உங்களால் ஒருநாள் முழுக்க மின்சாரம் மற்றும் மின்னியல் சாதனங்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? இப்பரீட்சையோடு இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஒரு காட்டில், உங்களை விட்டுவிட்டால், “இயற்கையை ரசித்துவிட்டு வருவேன்” என்று உங்களால் உறுதியாகக் கிளம்பிப்போக முடியுமா?
அப்படி இருக்கத்தான் முடியுமா? அதை முயற்சி செய்துதான் பார்த்துவிடலாமே? என்று புறப்பட்ட ஒரு பயணத்துக்குதான் இந்த கட்டுரையில் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன்.
தமிழ்நாட்டிலிருந்து மூணாறு – தேக்கடி செல்வதற்குச் சாலை மார்க்கமாக இருவழிகள் இருக்கின்றன. பொதுவாகப் பயணிகள் மதுரையிலிருந்து தேனி – கம்பம் – கூடலூர் – தேக்கடி வந்து மூணாறு இப்படிதான் திட்டமிடுவார்கள். இரண்டாம் வழி, தேனி – போடிநாயக்கனூர் – போடிமேடு வழியாக மூணார் – தேக்கடி.
தேக்கடி என்றாலே கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்கள் பங்கு போட்டுக்கொள்ளும் எல்லைப் பகுதியாகவும், கேரளா மாநிலத்தின் சுற்றுலாத்துறை, வனத்துறை இரண்டுமே இணைந்து செயலாற்றும் படகுத்துறை, படகு பயணம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அதோடு பெரியாறு புலிகள் சரணாலயம். யானைகள், மான்கள், மிளா, காட்டு மாடுகள்,செந்நாய்கள் உள்ளிட்ட ஆபத்தான வன விலங்குகளும் பலவிதமான பறவைகளும் இந்த தேக்கடி வனத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் இணையத்தில், தேக்கடி என்று தேடினாலே நம் கண்முன் காட்சிகளாகவே திரையில் வந்துவிடுகின்றன. அக்காட்சிகள் கொக்கி போட்டு நம்மை தேக்கடிக்கே இழுத்து செல்லவும் செய்கிறது.
காடு, மலைகள், நீர்ச்சுனைகள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்தது தேக்கடி. கேரளா வனத்துறையினர் ஏற்பாடு செய்திருக்கும் இரண்டடுக்கு மோட்டார் படகில் இயற்கையை ரசித்தபடி, அங்கே நீர் குடிக்க வரும் வன விலங்குகளை நாம் பார்க்கலாம், எப்போதும் காணக் கிடைக்கக்கூடிய விலங்காக யானையும் மானும் இருக்கின்றன. நாரை, காட்டு வாத்து உள்ளிட்ட பறவைகள் இளைப்பாறுவதைப் பார்க்கவும் மிகவும் அழகாகவே இருக்கிறது. புலி, காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகள் கால நேர நிர்ணயம் இல்லாமல் நமது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே தரிசனம் கொடுக்கின்றன.
ஆனால், படகு போக்குவரத்துக்குக் கால அட்டவணை இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு படகு கிளம்புகிறது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரையில் படகுச்சவாரி போகலாம். சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கக் கண்காணிப்பாளர்களால் கவனமாகப் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
எனது நண்பர் பசுமை ஷாகுல் உதவியோடு வனத்தில் தங்குவதற்கு வனத்துறையில் அனுமதி வாங்கியிருந்தேன். படகுச் சவாரியின் போது நான் உட்பட வனத்தில் தங்குவதற்கு அனுமதி பெற்றிருந்த பயணிகள் சிலரை ஏடப்பாளையம் அரண்மனை அருகே அதிகாரிகள் இறக்கிவிட்டனர். அதில் நான் அங்கிருந்து இன்னும் சில கிலோமீட்டர் தொலைவில் வனத்தின் உள்ளே கட்டப்பட்டிருக்கும் ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரத்தில் தங்குவதற்காக அனுமதி பெற்றிருந்தேன். அதற்கு நடந்துதான் செல்ல வேண்டும். பாதுகாப்புக்குத் துப்பாக்கி ஏந்திய பயிற்சிபெற்ற ஒரு வன அதிகாரியும், ஒரு நாளுக்குச் சமையல் செய்து தருவதற்கு வனத்துறையைச் சேர்ந்த ஒருவரும், மேலும் ஒரு வனத்துறையைச் சேர்ந்தவரும் இந்தப் பயணத்தில் உடன் வந்தனர். மலையாளிகளான அவர்கள் தமிழ் பேசக் கூடியவர்களாக இருந்தது எனக்குப் பேருதவியாக இருந்தது.
ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தை பகிர்வதற்கு முன் ஏடப்பாளையம் அரண்மனை குறித்துச் சொல்லிவிடுகிறேன். இந்த அரண்மனை 1927ஆம் ஆண்டு சிறுவயதிலிருந்த பலராம வர்மா காலத்தில் சேது லக்ஷ்மி பாயின் ஆட்சியின்போது கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனைக்கு கோடைக்கால அரண்மனை என்ற பெயரும் உண்டு.
ஒவ்வொரு வருடமும், குறிப்பாகக் கோடைக் காலத்தில் அரசு குடும்பத்தினர் இளைப்பாற இந்த ஏரி அரண்மனைக்கு வருகை தருவார்களாம். அதோடு அவர்களின் பிரத்தியேக விருந்தினர்களுக்கு இயற்கையுடன் கூடிய விருந்து படைக்கவும் இந்த இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தற்போது அந்த அரண்மனை சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்குச் சொகுசு மாளிகையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
நான் அரண்மனையின் உட்புறம் சென்று பார்த்தேன். மன்னர் காலத்துப் பழைய தளவாடப் பொருள்கள் சில இருக்கின்றன. அதையும் தாண்டி அங்கே மாட்டப்பட்டிருக்கும் மன்னர் காலத்துப் பழைய புகைப்படங்கள் இன்னும் கூடுதல் வரலாற்றை நம்மோடு பேசுகிறது. அலங்கரித்த யானைகளின் படைசூழ மன்னர் பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார்.
அந்த அரண்மனையிலிருந்து கால்நடையாக கிட்டதட்ட இரண்டு கிலோமீட்டர் நடந்துசென்றால் காட்டின் மையப்பகுதியை அடைந்துவிடலாம். அங்குதான் ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரம் இருக்கிறது. 1970களில் கட்டப்பட்ட கோபுரம் என்றாலும் தேவைக்கருதி பழுதான பாகங்களைச் சரி செய்து இன்னும் கோபுரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கக் கோபுரத்தைச் சுற்றி அகழி வெட்டப்பட்டுள்ளது.
நாங்கள் கோபுரத்தை அடைந்த நேரம் மதியம் கடந்திருந்தது. படியேறிப் போய் நான் கோபுரத்தின் மேலிருந்து காட்டைப் பார்த்தேன். சூடான தேநீர் தயாராகிக் கொண்டிருந்த வேளை, தூரத்தில் ஒரு புறம் மான்கள் கூட்டத்தையும், மறுபுறம் காட்டு மாடுகள் கூட்டத்தையும் காண முடிந்தது. அறையில் மெத்தையுடன் கூடிய ஒரு கட்டில், சின்ன தேநீர் மேஜை ஒன்றும் இருந்தது. சுவரில் கண்காணிப்பு கோபுரத்தின் பழைய புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அறைக்கு வெளியில் இரண்டு நாற்காளிகள்; தேனிக் கூட்டம் ஒன்று கதவருகில் அடைக்கலம் கொண்டிருந்தது.
மின் வசதி இல்லை. கீழ்த்தளத்தில் கிணறு வெட்டி குழாய் வழியாக இணைப்பு கொடுத்து தண்ணீர் பயன்பாட்டுக்கு வசதி செய்திருந்தார்கள். குளிப்பதற்கும் கழிப்பறையில் பயன்படுத்திக்கொள்ளவும் அந்த தண்ணீர்.
மெல்ல இருட்டத் தொடங்கியதும் கலைப்பு மிகுதியாக இருந்தாலும், இன்று என்னென்ன வனவிலங்குகளை வனம் கண்முன் கொண்டு வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாகிறது. கண்காணிப்பு கோபுரத்திலிருந்து வனவிலங்குகளைப் பார்ப்பதற்கு வசதியாக ‘கை லாம்பு’ (டார்ச் லைட்) ஒன்றை வனத்துறையினர் கொடுத்திருந்தனர். வனவிலங்குகளை காண்பதற்கு வசதியாக இருந்ததோ இல்லையோ, இரவில் என் பயன்பாட்டுக்கு அந்த கை லாம்பு உற்ற தோழனாகவே இருந்தது.
சுவையான கோழி கறி சமையல், கூடவே எனக்குப் பிடித்த தேநீருமாக என் ஒருவளுக்கான விருந்து தடபுடலாகவே இருந்தது. வனத்துறை அதிகாரிகளிடம் மலேசிய வன அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கும்போது, அதிகாரி சொன்னார், “புலி மிக அருகில் எங்கேயோ இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. கோபுரத்தை விட்டு தனியே எங்களுக்கு தெரியாமல் போக வேண்டாம்.” அவர்களின் துணையில்லாமல் கண்காணிப்பு கோபுரத்தை தாண்டவே கூடாது என்று அங்கு வருவதற்கு முன்பே என்னை எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவைக்கு ஒரு மெழுகுவர்த்தி கொடுத்திருந்தனர். கூடவே ஒரு கொசு வர்த்தியும். மெழுகுவர்த்தியின் உதவியோடு கொண்டு வந்திருந்த நாவலை சிறிது நேரம் வாசித்தேன். மனம் வனத்தை நோக்கியே இருந்தது. கை தொலைப்பேசி, மடிக் கணினி, தொலைக்காட்சி, ஒளி – ஒலி மாசு எதுவும் இல்லாத ஓர் அற்புதமான இரவு. கண்காணிப்பு கோபுரத்திற்கு நேர் எதிரே நெட்டையான ஒரு மரத்தில் இரட்டைவால் குருவி ஒன்று விட்டு விட்டு ஏதோ பாடிக்கொண்டிருந்தது. உடலும் மனமும் கனமிழந்து காற்றைப்போல லேசாகியிருந்தது. மான் மற்றும் காட்டுமாடுகள் கூட்டத்தைத் தவிர வேறு எந்த வனவிலங்கையும் என்னால் அன்று காண முடியவில்லை.
மறுநாள் காலையில் வனத்திற்குள் செல்வதற்கான திட்டத்தை அதிகாரி முன்கூட்டியே என்னிடம் கலந்தாலோசித்திருந்தார். அதன்படி விடியற்காலையில் (கடுங்குளிர்) எழுந்து வனவாசியாக வலம் வருவதற்குத் தயாரானேன். மொத்தமான ஒரு ஜீன்ஸ் காற்சட்டையும், இரண்டு முழுக் கை சட்டையும் அணிந்துகொண்டேன். கைக்கு கையுறை, முழங்கால்வரை காலுறைபோல ஒரு காக்கி துணியைக் கொடுத்து அதை இறுக்கமாகக் காலோடு சேர்த்து கட்டிக்கொள்ளச் சொன்னார்கள்.
துப்பாக்கிய ஏந்திய அதிகாரி முன்னே செல்ல, நான் அவர் பின்னாலும் எனக்குப் பின்னே மேலும் இருவரும் வனத்திற்குள் சென்றோம். நீர்நிலையை ஒட்டியே எங்களின் பயணம் இருந்தது. கிட்டதட்ட 3இலிருந்து 4 மணி நேரப் பயணம் அது. இரண்டடி எடுத்து வைத்தால் குறைந்தது 5 அட்டையாவது பிடுங்கிப் போட வேண்டிருந்தது. எதற்காக வனத்துறையினர் காக்கி துணியைக் கொடுத்தார்கள் என்பது அப்போதுதான் விளங்கியது. அட்டைகளைப் பிடுங்கிப் போடுவதில் என் கவனம் இருந்தாலும், இந்தப் பயணத்திலிருந்து பின்வாங்க எனக்குக் கொஞ்சம்கூட எண்ணம் வரவே இல்லை.
சுமார் ஒரு மணிநேரத்தில் பூர்வக்குடிகள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை வன அதிகாரி காண்பித்தார். அவர்களிடத்தில் மலிவான விலையில் மீன் வாங்கிக்கொள்ளலாம். அதை வனத்துறையை சேர்ந்த சமையல் செய்யும் சகோதரர் சமைத்துக் கொடுக்க தயாராக இருந்தார். மிக அருகில் இருவாச்சி கத்தும் சத்தம் கேட்டது, சாம்பல் நிற இந்தியன் இருவாச்சியைக் கண்டோம். தெளிவாக இல்லை என்றாலும் ஒரு புகைப்படத்தை எடுக்க முடிந்தது. மேலும், சில பெயர் தெரியாத பறவைகள், காட்டு மாட்டினுடைய மண்டை ஓடு என்று புதியதாக சில காட்சிகளையும் அந்த வனம் எனக்குக் காட்டி கொடுத்தது.
அதிகாரிகள் நிர்ணயித்திருந்த நேரம் முடியவே நாங்கள் திரும்பவும் கண்காணிப்பு கோபுரத்திற்குச் சென்றோம். ஆடை முழுக்க அட்டை ஊர்ந்து கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் உடல் கூசத்தான் செய்கிறது. அனைத்தையும் பிடுங்கி எறிந்துவிட்டு, நான் குளித்து தயாரானேன். பூர்வக்குடிகளிடம் வாங்கிய மீனைக் குழம்பும் பொறித்தும் இருந்தனர். ருசி என்றால் இதுவரை சாப்பிடாத ருசி. மதியம் 2 மணியளவில் பால் இல்லாத டீ அருந்திவிட்டு, மனமே இல்லாமல் நான் அங்கிருந்து புறப்பட்டேன்.
என்னுடைய வன அனுபவத்தில் ஒரு அத்தியாயம் நிச்சயமாக இந்த தேக்கடிக்கு உண்டு.
நன்றி : வாவ் தமிழ் https://wowtam.com/ta_in/3-a-day-in-thekkady-forest/15774/ (4/1/2023)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக