செவ்வாய், 17 ஜனவரி, 2023

மியன்மாரில் பொங்கல் விழா 2023

 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும்                       உடையது அரண், என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவர் எழுதியிருக்கும் 1330 திருக்குறள்களில் எனக்கு இந்தக் குறளின் மீது மட்டும் ரொம்பவே மயக்கமும் காதலும் உண்டு. தெளிந்த நீரும், பரந்த நிலமும்,உயர்ந்த மலையும் அடந்த காடும் இயற்கை அரண்களாகும் என்பது இக்குறளின் அர்த்தமாகும். இயற்கைக்கு நன்றி சொல்ல நாம் வைக்கும் பொங்கல் பண்டிகைக்கு இக்குறள் பொருத்தமான ஒன்று என்பது என்னுடைய நீண்ட நாளைய நினைப்பு. 

முதல் முறையாக மியன்மார் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை குறித்தான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அங்கே பிறந்து வளர்ந்தவரான தோழர் ரேவதி என்னிடம்  பகிர்ந்துக்கொண்டார். இடதுசாரி சிந்தனைக் கொண்டவருமான அவர்,  மூன்று நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவினை மிகத் தெளிவாக புரிந்துக்கொள்ளும் பொருட்டு எனக்கு விளக்கம் கொடுத்ததோடு, மியன்மாரில் சிறுபான்மை இனமான மியன்மார் தமிழர்களோடு இணைய காணொளிவாயிலாக உரையாடுவதற்கு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.  

மியன்மார் பாகோ மாகாணத்தில் ‘நாக காக்கும்’ எனும் கிராமத்தில் சுமார் 200 தமிழ்நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பலர் நன்றாக தமிழ்பேசக்கூடியவர்களாகவும்  பொங்கல், தீபாவளி, தைப்பூசம் உள்ளிட்ட பெருவிழாக்களை தவறாமல் கொண்டாடக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

கருமாரியம்மன் கோயில், பொங்கல் பானை,  ஊர் சாப்பட்டுக்கு மிளகாய் அரைக்கும் ஆண்

அந்தக் கிராமத்திற்கென்றே ஊர் கோயிலாக கருமாரியம்மன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயில்தான் எல்லாரும் ஒன்றுகூடும் இடமாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட கிராமம் விவசாயக் கிராமமாக இருப்பதால் கிட்டதட்ட பொங்கல் அன்று எல்லா வீடுகளிலும், வாசலில் வண்ணக் கோலம் போட்டு நாளை தொடங்குகிறார்கள். கோயிலில் மட்டும் பொங்கல் வைப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் வைக்கிறார்கள். அலுமனிய சட்டியில் கோலம் வரைந்து, அதில் மஞ்சல், மாவிலைக் கட்டி பொங்கல் வைக்கிறார்கள்.

ஆண்களும் பெண்களும் மியன்மார் மக்கள் உடுத்தும் கைலி சட்டையையே பெருவாரியாக உடுத்துகின்றனர். பர்மா கலாச்சாரப்படி முகத்தில் தனகா தடவிக்கொள்ள ஒருவரும் மறக்கவில்லை. புடவை அல்லது வேஷ்டி சட்டையையும் யாரும் அணியவில்லை என்றாலும் பெண்கள் பொட்டு வைத்து சிலர் பூவும் வைத்திருந்தனர்.   

எலவக்கா,                         தனகா தடவிய சிறுவர்கள்,          தோழர் ரேவதி 

நான் கவனித்த வரையில் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் அன்றுதான் கிராமமே மிக மிக கோலாகலமாக இருக்கிறது. விவசாயத் தோழனான காளை மாட்டை அவர்கள் மிக ஜோராகவே அலங்கரித்து கோயிலுக்கு அணிவகுத்து கொண்டு வருகிறார்கள். காளைகளை அடக்கும் விளையாட்டுகளை மியன்மார் அரசு தடை செய்திருப்பதால் அதை அவர்கள் செய்வதில்லை. என்றாலும் காளைகளின் கொம்புகளில், அல்லது கழுத்தில் மாலை அணிவித்து திடலில் ஓடவிடுவார்களாம். அதை போட்டியாக அல்லாமல் சாமர்த்தியமாக கிளட்டிவிடும் வீரர்களுக்கு பரிசு பொருள்கள் கிடைக்குமாம்.  மாடுகளை கொண்டிருக்கும் விவசாயிகளை உற்சாகப்படுத்தவே இம்மாதிரியான விளையாட்டுகளை கிராமத்திற்குள்ளேயே செய்வதாகவும் நிச்சயமாக அரசு ஆணைக்கு நாங்களெல்லாம் கட்டுப் படுகிறோம் என்றும் ரேவதி தெரிவித்தார்.

முன்னதாக மாடுகளை திடலுக்கு கூட்டி வரும் வீரர்கள் கோயிலில் பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் வைக்கும் ஆண்கள்தான் மாடுகளை திடலில் இறக்குவதற்கு அனுமதிக்கப்படுவதோடு,   மாடு கழுத்தில் இருக்கும் மாலையை கிளட்டும் விளையாட்டுகளில் பங்குபெறவும்   முடியும்.  விவசாய மாடுகள் என்பதால் அது ஒன்றும் ஆபத்து  இல்லை என்றும் ரேவதி கூறினார். காணும் பொங்களுக்கு பெண்கள் பொங்கல் வைப்பது போல,  ஒரே வரிசையில் ஆண்களும் பொங்கல் வைப்பது பார்க்க அழகாகவே இருக்கிறது.

காணும் பொங்கல் அன்று திருமணம் ஆகாத இளம் பெண்கள் பொங்கல் வைக்கிறார்கள். குளவி சத்தம் போட்டு, கும்மி பாட்டு பாடி ரொம்பவும் கோலாகலமாக இருக்கிறது அக்காட்சி. அதையும் தாண்டி இந்த மூன்றாம் நாளில் கிராம மக்கள் கூடி ஊருக்கு அன்னதானம் போடுவார்கள். அன்றைய நாளில் சாம்பார், பொறியல் என்று சைவ சாப்பாட்டை ஊர் மக்களே ஆக்கி ஊருக்கு போடுவார்கள். சாமிக்கு உணவு படைக்கும்போது குளவியிட்டு, உருமி- மேளம் வாசித்து  பெரிய விஷேசமாகவே இருக்கிறது மூன்றால் நாள் பொங்கல். 

பரமக்குடியை பூர்வீகமாக கொண்ட எலவக்காவிடம் பேசும்போது தமக்கு 67 வயது என்றும் அவர் பர்மாவில் பிறந்தவர் என்றும் ஒருமுறைகூட தமிழ்நாட்டிற்கு போகவில்லை என்றும் கூறினார். பிறந்ததிலிருந்தே பர்மாவில் வசிக்கும் அவர் தமிழ் கலாச்சாரத்தை மறக்கவில்லை என்று கூறியதோடு வழிவழியாக பாடப்பட்டு வரும் கும்மி பாடலை பாடியும் காட்டினார். இப்படி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மூத்த பெண் கருப்பி, 24 வயது அஞ்சலை ஆகியோரிடம் சில நிமிடங்கள் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அனைவரும் தமிழ்மொழியை மிக அழகாகவே பேசுகிறார்கள் என்றாலும், பர்மா மொழியையே அவர்கள் தொடர்பு மொழியாக கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

                                                                  

எங்களின் இணைய காணொளி உரையாடலை முடிக்கும்போது ரேவதி சொன்னார், சில தினங்களுக்கு முன்பு மியன்மார் அரசாங்கம் எங்களிடம் இப்படியான ஒரு கேள்வியை முன்வைத்தது. “உங்களுக்கு உங்கள் பூர்வீக நாட்டுக்கே போக விருப்பம் இருந்தால் போய்விடலாம்.  ஊருக்கு அனுப்பிவிட நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்” என்று. ஊர் மக்கள் யாரும் அதற்கு உடன்படவில்லை என்று தோழர் ரேவதி சொல்லும்போது பிறந்த நாட்டின்மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பும் விசுவாசமும் மலேசியாவில் வசிக்கும் என்னால் உணர முடியாமல் இல்லை. தவிர இரண்டு மூன்று தலைமுறைகளாக வாழ்ந்ததில் அவர்களில் சிலர் வீடு நிலம் என்று கொஞ்சமாக சொத்தும் சேர்ந்த்து வைத்திருக்கின்றனர்.

ஊர் விருந்து
“நம்மவர்கள் புலம் பெயர்ந்து வேறுவேறு நாடுகளில் வாழலாம். ஆனால், போராட்டம் ஒன்றுதான்; மரபு ஒன்றுதான்; வாழ்க்கை ஒன்றுதான் இல்லையா” என்றேன். ஊர் பெண்கள் குளவையிட ஆண்கள் பொங்கலோ பொங்கல் என்று கத்தத் தொடங்கினர்.    

கட்டுரை : யோகி                                                                                                                                                                                                           
தகவல் : தோழர் ரேவதி (மியன்மார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக