நான் பிரேசர் மலைக்குச் சென்றது
இதுதான் முதன் முறை. குளுமையான இடமாக இருப்பதால் வாகனத்திற்கு கூட குளிர்சாதனத்தை
நாங்கள் பயன்படுத்தவில்லை. அறவே வேர்க்காததால் மின்விசிறியையும் நாங்கள் இயக்கவில்லை.
பறவைகளின் சத்தம் ஒரு கீதம்போல் எந்நேரமும் இசைப்பதால் வானொலியை முடக்கி விட எண்ணம்
பிறக்கவில்லை. காணும் இடங்களில் அழகிய காட்சிகள் இருப்பதால் தொலைக்காட்சி பெட்டி
நினைவுக்கே வரவில்லை. இப்படி என் மனதுக்கு
உவப்பான எத்தனை எத்தனையோ சிறப்பம்சங்களை
சுமந்திருக்கும் பிரேசர் மலைதான் பறவைகளின் சரணாலயமாக திகழ்கிறது என்றால் உங்களால்
நம்ப முடிகிறதா?
உலகின் பல நாடுகளிலிருந்து சீதோஷ்ண
நிலைக்கு ஏற்ப வெளிநாடுகளில் இருக்கும் பறவைகள் பலமாதங்கள் அல்லது பல வாரங்கள்
கடந்து இந்த பிரேசர் மலையில்தான் தஞ்சம் அடைகின்றன. நண்பர் ம.நவீன் மூலமாக துரை
என்பவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. துரையின் தோற்றத்தில் கொஞ்சம்
வயோதிகம் தெரிந்தாலும் மிகவும் உற்சாகமானவர். பிரேசர் மலை காடுகளும் அங்கு வாழும்
பறவைகளும், சிலந்திகளும் அவருக்கு நன்கு
அறிமுகமாயிருக்கின்றன. இன்னும் சொல்ல போனால் சினேகமுடன் இருக்கின்றன. துரையை ‘பேட்ஸ் மேன்' என்றே அங்கு அனைவரும்
அழைக்கிறார்கள். துரை மிகவும் சினேகமாக அங்கு வாழும் பறவைகளுடன் உரையாடுகிறார்.
இந்த அற்புதக் காட்சியைக் கண்ட எனக்குள்
அவர் எதனால் இன்னும் பிரபலமாகவில்லை? ஊடகங்கள் ஏன் அவரை
இன்னும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன போன்ற கேள்விகள் எழுந்து கொண்டிருந்தன.
மேலும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும் நோக்கில் நண்பர் நவீன் அவருடனான ஒரு
கலந்துரையாடலை எனக்கு ஏற்படுத்தி தந்தார்.
யோகி: உங்களை அறிமுகம்
செய்துகொள்ளுங்கள்?
துரை: இந்த பிரேசர் மலைதான் என்
தாய்வீடு. ஆறாம் ஆண்டுவரைதான் என் கல்வி. ஆனால், நான் சார்ந்துள்ள துறையில் என்னை வளர்த்துக்கொள்ள அந்த கல்வி போதுமானதாக
இருந்தது. ஆங்கில மொழியை நான் சுயமாகத்தான் கற்றுக்கொண்டேன். வெளிநாட்டு
தலைவர்களும் பிரபலங்களும் ‘Bird's Watch'-க்கு வரும் போது
அவர்களுடன் ஆங்கிலத்தில்தான் உரையாடவேண்டியுள்ளது.
யோகி: பறவைகளுக்கும் உங்களுக்கும்
உள்ள தொடர்பு எப்படி ஏற்பட்டது?
துரை:நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது பலபேர் இந்த பிரேசர் மலைக்கு பறவைகளைக் காண வருவார்கள். அவர்கள் பறவைகளிடம்
இத்தனை தீவிரம் காட்டுவது ஆச்சரியமாக இருக்கும். பெரும்பாலும் வெள்ளையர்கள்தான்
பறவைகளின் மீது தீவிரம் கொண்டு வருவார்கள்.
இந்த பறவைகளிடம் இருக்கும் அதிசயம்
என்ன? நீண்ட பயணத்தில் இவர்கள் தேடுவதை
பறவைகள் கொடுக்கின்றனவா? இவர்கள் இத்தனை மெனக்கெடுவதின்
நோக்கம் என்ன? என்ற கேள்விகள் எனக்குள்
பிறக்கும். அந்த கேள்விகளே பின்னாளில் என்னையும் பறவைகளைத் திரும்பி பார்க்க
வைத்தன. நான் என்னையும் அறியாமல் பறவைகளின் உலகில் வலம் வரத்தொடங்கினேன். பறவைகள்
என்னை மெல்ல மெல்ல அதன் உலகத்தில் அனுமதித்திருந்தன. அதன் பிறகு பறவைகளின் ஒலிகளை
எழுப்ப கற்றுக்கொண்டேன். கிட்டதட்ட 30 பறவைகளின் ஒலிகளை
என்னால் எழுப்ப முடியும்.
யோகி: உங்களால் ‘Bird's Watch' செய்ய முடியும் என நம்பிக்கையை கொடுத்த நாள் நினைவில் இருக்கிறதா?
துரை: இருக்கிறது. 1984-ஆம் ஆண்டு ஆங்கிலேயக்குழு ஒன்று பிரேசர் மலைக்கு வந்தது. அவர்களின்
வழிகாட்டியாக என்னை அழைத்திருந்தார்கள். முதல் தடவை எனினும் மறுக்காமல் சென்றேன்.
அதிநவீன தொலைநோக்கி, புத்தகங்கள், கேமராக்கள் என்று அவர்கள் மும்முரமாகவும், ஆர்வமாகவும் பறவைகளை கண்காணித்தனர். எனக்கு பயிற்சியில் இருக்கும் ஒலிகளைக்
கொண்டு பறவைகளை அழைத்தேன். தன் மறைவிடத்திலிருந்து பறவைகள் வெளிப்பட்டு
தேடிவந்தவர்களுக்கு காட்சி கொடுத்தது. வந்திருந்தவர்களுக்கு இது மிகவும்
ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்தது.
அவர்களின் தொலைநோக்கி, மற்றும் சில புத்தகங்களை பரிசாக
எனக்கு கொடுத்துச் சென்றனர். அவை எனக்கு கிடைத்த அறிய பொக்கிஷம். அதன் மூலம் நான்
நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன், தெரிந்துக்கொண்டேன்.
யோகி: இளையத்தலைமுறையினர்
பறவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனரா?
துரை: நான் பல வெளிநாடுகளுக்கும்
உள்நாட்டில் பல இடங்களுக்கும் சென்று பறவையைப் பற்றி உரையாடி வருகிறேன். இதன்
மூலம் இளையத்தலைமுறையினர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிந்தது.குறிப்பாக
இந்தியர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிதான் இருக்கிறார்கள். கானகத்திலும்
மலைகளிடத்திலும் சிறு உயிரினங்களிடத்திலும் இருக்கும் அதிசயத்தை ஆச்சரியத்தை
தொலைக்காட்சியிலோ அல்லது இணையத்திலோ பார்க்கவும் ரசிக்கவும்தான் முடியும். ஆனால், அதன் ஆச்சரியத்தை உணர முடியாது.
யோகி: உங்களுக்கும் பறவைகளுக்கும்
இடையில் நடக்கும் உரையாடலில் பறவைகளின் நம்பிக்கையை எப்படி பெறுகிறீர்கள்?
துரை: நான் ஒரு பறவையின் ஓசையை
எழுப்பும் போது அது என்னை அதன் ஜோடி என்றே நினைக்கின்றது. தன் ஜோடி அழைக்கிறது
என்ற நம்பிக்கையில்தான் அது அவ்விடத்திற்கு வருகிறது. உதாரணத்திற்கு நான்
தொடர்ந்து ஒலியை எழுப்பும்போது பறவை ஒரு
முறை அல்லது இருமுறை அல்லது மூன்று முறை பதிலொலி எழுப்பினால் ஒவ்வொன்றிற்கும்
வெவ்வேறு பதில் உண்டு. நான் வருகிறேன்; வரமாட்டேன்; வரமுடியாது என்பது போன்ற அர்த்தங்கள் அவை.
யோகி: மரங்கள் ஆட்சி செய்யும்
பிரேசர் மலையின் அடர்ந்த வனத்தில் நீங்கள் பறவைகளின் மேல் தீவிரம் காட்டியது
எதனால்? மற்ற மிருகங்களிடம் ஆச்சரியம்
இல்லையா?
துரை:என் சிறுவயதில் பறவைகளை
தேடிவந்தவர்கள், விட்டுச் சென்ற தேடல் என்னை
பிடித்துக்கொண்டதால் ஏற்பட்ட ஆர்வம் இது. தமிழில் ‘செய்வதை திருந்தச் செய்' என்ற பழமொழி உண்டு. எல்லா
மிருகங்களையும் தெரிந்துகொள்வதற்கு இந்த ஒரு ஜென்மம் போதுமா என்று தெரியவில்லை.
பறவைகள் இந்த வனத்தையே ஆட்சி செய்பவை. தனக்கென்று
ஒரு கூடுகட்டிக் கொள்ள அது எந்த மனிதரிடமும் மனு போடுவதில்லை. இந்த பிரேசர்
மலைக்கு, உலகப் புகழ்பெற்ற ஆவணப்படங்களை எடுக்கும் இயக்குநர் David Attboough
வந்திருந்தார். அவர் சிலந்திகளிடத்தில் அதிகம் ஆர்வம் காட்டினார். பிரேசர் மலையில் ‘ஸ்பைடர்’
என்று சொல்லக்கூடிய பெரிய வகை சிலந்திகள் இருக்கின்றன. மண் மேட்டில் குறிப்பிட்ட அளவு துளையைப் போட்டு கொண்டு தன் எச்சிலினால் பாதுகாப்பு
கவசத்தை பின்னிக்கொண்டு வாழ்பவை. இதில் சில விஷ சிலந்திகளும்
இருக்கின்றன. இதுபோன்ற சிலந்திகளை இரவில்தான் காணமுடியும்.
இந்த வனத்தின் வழிகாட்டியாக, தற்போது நான் சிலந்திகளையும்
பார்வையாளர்களுக்கு காண்பிக்கிறேன்.
யோகி: பறவைகள் பற்றி மனிதர்கள் அறிந்து கொள்ளாத தகவல் ஏதேனும் உண்டா?
துரை: பறவைகள் அதிக வர்ணத்தை விரும்புவதில்லை.
வண்ணங்களான அல்லது அழுத்தமான வர்ண உடையில் வருபவர்களை பறவைகள் நிராகரிக்கினறன.
அதிக ஓசைகளையும் அவை விரும்புவதில்லை. மிகவும்
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பறவைகளின் இயற்கை மரணம். பறவைகள்
வயோதிகம் அடைந்து இறந்து போகும் காட்சி எங்கும் பதிவாகவில்லை. வனத்தில் திரியும் பறவை தன் இறுதி நிமிடத்தை எங்குக் கழிக்கின்றது என்பது மர்மமாக
இருக்கிறது. பறவைகள் ஒளித்து வைத்திருக்க்கும் சிதம்பர ரகசியம்
அது.
யோகி: இந்த துறையில் ஈடுபட விரும்பும் ஒருவருக்கு
எவ்வாறான தகுதிகள் இருக்க வேண்டும்?
துரை: முதலில் அவர் வனத்தை நேசிப்பவராக இருக்க வேண்டும்.
வனம் மற்றும் மிருகங்களைப் பற்றியும் அதன் குணாதிசயங்களைப் பற்றியும்
கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். காககட்டின் தகவல்களை புதுப்பித்துக்
கொள்ளாமல் முழுமையாய் இதில் யாரும் ஈடுபட முடியாது. வழிகாட்டியாக
போகும் இடத்தில் நாம் காண்பிக்க நினைப்பது இல்லையென்றால், இருப்பதை
சுவாரஸ்யம் குன்றாமல் காண்பிக்க வேண்டும். இந்த நுட்பங்கள் ஒரு
வழிகாட்டிக்கு தெரிந்திருக்க வேண்டும். காடு தன்னை முழுநேரம்
திறந்துதான் வைத்திருக்கிறது. அதனைத் தேடி அடைவதற்கு நமக்கு பொறுமை
மற்றும் அதன்மேல் காதல் இருக்க வேண்டும்.
துரை: சில தனியார் அமைப்புகளும் அரசாங்கங்களும் உதவிகள்
செய்கின்றார்கள். ஆனால், இங்கே காடுகள்
அதிகம் அழிக்கப்படுவதால் பறவைகள் மற்றும் பிற பறவைகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.
இந்தோனேசியா காட்டுத்தீயின் புகையால் அண்டைநாட்டு மிருகங்கள் உட்பட பறவைகளும்
வெகுவாக பாதிப்படைந்திருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களுக்குத்
தீர்வு காணப்பட வேண்டும். 800 வகை பறவைகளை நமது நாடு கொண்டிருக்கிறது.
அவற்றை பாதுகாக்க இளையதலைமுறை கைகோர்க்க வேண்டும்.
யோகி :பறவைகளின் மேல் ஈடுபாடு காட்ட, பறவைகளின் சரணாலயமான பிரேசர் மலையில் எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளன?
துரை :வருடத்திற்கு ஒருமுறை இங்கே ஒரு மாபெரும் போட்டி
நடக்கும். அந்தப் போட்டியில் போட்டியாளர்கள் வனத்தில் அலைந்து,
தங்கள் கண்களுக்கு தென்படும் பறவைகளை குறிப்பெடுத்து வரவேண்டும்.
அவர்கள் குறிப்பெடுக்கும் பறவை அந்த நேரத்தில் அங்கு இருந்ததா,
இல்லையா என்பது நீதிபதியான எங்களுக்கு மிகத் துல்லியமாக தெரியும்.
அந்தப் போட்டி இங்கு ரொம்பவும் விஷேஷமானது. அதன்
வழிநிறைய சுற்றுலாப்பயணிகளும் பறவை நேசிப்பவர்களும் வருகிறார்கள்.
அடுத்து சில பள்ளிக்கூடங்களில் பறவைகள் பற்றிய கருத்தரங்குகள்
நடத்தப்படுகின்றன. என்னைப்போல பறவைகளைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள்
நமது நாட்டில் 4 பேர்தான் இருக்கிறார்கள். இந்தியர்களில் நான் ஒருவன்தான். அடுத்த புதிய தலைமுறை
உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் நாடு தழுவிய நிலையிலும்,
உலக நாடுகள் ரீதியிலும் கருத்தரங்குகளில் பங்கு கொண்டு கிடைக்கும் விவரங்களை
பகிர்ந்துக்கொள்கிறோம்.
இந்த போட்டியை முடிக்கும்போது இருட்டத் தொடங்கியிருந்தது. துரை
எங்களை காட்டுக்குள் அழைத்துச் சென்று சிலந்திகளைக் காண்பித்தார். துரை என்ற சாமானிய மனிதர் எனக்கு மிகப்பெரிய ஆளுமையாக தெரிந்தார். நம்மவர்கள் அவரைக் கண்டுக் கொள்ளாததும் எவ்வித கலந்துரையாடல்களை அவருடன் நடத்தப்படாததும்
இந்த சமூகத்தைப் பார்த்து கேள்வி எழுப்பக்கூடியதாக இருக்கிறது.
சினிமாவுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் கொடுக்கும் ஆர்வத்தை நிஜக்கலைஞர்களுக்கு கொடுக்க மறுப்பது வேதனையை தருகிறது. துரை எண்ணற்ற அதிசயங்களை சுமந்துள்ளார். அவரின் ஆளுமை அறிந்துக்கொண்ட ‘WWF’ அவரை வேலைக்கு அமர்த்தியது. ஒருமுறை இளவரசர் பிலிப்ஸ் இவரை சந்தித்து ‘BIRD WATCH’-க்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதைக்கேள்விபட்ட பிபிசி செய்தி நிறுவனம் இவரை சிறப்பு நேர்காணால் செய்து உலக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தது. இப்படி வெளிநாட்டவர்களெல்லாம் தெரிந்துவைத்திருக்கும் அளவுக்குக்கூட நாம் துரையை தெரிந்துவைத்திருக்கவில்லை.
திறந்த புத்தகமாக இருக்கும் துரையை வாசித்து பார்க்க அவரே ஒப்புதல்
தருகிறார். நமக்கு வாசிக்கத்தான் தெரிய வேண்டும்.
பின்குறிப்பு
பிரேசர் மலை ஒரு வித்தியாசமான மலைபிரதேசமாகும். அது தன்னைத்தானே அழிவிலிருந்து தற்காத்துக்கொள்வதாக இயற்கை ஆர்வளர்கள் கூறிகிறார்கள். அதனால்தான் புகழ்பெற்ற அந்த மலையில் கெந்திங் மலையைப் போன்று சொகுசு வர்த்தக அரங்கங்களை உருவாக்கமுடியவில்லை. மேலும், அடர்ந்த தடித்த வனமாக உள்ளதால் புதியவர்கள், வழிகாட்டியுடன் அங்கு பிரவேசிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். காரணம், அங்கு வழி தடுமாறுதல் அங்கு சாதாரணமாக நடக்கும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அமானுஷ்ய சக்திகள் மிகுந்த வனம் என பிரேசர் மலை வர்ணிக்கப்படுகிறது. காட்டில் தொலைந்தவர்களை கண்டுபிடிக்க வன அதிகாரிகள் துரையின் உதவியை நாடுகிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
(ஜனவரி 2013)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக