திங்கள், 25 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 15


கீரிமலையில்
போரில் பாதிப்படைந்த சிவன் கோயில்
சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 15

நாங்கள் கோட்டையின் மேல் ஏறி நின்று பார்த்தோம். மொத்த யாழ்ப்பாணமும் தெரியும் விதத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்து தூக்கிலிடப்படும் தளத்தில் ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். 'புலியின் கோட்டையில் இப்படியான கூத்து நடப்பதாகக் கேள்விப்பட்டேன். இப்போதுதான் பார்க்கிறேன்' என்றாள் யாழினி. அவளின் அந்த ஆதங்கத்தில் இருந்த வருத்தம் நன்றாகவே உணர முடிந்தது.

தற்போது அங்கு ஏதோ தங்கும் விடுதி இயங்க போகிறதாம். கோட்டை என்னதான் சிங்கள ராணுவ வசம் இருந்தாலும், அது புலிகளின் புகழையும் ராணுவத்தின் வன்கொடுமையையும் தான் பேசுகிறது. வரலாற்றின் வாயை எந்தக் கைகளினாலும் மூடிவிட முடியாது.

தொடர்ந்து நாங்கள் கோட்டையை விட்டு, கீரிமலைக்குப் போனோம். 'கீரிமலை' என்றே பெயரே வித்தியாசமாக இருந்தது. ஆனால், எந்த மலையையும் அங்குக் காண கிடைக்கவில்லை. கீரிமலையைச் சுற்றிக் கடலே சூழ்ந்திருந்தது. ஈமச்சடங்குகள் அதிகமாக இந்தக் கடற்கரையில்தான் செய்யப்படுகிறது. அதற்காக விசேஷ இடமும் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கீரிமலைக்குச் செல்லும் வழியில் புராதன சிவன் கோயில் ஒன்று வரவேற்கிறது. ஆனால், அதன் வரலாறு பேசும் அளவுக்கு எந்தப் பாதுகாப்பு அம்சமோ அல்லது அதன் வரலாற்றைத் தெரியப்படுத்தும் விதத்தில் எந்தக் குறிப்பு ஆவணங்களோ அங்கு இல்லை. ஒரு பழங்காலத்துக் கோயில் என்பதைத் தாண்டி சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை. உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று என விக்கிபீடியா தகவல் நமக்குத் தெரியப்படுத்துகிறது.

கீரி முகமுடைய முனிவர் ஒருவர் அந்தக் கடலாடும் துறையில் நீராடி, அருகிலுள்ள திருத்தம்பலே சுவரர் என்ற பெருமானை வழிபட்டு வந்ததினாலே கீரி முகம் மாறப் பெற்றார். அதன் பிறகு, இது கீரிமலை எனப் பெயர் பெற்றது என யாழினி கூறினாள். இது வழிவழியாக அங்குக் கூறப்பட்டு வரும் கதையாகும். போகும் போதே கீரி முகமும் மனித உடலும் கொண்ட இரு சிலைகளைப் பார்த்து விட்டுதான் உள்நுழைவோம்.

முன்னாளில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத்தொடராயிருந்தது என்றும் பின் கடலால் தாக்குண்டு அழிந்து போய்விட, எஞ்சியுள்ள அதன் அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து என்றும், இந்நிலத்தின் கீழேயுள்ள கற்பாறைகளிலே சிப்பிகளும், நத்தைகளும், பதிந்து கல்லாய்க் கிடந்தாலும்  வடகரையிலே கடலினுள் நெடுந்தூரம் கற்பாறைகள் காணப்படுதலாலும், ஆராய்ச்சியாளர்கள் முடிவைச் சரியானதென இணையத் தகவல்கள் கூறுகின்றன.

அதோடு கீரீமலையில்   மேட்டு நிலத்தில் சுவறும் மழைநீர், நன்னீரருவியாகிப் பள்ளமாகிய கடற்கரையில் பலவிடங்களில் சுரந்தோடுகின்றது என்றும் இவ்வருவி நீரே கீரிமலைத் தீர்த்தச் சிறப்புக்குரியதாகவும், இந்த நதியில் நீராடினால் பல நோய்கள் நீங்கம் பெறும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் புண்ணிய நதியில் குளிப்பதற்குக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. குளிக்கும் அந்தத் தளம் அழகாக இருந்தாலும், குளத்தில் இறங்கி குளிக்கும் அளவுக்குப் பாதுகாப்பானதாக இல்லை. ஆனால், குளியல் அறைகளை கீரிமலை பொறுப்பாளர்கள்   ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் குளத்தில் இறங்கி தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவிக்கொண்டோம். கை கால்களை நனைத்துக்கொண்டோம்.

நிறையப் பள்ளி மாணவர்கள் கடற்கரையில் காண முடிந்தது. உண்மையில் அது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தாலும், யுத்த காலத்தில் இந்தக் கீரி மலையும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு இடம்தான் எனப் பின்பு தெரிந்துக்கொண்டேன். அதை ஒட்டிய முக்கிய 3 கிராமங்களில் தற்சமயம் கண்ணிவெடிகள் மீட்கப்பட்டு, மக்கள் மீட்டும் அங்குக் குடிபுகுந்து வருகின்றனர். ஆனால், கீரிமலையில் போர் நடந்ததற்கான ஆதரங்கள்  சொர்ப்பமாகத்தான் இருக்கிறது. 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரின் தடயங்கள் வெகுவிரைவாக சீர் செய்யப்பட்டு வருவதற்கு கீரிமலை ஓர் உதாரணம் எனத்தெரிகிறது.  (இது எனது பார்வை மட்டுமே. உண்மை வேறாககூட இருக்கலாம்.)

 அடுத்து நாங்கள் 'தம்பகொலபடுன' என்ற புத்த திருத்தளத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம்.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக