ஞாயிறு, 22 மே, 2016

காடு

புத்தகம்: காடு (ஜெயமோகன்-சாருடைய 5-வது நாவல்)
எழுதியவர்: ஜெயமோகன்
வெளியீடு : தமிழினி
விலை : 400 ரூபாய்


‘இருநூறு பக்க நோட்டுப் புத்தகம் முழுக்க முடிவடையாமல் துடிதுடிக்கும் வரிகள்’ இப்படி ஒரு வரி இந்த நாவலில் வருகிறது. ‘காடு’ நாவலில் நானூறுக்கும் அதிகமான பக்கங்கள் அப்படித்தான் துடித்துக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
ஜெயமோகனின் ‘காடு’ நாவலை நான் இரண்டாவது முறையாக வாசிக்கிறேன். முதல் முறையைக் காட்டிலும் அந்தக் காட்டிடம் இப்போது நான் சில இடங்களில் முரண்படுகிறேன். சில இடங்களில் கிரியைப்போல அங்கிருந்து வர மறுக்கிறேன்.
2012-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். இலக்கிய நண்பர்கள் மத்தியில் அந்த நாவலை பலர் சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்க ஒரு நண்பரிடம் இரவல் வாங்கி வாசித்தேன். நான் மாற்று இலக்கியம் அல்லது நவீன இலக்கியம் (எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்) வாசிக்கத் தொடங்கிய தொடக்கக் காலக் கட்டம் அது. புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாடு வேறு இருப்பதால் சில நாட்களுக்குள் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்பந்த்த்தில் அவசர அவசரமாக வாசித்துக்கொண்டிருந்தேன். வட்டார மொழிகளும், மலையாள மொழிகளும் மேலும் மலையக மக்களின் மொழி எனக் கொண்டிருக்கும் அந்த நாவலை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில்தான் வாசித்தேன். 10 பக்கங்களைக் கடந்த பிறகு, வாசித்ததை நினைத்துப் பார்க்கும்போது என்ன வாசித்தேன் என்பது நினைவில் இல்லை. கபிலன் வரிகள் என்று பல இடங்களில் சங்கப்பாடல்கள் வேறு. தலைவலியாக இருந்தாலும் நான் புத்தகத்தை வாசித்து முடித்து நண்பரிடம் திரும்பக் கொடுத்திருந்தேன். எப்படி இருந்தது. காட்டுக்குள் இருந்தமாதிரி இருந்தது என்று மட்டும் சொன்னேன். உண்மையில் அப்போது நான் காடுகளுக்குகூடப் பரீட்சயமானவள் இல்லை. அதன் பிறகு நானும் வாசித்தேன் என்ற அடிப்படையில் ‘காடு’ வண்டியில் ஏறி அமர்ந்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் குற்றணர்ச்சியாக இருந்தாலும் வாசித்தது உண்மைத்தானே என்று எனக்கு நானே நியாயம் கூறிக்கொண்டிருந்தேன். என்னை நானே எத்தனை நாள் ஏமாற்றிக்கொள்ள முடியும்?
அண்மையில் எனது இந்திய பயணத்தில் ‘காடு’ வாங்கி வந்தேன். மனது இருண்மையாகத் தோன்றும் நாட்களில் காட்டுக்குப் போனால், என் மனது ஆசுவாசமாகிறது என்பது எனது அண்மையில் கண்டுபிடிப்பாகும். அதனால், அதிகமாகக் காடுகளுக்குச் செல்வதை வழக்கப்படுத்திக்கொண்டேன். தற்போதைய உடல்நலக்குறைவால் பயணங்களைத் தள்ளி போடும்படி மருத்துவ ஆலோசனை இருப்பதால் ‘காடு’ நாவலையாவது வாசிக்கலாம் என்று தோன்றியது. வாசிக்கத் தொடங்கினேன்.
பழைய வாசிப்பிலுருந்து அறுபட்டு, முற்றிலும் புதிய வாசிப்பு மனநிலையைத்தான் காடு எனக்கு ஏற்படுத்தியது.
காட்டில் ஒரு மிளாவைக் கரிதரன் காண்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. தொடர்ந்து அந்த மிளா அதே நீரோடைக்கு நீர் அருந்த வருவதைத்தொடர்ந்து நமக்கும் பரீச்சயமாகிறது. ஜெயமோகனின் நாவலில் வளர்த்திருக்கும் காடு சொல்லில் வர்ணிக்கமுடியாதது. அவர் சொல்வது போலத் தெய்வங்கள் வனவிலங்குகளாகவும், மரங்களாகவும் பாறைகளாகவும் மலைகளாகவும் மழைகளாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்திற்குமேல் அந்தக் காடு நமக்கும் பரீட்சயமாகி, அந்தக் காட்டுடைய எல்லா இடங்களும் கண்முன் விரிந்துவிடுகின்றன.

இருந்தபோதும் சில இடங்களில் பார்ப்பனீயத்தைத் தூக்கிபிடிக்கும் கதாப்பாத்திரங்களின் வசனங்கள் நம்மை எரிச்சல் அடையச் செய்கிறது. அது கதாப்பாத்திரங்களின் குணாதிசயமாக நினைத்துக் கொண்டு கடக்கக் கொஞ்சம் சிரமாக இருக்கிறது. குறிப்பாக “அல்சேஷன் நாய் ஜாதியிலே பிராமணனாக்கும். புத்தினண்ணா புத்தி..அதுக்குப் புத்தியிருக்கே… பூட்டின கதவை தாக்கோல் போட்டு தெறந்துபோடும்” என்று எறும்புக் கண்ணன் லட்சுமணன் சொல்வது போன்று ஒரு வசனம் இருக்கு.

‘காடு’ நாவல் என்னைப் பொருத்தவரையில் பல திருப்புமுனைகள்தான் அதன் சுவாரஸ்யமாக நினைக்கிறேன். இந்தக் கதை இதை நோக்கிதான் நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இப்படித்தான் வரும் என்ற எண்ணத்தைச் செட் செய்துவிட்டுப் படித்துக்கொண்டிருந்தால் நம்மையும் அறியாமல் அந்த எண்ணம் மாறுபடும். வேறொரு எண்ணம் வரும். இப்படித்தான் நகரப்போகிறது என்று அந்தத் திசையில் பயணித்தால் வேறொரு பாதைக்குக் கதை மாறும். இப்படியான திருப்புமுனைகளைத் திரும்பி பார்க்கும்போது கதையின் இறுதி பாகத்தில் நின்றுக்கொண்டிருப்போம்.

நான் முதன் முதலில் யட்சி, நீலி என்று வன தேவதைகளின் நடமாட்டங்களைக் கண்டு கொண்டது இந்த நாவலின் வழிதான். அவைகளை ஜெ.மோ மிக அழகாகக் காட்சிபடுத்தியிருப்பார். தொடர்ந்து கதைகளில் அவர்களின் வருகையை எதிர்பார்த்தபடி மனது ஏக்கிக்கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாததாக எனக்கு இருந்தது.

‘காடு’ நாவலில் இடையிடையில் சில கிளைக்கதைகள் மழையைப் போன்ற சாரலை தூவி விட்டுச் செல்கின்றன. 5-வது பாகத்தில் வருகிறது அந்த வனநீலியின் கதை. அதை வாசிக்கும்போதே இந்தக் கதையை மையைப்படுத்திதான் கதை முடிவடையும் என்று தோன்றியது. அமானுஷ்ய விதைதான் அந்தக் கதை என நினைத்தேன்.

திருவனந்தபுரம் அரண்மனையின் இளையராஜா பலராம் வர்மாவுக்குப் பதினெட்டு வயதில் தீராத வாதரோகம் வந்து படுத்தபடுக்கையாகிறார். பல வைத்தியங்களுக்குப் பிறகு தனது 26 வயதில்தான் நடமாட தொடங்கும் வேலையில் மீண்டும் நோய் தாக்கப்பட்டுப் படுக்கையில் விழுகிறார். கொச்சி ராஜா குடும்பத்திலிருந்து அரண்மனைக்கு வந்த இளைய மகாராணி பாகீரதி பாய் சொன்னதின் பேரில் வடக்குமடம் நம்பூதிரி என்ற மகா வைத்தியர் அழைக்கப்படுகிறார். வைத்தியர் காஞ்சிர மரக்கட்டிலில் இளையராஜாவை படுக்கவைக்க வேண்டுமென்கிறார்.

காஞ்சிர மரம் ஓர் ஆள் படுக்கும் அளவுக்கு வளரக்கூடிய மரமல்ல. மேலும் அப்படி ஒரு மரம் கிடைக்காது; வைத்தியர் ஏமாற்றுக்கிறார் என்று சிலர் சொல்ல ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மரத்தை தேடுகிறார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்த மரம் ஓர் அடர்வனத்தில் கண்டு பிடிக்கப்படுகிறது. அந்த மரம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருக்கிறது. (இதை ஜெயமோகன், கருவறையின் இருளில் எழுந்த பிடாரி தெய்வம் போல மரம் நின்றிருந்தது என்கிறார்.) மரத்தை வெட்டுவதில் தொடங்கி அதில் கட்டில் செய்து முடிக்கும் வரை வேலை செய்தவர்கள் பலரும் ஏதோ ஒரு வகையில் இறந்துவிடுகின்றனர்.

இளையராஜா அந்தக் கட்டிலில் படுத்து குணமாவதோடு அழகனாகவும் காட்சி கொடுக்கிறார். ஆனால், அவருடைய தனியறையில் பெண்ணின் நடமாட்டம் உணரப்படுகிறது. இந்நிலையில் அவருக்குத் திருமணம் முடிக்கப்படுகிறது. அவரின் மனைவிதான் வனநீலியின் தொடர்பை கண்டு பிடிக்கிறாள்.  தான் கண்ட பெண்ணுக்கு தரைவரை நீண்ட கரிய கூந்தல் எனவும், பச்சை ஒளியூட்டும் கண்கள் எனவும், ரத்தமாக சிவந்த உதடுகள் கொண்டிருப்பதாகவும் கூறுகிறாள்.  வெட்டி வந்த காஞ்சிர மரத்தோடு அந்த வனநீலி ஒட்டி வந்துள்ளது என மாந்த்ரீகவாதி கண்டு பிடித்து சொல்கிறார்.

வனநீலியை விரட்ட மிகப்பெரிய சாந்தி பூஜை நடத்தப்படுகிறது. வெளியேறும் நீலியை கட்ட ருத்ரசாந்தி பூஜையும் நடத்தப்படுகிறது. வெட்டி வைத்த எருமைத் தலையில் வந்து நீலி அமர்ந்தாள். எருமையின் காதுகள் அசைந்தன. கண் விழிகள் விழித்து உருண்டன. நூற்றியெட்டு உயிர்பலி தந்து சாந்தி செய்யப்பட்ட பிறகு நீலி ஒரு பித்தளை ஆணியில் ஆவாஹனம் செய்யப்பட்டுக் காட்டில் புதிதாக முளைத்து வந்த காஞ்சிரம் மரத்தில் அறைந்து விட்டு வருகின்றனர்.
வனநீலியின் கதை இந்த இடத்தோடு முடிவடைய, பல வருடங்கள் கழித்துக் கிரி அந்த வனத்திற்குப் போகிறான். அங்கே நீலி என்ற மலைவாசி பெண்ணோடு தொடர்பு ஏற்படுகிறது.
இப்படியான காடுடைய கரம்பற்றியே நாவம் முழுக்கப் பயணித்துக்கொண்டிருப்போம். நிறையப் பெண்கள் இருக்கிறார்கள் இந்த நாவலில். அவர்களின் முலைகளைப்பற்றியும் அவர்களின் வாழ்வைப்பற்றியும் சிலாகிக்கப்படுகிறது. பெண்களின் உடலை அரசியலாக்கியிருக்கின்றார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அது ஒரு வகை எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
ஒரு கட்டத்தில் வனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தொடங்கும்போது நம் மனதிலும் சொல்ல முடியாத பதைப்பு ஏற்படுகிறது. கீரநாதனை (யானை) பாடம் செய்து மாட்டி வைத்திருக்கும் காட்சியைக் கூறும்போது அந்த யானைக்காக மனம் தவிப்பதை உணரலாம். இப்படிக் காடு நாவல் முழுக்கக் காட்டின் ஓர் அங்கமாகவும், வனவிலங்குகள் நமக்கு நெருக்கமாகவும் உணர வைத்திருக்கிறார் ஜெயமோகன்.

நான் காடு'-விட்டு வெளியில் வந்துவிட்டாலும் அதன் கதாபாத்திரங்களை விட்டுதான் வெளியில் வர முடியவில்லை. கரிதரன் நீலியை நினைத்து
'உன் நினைவென ஓயாது பெய்து
கொண்டிருக்கிறது மழை..' என்று சொல்வார். காடும் நமக்கு அப்படி ஓர் அனுபவத்தைக் கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக