குறும்பர்கள் அகமணப் பிரிவினராக வேறுப்பட்டுக் கிடக்கின்றனர் என்று பழங்குடிகளின் ஆய்வாளர் தோழர் பக்தவத்சல பாரதி குறிப்பிடுகிறார். பெட்டக் குறும்பர்கள், தேன் குறும்பர், முள்ளுக் குறும்பர் என இருக்கும் பிரிவுகளை குறிப்பிடும் அவர் நீலகிரியில் மட்டும் 42 ஊர்களில் ஆலுக் குறும்பர்கள் வாழ்கிறார்கள் என்று தமிழகப் பழங்குடிகள் என்ற புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.
நீலகிரியில் ஒரு அழகிய மலையில் ஏறி இளைப்பாற நாங்கள் அமர்ந்த இடம் குறும்பர் கிராமம். மனிதர்களின் அசூரத்தனமாக இரைச்சலிலிருந்து முற்றிலும் விடுபட்ட அமைதியான ஒரு மலைகிராமம். நாங்க போனது அந்தி நேரத்தில். ஒரு வீட்டின் முன்பு மண்வெட்டி போன்ற ஒன்று போடப்பட்டு அதன் மீது கூடை ஒன்று குப்புறப்போட்டிருந்தது. பக்கத்தில் மஞ்சள் அரைத்த சுவடுடன் கற்கள் இருந்தன. அருகில் இருந்த அம்மாவிடம் கேட்டேன், இது ஏதும் சடங்கா என்று. தன் கணவர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்றும் அதன் அறிகுறியாக இதை வைத்திருப்பதாகவும் சொன்னார். அதோடு அன்றைய தினம் குடியிருப்பில் துக்கச் சாப்பாடு போடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவான இரு இடத்தில் உணவு தயாராகிக்கொண்டிருந்ததையும் நாங்கள் கண்டோம். துக்கத்தை புரிந்துக்கொண்டு மேற்கொண்டு எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை.
நீலகிரி குறும்பர்கள் இரண்டு வகையான ஆவிகளை இனங் காண்கின்றனர். பெரிய ஆவி, சிறிய ஆவி இரண்டும் ஒருவரின் இறப்பினால் உணரப்படுகின்றன.
பெரிய ஆவியானது கண்ணுக்குத் தெரியும் நிழலைக் கொண்டதாகும். அந்த நபரை அடக்கம் செய்யும் வரை இந்தச் சிறிய ஆவியானது உலவிக் கொண்டிருக்கும். இறந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் செய்யப்படும் கல் நடும் சடங்கின்போதே சிறிய ஆவியும் பெரிய ஆவியும் ஒன்றாக இணைகிறது என நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.
குறும்பர்கள் இறந்தவர்களுக்குக் கல்மாடங்களை அமைக்கின்றனர். இவர்களிடையே ஒரு இறப்பு நிகழுமாயின் ‘தெவ்வ கொட்ட கல்லு’ எனப்படும் மழமழப்பான கூழாங்கற்கள் ஒன்றினைக் கொண்டு வந்து அந்தப் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பழைய வட்டக் கல்லறை மாடங்களில் வைப்பார்கள் என்ற தகவல்களையும் பக்தவத்சல பாரதி கூறியிருக்கிறார்.
குடியிருப்பின் ஓரிடத்தில் இறந்தவர்களின் நினைவாக கல்லில் சிலை செய்து, அதில் அவரின் பெயர், மறைந்த தேதியையும் பதிவு செய்து வைத்திருந்த வட்டக் கல்லரை மாடத்தை நானும் கண்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக