எனக்கு மிகவும் சமீபத்தில் அறிமுகமான எழுத்தாளர் ஜீ.முருகன். 'சாம்பல் நிற தேவதை' 'மரம்' ஆகிய அவரது நூல்களின் வழியாகதான் அவரை அடையாளம் கண்டுகொண்டு அவரின் அறிமுகத்தை தேடிப் போனேன். எனது கடைசி தமிழ் நாட்டு பயணத்தில் சில ஆளுமைகளின் சந்திப்புகளில் ஜீ.முருகன் முக்கியமானவர். சில நிமிடங்களில் விடை பெறலாம் என்று தொடங்கி அரை நாள் வரை தொடர்ந்தது எங்கள் உரையாடல்.
அந்த உரையாடலை நேர்காணலாக தொகுத்திருக்கிறேன். ஜவ்வாது மலையின் மண் வாசமும் கிராம சூழலும் விவசாயக் காட்சிகளும் எங்கள் உரையாடலுக்கு பிடில் வாசித்து கொண்டிருந்தன . இனி பல்லவியும் சரணமும்..
எனது முதல் கேள்வி அவரிடம் இப்படித்தான் தொடங்கியது...
ஜீ.முருகனை சந்திக்க போகிறேன் என்றதும் சில நண்பர்கள் “அவரையா” என்று எச்சரிக்கை தொனியை வெளிப்படுத்தினார்களே, அது ஏன் தோழர்?
அப்படியா என சிரித்தவர்,
“தெரியலையே யோகி. என்
சில கதைகளை படித்துவிட்டு ஏதோ ஒரு முடிவுக்கு அவுங்களாகவே வந்திடுறாங்க. ஆனால், ‘கறுப்பு நாய்க்குட்டி’ என்ற சிறுகதை
தொகுப்பில் அம்மாதிரியான கதைகள் இல்லை."
(சிரிக்கிறார்).
ஆண் பெண் சந்திப்பு என்றாலே குதர்க்கமாக சிந்திப்பதுதான் தமிழர் இயல்பு போல. சரி.
வாசிப்பு
என்பது என்னவென்று எடுத்துக் கொள்ளலாம், அது ஒருவனுக்கு
என்ன தரவியலும் என நீங்க நினைக்கிறீங்க?
பேசுதல் கேட்டல் என்பது போலத்தான் எழுத்தும் வாசிப்பும். தகவல்களை, கருத்துகளை, உணர்வுகளை எழுத்து மூலம் கடத்துதல் வாசிப்பில் நிகழ்கிறது. புனைவை வாசிப்பதற்கும் அ-புனைவை வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வாழ்க்கையுடன், வரலாற்றுடன் ஒரு படைப்பாளியின் எதிர்கொள்ளல்தான் படைப்பு எனும்போது வாசகனும் அந்த நிழலான எதிர்கொள்ளலை படைப்பில் சந்தித்து ஒரு புதிய அனுபவத்தை, புரிதலை கண்டடைகிறான். அது ஒரு நகைச்சுவையோ, துணுக்குச் செய்தியோ, துப்பறியும் கதையோ, அம்புலி மாமா கதையோ அல்ல. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளல், தொடர்ந்த தேடலின் ஒரு நிலை. அதனால்தான் மேலும் மேலும் நாம் வாசிக்கிறோம். வாசிப்பில் அர்த்தம் கூடுதலும் அர்த்தம் அழிதலும் நடந்துகொண்டே இருக்கிறது. சில நேரங்களில் சிக்கலான விவரிப்பு மூலம் ஒரு எளிய உண்மையை வந்தடைகிறோம். சில நேரங்களில் ஒரு வார்த்தை ஒரு பேருண்மையை உணர்த்திவிட்டுச் செல்கிறது.
எழுதுவதற்கு அடிப்படை உந்துதல் என்னவாக இருக்க முடியும்? உங்களுக்கு ஒரு படைப்பு ஆரம்பிக்கும் போது எது உந்துதலாக இருக்கிறது?
வாழ்வின் பல்வேறு கூறுகள் எனக்குள் வந்து சேகரமாகிக்கொண்டிருக்கையில் ஏதோ சில
கூறுகள் சட்டென்று ஒரு இணைப்பை உருவாக்கி வாழ்வின் மீது ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது. அது கருத்தாக
இல்லாமல் ஒரு ஆன்மிக அனுபவம் போல நமக்குள் தோன்றும். அது ஒரு இலக்கிய அந்தஸ்தை
கொண்டிருக்கும். தெளிவான காட்சியாக இல்லாமல் ஒரு படிமம் போல உருக்கொண்டு நிற்கும்.
பின்னர் எனது வேலை அதற்கான நிலவெளியையும் பாத்திரங்களையும் உருவாக்கி ஒரு நாடகம்
போல அதை மாற்றுவதுதான். அந்த படிமத்திற்கு கொடுக்கும் உருவம்தான் கதை. கதை என்பது
வெறுமனே ஒரு கதையல்ல, அது ஒரு பாவனை, உணர்த்துதல்.
நிறைய வாசிப்பவர்களுக்கு பிற எழுத்தாளர்களின் தாக்கம் வந்துவிடாதா? அது உங்களின் தனித்தன்மையை பாதிக்காதா?
பெரும்பாலும் இருக்காது. அப்படியான தாக்கம் வந்தாலும் அது சாதகமான விளைவுகளை தோற்றுவிக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றே சொல்வேன். காரணம் காஃப்காவையோ, போர்ஹேவையோ வாசிக்கும் போது நமக்குள் அது போன்ற படைப்பு ஒன்று உருக்கொண்டால் நிச்சயம் அது தரமான படைப்பாகவும் தமிழுக்கு புதிதான ஒன்றாகவே இருக்கும் எனும் போது அதற்கொரு முக்கிய இடம் இருக்கும்தானே. தனித்தன்மை என்ற பதத்துக்கு நான் அதிகம் முக்கியத்துவம் தருவதில்லை. நம் மீது மற்றவர்கள் உருவாக்கும் ஒரு சுமை அது. உங்கள் பாணிக் கதை இதுதான் முருகன் எனும் போது எனக்கு கூச்சமாக இருக்கும். அப்படியான ஒரு ஒருமையை இது வரை நான் எனக்குள் கண்டதில்லை. என்ன எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை அதற்குரிய வடிவத்தில் எழுதி நிறைவு செய்வது மட்டுமே என் வேலை. தனித்துவமான ஒரு படைப்பாளியாக பரிமளிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. முக்கிய படைப்பாளிகளை படிக்கும் போதுதான் புனைவின் சாத்தியங்கள் எதுவென்று புரியும். எதை எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.
நல்ல நாவல், நல்ல சிறுகதை என்பதை யார் அல்லது எது
நிர்ணயிக்கிறது? நல்ல எழுத்து என்ற ஒன்று உண்டா ?
நல்ல என்பதை நேர்மை, உண்மை என
மாற்றிக்கொள்ளலாம். உண்மையான படைப்பு என்பது ஒரு உயர்ந்த நோக்கத்துடன்தான்
இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்ன எழுதினால் வாசகர்கள் விரும்பிப்
படிப்பார்கள், நம் புத்தகம் விற்கும் என்ற நோக்கத்துடன்
எழுதும் எழுத்து நல்ல படைப்பாக இருக்க முடியாது. அது ஒரு உற்பத்தி, வியாபாரம் சார்ந்த ஒரு நிகழ்வு. படைப்பாளி, தான் உ ணர்ந்த வாழ்வை
படைப்பாக்கம் செய்யும் போது, வாழ்வின் கீழ்மைகளை
தாட்சண்யமின்றி
கேள்விக்குள்ளாக்கும் போது அது சிறந்த படைப்பாகிறது. அது வாசகனைப் புதிய தரிசனத்தை
நோக்கி அழைத்துச் செல்லுகிறது. முதல் பத்தியோ சில கதைகளில் முதல் வரியோ கூட அக்கதை
எதை நோக்கி எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்திவிடும்.
படைப்பாளி எனப்படுபவன் சமுகத்தின் தேவையா, விளைவா அல்லது
அறிவு முதிர்ச்சியின் ஆடம்பரமா? (Sophistication of high
level thinking)
விளைவும், தேவையும்தான். ஆடம்பரம் அல்ல. படைப்பாளி
ஒரு போராட்டக்காரனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவன் கலக்காரனாக இருந்தே
தீரவேண்டும். வாழ்க்கை உருவாக்கும் உணர்த்தும் முரண்பாடுகளை, சிக்கல்களை உணர்ந்து அதை படைப்பாக்கம் செய்ய வேண்டிய
முக்கிய பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. அதனால் அவன் இருப்பு முக்கியத்துவம்
பெறுகிறது. நம் வாழ்வை ஒரு ஆன்மா பார்த்துக்கொண்டிருக்கிறது என ரஷ்ய மக்கள்
டால்ஸ்டாயை உணர்ந்திருந்தார்கள். அது போலத்தான் படைப்பாளியின் ஆன்மா இருக்க
வேண்டும். அது பக்குவப்பட்ட ஒரு மனம், ஒரு ஊடகம். இதை
எழுதினால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள். அடையாள முத்திரை அல்லவா நம் மீது
விழும் எனத் தயங்கி நீங்கள் முக்கியம் என உணர்ந்த ஒரு விஷயத்தை தாண்டிச் செல்வது
பொறுப்பற்ற செயல். அப்படியானால் எழுத்தாளன் என்ற அடையாளத்தை ஆதாயம் தேடும் ஒரு
கருவியாக நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் சந்தித்தவர்களில் உங்களின்
அகத்தூண்டலுக்கு (inspirational) காரணமாக இருந்தவர்கள் யார், அடுத்து
நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள், என்ன
காரணத்தினால் அவரை சந்திக்க விரும்புகிறீர்கள்?
என் அகத்தூண்டுதலுக்குக் காரணமாக இருந்தவர் கோவை ஞானி. அவர் என்னைக் குறித்த
ஒரு நம்பிக்கையை, எதிர்பார்ப்பை உருவாக்கினார். என் படைப்பு மனத்தை
உருவாக்கியதில் எண்ணற்ற எழுத்தாளர்களுக்கு பங்கிருக்கிறது. ஆரம்ப காலத்தில், படைப்பாளிகளை சந்திக்கும், உரையாடும்
ஆர்வம் இருந்தது. அவர்கள் அருகிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பினேன். அவர்களை
சந்திக்கும் போது அவர்கள் படைப்புகளைப் பற்றிப் பேசுவதை முடிந்த அளவு தவிர்ப்பேன்.
அது முகஸ்துதியாக மாறிவிட வாய்ப்புள்ளது. அதேநேரம் பெரிய எழுத்தாளர்களையோ அவர்களுடைய எழுத்துகளையோப் பற்றிய
அவர்களுடைய அபிப்பிராயங்கள் எனக்கு பயனுள்ளதாக இருந்தன. படைப்புகளை எப்படி
வாசிப்பது, அணுகுவது என்பதில் அச்சந்திப்பு புதிய
வழிகளை எனக்குக் காட்டியிருக்கின்றன. தற்போது யாரை சந்திக்க விருப்பம் என்று
யோசித்தால், யாரும் இல்லை. அப்படிப்பட்ட ஆளுமைகள்
உயிருடன் இல்லை.
நீங்கள் ஒரு எழுத்தாளர் என எப்போது உணர்ந்தீர்கள்?
என் முதல் எழுத்து (நாவல்) 1993-ல் வந்தது.
இந்த 25 ஆண்டுகள் கழித்து சமீபத்தில்தான் நாமும் ஒரு எழுத்தாளன்
என்ற உணர்வு வந்துள்ளது. நம் எழுத்து ஆர்வத்துடன் படிக்கப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது என்பதை கண்டு கொண்டது இப்போதுதான்.
அதற்கு முன் அந்த கவனிப்பு என்னிடம் இருந்ததில்லை. தோன்றும் போது எழுதுகிறோம், புத்தகம் வருகிறது. யாரோ படிக்கிறார்கள், இதெல்லாம் பெரிதான நிகழ்வு ஒன்றுமில்லை என்பது போன்ற
மனப்போக்குதான் என்னிடம் இருந்தது. தற்போது அது மாறி இருக்கிறது. மிகப்பெரியப்
பொறுப்பை நான் உணர்கிறேன். இன்னும் நேர்மையாகவும் தரமாகவும் படைப்புகளை உருவாக்க
வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. மேலும் சக படைப்பாளிகளுடனும் வாசகர்ளுடனும் ஒரு
அர்த்தபூர்மான உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. ஒரு
படைப்பாளன் தன் படைப்பாளுமையை மட்டுமல்ல சூழலையும் வளமாக்குகிறான். புதிய படைப்பு
வெளிகளை அவன் உருவாக்கியபடி செல்கிறான்.
ஒரு படைப்பை எழுதிய பிறகு எவ்வளவு திருப்தியாக உணர்கிறீர்கள் ? அதை இன்னும் சிறப்பாக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபடுவது உண்டா?
நான் ஒரு தாட்சண்யமற்ற எடிட்டர். ஒரு கதையின் முதல் வரைவை வேகமாக எழுதி
முடித்த உடன் அதை ஆறப்போட்டுவிடுவேன். சில நாட்கள், சில வாரங்கள்
கழித்துத்தான் அதை சீரமைக்கும் வேலையை தொடங்குவேன். பல்வேறு மனநிலைகளில்
அதைப்படித்துத் திருத்துவேன். இசை போல அது எனக்குள் உருவானப் பின்பு பிசிறு
இல்லாமல் அது இருக்க வேண்டும் என மெனக்கிடுவேன். வார்த்தைகளை, வரிகளை தாட்சண்யம் இல்லாமல் வெட்டி எறிவேன். பெரும்பாலும்
பத்திரிகையில் வெளி வந்த பின்புதான் அது புத்தகத்தில் இடம் பிடிக்கும். அப்போதும்
திருத்துவேன். தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வந்த போதும் திருத்தம் செய்திருக்கிறேன்.
முக்கியமாக படைப்பாக்கம் நிகழும்போது நம்பிக்கையான நண்பர்களிடம் படிக்கக் கொடுத்து
அபிப்பிராயம் கேட்டு திருத்தம் செய்வதும் நடக்கும்.
படைப்பு மேலும் நேர்த்தியாக வெளிப்படணும் என்கிற இந்த மெனக்கெடல் படைப்பிலிருந்துதான் படைப்பாளியை தொற்றுகிறதா
அல்லது அது படைப்பாளியாக கருதிக்கொள்ளும் மாயையா?
முருகன் என்ற சாமான்யனை விட படைப்பாளி முருகன் உயர்ந்தவன்தான். படைப்பில்
ஈடுபட்டிருக்கும் வேளைகளில் நான் பூமியில் நடப்பதில்லை. அது ஒரு அற்புத பிரதேசம்.
அதில் வாழும் ஒரு உயிரினம் நான் என்ற உணர்வு இருக்கும். ஒரு படைப்பு என்னைவிட
மேலானாதுதான். சில கதைகளை வாசிக்கும் போது இவ்வளவு நல்ல விஷயங்களை எழுதிய நாம் ஏன்
இவ்வளவு தாழ்ந்த மனிதனாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். இதிலிருந்து
உங்களுக்கான பதிலை திரட்டிக்கொள்ளுங்கள் யோகி.
‘சாம்பல் நிற தேவதை’
தொகுப்பில்
எல்லா கதைகளுமே துயர் மண்டியவை. அவை ஏமாற்றம்,துரோகம், வஞ்சகம் இதையும் மீறிய நியாயங்களை தேடும் முயற்சியா அல்லது
அந்த மனப்போராட்டங்களின் களத்தில் அனைத்தையும் மீறி பீறிட்டு வரும் மனித வாஞ்சையா?
இத் தொகுப்பு வந்த போது மன அழுத்தம் மிக்க நெருக்கடியான ஒரு காலத்தைக்
கடந்துகொண்டிருந்தேன். அதன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல இக்கதைகள்
சிகிச்சையாக எனக்குப் பயன்பட்டிருக்கின்றன. சில விஷயங்களை படைப்பில்
வெளிப்படுத்திவிட்ட பிறகு மனம் விடுதலை கொண்டுவிட்டது போலத் தோன்றும். படைப்பாளி
தனக்கான நியாயத்தை படைப்பில் எழுதிவிட முடியாது. படைப்பு பிரபஞ்சத் தன்மை கொண்டது.
அதில் நமது ஆசாபாசங்களுக்கு இடமில்லை. இடம், கிழத்தி கதைகள்
ஒரு ஆணாக நான் தோற்றுப் போயிருந்ததைத்தான் எனக்கு கண்டு பிடித்துக்கொடுத்தன. பெண்
பற்றிய ஒரு புதிய புரிதலை எனக்குள் ஏற்படுத்தின. சக மனிதர்கள், விலங்குகள், இயற்கை ஆகியவற்றின்
மீதுள்ள வாஞ்சையால் கருணையால்தான் படைப்புகள் உருவாகின்றன என நான் நம்புகிறேன்.
சமகால தமிழ் இலக்கிய சூழல் குறித்த உங்க அபிப்ராயம் என்ன?
இன்று புதிதாக எழுத வந்துள்ளவர்களுக்கும் முந்தைய படைப்புப்
பாரம்பர்யத்துக்கும் இடையே ஒரு இடைவெளி விழுந்துவிட்டது போல தோன்றுகிறது. ஆனால், உறுதியாகச் சொல்ல
முடியவில்லை. சிறுகதையைப் பொறுத்தவரை அது
பற்றிய புரிதல் குறைவாக இருப்பதாக உணர்கிறேன். இதற்கு முந்தையப் படைப்பாளிகள், என்னைப் போன்றவர்கள் கூட காரணமாக இருக்கலாம். எதையோ ஒன்றை
நாம் கடத்தத் தவறி விட்டோமோ, சுயநலமாக நடந்துகொண்டு விட்டோமோ என்ற குற்ற உணர்வும்
ஏற்படுகிறது. அதனால் புதியவர்களோடு நான் தொடர்ந்து உரையாட விரும்புகிறேன். வலைப்பூ, முகநூல் உள்ளிட்டவை எழுத்தின் தரத்தை குறைத்துள்ளதை நாம் ஒப்புக்கொண்டே ஆக
வேண்டும். காரணம் எதை எழுதினாலும் எப்படி எழுதினாலும் அதைப் பாராட்ட பலர் காத்திருகிறார்கள்.
இதில் தன்னை மறுதளித்துக்கொள்வது சாத்தியமில்லை. தன்னை மறுதளித்துக்கொள்பவன், மறுஉருவாக்கம் செய்து கொள்பவனால் மட்டுமே தரமானப்
படைப்புகளை உருவாக்க முடியும். தன் எழுத்து புறக்கணிக்கப்படுவது இவர்களுக்கு
ஆத்திரம் ஊட்டுவதாக மாறிப்போய்விட்டது. நியாயமானப் புறக்கணிப்பை, விமர்சனத்தை ஒருவன் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அதை
விடுத்து தனது ஆதரவாளர்களிடம் போய் தஞ்சமடைபவன் நல்ல படைப்பாளியாக என்றும் உருவாக
முடியாது.
பெண்களின் மீது அகம் மற்றும் புறம் சார்ந்து பிரயோகிக்கப்படும் பாலியல் வன்முறைகள்... உங்களின் கதைகளில் எவ்வாறு
பிரதிபலிக்கின்றன.
ஆதிக்க மனோபாவமும், பாலியல் விஷயத்தில்
நேர்மையின்மையும் ஆண்களிடம் இருக்கிறது. பெண் என்பது தனக்குரிய ஒன்று என்ற
மனோபாவத்தில் இருக்கும் அவன் அது விலகிச் செல்லும் போதோ கிடைக்காமல் போகும் போதோ
ஆத்திரம் கொள்கிறான், வன்முறையை, சிதைத்தலை பிரயோகிக்கத் துணிகிறான். இதற்கு எதிர் திசையில்
பெண்கள் தங்களை காத்துக்கொள்ள தந்திரங்களையும், பொய்களையும், துரோகங்களையும் நிகழ்த்துபவர்களாக மாற வேண்டிய சூழல்
ஏற்படுகிறது. இதனால் நம்பிக்கை இன்மையும் இணக்கமற்ற சூழலும் ஆண் பெண் உறவில்
அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதிக அளவிலான பொய்களும், போலியான
அன்பும்தான் பெரும்பாலான காதலை நிர்ணயிப்பவைகளாக உள்ளன. சடங்கான, வன்மம் மிக்க கலவிகள்தான் பெரும்பாலும் நிகழ்கிறதோ என்றும்
எண்ணத் தோன்றுகிறது. இதன் பிரதிபளிப்புகள்தான் சாம்பல் நிற தேவைத் தொகுப்பில் உள்ள
சில கதைகள். ஆணாக எனக்குள் எழும் நியாயமற்ற கோபத்தை, வன்முறை
வடிவங்களை நேர்மையாக ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதிலிருந்து எப்படி தப்பிப்பது
என்பதுதான் கேள்வியாக உள்ளது. காரணம் பெண்களால் ஏற்படும் பித்த நிலை இந்த நியாய
தர்மங்களுக்கு அப்பால் நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்கிறது. காதலை
யாசிக்கும் போது ஒரு பெண்ணிடம் மண்டியிடவும், நம்பிக்கை
இன்மையும் சந்தேகமும் வரும் போது வன்முறையை நிகழ்த்தவும் அவமானப்படுத்தவும்
செய்கிறது.
நீங்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் . பத்திரிக்கையாளரின் அனுபவங்கள் எழுத்தாளரையும், எழுத்தாளரின் அனுபவங்கள் பத்திரிகையாளரையும் பாதித்ததுண்டா
அல்லது தாக்கம் நிகழ்த்தியதுண்டா?
பத்திரிகை அலுவலகத்தில் ஒரு மூத்த உதவி ஆசிரியராக பணி செய்திருந்தாலும் அது
ஒரு குமாஸ்தா வேலை என்றே சொல்வேன். நான் பணியாற்றிய பத்திரிகையின் கொள்கை முடிவு, சார்புத் தன்மை என் மனப்போக்குக்கு எதிரான திசையில்
அமைந்ததால் நான் என் கருத்துகளை அதில் எழுதியதே இல்லை. எழுதினாலும் அதை அவர்கள்
பிரசுரிக்க மாட்டார்கள் என்பது தெரியும். அது ஒரு அலுவலகம், அங்கும் சராசரி மனிதர்களே இருந்தார்கள் என்பதைத் தாண்டி
படைப்பாளியாக எனக்குள் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. அது புத்தகம், வாசிப்பு, எழுத்து என்பவைகளுக்கு
அப்பாற்பட்ட ஒரு இடமாகவே இருந்தது. ஒரு படைப்பாளனாக செயல்படுவதற்கான ஆற்றலை
எல்லாம் என்னிடம் உறிஞ்சிக்கொண்டு பதிலாக சம்பளத்தைக் கொடுத்தது. கடந்த ஒன்றரை
ஆண்டுகளாக நான் பணியில் இல்லை. இப்போதுதான் என்னால் விரும்பிய புத்தகங்களை வாசிக்க
முடிகிறது, கதைகளை எழுத முடிகிறது, எழுத்தாளனாக என்னை உணர முடிகிறது.
வனம் என்ற சிறுபத்திரிக்கை நடத்தியபோது சமரசமற்ற ஒரு நிலைப்பாட்டிலேயே
இருந்தீங்க, இப்போது ஆனந்த விகடன் - தடம் போன்ற பத்திரிக்கைகளுக்கு
சிறுகதை வழங்கும் போது இதை ஒரு சமரசம் என எடுத்துக்கொள்ளலாமா?
நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால் இது சமரசம்தான். ஏழு ஆண்டுகள் கழித்து கண்ணாடி கதையை எழுதினேன். யாருக்குக் கொடுக்கலாம் என யோசித்த போது முதலில் நின்றது தடம்தான். இக்கதை உடனே பிரசுரமானால் மீண்டும் நம்மை நமக்குள் ஒரு படைப்பாளியாக உறுதிப்படுத்திக் கொண்டுவிடலாம் என்று தோன்றியது. அதனால் கொடுத்தேன். அது பரவலாக வாசிக்கப்பட்டது. மேலும் தடத்தில் பங்கேற்றிருப்பவர்கள் என் நண்பர்கள். ஆனந்த விகடனுக்கும் ஒரு கதை கொடுத்திருக்கிறேன். சமீபத்தில் எழுதிய மற்ற கதைகள் எல்லாமே அடவி, இடைவெளி போன்ற சிறுபத்திரிகைகளில்தான் வந்துள்ளன. வார்த்தை என்ற கதையை மலைகள் என்ற இணைய இதழுக்காகக் கொடுத்தேன். இன்னும் நான் சிறுபத்திரிகை எழுத்தாளன்தான். குமுதம் நடத்தும் தீராநதியில் எனது இரண்டு கதைகள், கவிதைகள் வந்துள்ளன. காலச்சுவடு, உயிர்மை போல தீராநதியும், தடமும் ஒரு இடைநிலை இலக்கியப் பத்திரிக்கை என்ற எண்ணமே எனக்கு உள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை போல இலக்கிய அரசியலுக்குள் இவை இரண்டும் சிக்கவில்லை என்றே கருதுகிறேன்.
நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால் இது சமரசம்தான். ஏழு ஆண்டுகள் கழித்து கண்ணாடி கதையை எழுதினேன். யாருக்குக் கொடுக்கலாம் என யோசித்த போது முதலில் நின்றது தடம்தான். இக்கதை உடனே பிரசுரமானால் மீண்டும் நம்மை நமக்குள் ஒரு படைப்பாளியாக உறுதிப்படுத்திக் கொண்டுவிடலாம் என்று தோன்றியது. அதனால் கொடுத்தேன். அது பரவலாக வாசிக்கப்பட்டது. மேலும் தடத்தில் பங்கேற்றிருப்பவர்கள் என் நண்பர்கள். ஆனந்த விகடனுக்கும் ஒரு கதை கொடுத்திருக்கிறேன். சமீபத்தில் எழுதிய மற்ற கதைகள் எல்லாமே அடவி, இடைவெளி போன்ற சிறுபத்திரிகைகளில்தான் வந்துள்ளன. வார்த்தை என்ற கதையை மலைகள் என்ற இணைய இதழுக்காகக் கொடுத்தேன். இன்னும் நான் சிறுபத்திரிகை எழுத்தாளன்தான். குமுதம் நடத்தும் தீராநதியில் எனது இரண்டு கதைகள், கவிதைகள் வந்துள்ளன. காலச்சுவடு, உயிர்மை போல தீராநதியும், தடமும் ஒரு இடைநிலை இலக்கியப் பத்திரிக்கை என்ற எண்ணமே எனக்கு உள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை போல இலக்கிய அரசியலுக்குள் இவை இரண்டும் சிக்கவில்லை என்றே கருதுகிறேன்.
சினிமாவில் எழுத்தாளர்களின் பங்கு என்னவாக இருக்க முடியும் என நீங்க
நினைக்கிறீங்க?
சினிமாக்காரர்கள்தான் எழுத்தாளர்களை நோக்கி வரவேண்டும். ஒரு சிறுகதையையோ
நாவலையோதான் சினிமாவாக்க வாய்ப்புள்ளது. ஒரு சினிமாவைப் பார்த்து யாரும் கதை
எழுதுவதில்லை. ஆனால் சல்மான் ருஷ்டி போல எழுத வேண்டும் என்ற உந்துதலை வேண்டுமானால்
பெறலாம். அது கூட அபூர்வம்தான். அதே போல ஒரு நல்ல எழுத்தாளர் சினிமாவில் நல்ல
பங்களிப்பை தர முடியும் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அது வேறு கதை சொல் மொழி.
வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
மேலே சொன்ன பெரும்பாலானவை இன்று புதிதாக எழுத வந்திருக்கும் எழுத்தாளர்களுக்கு
பயன்படும் என்றே நம்புகிறேன். மேலும் இலக்கிய செயல்பாடு என்பது படிப்பதும்
எழுதுவதும்தான். மற்றவை எல்லாம் அதைக் கொண்டு ஆதாயம் தேடும் செயல்கள்.
இடம் பெயர்தல், சூழல் மற்றும் காலநிலை
மாற்றம் ஒரு படைப்பாளியின் படைப்பை எந்த விதத்தில் மாற்றும்,, நீங்கள் அதை உங்கள் படைப்புகளில் உணர்ந்தது உண்டா?
ஜே.ஜே.சில குறிப்புகள்’ நாவலில் ஒரு வரி இருக்கும். சில வற்றைப் புரிந்துகொள்ள கால
இடைவெளியும் சில வற்றைப் புரிந்துகொள்ள தூர இடைவெளியும் தேவை என. சிலவற்றை எழுத சில
ஆண்டுகள் தேவை. ‘இடம்’ கதையை எழுத முடிவு
செய்துவிட்டு மூன்றாண்டுகள் காத்திருந்தேன். மனச்சாய்வு, உணர்வெழுச்சி
இல்லாமல் விலகி நின்று பார்த்தல் புனைகதைப் படைப்பாளிக்கு அவசியம். லாசரா போல அதில் ஆழ்ந்தும் தோய்ந்தும்
உருகியும் எழுதலாம், அது வேறு வகை. பயணம்
எனக்கு பிடிக்கும் என்றாலும் அதிகம் பயணம் செய்ததில்லை. அதற்கான சூழல்
வாய்க்கவில்லை. அபத்தம் என்னவென்றால் நடப்பதற்கு கால்கள் ஒத்துழைக்காத இந்த
நிலையில்தான் கர்நாடகம், கேரளம் என பயணம்
செய்துகொண்டிருக்கிறேன். இதை வைத்து ஒரு நாவல் எழுதும் யோசனை இருக்கிறது. அதன் முதல்வரி
இப்படி இருக்கும் ‘என் கால்கள் ஓய்ந்த
போது எனது பயணம் தொடங்கியது’.
நன்றி: அம்ருதா
நன்றி: அம்ருதா
சிறப்பான நேர்காணல். படைப்பை ஏன் வாசிக்கவேண்டும் என்கிற எளிய வினாவிற்கு நம்பிக்கையான பதில்கள் மறைமுகமாக இங்கே சொல்லப்பட்டிருக்கின்றன. படிப்பவர்களின் பாசாங்குத்தனம் மெல்ல மறைந்து இயல்பான மனம் வாய்க்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு