வெள்ளி, 22 ஜூலை, 2016

நினைவுச்சின்னம் (புத்தக பார்வை 1)

ஆசிரியர்: அ.ரெங்கசாமி
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பகம் : பிந்தாங் அச்சகம், மலேசியா
புத்தப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 537
விலை  : 30.00 வெள்ளி

மலேசியாவின் தற்கால இலக்கியம் குறித்துப் பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. தற்போது பதிப்பிக்கப்படும் புத்தகங்களில் சில புத்தகங்கள் முக்கியமானவையாகவும் மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு வலு சேர்த்துகொண்டும் இருக்கின்றன.

தொடர்ந்து நவீன இலக்கியம் பேசுவது மலேசிய தமிழ் மக்களிடையே ஆரோக்கியமற்ற சூழலாக ஏற்படுத்துவதால், 50 சதவிகித வாசகர்கள்கூட நவீன இலக்கியம் தொடர்பாக அறியாமலே இருக்கிறார்கள். ஆனால், எல்லா வகை விமர்சனங்களையும் எதிர்கொண்டு, நவீன இலக்கியத்தையும் தாண்டி பின்நவீனத்துவ இலக்கியம் படைக்கும் அளவுக்குக் கூடச் சில படைப்பாளர்கள் மலேசியாவில் தகுதி பெற்றிருக்கின்றனர். 

மூத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம் என்ற நாவல் மிக முக்கியமான புத்தகமாக மலேசிய இலக்கியத்தில் கருதப்படுகிறது.
மரண இரயில்வே என்று அழைக்கப்பட்டும், சயாம் - பர்மா இரயில்பாதை அமைப்பதில், இரண்டாம் உலகப்போரின்போது அடிமைகளாக வலுக்கட்டாயமாகக் குடும்பத்திடமிருந்து பிரித்துக் கூலிகளாகக் கொடுமைபடுத்தப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. சயாம்-பர்மா ரயில் தண்டவாளம் அமைக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட கூலிகளுக்கு முறையான உணவு இல்லாமை, மருத்துவ வசதியில்லாமை, நோயினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமின்றி விடப்பட்ட தமிழர்களின் அவல வாழ்வை மலேசியர்கள் பேசும் மொழியிலேயே ‘நினைவுச்சின்னம் பேசுகிறது.

இந்த நரகத்துக்கு வந்து சேர்றதுக்குள்ளே நாலு பேத்தை இழந்துட்டு வந்திருக்கிறோம். இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ (நி.சி.பக்.149). என்று ரயில்பாதை அமைக்கக் கூலியாக வந்திருக்கும் கன்னியம்மா பெருமூச்சுவிடும்போது அடுத்தடுத்த நடக்க விருக்கும் மரணங்கள் குறித்து நம்மாள் அசை போடாமல் இருக்க முடியாது.

ஒண்ணுரெண்டாச் செத்திருந்தால் ஒழுங்காப் புதைச்சிருப்பாக. ஒரே குழியிலே பத்து பதினைஞ்சைப்போட்டிட்டு, மண்ணைத் தள்ளியும் தள்ளாமலும் வந்திருக்கிறாக. வெள்ளம் அதெல்லாத்தையும் அரிச்சுக்கிட்டு வந்து சேர்த்திடுச்சு.” (நி.சி. பக்.229).
இப்படித் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பிணங்களோடே வாழும் வாழ்க்கையையும் அந்தப் பீதியையும் மரணப் பயத்தையும் நாவல் முழுதும் நமக்குச் சொல்லப்படுகிறது.
உண்மைச் சம்பவத்தின் அடைப்படையில் உயிரிழந்த அத்தனை மக்களுக்கும் அ.ரெங்கசாமியின் இந்த நாவல் ஒரு நினைவுச்சினமாகவே உயிர்த்து நிற்கிறது.


80 வயதை நெருங்கிக்கொண்டிருந்தவர் இந்த நினைவுச்சின்னத்தை எழுப்புவதற்காகச் சயாம் மரண ரயில்வே கட்டுமானப் பணியில் நேரடியாக ஈடுபட்ட பாட்டாளிகளைச் சந்தித்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து அவர்களையும் புகைப்படத்தோடு பதிவு செய்திருக்கிறார். மலேசிய வரலாற்றுப் புத்தகத்தில் சயாம் ரயில்வே கட்டுமானம் குறித்த தகவல்கள் இருந்தாலும் இந்தியர்களைப் பற்றிய விவரங்களும் அவர்களின் உயிர் தியாகம் குறித்தும் மேம்போக்காகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குறையை அ.ரெங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவல் தீர்த்து வைத்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக