செவ்வாய், 12 மே, 2015

பெண்ணிய படைப்பாளிகளுக்கு ஆண்களை வலுவாக திட்டக்கூட தெரியவில்லை

நேர்காணல் : எழுத்தாளர் இமையம்.
சந்திப்பு : யோகி

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் இமையம் தற்காலப் படைப்பாளிகளில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். அவர் இதுவரை மூன்று நாவல்களையும், நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும், பெத்தவன் என்ற நெடுங்கதையையும் எழுதியிருக்கிறார். அவருடைய கோவேறு கழுதைகள், ஆறுமுகம், பெத்தவன் – ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் விருதுகளோடு பல இலக்கிய அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ள இமையம் – மலேசியாவிற்கு வந்தபோது எடுத்த நேர்காணல் இது.

யோகி : ஒருவர் இலக்கியப் படைப்புகளை அவசியம் படிக்க வேண்டுமா?

இமையம் : ஒரு மாணவன் பள்ளிக்குப் போய், கல்லூரிக்குப் போய்தான் படிக்க வேண்டுமா என்று கேட்பதுபோல் இருக்கிறது. இதற்கு என்னுடைய பதில், ஆமாம் என்பது மட்டுமல்ல, கட்டாயம் என்பதுதான். ஒரு மருத்துவரால், பொறியியல் விஞ்ஞானியால் வாழ்க்கையை கற்றுத்தர முடியாது. ஒரு சமூகவியலாளனால், ஒரு வரலாற்று ஆசிரியனால் கற்றுத்தர முடியாது. ஒரு இலக்கியப் படைப்பால் மட்டும்தான் கற்றுத்தர முடியும். சமூக வியலாளனும், வரலாற்று ஆசிரியனும் தருவது புள்ளி விவரம், தகவல்கள் மட்டுமே. ஒரு இலக்கியப்படைப்பு தருவது உணர்ச்சியையும், கண்ணீரையும். வாழ்க்கை சார்ந்த பார்வையையும், விமர்சனத்தையும்தான். வாழ்க்கை புள்ளி விவரங்களால், தகவல்களால் மட்டுமே நிரம்பியதில்லை. உணர்ச்சிகளாலும், கண்ணீராலும், வலியாலும், இழப்பினாலும் நிரம்பியது. அதைத் தருவது, அறியச் செய்வது இலக்கியப் படைப்புகள்தான். குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட நிலப்பரப்பில், குறிப்பிட்ட சமூகம் எப்படி வாழ்ந்தது, வாழ்வதற்கு அச்சமூகம் மேற்கொண்ட நெறிமுறைகள், ஒழுக்க விதிகள் எவை, பின்பற்றிய கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்கள் எவை என்பதை இலக்கியப் படைப்புகள்தான் ஆவணப்படுத்தியிருக்கின்றது. கலையாக்கி இருக்கின்றது. சங்ககால வாழ்வை எதன் வழியே அறிகிறீர்கள்? வரலாற்று ஆவணங்களின், புள்ளி விவரங்களின் வழியாகவா?

யோகி : தனிமனித வாழ்க்கையில் இலக்கியத்தின் பங்களிப்பு என்ன?

இமையம் : இலக்கியம்தான் இன்று உலகெங்கும் எல்லோருக்குமான வாழ்க்கையாக, கல்வியாக இருக்கிறது. பி.ஏ, எம்.ஏ, எம்.ஃபில், பி.எச்.டி. என்பது என்ன? ஆங்கிலம், தமிழ் இலக்கியங்கள்தானே பாடமாக கற்றுத்தரப்படுகிறது. அந்தப் பாடங்களால்தான் பட்டங்கள் தரப்படுகின்றன. பதவிகள் தரப்படுகின்றன. அதனால்தான் சம்பளம் வருகிறது. அதனால்தான் சுகபோக வாழ்க்கை வாழ்கிறீர்கள்? தமிழ், ஆங்கில இலக்கியம் படிப்பவர்களுக்குத்தான் நீங்கள் சொல்வது பொருந்தும். பொறியியல், மருத்துவம், பிற துறை சார்ந்த படிப்புகளை படிப்பவர்களுக்கு என்ன லாபம் என்று கேட்கலாம். இலக்கியப் படைப்புகள்தான் மொழியை புதுப்பிக்கின்றன. மொழியைப் புதுப்பிக்கவும், மறு உருவாக்கம் செய்யவும் செய்கின்றன. அதற்கும் மேலாக வாழ்க்கையை அதுதான் சேமித்து வைத்திருக்கிறது. மொழியைப் பயன்படுத்தாமல் மனிதனால் இருக்க முடியுமா? மொழியை ஓயாமல் காலம்தோறும் புதுப்பித்துக்கொண்டே இருப்பது இலக்கியப் படைப்புகள்தான் என்பதால் – அதை அறியாமல், படிக்காமல் – ஒருவர் இருப்பார் என்றால், அவரைப் படித்தவர் என்றோ, மொழியைப் பயன்படுத்துகிறவர் என்றோ சொல்ல முடியாது. அப்படிப்பட்டவர்களை, கண்ணிருந்தும் குருடர்; காதிருந்தும் செவிடர்; வாயிருந்தும் ஊமை என்றுதான் சொல்லவேண்டும்.

யோகி : நவீன இலக்கியம் குறித்த உங்களுடைய பார்வை என்ன?

இமையம் : நவீன இலக்கியம் என்று ஒன்று இருக்கிறதா? நவீன இலக்கியம் என்றால் என்ன- அதற்கான வரையறை என்ன? எந்தக் காலத்திலிருந்து, எந்தக் காலம் வரை எழுதப்பட்ட படைப்புகளை நவீன இலக்கியம் என்று வரையறுக்கிறீர்கள்? அப்படி வரையறுக்கப்பட்ட காலத்திற்கான வாழ்வை – வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் எழுதப்பட்டுள்ள படைப்புகள் பொய்யில்லாமல், கசப்பு இல்லாமல் நேர்மையான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்த்த பிறகுதான் சொல்ல முடியும். நவீன வாழ்வு எது, நவீன காலம் எது என்று வரையறுக்காதபோது நவீன இலக்கியம் என்று நாம் எதை சொல்ல முடியும்? நவீனத்திற்கு முந்தைய இலக்கியம் எது? நவீன இலக்கியம் எது என்ற குழப்பம் இன்னும் தெளிவாகவில்லை. இன்று எழுதக்கூடிய எழுத்தாளர்கள் எல்லாருமே தாங்கள் நவீன எழுத்தாளர்கள் என்றும், தாங்கள் எழுதுவது நவீன எழுத்து என்றும் மார்தட்டிக்கொள்கிறார்கள். இது உண்மை இல்லை. தமிழ் எழுத்தாளர்களுடைய மனமும், அவர்களுடைய எழுத்தும், நவீன வாழ்க்கைக்குள் வரவே இல்லை, நவீன வாழ்க்கையை எழுதவே இல்லை.

குனிந்த தலை நிமிராமல் நடப்பது பழைய வாழ்க்கை. அதைப் பேசியது பழைய இலக்கியம். எட்டு முழ சீலை கட்டியது பழைய வாழ்க்கை. அதைப் பேசியது பழைய இலக்கியம். கடல் தாண்டி போவது வேதத்திற்கு எதிரானது என்றும் இரவில் தனியாக பெண்கள் வெளியூர் பயணம் போகக்கூடாது என்றும் சொன்னது பழைய வாழ்க்கை, பழைய இலக்கியம். இப்படி பலவற்றையும் சொன்னது பழைய வாழ்க்கை. அவற்றை எழுதியது பழைய இலக்கியம். நவீன வாழ்க்கை, இலக்கியம் என்பது என்ன? எப்படியிருக்கிறது?

 முகநூலில் ஒரு இளம்பெண் ஒரு நாளைக்கு பத்து போட்டோ போடுகிறார். இருபத்தி நான்கு மணிநேரமும், பஸ், ரயில், விமானம் என்று பெண் தனியாக பயணிக்கிறார். தாய் தந்தையே மகளுக்கு ஜீன்ஸ் பேண்டும், டீ சர்ட்டும் எடுத்துத் தருகிறார்கள். ஏன் கணவனே எடுத்துத் தருகிறான். கால் சென்டரில், ஐ.டி. கம்பனிகளில் பெண் இன்று இரவு முழுவதும் வேலை செய்கிறார். தனியாக விடுதிகளிலும் வீடு எடுத்தும் தங்குகிறார்கள். தங்களுடைய பிள்ளைகள் ஐ.டி.கம்பனிகளில் வேலை செய்வதையும், வெளி நாடுகளில் வேலை செய்வதையும் பெருமையாகக் கருதுகிற பெற்றோர்கள் இன்று இருக்கிறார்கள். படிப்பிற்காக அலைந்த காலம் போய் பள்ளி, கல்லூரி வேன்கள் உங்கள் வீட்டு வாசற்படியில் வந்து காத்து நிற்கிறது. பீர், பிராந்தி, பிரியாணி வரை இன்று ஆன் லைனில் வாங்கப்படுகிறது. 

இன்று எல்லாருடைய கையிலும் செல்போன் இருக்கிறது. இருபத்தி நான்கு மணிநேரமும் மனிதர்கள் முகநூலில் இருக்கிறார்கள். இருபத்தி நான்கு மணிநேரமும் உலகிலுள்ள யாருடனும் தொடர்பு கொண்டு பேச முடியும். மூதாதையர்கள், குல தெய்வங்களுடைய பெயர்களுக்குப் பதிலாக இன்று சினிமா, நடிகை, நடிகர்களுடைய பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. காதலனை சந்தித்தது முதல், ஹனிமூன் சென்றதுவரை, கள்ளக்காதல் செய்தது, கணவனை, மனைவியை ஆள் வைத்துக் கொன்றது வரை எல்லாவற்றையும் நம்முடைய பெண்கள் தொலைக்காட்சிகளில் வாக்குமூலம் அளித்துக்கொண்டிருக்கிறார்கள். 

தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையற்ற சமூகச் சூழல். எல்.கே.ஜி. சேர்க்கைக்காக அப்பா அம்மா தேர்வு எழுதுகிற சூழல். எல்.கே.ஜி.க்கே இரண்டு லட்சம் செலவாகிற சூழல். இன்று எல்லாருடைய வீடுகளிலும் டி.வி. இருக்கிறது. இருபத்தி நான்கு மணிநேரமும் எல்லாருடைய வீடுகளிலும் டி.வி. ஓடுகிறது. இதுதானே நவீன வாழ்க்கை என்பது? இந்த வாழ்வையும், அதன் நெருக்கடிகளையும், சௌகரியங்களையும் மன சாய்வில்லாமல் பேசிய தமிழ்க் கவிதை எது; சிறுகதை எது; நாவல் எது? இவற்றை எதையுமே பேசாதப் படைப்புகள் எப்படி நவீன இலக்கியமாக இருக்க முடியும்? தமிழில் நவீன வாழ்க்கையைப்பற்றி பேசிய படைப்பு எது என்று நீங்களே சொல்லுங்கள். அதன் பிறகு அது இலக்கியமா, இல்லையா என்று பேசலாம்.

யோகி : உங்களுடைய நாவல்களிலும், சிறுகதைகளிலும், பெண்களும், அவர்களுடைய துயரங்களும்தான் அதிகமாக இருக்கின்றன. இதை திட்டமிட்டே செய்கிறீர்களா?

இமையம் : திட்டமிட்டு செய்வதற்கு மண் பானை, மர நாற்காலியா செய்கிறேன்? பெண்களை, அவர்களுடைய துயரங்களை, கண்ணீரை முதன்மைப்படுத்தி எழுத வேண்டும் என்பது என் ஆசையோ, விருப்பமோ அல்ல. அது தானாக நிகழ்ந்தது. நிகழ்கிறது. என் நாவல்களில், சிறுகதைகளில் வரும் பெண்கள் நான் வேண்டும் என்றே திட்டமிட்டு உருவாக்கியவர்கள் அல்ல. என் மூளையின் திறனால், என் படிப்பின் திறனால், பெண்ணிய கோஷத்தினால் நான் விரும்புகிற அரசியலால் உற்பத்தி செய்யப்பட்டவர்கள் அல்ல. நான் எழுதிய பெண்கள் எல்லாம் என்னுடைய இளமைக்காலத்திலிருந்தே என்னோடு வாழ்ந்தவர்கள், என்னோடு பழகியவர்கள். நான் பார்த்தவர்கள்தான். நான் சந்தித்தவர்கள்தான். தெளிவாக சொன்னால் நான் வாழ்ந்ததை, பார்த்ததை, பழகியதை, சந்தித்ததை எழுதியிருக்கிறேன். நான் எழுதிய பெண்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, சமூகத்திலும் முக்கியமானவர்கள். ஒரு விதத்தில் இப்பெண்கள்தான் சமூகத்தின் மையமாக, சமூகத்தின் அசைவியக்கமாக இருந்தவர்கள். இருக்கிறவர்கள். இப்பெண்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் சமூகத்தில் ஒன்றுமே இல்லை. தனி மனிதனும், குடும்பமும், சமூகமும் பெண்களை எப்படிப் பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை சொல்வதற்காகவோ விளம்பரம் செய்வதற்காகவோ இப்பெண்களை எழுதவில்லை. உருவாக்கியிருக்கிறேன். நான் யாரையும் தேடிச்சென்று, கதை கேட்டு, கதை எழுதியதில்லை. உற்பத்தி செய்ததுமில்லை. ஆங்கிலத்தில் படித்ததை தமிழில் மொழி பெயர்த்து என் கதை என்று போடுவதில்லை. எந்தக் காலத்தில் எது விற்கும் என்று தெரிந்து எந்த நாவலையும், எந்த ஒரு சிறுகதையையும் நான் எழுதவில்லை. உண்மையைச் சொன்னால் நான் வாழ்கிற காலத்தை, சமூகத்தை எழுதியிக்கிறேன்.
      
யோகி : இன்றைய பெண்ணிய எழுத்துக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இமையம் : பெண்ணிய எழுத்து, நவீன பெண்ணிய எழுத்து என்ற கூச்சல் அதிகமாக கேட்கிறது. கூச்சலை உருவாக்குகிற அளவுக்கு படைப்புகளை உருவாக்கவில்லை. ஊளையும், ஒப்பாரியும் படைப்பாகாது, இலக்கியமாகாது. சுயபுலம்பலைவிட சமூக விமர்சனம்தான் முக்கியமானது. அம்பை எழுதிய ‘ஒரு வீட்டின் மூலையில் சமையலறை' என்ற சிறுகதைத் தொகுப்பைப்போல, ப.சிவகாமியின் ‘ஆனந்தாயி' என்ற நாவலைப் போல வலிமையான படைப்புகள் அதிகம் வந்துள்ளதா? இஸ்மத் சுக்தாய் எழுதிய ‘போர்வை' என்ற சிறுகதையைப் போலவோ, மகாசுவேதா தேவி எழுதிய ‘சோளி கே பீச்சே' என்ற சிறுகதையைப்போலவோ வலியும், கண்ணீருமாக வந்த சிறுகதை எது? கவிதை எது? நாவல் எது? பேபி காம்ளி எழுதிய ‘சுதந்திரக் காற்று' போலவோ, மாயா ஏஞ்சலோ எழுதிய ‘கூண்டுக்கிளி ஏன் பாடுகிறது?' என்ற படைப்பைப் போலவோ தமிழில் வந்திருக்கிறதா?  

முகநூலில் போடுகிற ஸ்டேடஸ்தான் பெண்ணியக் கவிதைகள், பெண்ணியப் படைப்புகளா? ஒரு இலக்கியப் படைப்பைப் படிக்கும்போது இது பெண் எழுதியதா, ஆண் எழுதியதா என்று நான் பார்ப்பதில்லை. அது மனித துயரத்தை கூர்மையாக விமர்சனபூர்வமாக எழுதியிருக்கிறதா என்று மட்டும்தான் பார்ப்பேன். ஒரு படைப்பின் தரம்தான் எனக்கும் படைப்பிற்குமான உறவை தீர்மானிக்கிறது. சாதியோ, பாலினமோ, நாடோ, இனமோ தீர்மானிப்பதில்லை. இன்றையப் பெண்ணியப் படைப்புகள் விமர்சிக்க வேண்டியது நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும்தான். முக்கியமாக பிராமணிய இந்து மதச் சடங்குகளையும், நம்பிக்கைகளையும்தான். பெண்ணியப் படைப்பாளிகளுக்கு ஆண்களை வலுவாக திட்டக்கூட தெரியவில்லை. அதற்கான மொழிப் பயிற்சிக்கூட இல்லை.

யோகி : பெண் எழுத்தாளர்கள் மத்தியில் தொடர்ந்து சர்ச்சையை   ஏற்படுத்துகிறீர்களே ஏன்?

இமையம் : சர்ச்சையில் ஈடுபடாத, சர்ச்சையை ஏற்படுத்தாத எழுத்தாளன் நான். எத்தகைய இழி செயலிலும் ஈடுபட்டு தொடர்ந்து இலக்கிய உலகில் பெயரை தக்க வைத்துக்கொள்ள முயல்கிற எழுத்தாளன் நானல்ல. முகநூலில் ஸ்டேடஸ் போட்டு இலக்கியம் பேசுகிறவனல்ல நான். போடுகிற ஸ்டேடஸ்க்கு எத்தனை கமண்ட் வருகிறது, எத்தனை லைக் வருகிறது என்று பார்க்கிற, அந்த எண்ணிக்கையைப் பார்த்து பெருமை, சந்தோசம் கொள்கிற எழுத்தாளன் அல்ல நான். தமிழகத்தில் இலக்கிய சர்ச்சை என்பது தனிமனித அவதூறுதான். தனிமனித துதிப்பாடல்கள்தான். 
இந்த இரண்டு விதமான காரியத்திலும் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அவ்வாறு ஈடுபடுவது இழிவான செயல். எழுத்துதான் என் அடையாளம். என் பலம். அற்ப சர்ச்சை அல்ல. வீண் விதண்டாவாத பேச்சல்ல. ஆனால் இன்று இதுதான் இலக்கிய உரையாடலாக இருக்கிறது. மலினமான முறையில் புகழ் தேடுகிற செயல் – அறிவார்ந்த உலகம், அறிவார்ந்தவர்கள் என்று பேசுகிறவர்களிடம்தான் அதிகம் இருக்கிறது. 

தமிழகத்தில் எழுத்தாளர்கள் – ஆணோ, பெண்ணோ - எழுதுவதைவிட அதிகம் பேசுகிறார்கள். பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசுகிறார்கள் என்பதைவிட உளறுகிறார்கள் என்பதுதான் சரி. ‘ஏன் உளறுகிறீர்கள்' என்று கேட்பது சர்ச்சையா? தான் உளறுகிறோம் என்பதை மறைக்கவே ‘சர்ச்சை, சண்டை' என்ற பெயரில் மீண்டும்மீண்டும் உளறுகிறார்கள். உளறுகிறவர்கள் இலக்கியவாதிகள் அல்ல. அறியாமையின் பீத்த உளறல்களுக்கு பதில் சொல்கிறவன், உளறல்களை பொருட்படுத்துகிறவன் எழுத்தாளன் அல்ல. என் எழுத்தை, கவனமாக படிக்கிறவர்களுக்கு தெரியும் நான் சர்ச்சை உருவாக்குவதற்காக எழுதவில்லை என்பது. பேசவில்லை என்பது.

யோகி : இந்திய பிரதமர் மோடி குறித்து உங்களுடைய கருத்து என்ன?

இமையம் : மோடி இந்திய ஜனநாயகத்திற்கு, இறையாண்மைக்கு, மதநல்லிணக்கத்திற்கு எதிரானவர். மதவாதி. மதத்தின் பெயரால் கலவரத்தை தூண்டி சமூக அமைதியை குலைத்தவர். சமூக நல்லிணக்கத்தை குலைப்பவர், மதக் கலவரத்தை தூண்டுபவர் எப்படி ஒரு நல்ல பிரதமராக இருக்க முடியும்? கலவர நாயகன் அவர். கலவரத்தை தூண்டியதின் வழியே புகழ்பெற்றவர். இந்திய அரசியல்வாதிகள் இப்படித்தான் இருக்கிறார்கள். பிற்போக்கான மதவாத சக்திகளாலும், இந்தியாவிலுள்ள பெரும் பணக்காரர்களாலும், ஊடகங்களாலும் உருவாக்கப்பட்டவர். மோடியின் செல்வாக்கு என்பது இந்து மதவாத வெறியர்களிடம் மட்டுமே இருக்கிறது. ஜனநாயக சக்திகளிடம் இல்லை. 

பிரதமரான பிறகு அவர் தொடர்ந்து இந்திய முதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் ஏற்ற சேவகராகத்தான் செயல்படுகிறார். ஊடகங்கள்தான் – மோடியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் – புனிதர்களாக, புதிய ரட்சகர்களாக உருவாக்கிக்காட்டின. இருவரும் புனிதர்களோ, புதிய ரட்சகர்களோ அல்ல என்பது அவர்கள் பதவிக்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே நிரூபணமாயிற்று. காட்சி ஊடகங்கள் – சாதாரண ஆளைக்கூட மகானாக உருமாற்றி காட்டி – அதை உண்மையென சமூகத்தை நம்ப வைக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணங்கள் – மோடி, அரவிந்த் கெஜ்ரிவால். அரசியல்வாதிகள் செய்கிற மோசடிகளைவிட பெரிய மோசடி ஊடகக்காரர்களுடையது,

யோகி : ஆசிரியர், அரசியல்வாதி, இலக்கியவாதி என்ற மூன்று நிலைகளில் செயல்படுகிறீர்கள். ஆசிரியராக, அரசியல்வாதியாக இருப்பது உங்களுடைய எழுத்துக்கு பலம் சேர்க்கிறதா? பலவீனத்தை ஏற்படுத்துகிறதா?

இமையம் : பெரிய பலம். ஆசிரியராக இருப்பதால் தினம்தினம் நூற்றுக்கணக்கான பலவகை குணமுள்ள, பொருளாதார பின்புலமுள்ள மாணவர்களை பார்க்க முடிகிறது. அவர்களோடு உரையாட முடிகிறது. பழக முடிகிறது. ஒரு எழுத்தாளனுக்கு மிகவும் முக்கியமானது சமூகத்துடனான உரையாடல். அது என் ஆசிரியர் பணியின் வழியே கிடைக்கிறது. நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர். 

இடதுசாரி இயக்கங்களில் இருப்பவர்கள்தான் சமூக அக்கறையோடு இருப்பார்கள், தி.மு.க.வில் இருக்கிற எழுத்தாளன் சமூக அக்கறையோடு இருக்கமாட்டானா? தேர்தலில் இடதுசாரிகள் இயக்கங்கள், தி.மு.க.வோடும், அ.தி.மு.க.வோடும்தானே கூட்டணி வைக்கிறது. இதற்கு இடதுசாரி எழுத்தாளர்கள், சமூக அக்கறை உள்ள புனித, தூய எழுத்தாளர்கள் – இதுவரை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களா? இடது சாரி – சார்புடைய இயக்கங்களைத்தவிர – பிற அரசியல் கட்சிகளில் இருப்பது என்பது சமூகக் குற்றம் என்பது மாதிரி பார்க்கிற மனோபாவம் – ஆரோக்கியமானது அல்ல. 

இலக்கியம் அரசியலுக்கு அப்பாற்பட்டதா? தமிழ்நாட்டில் பலர் – எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, என் படைப்பிற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று பெருமை பேசுகிறார்கள் வெட்கமின்றி. உலகில் அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கியம் என்று ஒன்று இருக்கிறதா? அரசியலுக்கு அப்பாற்பட்ட எழுத்தாளன் என்று யாராவது இருக்கிறார்களா? உண்மையில் எழுத்தாளன்தான் – நிஜமான அரசியல்வாதி. இந்த அடிப்படையான உண்மை தெரியாதவர்கள்தான் இன்று நவீன எழுத்தாளர்கள். இலக்கியவாதிகள்.  ஆசிரியர் பணியும் சரி, என்னுடைய அரசியல் செயல்பாடுகளும் சரி, என் எழுத்துகளை ஊக்கப்படுத்துகிறதேத்தவிர ஊனப்படுத்தவில்லை. நான் ஒன்றுடன் ஒன்றைப் போட்டுக் குழப்பிக்கொள்வதில்லை.






1 கருத்து: