புதன், 18 மார்ச், 2020

ஜீ.வி காத்தையா நேர்மையான தொழிற்சங்கவாதி




செம்பருத்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியிதான் நான் தோழர் காத்தையாவை முதன்முதலில் பார்த்தேன்.  அதற்குமுன் செம்பருத்தி இணைய செய்தியில் அவரின் பெயரை பார்த்ததுண்டு. சுமார் 15 ஆண்டுகள் அவர் செம்பருத்தியின் செய்திப் பிரிவு ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.


அந்த நிகழ்ச்சியில் அவர் உரை நிகழ்த்தினார்.  ரொம்பவும் கோபமாகவும் கத்தியும் அவர் பேசினார். ஆனால், அவரின் அத்தனை கோபமும் ரொம்பவும் ஞாயமானதாக இருந்தது.  சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையும் கோபமும்  கண்ணுற்றபோது  தோழர் காத்தையாவின் மீது நல்லதொரு அபிப்ராயம் எழுந்தது. ஆனால், அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடக்கூடிய முயற்சியினை பலமுறை மேற்கொண்டிருந்தாலும் இறுதிவரை அது நடக்காமலே போய்விட்டது.  என் வரையில் அது பெரிய இழப்புதான். 17/3/2020 அன்று 82-வது வயதில் காத்தையா எனும் ஜி.வி காத்தையா  தனது  ஆய்வு பொக்கிஷங்களை விட்டுவிட்டு நிரந்தரமாக துயில் கொண்டுவிட்டார்.  


தோழர் காத்தையா 27 ஜூன் 1938-ஆம் ஆண்டு பத்து அராங்கில் பிறந்தார். பத்து அராங் என்ற நிலக்கரிச் சுரங்க நகரமே போராட்டத்திற்கும் , தொழிலாளர் வர்கத்திற்கும் பேர்போன நகரமாகும். அந்த மண்ணில் பிறந்தக்காரணமோ என்னவோ இயற்கையாகவே போராட்ட குணம் அவர் ரத்ததிலேயே இருந்தது எனலாம்.  மிகவும் சாதூர்யமாக பதில் அளிக்ககூடிய காத்தையா. இலண்டன் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்,   சட்டம், தொழிலாளர் சமூகவியல்,  பிரிட்டிஷ் காலனித்துவத் தொழிலாளர் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் செய்திருக்கிறார்.

உழைக்கும் பாட்டாளி வர்கத்தை, முதலாளி வர்கத்தை வைத்து பிரிட்டிஷ் காலனித்துவம் நசுக்கிய வரலாற்றை தான் செய்த ஆய்வுகளில் ஆதாரத்துடன் இருப்பதை கண்டார் காத்தையா.  அதன்பிறகு அவர் தனது செயற்பாடுகளிலும் பங்கு கொள்ளும் மேடைகளிலும் தொழிற்சங்க சித்தாந்தத்தை பேசுவது மட்டுமல்லாமல் பிரிட்டிஷாரை மிகக் கடுமையாக சாடவும் தொடங்கினார்


தனது இளம் வயதிலேயே  தொழிற்சங்கத்தில் இணைந்து மலேசிய தோட்டத் தொழிலாளர் சங்க வரலாற்றை தீவிரமாக அறிந்துக்கொண்டார். 1964-ஆம் ஆண்டு அகில மலாயா தோட்டச் சிப்பந்திகள் சங்கம் (AMESU) தோன்றியதற்கு பின்னனியில் இவர் இருக்கிறார். 

மூன்று முறை நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்விக்கண்டாலும், தனது கொள்கைகளிலிருந்தும் நிலைப்பாடுகளிலுருந்தும் பின்வாங்கவே இல்லை.  இறுதிவரை ஒரு தொழிற்சங்கவாதியாகவே வாழ்ந்தவர் தோழர் ஜீவி காத்தையா.  

தொழிலாளர் வர்கப் போராட்டம் என்றால் என்னவென்றே  இளைஞர்களுக்கு தெரிவதில்லை என்றும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருந்த தோழர் ஜிவி காத்தையாவின் கனவு நிறைவேறியதா என்பதற்கான  கேள்விக்கு   பதில் தேடினால் அது  வருத்தம் நிறைந்ததாக 
இருக்கும்.  ஆனால்,  நேர்மையான ஒரு மனிதனை தமிழ்ச்சமூகம் மட்டுமல்ல பாட்டாளி வர்கம் இழந்திருக்கிறது என்பதும் அந்த இடத்தை இனி யார் வந்தாலும் ஈடு செய்ய முடியாது என்பதும் அவரை அறிந்தவர்களுக்கு தெரியும்.

18/3/2020 தோழர் காத்தையாவின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரின் சகோதரர் எங்களை அழைத்துச் சென்று காத்தையாவை காண்பித்தார். என்னேரமும் கர்ஜிக்கும் சிங்கம், மிக அமைதியாக துயில் கொண்டிருந்தது. நாங்கள் அதன் துயிலை கலைக்கவில்லை. அவரின் சகோதரரிடம் பேசினேன். அவரின் ஆய்வுகள் குறித்துக் கேட்டேன். ஆமாம், அவர் நிறைய ஆய்வு செய்திருக்கிறார். அதுதான் அவருக்கு பிடித்த விஷயம்.  நாங்கள் அதற்கு தடையாக இருந்ததில்லை என்றார். மீண்டும் உறங்கும் சிங்கத்தை திரும்பிப் பார்த்தேன். இமைப்பொழுதில் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று  சன்னமாக சிவப்புராணம் ஒலித்துக்கொண்டிருந்தது.


ஞாயிறு, 8 மார்ச், 2020

எது பெண் சுதந்திரம்?



மி அண்மையில்சிஸ்டர்இன் இஸ்லாம்’  என்ற அமைப்பின் நிறுவனர் மஜிடா ஹஷிம் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும்  மாணவிகள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும்பேட்’ வாங்குவதற்கு வசதி இல்லாத காரணத்தினால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொள்கின்றனர் என்ற தகவலை அவர் கூறினார். இது மலேசியாவிலா நடக்கிறது என்று நான் கேட்டதற்கு,  “ஆமாம்”  என்றார். மலேசியாவைப் பொருத்தவரை பெண் சுதந்திரம், பெண்ணியம் சார்ந்த விஷயங்கள், போராட்டங்கள் எதுவும் நம் நாட்டுக்கு அவசியமில்லை என்ற பார்வை இருக்கிறது. அதற்கு பலர் சொல்லும் ஒரே காரணம் அவர்கள் சுதந்திரத்துடன்தானே இருக்கிறார்கள் என்பது. அப்படி சொல்பவர்களிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.

எவற்றைப் பெண் சுதந்திரம் என்று சொல்கிறீர்கள்? அவளுக்கு பிடித்த உடையை அவள் உடுத்துகிறாள், வேலைக்கு போகிறாள், பணம் சேர்கிறாள், வெளியில் சுற்றுகிறாள், நண்பர்களைக் கொண்டிருக்கிறாள், ஆண்களுக்கு நிகராக எல்லாவற்றையும் செய்கிறாள்.  இன்னும் அவளுக்கு என்னதான் வேண்டும்? இத்தனை சுதந்திரம் கொண்டிருக்கும் அவள் எதற்காக இன்னும் சுதந்திரம் பற்றி பேசுகிறாள்?

ஆண்களின் பார்வையில்  இதுதான் ஒரு பெண்ணிய சிந்தனையா என்று கேள்வி எழுப்பும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.  கால மிதிவண்டியில் ஏறி அதன் பெடலை மிதித்து மிதித்து மெல்ல முன்னேறித் தனக்கான இடத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள். என்று அவர்கள் முழு சுதந்திரமடைவார்கள் என்று அவர்களுக்கேகூட தெரியாது? தந்தை பெரியார் பெண் சுதந்திரத்தை வலியுறுத்தி பல ஆண்டுகள் கடந்தாயிற்று.  ஆனால், இப்போதுதான் பெண்களின் குரல் ஒலிக்கவே தொடங்கியிருக்கிறது. சுதந்திரம் என்ற ஒன்றை அவள் உணர்வதற்கு  இன்னும் பற்பல ஆண்டுகள் ஆகலாம் என தோன்றுகிறது.   

ஒரு சராசரி குடும்பத்தில் குழந்தைகளாக வளரக்கூடிய ஆண்-பெண் குழந்தைகளை, பெண் குழந்தையை சிறுவயதிலிருந்தே வீட்டு வேலைக்குப் பழக்கப்படுத்துவதும், ஆண் குழந்தைகளை விளையாட வழியுறுத்தியும் சாகசங்களைச் செய்வதற்கு கற்றுக்கொடுத்தும்  ஊக்குவிக்கிறோம். ஓர் ஆண் குழந்தை தவறி விழுந்துவிட்டாளோ அல்லது காயம்பட்டு அழ நேர்ந்தாலோ பெண் பிள்ளைமாதிரி அழாதே! நீ வீரனல்லவா என்று கொஞ்சுகிறோம். பெண் குழந்தையின் சுயத்தை தாழ்த்தி ஆண் குழந்தைக்கு ஆறுதல் சொல்கிறோமே இதிலிருந்து தெளிவு பெறவே இன்னும் எத்தனை யுகங்கள் கடக்க வேண்டும் என்பது புரியவில்லை. இந்த தெளிவானது முதலில் பெண்களுக்கு ஏற்பட  வேண்டுமே என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு.

பெண்கள் படிப்படியாக வீட்டு வேலைகள் செய்வதிலிருந்து அவள் குடும்பத்திற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டியவள், அதுவே குடும்ப கௌரவம் என்பதுவரை மிக நுன்னறசியலோடு காயை நகர்த்தும் அக்குழந்தைகளின் பெற்றோர்கந்தான் இச்சமூகத்தின் காப்பாளர்களாகவும் இருக்கிறார்கள்.

அண்மையில் கோலாலம்பூர் வட்டாரத்திலுள்ள இடைநிலைப்பள்ளியில் மாணவி ஒருவரை போதைப்பொருள் கைமாற்றுவதற்கு பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்ககூடிய செய்தியாக இருந்தது. மேலும், அவரிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் amfetamina வகை போதைப்பொருளை உட்கொண்டிருப்பதும் தெரிய வந்தது. பதின்ம வயதில் இதுபோன்ற நடவடிகைகளில் ஈடுபடுவது எத்தகைய எதிர்காலத்தை பெண்களுக்கு வழங்கிடும்? முதன்மையாக  இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபடுவதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை ஆராய வேண்டும்?

தொடக்கமே குடும்பம் சரியில்லை வளர்ப்பு சரியில்லை என்று புறம் பேசுவதை நிறுத்திவிட்டு, கொஞ்சம் அறிவுப்பூர்வமாகவும் அகம் சார்ந்தும் யோசிக்கும்போதுதான் அதற்கான தீர்வை எட்ட முடியும்.  பாலியல் பலாத்காரங்கள், காதல் விவகாரங்கள், திருட்டுச் சம்பவங்கள், குண்டர் கும்பலில் ஈடுபடுத்துதல் என பெண்கள் பலநிலைகளில் பாதிக்கபடுகிறார்கள்.  வறுமை, இயலாமை, நம்பிக்கைத் துரோகம், தூண்டி விடுதல், கோபம் உள்ளிட்ட காரணங்களால் அவள் பல வேளைகளில் தன்னிலை மறந்தும் சில சமையங்களில் தான் செய்வது தவறென தெரிந்தும் அக்குற்றத்தை தெரிந்தே செய்கிறாள்.

இதற்கெல்லாம் காரணம் என் அறிவுக்கு எட்டியதில் ஒன்றுதான் புலப்படுகிறது. பாகுபாடில்லாத ஓர் அரவணைப்பும் குறைந்த பட்ச மரியாதையும் அவளுக்கு வழங்கும் பட்சத்தில் நிச்சயமாக ஒரு பெண் தன் சுயத்தோடு வாழ்வாள் என்று தோன்றுகிறது. சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று கூறும் நம் நாட்டில்கூட பெண்களின் சுதந்திரமானது எப்படி இருக்கிறது என்பதை மேலோட்டமாக பார்த்து கருத்து சொல்லிவிட்டுப் போகிறார்கள்.  பெர்சே இயக்கத்தை ஆதரித்த திருவாட்டி அம்பிகா ஶ்ரீனிவாசனை எந்த அளவுக்கு அவமானப்படுத்தினார்கள் என்று இந்த நாடு பார்த்திருக்கிறது. திரேசா கோக், டாக்டர் வான் அஸிசா உள்ளிட்டவர்கள்கூட  இந்த ஆண் சமூகம் அவமாப்படுத்துவதிலிருந்து விட்டுவைக்கவில்லை.

பெண் வீட்டுக்கு ராணி என்று கூறி பெருமை படுத்துவதாக கூறுபவர்கள், எதற்கெல்லாம் அவள் ராணியாக இருக்கிறாள், எதற்கெல்லாம் ராணி வேஷம் போடுகிறாள், வேஷத்தை கலைத்தால் அவள் என்னவாக மாறுகிறாள், ராணி ஏன் குடும்பத்தின் எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று ஒரு புறம் வீட்டிலிருப்பவர்களுக்கு நான் கேள்விகளை முன் வைக்கும் அதே நேரத்தில்  நாட்டைப்பார்த்தும் நான் சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

இத்தனை ஆண்டுகளில் அரசு சார்ந்த எந்த ஒரு உயர் பதவிக்கும் பெண்கள் நியமிக்காதது ஏன்? இதுவரை எந்தப் பெண்ணும் பிரதமர் பதவிக்கு
போட்டிக்கூட போடவில்லையே ஏன்? கடந்தாண்டு துணைப்பிரதமராக பதவி ஏற்ற டாக்டர் வான் அசிசா, பிரதமர் பதவியில் எழுந்திருக்கும் சர்ச்சையில் அப்போதிலிருந்தே தன் பதவியை துறக்க தயார் நிலையில் இருக்கிறாரே ஏன்? ஏன் இதுவரை நாட்டில் ஒரு பெண்கூட ஒரு கட்சியின் தலைவராக நிரந்தரமாக இருக்க முடியவில்லை? மலேசியாவில் பல பத்திரிகைகள் இருக்கின்றன. தமிழில்கூட ஒரு காலத்தில் 7 தினசரிகள் வந்தன. ஆனால், ஒரு பத்திரிகையிலும் பெண் ஒருவர் தலைமையாசிரியராக நியமிக்கவில்லையே ஏன்? நாட்டின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் அதில் பெண்களின் பங்களிப்பு என்ன?

இத்தனை கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால், இதை கொஞ்சமாவது மாற்றக்கூடிய விதை இடைநிலைப் பள்ளி மாணவர்களின் கையில் இருப்பதாக நான் நம்புகிறேன். அவர்களின் மனதிலும் சிந்தனையிலும்  விதைக்கப்படும் எண்ணங்கள்தான்  பின்னாளில்  வீட்டிற்காகவும் நாட்டிற்காகவும் மலரப்போகிறது. பெண்களுக்கு கொடுக்கும் குறைந்த பட்ச மரியாதை அவள் பெரிய அளவில் சாதிப்பதற்கு  ஒரு ஊட்டச்சத்தாக அமையும் என நான் நம்புகிறேன்.

யோகி
எழுத்தாளர்.

நன்றி மயில் மார்ச் 2020