பாலியில் 'லூவாக் காப்பி'
ஒன்றல்ல இரண்டல்ல, சுமார் 14 சுவைகளின் இந்தக் காப்பி கிடைக்கிறது. பாலிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்தக் காப்பியை அருந்துகிறார்களோ இல்லையோ நிச்சயமாக இந்தக் காப்பி தயாரிக்கும் இடத்திற்கு வராமல் அவர்களின் பயணம் முழுமையடையாது. காப்பி தயாரிப்பை சொல்வதற்கு முன் இந்தக் காப்பியில் கிடைக்கும் நன்மைகளை பார்த்துவிடலாம். பின் அதன் இருண்ட பக்கத்தையும் காணலாம்.
லுவாக் காபியின் 3 ஆரோக்கிய நன்மைகள்
மற்ற
காப்பிகளோடு ஒப்பிடும் போது, இந்தக் காப்பி மூன்று முக்கிய அம்சங்களை
அடிப்படை கொண்டதாக அடையாளப்படுத்தப்படுகிறது. மிக முக்கியமாக இந்தக் காப்பியின் மிக
நீண்ட உற்பத்தி செயல்முறையின் விளைவாக மற்ற
காப்பிகளிலிருந்து வேறுபட்ட குணங்கள் கொண்டுள்ளன. காப்பியின் உற்பத்திக்கு
முக்கியத் தேவை புனுகு பூனையாகும். அதை இந்தோனேசிய மொழியில் kucing luwak என்றும்
மலேசியர்கள் மூசாங் பூனை என்றும் சொல்கிறோம். ஆங்கிலத்தில் Asian palm civet என்றும் தமிழர்கள் புனுகு பூனை என்றும் சொல்கிறார்கள்.
லுவாக்
காப்பி குறைந்த அளவு அமிலத்தன்மை மட்டுமே கொண்டிருக்கிறது.
இதனால் வயிற்றில் அமில பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்தக் காப்பி எப்பிரச்னையையும்
தருவதில்லை. அதோடு இந்தக் காப்பி ஒற்றைத் தலைவலியையும் குறைக்குமாம்.
லுவாக்
காப்பி சீரான செரிமானம், உடலில் புற்றுநோய் அல்லது புற்றுநோயைத் தூண்டக்கூடிய அமிலத்தையும் குறைக்க வழிசெய்கிறதாம்.
இதனால் லூவாக் காப்பியை புற்றுநோய் தடுப்பு காரணிகளில் ஒன்றாகவும் சொல்கிறார்கள்.
காப்பி தோட்டம்
இந்தக் காப்பி வெளிப்படையான முறையில்தான் தயாரிக்கப்படுகிறது. எந்த ஒளிவு மறையும் அதன் தயாரிப்பில் இல்லை. மொத்தம் 14 வகையான ப்ளேவரில் தயாரிக்கும் இந்தக் காப்பியை அங்கு வரும் நமக்கு அருந்த சிறிய கிண்ணங்களில் தருகிறார்கள். பின் நமக்கு பிடிக்கும் சுவையை நாம் பெரிய பாக்கெட்டுகளில் விலைகொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.
100% ஆர்கானிக் என்றால் லூவாக் காப்பிதான் என்று சொல்லும் அளவுக்கு இந்தக் காப்பி பிரசித்திபெற்றுவிட்டது. மேலும் உலகிலேயே விலை உயர்ந்த காப்பியும் இதுதான். காப்பித் தோட்டக்காரர்கள் காப்பி மரத்தோடு புனுகு பூனையையும் சேர்த்தே பராமரிக்கிறார்கள்.
புனுகு பூனைக்கு இரவில்தான் கண் தெரியுமாம். அதனால், பகல் முழுக்க தூங்கும் அப்பூனையை கூண்டில் அடைத்து வைத்திருந்து இரவில் இரைக்காக திறந்து விடுகிறார்கள். பூனை தேர்ந்தெடுத்து உண்ணும் காப்பி பழங்கள், செரிமானம் ஆகி காப்பிக் கொட்டைகள் அது கழிக்கும் கழிவுகளில் வெளியேறும். அதை சேகரித்து பல கட்டமாக இயற்கை முறையில் கழுவப்பட்டு வெய்யிலில் நன்றாக காய வைக்கிறார்கள்.
பின், விரகடுப்பில் வறுத்து, கல்உரலில் இடித்து காப்பி கொட்டைகளை பொடியாக்கப்படுகிறது. உலகத்தரமான காப்பி தூள் விற்பனைக்கு இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது.
லுவாக் காப்பி தயாரிப்பின் இருண்ட பக்கம்
இந்தோனேசிய சுற்றுலாத்துறை அதிக விளம்பரம் செய்யும் இந்தக் காப்பியினால், சுற்றுப்பயணிகளும் அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர். அதனால் வணிக ரீதியாக அதன் தேவையும், காப்பி பண்ணைகளுமே அதிகரித்திருக்கிறது.
இதன் காரணமாக புனுகு பூனைகள் அதிகமாக சிறை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. சிறிய கூண்டில் அவை பகல் முழுதும் அடைக்கப்பட்டிருப்பதை எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு காப்பி எக்ஸிகியூடிவ் அதிகாரியான tony wild குரல் எழுப்பினார்.
TRAFFIC Southeast Asia அமைப்பைச் சேர்ந்த கிறிஸ் ஸ்டிப்பெர்ட் கூற்றுப்படி, புனுகு பூனைகள் காடுகளிலிருந்து பிரிக்கப்பட்டு மிக பயங்கரமான சூழலுக்கு தள்ளப்படுவதாகவும், அவை தன் இனங்களோடு ஒன்றாக இருப்பதற்கு போராடுவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், அவை மிகச் சிறிய கூண்டுகளில் அடைக்கபடுவதுடன் குறைந்த அளவிலான உணவே பூனைகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இவ்வகை விலங்குகளின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாலும், விலங்குகள் தொடர்பான கட்டுப்பாடுகள் மீறப்படுவதாலும், விலங்குகளுக்கு மரணங்களும் அதிகமாகவே நிகழ்கிறது. ஆனால், மக்களுக்கு இது குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை என கிறீஸ் கூறியிருக்கிறார்.
அதே வேளையில் மனிதர்களின் நாவின் ருசிக்காக பல்லாயிரக்கணக்கான புனுகு பூனைகள் கூட்டில் அடைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதை மக்கள் தெரிந்துகொண்டால் அவர்கள் இந்தக் காப்பியின் மோகத்தை நிறுத்தக்கூடும் என்றும் அவர் மக்கள் அவையில் தெரிவித்தார்.
ஆனால், உண்மையில் நிலைமை மேலும் மோசமாகிதான் இருக்கிறது, PETA மற்றும் BBC போன்ற பல நிறுவனங்கள் , லூவாக் காப்பி விற்பனை நிலையங்கள் மற்றும் பண்ணைகள் மீது விசாரணை நடத்தியதில், சுகாதாரமற்ற நிலை மற்றும் கூண்டில் அடைக்கப்பட்ட பூனைகள் தீரா துயரத்தில் இருப்பதையும் அம்பலப்படுத்தினர்.
லுவாக் காப்பியை மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்துவதற்கு பொறுப்பான காப்பி நிர்வாகியான tony wild, அக்காப்பி தயாரிப்புக்கு எதிராக பரப்புரை செய்யும் நபராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
என்னுடைய நண்பர் பசுமை ஷாகுல் 14 சுவையையும் ருசி பார்த்தார். ஆனாலும் எந்தக் காப்பி பொட்டலத்தையும் வாங்கவில்லை. நான் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அந்தக் கருத்த பூனையையே பார்த்துகொண்டிருந்தேன்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக