வெள்ளி, 22 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 13

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 13

கோயில் நடையைச் சாத்தும் நேரம் நெருங்கவே அர்ச்சகர் எல்லாரையும் அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். நாங்கள் வெளியில் வந்தோம். மீண்டும் பிச்சைக்காரர்கள் ஆர்ப்பரித்தனர். றஞ்சி சில நோட்டுகளை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால், எனது கருத்தில் பலருக்கு உடன்பாடு இருந்திருக்காது என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது.

தொடர்ந்து நாங்கள் யாழ் நூல்நிலையம் போனோம். யாழ் நூல்நிலையம் தீயில் அழிந்த அந்த வருடம்தான் நான் பிறந்த வருடமாகும். எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் போரைப் பற்றியும், புலிகளைப் பற்றியும், யாழ்ப்பாணத்தைப் பற்றியும் படிக்கும்போது, அழிவுகளின் வரலாற்று பேரழிவாக நடந்திருப்பது யாழ் நூல்நிலையம் அழிக்கப்பட்டதுதான் என நினைக்கிறேன்.

புத்தகங்களின் மேல் ஆர்வம் கொண்டதால் நான் அப்படிக் கூறுகிறேன் என நினைத்தால், அதற்கு நான் என்ன செய்ய? யாழ் நூல்நிலைய வளாகத்தில் இராணுவத்தினர் பல பேர் இருந்தனர். அவர்கள் அங்கு இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. மேலும், எப்போதும் அவர்கள் அங்கு இருப்பார்களா என்றும் தெரியவில்லை. இராணுவத்தினர் இயல்பாகவே இருந்தாலும்கூட நமக்கு ஏனோ, அவர்கள் நம்மை (தமிழர்களை) நோட்டமிடுவதாகவே தோன்றியது.

வேடிக்கைப் பார்க்காமல் நூல்நிலைய நுழைவாயிலுக்குப் போனோம். அழிக்கப்பட்ட நூல்நிலைய சாயலில் கட்டியிருக்கிறார்கள் என்று றஞ்சி சொன்னார். பெரிய அழகான நூல்நிலையம். நான் பார்த்ததிலேயே அழகான நூல்நிலையம் எனக்கூடச் சொல்வேன். உள்ளே போய்ப் பார்க்க ஆசையாக இருந்தது. ஆனால், எங்களை நூல்நிலைய பொறுப்பாளர்கள் தடுத்து நிறுத்தினர். நேரம் கடந்துவிட்டிருந்ததுதான் காரணம். நாங்கள், சில நிமிடங்கள் மட்டும் பார்த்துவிட்டு திரும்ப வேண்டினோம். ஆனால், அவர்கள் நிச்சயமாக மறுத்துவிட்டனர்.

கடமை என்று வந்துவிட்டால் நம்மவர்களைப் போலக் கடமையாற்ற முடியாது என்று உலக மக்களிடத்தில் நல்ல பெயரை சம்பாதித்தவன் தமிழன் இல்லையா? மேலும் அவர்களிடம் வாதிடவில்லை. அவர்கள் கடமையை மீறினால், அவர்களுக்குப் பிரச்னைதானே. நாங்கள் வெளிவளாகத்தில் நின்று படமெடுத்துக் கொண்டோம். சரஸ்வதி சிலை நூல்நிலையத்திற்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. ஆனால், ‘பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்’ என்று எழுதியிருந்த அந்த நூலகம் இழந்திருக்கும் உண்மை வரலாறு, இன்னும் பல நூற்றாண்டைக் கடந்தாலும் மீட்டெடுக்க முடியாது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அடுத்ததாகப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கோட்டைக்குச் செல்வதாக முடிவெடுத்தோம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நூலகத்திற்கு எதிர்புறம் லைசென்ஸ் எடுக்கும் பயிற்சி இடம் இருந்தது. அது பயிற்சி இடமா அல்லது தேர்வு இடமா தெரியவில்லை. எந்த அடிப்படை ஒழுங்கும் இல்லை. சிவப்புக் கூம்பு மட்டுமே பிரதான சோதனை கருவியாக இருந்தது. ஒருபுறம் மோட்டாருக்கான சோதனையும், மறுபுறம் காருக்கான சோதனையும் நடக்க, ஒரு நிழல் மரத்திற்குக் கீழ் அமர்ந்திருந்த ஒருவர் குறிப்பு எழுதிக் கொண்டிருந்தார்.

சோதனைக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மரத்திற்குக் கீழ் நிழலில் தரையில் அமர்ந்திருந்தனர். காக்கைகள் அந்த மரத்திற்கு மேல் அமர்ந்திருந்தன. நான் அதை வேடிக்கை பார்த்தவாறே நிற்க ஏதாவது குடிக்கலாமா என ரஜனி தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார். ஏற்கெனவே சூரியன் பற்றி எரிகிறது. வெயிலுக்குக் குடிக்க இதமாக இளநீர் கிடைத்தால், மிக அருகில் தமிழர் ஒருவர் சுறுசுறுப்பாக இளநீர் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார். 3 வகை இளநீர் வைத்திருந்தார். மூன்றுக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை. அதற்கான காரணத்தையும் அந்த வியாபாரி வைத்திருந்தார்.

“நாங்கள் 6 பேர் இளநீர் குடிக்கிறோம். தள்ளுபடி கொடுக்க முடியுமா?”

“அது எல்லாம் முடியாது. வேண்டும் என்றால் மலிவான இளநீர் குடிங்க.”

“வேண்டாம், வேண்டாம். நல்ல இளநீரே கொடுங்க.”

கோட்டையின் நுழைவாயில்
நாங்கள் இரண்டாம் தரத்தில் இருந்த இளநீரைத் தேர்ந்தெடுத்தோம். அதை அந்த வியாபாரி வெட்டும் ஸ்டைலே லாவகமானது. நெஞ்சில் அணைத்தவாரே இளநீரை சீவினார். ஒரு நிமிடம் பெறவில்லை. ஆப்பிளை நறுக்குவதைவிடச் சுலபமாக இளநீர் அவரின் கைகளில் தவழ்ந்தது. அதைவிடவும், உள்ளே வழித்திருக்கும் வழுக்கையைச் சுரண்டி சாப்பிட, இளநீர் பட்டையையே வெட்டிக் கொடுத்தார். அது புதிதாக இருந்தது எனக்கு. நிறைய ஆட்கள் இளநீர் சாப்பிட வந்து குவிந்தனர்.

உதவிக்கு ஓர் ஆள் மட்டுமே வைத்துக் கொண்டு சுறுசுறுப்பான வியாபாரம் நடந்துக்கொண்டிருந்தது. எங்களுக்கும், உடல் உஷ்ணத்தின் தாக்கம் கொஞ்சம் குறைய, பல ஆண்டுகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த கோட்டைக்குப் போனோம். கோட்டை, இன்னும் புலிகளின் பெருமையைப் பேசுவதாகத் தான் இருந்தது.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக