செவ்வாய், 5 டிசம்பர், 2017

நான் உன்னை மீண்டும் சந்திப்பேன் ...


அம்ரிதா பிரீதம் (31.08.1919 – 31.10.2005)

உங்களுக்கு பிடித்த பெண்  கவிஞர்  யார் என யாராவது கேட்டால் கொஞ்சம்கூட யோசிக்காமல்  நான் சொல்லும் பெயர் அம்ரிதா பிரீதம். எப்போதிலிருந்து அந்த பெயரை உச்சரிக்க தொடங்கினேன் என யோசிக்கிறேன். என் சிந்தனை பலவாறாக வேர் விட்டுச் செல்கிறது. இருப்பினும் அவர் எப்படி எனக்குள் இத்தனை தீவிரமாக இடம்பிடித்தார் என்பதை அறியமுடியவில்லை.
கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஆளுமைதான் அம்ரிதா பிரீதம். பாகிஸ்தானின், பஞ்சாப் பகுதியில் இருக்கும் குஜ்ரன்வாலாவில் பிறந்த அவர் தனது 11 வயதில் தாயை இழந்தார், தந்தையோடு லாகூருக்கு இடம்பெயர்ந்த சில வருடங்களில் பிரீதம் சிங் என்பவரோடு திருமணம் நிகழ்ந்தது. திருமண வாழ்வு சந்தோஷகரமாக அமையாமல் விவாகரத்துப் பெற்றார். தனது திருமண வாழ்வில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை ஒளிவு மறைவில்லாமல் பத்திரிக்கைகளில் எழுதினார். அது அவருக்கு பெண்ணிய எழுத்தாளர் என்ற கெளரவத்தைப் பெற்றுத்தந்தது.
அம்ரிதா ஆரம்ப காலங்களில் காதலும், வீரமும் கலந்த கற்பனைக் கவிதைகளையே எழுதினார். பின்னர் அவரின் கவிதை சார்ந்த பார்வையும் பாடுபொருளும் மாற தொடங்கின. 1947ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த வன்முறைகளை, படுகொலைகளை மையப்படுத்தி ”வாரிஸ் ஷா என்ற பஞ்சாபிக் கவிஞருக்கான சிறுபாட்டு” என்ற கவிதையை எழுதினார். அந்த கவிதை மிகவும் பிரசித்தி பெற்றது.
தொடர்ந்து, இரு நாடுகளுக்கான பிரிவினையை அடிநாதமாகக் கொண்ட Pinjar (எலும்புக்கூடு) என்ற அவரின் நாவல் பெண்கள் மீது செலுத்தப்பட்ட, செலுத்தப்படும் அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளை தெளிவாக படம் பிடித்துக்காட்டியது.
இப்படியாக நவீன பஞ்சாபி இலக்கியத்தில் அம்ரிதாவின் குரல் இன்றியமையாததாக நிலைத்தது. சாகித்ய அகாடமி விருது அவரின் “செய்திகள்” என்ற நீண்ட கவிதைக்காகவும், ஞான பீட விருது அவரின் ”காகிதமும் கேன்வாஸீம்” என்ற கவிதை தொகுப்புக்காகவும் வழங்கப்பட்டன. அவரின் சுயசரிதையான ”ரெவென்யூ ஸ்டாம்ப்” மற்றும் ”காகிதமும் கேன்வாஸீம்”போன்ற படைப்புகள் அவைகளின் பட்டவர்த்தனமான, நேர்மையான தன்மைக்காக மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகின. ஏறக்குறைய 70 வருடகாலமாக எழுதி வந்த அம்ரிதா 24 நாவல்களும், 23 கவிதைத் தொகுதிகளும், 15 சிறுகதை தொகுதிகளும் வாசகர்களுக்கு வழங்கியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷண் போன்ற உயரிய விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.
அம்ரிதாவின் வாழ்க்கையில் இரண்டு மனிதர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். சாகிர் லுதியான்வி என்ற கவிஞர், மற்றொருவர் இம்ரோஸ் என்ற ஓவியர்.
அம்ரிதா-சாகிர் லுதியான்வி இவர்களுக்கிடையே கவிதை வாசிப்பு ஒன்றில் நிகழ்ந்த சந்திப்பு காதலாக மலர்ந்தது. அக்காதல் கடிதப் போக்குவரத்தில்  தொடர்ந்தது. தனது கணவர் பிரீதம் சிங்கிடம் ஏற்படட மனக்கசப்பு அனைத்தும் சாகிர் மூலமாக அம்ரிதாவின் மனம் பெரும் ஆறுதல் பெற்றுக்கொண்டது. சாகிரை “என் கடவுள்”, “என் தேவதை”, “என் கவிஞன்” என்று தனது சுய சரிதையில் குறிப்பிடுகிறார். ஆனால், இன்னொரு பெண்ணின் வருகையால் சாகிர் அம்ரிதாவை விட்டு விலகத் தொடங்க, அம்ரிதா மிகவும் உடைந்து போகத் தொடங்கினார். அப்போது அம்ரிதாவின் நெருங்கிய நண்பரும் ஓவியருமான இம்ரோஸ் அக்கறையோடு அம்ரிதாவை கவனித்துக் கொண்டார்.
அம்ரிதா மிகுந்த மன உளைச்சளோடும், காதல் தோல்வி போன்ற குழப்பங்களில் சிக்கியிருந்த, சமயத்தில் இம்ரோஸ் அம்ரிதாவை காதலிக்கத் துவங்கினார். ஆனால் அம்ரிதாவோ சாகிரை நினைத்தபடி காலம் கழித்து வந்தார். பிறகு ஒரு நிலையில் இம்ரோஸுடன் அமைதியாக வாழத் துவங்கினார்.
ஆனாலும் சில சமயங்களில் இம்ரோஸின் ஸ்கூட்டரில் ஏறிப் போகும் போது சாகிரின் பெயரை தனது விரல்களின் நுனிகளால் இம்ரோஸின் முதுகில் எழுதுவாராம். அது தெரிந்தும் இம்ரோஸ் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்து விடுவாராம். சாகித்ய அகாடமி பரிசு அறிவிப்பைக் கேட்டவுடன் அம்ரிதா தொலைபேசியை கீழே போட்டு விட்டு ”அந்தக் கவிதையை நான் சாகிருக்காக எழுதினேன், இந்தப் பரிசுக்காக அல்ல” என்று கூறி அழுதாராம்.
சாகிர் மீது எத்தனை காதல் இருந்தபோதும், ”இம்ரோஸ் அம்ரிதா: காதல் கதை” என்ற நூலில் இம்ரோஸ் மீதான தனது அபிமானம், காதல் அனைத்தையும் தெளிவாக கூறியிருக்கிறார் அம்ரிதா. நாற்பது வருடங்கள் இம்ரோஸ்-அம்ரிதா திருமணம் இல்லாமல், ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் அம்ரிதா கழிவறையில் வழுக்கி விழுந்து அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளானார்.
அப்போதும் அவரைப் பார்க்க எந்த இலக்கியவாதிகளுமே வரவில்லை என இம்ரோஸ் தெரிவிக்கிறார். அதன்பின் ஏற்பட்டஉடல் நலக்குறைவால் அம்ரிதா தனது 86வது வயதில் மரணம் அடைந்தார். அவரின் இறப்புக்குப்பின் இம்ரோஸ் ஓவியம் வரைவதை நிறுத்தி விட்டார். அவர் அம்ரிதாவை வரைந்த ஓவியங்கள் எண்ணற்றவை.
மிகவும் ஆர்வமூட்டக்கூடிய இன்னொரு தகவல், சாகிர் லுத்யான்வி இறந்து 26 வருடங்கள் கழித்து அம்ரிதா மரணமடைந்தார். ஆனால் சாகிர் மரணித்த அதே தேதியில், அக்டோபர் 31. வாழ்விலும், சாவிலும் ஆன்மாக்களை இணைக்கும் வழியை காதல் ஒன்றே அறியும்.

கீழே வரும் “நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்” (I will meet you yet again) என்ற கவிதை அம்ரிதாவின் கடைசிக்காலங்களில் இம்ரோஸுக்காக எழுதப்பட்டது.
அடுத்த கவிதையான ”கன்னி” (The Virgin) சாகிர் லுத்யானிவிக்காக எழுதப்பட்டது எனச் சொல்பவர்கள் உண்டு.

I will meet you yet again

I will meet you yet again
How and where? I know not.
Perhaps I will become a
figment of your imagination
and maybe, spreading myself
in a mysterious line
on your canvas,
I will keep gazing at you.


Perhaps I will become a ray
of sunshine, to be
embraced by your colours.
I will paint myself on your canvas
I know not how and where –
but I will meet you for sure.


Maybe I will turn into a spring,
and rub the foaming
drops of water on your body,
and rest my coolness on
your burning chest.
I know nothing else
but that this life
will walk along with me.
When the body perishes,
all perishes;
but the threads of memory
are woven with enduring specks.
I will pick these particles,
weave the threads,
and I will meet you yet again.
-Amrita Pritam. (Translated by Nirupama Dutt and published in The Little Magazine2005)


நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்


நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்    
எங்கு? எவ்வாறு?  நானறியேன்
அநேகமாக உனது கற்பனையின் உருவம் ஆவேன்
மேலும் ஒருவேளை, உனது கித்தானின் மர்மமான  
வரைகோட்டில் என்னைப் பரவச்செய்து
உன்னை வெறித்துப் பார்த்தவாறிருப்பேன்     


உனது வண்ணங்கள் எனைத் தழுவுவதற்காக
அநேகமாக சூரிய ஒளியின் கீற்றாவேன் (கதிராவேன்)
உனது கித்தானில் எனை ஓவியமாகத் தீட்டுவேன்
எங்கு? எப்போது? நானறியேன்
ஆனால் நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்



அநேகமாக ஒரு நீரூற்றாகத் திரும்ப வருவேன்
நுரைக்கும் நீர்த்துளிகளால் உன்னுடலை சுத்தம் செய்யவும்
சூடான உன் மார்பின் மீது என் குளுமை இளைப்பாறவும்
எனக்கு வேறெதுவும் தெரியாது
ஆனால் இவ்வாழ்க்கை என் துணையாக வரும்


உடல் அழியும் போது
அனைத்தும் அழிந்து விடும்
ஆனால் நினைவின் இழைகள்  
நெய்யப்பட்டுள்ளன பொறுமையின் (சகிப்பின்) துகள்களால்  
இந்தத் துகள்களைத் தேர்ந்தேடுப்பேன்   
இழைகளை நெசவு செய்வேன்
மேலும் நான் உன்னை மீண்டும் சந்திப்பேன்    


~அம்ரிதா பிரீதம் (மொழியாக்கம்: யோகி)                        


The Virgin


When I moved into your bed
I was not alone-there were two of us
A married woman and a virgin
To sleep with you
I had to offer the virgin in me
I did so
This slaughter is permissible in law
Not the indignity of it
And I bore the onslaught of the insult
The next morning I looked at my blood stained hands
I washed my hands
But the moment I stood before the mirror
I found her standing there
The one whom I thought I had slaughtered last night
Oh God! Was it too dark in your bed
I had to kill one and I killed the other?


-Amrita Pritam.  (Translated from the original Punjabi by Kartar Singh Duggal)

கன்னி

உனது படுக்கைக்கு முன்னேறிய போது
நான் தனியாக இல்லை –
அங்கு நாங்கள் இருவர் இருந்தோம்
திருமணமான பெண் மற்றும் கன்னி
உன்னுடன் துயில
என்னுள்ளிருந்த கன்னியை நான் பலி கொடுக்க வேண்டியிருந்தது
நான் அவ்வாறே செய்தேன்
சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இப்படுகொலையால்
நேரும் அவமானத்துக்கு அனுமதியில்லாததால்  
பழியின் தாக்குதலைச் சுமந்தேன்
மறுநாள் காலை, ரத்தக்கறை படிந்த எனது கைகளைக் கண்டேன்
அவற்றைக் கழுவினேன்
ஆனால் கண்ணாடி முன் நான் நின்ற அக்கணம்
நேற்றிரவு யாரைக் கொலை செய்தேன் என எண்ணினேனோ
அவள் அங்கு நிற்பதைக் கண்டேன்
அட கடவுளே ! உனது படுக்கையில் காரிருளாகவா இருந்தது  
ஒருவரைக் கொல்ல வேண்டிய நான்
மற்றவரைக் கொன்றேன் ?

~அம்ரிதா பிரீதம் (மொழியாக்கம்: யோகி)

நன்றி: ஆக்காட்டி
குறிப்பு: கவிதையை மொழிபெயர்கவும் , மொழி பெயர்த்ததை சரி பார்த்து திருத்தி கொடுத்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான  தோழர் பாம்பாட்டி சித்தனுக்கு நன்றி.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக