சனி, 25 ஆகஸ்ட், 2018

'நயனம்' உறங்கியது


நீங்கள் தோழியா யோகியா? ராஜகுமாரன் சார் இப்படித்தான் என்னைப் பார்க்கும்போதெல்லாம் உரையாடலைத் தொடங்குவார். அதற்குக் காரணம் ஒன்றுதான். சந்துருவுடைய மனைவி யார் என்ற குழம்பம் மட்டுமே. சந்துருவுடைய உயிர்த் தோழியான தோழியும் -மனைவியான யோகியும் அவருக்குப் பிரித்து பார்க்கத் தெரியவில்லை. இந்தக் குழப்பம் நான் இறுதியாக அவரைச் சந்திக்கும் வரைக்கும் இருந்தது.
தனது சகோதரரான ஆதிகுமணன் (சார்) இறந்த பிறகுதான் அதுவரை ராஜகுமாரன் என்று இருந்த தனது பத்திரிகைகான பெயரை ஆதிராஜகுமாரன் என மாற்றிக்கொண்டார். மேலும், அதன்பிறகே அவர் தனது இருப்பைப் பல இடங்களில் காட்டவும் தொடங்கினார்.

25.8.2018 உண்மையில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை ன்றைய நாள் கருப்பு தினம்தான். சந்துருவுக்கு நான் அறிமுகமாகியிருந்த நாளிலிருந்து இன்றுவரை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சந்துருவுடைய கடந்த காலத்தைப் பேசும்போது அதில் ராஜகுமாரன் சார், வித்தியாசாகர் சார், என்று இன்னும் சிலர் தவிர்க்க முடியாமல் எங்கள் உரையாடலில் பங்காற்றிக்கொண்டே இருக்கிறார்கள். சந்துரு தன் இளவயதில் இழந்த அனுபவித்த அனைத்தையும் நகைச்சுவையாகச் சொல்லி அவரும் சிரித்து எங்களையும் சிரிக்கவைத்து கடந்து போவார். அதுதான் அவருடைய பாணி. பதின்ம வயதில் 8 ஆண்டுகள் தான் தங்கியிருந்த ராஜகுமாரன் சாருடைய வீட்டுக்கு இன்று என்னை அழைத்துபோனார். முதல்முறையாக நான் அங்குப் போகிறேன். சாருடைய ஒரே மகள் சாரதாவை மட்டும்தான் எனக்கு அங்குத் தெரியும். தன் தந்தை மறைந்துவிட்டதை முகநூலில் அப்போதுதான் அவர் பதிவேற்றம் செய்திருந்தார். என்னை 'அண்ணி' என எங்குப் பார்த்தாலும் அழைக்கும் அந்த அன்பானவளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் எனத் தடுமாற்றம் எனக்கு இருந்தது. சந்துருவுக்கும் அப்படியான தடுமாற்றம் இருந்திருக்கலாம்.

சகோதரி சற்குணம்

நான்கைந்து பேர் முன்வாசலில் அமர்ந்திருந்தார்கள். இரண்டு மலர் கொத்துகள் வாசலில் இருந்தன. இரங்கல் தெரிவிக்கும் குறிப்பு புத்தகம் ஒன்றும் அங்கும் இருந்தது. வாசலைக் கடந்து உள்ளே சென்றோம். அங்குதான் அவர் மீளா உறக்கத்தில் இருந்தார். வாழைப்பழத்தில் குத்தியிருந்த ஊதுவத்தி புகை ஏதேதோ வடிவத்தைக் காட்டி காற்றில் கலந்துகொண்டிருந்தது. துயரமான பழைய பாடல்கள் மெல்ல ஒலித்துக்கொண்டிருந்தது. சாரதா உறங்கும் தனது தந்தையைப் பார்த்தபடி இருந்தார். எங்களைப் பார்த்ததும் கைநீட்டி வரவேற்றார். சந்துரு சாரதாவை ஆறுதலாகப் பற்றிக்கொண்டார். இவர்தான் அண்ணனின் மனைவி எனத் தனது அம்மாவுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார் சாரதா. எனக்குத் துக்க நிகழ்வுகளில் எப்படி ஆறுதல் சொல்வதென இப்போதுவரையிலும் தெரியவில்லை. தந்தையை இழந்த வலி யாரைவிடவும் நான் அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன். எந்த ஆறுதலும் அதற்கு மருந்து போடாது. அதைக்காட்டிலும் அமைதியாக இருந்துவிடுவவே நல்லது. சாரதாவைக் கையை பற்றி  ஆறுதலாக முத்தம் கொடுத்தேன். எனக்குத் தெரிந்தது அது மட்டும்தான்.

ஆதி ராஜகுமாரன் சார், தூக்கத்திலேயே இறந்துவிட்டார் என்று சொன்னார்கள். அவருக்கு உடல்நல குறைபாடும் இருந்திருக்கிறது. அதற்காக அவர் அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருக்கிறார். மலேசியர்களுக்கு ஆதிகுமணன் சார், இவருடைய சகோதரர் என்று மட்டுமே தெரியுமே தவிர அதைத்தாண்டி இவரின் பின்னணி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதைச் சொல்வதற்கு அவர் விரும்பியதும் இல்லை. எப்போதும் ராஜகுமாரன் சார் பின் இருக்கையிலேயே இருந்து ரசிக்க விரும்புபவர். இலக்கியத்திற்காக அவர் ஆற்றும் பணிக்கு தனது பெயரை குறிப்பிடுவதற்குக் கூட கூச்சப்படும் மனிதராகத்தான் நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.


8 பேர் கொண்ட உடன்பிறப்புகளில் ஆதிராஜகுமாரன் சார் மூன்றாவது குழந்தை. ஆதிகுமணன் சார் நான்காவது. இவர்கள் இருவருக்கும் மூத்தவரான சகோதரி சற்குணத்தை அநேகமானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர்கள் மூவருக்கும் மூத்தவர் காலமாகிவிட்டார். இவர்கள் நால்வருக்கும் கீழே இருக்கும் இருக்கும் இளையவர்கள் நால்வரும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். சகோதரி சற்குணம் அசைவற்றிற்கும் தன் சகோதரரின் முகத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருக்கிறார். யாரும் கேட்கும்வரை தான் யார் என யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. மனமுடைந்திருக்கும் ராஜகுமாரன் சாருடைய மனைவி "இந்த வீட்டில் பிள்ளைபோல இருந்தான்" என சந்துருவை காட்டி சகோதரி சற்குணத்திடம் கூறினார்
"8 ஆண்டுகள் இங்கே இருந்திங்கன்னு சொன்னிங்களே, சாரின் சகோதரியைத் தெரியாதா?" என்று கேட்டேன்
. 
ஆதிகுமணன் சார்

"இல்லை, இவரைப் பார்த்ததில்லை" என்று சந்துரு சொன்னார்.

நயனம் வார இதழ் மலேசியாவில் 1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  90-களிலிருந்து ஆதிகுமணன் சார் இறக்கும்வரை விற்பனையிலும் அதன் தரத்திலும் உயர்ந்தே இருந்தது. ஸ்மார்ட் தொலைப்பேசி இல்லாத காலக்கடத்தில் வாசிப்பு மட்டுமே முக்கிய பொழுதுபோக்காக இருந்ததில் பஸ்சில் பயணம் செய்பவர்கள் நிச்சயமாக வாங்குவது இரண்டு பத்திரிகைகள். ஒன்று வானம்பாடி மற்றது நயனம். ஆதிகுமணன்  சார் மறைவிற்குப் பிறகு மலேசிய தமிழ் பத்திரிகை உலகமே ஆட்டம்கண்டது. எதிர்பாராத திருப்பங்கள் அதிர்ச்சிகள்  நாளுக்கு நாள் பத்திரிகை சார்ந்தவர் எதிர்கொண்டார்கள். பல பிளவுகள்  நடந்தன. நம்ப முடியாத பல திருப்பங்கள் நடந்தது. நிறைய ஏமாற்றங்கள் வெளிப்படத்தொடங்கின. அதில் சில பத்திரிகைகள் நிரந்தரமாக மூடப்பட்டன. ஆதிகுமணன் சார் ஆதரவில் எம்.துரைராஜ் சார் ஆசிரியராகக் கொண்டு நடந்துகொண்டிருந்த 'இதயம்' மாத இதழ் நிரந்தரமாக மூடப்பட்டது. 'நயனம்' வார இதழ் அதன் வடிவமைப்பு மாற்றப்பட்டது. என்ன காரணம் அதற்கு எனத் தெரியவில்லை. ஆனால் அந்த மாற்றத்திற்குப் பிறகு 'நயனம்' அதன் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்தது. கடைகளில் 'நயனம்' கிடைக்காமல் போனது அதன் வாசகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பின் நயனமும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. ராஜகுமாரன் சார் ஒரு சிறுகதை தொகுப்பையும் வெளியீடு செய்திருக்கிறார். "பத்திரிகையாளராக அவர் மாறிய பிறகு மலேசிய படைப்புலகம் ஓர் எழுத்தாளனை இழந்திருந்தது" என சந்துரு சொன்னதை நான் இங்கு நினைவு கூற விரும்புகிறேன். பத்திரிகையில் யார் யாரோ எப்படியெல்லாமோ பணம் சேர்த்திருக்கிறார்கள். கதைகள் பல உண்டு. ராஜகுமாரன் சார் அதில் விதிவிலக்காக இருந்திருக்கிறார் என்பது அவரைத் தெரிந்தவர்களுக்கும் தெரியும். நான் அங்கிருந்து கிளம்பும்போது 'சல்த்தே! சல்த்தே' எனப் பழைய இந்தி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. சந்துருவை பார்த்தேன். அவருக்குப் பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். கேசட், சிடி என புதிய விஷயங்கள் வர வர அதைக் காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொண்டு அவர் பாடல்களை ரசிப்பார் என்றார். சந்துருவை அழைத்து அவர் மனைவி காதோரம் மெல்லச் சொன்னார் அவர் பாடலையும் பாடுவார் உனக்கு நினைவிருக்கிறதா என.

ராஜகுமாரன் சார் நினைவுகளை சந்துரு தவிர வேறு யாரால் சேமித்துவைத்திருக்க முடியும்..