கடந்த மாதத்தில் சகூரா மரத்தில் பூக்கள் பூத்து குலுங்கி உதிர்ந்தன. மலேசிய மண் இதுவரை பார்த்திடாத அழகு அது. பூக்கள் மரத்தில் இருந்தபோதும், மண்ணில் கொத்து கொத்தாக உதிர்ந்தபோதும் அழைகையே கொடுத்தன. அடுத்த ஒரு வாரத்தில் மரங்கள் பூத்திருந்ததுக்கான அறிகுறியே இல்லாமல் வெறுமையாகியது. இந்தக் கொரானி நச்சில் காலத்தில் சுற்றுப்புறத்திற்கும் மனதிற்கும் இன்பத்தை கொடுத்த சகூரா பூக்களின் ஆயுட்காலம் வெறும் ஒருவாரம் மட்டுமே.
வசந்தமே உதிந்துவிட்டதா என்று தோன்றும்
நேரத்தில் கொன்றை மலர்கள் பூத்து பூத்து பூமிக்கும் வானத்திற்கும் மஞ்சள் பூசின.
கொன்றை பூக்கும் காலம்தானே என்று தோன்றினாலும், இம்முறை ஊதா வர்ணத்திலும் வெள்ளி வர்ணத்திலும் பூத்திருந்த சகூராவிற்கு பிறகு பூத்திருந்த கொன்றை மலர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அலைஅலையாக பூத்திருந்தன. அவையும்கூட ஒரே
வாரத்தில் வசந்தத்தை முடித்துக்கொண்டன.
உதிர்ந்து காய்ந்து சாலையில் சிதறிகிடந்த மஞ்சள்
மலர்களை துப்புரவு தொழிலாளி கூட்டி அள்ளிக்கொண்டிருந்தார்.
அவருக்கு அது சுமையாகவும் இருந்திருக்கலாம்.
கத்தரி வெயில் கொழுத்தும் இந்த காலத்தில் மழையும் வெள்ளமும் குளிருமாக இருக்கிறது.
காலநிலை மாற்றம் படு மோசமாக மாறியிருக்கிறது.
தான் என்ன ஆகிகொண்டிருக்கிறோம் என்று இயற்கைக்கே தெரியவில்லை. என்றாலும்கூட கடந்த வாரம் முதல் பூமருது மரம் ஊதா மலர்களாக பூத்து பறவைகளுக்கு நளபாகம் செய்துகொண்டிருக்கின்றன. பறவைகள் விருந்தாளிகளாக வருவதும் போவதுமாக இருந்தாலும் பூமருது மரம் பூப்பதை இன்னும் நிறுத்தவில்லை.
இன்று நாம் சந்தித்துகொண்டிருக்கும் இந்தப் பெருந்தொற்றுக்கும் காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபடுதலுக்கும் நிறையே தொடர்பு இருக்கின்றன. மேலும், திடீரென மரங்கள் பூப்பதும், பருவமில்லாத காலத்தில் பழங்கள் காய்ப்பதும்கூட இந்த பூவுலகு நம்மை எச்சரிக்கும் ஒரு விஷயம்தான்.
வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நமக்கு, அந்த இறுக்கம் நம்மைச் சுற்றி நடப்பதை அவதானிக்க கூடிய சூழலில் இல்லை என்று பலர் சொல்ல கேட்கிறேன். ஆனாலும், ஊரடங்களில் இவர்கள் என்னதான் செய்கிறார்கள். மந்தி தன் குழந்தைக்கு பேன் பார்ப்பதுபோல இரு கைகளும் கைதொலைப்பேசியை பற்றிகொண்டு எதையே தேடிகொண்டே இருக்கிறார்கள். நாள் முழுக்க தேடினாலும் அவர்கள் தேடுவது கையில் சிக்குவதே இல்லை. தேடுவதும் முடிவதில்லை.
இந்த ஊரடங்கு நாட்களில் என் ஜன்னல் சாளரத்தின் வழியில் சில பறவைகளின் வருகையை காண முடிந்தது. மீன் கொத்திப் பறவை, குயில், நீலத் தொண்டை ஈப்பிடிப்பான், மைனா, தேன் சிட்டு, சிட்டுக்குருவி, Asian glossy starling , Metallic glossy
starling உள்ளிட்ட பறவைகள் பூமருது மரத்தில் தங்கள் வருகையை உறுதிசெய்துவிட்டு சென்றன.
இந்த ஊரடங்கு நாட்களில் மிக சுதந்திரமாக இருக்கும் பறவைகளின் குணங்களை அறியக்கூடிய வாய்ப்பை நான் தவிர்க்கவே இல்லை.
இந்த பூவுலகு நமக்கு மட்டும் சொந்தமல்ல என்று வானொலியில் சொல்லிக்கொண்டே இருந்தாலும் அதை மெலோட்டமாக கடந்து போகிற சூழல்தான் நமக்கு இருக்கிறதே தவிர உண்மையில் அதன் அர்த்தத்தை உணரவே இல்லை.
தட்டானின் இறக்கையையும், பட்டாம் பூச்சியின் இறக்கையையும் பிய்த்து முடமாக்கிய தண்டனைக்குதான் இன்று நம்மாள் தட்டானையும் வண்ணத்து பூச்சியையும் காண முடிவதே இல்லை.
மனிதர்களுக்கு ஊரடங்கு என்றால் இந்தப் பறவைகள் மிக மகிழ்சியாக தங்களின் வாழ்க்கையை வாழ முடிகிறது. காற்றின் மாசு, ஒலி மாசு உட்பட மனிதர்களால் ஏற்படும் இடையூறுகள் எதுவும் பறவைகளுக்கு இல்லை. இது தொடர்தால் அழியக்கூடிய வகையில் இருக்கும் பல பறவைகள் மீண்டும் உயிர் பெறும் வாய்ப்புகள் அதிகம் தானே.
நிழலுக்காக நடப்படும் மரங்களில் பூக்கும் பூக்களுக்கும் மனிதர்கள் உண்பதற்கு முடியாத காய்களை காய்க்கும் மரங்களுக்கும் இத்தனை பறவைகள் வருகிறது என்றால் பழமரங்களுக்கு எத்தனை எத்தனை பறவைகள் வரும். அதற்காகத்தானே கடந்த வாரம் இயற்கையோடு கலந்துவிட்ட்ட சூழலியளாலர் சுந்தர்லால் பகுகுணா போன்றவர்கள் பாடுபட்டார்கள்.
யார் அந்த சுந்தர்லால் பகுகுணா என்று யோசிக்கிறீர்களா?
உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.
பிஷ்நோயி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் அமிருதாதேவி.
பச்சை மரங்களை வெட்டக்கூடாது என்ற நம்பிக்கையுடையது அவர்களின் இனக்குழுவாகும்.
அவரின் குடியரசை சேர்ந்த ஜோத்பூர் மன்னரின் அரண்மனைக்கு சுண்ணாம்பு சூளைகளுக்கு மரங்கள் தேவைப்பட்டது.
மரங்களை வெட்ட அரண்மைனை கூலியாட்கள் வந்தபோது அதை தடுத்து நிறுத்தி,
திரும்பி செல்லுமாறு வேண்டினார் அமிருதா.
ஆனால், அரண்மைனையாட்கள் விடுவதாக இல்லை.
அவர்கள் மரத்தை வெட்ட கோடரியை வெளியில் எடுத்தார்கள்.
அமிருதா மரத்தை கட்டிகொண்டு அதை வெட்டவிடாமல் தன்னுயிரை கொடுத்தார்.
அதன் பின் அவரின் மகள் அந்த மரத்தை வெட்ட விடாமல் கட்டிகொண்டு பலியானார்.
பின் அவரின் தங்கையும் கோடாரியின் பசிக்கு இரையானார். அவளுக்குப் பிறகு இளைய தங்கை.
அதன் பிறகு பிஷ்நோயி இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மக்களாக அந்த மரத்திற்காக இன்னுயிரை கொடுத்தனர்.
சுமார்
400 பிஷ்நோயி
பழங்குடிகள் வெட்டி கொல்லப்பட்டனர்.
சுமார் 300 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சம்பவத்தை இன்னும் நினைவுகோரும் வகையில் ஆண்டுதோறும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதை ஒரு விழாவாக முன்னெடுக்கிறார்கள். அந்த விழாவில் தொடர்ச்சியாக பங்கெடுத்து வந்தவர்தான் சுந்தர்லால் பகுகுணா.
இயற்கை ஆர்வளர் சுந்தர்லால் பகுகுணாவுக்கு
"இந்திய கானகங்களின் மகாத்மா"
என்ற பெயரும் இருக்கிறது.
பிஷ்நோயி
பழங்குடிகள் கையாண்டதைதான் இமயக் காடுகளை காப்பாற்றுவதற்காக சுந்தர்லால் பகுகுணாவும் கையாண்டார்.
அதுதான் 'சிப்கோ' அமைப்பாகும்.
சிப்கோ என்றால் ஒட்டிக்கொள்வது என்று பொருள். மரத்திற்காக தன் உயிரை கொடுத்தவர்கள் மத்தியில் இலை உதிர்வதெல்லாம் பெரும் தொல்லை என வெட்டி சாய்ப்பவர்க்கள் நாம். பறவைகளின் ஒலி பெரும் இடைஞ்சலாக இருக்கிறது என்பதற்காக மரத்தை காவு கேட்பவர்கள் நாம். சுவாசத்திற்கு தேவை பிராணவாயு என்பதும் அது மரங்களிலிருந்துதான் கிடைக்கும் என்பதும் மறந்து மெத்தனமாக இருப்பவர்கள் நாம். எப்போது நம்மிடம் விழிப்புணர்வு வரப்போகிறது என்று தெரியவில்லை.
நடிகர் விவேக் இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிலர் மரங்கள் நட்டு அதை முகநூலில் பதிவேற்றம் செய்ததை காண முடிந்தது. உண்மையில் அது நல்ல விஷயம்தான். சுந்தர்லால் பகுகுணா போன்றவர்கள் தங்கள் வாழ்க்கையையே இயற்கைக்காக கொடுத்தவர்கள். அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதும், அவர்கள் சொன்ன விஷயங்களை பின்பற்றி அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும்கூட இயற்கைக்கு நாம் செய்யும் மரியாதையும் அன்பும்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக