செவ்வாய், 27 ஜனவரி, 2015

‘அவர்கள்தான்' சிறந்தவர்கள் எனும் மாயை நமது சாபக்கேடு- சீ. முத்துசாமி

 மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு  140 வயதாகிறது என்று கூறப்படுகிறது. ஆதாரங்கள் எல்லாம் மிகச்சரியாக இருந்தாலும் மலேசிய இலக்கியம் குறித்த வளர்ச்சி இன்னும் கீழ் மட்டத்தில்தான் இருக்கிறது என்ற கருத்தும் பொதுவில் வைக்கத்தான் படுகிறது. ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிடதக்க  சில இலக்கிய ஆளுமைகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். 

குறிப்பாக 1950-களில் மு.ராமையா, கமலாச்சி ஆறுமுகம், நிலாவண்ணன் போன்றவர்களும், 1960-களில் சாமிமூர்த்தி, பாவை, தா.மு.மேரி போன்றவர்களும், 1970-களில் இளஞ்செல்வன், ரெ.கார்த்திகேசு, கோ.முனியாண்டி போன்றவர்களும் மலேசிய தமிழ் இலக்கியத்தில் புது மாறுதல் வடிவத்தை ஏற்படுத்தினார்கள் என்று மலேசிய இலக்கியத்தில் கூறப்படுகிறது. மூத்த எழுத்தாளர்களில் மிகச் சிறந்த 10 பேர் பட்டியலிட்டால் யார் யார் தேருவார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால், அவர்களில் சீ.முத்துசாமி மட்டும் தவிர்க்க முடியாத ஆளுமை என்பது எனக்கு தெரியும். தோட்டப் புறம் சார்ந்த தன் எழுத்தை படைப்பில் தருவித்து தனக்கென்ற ஒரு பாணியை பிடித்துக் கொண்டவர்தான் எழுத்தாளர் சீ.முத்துசாமி. 

அண்மையில் (2012) தனது அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்' என்ற சிறுகதைத் தொகுப்பை தலைநகரில் வெளியீடு செய்தார். இந்த நிகழ்வுக்கு வந்திருந்தவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிகம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பாதவர், கொஞ்சம் மனம் திறந்தார்.

யோகி: ஒரு படைப்பாளன் இயங்கக்கூடிய மனநிலை என்ன?
முத்துசாமி:குறிப்பிட்டு இந்த மனநிலைதான் என்று கூற முடியாது. காரணம் மனிதனின் மனநிலை காலத்துக்குக் காலம், சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மாறக்கூடியது. அப்படி இருக்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் உந்துதல் அல்லது உறுத்துதல் உள்ளுக்குள் ஏற்படும் போது அது ஒரு படைப்பாக ஓர் எழுத்தாளனுக்கு உருவகப்படுகிறது. அப்படி ஏதும் மன நிலையை பாதிக்கவில்லை என்றால் மனக்கிளர்ச்சிகள் தோன்றவில்லை என்றால் ஒரு படைப்பு பிறப்பதற்கு வாய்ப்பில்லை. நிச்சயமாக, ஒரு சூழலில் உறுத்தலும் உந்துதலும் ஏற்படும்போது அது எழுத்தாளனை எழுதச்சொல்லி தொந்தரவு செய்யும். அப்போது பிறக்கும் படைப்புக்கு  ஒரு தனித்துவமும்  ஒரு மதிப்பீடும் இருக்கும்.

யோகி: உங்கள் படைப்பின் நோக்கம் என்ன?
முத்துசாமி: என்னுடைய படைப்பின் முதல் நோக்கம் படைப்பை கலையாக்கம் செய்ய வேண்டும். எந்த ஒரு விஷயமானாலும் அதை கலையாக்கம் செய்ய முடியாவிட்டால் அதனுள் நான் போக மாட்டேன். கலையாக்கம் இருந்தால்தான் படைப்பாக்கம் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.

யோகி: உங்களின் படைப்புகள் தோட்டப்புறம் சார்ந்தவை மட்டும்தான் என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே? அது மட்டுமின்றி தோட்டப் புறம் சார்ந்து வேறு யார் தன் படைப்பைக் கொண்டு வர நினைத்தாலும் அது ஏதோ ஒரு வகையில் முழுமை பெறாமல் இருப்பதோடு பரவலாக பேசப்படுவதும் இல்லை. இதற்கு உங்களின் விளக்கம் என்ன?
முத்துசாமி: பிறரைப் பற்றி கருத்துச் சொல்ல நான் விரும்பவில்லை. காரணம் அவர்களின் மனநிலை என்ன என்பதற்கு அவர்கள்தான் விளக்கமளிக்க வேண்டும். தோட்டப்புற மண் இன்னும் என்னுடலிலும் மனதிலும் ஒட்டி இருக்கிறது. ஒரு வேளை அதனால்தான் என் படைப்புகள் தோட்டம் சார்ந்ததாக இருந்தாலும் பிறரிடமிருந்து  வேறுபடுத்திக் காட்டுகிறது என்று நினைக்கிறேன். செம்மண் வாசம் நிறைந்த என் தோட்டத்து வாழ்கை அனுபவத்தை படைப்பில் கொடுக்கும் போது, நான் இன்னும் சுகமாக உணர்கிறேன். தோட்டங்கள் இன்று பட்டணமாக மாறினாலும் நான் மனதளவில் இன்னும் தோட்டத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

யோகி: உங்கள் எழுத்துக்கு கிடைத்த அங்கிகாரம் என்ன?
முத்துசாமி:  70-களில் இரைகள்' என்ற என் சிறுகதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசு கிடைத்தது. அது எனக்குக் கிடைத்த குறிப்பிட்ட அங்கீகாரம் என்றுதான் நினைக்கிறேன்.  காரணம் அந்தக் காலகட்டத்தில் கெடாவில் யாருமே குறிப்பிடும்படி இல்லை. அதற்குப் பிறகுதான் ரெ.கார்த்திகேசு, மீனா என்பவர்கள் வந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு முக்கியமான அடையாளம் என்றே சொல்லலாம். இங்கேயும் இலக்கியம் எழுதக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்று நமது நாட்டு படைப்பாளர்களை திரும்பிப் பார்க்கவைத்தது. 
இரண்டாவதாக  ஆஸ்ட்ரோ நடத்திய குறுநாவல் போட்டியில் எனது மண் புழுக்கள்' நாவலுக்கு பரிசு கிடைத்தது. அதன் பிறகு என் படைப்புகளுக்கு கிடைத்த சின்ன சின்ன பரிசுகள் அதாவது  பத்திரிகைகளின் போட்டி நடத்தி அதன்வழி கிடைத்த பவுன்' பரிசுகள்  அனைத்தையும் என் படைப்புகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே நான் நினைக்கிறேன்.

யோகி: தற்சமயம் வெளியீடு கண்டிருக்கும் சிறுகதை புத்தகம் எந்த காலகட்டத்தில்  எழுதப்பட்டது?
முத்துசாமி:  தொகுப்பில் இருக்கும் 15 கதைகளில் இரண்டு கதைகள் 1970-களில் வந்த கதைகள். மற்றவை 2000-க்குப் பிறகு எழுதப்பட்டது. அனைத்தும் தோட்டப்புறம் சார்ந்ததாக இருந்தாலும், ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகள் சொல்பவை.

யோகி:நீங்கள் மூத்த எழுத்தாளராக, மலேசிய இலக்கியம் குறித்த வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை தெளிவு படுத்துங்கள். மலேசியாவுக்கு வருகை தந்திருந்த சாரு, மலேசியாவில் இலக்கியமே வளரவில்லை என்று சொல்லி இருக்கிறார். அந்த விமர்சனத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
முத்துசாமி: இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வரும் எழுத்தாளர்கள் எதை வைத்து நமது படைப்புகளை நிர்ணயம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் அளவுகோல் என்ன என்று எனக்குப் புரியவில்லை. எந்தப் படைப்பையும் அந்த மண்ணில் இருந்து பார்க்க வேண்டும். அந்த மண்ணில் இருந்து பார்க்கும் போதுதான் அதன் வீரியத்தை உணர முடியும். அதன் தார்ப்பரியத்தை  புரிந்துக்கொள்ள முடியும். இந்த மண்ணுக்குச் சொந்தம் இல்லாதவர்கள் சொல்லும் கருத்து முழுவதையும்  நான் நிராகரிக்கவில்லை என்றாலும் நம் வாழ்க்கை, நம் கல்வி, நம் அரசியல், இன்னும் இத்யாதி இத்யாதிகளை  வாழ்ந்து பார்க்காத அவர்களால் நம் படைப்புகளையும், எழுத்தையும் விமர்சிக்க முடியாது.  10 நாட்கள் சுற்றுலா வரும் இவர்களால் நம் வாழ்கையின் அளவுகோல் இட முடியுமா? அது ஒரு தப்பான கண்ணோட்டமே.

யோகி: (மலேசிய) இளைய சமுதாயத்தின் இலக்கிய வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது?
முத்துசாமி: ஒரு சிறிய வட்டம், நவீன இலக்கியத்தை நோக்கி பயணப்பட்டாலும், மற்றவர்களின் வளர்ச்சி இன்னும் வளராமல்தான் இருக்கிறது. அது அவர்களின் தவறில்லை. பாலர் பள்ளி, ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி, பல்கலைக்கழகம் வரை நவீன இலக்கியத்தை போதிக்கும் சூழல் நம்மிடத்தில் இல்லை. சிலர் இலக்கியம் என்பது ஒரு பொழுது போக்கு என்று நினைக்கிறார்கள். அது வாழ்க்கைக்கு முக்கியம் இல்லை என்றே பேசுகிறார்கள். சினிமாக்காரர்களுக்கு கொடுக்கும்  மரியாதையையும், ஆதரவையும் நம் நாட்டு எழுத்தாளர்களுக்கு  நம் நாட்டு மக்களே தருவதில்லை. இது யாருடைய குறை? சமுதாயத்திற்கும் நம் இலக்கிய வீழ்ச்சி மீது அக்கரை இல்லையே. அப்படி இருக்கும் போது நவீன இலக்கியத்தை நோக்கி இந்த சமுதாயம் எப்படி போகும்? அதற்கு கல்வி துறையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.  முதலில் அவர்களுக்கு நவீன இலக்கியத்தைப் போதிக்க வேண்டும். முக்கியமாக பாடப்புத்தகத்தை  உருவாக்கும் கல்விமான்களுக்கு ஒரு பட்டறை நடத்தப்பட வேண்டும். நவீன இலக்கியம் என்றால் என்ன என்று அவர்களுக்கு போதிக்கப்பட்டு, உணர்த்தப்பட்டால் தானாகவே மாற்றம் நிகழும். இதைத் தவிர வேறு வழி இல்லை.
 
யோகி:ஆஸ்ட்ரோ மற்றும் பொது இயக்கங்கள்  நடத்தும் போட்டிகளில் நம் திறனை நிர்ணயிக்க இந்தியாவிலிருந்து  நீதிபதிகள் வருகிறார்களே? நம்முடைய தரத்தை நிர்ணயிக்கும் தரம் நிறைந்த நீதிபதிகள் நம்மிடையே இல்லையா?
முத்துசாமி: ஏன் இல்லை? இருக்கிறார்கள். அவர்களை ஏற்பாட்டாளர்கள் பயன் படுத்திக்கொள்வதில்லை.  ஒரு சிறந்த விமர்சனத்தை அவர்கள்'தான்  சொல்ல முடியும் என்ற மாயையில் சிலர் இருக்கிறார்கள்.  இது அவர்களின் பார்வைக் கோளாறு. நமக்கிருக்கும் சாபக்கேடுகளில்  இதுவும் ஒன்று.  இது களையப்பட வேண்டும். நம் தரத்தை நாமே நிர்ணயிக்கும் நாள் வரவேண்டும்.

(டிசம்பர் 2012)
     






ஞாயிறு, 18 ஜனவரி, 2015

மலேசிய இலக்கியம் திணை மரபை இழந்து விட்டதா?

 யவானிகா ஸ்ரீராம் இவர் ஒரு பின்நவீனத்துவ கவிஞராக அறியப்படுகிறார். தனது கவிதைகளிலாலும் படைப்புகளாலும் தனக்கென தனிப் பாணியை வைத்திருக்கும் இவர் அண்மையில் ‘வல்லினம்' இலக்கியக் குழுவில் கவிதை குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.


தொடக்கத்தில் நான் மலேசியாவில் இலக்கியம் குறித்தப் பார்வை இல்லை என்றே எண்ணியிருந்தேன். காரணம் நான் மலேசியாவிற்கு வருவது புதிதல்ல. 10 தடவைக்கு மேல் இங்கு வந்திருக்கிறேன். ஒரு முறை மலேசிய இலக்கிய ஆர்வளர்களை அடையாளம் காணும் நோக்கில் இரு ஜப்பான் மொழிபெயர்ப்பு புத்தகங்களை ஒரு புத்தகக்கடையில் கொடுத்து இந்தப் புத்தகங்களை யாரேனும் வாங்கினால் அவர்களின் தொலைபேசி எண்ணை மட்டும் குறித்து வைத்து கொடுங்கள் என்றேன். அவர்கள் அதில் பெரிய ஆர்வத்தை காட்டாததோடு, இங்கிருப்பவர்கள் ‘கல்லோ காவியமோ', கரித்துண்டு, அகிலன் புத்தகங்கள் இப்படித்தான் வாசிப்பார்கள். வேண்டும் என்றால் வைத்து விட்டுப் போங்கள் என்று சொல்லிவிட்டார்கள். நானும் வைத்து விட்டு வந்து விட்டேன். இன்று அந்தக் கடையும் இங்கு இல்லை. ஆனால் 2004-ஆம் ஆண்டுவாக்கில்தான் இங்கு இலக்கிய பரிச்சயம் இருக்கிறது என்று என்னால் உணர முடிந்தது. அந்தக் காலக்கட்டத்தில் கவிதைகள் தரத்தைக் குறித்து நாளிதல்களில் வாசிக்க நேறுகையில் , அதிகலவில் காதல் கவிதைகளும், தகவல்களை ஒருவரை ஒருவர் பகிர்ந்துக்கொள்வதைப் போன்றும் இருந்தன. தீவிர கவிதைக் குறித்த பார்வையை ஆராய நேறுகையில் மலேசியாவில் அதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு வேண்டுமே என்ற குழப்பமும் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறி விட்டாலும், இன்னும் மலேசிய கவிதைகளில் தினை மரபு குறைவாகவே இருக்கிறது. அதாவது தமிழர்களுக்கு 5 தினைகள் உள்ளன. இங்கு போய் வசித்தாலும் அந்த நிலமும் அவனும் மிக நெருக்கமான உறவுடைய விஷயமாகத்தான் அமையும். ஆனால் இன்னும் இங்கு வசிப்பவர்கள் இந்த மண்ணோடு உண்டான உறவுகள் அவ்வளவு வழிமையாக இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. இங்கு படைக்கப்பட்ட கவிதைகளை வாசித்தப் பிறகு ஏற்பட்ட சந்தேகமாக அதை நான் முன் வைக்கிறேன். அதாவது நமக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று 5 திணைகள் உள்ளன. மேலும் யாப்பிலக்கிய மரபிலும் இந்த திணைகள் குறித்து
மணிமொழி, விஜயா, குழலி, யோகியுடன் 
நிறைய கவிதைகள் நமக்கு போதிக்கின்றன. இந்த நிலத்தோடு உறவு என்பது இங்கிருக்கும் பறவைகள், மரங்கள் சூழல்கள் , மனிதர்கள் என்று விரிகிறது. தமிழன் தனது கவிதையை எப்படி வகுத்துக்கொண்டான் என்றால் திணை மரபுகளை, திணை மரபுகளில் இருக்கக்கூடிய விழிப்பொருள் கருப்பொருள் வழியாகத்தான் எல்லா விஷயங்களையும் சொல்லக்கூடிய வடிவமாக வைத்திருந்தான். அதைத்தான் செவ்வியலாகவும் ஆக்கப்பட்டது. அதன் வழியாகத்தான் காதல், ஒழுக்கம், பண்பு ஆகியவையும் பாதுகாக்கப்பட்டது. அதன் வழியாகத்தான் அரசியலும் எழுதப்பட்டது. இந்த முறை மலேசிய கவிதைக்குள் வர வேண்டும். அனுபவங்களை கவிதையாக்கினால் முழுமையாக இருக்காது. அதின் திணையையும் புனைவையையும் சேர்க்கும் போது மிகச்சிறந்த கவிதைகள் வெளிப்படும். தற்போது சில முக்கியப்படைப்புகளை மலேசிய எழுத்திலிருந்து காணக்கிடைக்கிறது. இது உண்மையில் ஆரோக்கிய மாற்றம்தான்” என்று மலேசிய இலக்கியம் குறித்த பார்வையை அவர் பகிர்ந்துக்கொண்டார்.

(நம் நாடு ,செப்டம்பர் 2013)


 கவிதை 

குரங்கிலிருந்து பிறந்தவர்கள்
இறந்து கொண்டிருக்கிறார்கள்
கருப்புநிற அமரர் ஊர்திகள்
கண்ணாடிச் சவப்பெட்டிகள்
மௌனமாகத் தலைகவிழ்ந்து
நல்லடக்கத்திலிருந்து வெளியேறி
காமத்துடன் திரும்பும் ஆத்மாக்கள்
இறைச்சியுடன் வெந்த உருளைக்கிழங்கை
புசிக்கின்றார்கள்
அவர்கள் மீதமுள்ள நிலங்களை
ஏறிட்டுப் பார்க்கிறார்கள்
கரும்புத் தண்டுகள் சூல்கொண்டு விட்டதா?
பெண்கள் பூப்படைகின்றார்களா?
சம்பவங்கள் அனைத்தும் குறிப்பெடுக்கப்படுகிறதா?
நேற்றைய பகலின்
நாளைய இரவிற்குள்
அனைத்தையும் தெரிந்து கொண்டவர்களாக
தனியாக
பிறகு யாருடனாவது
இடங்களின் மேல் அவதானமற்று
பேசத்தொடங்கி விடுவது
ஒரு பழத்தை இரவுநேர
வயிற்றுக்குள் தள்ளுவதாய் இருக்கிறது
ஏலமிடும் சந்தைக்கருகே
பொது இடங்களில்
தழுவிக் கொள்வது
நாய்களுடன் நடை பயில்வது
பல வகையில் குறைந்து வரும்
உணவுப் பழக்கம்தான்
புணர்ச்சியில் எப்போதும் தலைகவிழும்
குரங்குகளை சவ அடக்கத்தில் காண முடியவில்லை.
o யவானிகா ஸ்ரீராம்

வெள்ளி, 16 ஜனவரி, 2015

பறவை மனிதர் துரை

நான் பிரேசர் மலைக்குச் சென்றது இதுதான் முதன் முறை. குளுமையான இடமாக இருப்பதால் வாகனத்திற்கு கூட குளிர்சாதனத்தை நாங்கள் பயன்படுத்தவில்லை. அறவே வேர்க்காததால் மின்விசிறியையும்  நாங்கள் இயக்கவில்லை. பறவைகளின் சத்தம் ஒரு கீதம்போல் எந்நேரமும் இசைப்பதால் வானொலியை முடக்கி விட எண்ணம் பிறக்கவில்லை. காணும் இடங்களில் அழகிய காட்சிகள் இருப்பதால் தொலைக்காட்சி பெட்டி நினைவுக்கே வரவில்லை. இப்படி என்  மனதுக்கு உவப்பான  எத்தனை எத்தனையோ சிறப்பம்சங்களை சுமந்திருக்கும் பிரேசர் மலைதான் பறவைகளின் சரணாலயமாக திகழ்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

உலகின் பல நாடுகளிலிருந்து சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப வெளிநாடுகளில் இருக்கும் பறவைகள் பலமாதங்கள் அல்லது பல வாரங்கள் கடந்து இந்த பிரேசர் மலையில்தான் தஞ்சம் அடைகின்றன. நண்பர் ம.நவீன் மூலமாக துரை என்பவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. துரையின் தோற்றத்தில் கொஞ்சம் வயோதிகம் தெரிந்தாலும் மிகவும் உற்சாகமானவர். பிரேசர் மலை காடுகளும் அங்கு வாழும் பறவைகளும், சிலந்திகளும் அவருக்கு நன்கு அறிமுகமாயிருக்கின்றன. இன்னும் சொல்ல போனால் சினேகமுடன் இருக்கின்றன. துரையை பேட்ஸ் மேன்' என்றே அங்கு அனைவரும் அழைக்கிறார்கள். துரை மிகவும் சினேகமாக அங்கு வாழும் பறவைகளுடன் உரையாடுகிறார். இந்த  அற்புதக் காட்சியைக் கண்ட எனக்குள் அவர் எதனால் இன்னும் பிரபலமாகவில்லை? ஊடகங்கள் ஏன் அவரை இன்னும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன போன்ற  கேள்விகள் எழுந்து கொண்டிருந்தன. மேலும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும் நோக்கில் நண்பர் நவீன் அவருடனான ஒரு கலந்துரையாடலை எனக்கு ஏற்படுத்தி தந்தார்.

யோகி: உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள்?
துரை: இந்த பிரேசர் மலைதான் என் தாய்வீடு. ஆறாம் ஆண்டுவரைதான் என் கல்வி. ஆனால், நான் சார்ந்துள்ள துறையில் என்னை வளர்த்துக்கொள்ள அந்த கல்வி போதுமானதாக இருந்தது. ஆங்கில மொழியை நான் சுயமாகத்தான் கற்றுக்கொண்டேன். வெளிநாட்டு தலைவர்களும் பிரபலங்களும் ‘Bird's Watch'-க்கு வரும் போது அவர்களுடன் ஆங்கிலத்தில்தான் உரையாடவேண்டியுள்ளது.

யோகி: பறவைகளுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு எப்படி ஏற்பட்டது?
துரை:நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது பலபேர் இந்த பிரேசர் மலைக்கு பறவைகளைக் காண வருவார்கள். அவர்கள் பறவைகளிடம் இத்தனை தீவிரம் காட்டுவது ஆச்சரியமாக இருக்கும். பெரும்பாலும் வெள்ளையர்கள்தான் பறவைகளின் மீது தீவிரம் கொண்டு வருவார்கள்.
இந்த பறவைகளிடம் இருக்கும் அதிசயம் என்ன? நீண்ட பயணத்தில் இவர்கள் தேடுவதை பறவைகள் கொடுக்கின்றனவா? இவர்கள் இத்தனை மெனக்கெடுவதின் நோக்கம் என்ன? என்ற கேள்விகள் எனக்குள் பிறக்கும். அந்த கேள்விகளே பின்னாளில் என்னையும் பறவைகளைத் திரும்பி பார்க்க வைத்தன. நான் என்னையும் அறியாமல் பறவைகளின் உலகில் வலம் வரத்தொடங்கினேன். பறவைகள் என்னை மெல்ல மெல்ல அதன் உலகத்தில் அனுமதித்திருந்தன. அதன் பிறகு பறவைகளின் ஒலிகளை எழுப்ப கற்றுக்கொண்டேன். கிட்டதட்ட 30 பறவைகளின் ஒலிகளை என்னால் எழுப்ப முடியும்.
யோகி: உங்களால்  ‘Bird's Watch' செய்ய முடியும் என நம்பிக்கையை கொடுத்த நாள் நினைவில் இருக்கிறதா?
துரை: இருக்கிறது. 1984-ஆம் ஆண்டு ஆங்கிலேயக்குழு ஒன்று பிரேசர் மலைக்கு வந்தது. அவர்களின் வழிகாட்டியாக என்னை அழைத்திருந்தார்கள். முதல் தடவை எனினும் மறுக்காமல் சென்றேன். அதிநவீன தொலைநோக்கி, புத்தகங்கள், கேமராக்கள் என்று அவர்கள் மும்முரமாகவும், ஆர்வமாகவும் பறவைகளை கண்காணித்தனர். எனக்கு பயிற்சியில் இருக்கும் ஒலிகளைக் கொண்டு பறவைகளை அழைத்தேன். தன் மறைவிடத்திலிருந்து பறவைகள் வெளிப்பட்டு தேடிவந்தவர்களுக்கு காட்சி கொடுத்தது. வந்திருந்தவர்களுக்கு இது மிகவும் ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்தது. அவர்களின் தொலைநோக்கி, மற்றும் சில புத்தகங்களை பரிசாக எனக்கு கொடுத்துச் சென்றனர். அவை எனக்கு கிடைத்த அறிய பொக்கிஷம். அதன் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன், தெரிந்துக்கொண்டேன்.

யோகி: இளையத்தலைமுறையினர் பறவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனரா?
துரை: நான் பல வெளிநாடுகளுக்கும் உள்நாட்டில் பல இடங்களுக்கும் சென்று பறவையைப் பற்றி உரையாடி வருகிறேன். இதன் மூலம் இளையத்தலைமுறையினர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிந்தது.குறிப்பாக இந்தியர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிதான் இருக்கிறார்கள். கானகத்திலும் மலைகளிடத்திலும் சிறு உயிரினங்களிடத்திலும் இருக்கும் அதிசயத்தை ஆச்சரியத்தை தொலைக்காட்சியிலோ அல்லது இணையத்திலோ பார்க்கவும் ரசிக்கவும்தான் முடியும். ஆனால், அதன் ஆச்சரியத்தை உணர முடியாது.

யோகி: உங்களுக்கும் பறவைகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் பறவைகளின் நம்பிக்கையை எப்படி பெறுகிறீர்கள்?
துரை: நான் ஒரு பறவையின் ஓசையை எழுப்பும் போது அது என்னை அதன் ஜோடி என்றே நினைக்கின்றது. தன் ஜோடி அழைக்கிறது என்ற நம்பிக்கையில்தான் அது அவ்விடத்திற்கு வருகிறது. உதாரணத்திற்கு நான் தொடர்ந்து ஒலியை எழுப்பும்போது  பறவை ஒரு முறை அல்லது இருமுறை அல்லது மூன்று முறை பதிலொலி எழுப்பினால் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு பதில் உண்டு. நான் வருகிறேன்; வரமாட்டேன்; வரமுடியாது என்பது போன்ற அர்த்தங்கள் அவை.

யோகி: மரங்கள் ஆட்சி செய்யும் பிரேசர் மலையின் அடர்ந்த வனத்தில் நீங்கள் பறவைகளின் மேல் தீவிரம் காட்டியது எதனால்? மற்ற மிருகங்களிடம் ஆச்சரியம் இல்லையா?
துரை:என் சிறுவயதில் பறவைகளை தேடிவந்தவர்கள், விட்டுச் சென்ற தேடல் என்னை பிடித்துக்கொண்டதால் ஏற்பட்ட ஆர்வம் இது. தமிழில் செய்வதை திருந்தச் செய்' என்ற பழமொழி உண்டு. எல்லா மிருகங்களையும் தெரிந்துகொள்வதற்கு இந்த ஒரு ஜென்மம் போதுமா என்று தெரியவில்லை. பறவைகள் இந்த வனத்தையே ஆட்சி செய்பவை. தனக்கென்று ஒரு கூடுகட்டிக் கொள்ள அது எந்த மனிதரிடமும் மனு போடுவதில்லை. இந்த பிரேசர் மலைக்கு, உலகப் புகழ்பெற்ற ஆவணப்படங்களை எடுக்கும் இயக்குநர் David Attboough வந்திருந்தார். அவர் சிலந்திகளிடத்தில் அதிகம் ஆர்வம் காட்டினார். பிரேசர் மலையில்ஸ்பைடர்என்று சொல்லக்கூடிய பெரிய வகை சிலந்திகள் இருக்கின்றன. மண் மேட்டில் குறிப்பிட்ட அளவு துளையைப் போட்டு கொண்டு தன் எச்சிலினால் பாதுகாப்பு கவசத்தை பின்னிக்கொண்டு வாழ்பவை. இதில் சில விஷ சிலந்திகளும் இருக்கின்றன. இதுபோன்ற சிலந்திகளை இரவில்தான் காணமுடியும். இந்த வனத்தின் வழிகாட்டியாக, தற்போது நான் சிலந்திகளையும் பார்வையாளர்களுக்கு காண்பிக்கிறேன்.
யோகி: பறவைகள்   பற்றி மனிதர்கள் அறிந்து கொள்ளாத தகவல் ஏதேனும் உண்டா?
துரை: பறவைகள் அதிக வர்ணத்தை விரும்புவதில்லை. வண்ணங்களான அல்லது அழுத்தமான வர்ண உடையில் வருபவர்களை பறவைகள் நிராகரிக்கினறன. அதிக ஓசைகளையும் அவை விரும்புவதில்லை. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பறவைகளின் இயற்கை மரணம். பறவைகள் வயோதிகம் அடைந்து இறந்து போகும் காட்சி எங்கும் பதிவாகவில்லை. வனத்தில் திரியும் பறவை தன் இறுதி நிமிடத்தை எங்குக் கழிக்கின்றது என்பது மர்மமாக இருக்கிறது. பறவைகள் ஒளித்து வைத்திருக்க்கும் சிதம்பர ரகசியம் அது.

யோகி: இந்த துறையில் ஈடுபட விரும்பும் ஒருவருக்கு எவ்வாறான தகுதிகள் இருக்க வேண்டும்?
துரை: முதலில் அவர் வனத்தை நேசிப்பவராக இருக்க வேண்டும். வனம் மற்றும் மிருகங்களைப் பற்றியும் அதன் குணாதிசயங்களைப் பற்றியும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். காககட்டின் தகவல்களை புதுப்பித்துக் கொள்ளாமல் முழுமையாய் இதில் யாரும் ஈடுபட முடியாது. வழிகாட்டியாக போகும் இடத்தில் நாம் காண்பிக்க நினைப்பது  இல்லையென்றால், இருப்பதை சுவாரஸ்யம் குன்றாமல் காண்பிக்க வேண்டும். இந்த நுட்பங்கள் ஒரு வழிகாட்டிக்கு தெரிந்திருக்க வேண்டும். காடு தன்னை முழுநேரம் திறந்துதான் வைத்திருக்கிறது. அதனைத் தேடி அடைவதற்கு நமக்கு பொறுமை மற்றும் அதன்மேல் காதல் இருக்க வேண்டும்.

யோகி: நம் நாட்டின் இந்த பறவைகளின் சரணாலயத்திற்கு எவ்வாறான ஆதரவுகள் இருக்கின்றன?
துரை: சில தனியார் அமைப்புகளும் அரசாங்கங்களும் உதவிகள் செய்கின்றார்கள். ஆனால், இங்கே காடுகள் அதிகம் அழிக்கப்படுவதால் பறவைகள் மற்றும் பிற பறவைகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. இந்தோனேசியா காட்டுத்தீயின் புகையால் அண்டைநாட்டு மிருகங்கள் உட்பட பறவைகளும் வெகுவாக பாதிப்படைந்திருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். 800 வகை பறவைகளை நமது நாடு கொண்டிருக்கிறது. அவற்றை பாதுகாக்க இளையதலைமுறை கைகோர்க்க வேண்டும்.

யோகி :பறவைகளின்  மேல் ஈடுபாடு காட்ட, பறவைகளின் சரணாலயமான பிரேசர் மலையில் எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளன?
துரை :வருடத்திற்கு ஒருமுறை இங்கே ஒரு மாபெரும் போட்டி நடக்கும். அந்தப் போட்டியில் போட்டியாளர்கள் வனத்தில் அலைந்து, தங்கள் கண்களுக்கு தென்படும் பறவைகளை குறிப்பெடுத்து வரவேண்டும். அவர்கள் குறிப்பெடுக்கும் பறவை அந்த நேரத்தில் அங்கு இருந்ததா, இல்லையா என்பது நீதிபதியான எங்களுக்கு மிகத் துல்லியமாக தெரியும். அந்தப் போட்டி இங்கு ரொம்பவும் விஷேஷமானது. அதன் வழிநிறைய சுற்றுலாப்பயணிகளும் பறவை நேசிப்பவர்களும்  வருகிறார்கள்.
அடுத்து சில பள்ளிக்கூடங்களில் பறவைகள் பற்றிய கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. என்னைப்போல பறவைகளைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் நமது நாட்டில் 4 பேர்தான் இருக்கிறார்கள். இந்தியர்களில் நான் ஒருவன்தான். அடுத்த புதிய தலைமுறை உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் நாடு தழுவிய நிலையிலும், உலக நாடுகள் ரீதியிலும் கருத்தரங்குகளில் பங்கு கொண்டு கிடைக்கும் விவரங்களை பகிர்ந்துக்கொள்கிறோம்.

இந்த போட்டியை முடிக்கும்போது இருட்டத் தொடங்கியிருந்தது. துரை எங்களை காட்டுக்குள் அழைத்துச் சென்று சிலந்திகளைக் காண்பித்தார். துரை என்ற சாமானிய மனிதர் எனக்கு மிகப்பெரிய ஆளுமையாக தெரிந்தார். நம்மவர்கள் அவரைக் கண்டுக் கொள்ளாததும் எவ்வித கலந்துரையாடல்களை அவருடன் நடத்தப்படாததும் இந்த சமூகத்தைப் பார்த்து  கேள்வி எழுப்பக்கூடியதாக இருக்கிறது.

சினிமாவுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் கொடுக்கும் ஆர்வத்தை நிஜக்கலைஞர்களுக்கு கொடுக்க மறுப்பது வேதனையை தருகிறது. துரை எண்ணற்ற அதிசயங்களை சுமந்துள்ளார். அவரின் ஆளுமை அறிந்துக்கொண்ட ‘WWF’ அவரை வேலைக்கு அமர்த்தியது. ஒருமுறை இளவரசர் பிலிப்ஸ் இவரை சந்தித்து ‘BIRD WATCH’-க்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதைக்கேள்விபட்ட பிபிசி செய்தி நிறுவனம் இவரை சிறப்பு நேர்காணால் செய்து உலக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தது. இப்படி வெளிநாட்டவர்களெல்லாம் தெரிந்துவைத்திருக்கும் அளவுக்குக்கூட நாம் துரையை தெரிந்துவைத்திருக்கவில்லை.
திறந்த புத்தகமாக இருக்கும் துரையை வாசித்து பார்க்க அவரே ஒப்புதல் தருகிறார். நமக்கு வாசிக்கத்தான் தெரிய வேண்டும்.  

பின்குறிப்பு

பிரேசர் மலை ஒரு வித்தியாசமான மலைபிரதேசமாகும். அது தன்னைத்தானே அழிவிலிருந்து தற்காத்துக்கொள்வதாக இயற்கை ஆர்வளர்கள் கூறிகிறார்கள். அதனால்தான் புகழ்பெற்ற அந்த மலையில் கெந்திங் மலையைப் போன்று சொகுசு வர்த்தக அரங்கங்களை உருவாக்கமுடியவில்லை. மேலும், அடர்ந்த தடித்த வனமாக உள்ளதால் புதியவர்கள், வழிகாட்டியுடன் அங்கு பிரவேசிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். காரணம்,  அங்கு வழி தடுமாறுதல் அங்கு சாதாரணமாக நடக்கும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அமானுஷ்ய சக்திகள் மிகுந்த வனம் என பிரேசர் மலை வர்ணிக்கப்படுகிறது. காட்டில் தொலைந்தவர்களை கண்டுபிடிக்க வன அதிகாரிகள் துரையின் உதவியை நாடுகிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும். 

(ஜனவரி 2013)






   






செவ்வாய், 13 ஜனவரி, 2015

திட்டமிடுகிறேன்

திட்டமிடுகிறேன்
திட்டமிடாத என்னை நானே...
என் நாட்களின் மணி தியாளங்கள்
அனைத்தும் 365 நாட்களுக்குச் சமமானவை
காதல் மலரும் அதே
நேரத்தில் வெறுப்பும் மலர்ந்து தொலைக்கிறது
காமம் கொள்ளும் வேளையில்
ஒரு துக்ககுரல்
என்னைப் பதட்டமடையச்செய்கிறது
மரித்துப் பிறக்கிறேன்
ஒவ்வொரு கலவியிலும்
என் திடமான அஸ்தியில்
பூத்த ஒற்றை ரோஜாவில்
முற்கள் குத்துவதில்லை
எனக் காலதேவன் குறிப்பு
எழுதி வைக்கிறான்.
பொய்க்கு வசீகரம் அதிகம்தான்
உண்மையிடமிருந்து அது நழுவி போவது
எனக்கு தெரியும்மென  
அவன் உணர்திருக்கவில்லை

புதன், 7 ஜனவரி, 2015

மலேசியத் தமிழர்கள் இலக்கியம் வளர்க்கவில்லை


இந்திய இலக்கிய ஆளுமைகளில் நன்கு அறியக்கூடியவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. சினிமா விமர்சனம், மேல் நாட்டு இலக்கிய விமர்சனம், பதிவுகள் என்று பல முகங்களாக அறியப்பட்டவர். அண்மையில் குறுகிய கால மலேசிய வருகை புரிந்த அவரிடம்நம் நாடு' சிறப்பு நேர்காணலைச் செய்தது. தன் ஒளிவு மறைவற்ற கருத்துகளை முன் வைத்தார் சாரு.

*உங்களின் வாசகர் வட்டம் வழி நீங்கள் சக வாசிப்பாளர்களுக்கு சொல்வது என்ன?

சாரு: என்னுடைய படைப்புகள் இந்திய மக்களிடம் சரியாக போய் சேரவில்லை என்பதை நான் உணர்ந்தேன். ஆதலால் என் படைப்புகளை பரவலாக மற்றவர்களிடம் போய் சேரவும் இலக்கிய விவாதங்கள் செய்யவும் எனக்கு ஒரு தளம் தேவைப்பட்டது. அதோடு என் வாசகர் வட்டத்தோடு இணைந்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வேன். அதற்கு இந்த வாசகர் வட்டம் அவசியம் என்றே நினைக்கிறேன்.

 *உங்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதலைக் குறித்து கூற முடியுமா?

சாரு: நாங்கள் இருவருமே வேறு வேறு திசையில் பயணிப்பவர்கள். வெவ்வேறு எதிர்நிலையில் இருப்பவர்கள். நான் வட துருவம் என்றால், ஜே, தென் துருவம். எங்களுக்குள் இருக்கும் விவாதங்கள் ஓர் அதிசயமில்லை. மற்றபடி அவரும் நானும் நண்பர்கள்.

* சம காலத்து இந்திய பெண் எழுத்தார்களில் நீங்கள் முக்கியமாக கருதக்கூடிய படைப்பாளர் யார்?

சாரு:என் பார்வையில் முக்கியமானவராய் யாரையும் நான் கருதவில்லை.காரணம் பாலியல் கவிதைகளை எழுதிவிட்டால் அவர்கள் முக்கியமானவர்களாக முடியாது. குட்டி ரேவதி ஏதோ கொஞ்சம் எழுதுகிறார். ஆனால், அவை அனைத்தையும்  நான் ஏற்றுக்கொள்வதில்லை.

 *அருந்ததி ராய் புக்கர் பரிசு வாங்கியிருப்பதுடன் அவரின் நாவல்கள் சர்வதேச அளவுக்கு பேசப்படுகிறதே?
சாரு:  அருந்ததி ராய் ஒரு சுயசரிதை எழுத்தாளர். ஒரு மனிதனுக்கு ஒரு சுய சரிதைதான் இருக்க முடியும். அவர் அதை தொடக்கத்திலேயே படைத்து விட்டதால் அது முழுமை பெறாமல் போய்விட்டது. இதற்கு மேல் அவர் வேறொரு சுயசரிதை எழுதினாலும் அது அசலாக இருக்குமா என்பது சந்தேகமே. காரணம் தன் சுயசரிதையை இரண்டாவது தடவையாக எழுதும்போது அது வேறொருவரின் வாழ்க்கையிலும் ஊடுருவும் தவறு நடந்துவிட அதிக வாய்ப்பு இருக்கிறது.

 *உங்களுக்கு பிடித்த இலக்கியவாதி யார்?

-கிரிக் எழுத்தாளர் நிக்கோல் காஸாண்ட் தக்கி. அவரின் எழுத்துக்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்யக் கூடியன. அவர் எழுதியஸர்பா தி கிரிக்' என்ற நாவல் திரைப்படமாக்கப் பட்டிருப்பதுடன் அது ஒரு முக்கிய நாவலும் கூட.


 *'யுத்தம் செய்' திரையில்கன்னித்தீவு பொண்ணா' என்ற பாடலுக்கு நீங்கள் ஆர்மோனியப் பெட்டியுடன் வருகிறீர்களே?

சாரு:நானும் இயக்குனர் மிஸ்கினும் நல்ல நண்பர்கள். அவர் என்னிடம், நடிக்க வருகிறீர்களா?  என்று கேட்டபோது  ஒப்புக்கொண்டேன். என்னை வைத்து நிறைய காட்சிகள் எடுத்தார்.ஒரு லட்சம் வெள்ளி சம்பளமும் கொடுத்தார். பிறகு எனக்கும்  மிஸ்கினுக்கும் வேறு ஒரு சம்பவத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டபோது நான் இடம்பெற்ற காட்சிகளை நீக்கிவிட்டு, வெறும் விரலை மட்டுமே படத்தில் காட்டிவிட்டார்.

*நீங்கள் சுவாமி நித்தியானந்தா ஆதரவாளராக இருந்தீர்கள். அவரைப்பற்றி வெளியான பாலியில் சம்பவத்திற்கு பிறகு அதை மீட்டுக் கொண்டீர்கள். அந்த சம்பவம் எம்மாதிரியான எதிர்வினைகளை உங்களிடத்தில் ஏற்படுத்தியது?

சாரு: ‘ஜன்னலை திறங்கள் காற்று வீசட்டும்' என்று இருந்தபோது எல்லாம் சரியாக நடக்கிறது என்றுதான்  எண்ணியிருந்தேன். ஆனால், அங்கு வீசும் காற்று பரிசுத்தமானது இல்லை என்று தெரிந்துகொண்ட போது அதை மீட்டுக்கொண்டேன்.

*மலேசிய இலக்கியம் குறித்து ?

சாரு: மலேசிய இலக்கியத்தில் கொண்டாட வேண்டியவர் சிங்கை இளங்கோவன் மட்டுமே. அவர் இப்போது சிங்கப்பூரில் இருந்தாலும் சில உலக நாடுகள் அவர் படைப்பை பார்த்துக்கொண்டே இருக்கின்றன. சிங்கப்பூர் அரசாங்கமும் அவரின் ஆற்றல் சரியாக அங்கீகரிக்கவில்லை என்பது ஆச்சரியம். மற்றும் வேதனையளிக்கக்கூடிய விஷயம். மற்றபடி இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த மலேசியத் தமிழர்கள் சினிமா மற்றும் ஆன்மிகத்தை வளர்த்தனரே தவிர இலக்கியத்தை வளர்க்கவில்லை என்றே நினைக்கிறேன்.


'நம் நாடு '
டிசம்பர்  2012