திங்கள், 16 அக்டோபர், 2017

வார்த்தைகள் தோற்குமிடத்தில் துவங்கும் (துயரின்) இசை

Er-Hu
 மிஷ்கினின் திரைப்படங்களில் வரும் வயலின் இசையை போன்று நான் வேறு எங்கும் வயலினை ரசித்ததில்லை. அதற்கு முன்பு எனக்கு பியானோ, வீணை மற்றும் புல்லாங்குழல் இசை மிகவும் பிடிக்கும். பார்வையை இழந்த என் தாத்தா புல்லாங்குழலை கையில் எடுக்கும் போதெல்லாம்  புளகாங்கிதம் அடைபவள் நான். அப்போது எனக்கு வயது 6 தான். புல்லாங்குழல் எப்போதும் சாமி மேடையிலேயே இருக்கும்.

தாத்தா எப்படி புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. குழலின் துளைகளைத் தடவித் தடவி விரல்களைப் பதித்து வாசிக்கும்போது பிரவகிக்கும்  இசையலைகள் வழியாக அவர் பிரபஞ்ச மொத்தத்தையும் பார்க்கத் துவங்குகிறார் என எண்ணியிருக்கிறேன்.  தாத்தாவுடன் அதிகமாக இருந்த காரணத்தினாலும் எதையுமே உற்று நோக்குகின்ற குணம் என்னிடம் இயற்கையிலேயே இருந்ததாலும் நான் அதை ஆசையோடு பார்த்துக்கொண்டிருப்பேன். தாத்தா குழலைக் கீழே வைத்துவிட்டால் அத்தனை வாஞ்சையோடு எடுத்து ஊதுவேன். ஆனால், என்னை மட்டும் அந்தக் குழலுக்கு பிடித்ததே இல்லை. என் சின்ன வாயிலிருந்து வெளிப்படும் காற்றை அந்தக் குழல் அதனுள் இசையாக அனுமதித்ததே இல்லை. இருந்தாலும் அதைக் கையில் வைத்திருப்பது எனக்குப்   பெருமையாக இருக்கும்.

ஒரு கால கட்டத்திற்கு பிறகு வீணை இசையின் மீது  காதல் வந்தது. வீணையின் மீதுதான் அந்தக் காதலா எனத் தெரியவில்லை. அவ்விசைக்கருவியை ஆண் மீட்டுவதற்கும் பெண் மீட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வீணையை ஒரு பெண்  மீட்டும்போது அத்தனை கடாட்சமாக இருக்கும். வீணை மீது அலாதியான காதல் இருந்தாலும் என் வாழ்நாளில் நான் வீணையைத் தொட்டதே இல்லை. ஆனால் புல்லாங்குழல் இசையை நான் இப்போதும் கேட்கிறேன். மூன்று வெவ்வேறு இசை தரும் குழல்கள் வீட்டில் இருக்கின்றன. எந்த பயிற்சியும் இல்லாத சந்துரு அதை எடுத்து ஊதும் போதெல்லாம் ஏதாவது  இனிமையான, நூதனமான இசை வெளிப்படும். நான் அதை புன்னகையோடு ரசிப்பேன்/ ரசிக்கிறேன்.

Karen Han
கேட்ட மாத்திரத்தில் நான் மெய்மறந்து லயித்தது  மிஷ்கினின் திரை படங்களில் வரும் வயலின் இசையைத்தான். 80-களில் வந்த தமிழ்த் திரைப்படங்களின் துக்கக் காட்சிகளில் வரும் நாதஸ்வர இசையைப் போன்று இல்லை மிஷ்கினுடைய வயலின் திரையிசை. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் உயிரே போய்விடும் போலிருக்கும். வருத்தமாக இருக்கும்போது அந்த இசையைக் கேட்கவே கூடாது, நிலைமை ரொம்ப மோசமாகி விடும். திக்குத் தெரியாமல் திண்டாடும் நிலைதான் அது. இயக்குனர் மிஷ்கினின் திரைப்படங்களில் பயன்படுத்தும் வயலின் இசை ‘In the mood for love’ உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களின் திரையிசையின் ”நகல் வடிவம்” என  நண்பர்கள் பலரும் தெரிவித்தனர். அது உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.  அம்மாதிரியான உயிர் உருகும் இசையை தமிழ்ச் சமூகம் அப்படியாவது கேட்டு ரசிக்கட்டுமே.

சீனர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய பலவிஷயங்கள் பேசப்படாமலேயே இருக்கிறது. அதிலும் சீனர்களின் இசையையும், இசைக்கருவிகளையும் பெரிதாக இதுவரை யாரும் பேசியதே இல்லை. யாழ் மாதிரியான பல இசைக்கருவிகள் சீன பாரம்பரியத்தில் இருந்தாலும் அவை பெருவாரியாக சோக கீதங்களையே வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கின்றன.

அம்மாதிரியான சோக இசைக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாதது Er-Hu இசைக்கருவின் இசை. விளிம்பு நிலை மக்களால் வாசிக்கப்படுவது, குறிப்பாக பார்வை இழந்தவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக அந்த இசையை தெருக்களில் வாசித்து யாசகம் பெற்றிருக்கிறார்கள். ஓர் இசை உயிர் கொல்லுமெனில், அது மறைந்திருக்கும் துக்கத்தை வெளியில் கொண்டு வரும் எனில், பலவீனப்படுத்தி உடையச்செய்யும்மெனில், பழைய துயர நினைவுகளை மீண்டும் நிழலாட வைக்குமெனில் அது என்னைப் பொறுத்தவரை Er-Huவின் இசைதான். மலேசியாவைச் சேர்ந்த TommyChin ,  Er-Hu  இசைக்கருவியை வாசிக்கும் விதத்தை பார்த்தும், அதன் இசையைக் கேட்டும் அனுபவித்திருக்கிறேன்.

தன்னையும் அழ வைத்து கேட்பவரையும் அழவைக்காமல் விடாது அந்த இசை.
Er-Hu இசைக்கருவி குறித்துச் சொல்வதற்கு நிறைய சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன. அந்த இசைக்கருவியே நுனி முதல் அடிவரை தகவல்கள் கோர்க்கப்பட்டிருக்கிறது எனலாம்.
Er-Hu இசைக்கருவியை உருவாக்கும் விதமே கொஞ்சம் விநோதமானதுதான். அதே வேளையில் துயரம் நிறைந்ததும்  கூட. 1000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்ட அந்த சோகமானது, 10-ஆம் நூற்றாண்டிலிருந்து சீனாவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது எனலாம்.
Tommy Chin
தொடக்க  காலத்தில், Er-Hu  இசைக்கருவியின் தந்திகள் Silk thread என்று சொல்லக்கூடிய பட்டிழையால் கோர்க்கப்பட்டிருந்தது என்று வரலாறு கூறுகிறது.  1950-களில்தான் பட்டிழைகளுக்குப் பதிலாக வயலின் தந்திகளைக் கொண்டு மாற்று செய்தார்கள். அந்த பரிட்சார்த்த முயற்சி நல்ல பலனைக் கொடுத்ததுடன் இசை வெளிப்பாட்டில் முன்னேற்றத்தையும் கொடுத்ததால் அதையே இன்றும் பயன்படுத்துகிறார்கள்.

Er-Hu  இசைக்கருவியினை ரத்த சந்தன மரக்கட்டையால் பாரம்பரியமாக செய்திருக்கிறார்கள். (இப்போது அந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதில்லை).  அதன் கீழே இருக்கும் ஒத்திசைவுப் பெட்டியின் மேற்புறத்தோல் மட்டும்  மலைப்பாம்பின் தோலால்தான் முன்பும், இப்போதும் செய்யப்படுகிறது. அந்த உயிரின் வலிதான் அதிர்ந்து, அதிர்ந்து இத்தனை சோகமான இசையை வெளிப்படுத்துகிறதோ என்று கூட எண்ணத் தோணுகிறது.  மேலும், முற்காலத்தில் Er-Hu இசைக்கப் பயன்படும் bow என்று சொல்லக்கூடிய யாழ்வில்லில் வெண்குதிரையின் வாலில் இருந்து பெறப்பட்ட நீண்ட கேசம் தொங்கவிடப்படும்.(இப்போது அதையும் மாற்றி எளிமையாக்கிவிட்டார்கள்). பழைய மரபுப்படி அந்த இசைக்கருவியை தற்போது செய்யாவிடினும், செய்யப்பட்ட சில மாற்றங்களால் Er-Hu இசையின் மேன்மைக்கு எந்த பங்கமும் நேரவில்லை.

Er-Hu இசையை உலக சினிமாவில், சீனர்கள், குறிப்பாக Ang Lee போன்ற சிறந்த திரைப்பட  இயக்குனர்கள் நன்முறையில் பயன்படுத்தியுள்ளனர். 2000- ஆம் ஆண்டில்  வெளியான ‘Crouching Tiger and Hidden Dragon’ என்ற திரைப்படத்தில் Ang Lee, Tan Dun என்ற இசை இயக்குனரோடு இணைந்து Er-Hu இசையைப் பயன்படுத்தியிருந்தார். அந்த வருடம் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த பிண்ணனி இசை உட்பட அந்தத் திரைப்படம் எட்டு விருதுகளை வென்றது. இதில் விசேஷம் என்னவென்றால் முதலில் இந்த படத்தில் பிரபலமான Cello கலைஞரான YO YO MA-வை பயன்படுத்தி Cello இசை இசைக்கவைத்து முதல் இசைப்பதிவை முடித்தார்கள். Cello இசை பிரமாதமாக அமைந்திருந்தாலும் இசை இயக்குனர் Tan Dun -னுக்கு வேறு ஒரு எண்ணமும் மனதில் இருந்தது.

Tan Dun
Cello போன்ற மேற்கத்திய இசை வாத்தியத்துக்கு இணையாக கிழக்கில் இருந்து சீனப் பாரம்பரிய வாத்தியமான Er-Hu இசையை இத்திரைப்படத்தினுள் கொண்டு வர வேண்டும் என Tan Dun நினைத்தார். அதைச் செயல்படுத்த Karen Han என்ற திறமை வாய்ந்த Er-Hu இசைக்கலைஞரை அணுகினார். Karen Han வாசிப்பில் இரண்டாவது இசைப்பதிவு நிகழ்ந்த பின்னரே ‘Crouching Tiger and Hidden Dragon’ திரைப்படம் வெளியானது. பலர் எதிர்பார்க்காத விதமாக,  இசை இயக்குனர் Tan Dun எதிர்பார்த்த மாதிரியே Er-Hu இசை திரையில் பெரிய வரவேற்பினைப் பெற்றது. எழுத்து எப்படி ஒரு எழுத்தாளனைக் கண்டு கொள்கிறதோ அதுபோலவே இசையும் தனக்கானவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது என்றால் தவறில்லை.

இரண்டே தந்திகள், அதற்கு மேல் சேர்க்க முடியாது என்ற வரையறை, அதனாலேயே யாழ்வில்லை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான இசைநுட்பங்களை Er-Hu கருவியிலிருந்து வெளிக்கொணர்வது இயலாது. இது போன்ற சிறுகுறைகளை Er-Hu இசையின் பலவீனம் எனச்சொல்லலாம்.

இசையின் தனித்தன்மை அதில் கலந்த உணர்வுதான். உணர்வுப்பாவமே (emotional expression) சாதாரண இசையை உன்னதமாக்குகிறது. Er-Hu-வின் நாடியான அதன் இரண்டுதந்திகள் மீது யாழ்வில்(bow)  பேசும்போது எழும் நம்பமுடியாத இசை வெளிப்பாடு மற்றும் Er-Hu வாசிப்பவரது உணர்வுப்பாவம் நமது ஆழ்மன உணர்ச்சிகளை எழுப்பி, தொன்மையான, துயரம் நிரம்பிய, சிக்கலான ஒரு கதையை இசையில் நம் முன் படைக்கும் அவர் ஒரு தொல்கதைசொல்லியாகவும் நாம் அக்கதையின் உணர்வுப்பூர்வமான பாத்திரங்களாகவும் உருவெடுப்பதைத் தவிர்க்கவே இயலாது.


-நன்றி களம்
அக்டோபர் 2017 இதழ்
https://kazhams.wordpress.com/2017/10/09/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d/