புதன், 24 நவம்பர், 2021

நாகேந்திரனுக்கு தூக்குக்கயிறிலிருந்து கருணை கிடைக்காதா?

 

கருணை மன்னிப்பு கோரி தூக்குக்கயிறுலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும் என நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வரும் ஒரு வழக்கு நாகேந்திரன் என்ற இளைஞர் சம்பந்தப்பட்ட போதைபொருள் கடத்தல் வழக்காகும். போதை பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை கொடுக்கும் ஒரு நாடாக சிங்கப்பூர் இருந்து வருகிறது. தவிர அதிகமாக தூக்கு தண்டனை வழங்கும் நாடுகளில் சிங்கப்பூரும் மலேசியாவும் முன்னணியில் இருப்பது கவலையளிக்கும் ஒரு விஷயமும்கூட. 

 நாகேந்திரன் தூக்குக்கயிற்றில் எப்படி சிக்கினார்?

2009 ஆம் ஆண்டில், அப்போது நாகேந்திரன்  தர்மலிங்கத்திற்கு  21 வயது. எல்லா இளைஞர்களையும் போல இவர் இயல்பானவர் அல்ல. அவருடைய யோசிக்கும் திறன் (IQ)  இயல்பைவிட  69  குறைவாக இருப்பதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  இப்படி இருக்கும் பட்சத்தில் இது சர்வதேச அளவில் அறிவுசார் குறைபாடு என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றவராக இருந்தாலும் நாகேந்திரன்  ஜோகூர் பாருவில் பணிபுரிந்துவந்திருக்கிறார்.       

இந்தச் சூழலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரின்  தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காரணத்தினால், பணத் தேவை இருந்திருக்கிறது.   இதனால் அவர்  “மிஸ்டர்  கே"  என்பவரிடமிருந்து  RM500 கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாகேன் சிங்கப்பூருக்கு "ஏதாவது" கொண்டுவர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கடனை வழங்க   “மிஸ்டர்  கே"   ஒப்புக்கொண்டார். ஆனால், இந்த நிபந்தனையை  நாகேன் மறுத்துவிட்டார். இதனால் அவர் தாக்கப்பட்டதோடு அவரது காதலிக்கும் கொலை மிரட்டல் போயிருக்கிறது. மிகவும் நெருக்கடியில் சிக்கிய அவர் இறுதியாக மிஸ்டர் கே-யின் நிபந்தனையை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

நாகேன் இறுதியில் சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அவரது காலில் 42.72 கிராம் (3 டீஸ்பூன்களுக்கும் குறைவான)  'Diamorphine' 'டயாமார்ஃபைன்' (இதிலிருந்து ஹெராயின் தயாரிக்க முடியும்) என்ற தடை செய்யப்பட்ட  

 போதைப்பொருள்  கட்டி  இருந்ததை சிங்கப்பூர் அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்து நாகேனை  கைது செய்தனர்.  இதன் விளைவாக அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் போது

தனியார் மருத்துவ மனநல மருத்துவரான டாக்டர்  உங் எங் கேன், நாகேந்திரன் கைது செய்யப்படும் போது பகுத்தறிவுத் தீர்வுகள் மற்றும் முடிவுகளை எடுக்க இயலாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்று மருத்துவ அறிக்கையை கொடுத்திருந்தார். 69 புள்ளிகள் மட்டுமே அவருக்கு சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. இந்தப் 10 ஆண்டுகள் சிறை தண்டனையில் அது இன்னும் மோசமான நிலைக்கு போய்விட்டிருக்கிறது.  சிங்கப்பூர் சட்டத்தின்படி, இந்த அறிக்கை அவரை தூக்கு கயிற்றிலிருந்து விடுவிக்க போதுமானதாக  இருந்திருக்க வேண்டும்.  ஆனால், அப்படி நடக்கவில்லை. உண்மையில் அவர் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் அல்லது விடுவித்திருக்க வேண்டும்.  ஆனாலும் சிங்கப்பூரின் பிடிவாதக் குணமானது 10 ஆண்டுகள் கடந்தபின்னும் நாகேந்திரன் மீது எந்த இரக்கத்தையும் கொண்டுவரவில்லை. அவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு தூக்குதண்டனை உறுதிசெய்யப்பட்டது.  

அக்டோபர் 2021-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதியை குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 10-ஆம் தேதி நாகேனுக்கு தூக்குதண்டனை நிறைவேற்ற இருந்த வேளையில், அவருக்கு ‘கோவிட் 19’ பெருந்தொற்று கண்டிருந்த காரணத்தினால் அத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைக்க சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


மலேசிய பிரதமர் உட்பட பல சமூக அமைப்புகளும் கருணையின் அடிப்படியின் நாகேந்திரனை தூக்குக்கயிறிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கேட்டுவருகிறார்கள். இதற்கிடையில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி மலேசிய சோசலிசக் கட்சியின் ‘வெட்டிப்பேச்சு’ என்ற இணைய கலந்துரையாடலில் “போதை பொருள் கடத்தலுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தீர்வா?” என்ற தலைப்பில் பேசப்பட்டது. அந்தக் கலந்துரையாடலில் தூக்குதண்டனை மற்றும் போதைபொருள் கடத்தலில் சிக்கிக்கொள்பவர்கள் தொடர்பாக பல தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூர் சாங்கிச் சிறைச்சாலையில் இருக்கும் நாகேந்திரனுக்காக சட்ட உதவி மேற்கொள்ளும் மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் மற்றும் சிங்கப்பூர் சமூக ஆர்வளரான வி.ராஜாராம் அந்தச் சந்திப்பில் பேசினர்.

சிங்கப்பூர் சட்டப்படி 15 கிராம் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்தது நிறுபிக்கப்பட்டால் கட்டாய மரணதண்டனையை விதிக்க சட்டம் வகை செய்கிறது. தற்போதுதான் அதில் சிறுதிருத்தம் செய்திருக்கிறார்கள். என்றாலும் போதைப்பொருள் கடத்தும் கழுதைகளாக  ஏழைகளையும், பணத் தேவை உள்ளவர்களையும், அப்பாவிகளையும் ஒரு கும்பல் குறிவைத்து, மிக சாமர்த்தியமாக அவர்களின் உயிரை பணையம் வைப்பதுடன், இதில் சிக்ககொண்டால் அக்கும்பல் தப்பிகொள்வதுடன், மாட்டிகொண்டவர் தூக்குகயிறுக்கு இரையாகிடுகிறார். இந்தப் பிரச்னையை ஆராய வேண்டும் என சிங்கப்பூர் ஆர்வளரான வி.ராஜாராம் பேசியது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தூக்குதண்டனையை நிறைவேற்றும் நாடுகள்..


போதைப் பொருள் கடத்தலுக்கு 32 நாடுகள் மரணதண்டனையை நிறைவேற்றுகின்றன. என்றாலுகூட அமெரிக்கா, கியூபா உள்ளிட்ட 14 நாடுகளில் அத்தண்டனை அமலில் இருந்தாலும் நடைமுறைபடுத்தவில்லை. சீனா, ஈரான், சவூதி, அரேபியா, வியட்நாம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் மிக அதிகமாக போதைபொருள் கடத்தல் குற்றவாளிகளை வழக்கமாக தூக்கில்போடுகிறார்கள். 2020-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஆக அதிகமாக தூக்குதண்டனை கொடுத்த நாடாக வியட்நாம் இருக்கிறது. சுமார் 79 பேருக்கு இரக்கமே இல்லாமல் தூக்குதண்டனையை அந்த நாடு விதித்திருக்கிறது. அடுத்த நிலையில் இந்தோனேசியா 77 பேருக்கும் அதற்கு அடுத்த நிலையில் மலேசியா 25 பேருக்கும், லாவுஸ் 13 பேருக்கும் தாய்லாந்து 8 பேருக்கும் தூக்குதண்டனையை விதித்திருக்கிறார்கள்.

ஆனால்,ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர்கள் அதிகமானோர் கைதுசெய்யப்படுகின்றனர். சிலரின் கவனக்குறைவை பயன்படுத்தி அவர்கள் அறியாமலேயே போதைபொருளை அவர்களின் கைப்பையிலோ அல்லது வாகனத்திலோ வைத்துவிட்டு, அதிர்ஷ்டத்தின் அடைப்படையில் பொருளை கடத்துவது. சிலரின் குடும்ப சூழல் வறுமையை பயன்படுத்தி சூழ்நிலை கையாக்குவது. இவ்வகைக் கடத்தல்காரர்களைதான் போதைபொருள் கழுதை என்று உவமை சொல்கிறார்கள். துரதுஷ்டவசமாக இவ்வாறுறான குற்றவாளிகளில் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாக இந்தியர்களே சிக்கிகொள்கிறார்கள்.

அதேவேளையில் உலகம் முழுவதுமே ஆயிரங்கணக்கான மக்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கின்றனர். போதைப்பொருளை பயன்படுத்துபவர்களோ மிக அதிகமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கும் வேளையில் 2030- ஆம் ஆண்டை எட்டும்போது உலக மக்களிடையே போதைப்பொருளை பயன்படுத்துவது 11 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டிருக்கும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. போதைப்பொருள் பயன்பாட்டினால் அதிகமாக பரவும் நோயாக எச்.ஐ.வி-யும், ஹெபடைடிஷ் சி-யும் இருக்கிறது.  

நாகேந்திரன் வழக்கை பொறுத்தவரை அவருக்கு தூக்கு தண்டனை வழங்குவது ஞாயம் இல்லாத ஒன்று என்றும் சட்டத்திற்கு புறம்பானது என்றும் சிங்கப்பூர் - மலேசிய மனிதாபிமானிகள் குரல் எழுப்பிவருகிறார்கள். சுயநினைவோடு இல்லாத ஒருவரை தனக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளாத ஒருவரை தூக்கிலிடக்கூடாது என்று  மலேசியர்கள் மட்டுமல்ல சிங்கப்பூர் மக்களும் நாகேந்திரனுக்காக  குரல் எழுப்பிகொண்டிருக்கின்றனர். அவருக்காக பணம் வசூல் செய்து அதை இந்த வழக்குக்காக பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனாலும், தூக்கில் ஏற்றியே தீருவோம் என பிடிவாதத்தை கடைப்பிடிக்கும் சிங்கப்பூர் அரசாங்கம், மனிதாபிமான அடிப்படையில் கொஞ்சம் மனது இறங்க வேண்டும் என இருநாடுகளின் மனித உரிமை ஆர்வளர்கள் காத்திருக்கிறார்கள். நாமும் அதையே வேண்டுகிறோம்…

நன்றி தமிழ்மலர் 28/11/2021

செவ்வாய், 16 நவம்பர், 2021

இளம் தேசிய போராட்டவாதி ரோஸ்லி டோபி (Rosli Dhoby)

 

ரத்தம் சிந்தாமல் பெறப்பட்ட சுதந்திரம் என்று மலேசிய சுதந்திரம் குறித்து நான் படித்ததுண்டு. உண்மை அப்படியல்ல என்பது நான் சில கேள்விகளுக்கு விடைகண்டதின் மூலமாக அறிந்துகொண்டேன். சில சரித்திரங்களை நம்மால் வெளிப்படையாக பேசமுடிகிறது. சில சரித்திரங்களுக்கு பேச்சு சுதந்திரங்கள் மறுக்கப்படுகிறது. ஊடக சுதந்திரமும் சில வேளை மறுக்கப்படும் பட்சத்தில் நான் என் எழுத்து சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திகொள்ள நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரையை கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக கொள்ளலாம். பில்லா அரண்மனை குறித்தக் கட்டுரையில் 2009-ஆம் ஆண்டு அந்த அரண்மனையில் தொடராக எடுக்கப்பட்ட “வர்க்கா தெராகிர்தொலைக்காட்சி நாடகம் குறித்து கூறியிருப்பேன். அந்த தொடர் நாடகம் சரவாக் மாநிலத்தின் தேசிய போராட்டவாதியான ரோஸ்லி டோபியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவமாகும். 

யார் அந்த ரோஸ்லி டோபி?

18 மார்ச் 1932-ஆம் ஆண்டு சிபுவில் உள்ள கம்போங் பூலோ எனும் இடத்தில் ரோஸ்லி டோபி பிறந்தார். உடன்பிறப்புகள் 4 பேரில் இவர் இரண்டாவது குழந்தை. இவரின் தந்தை டோபி இந்தோனேசியாவின் ரேடன் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் இவரின் தாயார் ஹபிபா முகா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ரோஸ்லி டோபிக்கு ஃபாத்திமா என்ற தமக்கையும், ஐனி என்ற தம்பியும் இருந்தனர்.

யாரையும் எளிதில் அனுகக்கூடியர் என்று ரோஸ்லி டோபியின் குணாதிசயம் குறித்து அவர்கள் நண்பர்கள் கூறினாலும், அதிகம் பேசாதவர்; அமைதியானவர் என்றும் அவரைக் குறித்து கூறுகிறார்கள்.


ரோஸ்லி டோபியின் தொடக்க காலம்

ரோஸ்லி சுயமாக இயங்ககூடியவர். பெற்றோரை மதித்து நடப்பவர்.  யாரையும் கஷ்டப்படுத்தமாட்டார். அவர் ஒரு கவிஞரும் கூட. அவரின் கவிதைகள் சரவாக் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. எப்போதும் சிரித்தமுகத்துடன் இருப்பவரான ரோஸ்லி ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முன்னதாக அவர் சரவாக் பொதுப்பணிதுறையிலும் உத்துசான் சரவாக் பத்திரிக்கை துறையிலும் பணிபுரிந்தார். இந்தக் காலக்கட்டத்தில்தான் அவர் ஒரு தேசியவாதியாகவும் கவிஞராகவும் தன்னை உயர்த்திக்கொண்டார். லிட்ரோஸ் எனும் புனைப்பெயரில் சில புரட்சிமிகு கவிதைகளை எழுதியவாரன ரோஸ்லி 28/2/1948 அன்று உத்துசான் சரவாக் இதழில் வெளியிடப்பட்ட ‘panggilan mu yang suci' ' என்ற தலைப்பில் எழுதிய கவிதை அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அதோடு அக்காலக்கட்டத்தில் புனைப்பெயர்களின் பயன்பாடு பரவலாக இருந்தது, ஏனெனில் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக வார்த்தைகளை பரப்புவதற்கான எந்தவொரு முயற்சியையும் தீவிரமாக கண்காணித்தனர்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் சிரத் ஹாஜி யமன் என்பவரின் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்த சிபு மலாய் இளைஞர் இயக்கத்தில் ரோஸ்லி சேர்ந்தார். 1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி ‘ருக்கூன் 13’ இயக்கத்தில் தன்னையும் ரோஸ்லி இணைத்துக்கொண்டார். ‘ருக்கூன் 13’ இயக்கம் ஒரு ரகசிய இயக்கமாகும். ரோஸ்லியின் நீண்ட நாள் நண்பரான ஆவாங் ரம்லி மூலம் அவ்வியக்க செயல்பாடுகள் குறித்து ரோஸ்லி அறிந்துக்கொண்டார். அன்றிலிருந்துதான் பிரிட்டிஷ்-க்கு எதிரான அவரின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.


‘ருக்கூன் 13’ ரகசிய இயக்கம் உருவானது எப்படி?

ப்ரூக்ஸ் அரச குடும்பம் 1841 முதல் சரவாக்கை கைப்பற்றி நீண்ட நாள் ஆட்சி செய்து வந்தது. இந்த குடும்பம்தான் 1941-ல் சரவாக் அரசியலமைப்பின் மூலம் சரவாக்கிற்கு சுதந்திரமும் அளித்தது. இருப்பினும், சார்லஸ் வைனர் ப்ரூக்ஸ் 1946 பிப்ரவரி 8 அன்று ஆங்கிலேயரிடம் சரவாக்கை காலனியாக ஒப்படைக்க அரசியலமைப்பை மீறி செயல்பட்டார்.

ப்ரூக்ஸ் குடும்பத்தால் சரவாக்கை மேம்படுத்த முடியவில்லை, அதே வேளையில் சரவாக்கும் சுயராஜ்யத்திற்கு தன்னை தயார்படுத்தியது; இந்நிலையில் சரவாக்கை கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயர்களின் அழுத்தம் ப்ரூக்ஸ் குடும்பத்தினருக்கு அதனை அவர்கள் கையில் ஒப்படைக்க ஒரு காரணமாக இருந்தது.

இந்த நடவடிக்கையானது சரவாக் சரணடைதலை கடுமையாக எதிர்க்கும்  எதிர்வினைக்கு வழிவகுத்தது. இந்த நடவடிக்கையை எதிர்க்கவே உள்ளூர்வாசிகளால் ‘சரவாக் சரணடைதல் எதிர்ப்பு இயக்கம்’ தொடங்கப்பட்டது.

பிரிட்டிஷ்காரர்களின் நடவடிக்கையாலும் ஆதிக்கத்தாலும் கொதிப்படைந்திருந்த ரோஸ்லி டோபி, ‘சிபு மலாய் இளைஞர் இயக்கம்’ எனப்படும் சரணடைதலுக்கு எதிரான குழுவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

இந்த இயக்கத்தில் இருந்து, 13 உறுப்பினர்கள்தான் இறுதியில் ‘ருக்கூன் 13’ என அழைக்கப்படும் ஒரு இரகசிய குழுவை உருவாக்கினர். ஆரம்பத்தில் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னரான Charles arden-chake-கை படுகொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர், ஆனால் இந்தத் திட்டம் செயலாக்குவதற்கு முன்பே அவர் கானாவுக்கு மாற்றப்பட்டார்.


Duncan Stewart படுகொலை

Charles arden-chake-கை அடுத்து சரவாக்கின் இரண்டாவது கவர்னராக Sir Duncan Stewart 3.12.1949 அன்று பதவிக்கு வந்தார். அவர் பதவி ஏற்று முதல்முறையாக சரவாக் மக்களை பார்வையிட அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டார். அன்றைய தினம் ருக்கூன் 13 இயக்கத்தின் தோழர்களான ரோஸ்லி டோபி, மோர்ஷிடி சிடேக், அவாங் ரம்லி மற்றும் புஜாங் சொத்தோங் ஆகியோர் களத்தில் நின்றனர். பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிரான அவர்களின் திட்டம் தொடங்கியிருந்தது.

பதிவின் படி, புகைப்படம் எடுப்பதற்காக ரோஸ்லி கவர்னரோடு நிற்க மோர்ஷிடி சிடேக் புகைப்படம் எடுப்பது மாதிரி கவனத்தை தம் பக்கம் ஈர்க்கும் தருணத்தில், சந்தர்ப்பம் பார்த்து, விஷம் தடவிய கத்தியை ரோஸ்லி கவர்னரின் வயிற்றில் குத்திவிடுகிறார். இரண்டாவதாக கத்தியால் குத்துவதற்கு முயற்சிக்கும்போது அருகில் இருந்த போலீஸ் அதிகாரி அம்முயற்சியை தடுத்துவிடுவதோடு களத்திலேயே கொலை முயற்சயில் ஈடுபட்ட இருவரையும் போலீஸ் களத்திலேயே கைது செய்கின்றனர். மோசமான நிலையில் Sir Duncan Stewart கூச்சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். பின்பு தீவிர சிகிச்சைக்கு அவர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாளும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மரணமடைந்துவிடுகிறார்.


சம்பவத்திற்கு பிறகு…

ரோஸ்லி டோபி, மோர்ஷிடி சிடேக் ஆகியோரின் கைதுக்குப் பிறகு ‘ருக்கூன் 13’ இயக்கம் குறித்து பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரனையை தொடங்கினர். அதன்பிறகு அவாங் ரம்லி மற்றும் புஜாங் சொத்தோங் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். Sir Duncan Stewart படுகொலையை மிகவும் கடுமையாக பார்த்த பிரிட்டிஷ் அதிகாரிகள் ‘ருக்கூன் 13’ இயக்கத்தினர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தத் திட்டத்தில் ஈடுபடும்போது ரோஸ்லிக்கு வயது 17-தான் என்றாலும் அவரை வயது குறைந்தோர் குற்றவாளியாக பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரிக்கவில்லை. விசாரணைக்குப் பிறகு Sir Duncan Stewart கொலையில் தொடர்பு இருக்கும் அனைவருக்கும் தூக்கு தண்டனையை கொடுத்தது. கூச்சிங் சிறைச்சாலையில் சில மாதங்கள் தண்டனையை அனுபவித்து மார்ச் 2, 1950 இல் ரோஸ்லி தூக்கிலிடப்பட்டார்.


அவர் சிறைவாசம் அனுபவித்த காலத்தில்தான் தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய ஒரு வரிதான் ‘வர்க்கா தெராக்ஹிர்’ (கடைசி கடிதம்). இந்த வார்த்தையைத்தான் 2009-ஆம் ஆண்டு போராட்டவாதி ரோஸ்லி டோபி குறித்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடருக்கும் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட தொடரில் 60 சதவிகிதம் மட்டுமே துல்லியமானது என்றும் கவர்னரின் வயிற்றில் குத்திவிட்டு  ரோஸ்லி தப்பி ஓடுவதைக் காட்டும் காட்சி உள்ளிட்டது வரை கிட்டதட்ட  40% உண்மைக்கு புறம்பாக காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்று இன்றும் உயிரோடு இருக்கும் ரோஸ்லியின் சகாக்கள் கூறியிருக்கின்றனர். அவர்களின் கூற்றுக்கு ஆதாரங்களையும் அவர்கள் கையில் வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.


ரோஸ்லி டோபி தூக்கில்போடுவதற்கு முன்பு, தூக்கிலிடுவதற்கான தேவையான பொருட்கள் அனைத்தும் சிங்கப்பூரிலிருந்து வரவைக்கப்பட்டிருந்தன. அப்போது கூச்சிங் சிறைச்சாலையில்  தூக்கிடுவதற்கான வசதியில்லை. மேலும் தூக்கில் போடுபவரும் சிங்கப்பூர் Changi சிறைச்சாலையிலிருந்துதான்  அழைத்துவரப்பட்டார். தூக்கிலிடப்பட்ட போராட்டவாதியான ரோஸ்லியின் உடல் அவரின் குடும்பத்தாரிடம் கொடுப்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது. அவரின் உடல் கூச்சிங் சிறைச்சாலை வளாகத்திலே புதைக்கப்பட்டது.

புதைக்கப்பட்டு 46 ஆண்டுகளுக்கு பிறகு, சிறை வளாகத்திலிருந்து  ரோஸ்லி டோபியின் உடல்  மார்ச் 2, 1996 அன்று தோண்டி எடுக்கப்பட்டு அவரது சொந்த ஊரான சிபுவில் உள்ள கம்போங் சிபு மசூதிக்கு அருகில் உள்ள சரவாக் மாவீரர்களின் கல்லறையில் சரவாக் அரசாங்கத்தால் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஓர் இளம் போராட்டவாதியாகவும் தனது நாடு மற்றும் நாட்டு மக்களின் விடுதலைக்காகவும் தன் உயிரையே பணையம் வைத்ததோடு உயிரையே கொடுத்த போராட்டவாதி ரோஸ்லி  டோபியின் பெயரில் சிபுவில்  ஒரு தேசிய  உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.  

நன்றி தமிழ்மலர் : 21/11/2021  

பில்லா அரண்மைனையைக் குறித்து தெரிந்துக்கொள்ள 

  

 

வியாழன், 11 நவம்பர், 2021

அமானுஷ்யமும் பில்லா அரண்மனையும்…

 

அண்மையில் ஒரு செய்தி காதில் எட்டியது. தெலுக் இந்தானில் உள்ள பேராக் சுல்தானின் பாழடைந்து பழுதடைந்து கிடந்த பழைய அரண்மைனை தனியாருக்கு விற்கப்படபோகிறது என்று. அது வதந்தியாககூட இருக்கலாம். ஆனாலும் அது உண்மையென்றால்? நான் என்னையே கேட்டுகொண்டேன். சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். உண்மையை அறிய முடியவில்லை. இஸ்தானா ராஜா மூடா என்று அழைக்கப்படும் பழைய அரண்மனை பாழடைந்து இருந்தாலும், அதன் எச்சம் இருக்கும் வரை வரலாறு பேசும் தானே? சில முக்கிய வரலாறுகளை தமிழில் கொண்டு வரவேண்டும் என்று எங்களின் சிறிய குழு எடுத்திருக்கும் முயற்சியை இன்னும் துரிதப் படுத்த வேண்டும் என நான் முனைப்போடு இருக்கிறேன். அழிப்பது ரொம்ப சுலபம். ஆனால், படைத்தல் அப்படி இல்லையே.

இஸ்தானா ராஜா மூடா  அரண்மனையை போன்றே பேராக்கில் வரலாறு பேசும் மற்றுமொரு அரண்மனைக் குறித்து நிறையபேர் அறியவில்லை. அது  பில்லா அரண்மனையாகும். உண்மையில் பில்லா அரண்மனை என்பது ஒரு மாளிகை. ராயல் மாண்டெய்லிங் குடும்பமான  ராஜா பில்லாவைச் சேர்ந்தது. பில்லா அரண்மனை மாண்டேலிங் கட்டிடக்கலை கருத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது. இது "மாண்டேலிங் மேன்ஷன்" என்றும் அழைக்கிறார்கள். மாண்டேலிங் என்பது இந்தோனேசியாவின் சுமத்ராவின் வடக்குப் பகுதியிலிருந்து வரும் ஒரு பாரம்பரிய கலாச்சாரக் குழுவாகும். அங்கிருந்து புலம்பெயர்ந்து வந்த தொழில் முனைவர்களும் புலம்பெயர்ந்தோரும் சிலாங்கூர் மற்றும் பேராக் பகுதிகளில் குடியேறினர்.

ராஜா பில்லா ஒரு 'பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க நபர்'. பேராக்கின் பாப்பானில் 1896 இல், ஒரு மலையின் உச்சியில் அவர் இந்த மாளிகையின் கட்டுமானத்தை நிறைவு செய்தார்.  இந்த மாளிகை அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. அந்த அரண்மனையின் பிரமாண்டம், சுமத்ராவின் அரச குடும்பத்துடன் ராஜா பில்லாவின் தொடர்புக்கு சாட்சியமாகும். பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட பெருவாரியான அரண்மைனைகள்  பிரிட்டிஷ் கட்டிட கலையின் பாணியோடு கலந்துதான் இருக்கிறது. மேல்நாட்டு பாணியோடு இருக்கும் அரசர்களின் அரண்மனைகளோடு பில்லா அரண்மனை சற்றுமாறுபட்டு இருப்பதை பார்த்த மாத்திரத்திலேயே உணரவும் முடியும்.  

பலகை மாளிகையின் வடிவமைப்பைக் கொண்டுள்ளதும் பில்லா அரண்மனையின் சிறப்புகளில் ஒன்றுதான். தரை தளத்தில் 8 மூலைகள் மற்றும் ஒரு மண்டபம் மாதிரியான தளம் உள்ளது. மாடியில் பெரிய  அறையும் ஒரு வரவேற்ப்பு அறையும் இருக்கிறது.  இந்த அரண்மனை மன்னன் பில்லாவால் திருமணங்கள், கூட்டங்கள், சந்திப்புகள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் எந்தவொரு கொண்டாட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. மிக முக்கியமாக, இந்த அரண்மனை சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் ராஜா பில்லாவை சந்தித்து பிரச்சனைகள் மற்றும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள ஒரு தளமாக இந்த அரண்மனை இருந்திருக்கிறது. பொதுவாக பாப்பான் நகரில் இருந்த பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு குடியிருப்பாளர்கள் அவரைப் சந்திக்க வருவார்களாம்.

மாண்டேலிங் வரலாற்றில் நிபுணரான அப்துர்-ரசாக் லூபிஸின் கூற்றுப்படி, ராஜா பில்லாவும் அவரது ஆதரவாளர்களும் பேராக்கில் குடியேற முடிவு செய்திருந்தனர். அதன் காரணமாகதான் அந்த அரண்மனையும் கட்டப்பட்டிருக்கிறது. பாப்பான் நகரில் மிகப்பெரிய கட்டிடமாக அந்த அரண்மனை புகழ்பெற்றிருக்கிறது. இருந்தபோதிலும் ஏதோ காரணத்தினால் அவரது சந்ததியினர் பலர் பாப்பானை விட்டு வெளியேற தொடங்கியிருக்கின்றனர் என்கிறார் அவர்.

2009-ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடரான “வர்க்கா தெராகிர்இந்த அரண்மனையில்தான் படமாக்கட்டது. அரண்மனை தளத்தில் பணிபுரிந்த படக் குழுவினர் அந்த இடத்தில் படப்பிடிப்பை மேற்கொண்டபோது பயங்கரமான ஆமானுஷ்யங்களை அனுபவித்ததை பகிர்ந்திருந்தனர். அவர்கள் படப்பிடிப்பின்போது தனியாக இல்லை என்பதை குழுவினர் உணர்ந்ததாகவும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே ஏதோ அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்ததாகவும் கூறியிருந்தனர். பில்லா அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை பாப்பான் நகரின் குடியிருப்பாளர்கள் கற்பனையாக கூறவில்லை என்றும் அவை உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் என்பதால் அந்த அமானுஷ்ய சம்பவங்களை அப்படியே “வர்க்கா தெராகிர்” தொடரில் பதிவு செய்துள்ளனர் என்றும் சிலர் இணையத்தில் விமர்சனம் எழுதியிருப்பதையும் காண முடிகிறது.  “வர்க்கா தெராகிர்” தொடரின் கதாநாயகர் சரவாக் மாநில போராட்டவாதியான ரோஸ்லி டோபி (Rosli Dhoby) குறித்ததாகும். ரோஸ்லி டோபி யார் என்ற வரலாற்றை வேறொரு பதிவில் சொல்கிறேன்.  “பெனுங்கு இஸ்தானா என்ற ஆவணப்படமும் இந்த அரண்மையில்தான் பதிவு செய்தார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.



131 ஆண்டு பழமையான மர வீடுபோல் காட்சியளிக்கும் இந்த அரண்மனைக்கு அண்மையில் போயிருந்தேன். மௌனத்தில் மூழ்கியிருக்கும் இந்த அரண்மைக்கு சுற்றுலாத்துறையின் அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. அதோடு பாதுகாக்ககூடிய பட்டியலிலும் இந்த அரண்மனை இடம் பிடித்திருக்கிறது. என்றாலும், பார்வையாளர்கள் கண்களில் படாத இந்த அரண்மனை மேலும் அமானுஷ்யங்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது.    

நன்றி தமிழ்மலர் 14/11/2021

“வர்க்கா தெராகிர்'' தொடர் நாடகத்தின் வரும் அந்த தேசிய போராட்டவாதியின் வரலாறு அறிய...  ஸ்கேன் செய்யுங்கள்...