வெள்ளி, 28 டிசம்பர், 2018

'அம்பரய'


சிங்கள நாவல்: அம்பரய
ஆசிரியர்: உசுல.பி.விஜய சூரிய
தமிழில்: தேவா (devkathi@yahoo.com )
வெளியீடு: வடலி

'அம்பரய' அப்படியென்றால் என்னவாக இருக்கும்? யாருடையதாவது பெயரா? போராளியின் பெயராக இருக்குமா? சிங்களத்தின் மொழியாக இது இருக்குமா?  உசுல. பி. விஜய சூரிய என்ற பெயர் சிங்களப்பெயர் எனில் 'அம்பரய' என்பது சிங்கள வார்த்தையாகத்தான் இருக்கும். என்ன அது? இப்படியான சந்தேகங்களோடு இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியும் என எனக்குத் தோணவில்லை.
என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தோடு வாசிக்க ஆரம்பித்த இந்தச் சிறிய நாவலில் அதற்கான பதில் சில பங்கங்களிலேயே கிடைத்தது.

'அம்பரய'  என்றால் திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து வெளியேறும் ஒருவகை கழிவு. அதை நறுமணத்தைலங்கள் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும். அதிக விலைபோகக்கூடிய இரசாயன திரவம் அது. ஆனால், அந்த 'அம்பரய' கிடைக்கிறது சுலபமல்ல. அதற்காகக் காத்துக்கிடக்கும் மீனவர்கள் அதிகம். மேலும், கடலாம்பாலும் லேசில் கிடைக்கும் ஒரு பொருளும் இல்லை.
ஒருமுறை அவனுக்கும் அந்தத் திரவம் கிடைத்தும் அதன் துர்நாற்றம் கிடைத்தது ஆம்பல் என அவனால் அடையாளம் காண முடியவில்லை. அதை மார்டீனிடம் கொடுத்து விடுகின்றான்.   மார்டீன் அதை அவனுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான். 

சுமனே எனும் மீனவனைச் சுற்றி கடலோர மீனவ கிராமத்தில் நடக்கிறது கதை. நாவல் முழுதும் தன் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறான் சுமனே. கொலையாளியான தந்தை, தங்கைகள் , ஆதரவற்ற சிற்றப்பா , கொலைகாரனின் மகன் என்று விமர்சிக்கும் ஊரார் இவர்களுக்கு மத்தியில் முன்னேறத் துடிக்கும் இளைஞனாகத் துடிக்கிறான் சுமனே. நேர்வழி ஏதும் கிடைக்காமல் , குறுக்கு வழியிலும் முயல்கிறான். சிறிசேனாவை சந்தித்து கசிப்பு விற்கச் செல்கிறான். அதனால் சிறைக்கும் போகிறான். கசிப்பு என்பது கள்ள சாராயமாகும்.
சிறையில்  பிரதமரின் வீடமைப்புத் திட்டத்தை அறிந்து அதைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறான். அதற்காகப் பிரதமருக்கு அவனே ஒரு கடிதத்தையும் எழுதுகிறான்.

பின் காணிக்காக போராடுகிறான். பயன்படுத்தமுடியாத ஒரு  காணி கிடைக்கிறது. கிடைத்த காணியோடு போராடி ஒரு வீட்டை கட்டி முடிக்கிறான். 
இதுவரை அறிந்துகொள்ளாத, அறிய விரும்பாத, சிங்களம் என்றாலே துஷ்டரைப்போல தூர நிற்கிற, ஒரு சமுதாயத்தைப்  பற்றிய  அதிலும் வறிய நிலையில்  கடல்சார்ந்து வாழ்கிற ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையை இந்த நாவல் மிக அழகாகவும் எதார்த்தமாகவும்  அறிமுகப்படுத்திவைக்கிறது.

கிட்டதட்ட இந்திய வாழ்க்கை முறையோடு ஒன்றிவிட்ட சில சடங்குகளை சிங்களவரும் பின்பற்றிக்கொண்டிருப்பது தெரியவருகிறது. மேலும், உறவு முறைகளிலும் எந்த வித்தியாசமும் இல்லை. இதை எளிமையாக நமக்கு உணர்த்துகிறது அம்பரய. மொழிபெயர்ப்பு பொறுத்தவரை மொழிபெயர்ப்புதானா என  எண்ண வைக்கிறது. மொழிபெயர்ப்பு நாவலை படிக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை.

வியாழன், 27 டிசம்பர், 2018

எப்போதும் பெண்



1984-ஆம் ஆண்டு எழுதி இதுவரை 4 முறை பதிக்கப்பட்ட எழுத்தாளர் சுஜாதாவின் 'எப்போதும் பெண்' என்ற நாவலை நான் அண்மையில் வாசித்தேன். இந்த ஆண்டில் நான் வாசித்த புத்தகங்களில் என்னைக் கவர்ந்த புத்தகங்களில் இந்தப் புத்தகத்திற்கு தனியிடம் உண்டு.  புத்தகத்தின் பின் அட்டையில் இப்படி எழுதியிருக்கிறார்.

‘இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன் பக்தியும்தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்’
 –சுஜாதா.

இதை அவரின் ஒரு வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாம். நமக்கு எந்த ஏமாற்றமும் இருக்காது. பெண்ணாகவே வாழ்த்திருக்கிறார் சுஜாதா.  இடையிடையில் விஞ்ஞானத்தையும் போதிக்கிறார். 4 பெண்கள் மையக்கருவாக இருந்தாலும் பொண்ணு என்கிற சின்னுதான் இந்த நாவலாக இருக்கிறாள். வாசகர்கள் பெண்ணாக இருந்தால் சின்னுவாக மாறி விடுகிறார்கள். சின்னுவுக்கு குழந்தையில் பருவத்தில் ஏற்படும் அத்தனை அனுபவங்களையும் இவர்களும் சந்தித்து இருப்பார்கள்.
மூன்று அண்ணன்களோடு வளரும் அவள், அதில் ஒரு அண்ணன் அவனின் பிறப்புறுப்பை அவளிடம் காண்பிக்கிறான். அதைத் தொட்டு பார்க்க விரும்புகிறாயா என்றும் கேட்கிறான். அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என இவள் கோபப்பட செய்தாலும் ஆண்-பெண் உறுப்பின் சௌகரியங்களை அதன் பிறகு யோசிக்கத் தொடங்குகிறாள். 

தனக்குக் கிடைக்கும் சினேகிதிகள், ஏற்படும் பாலியல் சீண்டல்கள், ஆணின் பார்வை, அறியாமை, பயம் என பொதுவாக நம் சமூகத்தில்  ஆணும் பெண்ணும் வளர்க்கப்படும் வித குறித்து மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் சுஜாதா. ஆதிக்க மனோபாவத்தில் இருக்கும் ஆண், அவளை அவள் அனுமதியில்லாமல் சீண்டுவதில் வெற்றியடைகிறான்.  பெண் அந்தச் சீண்டலில் தான் இடம் கொடுத்து விட்டதாகவும் தோற்றுவிட்டதாகவும் புனிதத்திற்கு களங்கம் வந்துவிட்டதாகவும் குற்றவுணர்வு கொள்கிறாள். இப்படிக் குற்ற உணர்வு கொள்ளவேண்டியவளாக அவர் கற்பிக்கப்பட்டிருக்கிறாள் என்பதைப் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார் சுஜாதா.

பொருளாதார ரீதியில் ஆணும் பெண்ணும் சமமாக இல்லாத வரையில் பெண்ணுக்கு இரண்டாம் பட்ச இடம்தான் என்பதையும் அந்த இரண்டாம்  பட்ச இடத்திற்குப் பெண்ணை சுற்றத்தார்கள் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பெண்களுக்காக பேசியிருக்கிறார்.
பெண் என்பவளை வீழ்ச்சி ஸ்தானத்தில்தான் படுக்க வைக்கிறார்கள். ஆண் எப்போதும் மேல். பெண் எப்போதும் தீனமானவள். அவள் எப்போதும் செயல்பாட்டு வினை. அவள் தொடப்படுகிறாள். தடவிக் கொடுக்கப் படுகிறாள். ஆண் எப்போதும் செய்வினைக்காரன்.

மூன்றாவது பெண்ணாகத்தான் இருக்கும் என்று ஆசைப்பட்டு பிரசவத்தில் ஏமாற்றம் ஏற்பட அவள் நான்காவது குழந்தையை பெற்றுக்கொள்ளத் தயாராகவே இல்லை சின்னுவின் தாய். உண்மையில் அவள் கலவிக்கே தயாராக இல்லை. அன்றைய நாளின் உரையாடல் இப்படி நடக்கிறது.

“வேண்டாம் எனக்குப் பயமாக இருக்கிறது.”
“ஒண்ணும் ஆகாது வா”
“எனக்கு நாள் கணக்கு தெரியலைன்னா. வேண்டாம்”
“கணக்குத் தப்பு”
“தூக்கம் வருது”
“நீ பாட்டுக்குத் தூங்கு”
“விடுங்கோ”
“நான் பாத்துக்கிறேன்.”
அம்மா கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டாள்.

உண்டான கரு, பெண்ணாக இருக்கலாம் என்று அவளைச் சேர்ந்தவர்கள் ஆசை காட்டிய பிறகும் அதைக் கலைப்பதற்குத்தான் அவள் முயன்றாள். ஆனால், அது முடியாமல் போகிறது. இந்தப் பிரசவத்தோடு இறந்துவிடுவேன் எனப் பயப்படுகிறாள். சுகப்பிரசவம் நடக்கிறது. பெண் பிறந்ததற்காக மகிழ்கிறாள்.
புதிதாக மாற்றப்பட்டிருந்த பெட்ஷிட்டில் அதிகப்படியாக ரத்தக் கறை படிந்திருக்க, படுக்கை ஓரத்திலிருந்து ரத்தம் சொட்டு சொட்டாக கொட்டுவதைப் பார்த்து பதறிப் போய் ஓடினாள் நர்ஸ். டாக்டர் வந்து பார்த்தபோது அம்மா இறந்திருந்தாள்.
இதுவே அந்த மகளுக்கும் நடக்கிறது. ஆனால், மகள் ஆண் குழந்தைக்காக ஆசைப் பட்டிருந்தாள். பிறந்ததோ பெண்.

புதன், 26 டிசம்பர், 2018

கூகை பெண்கள் சந்திப்பு 2



 கூகை பெண்களிடம் சந்திப்பு நடத்துவதற்காக வடமாநிலம் எங்களை அன்புடன் அழைத்திருந்தது. சுங்கையில் நடத்திய பெண்கள் சந்திப்பின் வெற்றியையும் பதிவையும் பரிசீலித்தவர்கள்  இந்த வாய்ப்பு எங்களுக்குக் கொடுத்தனர் என்றும் சொல்லலாம். மேலும், பெண்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்த வடக்கு மாநில  தோழிகள் , கூகையின் இந்த முயற்சியைப் பயன்படுத்திக்கொள்ள எங்களைத் தேடி வந்தனர் என்றும் சொல்லலாம் . தேடி வந்த வாய்ப்பைக் கூகை நல்லபடியே பயன்படுத்திக்கொண்டதில் மகிழ்கிறோம்.
‘கூகை பெண்கள் சந்திப்பு 2’  விவசாயமும் தமிழரின் வரலாறும் இணைந்தே பேசக்கூடிய இடமான கெடா மாநிலத்தில் , அம்மாநில தோழிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தேதி: 23/12/2018
நேரம்: 3.30 pm
இடம்: தாமான் கெளாடி, பாலவிநாயகர் ஆலய மண்டபம்.

 
குறிப்பிட்ட தேதியில் காலையில் தலைநகரிலிருந்து வடக்கை நோக்கி புறப்பட்ட கூகை குழுவினர், ஈப்போவில் சிறிய இளைப்பாறலுக்குப் பிறகு மதியத்திற்கெல்லாம் கெடாவை சென்றடைந்தோம். இன்னும் சந்திப்புக்கான நேரம் இன்னும் இருந்தபடியால், பூஜாங் பள்ளத்தாக்கைப் பார்த்துவிட்டு வந்தோம். நான் மூன்றாவது முறையாக பூஜாங் சமவெளியை காண்கிறேன். அதுகுறித்த பதிவுகள் என் அகப்பக்கத்தில் முன்னமே பதிவு செய்திருக்கிறேன். சரியாக மூன்றரை மணிக்குத் தோழிகளிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆட்கள் வந்துவிட்டார்கள். நீங்கள் எங்கே என்று? குறித்த நேரத்தில் ஒரு நிகழ்ச்சியோ அல்லது சந்திப்போ தொடங்கிவிடுவது என்பது இதுவரை எங்கும் நடக்காத ஒன்றல்லவா? இங்கே என்ன அதிசயமாக இருக்கிறதே என அடுத்த 5 -வது நிமிடத்தில் சந்திப்பு இடத்திற்கு விரைந்தோம். உண்மை. 40-க்கும் அதிகமானவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். 


சந்திப்பைத் தோழி ஜெயா எங்களை வரவேற்றுத் தொடக்கிவைத்தார். மேலும், கூகை என்பது என்ன? அமைப்பா? கட்சியா? அரசின் பிரதிநிதியா? நீங்களெல்லாம் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளதால் அதைக் கூறிய பிறகே நாங்கள் சந்திப்பை தொடங்கினோம். அதுவரை நாங்கள் ஆளுங்கட்சியின் பிரதிநிதிகள் என்று எண்ணி வந்தவர்களுக்குச்  சிறிய ஒரு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் , அவர்களில் யாருமே எழுந்து போகவில்லை. எங்களின் நோக்கம் என்ன என்று அறிய அவர்கள் காத்திருந்தனர்.


கலந்துரையாடலை ‘கற்றல்-தெளிதல்-நன்றே’ எனும் தலைப்பில் தோழர் சிவரஞ்சனி தொடங்கினார். ஏதோ  கையில் கொண்டுபோகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்திருந்தால் உங்களுக்கு நாங்கள் எதையும் கொடுக்கப்போறதில்லை; ஆனால், நாங்கள் எதையும் உங்களுக்குக் கொடுக்காமல் போகப் போறதுமில்லை. எனத்  தொடங்கி அவர் சாதாரண அடித்தட்டு மக்கள் தொடங்கி படித்தவர்கள் முதற்கொண்டு செயற்பட தயங்கும் அனைத்து வகையான அரசு அலுவல்கள் குறித்து உரையாடினார். எந்நேரமும் மூன்றாம் தர்ப்பையோ அல்லது பிறரின் உதவியோ இல்லாமல் அரசு தன் மக்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருக்கும் சலுகைகளை எவ்வாறு பெறுவது? எங்குப் போவது உள்ளிட்ட விவரங்களை அவர் வந்திருந்த மக்களிடம் கேள்வி எழுப்பியும் விவாதித்தும் கலந்துரையாடினார்.




வந்திருந்தவர்களிடையே தொடர் கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது. அனைத்திற்கும் மிகப் பொறுமையாக,தேவையான பதிலை சிவரஞ்சனி வழங்கினார். மேலும், அவர்கள் அடுத்துச் செய்ய வேண்டிய விஷயத்தையும்  விளக்கினார். இப்படியாக முதல் அங்கம் கிட்டதட்ட ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக நிகழ்ந்தது.


தொடர்ந்து, ‘திருநங்கைகள் யார் ? ’ என்ற தலைப்பில் நான் என் சந்திப்பை மேற்கொண்டேன். அண்மையில் பதின்ம வயதினரால் அடித்துக் கொல்லப்படத்திலிருந்து கழிவறையைக் கூட சங்கோஜமில்லாமல் பயன்படுத்தத் தயங்கும் திருநங்கைகளின் அவல நிலைகுறித்து கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலில் ஓர் ஆச்சரியமான உண்மையைக் கெடா மாநில பெண்கள் உணர்த்தினார். அதாவது திருநங்கைகளோடு அணுக்கமான நட்பை கொண்டிருப்பதாக அவர்கள் கூறினார். மேலும், திருநங்கைகளை அவமானப்படுத்துபவர்களை தாங்கள் ஏற்பதில்லை என்றும் அவர்கள் கூறியது உண்மையில் மகிழ்ச்சியாகவே இருந்தது.

கெடா மாநில பெண்களுக்கு வேறு எந்த வகையில் உதவ முடியும் எனக் கலந்துரையாடியதுடன் பள்ளிப்பிள்ளைகளுக்கு எவ்வாறு தன்னம்பிக்கை கொடுத்து அவர்களை ஊக்கப் படுத்த வேண்டும் என்பதையும் கலந்துரையாடினேன். கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர் ஒரு பாரம் (FORM) எழுதக்கூட அவர்களை நம்பிக் கொடுப்பதில்லை. அவர்கள் சரியாக செய்ய மாட்டார்கள் என்ற அவநம்பிக்கையைத் தூக்கி போட்டுவிட்டு பிழையாக பாரத்தைப் பூர்த்தி செய்தாலும்
அவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்துச் சரியாக செய்வதற்குப் பழகிவிட வேண்டும். அதைவிடுத்து அவர்களைத் திட்டுவதிலும் குறைவாக எண்ணுவதிலும் பலனில்லை என்று கூறினேன். பலர் அதை ஒப்புக்கொள்ளவே செய்தனர்.


தொடர்ந்து இந்தச் சந்திப்பு தொடர்பான கேள்வி-பதில் அங்கம் இடம்பெற்றது. வந்திருந்தவர்களிடத்தில் அவ்வளவாகக் கேள்விகள் இல்லையென்றாலும் பகிந்து கொள்ள அவர்களுக்கு விஷயங்கள் இருந்தன. பிரச்சனைகளும் இருந்தன.

இறுதியாகத் தோழி ஜெயா நன்றியுரையாற்றி சந்திப்பை நிறைவு செய்தார்.
கெடா மாநிலத்தில் நடந்த இந்தப் பெண்கள் சந்திப்பில் நான் முக்கியமாகப் பதிவு செய்ய வேண்டிய இரு விஷயங்கள் உள்ளன.


விஷயம் 1

1. இந்தச் சந்திப்பிற்கு பெண்கள் மட்டும் வரவில்லை. பெண்கள் என்ன பேசப்போகிறார்கள் என்று தெரிந்துகொள்ள சில ஆண்களும் வந்திருந்தனர். சுருக்கிய புருவத்தோடு, நாங்கள் பேசுவதை அவர்கள் பதிவு செய்யவும் செய்தனர். மிக முக்கியமாக அவர்கள் இறுதிவரை இருந்து இந்தச் சந்திப்பில் முழுமையாகப் பங்கெடுத்தனர். அதில் ஒருவரிடம் நான் இவ்வாறு கேள்வி எழுப்பினேன்.

பெண்கள்  இப்படி வந்து ஒன்று கூடி பேசுவது ஏற்புடையதாக இருக்கிறதா?
அவரிடம் பதில் இல்லை.
திருமணம் ஆன பெண்கள் இவ்வாறு வரலாமா?
வரக்கூடாது.
அப்படி வருவதால் அவர்களுக்கு என்ன?
அவரிடம் பதில் இல்லை.
உங்கள் வீட்டுப் பெண்ணை பேசுவதற்கு அனுமதிப்பீர்களா?
கொஞ்சம் தயங்கியவர்.. நான் நிச்சயமாக அனுமதிப்பேன். என் வீட்டுப் பெண்களும் விஷயம் தெரிந்தவர்களாக வர வேண்டும். பொதிவில் தைரியமாகச் செயற்பட வேண்டும், என்றார்.



விஷயம் 2

இந்தச்சந்திப்பை ஏற்பாடு செய்த தோழிகளான ஜெயா, புஷ்பா, மற்றும் விரோனிகா போன்றவர்கள் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். பெண்கள் பொதுவெளியில் தலை நிமிர வேண்டும் என்ற வேட்கை மட்டுமே அவர்களிடத்தில் என்னால் பார்க்க முடிந்தது. அரசியல் மற்றும் பண பலம் எதுவுமே இல்லாத இவர்கள் தினமும் வாழ்க்கையோடு முட்டி மோதுபவர்கள்தான். அதையும் தாண்டி அடுத்தவர்களுக்காகவும் யோசிக்கிறார்கள். அவர்கள் தானே பெண்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கூகையின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் ஆலோசனையின் பேரில்  மறுநாள் பிரச்னை உள்ளவர்களை அரசு அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று தீர்வை ஏற்படுத்திக்கொடுத்ததில் கூகை மகிழ்ச்சியடைகிறது.

(இந்தச் சந்திப்பிற்காக இடத்தைக் கொடுத்து உதவிய கோயில் நிர்வாகத்திற்கு நன்றியும் அன்பும்.)

வியாழன், 13 டிசம்பர், 2018

புத்தகப்பார்வை : துடைக்கப்படாத இரத்தக் கறைகள்- பூங்குழலி வீரன்



யோகியுடனான எனது முதல் சந்திப்புகள் மிக சுவாரஸ்யமானவை. அந்த சுவாரஸ்யங்கள் இன்றுவரை தன் இயல்பு மாறாமல் மனவெளியெங்கும் பூத்துக் கிடக்கின்றன. அந்த முதல் சந்திப்புகளின் உள்ளடக்கம் காக்கப்பட வேண்டும் என்பதால் அது குறித்து இங்கு நான் விவரிக்க விரும்பவில்லை. இதை நான் இங்கு பதிவு செய்கிற வேளையில் எங்காவது ஒரு மூலையில் நின்று கொண்டு சந்துரு சிரித்துக் கொண்டிருப்பார் என்று மட்டும் எனக்குத் தெரியும். எங்களின் சுவாரஸ்ய சந்திப்புகளின் ஒரே கதாநாயகனாக இருக்கும் வரம் சந்துருக்கு மட்டுமே கிட்டியிருந்தது.

இன்றுவரையில் மனம் இறுக்கத்தை நோக்கி தள்ளப்படுகிற ஒரு நிலையில் நான் போய் நிற்கிற இடங்களில் யோகிசந்துருவுடைய வீடு தனித்துவமானது. மாறாத அன்பும் சிரிப்பும் மட்டுமே அங்கே கொட்டிக் கிடக்கும்.

யோகியுடனான பரிமாற்றங்களும் யோகி நிகழ்த்தும் பரிமாறுதல்களும் ஒரு தாய்மை உணர்வு சார்ந்தது. மன இறுக்கத்தை மாற்றி இன்னும் சில மாதங்களுக்கு துள்ளித் திரியும் வலிமையை அந்த ஒருசில மணி நேர சந்திப்பு கொடுக்கும். ஒரு படைப்பாளர் என்பதைத் தாண்டி யோகிக்கு நான் கொடுக்க நினைக்கும் அறிமுகம் இதுதான். என் உணர்வு சார்ந்த அறிமுகம். இங்கு யோகியின் துடைக்கப்படாத இரத்தக் கறைகள் – பத்திகளின் தொகுப்பு நூல் குறித்த அறிமுகத்திற்கு வாய்ப்பு கொடுத்தற்கு முதலில் வல்லினம் குழுவினருக்கு நன்றி.

தனது 16 வயதிலிருந்து 31 வயது யோகியின் பல்வேறு பணியிடச் சூழல்களில் நடந்த சம்பவங்களை இந்த பத்திகள் நமக்குத் தொகுத்தளிக்கின்றன. தான் பெற்ற அனுபவங்களை மிகவும் சுவைபட யோகி தொகுத்திருக்கும் பாங்கு நம்மை கவர்கிறது. ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு சம்பவ பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன. சில பத்திகள் முதன்மைச் சம்பவத்தோடு தொடர்புடைய சில துணைச் சம்பவங்களையும் பதிவு செய்திருக்கின்றன. சில நேரம் வெளிப்படையாகவும் பல நேரங்களில் மிக நூதனமாகவும் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் குறித்து யோகி பேச முயற்சித்திருக்கிறார். பெண்ணுக்கு ஆண் இழைக்கும் அநீதிகள், ஒரு பெண்ணுக்கு மற்றுமொரு பெண்கள் குழு இழைத்து கொண்டிருக்கும் அநீதிகள் என சமூகத்தில் மிக இயல்பாய் நடந்துகொண்டிருப்பவை குறித்து அவரது பத்திகள் பேசுகின்றன.

பணியிடங்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்கள், சங்கடங்களை பெண்கள் எப்போதும் தன்னிலை சார்ந்ததாகவே கொள்கின்றனர். அது குறித்து அவர்கள் பெரும்பாலும் பொதுவில் பேச விரும்புவதில்லை. அந்த சிக்கல்கள் குறித்து எந்தவொரு புனைவும் இன்றி மிக இயல்பாக நமக்கு யோகி சொல்லிச் செல்கிறார். வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் உரிமை. அந்த உரிமையை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் திறன் அடங்கியிருக்கிறது. பதின்ம வயது கால கட்டம் வரை பெற்றோர்களால் வடிவமைக்கப்படும் வாழ்க்கை ஒருகால கட்டத்தில் நமது கைகளில் வந்தடைந்துவிடுகிறது. சிலவேளைகளில் வந்தடைந்துவிடுவதாக
நாம் நினைத்துக் கொள்கிறோம்.

வந்தடைந்தவிட்ட வாழ்க்கையை நகர்த்திச் செல்வதிலே நமது பாதிநாள் வாழ்க்கை செலவாகி விடுகிறது. இதில் பிற்பகுதியில் நாம் வாழ நினைக்கும் வாழ்வில், முன்பகுதியில் நாம் வாழ்ந்த வாழ்வின் தாக்கங்கள் இருக்கவே செய்யும். அந்த தாக்கங்கள் எப்போதும் யோகியைச் சூழ்ந்தபடியே இருக்கின்றன. வேலைக்குச் செல்லத் தொடங்கிய நாள் தொடங்கி ஒவ்வொரு முறையும் அந்த தாக்கங்கள் யோகியோடு பயணித்தபடியே இருக்கின்றன. யோகியின் அப்பா அவரது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிக முக்கியமானது என்பதை அவரது பத்திகள் காட்டுகின்றன. தந்தையோடு பயணித்த வாழ்வு குறித்தும் அவரின்றி பயணிக்கும் வாழ்வு குறித்தும் ஒப்பீடுகள் பத்திகள் எங்கும் காணக்கிடைக்கின்றன. அந்த தாக்கங்களை மீறி தான் எடுக்கும் முடிவுகள் தன்னை பாதிப்பதாக யோகி உணர்வதுபோல் தெரிகிறது. வாழ்வின் மகிழ்ச்சியான நினைவுகளைக் கொண்டாடும் யோகி துன்பங்களையும் அவ்வாறே கொண்டாடுகிறார்.

முதலாளித்துவ வாழ்வில் ஒரு இயந்திரத்தை போலத்தான் தனக்குகீழ் வேலை செய்பவர்களையும் முதலாளிகள் பார்க்கிறார்கள். இது குற்றச்சாட்டு அல்ல. நிகழ்கால வணிகவியல், பொருளாதார போட்டிகளின் மத்தியில் நாம் ஒவ்வொருவரும் தெரிந்தே ஏற்றுக் கொண்டிருக்கும் யதார்த்தம். அந்த யதார்த்த உலகில் வாழ்தலின் வலி குறித்த மிக எளிமையான பதிவினை யோகி செய்திருக்கிறார். கொடுக்கப்பட்ட ஒரு வேலையை முடிக்க வேண்டும் அல்லது முடித்தே ஆக வேண்டும் என்பதை மட்டுமே நமக்கு மேல் உள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த வேலையை முடிப்பதில்தான், எவ்வளவு சீக்கிரம் முடித்துக் கொடுக்கிறோம் என்பதில்தான் நமது திறமை அடங்கியுள்ளது என நினைக்கிறார்கள். அவர்கள் நம்மை நசுக்குவதைப் போல் நாம் நமக்கு கீழ் உள்ள ஒரு சிலரையாவது நசுக்க வேண்டும். இல்லை அவர்கள் பாவம், அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் என தொடங்கினோம் என்றால் நமது நிலை பாவமாகிவிடும் என்பதுதான் உண்மை. அந்த உண்மையினை யோகியின் பத்திகளின் வழி நான் உணர்கிறேன்.

சில வேளைகளில் பெரிய பெரிய கோபங்களுக்கு, அவமானங்களுக்கு முகம் கொடுக்கும் நாம் ஒரு சிறிய விடயத்திற்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு போய்விடுகிறோம். பெரிய கோபங்களில் அசைக்கப்படாத நமது சுயகெளரவம் ஒரு சிறிய சம்பவத்தில் கூட அசைக்கப்படலாம். அந்த நேரத்தில் பலருக்கு முட்டாள்தனமான படும் நமது செய்கை நமக்கு மிகப்பெரிய மனநிறைவை அளிக்கும். அந்த மனநிறைவுதான் முக்கியமானது. தொடர்ந்து வாழ்வதற்கான வலிமையை அந்த மன நிறைவுதான் நமக்கு வழங்குகிறது. தனக்கு சுயகெளரவம் அதிகம் என்பதை யோகி தானே முன்வந்து சொல்லிக் கொள்கிறார். அந்த சுயகெளரவத்தினைக் காப்பதற்காகத்தான் அவர் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை மிக இயல்பாய் நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு முறையும் அந்த சுயகெளவரம் சீண்டப்படும்போது அவர் எடுக்கும் முடிவுகள் அவருக்கு புதியதொரு பாதையை திறந்து வைக்கின்றது. யோகியின் பணியிடங்கள் நமக்கு பல கதைகளைத் தருகின்றன. ஒரு தாதியாய், ஒரு தொழிற்சாலை பணியாளராய், ஒரு பாதுகாவலராய், தங்கும் விடுதியின் சமையல்கூட உதவியாளராய், ஒரு காசாளராய் அவரது அனுபவங்கள் நமக்குப் புதியதொரு அனுபவத்தை தரும். ஒவ்வொரு துறையிலும் ஏதாவதொரு வகையில் எட்டி பார்க்கும் தொல்லைகள் சில வேளைகளில் புதியவர்களுக்கு வியப்பினை தரலாம்.

பெரும்பாலானோருக்கு இப்படியான அனுபவங்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் படித்து முடித்து இணைத்து கொள்ளும் முதல் வேலையில் கடைசி வரை நீடித்து நிற்பதைத்தான் வாழ்வின் மிகப் பெரிய சாதனையாக நாம் கருத்திக் கொள்கிறோம். அரசாங்க வேலை என்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை. பதவி உயர்வுகளைத் தவிர வேறுஎந்தவொரு மாற்றத்தையும் அதில் நாம் எதிர்பார்ப்பதில்லை. மிக பாதுகாப்பாக அந்த வேலையில் நாம் அமர்ந்து கொள்வதாக உணர்கிறோம். மேலும், அடிக்கடி வேலை மாறுபவர்கள் குறித்த தவறான கண்ணோட்டமும் நமக்கு இருக்கிறது. அதை நான் நேரடியாகவே உணர்ந்திருக்கிறேன். நம்மிடம் மட்டுமே எல்லாவித குறைகளும் இருப்பதாகவே பிறர் பார்க்கும் ஒரு நிலையினை இந்த வேலை மாறுதல் ஏற்படுத்தி விடுகின்றது. அதை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டு வாழ்வின் நிறைவை நோக்கி நகர்வதில்தான் வாழ்தலில் உண்மைப்பொருள்
அடங்கியிருக்கிறது.

வாழ்க்கை மட்டுமே எப்போதும் நமக்கு சிறந்ததொரு வழிகாட்டியாய் விளங்குகிறது. வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவங்களே நமது வாழ்வை பண்படுத்துகின்றன. இன்று எடுக்கின்ற ஒரு முடிவிற்கு நீண்ட காலத்திற்கு பிறகு அன்று எடுத்துவிட்ட முடிவு சரிதான் என்கிற முழுமையான தெளிவு நமக்குக் கிடைக்கின்றது. யோகியின் துடைக்கப்படாத இரத்தக் கறையில் தெரியும் உண்மைத் தன்மையே அவர் எழுத்து மீதான நமது ஈர்ப்பை அதிகரிக்கின்றது. அந்த ஈர்ப்பு தொடர்ந்து அவரது எழுத்துகளை வாசிக்கத் தூண்டும் வாசகர்களை உருவாக்கும் என உறுதியாக நம்பலாம். யோகி தொடர்ந்து வளர வேண்டும் – மிகப் சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும் நம் அனைவரின் விரும்பம்.

 

சனி, 1 டிசம்பர், 2018

பசார் காராட் (PASAR KARAT)





கோலாலம்பூர்  எனும் நகரம் ஆடம்பரத்திற்குப் பெயர் போனதாகத்தான் பலரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதன் இருண்ட பக்கங்களை சட்டென யாரும் வெளிச்சம் போட்டு காட்டிவிடுவது இல்லை. கோலாலம்பூரில் ஆடம்பரத்தைப் பார்ப்பவர்கள் அதன் முதுகுப்பகுதியில் ஆழமாக பதிந்துவிட் ட வறுமைக்கோடுகளைக் கவனிக்க தவறித்தான் விடுகின்றனர். 



இம்மாதிரியான வெளிப்படையாக நடக்கும் மறைக்கப்பட்ட காட்சிகளும் விஷயங்களும் தேசிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் நிரம்ப எழுதப்பட்டிருந்தாலும்,  தமிழ் மொழியில் எழுதப்பட்டிருப்பது   குறைவுதான். பலருக்குத் தெரிந்திருக்கவும் இல்லை. தலைநகரின்  இந்த எழுதப்படாத பக்கங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் பசார் காராட் என்று சொல்லக்கூடிய பழைய சந்தை. மலாய் மொழியில் காரட் என்றால் திரு பிடித்தது என்று அர்த்தம்.  சந்தையும்  அதற்கு அர்த்தம் கற்பிக்கும் மாதிரியான ஒரு இடத்தில்தான் நடக்கிறது.
 
சாதாரணமாகக் காலை  10 மணிக்குத் தான்  தலைநகரின் பெரிய/ சிறிய  அங்காடிகளில் வியாபாரத்திற்குத் திறக்கப்படும். அதிகாலை 5.30 மணியிலிருந்து 8 மணிவரை நடக்கும் இந்த பசார் காரட் 10 மணிக்குத் தொடங்கவிருக்கும் சில  அங்காடிகளின் வாசலிலும் , குறுக்கு சந்துகளில் கடை விரிக்கிறது.



கிட்டதட்ட கருப்பு சந்தை மாதிரியாகவே தோற்றம் கொடுக்கிறது இந்தச் சந்தை.
தற்போது உபயோகத்திலிருந்து விலகிப்போயிருக்கும் அலைபேசியிலிருந்து தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதிநவீன கைப்பேசி வரை இந்தச் சந்தையில் வைத்திருக்கிறார்கள். உடைகள், கைக்கடிகாரங்கள், ஆன்ட்டிக் பொருள்கள், பழைய நாணயங்கள், குறுந்தட்டுகள், போஸ்ட்டர்கள் மின்னியல் சாதனங்கள் எனப் பயன்படுத்தியதும் புதியதுமாக இருக்கிறது.

 



2017-ஆம் ஆண்டு தலைநகரின் மாநகரமன்றம் இந்தச் சந்தைக்கு 'பசார் ஆன்ட்டிக்' என புதிய பெயரைக் கொடுத்தது.  பசார் காரட் என்ற பெயர் எதிர்மறை தோற்றத்தை கொடுப்பதால் இந்தப் பெயரை சூட்டியதாகக் மாநகரமன்றம் கூறியதோடு, 80 புதிய தற்காலிக  வியாபார உரிமையையும் பசார் காரட் வியாபாரிகளுக்கு  பெற்றுத்தந்தது.  6 மாத தவணையில் அவர்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். திருட்டு பொருள்களை விற்பனை செய்கிறார்கள் என்று சந்தேகிப்படும் வியாபாரிகளை எளிதில் அடையாளம் காணவும், திருட்டு பொருள்களை விற்பனை செய்வதை தவிர்க்கவும் மாநகர மன்றம் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறது என்று ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்கள்.  இருந்தபோதும்,  இன்றுவரை பசார் காரட் என்ற பெயராகவே அந்தச் சந்தை விளங்கி வருகிறது.



கிட்டதட்ட 30 ஆண்டுகள் பழக்கத்தை அத்தனை சீக்கிரம் மாற்றிவிட முடியுமா என்ன?