சனி, 27 செப்டம்பர், 2014

'கடாரம்' ராஜேந்திர சோழனுடையதா? 1

பாகம் 1

-யோகி


கெடா மாநிலத்தில் உள்ள  லெம்பா பூஜாங் எனப்படும் பூஜாங் பள்ளத்தாக்கு பல மர்ம முடிச்சுகளைப்  போட்டுக்கொண்ட வரலாற்றுப் பிறப்பிடமாகும். வெகு நாள்களாக நான் அங்கு செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கடல்தாண்டி  அடுத்த நாட்டிற்குச் செல்ல முடிந்த என்னால்,  மணிநேரப் பயணத்தில் இருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கிற்குச் செல்வதற்கு நேரம் இல்லை என காரணம் கூறிக்கொண்டிருந்தேன்.

இந்நிலையில்  அண்மையில்  நண்பர் பாலமுருகனின் புத்தகவெளியீட்டு நிகழ்வைப் பயன்படுத்திக்கொண்டு  லெம்பா பூஜாங்கைப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டம் வரைந்திருந்தேன். அதைச் செயல்படுத்த நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தது, மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
நான் அகழ்வாராய்ச்சி மாணவியல்ல. அந்தத் துறையில் படித்ததும் அல்ல. ஆனால் வரலாற்றுத் தாகம் கொண்டவள். தேடலில்  இருக்கும் சுகத்தை நன்கு ருசி கண்டவள் என்ற காரணத்தினால், லெம்பா பூஜாங்கில் எனக்கான தீனி கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

குறிப்பிட்ட நேரப்படி நண்பர்களுடன் லெம்பா பூஜாங்கை அடைந்தேன்.  சூரியக்கீற்று இயற்கையின்மீது தனது நிழலை பதியத்தொடங்கிய அந்த நேரம், எனது ‘ஐ பேட்டில்'  மனதுக்கு நெருக்கமாகும் அனைத்தையும் நிழல்படம் எடுக்கத்தொடங்கினேன். எப்போதும் நான் எதை எதையெல்லாம்  புகைப்படம் எடுக்கலாம் என திட்டமிடுபவள் இல்லை.   கண்ணில் படும் காட்சிகள் மனதைப் பாதிக்கும்போது அனைத்தும் புகைப்படமாக மாறிவிடும். லெம்பா பூஜாங்கில் அதற்குக் கொஞ்சமும் பஞ்சம் வைக்கவில்லை. அதைவிடவும் உடன்வந்த நண்பர்கள் என்தேடலுக்குத்  தடையாகவும், முகம்  கோணுபவர்களாகவும் இல்லாததால்  என் ரசனைக்கு எந்தவகை  இடையூறும் ஏற்படவில்லை.

வெயிலுமில்லாத, குளிருமில்லாத  அந்தக் காலைப்பொழுது லெம்பா பூஜாங் சமவெளியைச் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்ற நேரமாக அமைந்திருந்தது.
நான் கேள்விப்பட்ட வரையில் சோழன் கண்ட கடாரம் என்றுதான் பலர் கூறியிருக்கிறார்கள். கெடா என்ற சொல் கடாரம் என்ற சொல்லின் வழி வந்தது எனவும் குறிப்பிடுகிறார்கள்.  அதாவது, கி.பி 1030-ஆம் ஆண்டுகளில் ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் தென் கிழக்காசியாவின் மீது படை எடுத்த போது, அந்நிலத்திற்குக் கடாரம் என்று பெயரிட்டதாகவும் அது சுத்தமான தமிழ்ப் பெயர் என்றும், அந்தப் பெயரே மருவி நாளடைவில் கெடா என்று பெயர் பெற்றதாகவும் இணையத்தள செய்திகள் கூறுகின்றன.  அதோடு  ராஜேந்திர சோழன் காலத்தில் சோழனால் அமைக்கப்பட்ட வியாபார மையமாகவும், ஆட்சி புரியும் இடமாகவும் விளங்கிய இடம்தான்  பூஜாங் பள்ளத்தாக்கு என்றும் அறியப்படுகிறது.

‘பட்டிணபாலை' என்ற தமிழ் கவிதையில் இதுக்குறித்த விவரம்  இருந்ததாகவும், சோழன் காலத்தில் கடாரத்திற்கு வந்துசென்ற சீன, அரபு உள்ளிட்ட நாடுகளின்  நூல்களில் பூஜாங் பள்ளத்தாக்குக் குறித்த நிறைய தகவல்கள் இருப்பதாகவும், இத்தகவலை ஆராய்ச்சியாளர்களான  Braddly  மற்றும் Wheatly-தெளிவுபடுத்தியிருப்பதாகவும் இணையச் செய்திகள் ஆதரப்பூர்வமாக நமக்கு முன்வைக்கின்றன.
அதற்கு ஆதாரமாக 1980-ஆம் ஆண்டு கெடா மாநிலத்தில் கெடா மாநில சுல்தானால் திறந்து வைக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகத்தில் சில அகழ்வாய்வுச் சின்னங்கள், உடைந்த சிலைகள், கட்டட அமைப்புகள்  போன்றவை இந்திய அடையாளங்களின் தொடர்பாகச் சாட்சியமளித்தாலும், புத்த வழிபாட்டுக்கான அடையாளங்களும்  இருந்ததற்கான சாத்தியக்கூறுகளையும் காண முடிகிறது.

பொதுவாக உணர்ச்சிப்பூர்வமாகப் பேசும் இந்தியர்கள் சோழ மன்னர்கள் கடல்வழியாகக்  கெடாவை வந்தடைந்து, அருகில் உள்ள மலைகளில் ஏறி மாபெரும் சாம்ராஜியத்தை அமைத்தனர்  என்றும் வெள்ளையர்கள்தான் கூலிகளாக இந்தியர்களை நாட்டிற்குக் கொண்டு வந்தார்கள் என்பதைவிட, அதற்கு முன்பே தமிழர்கள் சோழ காலத்தில் இந்த மலாயா மண்ணில் கால் பதித்துவிட்டனர் என்றும் கூறுவது உண்டு.

ஆனால், கெடா என்ற சொல் பெற்றதற்கு வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன. அதாவது, ‘கெடா' என்ற சொல் ‘கதஹா' அல்லது ‘கடாரா' என்ற சமஸ்கிருத மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே வார்த்தைகள் தமிழ்மொழியில் ‘கடாரம்', ‘கலகம்' என்ற சொற்களிலிருந்து தழுவப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ‘கடாரம்' என்றால் ‘பெரிய கடாய்' என்று பொருள். ‘கலகம்' எனப்படுவது கருப்பு நிறமென பொருள்படுகிறது. இதற்கிடையில், வில்கின்சன் என்பவர், ‘கெடா' என்ற சொல் ‘Kheddah' எனும் வார்த்தையிலிருந்து உருவானதாகக் கூறுகிறார். அதற்கு ‘யானை வலை' என்று பொருள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில தகவல்களில் ‘கெடா' எனும் வார்த்தை அரபு மொழியிலிருந்து தழுவப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளன. அம்மொழியில் கெடா என்பதற்கு கால்கள் கொண்ட கிண்ணம் என்று பொருளாகும். ரொலண்ட் பிராட்டெல் எனும் எழுத்தாளர், ‘கெடா' எனும் சொல் ‘Gedda' என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்கிறார். இந்தச் சொல்லானது இந்தி மொழியில் ‘khadar' எனக் கூறப்படுகிறது. இதற்கு ‘ நெல் வயலுக்கு உகந்த மண்' என்று பொருள் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு, பெர்சிய மொழியின் ‘கலா' எனும் சொல்லிலிருந்துதான் ‘கெடா' எனும் வார்த்தை உருவானதாகவும் தகவல்கள் சொல்கின்றன. அதற்கு ‘நகரம்' என்று அர்த்தமும் கூறப்படுகிறது.


 மேற்கூறிய அனைத்தும் ஏதோ ஒரு வழியில்  கெடா என்ற பெயர் பெற்றதற்கான காரணத்தைக் கூறினாலும்  அனைத்தும் பொருந்தக் கூடியவையாகத்தான் உள்ளன. இருப்பினும்  தஞ்சாவூர் கோயிலில் இருக்கும் வெட்டெழுத்தில் கடாரத்தின் பயணத்தைப் பற்றிக் குறிப்பு இருப்பதால் சோழன் மூலம்தான்  கெடா பெயர் பெற்றது என்பது உறுதியாக நம்பப்படுகிறது.  ஆனால், நான் தேடிச்சென்ற பூஜாங் பள்ளத்தாக்கில் அதற்கான ஆதாரங்களும், விசயங்களும் இல்லாதது என் தேடலுக்குச் சோர்வைத் தட்டிவிடுமோ என்ற  ஐயத்தை ஏற்படுத்தியது.

 (தேடல் தொடரும்)

2 கருத்துகள்:

  1. பயணி மாதஇதழ் தமிழ்நாட்டிலிருந்து வெளியிடுகிறோம்... சில கட்டுரை தொடர்பாக பேச மின்னஞ்சல் முகவரி தரவும் எதிர்பார்க்கிறேன்..jeyavarmanv@gmail.com

    பதிலளிநீக்கு
  2. Oh Great! You have interest in Tamils history!Good! Please continue! World Tamils need You!

    பதிலளிநீக்கு