எங்களின்
சுற்றுலா வழிகாட்டியும் மோட்டார் படகோட்டியுமான தேவா நியமித்த ஹேப்பி என்ற
படகோட்டி எங்களுக்காக படகில் காத்துக்கொண்டிருந்தார். நாங்கள்
செல்லக்கூடிய லாங் தெஙா தீவுக்கு படகு புறப்பட்டது. சுமார்
45 நிமிடங்கள் இருக்கும் நாங்கள் அந்த அழகியத் தீவில் தரை
இறங்கினோம். எத்தனை பச்சை நிறங்கள், எத்தனை நீல நிறங்கள் என்று தெரியவில்லை. கடலைக்
காணும்போது அடுக்கடுக்காக நீலமும் பச்சையும் மாறிமாறி மாயாஜாலம்
செய்துக்கொண்டிருந்தன.
அதிகமான
மனிதர்கள் நடமாட்டம் இல்லை என்பது பார்த்த மாத்திரத்திலேயே உணர முடிந்தது. தவிர இத்தனை சுத்தமான,
அழகான, அதிகமாக மாசுப்படியாத ஒரு
தீவையும் கடலையும் நான் முதல்முறையாக பார்க்கிறேன். மின்னியல்
பயன்பாட்டுக்கு சோலார் மற்றும் ஜெனரேட்டர் பயன்படுத்துகிறார்கள். தங்குவதற்கும் உண்பதற்கும் அவரவர் வசதிக்கும் பணத்திற்கும்
தகுந்தாற்போல் ஒரு சில தங்கும்விடுதிகள் இருக்கின்றன. அதற்குமேல்
உங்கள் பேராசைகளை பூர்த்திசெய்ய அந்தத் தீவில் இடமில்லை, அதற்கு
அது அனுமதிப்பதும் இல்லை. தவிர கொரானா காலத்தில்
மேலதிகமாக இருந்த ஓர் இரு தங்கும் விடுதிகளும் உணவுக்கூடங்களும் மூடுவிழா கண்டு
விட்டதுடன் அவை இனி பயன்பாட்டுக்கு உதவாத அளவிற்கு பழுதடைந்தும் விட்டிருக்கின்றன.
நாங்கள்
லாங் தெஙா தீவைச் சென்றடைந்ததும் முதல் வேளையாக கடலாமைகளின் முட்டைகளை சேகரிக்கும்
எங்கள் தோழரை சந்திக்கச் சென்றோம்.
கடற்கரையை ஒட்டினார் போல நடந்துச்சென்று மலைமீது ஏறி 10-15
நிமிடங்களுக்கு காட்டுவழியே, நடந்து நடந்து தடமாக மாறியிருந்த வழியில் நடந்து சென்று
கீழ் இறங்கினால் கடலாமைகள் முட்டையிடுவதற்காக ஒதுங்கும் இடத்திற்கு சென்று விடலாம்.
அங்கிருந்து சற்றுத் தள்ளி குடில் அமைத்து, மிகமிக சொற்பமான வசதிகளுடன் கடல் ஆமைகளுக்காக சேவையாற்றுகிறார்கள் ‘lang tengah turtle watch’ அமைப்பைச் சேர்ந்த
தன்னார்வ குழுவினர்.
எங்களின் தோழர்
என்று சொன்னேன் இல்லையா? அவர் பெயர் யாஸ்மீன். அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு,
இயற்கைக்கு சேவையாற்ற தன்னார்வலராக இத்தீவுக்கு
வந்துவிட்டார். எங்கள் வருகையை முன்கூட்டியே அவருக்கு தெரிவித்திருந்ததால் எங்களுக்காக
காத்திருந்து எங்களை வரவேற்றார் யாஸ்மின். கடலாமைகளின் முட்டைகளை சேகரிக்கும் மற்றும்
அதை எப்படி பாதுகாத்து ஆமைக் குஞ்சுகளாக கடலுக்குள் திருப்பியனுக்கிறார்கள் என்ற முறையினை
யாஸ்மின் எங்களுக்கு விளக்கினார். அது ஒன்றும் இலகுவான முறையில்லை.
நமது நாட்டில்
மொத்தம் 7 வகையான கடலாமைகள் இருக்கின்றன. மிக அதிகமாக Hawksbill Turtle ஆமைகளும், Green
Turtle ஆமைகளும் தற்போது இருக்கின்றன.
Leatherback எனும் ஆமையினம் பல்வேறுக்காரணங்களால் நம் மண்ணிலிருந்தே அழிந்துபோய்விட்டது.
1990-களுக்குப் பிறகு அந்த இன ஆமையை யாருமே காணவில்லை. யாரும் எதிர்பாரத விதமாக
2017-ஆம் ஆண்டு அழிந்துவிட்டது என்று நம்பிய Leatherback turtle 2017-ல்
லாங் தெஙா தீவில் கரையேறியது. ஆனால் முட்டை இடாமல் போய் விட்டது. அதன்பிறகு இன்றுவரை அந்த ஆமை காணப்படவில்லை. எனவே அது அழிந்திவிட்ட
இனம் என்றே பட்டியலில் இருக்கிறது.
Hawksbill turtle ஒரு தடவைக்கு 150 முதல் 200 முட்டைகள் இடும். Green turtle 80 முதல் 120 முட்டைகள் வரை இடும். முட்டைகளை இடுவதற்கு அவை முதலில் இடத்தை தேர்ந்தெடுத்து அதன் கால்களைக் கொண்டு குழியை தோண்டிக்கொள்ளும். முட்டைகள் இட்டப் பிறகு மீண்டும் கால்களைப் பயன்படுத்தி குழியை மூடிவிட்டுப் போய்விடும்.
முட்டையை சேகரிக்கும் தன்னார்வளர்கள் ஆமை வந்துச் செல்லும் நேரம்வரை மிகத் துரிதமாக
வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். ஆமை இரவு 9 மணியிலிருந்து விடியற்காலை 5 மணிவரை
எந்த நேரத்திலும் முட்டையிடுவதற்காக கரையேறலாம். அதனால் ஷிப்ட் முறையில் தன்னார்வளர்கள்
கண்காணிப்பில் இருப்பார்கள். ஆமை முட்டையிட்டுக் கொண்டிருக்கும் போதோ அல்லது முட்டையிட்டப்
பிறகோ அவற்றை சேகரித்து, நண்டு, முதலை அல்லது மற்ற உயிரினங்கள் அவற்றை
நாசம் செய்துவிடாமல் இருக்கவும், சாப்பிட்டு விடாமல் இருக்கவும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அவற்றைப் பாதுகாப்பார்கள்.
மணலில் குழி தோண்டி முட்டைகளை எண்ணி குழியில் வைத்துமூடி, அதன்மீது வலைக்கொண்டு பாதுகாப்பாக
மூடி வைத்து கண்காணிக்கிறார்கள். இங்கே முதலைகள் முட்டைக்காகவே அதிகமாக சுற்றுகின்றன.
சிலவேளை பூர்ணம் பூத்து சில முட்டைகள் வீணாய் போய்விடுவதும் உண்டு. ஆமை முட்டையிட, கரையேரும் காரணத்தினால் அங்கு குறைந்த
வெளிச்சம் கொண்ட சிவப்பு நிற கைவிளக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
ஆமையின் குணங்கள் மிகவும் வித்தியாசமானதாகும். அவை 25-30 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இணை சேரும். முட்டையிடும்
காலத்தில் சில ஆமைகள் ஒரே தடவை 100- 200 முட்டைகளை இட்டுவிட்டு சென்றுவிடும். சிலது
ஒருவாரம் வரை விந்தணுக்களை சேகரித்து வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக முட்டையிடும்.
தாய் ஆமையின் கடமை முட்டையிடும்வரைதான். முட்டையிட்டு முடித்துவிட்டு கடலில் இறங்கினால்
பின் எப்போதும் அதை திரும்பிப் பார்ப்பதில்லை. ஆண் ஆமைகளுக்கோ இணை சேர்வதைத்தவிர வேறு
எந்தக் கடமையும் இல்லை.
முட்டைகள் குஞ்சு பொரித்து கடலில் இறங்கும்வரையும், இறங்கிய பின்னும் அந்த ஆமைக்
குழந்தைகள் பல போராட்டங்களை கடந்துவர வேண்டும். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் பெண் ஆமைகள்
எங்கு இருந்தாலும்; அவை எந்த எல்லைக்கு போயிருந்தாலும்; முட்டையிடும்போது தாய்வீட்டிற்கே
திரும்பி வருகின்றன. அதாவது தனக்கு எங்கு உயிர் கிடைத்ததோ அந்த இடத்திற்கு வந்து முட்டையிடுகின்றன.
ஆச்சரியமாக இருக்கிறதா?
பாதுகாத்து வைத்திருக்கும் முட்டைகள் குஞ்சுப் பொறித்து கடலில் இருங்கும் காட்சி
அவ்வளவு அழகாக இருக்கும். ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் கடலில் இறங்கினால், பின்னாளில் ஒன்றே
ஒன்றுதான் பிழைத்திருக்கும் என்பது ஆய்வு. மற்றது எல்லாம் மற்ற கடல் உயிரினங்களுக்கு
இறையாகி விடுகின்றன. குறிப்பாக கடல் சுறாவும் அதை வேட்டையாட காத்துக்கொண்டே இருக்கிறது.
யஸ்மின் சொன்னார், கடல்வாழ் உயிரினங்களுக்கும், கடலை நம்பிவாழும் உயிரினங்களுக்கும்
மனிதர்கள் உட்பட கடலாமைகளின் வாழ்தல் அல்லது தேவை அதிகமாகவே இருக்கிறது. Keystone species என்று கடலாமைகளை இதனால்தான் சொல்கிறார்கள்.
நாங்கள் மேற்கொண்டிருப்பது ஒரு லட்சியத் திட்டத்தின் தொடக்கம்; இது, வரும் ஆண்டுகளிலும் வெற்றிகரமாக இந்த இயக்கம் இயங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கடல் ஆமைகளை அழிவிலிருந்து காப்பாற்றும் எங்கள் பணியில் நீங்களும் சேர்ந்துக்கொள்ளலாம் என யாஸ்மின் அழைப்பு விடுக்கிறார்.
Internship-பும் இருக்கிறது.
கடலாமைகள் குறித்து தெரிந்துக்கொண்டதோடு தமக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களையும் தோழர்
யஸ்மின் எங்களோடு பகிர்ந்துக்கொண்டார். புதிய தகவல்கள் மற்றும் அனுபவங்களோடு நாங்கள்
விடைபெற்று தங்கும் விடுதிக்கு திரும்பினோம்.
சித்திரைப் பௌர்ணமியின் முழு நிலவு மெல்ல எழுந்துவந்து கடலுக்கு மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது.
விடிந்தால் நாங்கள் வேறொரு உலகில் காலடி எடுத்துவைக்கப் போவது
அதுக்கு தெரிந்திருக்குமோ?
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக