செவ்வாய், 2 மார்ச், 2021

மலேசிய `பாடப் புத்தகத்தில் பெரியார் படம் இருக்கக் கூடாது` - இந்து சங்கத்தின் எதிர்ப்பால் சர்ச்சை!

முதல் பத்திரிக்கை செய்

தைப்பொங்கல் இந்து மதத்தவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையல்ல. முஸ்லிம் தமிழர்களும், கிறிஸ்தவத் தமிழர்களும் கொண்டாடும் உழவர் திருநாள்.

மலேசியா: மலேசிய இந்துச் சங்கம், அங்கிருக்கும் தமிழ்ப் பள்ளிகளில் திராவிடக் கொள்கையைப் பரப்புவதை நிறுத்திக் கொள்க என்று பத்திரிக்கை செய்தியை வெளியிட்டது தொடர்ந்து அங்கு வாழும் தமிழர்கிடையே சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி அது தொடர்பான அறிக்கையினை மலேசிய இந்துச் சங்கம் அதிகாரப்பூர்வமாக மலேசிய தமிழ் பத்திரிக்கைகளுக்கு அனுப்பியது.

குறிப்பிட்ட அறிக்கையில், மலேசிய இந்து சங்கம்  தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமய புறக்கணிப்பும் திராவிட கொள்கையைப் பரப்பும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும், கல்வி அமைச்சின் பாடத்திட்டப் பிரிவின் சில அதிகாரிகள் பள்ளியில் திராவிட கொள்கைகளைப் பரப்புவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் கூறியிருந்தது. அதோடு, பள்ளி பாட நூலில் தை மாத முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்ற கருத்து திணிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மறைமுகமாக பள்ளிப்பாட புத்தகங்களில் பெரியாரின் கொள்கைகளும் அவரைப்பற்றிய செய்தி திணிப்பும் மேலோங்கி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அச்சங்கம் மிக கடுமையாக எச்சரித்திருந்தது.

அதிர்ச்சியும் கோபமும்...

இந்து சங்கத்தின் இந்த பத்திரிக்கை செய்தி மலேசிய தமிழர்களிடையே அதிர்ச்சியையும் சினத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான எதிர்வினைகளை   குறிப்பாக திராவிடக் கொள்கையை பின்பற்றுபவர்களும்  பெரியார் ஆதரவாளர்களும் தமிழ் பற்றாளர்களும் இந்து சங்கத்தின் இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றி வருகிறார்கள்.  

மோகன் ஷான் கடந்த முறை பேசியது


மலேசிய இந்து சங்கத்தின் தலைவரான மோகன்
ஷான் வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்துக்கு, மலேசிய இந்தியர்களின் தாய் கட்சியான ம.இ.கா தனது எதிர்ப்பினை தெரிவித்திருக்கிறது. பொங்கல் என்பது பண்பாட்டு விழா என்றும் அதற்கு மதச் சாயம் பூச வேண்டாம் என்றும் அந்தக் கட்சி மலேசிய இந்து சங்கத்திடம் வழியுறுத்தியிருந்தியது. மேலும், இந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அந்த கட்சி கூறியிருந்தது. ஆனாலும், ம.இ.கா-வைத் தவிர, எந்த ஒரு மதம் சாரா இயக்கமோ அல்லது திராவிட இயக்கமோ இந்து சங்கத்திற்கு எழுத்துப்பூர்வமான எதிர்வினையை ஆற்றவில்லை என்றாலும் பல தனி மனிதர்கள் இந்து சங்கம் மீதான தங்கள் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.

பாடப்புத்தகத்தில் உள்ளது

தமிழருக்கான புத்தாண்டு தை முதல்நாள்தான். தைப்பொங்கல் இந்து மதத்தவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையல்ல. முஸ்லிம் தமிழர்களும், கிருஸ்துவ தமிழர்களும் கொண்டாடும் உழவர் திருநாள். அதற்கு மதச் சாயத்தை பூச வேண்டாம் என சமூக ஊடகங்களில் அவர்கள் வழியுறுத்தி வருகிறார்கள். இந்து சங்க தலைவர் மோகன் ஷான் வழியுறுத்தும்   ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தினால் மலேசிய நாட்டில் தமிழையும் தமிழனையும் ஒருபோதும் வெல்ல முடியாது என்று வெளிப்படையான கோபத்தினையும் பலர் பதிவு செய்து வருகின்றனர். 

தமிழ்ப் புத்தாண்டு

இதனைத் தொடர்ந்து மோகன் ஷான் மற்றுமொரு அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார். அதில் ‘’சித்திரை முதல் தேதிதான் தமிழர் புத்தாண்டு. அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. தமது இந்தக் கூற்றோடு இந்து மதம் சார்ந்த 13 இயங்கங்கள் உடன் பட்டிருப்பதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். தவிர தமது சங்கம் பொங்கலுக்கு மதத் சாயம் பூசுகிறது என்று சிலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

இரண்டாவது பத்திரிக்கை செய்தி

மோகன் ஷானின் இந்த மறு அறிக்கையால் இந்தச் சர்ச்சையானது இன்னும் அங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், இந்த விவாதமானது மேலும் தீவிரமடைந்து வருகிறது.

 மலேசிய இந்து சங்கத்திற்கு நிலையான ஒரு கருத்து இல்லை என்று மோகன் ஷானின் கருத்தை எதிர்ப்பவர்கள் பதிவு செய்து வருகிறார்கள். சில வருடங்கள் வரையில் அரசு ஆதரவின் கீழ் ‘ஒரே மலேசியா’ எனும் கோட்பாட்டின் கீழ் பொங்கல் பண்டிகையை மதம்-இனம் சாராது மலாய்க்காரர்களும் தமிழர்களோடு சேர்ந்து கொண்டாடினர். 2018-ஆம் ஆண்டில் பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை. பள்ளிகளில் அதை செய்ய அனுமதிக்ககூடாது; மலாய் மாணவர்கள் பொங்கல் பண்டிகளில் ஈடுபடக்கூடாது என்ற மலாய் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு இதே இந்து சங்கத்தை சேர்ந்த மோகன் ஷான் பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை அல்ல, அது பண்பாட்டு விழா என்று அறிக்கைவிட்டிருந்தார். தான் கூறிய கூற்றுக்கு எதிராக இப்போது அவரே மாற்றிப் பேசுகிறார் என்று பலர் விமர்சிக்கின்றனர்.

பாடத்திட்டம்

மலேசிய அரசு பாடத்திட்ட வழக்கம்படி 6 ஆண்டுக்கு ஒரு முறை புதிய பாடப் புத்தகம் தயாரிக்கப்படும். அதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு தயாரிப்பு பாடப்புத்தகத்தில் தமிழர்களுக்கு பங்காற்றிய 3 அறிஞர்கள் குறித்து சிறு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது. அதில்  10 வரிகளில் பெரியார் குறித்த அறிமுகம் எழுதப்பட்டிருக்கிறது. அடுத்தாண்டு இந்தப் பாடப்புத்தகம் காலாவதியாகும் நிலையில், பெரியார் குறித்த தகவல்கள் பாடப் புத்தகத்தில் இருப்பது சமயத்திற்கு எதிரானது என்று மலேசிய இந்து சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலைப்பாட்டு தொடர்பாக மலேசிய தமிழர்கள் இந்து சங்கத்திற்கு எதிரான கருத்தினை தெரிவித்து வருகிறார்கள். பொங்கல் தமிழர் திருநாள், அது தமிழர்களின் புத்தாண்டு என்று தொடர்ந்து பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த எதிர்ப்பு குரலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது குறிப்பிடதக்கது.

இந்து சங்கம் குற்றம் சுமத்தியிருப்பது போல எந்த எதிர்மறை கருத்தையும் கல்வி பாடத்தில் இல்லை என்றும், அது கூறியிருப்பதுபோல பள்ளிப்பாடப்புத்தகத்தில் பொங்கல் விழா தமிழர்களின் புத்தாண்டு என்ற கருத்தினை மாணவர்கள் மத்தியில் திணிப்பதுபோன்ற எந்த பதிவும் இல்லை என்று கல்வியாளர்களும் தங்கள் கருத்தினை தெரிவித்திருக்கின்றனர்.           


மோகன் ஷான் கூறுவது என்ன?

``இறையாண்மையைப் போற்றும் மலேசியத் திருநாட்டில் இந்து சமயத்துக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டவர்களின் சித்திரத்தையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் பாடத்திட்டத்தில் இணைப்பது என்பது மிகக் கடுமையாகப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம். 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஈ.வெ.ராமசாமி, அன்னை தெரேசா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், காவி உடையில் காட்சியளிக்கும் சுவாமி விவேகானந்தர் வெள்ளை உடையில் இருப்பது போன்று காட்டப்பட்டதன் உள்நோக்கம்தான் என்ன?" என்று மோகன் ஷான் கேள்வி எழுப்புகிறார்.

யோகி சந்துரு, விகடன் இணையதளத்துக்காக மலேசியாவிலிருந்து..

1/3/2021

https://www.vikatan.com/news/general-news/hindu-sangam-opposes-periyar-picture-in-tamil-subjecs-in-malaysia-schools

 நன்றி ஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக