'குவா மூசாங்’ கிளந்தான்
மாநிலத்தில் மிக முக்கியமான பகுதி இது. மலேசியாவின்
கிளந்தான் மாநிலம் என்பது மலாய்க்காரர்கள்
அதிகமாக வசிக்கும் இடமாகும். இஸ்லாமிய மாநிலமாகவே அதை அடையாளப்படுத்துவார்கள். அம்மாநிலத்தின் ஒரு
பகுதியான குவா மூசாங்கில் அதிகமான
பழங்குடிகள் வாழ்கின்றனர். குறிப்பாக அங்குத் தெமியார் சமூகத்தைச்
சேர்ந்த 12 பிரிவுகள் கொண்ட பழங்குடி கிராமங்கள்
இருக்கின்றன.
குறிப்பாகவே
பேராக் மாநிலத்தின் சில பகுதியிலிருந்து பஹாங்
மாநிலம் தொடங்கிக் கிளந்தான் மாநிலம் வரையில் நூற்றுக்கும்
அதிகமான பூர்வக்குடி குடியிருப்புகள் நமக்குக் காணக்கிடைக்கின்றன.
ஆனால்,
அந்தக் கிராமங்களில் பெருவாரியாக, அரசினரால் நவீனமாக்கப்பட்டு நுகர்வு கலாச்சாரத்திற்கு மாற்றப்பட்டு
விட்டது. காட்டுக்குள்லிருந்தவர்களை நகர வெளிக்குக் கொண்டு
வந்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு, சுண்ணாம்பு பூசிய கற்வீடுகள், மின்சாரம்
- தண்ணீர் உள்ளிட்ட வசதிகளைச் செய்துகொடுத்து அவர்களின் சுயம் மற்றும் அடையாளத்தை
இழக்க வைத்திருக்கும் காட்சிகளையும் மிகுந்த வலியோடு கண்டுக்கொண்டிருக்கிறோம்.
குவா மூசாங் பூர்வக்குடிகள் எதிர்நோக்கியிருக்கும்
பிரச்சனைக்குச் செல்வதற்குமுன் மலேசிய பூர்வக்குடிகள் குறித்த
எளிய அறிமுகத்தை முதலில் காணலாம். பூர்வக்குடி சிறுவன் |
மலேசிய பழங்குடியினரில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த 18 பிரிவினர் இருக்கின்றனர். தீபகற்ப மலேசியாவில் மட்டுமே 876 பூர்வக்குடி கிராமங்கள் உள்ளன. பஹாங், பேராக், கிளந்தான், திரெங்கானு இன்னும் பிற மாநிலங்களிலும், கலிமந்தான் பகுதியை நோக்கியிருக்கும் சபா-சரவாக் மாநிலங்களிலும் அடர்ந்த வனங்களில் அவர்கள் வாழ்கின்றனர். கிழக்கு மலேசியா- மேற்கு மலேசியா என வாழும் பழங்குடி மக்களிடத்தில் சில ஒற்றுமைகளும் பல வேறுபாடுகளும் உண்டு.
பூர்வக்குடிகளின்
தொழில்
தொடக்கக்
காலத்தில் இவர்கள் மலை தேன்,
மிருகங்களின் தோல், இறைச்சி உள்ளிட்ட
சில பொருள்களை வெளி மனிதர்களிடத்தில் அரிசி,
புகையிலை, இன்னும் சில பொருள்களுக்காகப்
பண்ட மாற்று செய்துவந்தனர். பின்
பணப்புழக்கம் அவர்களையும் தொற்றிக்கொண்டது. வனத்திலிருந்து கிடைக்கப்பெறும் பொருள்களைக் கொண்டு செய்யயப்படும் பூர்வக்குடிகளின்
கைவினை பொருள்களுக்கு இன்றும் தனி மதிப்புண்டு.
ஆதி மனிதர்கள் என உலகமெங்கும் கூறப்படும்
பூர்வக்குடிகளை அரசு எப்படி நடத்துகிறது?
அவர்கள் மீது வைக்கப்படும் பார்வை
என்ன? நாடும் நாட்டு மக்களும்
அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதையும் மதிப்பும் என்ன? மலாயில் சக்காய்
என்பார்கள். ‘அடிமை’ என்பது
அதன் அர்த்தம். பூர்வக்குடிகள் அந்த வார்த்தையை மோசமான
வசவாகப் பார்க்கிறார்கள். பிறரை சிறுமை படுத்தும்
நோக்கில் மலேசியர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் வார்த்தை அது.
இந்தக்
காடுகள் அழிக்கப்படுவதற்குமுன், எந்த ஒரு கடும்
மழையிலும் , மழைநீரை பூமி இழுத்துக்
கொள்ளும் தன்மை கொண்டிருந்தது. ஆனால்
இப்பொழுது, அந்நீர் நேரடியாக ஆற்றுக்குள்
சென்று விடுகிறது. குவா முசாங்கில் ஆரம்பிக்கும்
இந்த ஆறு, நேரே கோலக்
கிரை சென்றடைகிறது.
இதன் விளைவு சற்றுக் கடுமையாக
மழை பெய்யும்போது குவா மூசாங் வெள்ளம்
ஏற்படும் அல்லது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அபாயமாகும். 'பூர்வக்குடியின் உரிமையை கொல்லாதே' என்று கூறும் பதாகை |
''கிளந்தான்
அரசு இயற்கைச் சுற்றுச்சூழல் குறித்துக் கவலை கொள்வதில்லை, அக்கறை
காட்டுவதில்லை. காடுகள் தொடர்பில் பாஸ்
மாநில அரசின் கொள்கை என்னவென்பது
தெளிவாகத் தெரியவில்லை. மரங்கள் கண்டபடி வெட்டப்படுகின்றன.
மறுநடவும் செய்யப்படுவதில்லை. நீண்ட காலமாகவே இப்படி
நடந்து வருகிறது. முதிர்ந்த மரங்களைத்தான் வெட்ட வேண்டும். கட்டாயமாக
மறுநடவு செய்ய வேண்டும் என்ற
சட்டதிட்டங்கள் அம்மாநிலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை” எனப் பிஎஸ்எம் கடசியின் மத்திய செயல்குழு உறுப்பினர்
ராணி ராசையா 2015 ஒரு பத்திரிக்கை செய்தியில்
குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவு கூற
விரும்புகிறேன்.
பூர்வகுடிகள்
வீடுகள் இடிக்கப்பட்டன. அதைத் தடுக்கும் முயற்சியில்
ஈடுபட்ட பூர்வகுடி இளைஞர்கள் தடுத்து நிறுத்தப் பட்டார்கள்.
அவர்களின் கைக்கு விலங்கு போடப்பட்டது.
ஆதிமனிதர்கள் எனும் பூர்வக்குடிகள் வனத்துறையின்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பின்
அவர்களை நீதி மன்றத்திலும் நிறுத்த
பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும்
40 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
210 அதிகாரிகள்
வனம் புகுந்து அராஜகம் செய்துள்ளதை அங்கு
எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உறுதிசெய்கின்றன. பூர்வகுடிகளை அச்சுறுத்தும் அல்லது எச்சரிக்கும் விதமாக
வானத்தை நோக்கி குண்டொலி எளிப்பியுள்ளனர்
அதிகாரிகள்.
பலகாலமாகக்
காட்டு மரங்களை வெட்டி ஏற்றுமதி
செய்துவரும் அரசு பாதிக்கும்மேல் வனங்களை
அறுவடை செய்துவிட்டது. கன்னிக்காடு என்ற ஒன்று கிளந்தான்
வனத்தில் இருக்கிறதா என்ற சந்தேகமே இருக்கிறது.
இதற்கு
வன்மையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்கத் தொடங்கினர் பழங்குடியினர். அதன் விளைவு வனத்துறைக்கும்
பூர்வக்குடிக்கும் ஏன் மாநில அரசுக்கும்கூடப்
பயங்கர முரண்பாடு ஏற்படத்தொடங்கியது.
இதன் தீவிரம் சில ஆண்டுகள்
நீடித்த வேளையில் இதன் எதிர்வினையாகப் பூர்வகுடிகள்
தரப்பிலிருந்து முறையான கடிதம் ஒன்று
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
வனத்துறைக்கு அனுப்ப பட்டது. அந்தக்
கடிதத்தில் காட்டு மரங்களை இனியும்
வெட்டக்கூடாது எனவும் அந்த நடவடிக்கை
2015 மே மாதம் தொடக்கம் அமலுக்கு
வர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், பூர்வக்குடிகள் கண்டனமும் எதிர்ப்பும் ஒரு புறமிருக்கத் தொடர்ந்து காட்டு மரங்களைச் சூரையாடுவதிலிருந்து பொருப்பானவர்கள் பின்வாங்கவில்லை. அதன் விளைவு பழங்குடிகளை அச்சுறுத்தும் அளவுக்குக் கொண்டு போய் விட்டது.
பூர்வகுடிகள் கைது செய்யப்பட்டபோது |
காடு அழிப்பு அல்லது ஆக்ரமிப்பு
பூர்வக்குடிகளின் குடில்வரை வந்துவிட்ட பிறகு, இனி பொறுத்திருப்பதில்
பலனில்லை என்றுதான் போராட்டத்தில் குதித்தனர் பழங்குடி மக்கள். அதன் பலனாக
வனத்துறையும் காவல்துறையும் நீதித்துறையும் அரங்கேற்றிய நாடகம்தான் பழங்குடிகளுக்கு எதிராக நடத்திய கைது
நடவடிக்கையும் நீதிமன்ற விசாரனையும்.
பிரச்னையை
வெறுமனே வீட்டிலிருந்து முகநூலிலும் இணையத்திலிருந்தும் பார்க்காமல் அவர்கள் வாழும் இடத்திற்கே
சென்று விவரங்களைச் சேமிக்க எண்ணம் கொண்டு
நானும் தோழர் சிவா லெனினும்
கிளந்தானை நோக்கி கிளம்பினோம்.
மழையில்
நனைந்து, செம்மன் குழம்பில் ‘எங்கள்
உரிமையைப் பறிக்காதே’ என்ற வாசகத்தோடு எங்களை வரவேற்றது குவா
மூசாங் பழங்குடி கிராமம். கிராமத்திற்குள் நுழைவதற்கு முன்பே அரசு பராமரிக்கும்
பழங்குடிகள் பள்ளிக்கூடத்தையும் காண முடியும்.
குவா மூசாங் பழங்குடிகளைப் பழங்குடிகளா
என்று கண்டு கொள்ளவே எங்களுக்குச்
சிரமாக இருந்தது. அவர்களின் முகம் மலாய்க்காரர்கள் முகத்
தோற்றத்துடனும் நவீன வாழ்க்கை முறையிலும்
இருந்தது. சற்று தயங்கியே கேட்டேன்.
பூர்வக்குடியின் தலை ஆபரணம் |
பிரச்னை
தொடர்பாக வினவியபோது…
“எங்களின்
இருப்பிடத்திற்கு (வனத்திற்கு) அத்துமீறி நுழைபவர்களை நாங்கள் பொறுத்துகொண்டுதான் இருந்தோம்.
இதுவரை எங்களுக்கு ஏற்பட்ட அத்தனை இன்னல்களும்
இந்த நாட்டு மக்களால் கவனிக்கப்படவில்லை.
ஆனால், இப்போது எங்கள் குடில்களை
இடித்துத் தள்ளுகிறார்கள்? இந்த வனத்தின் புனிதத்தைக்
கெடுத்துவிட்டார்கள். வன மரங்கள் லட்ச
கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன. போராட்டத்திற்கிடையில் இன்னும் மரங்கள்
மண்ணில் சாய்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு மரமும் வெட்டப்படும்போது
எத்தனை உயிர் பறிக்கப்படுகிறது என
யாருக்கும் தெரியாது.
பூர்வகுடிகள்
அணியும் தலை ஆபரணம், எங்களின்
அடையாளங்களில் முதன்மையாக அதை
செய்வதற்கு தேவையான பொருள்கள் இனி
கிடைக்காமல் போகலாம். இதைவிடப் பெரும் அநீதி இருக்குமா
எனத் தெரியவில்லை.
அனைத்திற்கும்
மேலாக எங்கள் வனத்தைக் காப்பாற்ற
நாங்கள் போராடும் வேளையில் எங்களைப் பயங்கரவாதிகளைப்போலப் பிடித்துச் சென்றதும் தடுப்புக் காவலில் வைத்ததும் நீதிமன்றத்திற்குக்
கையில் விளங்கு பூட்டி கூட்டிச்
சென்றதும் எத்தனை கொடூரம்? வனத்தோடு
பிறந்து வளர்ந்து அதனோடு நெருங்கிய உறவு
கொண்டிருக்கும் வனமக்களான எங்களுக்கு இனி இழப்பதற்கு ஏதும்
இருக்கிறதா எனத் தெரியவில்லை. வனத்தினூடான
எங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு விட்டது? தண்ணீர் மாசு அடைந்து
விட்டது? வன மிருகங்களுக்குப் போக்கிடம்
இல்லாமல் போய்விட்டது. எங்கும் காடழிப்பு! பெரும்
துரோகம். இதற்கிடையில் மீடியாவை குறித்துப் பேச வேண்டாம் என
நினைக்கிறோம்”
நான் அதற்கு மேலும் அவர்களைச்
சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. மனித
தன்மையே இல்லாமல் நடந்துகொண்ட வனத்துறையையின் மீதும் மாநில அரசின்
மீதும் கடுமையான விமர்சனத்தைப் பழங்குடிகள் வைக்கின்றனர். மேலும், வனத்தை அழிவிலிருந்து
தடுக்க அவர்கள் சட்ட நடவடிக்கையை
எடுக்கவும் போராட்டத்தில் குதிக்கவும் தயாராகிவருகின்றனர். ‘மழைக்காடுகளின் மரணம்’ என்ற புத்தகத்தில் எழுத்தாளரும் சமூக ஆர்வளருமான நக்கீரன் இப்படி எழுதியிருக்கிறார்.
போர்னியோவின்
ஒரு குறிப்பிட்ட காட்டுப் பகுதி ஒரு பழங்குடி
சமூகத்தினர் வசம் இருந்தது. 1986-ல்
ஒரு மிகப்பெரிய நிறுவனம் வெறும் 2,000 மலேசிய வெள்ளியைக் கொடுத்து
69 லட்சம் ஏக்கர் காட்டை ஆக்ரமித்துக்கொண்டது.
மில்லியன் டாலர் கணக்கில் கொள்ளையடித்த
அந்நிறுவனத்திடம் அந்த அப்பாவி மக்கள்
தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், இறுதியில் அந்நிறுவனத்திற்கே தினக்கூலிகளாக மாறி போயினர்.
(பக்கம்
23)
அந்தக்
குறிப்பிட்ட காட்டுப்பகுதியும் அந்தப் பழங்குடியும் எங்கள்
நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை அறிந்தபோது
எத்தனை பெரிய ஆபத்தில் பழங்குடிகள்
சிக்கியிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.
வணிக நிறுவனங்கள் செய்யும் சதி வேளைக்கு நாட்டு
அரசாங்கம் எப்படித் துணை போகிறது என்றே
தெரியவில்லை. நிர்கதியாக நிற்பது பழங்குடிகள் மட்டுமல்ல
எங்கள் நாடும்தான்.
நானும்
தோழர் சிவா லெனினும் பழங்குடிகளிடம்
விடைபெற்று திரும்பினோம். சாலையில் இரு கனரக லாரிகள்,
அங்கங்களைச் சிதைத்து மரப்பிணங்களை ஏற்றிக்கொண்டு எங்களைக் கடந்து போனது. நக்கீரன் சார் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு செய்தியை நான் சிவாவிடம் கூற தொடங்கினேன்.
நன்றி ஆக்காட்டி
ஏப்ரல்
- ஜூன் 2017 இதழ்
பழங்குடிகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும் இந்நொடியில் களப்பணியில் சேகரித்த தகவல்கள் கொண்ட இக்கட்டுரை விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்ப வாய்ப்புகள் அதிகம், இதே கட்டுரை மலேசியாவின் பத்திரிக்கைகளிலோ அல்லது இதழ்களிலோ வெளிவந்திருந்தால் அது வெளிப்படுத்தும் உண்மையின் உக்கிரம் வேறாக இருந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். பழங்குடிகளுக்கு எதிராக நடக்கும் அரசியல் சதுரங்கத்தில் மலேசியாஅரசு,எதிர்க்கட்சியினர்,மர-மாபியா என அனைவரும் தத்தமது பணியை செவ்வனே நிறைவேற்ற "பரிதவிக்கும் பழங்குடியினர்-அவர்களின் வாழ்க்கை வேரறுக்கப்படுவது தான் பெரும் சோகம்"."The Revenant" படத்தில் வரும் ஒரு கூற்றை நினைவுகூர விரும்புகிறேன்.அதில் ஒரு "செவ்விந்திய பழங்குடி" ஆயுதம் எடுப்பதற்கான காரணமாகச் சொல்வார் " எங்கள் நிலத்தை எடுத்துக்கொண்டீர்கள்,எங்கள் விலங்குகளை,தாவரங்களை ஏன் எங்கள் பெண்களைக்கூட... இப்போது உங்கள் ஆயுதங்களை எங்களை ஏந்தச் செய்கிறீர்கள் (அல்லது) ஏந்த வைக்கிறீர்கள்". இவை எத்தனை வலியான வார்த்தைகள்.நன்றி யோகிமா.
பதிலளிநீக்குமற்றவர் உடமையில் உரிமையில் அத்து மீறி தலையிடுவதுதானே சாதனை என நினைக்கிறார்கள். விளைவுகள் குறித்து யார் கவலை படுகிறார்கள் தோழர்.
நீக்கு-நன்றி யோகி