வெள்ளி, 27 செப்டம்பர், 2019

தோழர் ஆன்மனிடம் ஒரு கலந்துரையாடல்



பேராக் தமிழ்க் கவிஞர் இயக்கம் மற்றும் மலேசிய தமிழ் இலக்கியக் கழகம் (ஈப்போ நடுவம்) இணைந்துத் தமிழக எழுத்தாளரும் செயல்பாட்டாளருமானக் கவிஞர் ஆன்மனுடன் ஒரு இனிய சந்திப்பினைக் கடந்த 26/09/2019-ஆம் தேதி, ஈப்போ கல்லுமலைக் கோவில் எதிர்புறம் உள்ள ஒரு மண்டபத்தில் ஏற்பாடுச் செய்திருந்தனர்.

தோழர் ஆன்மனின் செயற்பாடுகளை மீக அமைதியாக முகநூல் வழி அனுமானித்து வருபவள் நான். அவரை நேரில் ஒரு முறைச் சந்தித்த அனுபவம் இருந்தாலும் என் நினைவில் அது இல்லை. தவிர அவரிடம் நான் இருமுறை அலைபேசியில் பேசியிருக்கிறேன். அவரிடம் நட்பு ரீதியில் அலவலாகும் சந்தர்ப்பம் என் நாட்டில்தான் எனக்குக் கிடைத்தது.

அவர் குறித்து நான் அறிந்திருந்த விவரங்கள் இதுதான்…

சென்னை, கடலூர் வெள்ளம், கேரளப்பேரிடர், கஜாப் புயல் உள்ளிட்டத் துயரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பொதுநிதித் திரட்டி மீட்புப்பணிகளில் ஈடுபட்டவர்களில் இவரும் ஒருவர். மக்களுக்கு எதிரான அரசில் செயல்பாடுகளைக் கண்டித்துப் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றும் வருபவர். தனது ஆதங்கள், முரண்பாடுகள் மற்றும் உணர்வுகளைக் கவிதைகள், கட்டுரைகள் மூலமாகப் பதிவுசெய்து வருகிறார். 'லெமூரியக்கண்டத்து மீன்கள்' இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ஆகும். ஈரோடு 'தமிழன்பன்' விருது சமூகச் செயல்பாடரடிற்கான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி விருது, படைப்பு விருது உள்ளிட்ட விருதுகள் இவரின் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன.



தோழர் ஆன்மனின் மலேசிய வருகையானது அவரின் சொந்தத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது என்றாலும், நட்பின் நிமித்தமாக அவரைத் தலைநகரின் சில வரலாற்று இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், இலக்கியச் சந்திப்பினை ஏற்பாடு செய்து அதைப் பதிவுச் செய்யவும் நண்பர் சிவா லெனின் உதவியுடன் ஏற்பாடு செய்திருந்தோம்.



அதற்கு முன்னதாகத் (15.9.2019)  தோழர் ஆன்மனை நாங்கள் கோலா சிலாங்கூர் புக்கிட் மெலாவாத்திக்கும் அதை ஒட்டினார்போல் இருக்கும் மீனவக் குடியிருப்புகளையும் காண்பித்தோம்.

இன்றைய நாள் தொடக்கம் பஹாங் மாநிலத்தில் வசிக்கும் பூர்வக்குடிக் கிராமத்திற்கு அழைத்துச் சென்றோம். தொடர்ந்து அவரைக் கேமரன் மலைக்கு அழைத்துச் சென்று தேயிலைத் தோட்டம் மற்றும் பூக்களின் தோட்டத்திற்கும் அழைத்துச் சென்றோம். கோத்தகிரியில் வசிக்கும் தோழர் ஆன்மனைக் கேமரன் பெரிதாகக் கவரவில்லை என்பதை என்னால் உணர முடிந்தது. காரணம் கோத்தகிரியில் இன்னும் செழிப்பாகவே தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. தவிரக் கேமரன் மலையின் குழுமை எங்கே போனது என்றே தெரியவில்லை. தனது வளத்தைக் கேமரன் இழந்திருப்பதை எங்களால் நன்றாகவே உணர முடிந்தது. தேனீர் அருந்திவிட்டு நாங்கள் ஈப்போவை நோக்கி பயணித்தோம்.



தோழர் ஆன்மனுடனாக இலக்கியச் சந்திப்பு பேரா ஈப்போ வாசிகளின் சிறு குழுவினர் மட்டும் கலந்துக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதனால் குறித்த நேரத்தில் எல்லாரும் சந்திப்பு வந்துவிட்டபடியால் நாங்கள் கலந்துரையாடலை தொடங்கினோம்.

பேராக் தமிழ்க் கவிஞர்  இயக்கத்தின் தலைவர் என்.பி.சுப்ரா தலைமையுரையும், ஆசிரியர் ஜெயந்தி ‘மலேசிய சூழலில் கவிதை’ என்ற தலைப்பில் தன்னைக் கவர்ந்த கவிதைகளை முன்வைத்தும் உரை நிகழ்த்தினார்கள். அவர்களைத் தொடர்ந்து தோழர் ஆன்மனை நான் (யோகி) வந்திருந்தவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து, நவீனக் கவிதைகள் மீது அங்கிருப்பவர்களுக்கு ஏற்படும் விமர்சனம், தற்போதைய நவீன கவிதைகளின் போக்கு, மலாய்- சீன இலக்கியங்கள் குறித்த தேடல் என மிகச் சுறுக்கமாகக் கூறினேன்..

தொடர்ந்து தோழர் ஆன்மன், ஆசிரியர் ஜெயந்தி மற்றும் யோகி இருவரின் உரையை முன்வைத்துத் தனது கலந்துரையாடலைத் தொடங்கி, திருக்குறல், வெண்பா, மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை, அதிநவீனக் கவிதை என மிகச் சுவாரஸ்யமாகவும், எளிய வாசகர்களுக்குப் புரியும்படியும் இடை இடையில் உதாரணக் கவிதைகளையும் சொல்லி வழி நடத்திச் சென்றார். இருண்மைக் கவிதைகளின் மீது தனக்கும் விமர்சங்கள் இருக்கிறது என்று கூறும் தோழர் ஆன்மன் எந்தக் கவிதையாக இருந்தாலும் அதைப் புரிந்துக்கொள்ளப் பயிற்சி செய்து பார்க்க வேண்டும் என வழியுறுத்துகிறார். அதற்கு வாசிப்பை துரிதப்படுத்துதல் ஒன்றே சரியானது என அவர் வந்திருந்தவர்களுக்கு ஆலோசனை கூறினார்.



கிட்டதட்ட ஒரு மணி நேரம் தோழர் ஆன்மனின் கலந்துரையாடலை வந்திருந்தவர்கள் ரசித்துக் கேட்டனர். அவரின் உரையைத் தொடர்ந்து கேள்வி பதில் அங்கத்தில் கவிதைகள் தொடர்பான வரையரைகளுக்கும் சந்தேகங்ளுக்கும் அவர்கள் தோழர் ஆன்மனிடம் பதிலை பெற்றனர். தோழர் ஆன்மனின் இந்தக் கலந்துரையாடல் திருத்திகரமாக இருந்தது என்ற கருத்தினைக் கிட்டதட்ட எல்லாருமே முன்வைத்தது இந்தச் சந்திப்பின் வெற்றி என்றே சொல்லலாம்.

தொடந்து தோழர் ஆன்மனுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இறுதியாக நன்றியுரையைக் கடாராச் சோழன் வழங்கினார். இந்தச் சந்திப்பினை தோழர் சிவா லெனின் நெறிப்படுத்தினார்.

-யோகி