ரத்தம் சிந்தாமல்
பெறப்பட்ட சுதந்திரம் என்று மலேசிய சுதந்திரம் குறித்து நான் படித்ததுண்டு. உண்மை அப்படியல்ல
என்பது நான் சில கேள்விகளுக்கு விடைகண்டதின் மூலமாக அறிந்துகொண்டேன். சில சரித்திரங்களை
நம்மால் வெளிப்படையாக பேசமுடிகிறது. சில சரித்திரங்களுக்கு பேச்சு சுதந்திரங்கள் மறுக்கப்படுகிறது.
ஊடக சுதந்திரமும் சில வேளை மறுக்கப்படும் பட்சத்தில் நான் என் எழுத்து சுதந்திரத்தை
சரியாக பயன்படுத்திகொள்ள நினைக்கிறேன்.
இந்தக் கட்டுரையை கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக கொள்ளலாம். பில்லா அரண்மனை குறித்தக் கட்டுரையில் 2009-ஆம் ஆண்டு அந்த அரண்மனையில் தொடராக எடுக்கப்பட்ட “வர்க்கா தெராகிர்”தொலைக்காட்சி நாடகம் குறித்து கூறியிருப்பேன். அந்த தொடர் நாடகம் சரவாக் மாநிலத்தின் தேசிய போராட்டவாதியான ரோஸ்லி டோபியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவமாகும்.
யார் அந்த ரோஸ்லி
டோபி?
18 மார்ச்
1932-ஆம் ஆண்டு சிபுவில் உள்ள கம்போங் பூலோ எனும் இடத்தில் ரோஸ்லி டோபி பிறந்தார்.
உடன்பிறப்புகள் 4 பேரில் இவர் இரண்டாவது குழந்தை. இவரின் தந்தை டோபி இந்தோனேசியாவின்
ரேடன் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் இவரின் தாயார் ஹபிபா முகா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்
என்று கூறப்படுகிறது. ரோஸ்லி டோபிக்கு ஃபாத்திமா என்ற தமக்கையும், ஐனி என்ற தம்பியும்
இருந்தனர்.
யாரையும் எளிதில்
அனுகக்கூடியர் என்று ரோஸ்லி டோபியின் குணாதிசயம் குறித்து அவர்கள் நண்பர்கள் கூறினாலும்,
அதிகம் பேசாதவர்; அமைதியானவர் என்றும் அவரைக் குறித்து கூறுகிறார்கள்.
ரோஸ்லி டோபியின் தொடக்க காலம்
ரோஸ்லி சுயமாக
இயங்ககூடியவர். பெற்றோரை மதித்து நடப்பவர்.
யாரையும் கஷ்டப்படுத்தமாட்டார். அவர் ஒரு கவிஞரும் கூட. அவரின் கவிதைகள் சரவாக்
இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. எப்போதும் சிரித்தமுகத்துடன் இருப்பவரான ரோஸ்லி ஓர்
ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முன்னதாக அவர் சரவாக் பொதுப்பணிதுறையிலும்
உத்துசான் சரவாக் பத்திரிக்கை துறையிலும் பணிபுரிந்தார். இந்தக் காலக்கட்டத்தில்தான்
அவர் ஒரு தேசியவாதியாகவும் கவிஞராகவும் தன்னை உயர்த்திக்கொண்டார். லிட்ரோஸ் எனும் புனைப்பெயரில்
சில புரட்சிமிகு கவிதைகளை எழுதியவாரன ரோஸ்லி 28/2/1948 அன்று உத்துசான் சரவாக் இதழில்
வெளியிடப்பட்ட ‘panggilan mu yang suci' ' என்ற தலைப்பில் எழுதிய கவிதை அவரை பெரிய
அளவில் பேச வைத்தது. அதோடு அக்காலக்கட்டத்தில் புனைப்பெயர்களின் பயன்பாடு பரவலாக இருந்தது,
ஏனெனில் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக வார்த்தைகளை பரப்புவதற்கான
எந்தவொரு முயற்சியையும் தீவிரமாக கண்காணித்தனர்.
இந்தக் காலக்கட்டத்தில்தான்
சிரத் ஹாஜி யமன் என்பவரின் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்த சிபு மலாய் இளைஞர் இயக்கத்தில்
ரோஸ்லி சேர்ந்தார். 1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி ‘ருக்கூன் 13’ இயக்கத்தில் தன்னையும்
ரோஸ்லி இணைத்துக்கொண்டார். ‘ருக்கூன் 13’ இயக்கம் ஒரு ரகசிய இயக்கமாகும். ரோஸ்லியின்
நீண்ட நாள் நண்பரான ஆவாங் ரம்லி மூலம் அவ்வியக்க செயல்பாடுகள் குறித்து ரோஸ்லி அறிந்துக்கொண்டார்.
அன்றிலிருந்துதான் பிரிட்டிஷ்-க்கு எதிரான அவரின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
‘ருக்கூன் 13’ ரகசிய இயக்கம் உருவானது எப்படி?
ப்ரூக்ஸ் அரச குடும்பம்
1841 முதல் சரவாக்கை கைப்பற்றி நீண்ட நாள் ஆட்சி செய்து வந்தது. இந்த குடும்பம்தான்
1941-ல் சரவாக் அரசியலமைப்பின் மூலம் சரவாக்கிற்கு சுதந்திரமும் அளித்தது. இருப்பினும்,
சார்லஸ் வைனர் ப்ரூக்ஸ் 1946 பிப்ரவரி 8 அன்று ஆங்கிலேயரிடம் சரவாக்கை காலனியாக ஒப்படைக்க
அரசியலமைப்பை மீறி செயல்பட்டார்.
ப்ரூக்ஸ் குடும்பத்தால் சரவாக்கை மேம்படுத்த முடியவில்லை, அதே வேளையில் சரவாக்கும் சுயராஜ்யத்திற்கு தன்னை தயார்படுத்தியது; இந்நிலையில் சரவாக்கை கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயர்களின் அழுத்தம் ப்ரூக்ஸ் குடும்பத்தினருக்கு அதனை அவர்கள் கையில் ஒப்படைக்க ஒரு காரணமாக இருந்தது.
இந்த நடவடிக்கையானது
சரவாக் சரணடைதலை கடுமையாக எதிர்க்கும் எதிர்வினைக்கு வழிவகுத்தது. இந்த நடவடிக்கையை
எதிர்க்கவே உள்ளூர்வாசிகளால் ‘சரவாக் சரணடைதல் எதிர்ப்பு இயக்கம்’ தொடங்கப்பட்டது.
பிரிட்டிஷ்காரர்களின்
நடவடிக்கையாலும் ஆதிக்கத்தாலும் கொதிப்படைந்திருந்த ரோஸ்லி டோபி, ‘சிபு மலாய் இளைஞர்
இயக்கம்’ எனப்படும் சரணடைதலுக்கு எதிரான குழுவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
இந்த இயக்கத்தில்
இருந்து, 13 உறுப்பினர்கள்தான் இறுதியில் ‘ருக்கூன் 13’ என அழைக்கப்படும் ஒரு இரகசிய
குழுவை உருவாக்கினர். ஆரம்பத்தில் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னரான Charles
arden-chake-கை படுகொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர், ஆனால் இந்தத் திட்டம் செயலாக்குவதற்கு
முன்பே அவர் கானாவுக்கு மாற்றப்பட்டார்.
Duncan Stewart படுகொலை
Charles
arden-chake-கை அடுத்து சரவாக்கின் இரண்டாவது
கவர்னராக Sir Duncan Stewart 3.12.1949
அன்று பதவிக்கு வந்தார். அவர் பதவி ஏற்று முதல்முறையாக சரவாக் மக்களை பார்வையிட அதிகாரப்பூர்வ
வருகையை மேற்கொண்டார். அன்றைய தினம் ருக்கூன் 13 இயக்கத்தின் தோழர்களான ரோஸ்லி டோபி,
மோர்ஷிடி சிடேக், அவாங் ரம்லி மற்றும் புஜாங் சொத்தோங் ஆகியோர் களத்தில் நின்றனர்.
பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிரான அவர்களின் திட்டம் தொடங்கியிருந்தது.
பதிவின் படி, புகைப்படம்
எடுப்பதற்காக ரோஸ்லி கவர்னரோடு நிற்க மோர்ஷிடி சிடேக் புகைப்படம் எடுப்பது மாதிரி கவனத்தை
தம் பக்கம் ஈர்க்கும் தருணத்தில், சந்தர்ப்பம் பார்த்து, விஷம் தடவிய கத்தியை ரோஸ்லி
கவர்னரின் வயிற்றில் குத்திவிடுகிறார். இரண்டாவதாக கத்தியால் குத்துவதற்கு முயற்சிக்கும்போது அருகில்
இருந்த போலீஸ் அதிகாரி அம்முயற்சியை தடுத்துவிடுவதோடு களத்திலேயே கொலை முயற்சயில் ஈடுபட்ட இருவரையும் போலீஸ் களத்திலேயே கைது செய்கின்றனர். மோசமான நிலையில் Sir
Duncan Stewart கூச்சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். பின்பு தீவிர சிகிச்சைக்கு
அவர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாளும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மரணமடைந்துவிடுகிறார்.
சம்பவத்திற்கு பிறகு…
ரோஸ்லி டோபி, மோர்ஷிடி
சிடேக் ஆகியோரின் கைதுக்குப் பிறகு ‘ருக்கூன் 13’ இயக்கம் குறித்து பிரிட்டிஷ் அதிகாரிகள்
விசாரனையை தொடங்கினர். அதன்பிறகு அவாங் ரம்லி மற்றும் புஜாங் சொத்தோங் இருவரும் கைது
செய்யப்பட்டார்கள். Sir Duncan Stewart படுகொலையை மிகவும் கடுமையாக பார்த்த பிரிட்டிஷ்
அதிகாரிகள் ‘ருக்கூன் 13’ இயக்கத்தினர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தத்
திட்டத்தில் ஈடுபடும்போது ரோஸ்லிக்கு வயது 17-தான் என்றாலும் அவரை வயது குறைந்தோர்
குற்றவாளியாக பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரிக்கவில்லை. விசாரணைக்குப் பிறகு Sir
Duncan Stewart கொலையில் தொடர்பு இருக்கும் அனைவருக்கும் தூக்கு தண்டனையை கொடுத்தது.
கூச்சிங் சிறைச்சாலையில் சில மாதங்கள் தண்டனையை அனுபவித்து மார்ச் 2, 1950 இல் ரோஸ்லி தூக்கிலிடப்பட்டார்.
அவர் சிறைவாசம் அனுபவித்த காலத்தில்தான் தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய ஒரு வரிதான் ‘வர்க்கா தெராக்ஹிர்’ (கடைசி கடிதம்). இந்த வார்த்தையைத்தான் 2009-ஆம் ஆண்டு போராட்டவாதி ரோஸ்லி டோபி குறித்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடருக்கும் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட தொடரில் 60 சதவிகிதம் மட்டுமே துல்லியமானது என்றும் கவர்னரின் வயிற்றில் குத்திவிட்டு ரோஸ்லி தப்பி ஓடுவதைக் காட்டும் காட்சி உள்ளிட்டது வரை கிட்டதட்ட 40% உண்மைக்கு புறம்பாக காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்று இன்றும் உயிரோடு இருக்கும் ரோஸ்லியின் சகாக்கள் கூறியிருக்கின்றனர். அவர்களின் கூற்றுக்கு ஆதாரங்களையும் அவர்கள் கையில் வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.
ரோஸ்லி டோபி தூக்கில்போடுவதற்கு முன்பு, தூக்கிலிடுவதற்கான தேவையான பொருட்கள் அனைத்தும் சிங்கப்பூரிலிருந்து வரவைக்கப்பட்டிருந்தன. அப்போது கூச்சிங் சிறைச்சாலையில் தூக்கிடுவதற்கான வசதியில்லை. மேலும் தூக்கில் போடுபவரும் சிங்கப்பூர் Changi சிறைச்சாலையிலிருந்துதான் அழைத்துவரப்பட்டார். தூக்கிலிடப்பட்ட போராட்டவாதியான ரோஸ்லியின் உடல் அவரின் குடும்பத்தாரிடம் கொடுப்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது. அவரின் உடல் கூச்சிங் சிறைச்சாலை வளாகத்திலே புதைக்கப்பட்டது.
புதைக்கப்பட்டு 46 ஆண்டுகளுக்கு பிறகு, சிறை வளாகத்திலிருந்து ரோஸ்லி டோபியின் உடல் மார்ச் 2, 1996 அன்று தோண்டி எடுக்கப்பட்டு அவரது சொந்த ஊரான சிபுவில் உள்ள கம்போங் சிபு மசூதிக்கு அருகில் உள்ள சரவாக் மாவீரர்களின் கல்லறையில் சரவாக் அரசாங்கத்தால் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஓர் இளம் போராட்டவாதியாகவும் தனது நாடு மற்றும் நாட்டு மக்களின் விடுதலைக்காகவும் தன் உயிரையே பணையம் வைத்ததோடு உயிரையே கொடுத்த போராட்டவாதி ரோஸ்லி டோபியின் பெயரில் சிபுவில் ஒரு தேசிய உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
நன்றி தமிழ்மலர் : 21/11/2021
பில்லா அரண்மைனையைக் குறித்து தெரிந்துக்கொள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக