தொடர் 16
கீரிமலையில்
போர் நடந்ததற்கான ஆதாரங்கள் சொர்ப்பமாகத்தான் இருக்கிறது. 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு
வந்த போரின் தடயங்கள் வெகுவிரைவாகச்
சீர் செய்யப்பட்டு வருவதற்குக் கீரிமலை ஓர் உதாரணம்
எனத் தெரிகிறது. (இது எனது பார்வை
மட்டுமே. உண்மை வேறாக கூட
இருக்கலாம்.)


ஆனால், நான் அங்குபோன பிறகு அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. நான் சந்தித்த தமிழர்களே படிப்பதற்கான விஷயங்களை நிறைய கொண்டிருந்தனர். புத்தனைவிட ஆழமான பேரமைதியுடன் அவர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருக்கிறது.


இந்த ஸ்தலத்தைக் கொஞ்சம் ஆசுவாசமாகப் பார்ப்பதற்கு எங்களுக்கு நேரம் இருந்தது. அந்த விகரைக்குச் செல்லும் போதே ‘தம்பகொலபடுன’ என்ற குறிப்புப் பலகை வரவேற்கிறது. அது சிங்கள பெயர் என்று இந்தத் தொடரை எழுதும்போதுதான் தெரிந்துக்கொண்டேன். அதை ஜம்புகோணபட்டினம் என்று தமிழர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். மாதகல் கிராமத்தின் ஒரு பகுதியில் இந்த விகார் அமைந்துள்ளது.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எனது நண்பர் சொன்னார், நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த காலம் வரை இதுபோன்ற விகாரை மாதகலில் கேள்வி பட்டதே இல்லை எனவும் யாழ்ப்பாணத்தில் ஒரு விகாரும், நயினாதீவில் நாக விகாரும் மட்டுமே இருந்தது என்றார். இந்த விகாரை குறித்து எழுந்த சந்தேகத்திற்கு எல்லாம் அவரின் கூற்று பதில் சொல்லியது எனக்கு.

சூரியன் மறையும் நேரம் நெருங்க அதன் ஒளிக்கதிர் நதியில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது. மனதை ஆசுவாசப்படுத்தும் விதமாக அதுமட்டுமே அந்த விகாரில் நான் பெற்றேன்.

ஆட்டோ ஓட்டுநரும் எங்களை ஏற்றுவதற்குத் தயாராக இருந்தார். கிளம்பி வருகையில் அந்தச் சாலையின் முச்சந்தியில் இருக்கும் ஒரு சிவன் சிலையைப் பார்த்தேன். சினிவாவில் வரும் செட் போல இருந்தது. அத்தனை கம்பீர சிலை. ஆட்டோவை நிற்க சொல்லி ஒரு புகைப்படம் எடுத்தேன். அந்தச் சிலையைப் பற்றிச் சொல்வதற்கு வேறு இல்லை. என் மௌனமே அதிகம் பேசிக்கொண்டிருந்தது.
எங்களின் யாழ்ப்பாண இரவு, ஒரு மாபெரும் இசை கச்சேரியோடு ஏற்பாடாகிக்கொண்டிருந்தது. மிக ரகசியமாக. அதுவும் ஒடியல் கூழோடு.
பின்குறிப்பு:
சங்கமித்தை என்ற புத்த பிக்குனி, வெள்ளரச மரக்கன்றை, ஒரு படகின் வழி
அங்குக் கொண்டுவர, அதைத் தேவ நம்பிய தீசன் என்ற அரசன் பெற்றுக்
கொண்டதாகச் சொல்கிறார்கள் என்று எழுதியிருந்தேன். தோழர் முஸ்டின் அது குறித்து தனது கருத்தை பகிர்ந்திருந்தார். அதாவது
திருத்தம்: தேவானம் பியதிஸ்ஸ என்றுதான் அந்த அரசனின் பெயர் வரவேண்டும். தேவ நம்பிய திஸ்ஸ என்று வர முடியாது. அது பிழை. தமிழில் சிலர் தேவ நம்பிய திஸ்ஸ என்று பழகிவிட்டார்கள். அதைக் கருத்திற் கொள்ளவும்.
தோழர் முஸ்டினுக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.