வாழ்க்கை இத்தனை
போராட்டமாக ஒரு சமூகத்திற்கு அமையுமா? இதுக் குறித்து ஏற்பட்டிருக்கும் எனது கவலையானது இப்போராட்டத்தை
குறித்து பேசாமல் கடந்து போக முடியாமல் செய்துவிடுகிறது. தொலைக்காட்சி தொடர்களில் ஒரே வீட்டில் ஒன்றன் பின் ஒன்றாக வரும் தீராதப் பிரச்னைகளைபோல
கிளந்தான் குவா மூசாங்கில் வசிக்கும் பூர்வக்குடிகளுக்கு பிரச்னைகளும் போராட்டங்களும் தீர்ந்தபாடில்லை.
ஒவ்வொரு தடவையும்
பெரிய நெருக்கடியை சந்திக்கும் இவர்கள், இம்முறை மாநில மக்களோடு நாட்டு மக்களின் நலனையும்
சேர்த்து கருத்தில்கொண்டு போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். உண்மையில் இது கடந்த
வருடமே தொடங்கிய ஒரு தேசிய பிரச்னையாகும். ஆனால்,
தீபகற்ப மலேசிய மக்களுக்கு இதுகுறித்து
விழிப்புணர்வே இல்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
நெங்க்கிரி நீர்மின்
அணை கட்டுமானம் கிளாந்தான் மாநிலத்தில், பூர்வக்குடிகள் அதிகமாக வசிக்கும் குவா மூசாங்
பகுதியில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு முதலே தொடங்கியது. இந்த மின்
அணை கட்டப்பட்டால் மிகப் பெரிய இயற்கை விளைவுகள் நம் நாட்டுக்கும் இயற்கை வளங்களுக்கும்
ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் எச்சரித்து வருகின்றனர். பஹாங் மாநிலத்தின்
மலைகளும் வனங்களும் அதன் மிச்ச சொச்சங்களை கிளாந்தான் மாநிலத்திற்கும் கொடுத்திருக்கிறது. ஆனால், இயற்கை
வளங்கள் கொண்ட மாநிலம் என்றப் பெருமையை அம்மாநிலம் இழந்து வெகுநாள் ஆகிறது. இயற்க்கை
வளங்களை பெருநிறுவனங்கள் சுரண்டி எடுத்ததில் ஏற்பட்டிருக்கும் இயற்கை மாற்றங்கள் மற்றும் பூர்வக்குடிகள்
இடம்பெயர்வுகள் மிக அதிகமாகவே கிளாந்தானில் நடந்திருக்கிறது.
தற்போது பூதாகரமாக மாறியிருக்கும் மின் அணை கட்டுமானத்தை தடுக்க கிளாந்தானில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய 17 மாகாணங்களைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட ஓராங் அஸ்லியின் குரல்களாக களம் இறங்கியிருக்கிறது கிளாந்தான் பூர்வக்குடிகளின் ஒருங்கிணைப்பு குழு (JKOAK). இது அரசு சாராத பூர்வக்குடிகளின் போராட்ட குழுவாகும். நெங்க்கிரி நீர்மின் அணை கட்டுவதை ஒருமனதாக இக்குழு எதிர்த்து வருகிறது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிறுவனமான EIA அறிக்கையையும் தாக்கல் செய்துவிட்டார்கள். அறிவிற்கு அப்பால் இந்தக் கட்டுமானம் நமக்கு பீதியைதான் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கட்டுமானத்தால் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும், இதனால் வறட்சியை போக்க முடியும் என்றும் அனைத்துக்கும் மேலாக 320 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறியிருந்தாலும், நெங்க்கிரி நீர்மின் அணையின் கட்டுமானம் நடந்தால் - 5,384 ஹெக்டேர் குவா மூசாங் வனப்பகுதி மூழ்கிவிடும் அபாயம் அல்லது ஆபத்து இருக்கிறது. இன்னும் தெளிவாக சொன்னால் 4 பூர்வக்குடிகளின் குடியிருப்புகள் நேரடியாக பாதிக்கப்பட்டு முற்றிலும் நீரில் மூழ்கிப்போகும்.
அதாவது போஸ் டோஹோய் (Pos Tohoi), போஸ் புலாட் (Pos Pulat), கம்போங் வியாஸ் (Kampung Wias) மற்றும் கம்போங் பெரிங் (Kampung Bering) ஆகிய கிராமங்களை இந்த மின் அணை கட்டுமானம் விழுங்கிவிடும் பூதமாக மாறிவிடும். அப்படி நடந்தால் அங்கு வசிக்கும் 217 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,185 பூர்வக்குடிகள் வேறுப் பகுதிகளுக்கு இடம் பெயர்வார்கள். அதோடு குவா மூசாங் பகுதிகளை சுற்றியிருக்கும் 18 கிராமங்கள் மறைமுகமாக பாதிக்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள்.
அதைத் தவிர நெங்கிரி
அணை கட்டப்பட்டால் குவா முசாங்கில் உள்ள ஓராங்
அஸ்லி சமூகத்தின் சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரம்,
வாழ்க்கை முறை, வரலாறு, பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தில் பல்வேறு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும். அவர்களின்
சமையல், அன்றாட தேவைக்கான தண்ணீர், விவசாயம், வேட்டையாடுதல், இயற்கையாகவே காட்டில் கிடைக்கும் வன உணவு, மூலிகைகள், அரியவகை தாவரங்கள், மருந்துகளின் ஆதாரங்கள், வீடு கட்டும்
பொருட்கள், பாரம்பரிய விழாக்களுக்கான பொருட்கள், பிரம்பு, பழங்கள் மற்றும் மூதாதையர் கல்லறைகள் உட்பட பூர்வக்குடியின் அடையாளம் மொத்தமும் அழியும். இன்னும்
கூடுதலாக சொன்னால், குவா மூசாங் மாகாணம் மட்டுமல்ல இந்த அணையின் கட்டுமானம் கிளந்தான் மாநிலத்தின்
பெரும்பாலான காடுகள், நிலங்கள் மற்றும் பிரதேசங்களை
மூழ்கடித்து அழிக்கும்.
கடந்த சில வருடங்களாகவே
தீபகற்ப மலேசியாவில் வசிக்கும் பூர்வக்குடிகளின் குடியிருப்புகள் அபாயத்தை எதிர்நோக்கி
வந்திருப்பதையும் சில குடியிருப்புகள் மேம்பாட்டுக் காரணத்தினால் வேறோடு பிடுங்கப்பட்டு வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதையும்
அறிவோம். தற்போதிய இந்த மேம்பாட்டில் பாதிக்கப்
போவது குவா சா மற்றும் குவா சாவாஸ் குடியிருப்பைச்
சேர்ந்த தெமியார் சமூகத்து பூர்வக்குடிகளாவர்.
இந்தப் பகுதியானது தெமியார் சமூகத்தின் பூர்வீக நிலம் என்ற வரலாற்றை சுமந்து
நிற்கிறது. மேலும், தொல்பொருள் மதிப்பைக் கொண்ட முக்கிய அணைகள், கெலுடுங்
குகை, சாஹாயா குகை, கெசில் குகை, லுபாங் கெலாவார்
குகை, பெர்டாங் குகை, ரஹ்மத் குகை, கெமிரி குகை, தோக் பாத்தின் குகை உள்ளிட்ட 8 குகைகள் நீரில் மூழ்கும். இவை அனைத்தும் பூர்வக்குடிகளின் வாழ்கையோடு சம்பந்தப்பட்டதாகும்.
எனவே இந்த மின் அணைத் திட்டம் மலேசியாவின்
தீபகற்பத்தில் வசிக்கும் தெமியார் பூர்வக்குடி
வரலாற்றை அழிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அணையை கட்டியப்
பிறகு ஏற்படும் அழிவுகள் என்னென்ன என்று பார்த்த நாம், அந்த அணையை கட்டும்போது ஏற்படும்
பிரச்னைகளையும் கொஞ்சம் பரீசீலித்து பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த அணை கட்டுமானத்திற்காக
முந்தைய செயல்பாடுகளின் போது செய்யக்கூடிய மரம் வெட்டுதல் மற்றும் குவாரி போன்ற விஷயங்களில்
காற்று மாசுப்பாடு மற்றும் ஒலி மாசுப்பாட்டையும்
ஏற்படுத்தும். தவிர ஆற்று அமைப்புகளை சேதப்படுத்துதல், மண் அரிப்பு, தாவரங்கள் மற்றும்
விலங்கினங்களை அழித்தல் உள்ளிட்ட இயற்கை அழிவுகள் தவிர்க்க முடியாததாகிவிடும். ஓராங் அஸ்லி என்று நாம் கூறும் பூர்வக்குடி மக்களின்
ஆரோக்கியத்திற்கும் பெறும் தீங்கு ஏற்படும்.
மலேசிய வரலாற்றில் மேம்பாட்டுக்காக ஆக்ரமிப்பு செய்த பூர்வக்குடிகளின் குடியிருப்பு தொடர்பாக ஆராய்ந்தால், நிலத்தை இழந்த அப்பூர்வக்குடிகள் யாரும் எந்த லாபத்தையும் இதுவரை
அனுபவித்ததில்லை. இடம் ஆக்ரமிப்பு செய்யும்போது
கொடுக்கப்படும் இனிப்பு வார்த்தைகள் எதுவும் இடத்தை அவர்களிடம் பிடுங்கிய பிறகு அவர்களுக்கு
உரிய இழப்பீடு மற்றும் நீதி வழங்கப்படவில்லை. இந்த திடீர் இழப்பு மற்றும் சமூக அழுத்தத்தில்
சிக்கி கொள்ளும் பூர்வக்குடி இளைஞர்கள் குற்ற
வழக்குகளில் சிக்கிகொள்ளும் அபாயத்திற்கும் தள்ளப்படுகின்றனர்.
அணை கட்டுதல் தொடர்பாக
முந்திய அனுபவங்கள் வரலாற்றுப் பாடங்களாக கண் முன் நிற்கும்போது வேறு என்ன உதாரணம்
தேவை? பாக்குன் சரவாக் அணை, தெமெங்கோர் பேராக், உலு ஜெலாய் உள்ளிட்ட பல அணைகள் பூர்வக்குடி சமூகத்திற்கு எந்த நன்மையும் கொண்டுவரவில்லை என்பதை தெளிவாகக்
காட்டுகின்றன.
தோழர் முஸ்தப்பா அலோங் |
இந்த நெங்க்கிரி
நீர்மின் அணை கட்டுமானம் குறித்து இயற்கை ஆர்வளர்கள் சொல்லும் இன்னொரு முக்கியமான தகவல் நெங்கிரி ஹைட்ரோ இலக்ட்ரிக் அணை (Empangan hidroelektrik Nenggiri) நீண்ட காலத்திற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான
அதன் செயல்திறனைப் பொறுத்தமட்டில் பொருத்தமற்றது என்கிறார்கள். நெங்கிரி நீர்மின் அணையானது
அதிக அளவு மின்சாரத்தை (350 மெகாவாட்) வழங்கும் திறன் கொண்டதாக இருந்தாலும், நீண்ட
காலத்திற்கு ஒரே சீரான மின்சாரம் வழங்க முடியாது என்று அவர்கள் நம்பும் காரணம், பலகாலமாக அந்த வனத்தில் மரங்கள்
வெட்டப்பட்டுகொண்டிருக்கின்றன. அப்பகுதியில்
சுரங்கங்களும் திறக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில்
நீடித்த மண் சரிவுகளை அது ஏற்படுத்தும். இதனால் சுல்தான் அபுபக்கர் நீர்மின் அணையில், கேமரன்
மலையில் நடந்தது போல் அணையின் நீர் மற்றும்
மின் திறன் குறையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
நான் எப்போதும்
கேள்வி கேட்பதைப்போலதான் இங்கும் மாநில அரசைப் பார்த்து கேள்வி கேட்க விரும்புகிறேன்.
மாநில மக்களுக்காகதான் ஒரு மேம்பாட்டை அரசு கொண்டு வருகிறது என்றால், அந்த மாநிலத்தில் இருக்கும்
வனத்தை பாதுகாக்கப் போகும் அரசு எது?
உலு கிளாந்தான் மற்றும்
குவா மூசாங் வனப்பகுதிகளில் காடுகள் அழித்தல்,
மரங்களை வெட்டுதல், தோட்டங்களை உருவாக்குதல், சுரங்கங்கள் வெட்டுதல் உள்ளிட்ட பலவற்றின் செயல்பாடுகளை மாநில அரசால் அங்கீகரிக்கப்படும் வரை இதுபோல பேரழிவுகளை தடுக்க முடியாது. கட்டப்போகும் இந்த அணையால் வெள்ளம் மற்றும் வறட்சி
பிரச்சனைகளை தீர்க்க முடியாது.
இந்தக் கட்டுமானத்தை
நிறுத்த வேண்டும் என்று பூர்வக்குடி மக்கள்
மாநில அரசுக்கு சில கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.
வெள்ளம், வறட்சி
மற்றும் மின்சாரம் போன்ற பிரச்சினைகளைக் குறைக்க நீண்டகால நிலையான தீர்வாக இந்த கட்டுமானம்
பொருந்தாது என்பதால், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தெனாக நேஷனல் பெர்ஹாட் ஆகியோர்
நெங்கிரி நீர்மின் அணை கட்டுவதை உடனடியாக ரத்து
செய்ய வேண்டும்.
குவா முசாங் மற்றும்
உலு கிளாந்தான் வனப்பகுதிகளில் மரம் வெட்டுதல் மற்றும் சுரங்க நடவடிக்கைகளை அங்கீகரிக்க
வேண்டாம். ஏனெனில் இது மாநிலத்தில் வெள்ளம்
மற்றும் வறட்சி நெருக்கடிக்கு பெரும் காரணமாகிறது.
நீர்ப்பாசனத் துறையால்
முன்மொழியப்பட்டபடி, வறட்சி, வெள்ளம் மற்றும் நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு
காண, மாற்று வழிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
இப்படி சில கோரிக்கைகளை
பூர்வக்குடி சமூகம் வைத்திருக்கும் வேளையில், இந்தக் கோரிக்கைக்கு இன்னும் பலம் சேர்க்கும்
வகையில் , 17 மாகாணங்களில் இருக்கும் ஓராங்
அஸ்லி மக்களின் 3,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்களை இந்த மேம்பாட்டுக்கு எதிராக பெற்றிருக்கின்றனர். நெங்கிரி அணையின் முன்மொழியப்பட்ட கட்டுமானத்தை ரத்து
செய்வதற்கான தேசிய பிரச்சாரத்தை தொடங்க பொதுமக்கள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வியாளர்கள்,
ஆலோசகர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் கூட்டாக ஆதரவு மற்றும் ஒத்துழைக்க அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். பூர்வக்குடிகளின்
இத்தனை எதிர்ப்புக்கு பிறகும் இந்தத் திட்டத்தை ரத்து செய்வதில் எந்தப் பதிலும் அல்லது நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என்றால், நெங்கிரி அணை கட்டுமான
திட்டம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்த நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிப்போம்
என பூர்வக்குடிகளின் கூட்டமைப்பு கூறியிருக்கிறது. ஆனாலும், இந்த கட்டுமானத்திற்கான
வேலைகள் வரும் மார்ச் மாதம் 2022- ல் தொடங்கப்படுவதற்கான அனுமதியை மாநில அரசாங்கம் வழங்கிவிட்டது. இந்தக் கட்டுமானம் நடக்ககூடாது என்று இயற்கை மீது காதல் கொண்டவளாகவும், பூர்வக்குடிகளின்
நலனில் அக்கரை கொண்டவளாகவும் நான் பூர்வக்குடிகளின்
பக்கம் நிற்கிறேன். நானும் எதிர்க்கிறேன். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக