சனி, 16 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 8

  • சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

  • தொடர் 8
    சாலையோர மாதா கோயில்

  • யாழ்ப்பாண வாழ்க்கையையும், அங்கு சந்தித்த மனிதர்களும் என் வாழ்கையில் என்று மறக்க முடியாது. அங்கு போவதற்கான தொடக்க பயணம் மிகவும் கொண்டாட்டமாக தொடங்கியது. ஆனால், போகப்போக அது கொண்டாட்ட மனநிலையிலிருந்து விடுபட்டு, ஒருவித பயம் மட்டுமே இருந்தது. போய் சேர்ந்தால் போதும் என்ற நிலை அது. பதற்றநிலை வாகனத்தை ஓட்டி போன ஓட்டுனர்களுக்கு இருந்ததா என தெரியவில்லை. றஞ்சிக்கும் யாழினுக்கும் அவர்களை நம்பி வந்த எங்களுக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது என்ற தவிப்பே அதிகம் இருந்தது. அந்த தவிப்பு அவர்களையும் அறியாமல் ஊமை பாஷையில் பேசியது. அதை நான் கேட்டுவிட்டேன்.
  • யாழ்பாணப் பயணத்தை மலையகத்திலிருந்து தொடங்குவது மிகவும் சவாலானது. அதை எத்தனை பேர் அனுபவித்திருக்கிறார்கள் தெரியவில்லை. எங்கள் வேன் ஓட்டுனர் மலையகத்தின் எல்லையில் இருந்த மாதா சிலைக்குப் பிரார்த்தனை செய்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும்போது கூட வேன் ஓட்டுநர் முருகண்டி வினாயகர் கோயிலில் வண்டியை நிறுத்தினார். பிறகுதான் தெரிந்தது எல்லா வண்டிகளும் அங்கு நின்றுதான் செல்கின்றன. வண்டி ஓட்டுனர்களுக்கு அது ஒரு கலாச்சாரமாகவே இருக்கிறது. முருகண்டி வினாயகர் கோயில் வெள்ளி தகடுகளால் இழைக்கப்பட்டிருந்தது. சின்ன கோயில்தான். நாங்கள் போன நேரம் நடை அடைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. கிறிஸ்தவர்களோ இந்தியர்களோ யாராக இருந்தாலும் நிறுத்தம் மட்டும் நடக்கிறது.
    மாதா சிலைக்குப் பிரார்த்தனை செய்த ஓட்டுனர், மற்றுமொரு முச்சந்தி பிள்ளையார் கோயிலிலும் நிறுத்தி சூடம் கொழுத்தி பிரார்த்தனை செய்தார். இளைஞர்கள் இதுபோல விதிகளை மீறாமல் இருப்பது ஒழுக்கம் என்று சொல்வதைவிட அழகான விஷயமாக எனக்குப் பட்டது. வண்டியை மிக சீராக இரண்டு இளைஞர்களும் வழிநடத்தி சென்றனர். தேவையில்லாமல் கதைக்கவுமில்லை. வேறொரு குரலில் மறுபதிவு செய்யப்பட்ட பி.சுசிலா-ஏ.எம்.ராஜா பாடல்கள் வண்டியில் ஒலித்துக்கொண்டிருந்தது. இளைஞர்கள் அப்பாடல்களை ரசித்தப்படி வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தனர். எனக்கு அது ஆச்சரியம்தான். எனக்குத் தெரிந்த வரை மலேசியாவில் பழைய பாடல்கள் என்றாலே வானொலியை அடைத்து போடுவார்கள் அல்லது பாட்டை மாற்றுங்கள் என்பார்கள். இந்த இளைஞர்கள் பாடலைப் பாடவும் செய்கிறார்களே என்ற ஆச்சரியமும் இருந்தது.
    வண்டி வவுனியாவை நெருங்கிக்கொண்டிருந்தது. போலீஸ் பரிசோதனைக்காக வண்டி முதல்முறை நிறுத்தப்பட்டது போது யாழினி பதட்டமானாள். ஏன் வண்டியை நிறுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு உடனே பதில் கிடைக்காது தான். ஆனால், அதை தெரிந்துக்கொள்ளும் வரை அவளால் பொறுமையுடன் இருக்க முடியவில்லை. தொடர்ந்து உதவி ஓட்டுனரை கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தாள். எங்கள் யாருக்கும் அந்தப் பதற்றம் அவ்வளவாக தெரியவில்லை. போலீசிடம் கதைத்தவர் திரும்ப வந்து 500 ரூபாய் இருந்தா கொடுங்க என்றார். கொடுத்ததும், சிறிது நேரத்தில் வண்டி கிளம்பியது. நல்லா இருட்டியும் இருந்தது. பிறகு ஓட்டுனரிடம் விசாரித்ததில் பிழை அவர் மேல் என்பது தெரிய வந்தது. ஒட்டுனர் அதை ஒத்துக்கொள்ள மறுத்தாலும், யாழினி அந்தத் துறையில் பணி புரிவதால் ஓட்டுனர் மீது இருக்கும் தவறைச் சுட்டிகாட்டினாள். பிறகு வண்டி செக் போஸ்டில் நின்றது. மீண்டும் பதற்ற நிலை. குறிப்பாக றஞ்சியிடமும் யாழினிடமும் தான் அந்த தவிப்பு அதிகமாக இருந்தது. எங்களிடம் ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தும் ஏன் இவர்கள் இப்படி பயம் கொள்கிறார்கள் என யோசிக்க தொடங்கினேன். பிறகு, எனக்கே பதில் கிடைத்தது. வண்டியில் ஒரு வழக்கறிஞர், ஒரு நிருபர், ஆசிரியர், சமூக ஆர்வலர் என வெவ்வேறு துறையைச் சேர்ந்த வெவ்வேரு நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஒரு சேர இருந்தால் அங்கு சந்தேகம் வலுபெரும் தானே.
    வண்டி மீண்டும் நின்றது. அங்கே ராணுவத்தினர் குழுமியிருந்தனர். அது தணிக்கை நிலையம் (check post). வண்டியைப் பதிவு செய்ய நின்றுதான் ஆக வேண்டும்.
    அதை தாண்டிய பிறகு, வவுனியா பட்டணத்திற்குப் போய்விடலாம். 'வவுனியாவில் இறங்கலாம்' என்று றஞ்சி சொன்னார். எனக்கு டீ குடித்தால் தேவலாம் போலிருந்தது. சமயம் பார்த்து ரஜனியும் டீ கேட்டார். அப்போ அங்கே இறங்குவது உறுதியானது. ஓட்டுனரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் வண்டியை வவுனியாவில் நிறுத்தினார். நாங்கள் எல்லாம் இறங்கினோம். அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் எங்களையும் வண்டியையும் ஏற இறங்க பார்த்தனர். போலீஸ்காரர் ஒருவர் எங்களை நோக்கி வந்தார். ஆம், வண்டி நின்ற இடம் வவுனியா காவல் நிலைய எதிர்புறம். அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் போலீஸ்காரர்கள். அனைவரும் சிங்களவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக