கவிஞர்கள் நிறைந்திருக்கிற இந்த இடத்தில், கவிதை எழுதாத, கவிதைத் தொகுப்பு வெளியிடாத நான் கவிதைத் தொகுப்புப்பற்றிப் பேசுவது சரியா? அதுவும் நவீனக் கவிதைகள் பற்றி? பெண் சார்ந்த உணர்வுகளை, வலிகளை ஒரு பெண்ணால்தான் உணரமுடியும். எழுத முடியும் என்று பேசப்படுகிற சூழலில், ஒரு பெண் எழுதிய கவிதைகள்பற்றி ஒரு ஆண், அதாவது நான் பேசுவது அவ்வளவு பொருத்தமா? என் பேச்சுக்கோ, எழுத்துக்கோ, நவீன பெண் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மத்தியில் அவ்வளவு மரியாதை இல்லை என்றே கருதுகிறேன்.
பெண் உணர்வுகளைப்பற்றி ஒரு பெண்ணால்தான் எழுத முடியும் என்று சொன்னால் ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளைப்பற்றி ஐந்து வயது, பத்து வயது குழந்தைகள்தான் எழுத வேண்டும். ஒரு பிணத்தைப்பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு பிணம்தான் கதை எழுத வேண்டும். தலித்களின் வாழ்வுகுறித்துத் தலித்தான் எழுதவேண்டும். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் தங்களைப்பற்றிய கதைகளை எப்படி எழுதுவார்கள்? இதுபோன்ற சில கேள்விகளைக் கேட்டால் நான் பெண்ணிய விரோதியாக்கப்படுவேன். நிஜமான எழுத்தாளன் சாதிய பிற்போக்குத்தனத்திற்கு, மதவாதத்துக்கு, மூடநம்பிக்கைகளுக்கு, சமூகத்தின் அத்தனை இழிவுகளுக்கும் எதிரானவன்.
என்னுடைய எழுத்தைவிட நான்தான் முக்கியம், நான் சொல்வதுதான் சரி, அதுதான் இறுதி உண்மை. அந்த உண்மைக்கு மாற்று இல்லை என்று கருத்துச் சுதந்திரம் பேசுகிற சூழல். காலம். முகநூலில் போடப்படுகிற ஸ்டேடஸ்களையே கவிதை என்று கொண்டாடுகிற சூழல், காலம். கவிதைக்கும், கருத்துக்கும் இடைவெளியின்றிபோன, உரைநடைக்கும், கவிதைக்குமான இடைவெளி குறைந்து போன, எது கவிதை? எது கருத்து? எது ஸ்டேட்டஸ் என்று கண்டுபிடிக்கமுடியாமல் குழம்பிப்போய் நிற்கிற சூழலில், காலத்தில் நான் யோகியின் கவிதை தொகுப்புப்பற்றிப் பேச வேண்டும்.
தமிழ்க்கவிதையின் வளர்ச்சி, தமிழ்மொழியின், கல்வியின், அறிவின் வளர்ச்சி முகநூலில் எழுதப்படுகிற துணுக்குகளால் ஏற்படாது. கவிதை எழுதுவதும், கவிதையை வாசகனிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் இன்று எளிதாகியிருக்கிறது. ஆனால் வாசகனின் மனதில் ஒரு கவிதையை நிலைநிறுத்துவது மட்டும் சிரமமாகியிருக்கிறது. ஒரே நாளில் ஒரு கவிஞர் பத்துக்கும் மேற்பட்ட கருத்து போடுகிறார். பத்து போட்டோ போடுகிறார். பத்து கவிதையும் போடுகிறார். எதுஎதற்கோ நூறு லைக்கும் போடுகிறார். வாசகரின் மனதில் நிற்பது கவிஞரின் கவிதை அல்ல, கருத்து அல்ல. போட்டோ மட்டுமே.
கவிதை என்ற வடிவத்தில் சொல்வதற்கு அனுபவங்களும், விசயங்களும் இருந்தால் மட்டும் போதுமா? அனுபவத்தையும், விசயத்தையும் சொல்வதற்கு உயிருள்ள சொற்கள் வேண்டாமா? உயிருள்ள கவிதையை எழுத, உயிருள்ள சொற்கள் வேண்டும். உயிரற்ற சொற்களால் எழுதப்படும் கவிதையும் உயிரற்றதுதான். உயிருள்ள சொற்களால் எழுதப்படுவதே கவிதை, அப்படி எழுதுகிறவரே கவிஞர். நல்ல கவிதைகளை எழுதுவதைவிடவும் முக்கியமானது, நல்ல கவிதைகளைப் படிப்பது. நல்ல கவிதைகளைப் படிக்காதபோது, நல்ல கவிதைகளை எழுத முடியாது.
எலினா ஃபெர்ரான்டெ என்பவர் இதுவரை ஏழு நாவல்களை எழுதியுள்ளார். கால்நூற்றாண்டு காலமாக மேற்குலக இலக்கிய அதிசயமாகக் கருதப்பட்டுவருபவர். எலினா என்பவர் யார், அவருடைய உண்மையான பெயர் என்ன, வயது என்ன, அவரது பிறப்பு, வாழ்க்கை எதுவுமே தெரியாது. அவருடைய ஒரு புகைப்படம்கூட இதுவரை வெளியாகவிலலை. ‘நியூயார்க் டைம்ஸ், பாரிஸ் ரிவ்யூ’ ஆகிய பத்திரிக்கைகளில் அவருடைய நேர்காணல்கள் வந்துள்ளன. எல்லா நேர்காணல்களும் ஈ.மெயில்கள் மூலமே வெளிவந்ததுள்ளன. இத்தாலிய பெண் எழுத்தாளர் என்பதைத்தவிர அவரைப்பற்றிய வேறு தகவல்கள் அறியக்கிடைக்கவில்லை. அவருடைய ஏழு நாவல்களுமே உலகமெங்கும் புகழ்பெற்றவையாக இருக்கின்றன. நாம் எப்படி இருக்கிறோம்?
***
யோகியினுடைய ‘யட்சி’ கவிதைத் தொகுப்பில் வடிவ ரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் முழுமை பெற்ற பல கவிதைகள் இருக்கின்றன. நான் வரைபவனின் மனைவி, என் மரணத்தைச் சம்பவிக்க, என்னிடம் பல கதவுகள் இருந்தன? என் காலையில், என் கருவறை, என் அன்பே மூன்றாவது முறையாக, யட்சி, கால்கள், இன்று யட்சிகளின் திருவிழா, யட்சியின் இசை, நாட்குறிப்பு காதல் போன்றவற்றை நல்ல கவிதைகள் என்று சொல்ல முடியும். கவிதைகளாக மலர்ந்திருக்கக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட பல கவிதைகளும் – தொகுப்பில் இருக்கின்றன.
யோகி பிரம்மாண்டங்கள்பற்றி, அதீதங்கள், அதித உன்னதங்களைப்பற்றி, கோட்பாடுகளை முன்வைத்து பெரியபெரிய சொற்களைப் போட்டு தன்னுடைய கவிதைகளை எழுதவில்லை. அன்றாட வாழ்வில் நடக்கும் சின்னச்சின்ன விசயங்கள், மனதை கறுக்கும் விசயங்களைப்பற்றிதான் எழுதியிருக்கிறார். அன்பை பகிர்வதிலும், பெறுவதிலும் இருக்கிற சிக்கல்கள், அன்புக்கான ஏக்கம், சக மனிதர்களால் ஏற்படுத்தப்படும், வெளிப்படுத்த முடியாத மனதின் காயங்கள், கருவறையின் வலிமை, கருவறையின் வெற்றிடம் தரும் கண்ணீர், மனதின் அலைக்கழிப்பு, வலியை சுமப்பது, வலியை கடந்து போவது எப்படி என்று மனதின் காயங்களின் வலியை சொல்வதுதான் யோகியினுடைய கவிதைகளின் மையமாக இருக்கிறது.
நான் வரைபவனின் மனைவி – கவிதை முக்கியமானது. வரைபவனின் மனைவிக்குப் பெயர் – வரைபவனின் மனைவிதான். அவளுக்குப் பெயர் இல்லை. கருப்பு, சிவப்பு, உயரம், குட்டை என்று எந்த அடையாளமுமில்லை. வரைபவனின் மனைவிக்கு மட்டும்தான் இந்த நிலையா? ஆசிரியரின் மனைவி, கிளர்க்கின் மனைவி, மருத்துவரின் மனைவி, மேனேஜரின் மனைவி, டெய்லரின் மனைவி, டிரைவரின் மனைவி – இப்படிப் பல மனைவிகள். உலகம் முழுவதும் மகளாக, மனைவியாக, அம்மாக்களாக இருக்கிறார்கள். பெயர்களாகக்கூட இல்லை. அடையாளங்களாக இல்லை. பெண்ணாக இல்லை. இந்த அடையாளமற்ற தன்மை நமது பண்பாட்டால், கலாச்சாரத்தால், சடங்குகளால், சாமிகளால், கோவில்களால், புராண இதிகாச கதைகளால் ஏற்பட்டது. உருவாக்கப்பட்டது. அடையாளம் வேண்டும் என்றால், இருக்கிற அடையாளத்தைத் துறக்க வேண்டும். அதற்கு நம்முடைய பண்பாட்டை, கலாச்சாரத்தை, கோவிலை, சாமியை, சடங்கை துறக்க வேண்டும் என்பதுதான் யோகியினுடைய கவிதை தரும் செய்தி. நான் வரைபவனின் மனைவி கவிதையைப் போலவே நாட்குறிப்பு காதல் – கவிதையும் முக்கியமானது. மனித மனதின் வேறொரு முகத்தை இக்கவிதை காட்டுகிறது. நல்ல கவிதை. இது அனுபவத்தைத் தந்தது என்று சொல்ல முடியாது. கவிஞரின் காயத்தை, கண்ணீரை, வலியை, துயரத்தை, கைவிடப்பட்டதின் வலியை சொல்கிறது என்று சொல்லலாம். தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையைப்பற்றியும் சொல்வதற்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.
யோகி தன்னுடைய நெஞ்சில் கனன்றுகொண்டிருந்த நெருப்பை – கவிதைகளாக எழுதி ‘யட்சி’ என்ற தொகுப்பாகத் தந்திருக்கிறார். வாசகனுடைய யூகங்களையும், அனுமானங்களையும் தாண்டி தனக்குள் பல புதிர்களை, ரகசியங்களை யோகியின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. யோகியின் கவிதைகளைப் படித்து முடித்தபோது, அவர் எனக்குக் கவிஞராகத்தான் தெரிந்தார். பெண் கவிஞராக அல்ல. ஒரு கவிஞராக யோகி போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அந்தத் தூரம் மிக அருகில் இல்லை.
சங்ககாலக் கவிதைகள், பக்தி இலக்கியம், காப்பியம் சித்தர் பாடல்களும் மற்றுமுள்ளவையும் பல நூற்றாண்டுகள் கடந்தும் எப்படி இன்னும் உயிரோடு இருக்கின்றன என்பதை அறியும்போது, கற்கும்போது யோகியும் கவிஞராக இருப்பார். நல்ல கவிதைகளை எழுதுவார் என நம்பலாம்.
(நன்றி: இமையம் அண்ணா..)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக