1984-ஆம் ஆண்டு எழுதி இதுவரை 4 முறை பதிக்கப்பட்ட எழுத்தாளர் சுஜாதாவின் 'எப்போதும் பெண்' என்ற நாவலை நான் அண்மையில் வாசித்தேன். இந்த ஆண்டில் நான் வாசித்த புத்தகங்களில் என்னைக் கவர்ந்த புத்தகங்களில் இந்தப் புத்தகத்திற்கு தனியிடம் உண்டு. புத்தகத்தின் பின் அட்டையில் இப்படி எழுதியிருக்கிறார்.
‘இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன் பக்தியும்தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்’
–சுஜாதா.
இதை அவரின் ஒரு வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாம். நமக்கு எந்த ஏமாற்றமும் இருக்காது. பெண்ணாகவே வாழ்த்திருக்கிறார் சுஜாதா. இடையிடையில் விஞ்ஞானத்தையும் போதிக்கிறார். 4 பெண்கள் மையக்கருவாக இருந்தாலும் பொண்ணு என்கிற சின்னுதான் இந்த நாவலாக இருக்கிறாள். வாசகர்கள் பெண்ணாக இருந்தால் சின்னுவாக மாறி விடுகிறார்கள். சின்னுவுக்கு குழந்தையில் பருவத்தில் ஏற்படும் அத்தனை அனுபவங்களையும் இவர்களும் சந்தித்து இருப்பார்கள்.
மூன்று அண்ணன்களோடு வளரும் அவள், அதில் ஒரு அண்ணன் அவனின் பிறப்புறுப்பை அவளிடம் காண்பிக்கிறான். அதைத் தொட்டு பார்க்க விரும்புகிறாயா என்றும் கேட்கிறான். அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என இவள் கோபப்பட செய்தாலும் ஆண்-பெண் உறுப்பின் சௌகரியங்களை அதன் பிறகு யோசிக்கத் தொடங்குகிறாள்.
தனக்குக் கிடைக்கும் சினேகிதிகள், ஏற்படும் பாலியல் சீண்டல்கள், ஆணின் பார்வை, அறியாமை, பயம் என பொதுவாக நம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் வளர்க்கப்படும் வித குறித்து மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் சுஜாதா. ஆதிக்க மனோபாவத்தில் இருக்கும் ஆண், அவளை அவள் அனுமதியில்லாமல் சீண்டுவதில் வெற்றியடைகிறான். பெண் அந்தச் சீண்டலில் தான் இடம் கொடுத்து விட்டதாகவும் தோற்றுவிட்டதாகவும் புனிதத்திற்கு களங்கம் வந்துவிட்டதாகவும் குற்றவுணர்வு கொள்கிறாள். இப்படிக் குற்ற உணர்வு கொள்ளவேண்டியவளாக அவர் கற்பிக்கப்பட்டிருக்கிறாள் என்பதைப் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார் சுஜாதா.
பொருளாதார ரீதியில் ஆணும் பெண்ணும் சமமாக இல்லாத வரையில் பெண்ணுக்கு இரண்டாம் பட்ச இடம்தான் என்பதையும் அந்த இரண்டாம் பட்ச இடத்திற்குப் பெண்ணை சுற்றத்தார்கள் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பெண்களுக்காக பேசியிருக்கிறார்.
பெண் என்பவளை வீழ்ச்சி ஸ்தானத்தில்தான் படுக்க வைக்கிறார்கள். ஆண் எப்போதும் மேல். பெண் எப்போதும் தீனமானவள். அவள் எப்போதும் செயல்பாட்டு வினை. அவள் தொடப்படுகிறாள். தடவிக் கொடுக்கப் படுகிறாள். ஆண் எப்போதும் செய்வினைக்காரன்.
மூன்றாவது பெண்ணாகத்தான் இருக்கும் என்று ஆசைப்பட்டு பிரசவத்தில் ஏமாற்றம் ஏற்பட அவள் நான்காவது குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகவே இல்லை சின்னுவின் தாய். உண்மையில் அவள் கலவிக்கே தயாராக இல்லை. அன்றைய நாளின் உரையாடல் இப்படி நடக்கிறது.
“வேண்டாம் எனக்குப் பயமாக இருக்கிறது.”
“ஒண்ணும் ஆகாது வா”
“எனக்கு நாள் கணக்கு தெரியலைன்னா. வேண்டாம்”
“கணக்குத் தப்பு”
“தூக்கம் வருது”
“நீ பாட்டுக்குத் தூங்கு”
“விடுங்கோ”
“நான் பாத்துக்கிறேன்.”
அம்மா கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டாள்.
உண்டான கரு, பெண்ணாக இருக்கலாம் என்று அவளைச் சேர்ந்தவர்கள் ஆசை காட்டிய பிறகும் அதைக் கலைப்பதற்குத்தான் அவள் முயன்றாள். ஆனால், அது முடியாமல் போகிறது. இந்தப் பிரசவத்தோடு இறந்துவிடுவேன் எனப் பயப்படுகிறாள். சுகப்பிரசவம் நடக்கிறது. பெண் பிறந்ததற்காக மகிழ்கிறாள்.
புதிதாக மாற்றப்பட்டிருந்த பெட்ஷிட்டில் அதிகப்படியாக ரத்தக் கறை படிந்திருக்க, படுக்கை ஓரத்திலிருந்து ரத்தம் சொட்டு சொட்டாக கொட்டுவதைப் பார்த்து பதறிப் போய் ஓடினாள் நர்ஸ். டாக்டர் வந்து பார்த்தபோது அம்மா இறந்திருந்தாள்.
இதுவே அந்த மகளுக்கும் நடக்கிறது. ஆனால், மகள் ஆண் குழந்தைக்காக ஆசைப் பட்டிருந்தாள். பிறந்ததோ பெண்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக