வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 11

கூலி வேலையில் ஈடுபட்டிருந்த காட்டுநாயக்கர்கள்

இறுளர் சமூகத்தினரிடம் பேசிக்கொண்டிருந்த போதே,  "நாங்கள் காட்டு நாயக்கர்கள்" எனப் பேச தொடங்கினார் அண்ணன் மான்பா. மான்பா என்ற பெயர் வித்தியாசமே இருக்கே, எம்மாதிரியான பெயர்களை உங்கள் சமூகத்தில் வைக்கிறீர்கள் என்றேன். பார்பி, மான்பி, மாரி, பொம்மி என்ற பாரம்பரியப் பெயர்களைப் பெண்களுக்கும் மயிலிரகை, மான்பா, கோன்பா மாறன் என்ற பெயர்களை ஆண்களுக்கும் வைப்பதாகக் கூறினர். இது அவர்கள் வணங்கும் கடவுளின் பெயர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாகவே, நாயக்கன், நாயக்கர் என்பதைத் தெலுக்கு, வன்னியர் ஆகிய ஆதிக்கச் சாதியினர் பயன்படுத்துகின்றனர். ஆனால், காட்டுநாயக்கன் குடும்பத்தினர் தங்களின் பெயருக்கு பின்னாள் நாயக்கன் என்று விகுதி சேர்த்துக் கூறுகிறார்கள். இதனால், கொஞ்சம் குழப்பமும் ஏற்படுகிறது.
காட்டுநாயக்கர் என்பவர்கள் யார்?
ஆதிவாசிகள் வீட்டிற்கு முன் துளசி மாடம்
தமிழகத்தின் தொன்மைப் பழங்குடிகள் எனக் குறிப்பிடும் ஆறு சமூகத்தாரில் காட்டுநாயக்கரும் அடங்குவர். பக்தவத்சல பாரதி பழங்குடிகள் ஆராய்ச்சியின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார். பூம்பூம் மாட்டுக்காரர்களும் பன்றி வளர்க்கும் ஜோகிகளும் நடு இரவில் குடுகுடுப்பை அடித்துக் குறிசொல்லும் குடுகுடுப்பை நாயக்கர்களும் தங்களை ‘காட்டுநாயக்கன்’ என்று அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் வசிப்பிடங்களில் வைத்துள்ள சங்கப் பலகைகளில் இவ்வாறு எழுதி வைத்துள்ளதை சுட்டிக்காட்டும் பக்தவத்சல பாரதி காட்டுநாயக்கன் என்பது ஒரு வசதியான பொது அடையாளமாக விளங்கும் ஆர்வம் பல குடிகளிடம் ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது என்கிறார்.
தமிழகத்தில் வாழும் காட்டுநாயக்கன் (காடு=வனம், நாயக்கன்= தலைவன்) பழங்குடியினர் தம்மை ‘நாயக்கன்’ என்றே கூறிக் கொள்கிறார்கள். இவர்களில் நீலகிரி, வயநாடு பகுதிகளில் மிகுதியாகக் காணப்பட்டாலும் தமிழகம் முழுவதும் பரவி காணப்படுகிறார்கள். சமவெளிகளில் வாழும் காட்டுநாயக்கர்களை வேட்டைக்காரன் நாயக்கன், வேட நாயக்கன், சிகாரி நாயக்கன், நாயக்கன் ஆகிய பல பெயர்களில் மற்ற சமூகத்தினரால் அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் சோலை நாயக்கர் என்று கேரளத்தில் ஒரு பழங்குடி வசிக்கின்றனர். இவர்களுக்கும் காட்டு நாயக்கரும்கூட நிறைய ஒற்றுமைகளைக் காண முடிகிறது. குறிப்பாக இரு சமூகத்திலும் வேட்டையாடுதலில் நிறைய ஒற்றுமை உண்டு எனக் குறிப்பிடப்படுகிறது.
நாயக்கர் என்பது ஆதிக்கச் சாதியினராக அறியப்படும் வேளையில், பூர்வக்குடிகளில் நாயக்கர்கள் வேறுபடுகிறார்கள். இந்நிலையில் ‘நாயக்கன்’ என்பது ஒரு பொதுப் பெயராகப் பல சமூகத்தாருக்கு இருப்பது தெரிய வருகிறது. இச்சூழலில் மற்ற சமூகத்தாரிடமிருந்து காட்டுநாயக்கன் பழங்குடியைத் தனிமைப்படுத்திக் காட்டுவது அவர்களின் பூர்வ தொழிலாகிய வேட்டையாடி உணவு சேகரிக்கும் தொழிலாகும். அதனால்தான் இவர்களை மற்ற சமூகத்தார் சில இடங்களில் வேடன் என்றும் வேட்டைக்காரன் என்றும் அழைப்பது வழக்கம். திருவண்ணாமலைப் பகுதியில் வேட்டைக்கார நாயக்கன் என்றும் திருச்சி, கரூர் மாவட்டங்களில் வேட நாயக்கன் என்றும் கூறுகிறார்கள்.
நாயக்கன் (காட்டுநாயக்கன்) குறித்து முழு ஆய்வு ஒன்றை இஸ்ரேல் நாட்டு மானிடவியலர் நியூரிட் பேர்ட் டேவிட் என்பவர் நீலகிரி மாவட்டத்தில் மேற்கொண்டது மிக முக்கியமான பதிவாகக் கருதப்படுகிறது இங்குக் குறிப்பிடதக்கது.
தமிழகப் பழங்குடிகளை வரையறை செய்வதிலும் சில முன்னெச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியது உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிராமிய, சாதியச் சமூகமாக வாழ்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் வரலாற்று நெருக்கடிகளைச் சமாளிக்க மலைப் பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பாகத் தங்கிவிட்டனர். முதுவர், மலையாளி, பளியர், மலைப்பண்டாரம், குறும்பர், கணியான், அடியான், குறுமன், கொரகர் மற்றும் காட்டு நாயக்கரும் இதற்கு உட்பட்டவராக ஆகின்றனர் எனப் பக்தவத்சல பாரதி அவரது பதிவில் கூறுகிறார்.
காட்டு நாயக்கர்கள் தங்களின் தொன்மை என மகாபாரதத்தைக் கூறுகின்றனர். மகாபாரத்தத்தில் வரும் இடமசூரனின் வழி வருபவர்களே காட்டுநாயக்கர்கள் என்பவர்கள் இவர்கள்.
காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த கிரிஜா
காட்டு நாயக்கர்கள் பேசும் மொழி அந்தந்த பிரதேசத்திற்கேற்ப வேறுபடுகிறது. நீலகிரி, கடலூர்ப் பகுதிகளில் தமிழ் சார்ந்தும், கர்நாடகத்தின் மைசூர்ப் பகுதிகளில் கன்னடம் சார்ந்தும், கேரளத்தில் வயநாட்டுச் சுற்றிய பகுதிகளில் மலையாளம் சார்ந்தும் உள்ளது . 1986-ஆம் ஆண்டு நடனசபாபதி என்பவர், காட்டுநாயக்கரின் மொழி குறித்து விரிவான ஆய்வு செய்து அது கன்னடத்தின் கிளைமொழி எனக் குறிப்பிட்டுள்ளார்.
காட்டுநாயக்கர் காரைக்காயை அரைத்து நீரில் கலந்து மீன்களைப் பிடிக்கின்றனர். இக்காய் நீரில் கலக்கும்போது மீன்கள் மயக்கமடைகின்றனவாம். இவ்வாரு பெரும் பொருள்களைச் சமநிலை மக்களுக்குக் கொடுத்து பண்டமாற்று செய்துக்கொள்கின்றனர். ஆனால், முதுமலை வனப்பகுதியில் கூலிகளாக வேலை செய்யும் காட்டுநாயக்கர் சமூகத்தினர் இந்த நிலையிலிருந்து மாறி வருவதைக் காண முடிகிறது. இருந்த போதும் அவர்கள் ‘உணவு உற்பத்தியை’ செய்யாமல் இல்லை. அவர்களின் வசிப்பிடத்திற்கு நான் சென்ற போது சில விவசாய நிலங்களைக் காண முடிந்தது. அதோடு முதுமலைப் பகுதிகளில் காட்டுநாயக்கர்கள் மிளகு, இஞ்சி, வரகு, கம்பு உள்ளிட்ட பல பயிற்களைப் பயிரிட்டும் தேயிலை தோட்டங்களில் கூலிக்கு வேலை செய்து வருவதாகவும் அண்ணன் மான்பு தெரிவித்தார்.
காட்டுநாயக்கர்களின் இன்னொரு செயற்பாடாகத் தேன் எடுத்தல் இருக்கிறது.
அதிலும், நீலகிரிமலைத் தொடரில் தேனெடுப்பதில் காட்டுநாயக்கர் மிக முக்கியமான தொழிலாகச் செய்கின்றனர். காட்டுநாயக்கர்கள் தேனை ‘ஜேனு’, துடை, கெஃட்டி எனப் பிரிக்கிறார்கள். ‘ஜேனு’ என்பது உயர்ந்த காட்டுமரங்களிலிருந்து எடுப்பதாகும். இது சிறந்த தேன் என்றும் மருத்துவக் குணம் நிறைந்தது எனவும் கூறப்படுகிறது. துடை என்பது பொந்து, புற்று ஆகியவற்றில் உள்ள தேன்கூடுகளில் கிடைப்பது. கெஃட்டி ஜேனு என்பது குச்சி தேனாகும். தேய்பிறை நாட்களில் மட்டுமே தேனெடுப்பார்கள். பருவ மழை தொடங்கிய பின்னர்க் கிடைக்கும் தேன் சிறந்தது என்கிறார்கள். தேனைத் தவிர அதன் மெழுகினையும் சேகரித்து விற்கிறார்கள்.
மேற்கூறிய தகவல்கள் பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள் என்ற பதிவிலிருந்து பெறப்பட்டதாகும்.
காட்டுநாயக்கர்கள் கையில் சூலம் போல ஒரு குச்சியை வைத்திருக்கின்றனர். அதைக் காட்டு வேலை செய்யப் பயன்படுத்துவதாகச் சொன்னாலும் அந்தக் குச்சிக்கும் அவர்களின் கலாச்சாரத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் சூலம் வழிபாடும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அடுத்த முறை இங்கே சீசன் போது கட்டாயம் வாங்க என்றும் எங்களின் பாரம்பரிய விழாக்களில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும் மான்பா அண்ணன் அன்பு வேண்டுகோள் விடுத்தார். புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டேன். அனைவரும் ஒன்றினைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அவர்களின் குடியிருப்புக்குச் சென்ற போது அங்கே சன் டீவி கேபிகள் வீடுகளில் பொறுத்தப்பட்டிருப்பது காண முடிந்தது. ஈயப் பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்தன. பழங்குடிப் பெண்கள் நைட் டீ அணிந்திருந்தனர். அவர்கலின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் கல்வி கற்பதாகக் காட்டுநாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த கிரிஜா தெரிவித்தார். அரசாங்கத்திலிருந்து பெறப்படும் இலவச அரவை இயந்திரங்கள், வண்ண தொலைக்காட்சி யாவும் பழங்குடிகள் வீட்டை அலங்கரித்திருந்தது அவர்கள் வாக்காளர்கள் ஆகிவிட்டதை நமக்கு உணர்த்தியது. குறும்பர் இருளர் மற்றும் காட்டுநாயக்கர் ஆகியோர் ஒன்றாக வசிக்கும் அந்தக் குடியிருப்பில் காட்டு நாயக்கர்கள் ஆதிக்கம் விரவி இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றியது.
அவர்கள் வழிபாடு செய்வதற்குக் கட்டியிருக்கும் சிவன் கோயிலில் அதிக அதிகாரம் இவர்களுக்குதான் இருக்கிறது என்றும் அடுத்த நிலையில் குறும்பர் இருக்கிறார்கள் என்று கிரிஜா தெரிவித்தார்.

இவர்களோடு வசிக்கும் குறும்பர்களின் வாழ்வியல் என்ன ? அடுத்தத் தொடரில் கூறுகிறேன்.

1 கருத்து:

  1. காட்டுநாயக்கன் எத்தனை கிளைகள் சம்மந்தம் செய்வது எப்படி

    பதிலளிநீக்கு