புதன், 21 செப்டம்பர், 2016

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 3

28.8.2016
பெண்கள் சந்திப்பில் இன்று மிக முக்கியமான நாள். மலேசிய பெண்களின் உரையாடல்களையும் அவர்களின் சிந்தனையும் விவாதத்தையும் பொதுவில் வைக்கும் நாள். எங்களின் குரல்களை இன்று இந்தியாவும் அஸ்ரேலியாவும் இலங்கையும் கேட்க போகிறது. அதற்காக நான் தேடி தேடி தேர்வு செய்த பெண்கள் ஆளுமைகள். யாரும் பெரிய அளவில் வெளியில் அறியப்பட்ட பெண்கள் இல்லை என்றாலும் மலேசிய நாட்டிற்குள் அவர்கள் அனைவரும் ரொம்ப முக்கியமானவர்கள். அவர்கள் அனைவரையும் தனித்தனியே அறிமுகம் செய்து வைக்கும் கடப்பாடும் எனக்கு இருக்கிறது. அதற்கு முன்பு இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு கட்டுரைகளைச் சமர்பிக்க வேண்டும் எனக் குறைந்தது 50 பெண்களிடமாவது பேசியிருப்பேன்.

தற்போது இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பெண்களையும், மூத்த பெண் இலக்கியவாதிகள் சிலரையும்கூட நான் அணுகியிருந்தேன். அது ஒரு நல்ல அனுபவம் எனக்கு. எனக்குப் பயமா இருக்கு? எப்படிப் பேசுவது? வேறு யாரிடமாவது கேளுங்க? கொஞ்சம் யோசிக்க நேரம் கொடுங்க, நான் பேசவில்லை இப்படியாக  என் மலேசிய பெண்கள் கொடுத்த பதில்களில் நான் ஆச்சரியபட மாட்டேன். எம் பெண்களின் பெருந்தன்மையைப் பேசுவது எனக்கே மிகச் சங்கடமாக உள்ளதால் நான் கேட்டுக்கொண்டவுடன் பேசுகிறேன் என உடனே சம்மதம் தெரிவித்த தோழிகளை மிகப் பெருமையுடன் அறிமுகம் செய்துவைக்க  கடமை பட்டுள்ளேன்.

                                       
YB காமாட்சி


மலேசிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். (எதிர்க்கட்சி) சட்டமன்ற உறுப்பினர். சட்டமன்றத்தில் தமிழில் திருக்குறள் சொல்லி பதவி ஏற்ற முதல் தமிழ் பெண்.










ப.பிரேமா (டீச்சர்)
ம.இ.கா கட்சியின் வட்டார தலைவி. தேசிய முன்னணி (ஆளும் கட்சி) ஆதரவாளர். இடைநிலைப் பள்ளியின் ஆங்கிலக் கல்வி ஆசிரியை.








பி.எஸ்.எம் சிவரஞ்சனி
வணிக நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அகதிகளுக்குச் சட்ட ஆலோசனை வழங்கும் ஒரு அரசாங்க சார்பற்ற அமைப்பில் பணி புரிகிறார். மலேசிய சோசியலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் - தொழிலாளர் ஒருங்கிணைப்புப் பிரிவில் இருக்கிறார்.




ரமேஸ்வரி ராஜா

வட்டார நிருபர். ‘தென்றல்’ வார இதழின் ஆசிரியர் பிரிவிலும் இருக்கிறார்.










இவர்களோடு நானும் அன்றைய சந்திப்பை தொடங்குவதற்கு தயாரானோம்.
சிவரஞ்சனி, ரமேஸ்வரி  மற்றும் பிரேமா டீச்சர் ஆகியோர் முதல் நாள் நிகழ்ச்சியிலிருந்தே உடனிருப்பதால் அனைத்து தோழிகளிடத்திலும் சகஜமான சூழலை கொண்டிருந்தனர். ஆனால், சட்டமன்ற உறுப்பினரான YB காமாட்சி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்காகவே அவரது முக்கியமான கட்சி சந்திப்பை தியாகம் செய்துவிட்டு வந்திருந்தார். YB
காமாட்சியை நான் முதற்முறையாகச் சந்தித்கிறேன் என்பதும் குறிப்பிடதக்கது. YB என்றால் ( Yang Berbahagia)  மலாய் மொழியில் மாண்புமிகு என்று அர்த்தம். அதற்கு தகுந்த மாதிரி எந்த ஒரு பந்தாவும் இல்லாதவர் காமாட்சி.

‘மலேசிய ஊடக பெண்களும் ஊடகத்தில் பெண்களும்’ என்ற தலைப்பில் நானும் (யோகி)
‘மலேசியாவில் தனித்து வாழும் தாய்மார்கள்’ என்ற தலைப்பில் சிவரஞ்சனியும்
தமிழ்பெண்களின் அரசியல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் YB காமாட்சியும்
மலேசிய தமிழ் சமூகத்தில் தமிழ் சினிமாக்களின் பாதிப்பு என்ற தலைப்பில் பிரேமா டீச்சரும் கட்டுரைகளைச் சமர்பிக்க
‘நான் யார்?’ என்ற தலைப்பில் ரமேஷ்வரி கவிதை வாசித்தார். எங்கள் சந்திப்புக்கு றஞ்சி தலைமை தாங்கினார்.


மலேசிய பெண்களின் அமர்வில் மூன்று கட்சிகளைச் சேர்ந்த பெண்களின் கட்டுரைகளும் விவாதங்களும் அது தொடர்பான அவர்களின் பதில்களும் வந்திருந்த அயல்நாட்டு தோழிகளைக் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக YB காமாட்சி, ஆளுங்கட்சி அரசாங்கம் பெண்களுக்காக வழங்கியிருக்கும் சலுகைகள் குறித்துச் சாடுவதும் அதை ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரேமா டீச்சர் முழுமையாக ஆதரிக்காமலும் சிலவற்றை ஆதரித்தும் பேசி அமர்வை தீவிர படுத்துவதும் பார்ப்பதற்கு ஒரு அரசியல் கட்சி பிரச்சாரம்போலச் சூடு பிடித்திருந்தது விவாதம். தோழிகள் எழுப்பிய கேள்விகளில் மலேசிய அரசியல் நிலைபாடு குறித்தும் அரசாங்கத்தைக் குறித்தும் ஏறக்குறைய தெரிந்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது என்றே உணர்கிறேன். அதற்காகவே ஒரு கட்டுரைக்கு பின்பான கேள்வி பதில் அங்கம் அவசியமாகிறது என்பதை உணரவும் செய்கிறேன்.

தொடர் உரையாடலில் உஷ்ணம் தெரிக்கச் சின்னச் சின்னதாக மழைத்துளிகள் தூவத்தொடங்கிப் பின் பெருமழையாகப் பொழிய தொடங்கியது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடந்த வருடத்தின் பெண்கள் சந்திப்பின் போதும் இலங்கையில் மழை எங்களைத் தேடி வந்தது.

மழை பெண்களுக்கானதான ஒன்றோ எனப் பல தடவை சிந்தித்திருக்கிறேன். மனச்சங்கடங்களின்போது வரும் மழை, ஏன் மனதை ஆசுவாசப்படுத்துகிறது? ஒரு துயரத்தின் போது வரும் மழை, ஏன் பெருந்துயரத்தையே அள்ளி கொட்டுகிறது? ஒரு காத்திரமான உரையாடலை வைக்கும்போது வரும் மழை, ஏன் இன்னும் வீரியம் கூட்டுகிறது? மழையின் வேகமும் அமைதியும் அதன் சாரலில் தெரிக்கும் தாய்மையும் குழந்தை தனமும் எல்லாம் பெண்களுக்கானதேதான். எனக்கு எந்த சந்தேகமுமில்லை.
வெளுத்து கட்டிய மழை எங்களுக்கு எந்த இடையூரையும் செய்யவில்லை. எங்களின் நெருக்கத்தை அதிகப்படுத்தியே சென்றது.


அந்த நெருக்கத்தினூடே,  நான் எழுதிய ‘யட்சி’ கவிதை தொகுப்பு மறுவெளியீடு செய்யப்பட்டது. ‘யட்சி’ குறித்த அறிமுகத்தைப் புதிய மாதவி செய்தார். மிக மிக அழகான அறிமுகம் அது. ‘யட்சி’ என்றால் யார் நினைவுக்கு வருகிறார் என்ற கேள்விக்குத் தோழிகளிடத்தில் யோகிதான் நினைவுக்கு வருகிறார் என்ற பதில் என்னை நிலைக்கொள்ளாமல் செய்தது.   மேலும் ‘யட்சி’ என்பவள் யார் என்ற விளக்கம் புதியமாதவி குரலில் கூற கேட்பது தெரிந்த விஷயங்கள்கூடப் புதியதாகக் கேட்பதைபோலச் சூழலை ஏற்படுத்திவிட்டிருந்தது.

நான் எழுதிய வரைபவனின் மனைவி கவிதையும், மந்தரப்பு ஹேமாவதி என்ற தெலுங்கு மொழிக்கவிஞர் எழுதியிருக்கும் "கவிஞனின் மனைவி" என்ற கவிதையுடன் புதியமாதவி  ஒப்பிட்டு பேசினார்.  'கவிஞனின் மனைவி' கவிதையின் கடைசி வரிகள் இப்படி முடியும்: நான் இனி கவிதைப் பெண் கமலாதாசாக ஆகவே முடியாது. நான் ஒரு கவிஞனின்மனைவி மட்டும் தான்". யோகியின் கவிதையில் "நான் இன்னும் வரைபவனின் மனைவியாகவே இருக்கிறேன்" என முடியும் என புதியமாதவி முடித்தபோது தோழிகளிடத்தில்  ஒரு உற்சாகம் எழுந்தது.

மேலும் தனது அடையாளங்கள் குறித்துப் பல பெண்கள் பதிவுகளில்பே சியிருப்பதைக் குறித்தும் புதியமாதவி சுட்டிக்காட்டியபோது தோழிகள் அதை ஆமோதிக்கவே செய்தனர்.  ‘யட்சி’ அறிமுகத்திற்குப் பிறகு YB காமாட்சி அதை வெளியீடு செய்யப் பிரேமா டீச்சர் அதைப் பெற்றுக்கொண்டதும் என் வரையில் ஒரு வரலாற்று நிகழ்வாகவே காண்கிறேன். மிக அழகான புத்தகவெளியீடு எனக்கு நடந்ததுபோல வேறு யாருக்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை.


தொடர்ந்து அடுத்த அங்கமாக இந்தியாவிலிருந்து வந்த தோழிகளின் அமர்வு தொடங்கியது.
‘வழக்குகளில் பெண்கள் எதிர்கொள்கின்ற சவால்கள்’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் ரஜனியும்
‘அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் மாலதி மைத்ரியும்
‘பெருநகர வாழ்வில் தனியறை’ என்ற தலைப்பில் புதிய மாதவியும்
‘புலப்பெயர்வும் துவிதவெளியில் பெண்களும்’ என்ற தலைப்பில் ஆஸ்ரேலியாவை சேர்ந்த ஆழியாளும் தங்கள் கட்டுரைகளை முன் வைத்து உரை நிகழ்த்தினர். மிகக் காந்திரமான தலைப்புகளுக்கு ஏற்றமாதிரி அவர்களின் கட்டுரைகளும் காந்திரமாகவே அமைந்தது. மேலும், கேள்வி-பதில் அங்கமும் இந்த அமர்வில்தான் நீண்ட நேரம் பகிரப்பட்டது.


இந்தப் பெண்கள் சந்திப்பில் முக்கிய அங்கமாகவும் குறிப்பிட வேண்டிய அங்கமாகவும் அமைந்தது இறுதி அமர்வு. இலங்கையைச் சேர்ந்த அன்பு தோழி யாழினி நடத்திய கவிதை கூத்து. சில பெண்ணியக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பறையிசை வழங்கி தனது குரலிலேயே பாடி பதிவு செய்து அதைக் கூத்தாகவும் நடத்திக் காட்டினார். யாழியின் இந்தத் தனித்த நடனமும் முயற்சியும் நிச்சயமாகச் சிலாகிக்கக் கூடிய ஒன்றாகும். இந்த உழைப்புக்குப் பின் புதியமாதவி ஆலோசகராகச் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடதக்கது.

இப்படியாக 2016-ஆம் ஆண்டுக்கான ஊடறுவின் பெண்கள் சந்திப்பு இறுதிநிலையை எட்டியது. பல புதிய சொந்தங்களைச் சந்தித்த மகிழ்ச்சியிலும் புதிய தகவல்களைப் பெற்ற திருப்தியிலும் மலேசிய தோழிகள் அன்றைய நாளை முடித்துக் கொண்டு விடை பெற்றனர்.


அன்றைய இரவு அந்தத் தேய்நிலா மங்களான வெளிச்சத்தில் மேகத்திற்கிடையில் மறைந்துக்கொண்டிருந்தது.

(தொடரும்)


6 கருத்துகள்:

  1. Great to know this great effort!Long live Tamil women's unity,dialogue,happiness, understanding,HR,freedom,safety & progress everywhere in this wonderful/dangerous world!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார். என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் உடன் வருகிறீர்கள். நன்றி

      நீக்கு
  2. யட்சி’ என்றால் யார் நினைவுக்கு வருகிறார் என்ற கேள்விக்குத் தோழிகளிடத்தில் யோகிதான் நினைவுக்கு வருகிறார் என்ற பதில் என்னை நிலைக்கொள்ளாமல் செய்தது.///


    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அருண்... தொடர்ந்து என் எழுத்தோடு பயணிப்பது மகிழ்ச்சி

      நீக்கு