லண்டாய்' வரிகளை வானொலிக்காக பதிவு செய்பவர் ஷஹிரா ஷெரிப் என்ற பாராளுமன்றத்தைச் சேர்ந்த பெண். முன்னதாக ஷஹிரா ஷெரிப் 'மிர்மன் பஹீர்' என்ற அமைப்பை தோற்றுவிக்கிறார். அதில் 'லண்டாய்' கவிதைகளை வானோலியின் பதிவு செய்வதற்கு அறிவிக்கிறார். கவிதையை பாட விரும்புகிறவர்கள் தொலைபேசி வாயிலாக இந்த முயற்சியை தன் உயிருக்கு வரும் ஆபத்தையும் பொருட்படுத்தாது துணிகிறார்கள். அவர்களின் பாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன. சனிக்கிழமைகளில் இவர்கள் கூடி கவிதைகளை பரிமாற்றம் செய்துகொள்கிறார்கள். இந்த சந்திப்பிற்காக வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அவர்கள் பல பொய்களையும் அவர்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த அமைப்பானது 100 உறுப்பினர்களை காபூலில் கொண்டுள்ளதாகவும், காபூலுக்கு வெளியே 300 உறுப்பினர்கள் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மிக ரகசியமாக செயல்படும் இந்த அமைப்பு சுமந்திருக்கும் கதைகளும் இழப்புகளும் ஏராளம். மிர்ம பஹீர் அமைப்பின் உறுப்பினரான ஸர்மினாவின் தற்கொலையை விவரிக்கும் போதும், முஸ்காவின் நிலையை கூறும்போதும், 'மிர்மன் பஹீர்' அமைப்பின் தலைவியான எலிசா அங்கு சந்திக்கும் பிரச்னைகளும் அதனூடே செய்யும் பதிவுகளும் நம்மை திகிலுடன் பயணிக்க வைக்கின்றன.
கவிதை வாசிப்புக்கு தயார் நிலையையும், ஒரு நாவலுக்கான தொடக்க நிலையிலும் ஒருவித இழைப்பின்னல்களுக்கு இடையில் இருப்பதை நாம் உணர்வோம்.

'லண்டாய்' இரண்டு வரிகளில் இருபத்திரண்டு அசைகளில் பாடப்படுவதாகவும், இந்த வடிவம் எப்பொழுது தோன்றியது என அறிய முடியாத அளவிற்கு தொன்மை வாய்ந்தது எனவும் காலத்திற்கு ஏற்ப கருத்துகளால் தன்னை மாற்றி வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலும் பெண்களால் பாடப்பட்டதால் பெண்ணிய குரலாக அது ஒலிக்கிறது என இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தனிமை, போர், வீரம், வரலாறு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, துயரம், அவலம், சமூக பொறுப்புணர்வு, நம்பிக்கை என பல கோணங்களில் 'லண்டாய்' கவிதைகள் எழுதப்பட்டாலும் காமம் குறித்தும் காதல் குறித்து எழுதப்பட்ட கவிதைகள் அதிமுக்கியமானதாகவும், கவனத்திற்கு உட்படுத்தும் வரிகளாகவும் இருக்கின்றன..

நேற்றிரவு வரமுடியாத நீ துரதிஷ்டசாலி
கட்டிலின் உடைந்த மரக்காலை உனக்கு மாற்றாய் பயன் படுத்திக்கொண்டேன்
00
இங்கிருக்கும் எவனொருவனுக்கும் துணிவில்லையா?
என் உள்ளாடைக்குள் தீண்டப்படாது எரிந்து கொண்டிருப்பவற்றைக் காண..
00
நம் சிறுவயதில் நீ ஐஸ்கிரீம் சுவைத்ததைப் பார்த்திருந்த நான்
உன் நாவை சுவைப்பதற்காக மரணத்தை ருசிக்கவும் துணிந்து விட்டேன்
00
வாருங்கள்! இந்த கிராமத்து முட்டாள்களை விட்டுவிட்டு வாருங்கள்
பாலிவுட் சிகையலங்காரம் வைத்திருக்கும் காபூல்காரனைத் திருமணம் செய்வோம்
00
நான் பச்சை குத்தியிருப்பதைக் கத்தியக் கொண்டு வெட்டி எடுத்தாலும்
நான் மறுக்கமாட்டேன், காதல்வயப்பட்டிருக்கிறேன்...

இப்படியாக 'லண்டாய்' கவிதைகளை இந்தத் தொகுப்பில் ச.விஜயலட்சுமி தணிக்கை செய்யாமல் தந்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் மற்றும் ஒரு கவனத்திற்கு உட்படுத்த வேண்டியதாக, ஆப்கான் பெண்கள் சிலரை குறித்து பிபிசி செய்திகள் தந்திருக்கும் விடயங்கள் இருக்கிறது. அதுவும் மலாலா சோயா எனும் ஆளுமை குறித்தும் தற்கால பெண்களின் நிலை குறித்தும், அங்கு நிலவும் அரசியல் குறித்து பேசியிருப்பதும் எழுத்தாளரின் உழைப்பை காட்டுகிறது. கடமைக்காக ஒரு புத்தகத்தை தயாரிக்காமல், அதன் தேவைக்குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் பொறுப்போடு எழுதியிருப்பது பாராட்டுக்குறியது. 'லண்டாய்' கவிதைகள் உலகின் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்ட தொடர்புக்கு வைக்கப்படுள்ள ஆப்கான் பெண்களின் உலகத்துடனான ஒரே தொடர்பு என கூறப்படுவது மிகையில்லை.

ஒவ்வொறு கவிதைக்கு பின் உயிர் அச்சுறுத்தல் இருந்தும் ஆப்கான் பெண்களின் எழுத்தும் தைரியமும் மனவெளிப்பாடும் விமர்சிக்கவோ அல்லது கருத்துச் சொல்லவோ வார்த்தைகள் இல்லை எனக்கு. இந்த தொகுப்பில் நிறைவான பல விஷயங்கள் இருந்தாலும், கவிதைகளுக்கான தரவை எங்கிருந்து பெற்றார் என்ற விவரத்தையும் ஆசிரியர் இணைத்திருக்கலாம். மேலும், புத்தகத்திற்கு பயன்படுத்தியிருக்கும் ஓவியங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தாலும், இந்தப் புத்தகத்திற்கு ஓவியங்களும் படங்களும் அத்தனை அவசியமானது என்று சொல்வதற்கு இல்லை. தடாகம் வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம் சிறப்பான தேர்வு.
கவிதை என்பது ஆயுதம்; கவிஞர் என்பவர் போராளி என வாழும் இந்தப் பெண்களைப் பற்றிய பதிவுகள் வெளியுலகத்திற்கு தெரியாமல் மறைக்கப்பட்டு வருவது பெரும் சோகம். ஆனால் லண்டாயும் மனித வெடிகுண்டுக்கு சமமான ஒன்றுதான் என ஆப்கான் பெண்கள் இன்றும் நிரூபித்து வருகிறார்கள்.


-யோகி
நன்றி
ஆக்காட்டி, அக்டோபர் 2015  மாத இதழ் (பிரான்ஸ்)

வியாழன், 22 அக்டோபர், 2015

வந்துவிடு


நானும் அன்றுதான்
பகவான் ஶ்ரீராமனை
முதல் முறையாக பார்த்தேன்
அவனின் நீல நிறம்
கறுத்து போய் இருந்தது
நாண் ஏற்றும் அவனது வில்
நிலம் பார்த்து
வெட்கி கிடந்தது

நான் அவனையே
பார்த்துக்கொண்டிருந்தேன்
நிலம் பார்க்கும்
சீதையாக இருந்திருந்தால்
வான் பார்க்கும் அவன்
என்னை
அடையாளம் கண்டிருப்பான்

ஆணவம் கொண்டவன் ராமன்

இன்னொரு ஆணவக்காரியை
எப்படி பார்ப்பான்!
பரிதாபத்திற்குரியன் நீ ராமா
உனது வானரப் படைகள் எங்கே?
உனது தமையன்கள் எங்கே?
நீ ஏன் உன் பொலிவிழந்து
தெருவில் நிற்க்கிறாய்?

உன் வேலைக்கு இன்னும்
கூலி கிடைக்கவில்லையா?
இப்போது என்ன செய்ய போகிறாய்?
நான் உன் தர்ம பத்தினி இல்லை
எனக்கு ஶ்ரீ ராமனும் தேவையில்லை
அரிதாரம் கலைத்து வா ராமா
உன் அவதாரங்களின் அரசியல் விளையாட்டில்
வேலைக்கான கூலிகளை இழந்துவிட்டாய்

இப்போது ஒரு கப் டீ அருந்தலாம்
வட்ட மேசைக்கு வந்துவிடு