திங்கள், 18 பிப்ரவரி, 2019

மலேசியாவின் குட்டி இங்கிலாந்து பிரேசர் மலை


மலேசியாவின் குட்டி இங்கிலாந்து என வர்ணிக்கப்படும் நகரம் எது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? எதற்கும் குறையில்லாத சுற்று சூழலை கொண்டிருக்கும்  நமது நாட்டில் நாம் தெரிந்துகொள்ளாத பல விஷயங்கள் உள்ளன. கேமரன்மலையையும்   கெந்திங்மலையையும்  தெரிந்து வைத்திருப்பதுபோல, நாம் வேறு எந்த மலைக்கும் அதிகம் போவதுமில்லை அதை பற்றி தெரிந்துகொள்ள பிரயத்தனப்படுவதுமில்லை.

பிரேசர்மலை பல மலைகளையும் வனங்களையும் தன்னில் அடக்கி அழகுபார்க்கும் பகாங் மாநிலத்தில் இருக்கிறது. பத்துமலையிலிருந்து கிளம்பினாள் சரியாக இரண்டு மணி நேரத்தில் பல ஏரிகளையும் வனங்களையும் உட்கிராமங்களையும் ரசித்தபடி  பிரேசர்மலையின் வாசலை அடையாளம்.




ஏழு மலை உச்சிகளுக்கு மத்தியில் பிரேசர்மலை தனி அழகுடன் விளங்குகிறது. லூயிஸ் ஜேம்ஸ் பிரேசர் (Louis James Fraser) எனும் ஸ்காட்லாந்துகாரர் 1890-ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தைக் கண்டுபிடித்தார் என வரலாறு நமக்கு சான்று கூறுகிறது.

பெரிய கேளிக்கைகள் இல்லாத இந்த மலையில் சுற்றுப்பயணிகளுக்கு என்ன இருக்கிறது என்று கேள்வி கேட்பவர்கள் நிச்சயமாக அங்கு போகாமல் இருந்துவிடுவது நல்லது. மலேசிய மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் பிரேசர்மலை இயற்கை ஆர்வலர்களுக்கு கிடைத்திருக்கும் அரும்பெரும் கொடையாகும். ஆயிரக் கணக்கில் பயணிக்கும் வலசப்பறவைகள் தங்கி செல்லும் இடமாக பிரேசர்மலை இருக்கிறது. மிக முக்கியமாக அதன் சீதோஷண நிலையை அனுபவிக்கவும், நகரத்தின் கோரா பிடியிலிருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் இயற்கை ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் பிரேசர்மலையாகத்தான் இருக்கும்.

குட்டி இங்கிலாந்தில் நாம் ரசிக்கக்கூடிய அம்சங்களை  வாசகர்களுக்காக தொகுத்திருக்கிறேன்.





பிரேசர் மலை மணிக்கூண்டு

பிரேசர் மலை யின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த மணிக்கூண்டு, நில அடையாளமாக (landmark) திகழ்கிறது. அங்கிருந்து பிற இடங்களுக்கு செல்வதற்கான வழியை வரையறுத்துக்கொள்ளலாம். இந்த மணிக்கூண்டு காலனிய கால கட்டட வடிவத்தில் மிக அழகாகவும் சுற்றுப்பயணிகள் அதிகம் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஓர் அடையாள சின்னமாகவும் திகழ்கிறது . காலனித்துவ காலத்து கட்டிடங்களை அதன் எழில் மாறாமல் பராமரித்து அரசு அலுவலகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக தபால் நிலையம் போலீஸ் நிலையம் தகவல் பரிமாற்ற நிலையம் கிளினிக் உட்பட சில உணவு விடுதிகளும்  இந்த காலனித்துவ கட்டிடங்களில் செயற்பட்டு வருகின்றன.



பறவைகள் சரணாலயம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வலசை பறவைகள் தங்கி செல்லும் அழகை பார்க்க வெளிநாட்டவர்களும் பறவை ஆராய்ச்சியாளர்களும் குழுமும் இடங்களில்  பிரேசர் மலை முதன்மையாக இருக்கிறது.1524 மீட்டர் உயரத்தில் அமைய பெற்றிருக்கும் பிரேசர் மலை, அது கொண்டிருக்கும் காடுகள் தனித்த தனித்துவம் கொண்டதாகும். தினமும் விதவிதமான வண்ணமயமான  பறவைகளை பார்க்கவும் அது எழுப்பும் இனிய ஓசைகளை கேட்கவும் ஒரு தவம்போல காத்துகிடக்கும் புகைப்படகளைஞர்களும் ஆச்சரியமாக தெரிவார்கள். பறவைகள் சம்பந்தப்பட்ட விளக்க மையம் ஒன்றும் அங்கு உள்ளது. நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லாமல் இந்த bird interpretive centre செயல்பட்டு வருகிறது.  ஒரு குழுவாக சென்றால் bird watch செய்வதற்கு 'பறவை மனிதர்' திரு.துரையை அழைக்கலாம். பிரேசர் மலை அதிசயங்களில் அவரும் ஒருவர்.

இயற்கை செல்தடங்கள் (nature trails)

கிட்டதட்ட 8 செல்தடங்களை மிக பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள் வனதுறையினர். கிட்டதட்ட 20-லிருந்து 70 நிமிடங்கள் வரை  சில trails-களை  நடந்து முடித்து விடலாம். பைன் மர காடுகளின் செல்தடம் மட்டும் மிக நீளமானது. அதை கடக்க 5 மணியிலிருந்து 8 மணி நேரமாகும். பிரமாண்ட மரங்கள், சிலந்தி வலைகள், நீர் வீழ்ச்சியின் சத்தம், பூச்சிகளின் இனிய கானம், பறவைகள் இசைக்கும் கீதம் இவற்றோடு வனத்தின் பச்சை வாசத்தோடும் நமது அதிகாலை நேரத்தை இந்த செல்தடத்தில் பதித்தால் இந்த மலை ஏன் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படுகிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.



விளையாட்டுகள்

குழுமையான சூழலுக்கு ஏற்ற விளையாட்டுகளை பொழுதுபோக்குக்காகவும் புதிய அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்துவைத்திருக்கிறார்கள். குறிப்பாக அம்பு எய்தல் (10 நாண்களுக்கு 10 ரிங்கிட் கட்டணம்) குழாயின் வழி ஊசி எய்தல், மிதி படகில் (Allan's Water) பயணித்தல், குதிரை சவாரி உள்ளிட்ட விளையாட்டுகள் குறைந்த கட்டணத்தில் விளையாடலாம்.


ஜெரியாவ் நீர் வீழ்ச்சி ( Jeriau waterfall )

பெரிய அளவில் பிரமாண்ட நீர்வீழ்ச்சி இல்லை என்றாலும், சிறியதற்கு இருக்கும் எளிமையான அழகு இந்த 6 மீட்டர் நீர் வீழ்ச்சியிடம் உண்டு. மிக குளிர்ந்த நீரில் உடல் நடுங்க நடுங்க நீராடுவது கூடுதல் அனுபவமாகும். சனி -ஞாயிறுகளில் சுற்றுப்பயணிகள்  அங்கு கூடுதலாக வந்தாலும், வார நாட்களில் யாரும் இருக்க மாடடார்கள். மேலும், அந்த குளிந்த தேசத்தில் ஐஸ் போன்ற நீரில் குளிக்க பெரும்பான்மையானவர்கள் துணிவதில்லை. விருப்பமுள்ளவர்களும் துணிவுள்ளவர்களும் சவாலை எதிர்கொள்ள அழைத்துக்கொண்டே இருக்கிறது ஜெரியாவ் நீர் வீழ்ச்சி.


மலர் தோட்டம்

"பனி விழும் மலர் வனம்' என்ற இளையராஜாவின் பாடல் பிடிக்காதவர்கள் இருப்பார்களா?  அந்த பாட்டுக்கு ஏற்ற ஒரு காட்சியை காண வேண்டும் என்றால் பிரேசர் மலைதான் சரியான தேர்வு. பனியிலும் மழையிலும் குளித்து நீர் துளிகள் பூக்களின் மீது உறங்கும் காட்சி மனதிற்கு பரவசமளிக்கக்கூடியது. அழகான வித்தியாசமான மலர்களை காண  அங்கிருக்கும் பூந்தோட்டங்களுக்கு எந்தக் கட்டனமும் இல்லாமல் போய் வரலாம்.

பிரேசர்மலையில் இருக்கும் நேரத்தில் மனது தானே பஞ்சுபோல இலகுவாவதை தடுக்கவே முடியாது. வெண்பனி நம்மை சலவை செய்து மன இறுக்கத்தை தகர்த்தும். தினம் தினம் புதிய புதிய பிரச்னைகளை சந்திக்கும் நம்மை இதுபோல சில இடங்கள்தான் மீட்டுகொடுக்கும். மனதிற்கு பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டு, தெரிந்த இசையை தாளம் போட்டுக்கொண்டு, பிடித்த புத்தகத்தை வாசித்துக்கொண்டு பிடித்த மாதிரி ஒரு நாள் வாழ்ந்து பார்க்க சென்று வாருங்கள் பிரேசர் மலை.

குறிப்பு:

பொது போக்குவரத்தில் பிரெசர்மலைக்கு செல்ல விருப்பவர்கள் கோலாலம்பூரிலிருந்து கோலகுபு பாருக்கு பேருந்தில் வழிச் சென்று அங்கிருந்து வாடகை கார் எடுத்துச் செல்ல வேண்டும். அல்லது புடு செண்டரிலிருந்து வாடகை வண்டி இருக்கிறது. நேரடியாக எந்த பொதுபோக்குவரத்தும் இல்லை. அதோடு காலை ஏழு மணி முதல் இரவு எட்டு மணிக்குள் மலையில் ஏறுவதும் இறங்குவதும் முடித்துக் கொள்வது பாதுகாப்பாகும்.

தங்குவதற்கு மினி சமையல் அறையோடு குறைந்த விலையில் அறைகள் வாடகைக்கு கிடைக்கின்றன. சாப்பிடுவதற்கும் சமைப்பதற்கும் எளிமையான உணவுகளாக தயார் படுத்திக்கொள்ளலாம். அங்கும் சில உணவு விடுதிகள் இருக்கின்றன.











  





2 கருத்துகள்: