திங்கள், 1 மே, 2023

பெண்கள் மீதான அடக்குமுறைகள் பேசப்பட வேண்டும்-குழலி

மலேசிய பெண் கவிஞர்களில் பூங்குழலி வீரன் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருக்கிறார். பல முக்கியக் கவிதைகளை நமக்கு கொடுத்திருக்கும் இவர் இதுவரை 4 கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 10-ஆண்டுக்கும் மேலாக மின்னல் எஃ.எம்-மில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தற்போது புத்ராஜெயாவின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக  அமைச்சின் கீழ் சிறப்பு அதிகாரியாக பணிபுரிகிறார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல். நேர்கண்டவர் யோகி.

 

1. கவிதைக்குள் நீங்கள் வந்த தருணம் எப்படி நிகழ்ந்தது?

பெரிய திட்டமிடல்களுக்குப் பிறகெல்லாம் எனது இலக்கிய ஆர்வம்  அமையவில்லை. வாசிக்கத் தூண்டிய அப்பா கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டும் என்பதையும் வழக்கமாக்கினார். எனக்கு சிறுவயதில் இருந்தே வாசிப்பதில் மிகவும் ஆர்வமிருந்தது. அதுவே, எழுதுவதற்கான முதல் புள்ளியை இட்டது எனலாம். தொடக்கப்பள்ளி படிக்கும் காலம் தொட்டே நிறைய கவிதைகள்; அதாவது கவிதைகள் மாதிரி எழுதியிருக்கின்றேன். ஆனால், இப்போது அவை எதையுமே கவிதைகள் என்று சொல்ல முடியாது என தோன்றுகிறது. நாளிதழ்கள், வார மாத இதழ்களில் அவை தொடர்ந்து வெளிவந்தன. ஓர் ஆர்வத்தின் அடிப்படையில், சிக்கலுக்கு வெளியே நின்று கொண்டு அறிவுரைக் கூறும் தொனியிலான பிரச்சார கவிதைகள் அவை. கலைத்தன்மையற்ற மிக முக்கியமாக அகவயப்பட்ட அல்லது தன்வயப்பட்ட கவிதைகளாக அல்லாமல் ஒரு மூன்றாவது மனநிலையில் நின்று நான் எழுதியவையாக இன்று அக்கவிதைகள் எனக்கு தெரிகிறது. சமூகம் - சமூகப் போராட்டம் - இனம் - மொழி - சுரண்டல் - ஈழ விடுதலைப் போராட்டம் - பெண் விடுதலை என அப்போதிருந்த வாழ்வு தந்திருந்த உள்ளடக்கமே அன்று நான் எழுதிய கவிதைகளின் கருவாகவும் இருந்தது. ஆனாலும், அந்த தொடக்கம் குறித்த ஒரு மகிழ்ச்சி இன்றளவும் இருக்கிறது. ஒரு படைப்பாளனுக்கு அந்த மகிழ்ச்சி மிக முக்கியமானது. அதோடு, கவிதைகள் குறித்த புரிதலும் மிகத் தெளிவாக இல்லாத ஒரு காலக்கட்டம் அது. பின், என் தாய்மண்ணை விட்டு தலைநகருக்கு வந்தது; புதிய நண்பர்களையும் வாழ்வு குறித்த புதியதொரு புரிதலையும், முற்றிலும் புதியதொரு வாசிப்பனுபவத்தையும் தந்தது. ம.நவீன், பா.அ. சிவம், மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகம்; காலச்சுவடு, கணையாழி, உயிர்மை இதழ்களை வாசிக்க தொடங்கிய வாசிப்பனுபவம் கவிதைக்கான புதிய தருணங்கள் எனக்குள்ளும் நிகழ சரியான காரணங்கள் ஆயின.

 

2.ஒரு வாசகனாக உங்களுக்குப் பிடித்தமான கவிதைகள் எப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

எழுதுபவருக்கே உரிய அசலான ஒரு மொழியில்; அவருக்கான சொற்களில் கவிதைகள் இருக்க வேண்டும். அவ்வாறான கவிதைகள் எனக்கு உவப்பானவை; அவையே மனதுக்கு நெருக்கமானவையாகவும் இருக்கின்றன. சில நேரங்களில், ஏன் இவர் இந்த கவிதையை எழுதினார், எச்சம்பவம் இவரை இதை எழுத தூண்டியிருக்கும் என்றெல்லாம் சில நாள்கள் வரை கூட யோசித்திருக்கிறேன். அதற்காகவே, அந்த கவிஞர் குறித்த தேடலையும் தொடங்குவேன். அவ்வாறான ஒருவர்தான் கவிஞர் கலாப்ரியா. அன்று தொடங்கி இன்று வரை அவரின் கவிதைகள் எனக்கு மிகப் பிடித்தவை. அவரின் பல கவிதைகளை வாசித்த முதல் அனுபவமும் அது நிகழ்த்திப் போன உணர்வுகளும் இன்னும் எனக்குள் பசுமையாக இருக்கிறது. வாழ்வின் சிறு சிறு தருணங்களை இவ்வளவு நுணுக்கமான பார்வையில் அணுக முடியுமா என வியக்க வைப்பவர்.

வாசிக்கத் தொடங்கிய காலம்தொட்டு கண்டு, பார்த்த, கேட்ட களித்த விடயங்கள் சொல்வதற்கு ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு மொழி இருக்கும். அதுவே, தனித்துவமானதும் கூட.

3. நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களின் மனத்திற்கு நெருக்கமானதாக எதைச் சொல்வீர்கள்?

நிறைய கவிதைகள்  அவ்வாறு இருக்கின்றன. குழந்தைகள் குறித்தும், அப்பா - என் வீடு குறித்தும் எழுதிய கவிதைகள் அந்த நெருக்கத்தைத் தொடர்ந்து உணர்த்துகின்றன.  எனது அண்மைய தொகுப்பான அகப்பறவையில் இருந்து இந்த இரு கவிதைகள்.

கூடென்பது எதற்கு என்றேன்

உண்டு உயிர்க்க பாதுகாக்க

பிறகு வாழ்வது எங்கே என்றேன்

வேட்டையாடுதலை நிகழ்த்திக் கொண்டிருந்தவன்

திரும்பிப் பார்த்தான்

வேட்டைக்குத் தப்பிய மான்

தன் வீடு திரும்பிக் கொண்டிருந்தது

நீண்ட நேரம் வெளியில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு வீடு திரும்புதல் என்பது சொற்களைக் கடந்த ஒரு பேறு; நானும் அவ்வாறான ஒரு சூழலில் வாழ்ந்தபோது எழுதிய கவிதை இது. இங்கு வேட்டையாடுதல் என்பது நமது பணிச் சார்ந்த சூழல். அங்கே வாழ்தலுக்கு இடமே இல்லை. அட்டவணை வாழ்க்கையின் உச்சகட்ட அவலம் என்றுதான் அந்த வாழ்க்கையை வகைப்படுத்த வேண்டும்.

இரவு பேசிக்கொண்டிருக்கிறது

இரவின் மொழியை

இரவுக்காக விழித்திருப்பவர்கள்

யாரேனும் மொழிப் பெயர்த்துக் கொள்ளலாம்

பாகுபாட்டின்றி எல்லோரோடும்

பேசிக் கொண்டிருக்கிறது

இரவு மட்டும்…

அதிகம் களைத்து வீடு திரும்புகிற பொழுது உடனே தூங்கிப் போகிற சூழல் பெரும்பாலும் வாய்க்காது. அப்போதெல்லாம் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு இரவைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமானது. இரவுக்கென்றிருக்கும் மொழியை உணர்ந்த தருணங்கள் அவை.

4.மலேசியத் தமிழ் கவிதை சூழல் பற்றி உங்கள் புரிதலைப் பகிருங்கள்?

எல்லாம் மிகச் சரியான தடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் நெருக்கடிகளின் பெரும் பட்டியல் அல்லவா நம்மிடம் இருக்கிறது.

தற்கால தமிழ்க்கவிதை சூழலை நன்குணர்ந்துள்ள ஒரு சாராரும் அவ்வாறு உணரவே மாட்டேன் என அடம்பிடிக்கும் ஒரு சாராரும் இயங்கும் கவிதை வெளி நமக்கானது. தொடக்கத்தையே உச்சம் என கொண்டாடுவதும் அந்த கொண்டாட்டத்தை நம்பி அதையே தொடர்ச்சியாக்கி கொள்ளும் ஆபத்துமே இங்கு அதிகம் காணக்கூடியதாக இருக்கிறது. கலை இலக்கியத்தில் தீவிரமாக இயங்குபவர்கள் அவ்வாறான படைப்புகள் குறித்து ஏதேனும் விமர்சனங்கள் வைத்து விட்டால் அவர்களை வசைபாடுகின்ற பட்டியல் மட்டும் நீள்கிறது. மற்றபடி, அவர்கள் முன்வைத்த படைப்பின் போதாமையை மேம்படுத்துகின்ற உழைப்பு என்பது மட்டும் இல்லை என்பதே வருத்தமளிக்கும் விடயம். இந்தப் போக்கு மிக ஆபத்தானது. இதனால் ஒரு தீவிர கலைப் படைப்பு சமூகம் உருவாகவே முடியாது. இவ்விரு சாராருக்கும் இடையே ஓர் காத்திரமான உரையாடலைத் தொடங்குவதற்கான முன்னெடுப்பு மிக அவசியம்.

5. அகம் மற்றும் புறம் சார்ந்து பிரயோகிக்கப்படும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள்... இலக்கியப் படைப்புகளில் இப்பிரச்னைகள் எவ்வாறு பேசப்படுகின்றன? நீங்கள் அதை எவ்வாறு காண்கிறீர்கள்?

எனக்கு ஆப்பிரிக்க கவிதைகளின் மேல் மிகுந்து ஈடுபாடு உள்ளது. அகம் மற்றும் புறம் சார்ந்து ஏவப்படும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள்; கொடுமைகள்; வசைகள்; வலிகள் என படைப்புகளில் மிக நேர்த்தியாக, உண்மையாக அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தமிழ்க்கவிதைகளிலும் அவ்வாறான சூழல் காணக்கிடைக்கிறது. ஆனால் பண்பாட்டிற்கு ஒவ்வாதது என அவை புறந்தள்ளப்படுகின்ற அவலம் இங்கு இன்றும் தொடர்கிறது. வாழ்வைப் பேசுவதுதான் படைப்பு. எல்லா பிரச்சனைகளும் பேசப்பட வேண்டும். பேசப்படுவதன் மூலமே கலகம் பிறக்கும். கலகம் பிறந்தால்தான் பலரின் கண்களும் திறக்கும். எனவே, பெண்கள் மீதான எல்லாவித அடக்குமுறைகளும் எல்லா வகையாக இலக்கிய வெளியிலும் மீண்டும்  மீண்டும் பேசப்பட வேண்டும்.

 

6. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுதுகிறீர்கள்? இந்த இடைவெளி உங்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் என்ன? உங்கள் எழுத்துக்கு இந்த இடைவெளி துணை புரிந்திருக்கிறதா?

 

மிக நீண்ட மௌனம்; முற்றிலும் வாழ்வின் வேறொரு தளத்தில் வாழ்ந்து மீண்டது போன்ற உணர்வு. என்னைப் பொறுத்தவரையில்  படைப்புகள் தொடர்பான ஓர் இடைவெளி ஏற்படுவது இயல்பானதும் தேவையானதும் கூட என நான் நம்புகிறேன்.  மேலும், இந்தக்கால கட்டங்களில் எனது வாசிப்பு மனநிலை படிப்படியாகக் குறைந்து இல்லாமலே போய்விட்டது. அது  மீண்டும் எழுதுவதில் பெரும் தடையை ஏற்படுத்தியிருந்தது.  வீடு முழுக்க நிறைந்திருந்த புத்தகங்கள் ஒரு பேயைப்போல எப்போதும் பயமுறுத்தியபடியே இருக்கும்.  இப்போது வழக்க மனநிலைக்கு திரும்பி மீண்டும் வாசிக்கவும் எழுதவும் தொடங்கியிருக்கிறேன்.


7. 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு எழுத வந்த பெண்களில் பலர் இன்று எழுதுவதிலிருந்து காணாமல் போய்விட்டார்கள். இந்த பின்னடைவு குறித்து உங்கள் பார்வை என்ன?

ஒரு படைப்பாளி எப்படி சுதந்திரமாக எழுத்தத் தொடங்குகிறானோ அதேபோல் அவன் எழுதாமல் விடுவதற்கும் அவனுக்குப் பூரண சுதந்திரம் உண்டு என  நான் நம்புகிறேன். அவர்களிடம் படைப்பு என்பது நிகழாமல் போயிருக்கலாம்; அதை அவர்கள் உணர்ந்துவிட்ட புள்ளியில் அதிலிருந்து அவர்கள் விலகியிருக்கலாம் ; ஒரு தீவிர வாசிப்பாளராக மாறியிருக்கலாம். இதை பின்னடைவு என்று சொல்லமுடியாது என்று நான் நினைக்கிறேன். எல்லா நேரத்திலும் இத்தனை பேர் எழுதியாக வேண்டும் என்று ஏதாவது விதியிருக்கிறதா என்ன?

 நன்றி தமிழ்மலர் நாளிதழ் 30/4/2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக