வெள்ளி, 25 நவம்பர், 2016

குருதி 2

அன்றொரு நாள்தான்
அந்த நாளின்
தேதி நினைவில் இல்லை
நேரமும் நினைவில் இல்லை
ஆனால் அந்த நாள்
ஏற்படுத்தியிருந்த
பதற்றம்
இன்னும் மறப்பதாக இல்லை

அவள் உடலிருந்து வழிந்த
குருதியும் நாசியில் ஏறிய நெடியும்
இன்னும்  அந்தச் சின்னத் திரையைவிட்டு
 நீங்குவதாக இல்லை

பிரேதத்தை
காகித்தைக் கொண்டு மூடியிருந்தார்கள்
அவளின் இடது கை மேலும்
வலது கை கீழ் நோக்கியும் இருந்தது
கால்களும் அப்படிதான்

அன்றவள்
விருப்பமாக போட்டு வந்திருந்த
டாப்ஸ் கிழிந்திருக்கலாம்
அது அவளுக்கு
தெரிந்திருக்க  வாய்ப்பில்லை

அவள் குருதியில்
மொய்த்த ஈக்கள்
அதை மொய்த்தக் கண்கள்
என எதைப் பற்றியும்
அவள் அறியவில்லை

முதல் அனுபவங்களை
பட்டியலிட்டு
பாதுகாத்து ரசிப்பவர்களால்
இறுதி நிகழ்வுகளை
சிலாகிக்க முடிவதில்லை
எல்லா இறுதி காட்சிகளும்
மரணத்தோடு
ரகசியமாகிவிடுகின்றன
சிந்திவிட்ட அந்தக் குருதியைப் போல…

நன்றி: படிகம் நவம்பர்  2016 இதழ்

குருதி… 1

35 வயதாகும் மாயா
வன்புணர்வு செய்யப்பட்டாள்
அதன்பின் அவளின் உடலும் வயிறும்
 மருந்துகளினால்
பரிசுத்தமாக்கப்பட்டது

மனநல மருத்துவரால்
கிளிப்பிள்ளையாய்
தனக்கேதும் நிகழவில்லை
எனச்சொல்லவும்
பயிற்றுவிக்கப்பட்டாள்
கடித்து எறியப்பட்ட மாயாவின்
ஒரு முலை
பலாத்காரம் நிகழ்ந்த
காசிப்பிள்ளை தெருவின்
தெய்வமாக அவதாரம் எடுத்துவிட்டதென
ஆறுமுகம் கூறுகையில்.....
தனக்கேதும் நேரவில்லை என
மீண்டும் மீண்டும் சொல்லியவாறே
இன்னொரு முலையை
மிகப் பொறுமையாக
அறுத்துக் கொண்டிருக்கிறாள்

நன்றி : படிகம் நவம்பர் 2016 இதழ்

உஷா மேத்தாவும் மரியா சின்னும்




மலேசியாவில் தற்போது சோஸ்மாச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின்-னை நினைக்கும் போதெல்லாம், எனக்கு ஏனோ இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த உஷா மேத்தாதான் நினைவுக்கு வருகிறார். 
எங்கள் நாட்டின் மரியா சின் அப்துல்லா, அரசு மீதான அதிருப்தியை வெளிபடுத்த ஞாயமான கோரிக்கைகளை நாடாறிய செய்வதற்குக் கையில் எடுத்தது 'பெர்சே' (சுத்தம்) எனும் கோட்பாட்டை. ஆனால், 11 வயதிலேயே போராட்டத்தில் குறித்த உஷா மேத்தா, பின்னாளில் வித்தியாசமான வழியில் 'சுதந்திரக்குரல்' என்ற என்ற வானொலியை நடத்திப் புரட்சி செய்தார். 

இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் என்றால் ஜான்சிராணி, துர்க்காபாய், பத்மாவதி ஆஷர் என்று பலர் நினைவுக்கு வருவார்கள். அந்தப் பட்டியலில் தவிர்க்க முடியாதவர் வீராங்கனை உஷா மேத்தா. 
மார்ச் 24 ஆம் தேதி, 1920 ல் குஜராத்தின் சூரத் நகரில் பிறந்தார். இவரின் தந்தையார் நீதிபதியாவார். தேசப் பக்தி எப்படி வந்திருக்கலாம் என்பதை அங்கிருந்தே புரிந்துகொள்ள முடியும். 
பின்னாளில் அவர் தீவிரமுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்ள இரண்டு காரணங்கள் அஸ்திவாரமிட்டிருக்கலாம். 

1.உஷா மேத்தாவுக்கு 11 அகவை நடந்துக்கொண்டிருந்தபோது, இந்திராகாந்தி தலைமையில் உருவாக்கப்பட்ட குரங்குப் படையில் சேர்ந்து விடுதலை இயக்கத்திற்காகக் களப்பணிச் செய்தார். இந்தப் பங்களிப்பு 
2.அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு உஷா மேத்தாவுக்குக் கிடைத்தது. காந்தியம் ஈர்க்கப்பட்டு ஆசிரமப் பணிகளிலும் செய்து வந்தார். காந்தியை போலவே எப்போதும் வெள்ளைநிற கதர் சேலையை அணிய தொடங்கினார். 

குழந்தைப் பிராத்தியத்திலேயே தேச விடுதலைக்காக இணைந்துக்கொண்டவர், கல்வியிலும் முழுக் கவனம் செலுத்தினார். பல்கலைக்கழகத்தில் முதலாவது மாணவியாகத் தேர்ச்சிப் பெற்றதுடன் தந்தை வழியில் சட்டப்படிப்பையும் முடித்தார். பின் அவர் காங்கிரசில் இணைந்து இன்னும் தீவிரமுடன் செயற்படத் தொடங்கினார். 

ஆகஸ்ட் 8-ம் தேதி 1942-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள குவாலியா டேங்க் மைதானத்தில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காந்தி, 'வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை ஆரம்பித்தார். கிளர்ச்சிச் செய்ததற்காக ஆகஸ்ட் 9-ம் தேதி காந்தி கைது செய்யப்பட்டுப் புனேயில் உள்ள ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். முக்கியத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். 

இந்தச் சூழலில்தான் காந்தியின் கோட்பாடுகளையும் அறிவிப்புகளையும் இந்தியா முழுதும் நடந்த சுதந்திர எழுச்சி தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவும் பாபுபாய் பட்டேல் என்பவருடன் இணைந்து ‘சுதந்திரக்குரல்’ வானொலி ஒலிபரப்பினை உஷா மேத்தா தொடங்கினார். 

காங்கிரஸ் ரேடியோ என்றும் ரகசிய ரேடியோ ஒலிபரப்பு என்றும் மக்களிடத்தில் அறியப்பட்ட ‘சுதந்திரக்குரல்’ 88 நாட்கள் மட்டுமே செயல்பட்ட 'ஹாம் ரேடியோ’ ஆகும். வெள்ளியர்களின் கெடுபிடி அதிகமாக இருந்ததால், தெரிந்தவர்கள் வீடுகளில் வைத்து மாறி மாறி வானொலி செய்திகள் மக்களுக்குப் பகிரப்பட்டது. சிட்டகாங் ஆயுதத் தகர்ப்பு, ஜாம்ஷெட்பூர் போராட்டம் உள்ளிட்ட தகவல்கள் மக்களைச் சென்றடைந்தது. இந்த வானொலிக்கு குரல் கொடுத்தவர் இராம் மனோகர் லோகியா ஆவார். 

“ “வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டத்தின் மூலம், நாங்கள் புரட்சியாளர்களாக மாறுகிறோம். அனைத்திந்திய தேசிய ஒருமைப்பாடு சார்ந்த புரட்சி இது. ஆங்கிலேய அரசாங்கத்தை எரித்துச் சாம்பலாக்கும் வரை ஓய மாட்டோம்” இவ்வாறு எழுச்சி உரைகள் வானொலியின் வழி மக்களின் நரம்புகளில் பாய்சப்பட்டன. 

இராணுவத்தினர் ஒலிபரப்பு மையத்தை முற்றுகையிட்டு உஷா மேத்தாவை கைது செய்தனர். ரகசிய வானொலி பற்றிய தகவல்களை வெளியிட கோரி கடுமையான தண்டனைகளைக் கொடுத்தனர். மூட்டைப்பூட்சி தொல்லை, மலவாடை வீசும் அறையில் வைத்திருத்தல் எனப் பல்வேறு விதமாகக் குறுக்கு விசாரணை என்ற பெயரில் துன்பங்களைக் கொடுத்தனர். ஆனால், உஷா மேத்தாவிடமிருந்து எவ்வித தகவலையும் பெற முடியவில்லை.

 நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். வரலாற்று வீராங்கனையான உஷா மேத்தாவிற்கு 1998-ல் பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு அவர் இயற்கையை எய்தினார். 



நாட்டு சுதந்திரத்திற்காகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது என்பது சாதாரண விஷயமல்ல. அதேபோல் சுதந்திரமடைந்த ஒரு நாட்டைத் தூர்வாருதல் என்பதும் சுலபமான விஷயம் அல்ல. நான் உஷா மேத்தாவையும் மரியா சின்-னையும் இந்த இடத்தில்தான் இணைத்துப் பார்க்கிறேன். 

(நன்றி: ‘சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்’ புத்தகம், http://malaikakitham.blogspot.my/2013/02/blog-post_6.html 
இணையத்தளம்

நன்றி: http://www.oodaru.com/?p=10418#more-10418
நன்றி : றஞ்சி மா

மலேசியாவை அதிர வைக்கும் 5.0! - மலேசியப் பெண்கள் எழுச்சி

“தற்கொலை செய்துகொள்ளவிருந்த மூன்று இளம்பெண்களின் வழக்குகளை நான் கையாண்டேன். இதில் இரண்டு வழக்குகள், பெற்ற தந்தையே தன் மகள்களை பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்தியது தொடர்பானவை. அந்தக் கொடுமையை அப்பெண்கள் தங்கள் அம்மாக்களிடம்கூட சொல்ல முடியாத சூழ்நிலை. இந்த மனஉளைச்சலில்தான் அப்பெண்கள் தற்கொலை முடிவெடுத்தார்கள். மூன்றாவது தன் தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள, அதன் பிறகு நிராதரவாக விடப்பட்ட நிலையில், மகள் எடுத்த தற்கொலை முடிவு தொடர்பான வழக்கு.

இந்த மூன்று வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கியபோது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 15 வயதிலிருந்து 19 வயதுக்குட்பட்ட அந்தப் பெண்களுக்கு இந்த நாட்டுச் சட்டம் பாதுகாப்பு வழங்கவில்லை, கல்வி அவர்களுக்கு உதவவில்லை, சமூக அமைப்புகள் ஆதரவளிக்கவில்லை என்பதை நான் அப்போதுதான் உணர்ந்தேன்”
- மரியா சின்.
மரியா சின், தற்போது உலகத்தின் பார்வையை மலேசியா பக்கம் திருப்பியிருக்கிறார். மலேசியாவில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும் தன்னுடைய இயக்கத்தின் 5.0 பெர்சே எனும் பேரணியை (Bersih 5.0 Movement) முன்னெடுத்தற்காக ‘சோஸ்மா’ பாதுகாப்புக் குற்ற (சிறப்பு நடவடிக்கை)  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தனிமைச்சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மக்கள் பேரணியை முன்னெடுக்கும் போதெல்லாம் போலீஸ் காவலால் தடுக்கப்படுவதும், விசாரிக்கப்படுவதும் தொடர்ந்து மலேசியர்கள் காணும் நிகழ்வுதான். மலேசிய அரசு சாசனத்தின் பத்தாவது  கோட்பாடு, அமைதியான முறையில் பேரணி நடத்துவதற்கு சட்டம் வகை செய்கிறது என்கிறது. அதோடு, 2010-ம் ஆண்டுக்கான சட்டத் திருத்தத்தில் ஒரு பேரணியை நடத்துவதற்கு (உரிமம்) அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், 10 நாட்களுக்கு முன்னதாக போலீஸிடம் அதுகுறித்து தெரிவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் மலேசியாவில் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிபடுத்துவதற்கும் பேரணி நடத்துவதற்கும் பெரிய போராட்டமே செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் உண்மை. அரசின் இந்த நிலைப்பாட்டையும் எதிர்த்தே பெர்சே பேரணியில் குரல் எழுப்பினார் மரியா சின்.
மரியா சின் லண்டனில் 1956-ம் ஆண்டு பிறந்தார். அப்போது பெற்றோர் இட்ட பெயர் மேரி சின் சீன் லியான். லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் செயல்முறை வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டமும், நகர திட்டமிடல் துறையில் எம்.எஸ்சி பட்டமும் பெற்றார். திருமணத்துக்குப் பின் இஸ்லாம் மதத்தை தழுவினார். கணவர், பாலஸ்தீன விடுதலை முன்னணிப் போராளி என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே மனித உரிமைக்காக குரல் கொடுத்து வந்தனர். 1974-ம் ஆண்டிலிருந்து போராட்டங்களும் சிறைச்சாலைகளும் இவர்களின் குடும்ப வாழ்க்கையோடு ஒன்றாயின.சிறுநீரக செயலிழப்பு காரணமாக, 2010-ம் ஆண்டு கணவர் மரணமடைந்தார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது 60 வயதை கடந்திருக்கும் மரியா சின், கடந்த ஆண்டு பெர்சே அமைப்பில் நடந்த தேர்தலில் தலைவியாக வெற்றி பெற்றார்.

பெர்சே பேரணி
‘பெர்சே’ என்றால் மலாய் மொழியில் சுத்தம், தூய்மை என்று அர்த்தம். நாட்டின் தேர்தல் தூய்மையாக நடத்தப்பட வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையோடு வடிவம் கொண்ட அமைப்புதான் பெர்சே. பெர்சே 1.0 போராட்டம் 2007-ம் ஆண்டு ஆரம்பித்தபோது நாட்டு மக்களிடத்தில் பெரிய தாக்கத்தையோ அழுத்தத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக அது அமைச்சரவையில் கேள்வி கேட்கப்பட்டு தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு மிரட்டலாகவும் எச்சரிக்கையாகவும் மட்டுமே அமைந்தது.
2011-ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பெர்சே 2.0 பேரணி மற்றும் 2012-ம் ஆண்டு நடந்த பெர்சே 3.0 பேரணி இரண்டும், மாபெரும் மக்கள் போராட்டமாக அரசே எதிர்பார்க்காத அளவுக்கு வெடித்தது. அந்தப் பேரணிக்கு வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசன் தலைமை தாங்கினார்.
கடந்த ஆண்டு பெர்சே அமைப்பில் நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற மரியா சின், பெர்சே 4.0 பேரணியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுச்சிப் பேரணியாக வடிவமைத்தார். தொடர்ந்து 34 மணி நேரம் இலக்கு வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இரு நாட்கள் இளைஞர்களும் யுவதிகளும் நாட்டு பிரதமர் மேல் அதிருப்தி கொண்டவர்களும், வேறு வேலை எதிலும் ஈடுபடாமல் ஒரே நோக்கத்துக்காக கைகோத்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது நடந்து முடிந்திருக்கும் பெர்சே பேரணி 5.0 க்கும் மரியா சின் தலைமை ஏற்றிருந்தார்.
அனைத்து மலேசியர்களுக்குமான இந்த பெர்சே போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட 5 கோரிக்கைகள்..
1. தூய்மையான தேர்தல்
2. தூய்மையான அரசாங்கம்
3. நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்
4. எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை
5. சபா மற்றும் சரவாக் ஆகிய இரு மாநிலங்களையும் மேம்படுத்துதல்
இந்தப் பேரணியின் தலைவி என்ற ரீதியில் மரியா சின்னும், அவருக்கு ஆதரவு தெரிவித்த மேலும் 10 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மரியா இன்னும் விடுவிக்கப்படாமல் ஜன்னல் இல்லாத தனிச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சோஸ்மா சட்டத்தின் கீழ் 28 நாட்கள் அவர் சிறையில்  வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் தற்போது மரியா சின் விடுதலை குறித்த போராட்டம் பெண்கள் போராட்டமாக மாறிவருகிறது. ‘ஒரு பெண்ணுக்கு நீதிக்காகவும் நாட்டுக்காகவும் குரல் எழுப்புவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது.  எவ்வித குற்றமும் செய்யாத மரியா சின் விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையேல் நாங்கள் அனைவரும் மரியாவாக மாறுவோம்‘ என பெண்கள் அமைப்புகள் அணி திரண்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மலேசியப் பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மரியா சின் மாறி வருகிறார்.
நன்றி: விகடன். http://www.vikatan.com/news/world/73427-50-protest-women-led--in-malaysia.art 25.11.2016

திங்கள், 7 நவம்பர், 2016

சாதியமே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது..!
















ஆதவன் தீட்சண்யாஒரு சராசரி மனித நிலையில் இருந்துகொண்டு, அதையும் தாண்டி சிந்திக்ககூடியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழ் ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஒன்றி இயங்கி வருகிறார். சாதி மறுப்பு இலக்கியம் என்கிற வகைமையை முன்னெடுக்க விரும்பும் இவரது கணக்கில் இருப்பவை கதை, கவிதை, கட்டுரை நேர்காணல் மற்றும் நாவல் என 14 நூல்கள்.  
நம் முன்னே கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன, கடுகளவேனும் செய்து கொண்டிருக்கிறோமா எனும் ஆதவன் தீட்சண்யா(அண்ணா)விடம் நான் செய்யும் இரண்டாவது நேர்காணல் இது என்பது குறிப்பிடதக்கது.

மலேசியாவுக்கு இது உங்களின் நான்காவது பயணம்இந்த நாட்டைப் பற்றிய உங்களது பார்வை என்ன?

நான்கு முறை வந்திருக்கிறேன் என்றாலும் ஒரு நாட்டைப் பற்றி அபிப்ராயம் சொல்லுமளவுக்கு இங்கு எதையும் உற்று கவனித்திருக்கிறேனா என்கிற சந்தேகம் எனக்குள்ளதுஅழைத்துவந்த நண்பர்கள் கூட்டிப்போகும் இடங்களையும் மனிதர்களையும் பார்த்தேன் என்பதன்றி சுயேச்சையாக நான் எதையும் யாரையும் பார்க்கவில்லை என்கிற உண்மையை கணக்கில் கொண்டால் இந்த சந்தேகம் சரியெனவேப்படுகிறது. ஆனால் எடுத்தயெடுப்பில் சொல்வதானால், மிக அழகான இயற்கையமைப்பைக் கொண்டதாக தெரிகிறது மலேசியா. எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும் சாப்பாட்டுக்கடைகள், அவற்றில் நிரம்பி வழியும் கூட்டம், வகைவகையான உணவுவகைகளையும் பானங்களையும் கொண்டாடி உண்ணும் ரசனை, ஒருவரை பார்த்ததும் பசியாறியாச்சா?’ என்று விசாரிக்கும் உபசரணை என்று எனக்கு பிடித்த விசயங்கள் அநேகம் உள்ளன.

தலைநகரத்திலும் நாடு நெடுகிலும் அகன்று நீண்டிருக்கும் நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், தொடர்வண்டிப்பாதைகள், கார் உள்ளிட்ட வாகனங்கள், விண்ணை முட்டும் கட்டிடங்கள், பிரமிப்பூட்டும் வணிகப் பெருவளாகங்கள் ஆகியவையெல்லாம் ஒரு நாட்டின் வளர்ச்சியைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டால் உங்கள் நாடு வளர்ந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஆனால் இந்த வளங்கள், சொத்துகள், கட்டமைப்புகள், வசதிகள், அதிகாரங்கள் போன்றவற்றை நீதியாக பகிர்ந்து கொள்வதை நோக்கி உங்கள் சமூகம் இன்னமும் முன்னேறவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அதற்கான கருத்துருவாக்கம் மற்றும் செயலாக்கத்தில் அக்கறையோடு ஈடுபடும் அமைப்புகளைக் காண்பதும் அரிதாகவே இருக்கிறது

பொதுவெளியில் பெண்களின் நடமாட்டத்தை பெருமளவில் காணமுடிகிறது. இது பெண்கள் சுயேச்சையாக தேர்ந்துகொண்டதா அல்லது பெருகிவரும் வாழ்க்கைச் செலவினங்களை ஈடுகட்டும் வகையில் குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்கான கட்டாயத்தில் ஏற்றுக்கொண்டதா என்பதை நீங்கள்தான் சொல்லமுடியும்.

பல்லினங்கள் வாழும் மலேசியச் சமூகத்தில் அவ்வவற்றுக்குள்ளும் அவற்றுக்கிடையிலுமான இணக்கமும் பிணக்கும் எவற்றின் அடிப்படையிலானது,   அவற்றினூடாக உங்கள் சமூகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் சொல்வதற்கு எனது விருந்தாளிப் பயண அனுபவங்கள் போதுமானவையல்ல.

சிறுகதை, கட்டுரை, கவிதைகள்புதுவிசை ஆசிரியர் குழுவில் அங்கம் என  தொடரும் உங்கள் பணிகளில் பேச்சாளராகவும் களப்போராளியாகவும் இருக்கீங்க. எழுதுவதற்கும் களத்தில் இயங்குவதற்குமான செயற்பாட்டை குறித்து சொல்லுங்க.

பேச்சாளர் என்ற வகைமைக்குள் நான் வரமாட்டேன். எனது அனுபவங்களையும் படித்து உள்வாங்கியவற்றையும் பகிர்ந்துகொள்வதிலும் அது சார்ந்து உரையாடுவதிலுமே நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். களப்போராளி என்று குறிப்பிடும்படியாகவும் நான் எதையும் செய்து கொண்டிருக்கவில்லை என்கிற அப்பட்டமான உண்மையை உங்கள் வழியாகவாவது சொல்லிவிட வேண்டுமென நினைக்கிறேன். அதிகாரம், அடக்குமுறை, மனிதவுரிமை மீறல் எங்கெங்கு நடந்தாலும் தலையிலே தீப்பிடித்துக் கொண்டாற்போன்ற பதற்றத்துடன் களத்திற்கு செல்கிற போராளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவம், அவர்களுக்கு தாங்கள்தான் போராளிகள் என்று சொல்லிக்கொள்ள தெரிவதில்லை அல்லது உரிமை கோர அவர்கள் விரும்புவதில்லை. அவர்களது நேரடிப் போராட்டங்களைப் பற்றி எப்போதாவது எழுதுவதாலோ என்னவோ என்னைப் போன்றவர்களுக்கு களப்போராளி  என்கிற பட்டம் சிரமமின்றி இலவசமாக கிடைத்துவிடுகிறது.   

வருடத்தில் 52 ஞாயிற்றுக்கிழமைகள், 12 நாட்கள் தற்செயல் விடுப்பு, 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 15 நாட்களுக்கு அரைச்சம்பள விடுப்பு, 17 நாட்கள் பொதுவிடுமுறை என்று  எவ்வித வருமான இழப்புமின்றி ஊர் சுற்ற கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாக நான் பயன்படுத்திக் கொள்கிறேன். வார ஓய்வுநாள் அல்லது விடுமுறை நாட்களில் மிக அரிதாகவே வீட்டில் இருப்பேன். (மற்ற நாட்களில் வீட்டில்தானே இருக்கிறேன்?). இலக்கிய அமைப்புகள் அல்லது மக்கள் இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குறைந்தபட்சம் வாரத்தில் ஒருநாளாவது வெளியூர்களுக்கு சென்றுவருகிறேன். அவ்வளவுதான். தமிழ்நாட்டின் போக்குவரத்து நிலைமைகளை அனுசரித்துப் போய் நிகழ்வுகளில் பங்கெடுத்துவிட்டு திரும்புவதில் ஏற்படும் அற்பச்சிரமங்களை சிலர் களப்போராட்டம் என்று மிகைப்படுத்தி அலட்டிக்கொள்கிறார்கள். பயணம் போவதையும் நிகழ்வுகளில் பங்கெடுப்பதையுமே போராட்டம் என்பதாக புரிந்துகொண்டிருப்பவர்கள், அதில் ஏற்படும் சில அசௌகரியங்களைப் பொறுத்துக்கொள்வதையே தியாகம் போல கற்பிதம் செய்துகொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, புதிய நிலப்பரப்புகளையும் மனிதர்களையும் அனுபவங்களையும் தருகிற பயணங்களும் சந்திப்புகளும் உவப்பானவை. இப்படி ஊர் சுற்றகிற நேரத்தில் உட்கார்ந்து உருப்படியாக எழுதலாம்தானே என்று கேட்கலாம். உருப்படியாக எழுத வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் நான் எழுதவதற்கே முன்னுரிமை கொடுத்துவருகிறேன். தவிரவும், உருப்படியில்லாத வேலைகளுக்கென்று நான் ஊர் சுற்றுகிறவனுமில்லை.

இதற்கு முன்பு மலேசிய  இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த நீங்கள் இம்முறை சாதியம் அறிவோம்-துறப்பதற்குஎன்று உரை நிகழ்த்த வந்தீர்கள். மலேசியாவில் இம்மாதிரியான உரை நிகழ்த்துவதற்கான காரணம் என்ன?

தமிழ்நாட்டிலிருந்து காலனியர்களால் கப்பலிலும் பன்றிப்படகுகளிலும் அள்ளிப்போட்டு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உலகின் பல நாடுகளுக்கும் தமிழர்கள்  கொண்டு செல்லப்பட்டு கொடியச் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டதற்கு பின்புலமாக இருப்பது சாதியமே. சொந்தபந்தங்களையும் பிறந்த மண்ணையும் விட்டுவிட்டு வரமுடிந்த இவர்களில் தாயகத்தோடு இன்னமும் தொடர்பினை பேணி வருகிறவர்களால் நூற்றாண்டுகளைக் கடந்தும் சாதியை விட்டுவிட முடியவில்லை என்பது பேரவலம்தான். பெருந்தோட்டங்கள், பணப்பயிர் சாகுபடி, சுரங்கங்கள், கட்டுமானம் ஆகியவற்றுக்காக கொண்டுவரப்பட்ட விதம், பணியிடச்சூழல், வாழ்விடம், வருமானம், சுரண்டல், ஒடுக்குமுறை, இனப்பாகுபாடு உள்ளிட்டவை இவர்கள் அனைவருக்கும் பொதுவானவை தான் என்றாலும் அவற்றுக்கூடாக இவர்கள் சாதியுணர்வை கைவிடாமல் பேணிவருகிறார்கள். தாயகத்தில் சொந்த ஊர் எதுவெனத் தெரியாதவர்கள்கூட தமது சாதியை சந்தேகத்திற்கிடமற்ற வகையில் அறிந்துவைத்திருக்கிறார்கள். இவர்கள் தமக்கென உருவாக்கிக்கொண்ட கட்சிகள், தொழிற்சங்கங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றில் சாதியமே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதை இங்கள்ள நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டிலும் இந்தியாவெங்கிலும் கடைபிடிக்கப்படுவதைப் போன்ற தீண்டாமைகளையோ வன்கொடுமைகளையோ இவர்கள் கைக்கொள்வதில்லை என்றாலும் பெரும்பாலும் சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதன் மூலம் சாதியை மறுவுற்பத்தி செய்துவிடுகிறார்கள். மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது குறைவான விகிதத்திலேயே நடக்கின்றன என்றாலும், புலம்பெயர் நாடுகளின் பூர்வகுடியினர்/ வேறு இனத்தவர் / நாட்டவர் அல்லது ஒருவேளை சாதிக்கு வெளியே திருமண உறவு ஏற்படுமாயின் அதை கலவரம் அல்லது கௌரவக்கொலையாக மாற்றாமல் கடந்துபோகிற ஒரு பக்குவத்தை எட்டியிருக்கிறார்கள். அடிப்படையில் தொழிலாளிகளாகிய இவர்களைத் தொடர்ந்து இன்னுமொரு தொகையான தமிழர்கள் வியாபாரம் அல்லது பெருநகரம் சார்ந்த நவீனத்தொழில்களுக்கான வேலைகளுக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களனைவரும் புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை சிறுபான்மைச் சமூகத்தவர்தான். சிறுபான்மைச் சமூகமாக இருக்கக்கூடிய தமிழர்கள் புலம்பெயர் நாட்டின் குடிமக்கள் என்கிற வகையிலான உரிமைகளுக்காகவும் வாழ்வியல் நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் தமக்குள்ளும், பிற இந்தியர்களோடும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் தொடர்ந்து இருத்தப்பட்டுள்ளனர் என்பதை என்னைவிடவும் நீங்கள் நேரடி அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள்

இவ்வளவுக்கிடையிலும் தாயகத்தொடர்பை பேணும் விதமாகவும் தமது சுயேச்சையான வளர்ச்சியை தாயகத்திற்கு தெரிவிக்கத் தோதாகவும் தமிழகத்திலிருந்து கலை இலக்கியவாதிகளையும் சமூக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் ஆளுமைகளையும் தங்களிடத்திற்கு அழைத்து உபசரித்து உரையாடி வருவதை தொடர்கின்றனர். ஆனால் சமீப காலமாக, தமிழகத்தில் மிகக்கொடிய சாதிய வன்கொடுமைகளை நிகழ்த்தி சமூகத்தை பதற்றத்தில் மூழ்கடித்து வருகிற அமைப்புகளின் தலைவர்களை மலேசியாவுக்கு அழைத்துவந்து தங்கள் சாதியினரை அணிதிரட்டி உசுப்பேற்றும் சீர்குலைவு வேலைகளில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சமூக நல்லிணக்கத்திலும் ஒற்றுமையிலும் அக்கறையுள்ள பல நண்பர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்த ஆபத்தை தடுப்பதற்கான தொடக்கநிலை முயற்சிகளில் ஒன்றாக மணிமொழி ஏற்பாடு செய்த சாதியம் குறித்த விவாதத்தில் பங்கெடுக்க வந்தேன். நான் நினைத்துக்கொண்டு வந்ததைவிடவும் கேடான விதங்களில் இங்கு சாதியவாதிகளின் கைங்கர்யம் இருப்பதை உரையாடல்களினூடாக உணர்ந்துகொண்டேன்.

மலேசிய திராவிட கழக ஏற்பாட்டில் நடந்த கருத்துகளத்திலும் கலந்துகொண்டீர்கள். மலேசிய திராவிட கழகத்தினரின் திராவிட கொள்கைகள்  அல்லது அவர்களின் திராவிட புரிதல்கள் ஏற்புடையதாக இருக்கிறதா?

அவர்களோடு இதுகுறித்து நான் அவ்வளவாக எதையும் உரையாடவில்லை. திராவிடம் என்கிற சொல் ஆரியர்களுக்கும் முன்பே இந்தியாவிற்குள் வந்த ஓர் இனம், பூர்வகுடிகளாகிய நாகர்களோடு கலந்து உருவாக்கிய ஒரு பண்பாட்டைக் குறிக்கிறது. பெரியார் ஒரு புகைப்படமோ சிலையோ டிரஸ்டோ அல்ல, ஆரிய வழிப்பட்ட வேதங்கள், யாகங்கள், பூஜைபுனஸ்காரங்கள், பார்ப்பனீயக் கருத்தியலை உள்ளுறையாகக் கொண்ட சாதியம், சாதியத்தின் தொகுப்பாக இருக்கிற இந்துமதம் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு கருத்தியல்

தமிழர் என்பதற்கு மறுசொல்லாகவோ அல்லது இணையாகவோ இந்து என்கிற சொல் மலேசியத் தமிழர்களால் பாவிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வந்துள்ள முஸ்லிம்களை இந்து முஸ்லிம் என்றே சுட்டுமளவுக்கு அதன் பயன்பாடு விரிகிறது. மேலும் இந்து என்பது வெறும் சொல்லாக சுருங்கிவிடாமல் சாதி, சடங்குகள், பரிகாரப் பூஜைகள், மூடநம்பிக்கைகள், அவற்றை முன்னிட்ட பணவிரயம் நேரவிரயம் என்பனவாக தமிழர்களின் மனங்களில் தங்கி அவர்களது அன்றாட வாழ்வை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. ஒருவர் கோவிலுக்குள் நுழையும் போதே ஒரு வழிபாட்டிடம் என்கிற வகையில் அங்கு நிலவும் பாகுபாடுகள், புறக்கணிப்புகள், ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றுவேலைகள் அனைத்தையும் ஒப்புக்கொள்வதாக மாறிவிடுகிறது. அதன் நீட்சியாக சமூகத்தில் நிலவும் பாரபட்சங்களையும் இயல்பானதாக ஏற்றுக்கொள்வதற்குரிய மழுங்கல்தான்மை புத்தியில் படிந்துவிடுகிறது. திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் குறுக்கீடு செய்யவேண்டிய இடம் இதுதான் என்பதை சொன்னேன். கலந்துரையாடலின் போது மிகுந்த அக்கறையோடு  எழுப்பப்பட்ட கேள்விகள், நாத்திகம் என்பது பகுத்தறிவின் ஒரு பகுதிதானேயன்றி அதுவே முழுமையானதல்ல  என்று விவாதத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தின.   

இலக்கியத்திற்காக கொடுக்கப்பட்ட  அல்லது கொடுக்கப்படும் விருதுகள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதும் விருதுகளை  மறுதளிப்பதும் அதை நகைப்பு  ஆக்குவதும்  தொடர்கிறதேவிருதுகளின் தாட்பரியம் என்ன?

விருதுகளை இலக்கிய ஆர்வமுள்ள சில நிறுவனங்கள்/ பத்திரிகைகள்/ அரசின் கீழுள்ள கலை பண்பாட்டுத்துறையால் நிர்வகிக்கப்படும் அமைப்புகள் வழங்குகின்றன. இதற்கான தேர்வுக்குழுக்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, அவற்றில் இடம்பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள் எவை என்பதெல்லாம் மூடுமந்திரம்தான். பலநேரங்களில் தேர்வுக்குழு நியமனத்திலேயே ஊழல் தொடங்கிவிடுகிற போது, அந்தக்குழுவின் பரிந்துரை எந்தளவுக்கு நடுநிலையானதாக இருக்கமுடியும்?


பொதுவாக மூத்த / பிரபல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள்/ விருது வழங்கும் நிறுவனத்திற்கு வேண்டியவர்களைக் கொண்டே விருது தேர்வுக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறான எந்தவொரு குழுவும், குறிப்பிட்ட துறையில் வெளியான அத்தனை நூல்களையும் நுணுகிப் பரிசீலித்து விருதுக்கு பரிந்துரைப்பதில்லை. விருதுக்கென அனுப்பிவைக்கப்படுகிறவற்றில் இந்த தேர்வுக்குழுவினர் தமது அப்போதைய மனச்சாய்வுகளுக்கு இயைபான நூலுக்கு அல்லது எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. மனச்சாய்வை பால், சாதி, மதம், பிரதேசம், அரசியல் போன்ற காரணிகள் உருவாக்குகின்றன. எனவே எழுத்தை விடவும் பலநேரங்களில் எழுத்தாளரே பரிசீலிக்கப்படுகிறார்.   ஆகவே, இன்னாரிடம் நைச்சியமாக இளித்துக்கிடந்தால் எதிர்காலத்தில் ஏதாவதொரு விருதுக்கு பரிந்துரைக்கப்படுவோம் என்று தனிப்பட்ட தொடர்புகளைப் பேணுவது, போலியாக விசுவாசம் காட்டுவதுஇந்த மூத்த / பிரபல எழுத்தாளர்களின் அபத்தக் கிறுக்கல்களைக்கூட ஆஹாஓஹோவென பாராட்டித்தள்ளுவது, பேராசிரியர்களின் சாரமற்ற ஆய்வுகளை நுண்மான் நுழைபுலம் மிக்கது எனப் புகழ்வது போன்ற கொல்லைப்புற வழிகளை சில எழுத்தாளர்கள் கையாள்வதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தேர்வுக்குழுவினரை கண்ணி வைத்துப் பிடித்தோ குழுவிலிருப்பவரே சக உறுப்பினர்களை தமக்கு சாதகமாக வளைத்தோ தான் ஒருவருக்கு விருது தரப்படும் என்றால் அதன் மதிப்பு அந்தளவுக்கானதுதான் என்று ஒதுக்கிவிட்டுப் போகவேண்டியதுதான்விருதுகளால் சம்பந்தப்பட்ட எழுத்தாளர் அல்லது நூல் மீது வாசகர்களின் கவனம் குவிவது போல தோன்றினாலும் உண்மையில் அவர்கள் சொந்த வாசிப்பின் மூலமே அதன் இலக்கியப் பெறுமதியை தீர்மானிக்கிறார்கள்.

நன்றி : தென்றல் வார இதழ் (மலேசியா) (6.11.2016)
நன்றி: ஆசிரியர் வித்தியாசாகர்
நன்றி : ஆதவன் அண்ணா