திங்கள், 27 ஜூன், 2016

கெர்த்தேவின் மடியில் 2

 திரெங்கானு மாநில சதுப்பு நிலக் காடுகளில் செழித்து வளரும் ‘பாக்காவ் மரங்களின் சிறப்புத் தன்மைகளையும் , அதன் முக்கியத்துவத்தையும், அதை எப்படி நடுவது, எப்படிப் பராமரிப்பது போன்ற விவரங்களை இயற்கையை நேசிப்போர் சங்கத்தினர் சொல்லிக்கொடுப்பதுடன், இந்த மையத்திற்கு வருகையளிப்பவர்களைச் சதுப்பு நிலக்காட்டினுள் அழைத்துச் சென்று அவர்களையும் இத்திட்டத்தில் ஈடுபடவைக்கின்றனர். தெளிவான விளக்கங்களுடன் பார்வையாளர்களுக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்கும் தெளிவான பதிலை வழங்குகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திருக்கும் இந்த மையத்திற்கு மாணவர்கள், பெருநிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், இயற்கை ஆராய்ச்சியை மேற்கொள்பவர்கள் , வெளியூர் பயணிகள் என அதிகமானோர் வருகையளிக்கின்றனர். நான் சென்ற  சதுப்பு நில வன அனுபவம் என்றும் மறக்க முடியாதது. கெர்த்தே நதியைச் சந்திக்கும் சதுப்பு நிலக்காட்டுக்குள் ( Hutan Paya Bakau) 30 வகையான வெவ்வேறு தன்மை கொண்ட அரிய வகை வனமரங்களும் மலர்களும் அதன் ஈர வாசம் மாறாமல் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. அந்த மரங்கள் குறித்தும் அதன் பயன்பாடு மற்றும் மருத்துவக் குணங்களைக் குறித்தும் நமக்கு விளக்கமளிக்க ஏற்பாட்டாளர்கள் தயாராக இருக்கின்றனர். சேறும் சகதியும் நிறைந்த அந்தக் காட்டிற்குள் நடப்பதற்குக் கஸ்டமாக இருந்தாலும் , நகரத்தின் இரைச்சலுக்கும் கூச்சலுக்கும் அப்பாற்பட்டு அமைதியான ஓரிடத்தில் இருப்பது எல்லாக் கஸ்டங்களையும் விழுங்கக்கூடியதாக இருந்தது. புதிய இடத்தில் புதிய விஷயங்களையும் புதிய சூழலையும் அனுபவிக்கும்போது சலிப்பு ஏற்படுமா?

மழை இல்லாவிட்டாலும் ஈரமாகவே இருக்கும் அந்தச் சூழலில், மாலை வேளையில், கெர்த்தேவின் நதிக்கரையில் அதன் மடி சாயவேண்டும். வெடித்து அழத்தோன்றும். கண்ணீர் வடிந்து தீர்ந்தபின் மனம் கரைந்த அந்தக் கனத்தில் நதிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் ‘ஒற்றைக் கொடுக்கு நண்டுகள் (soft shell) விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ஆமை, நத்தை எனப் பலதரப்பட்ட சிறு உயிரினங்கள் எவ்வித இடையூரும் பயமுமின்றித் திரிவதைப் பார்த்துகொண்டிருக்க மனம் இலகுவாகி காற்றில் மிதந்து கொண்டிருக்கும்.

சுற்றுப் பயணிகள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அறை நிச்சயமாக மலேசியவாசிகளுக்குப் புதிய அனுபவத்தைத் தரலாம். இயற்கையுடன்கூடிய இயற்கை வாழ்கையை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வனத்தின் நடுவில் நதிக்கரையின் அருகில் குடிலை அமைத்திருக்கிறார்கள்.

அங்கிருந்து 15 நிமிடம் கெர்த்தே நதியில் படகில் பயணம் செய்தால் மின்மினி பூச்சிகள் சங்கமித்திருக்கும் இடத்தைச் சென்றடையலாம். ‘lampyridae’ என்று சொல்லக்கூடிய பூச்சி குடும்பத்தின்  இரு இன மின்மினி பூச்சிகள் அவை. காட்டிலுக்கும் ஒருவகை மரத்தின் வாசம் அப்பூச்சிகளை வசியப்படுத்தி அங்கு நங்கூரம் போடவைத்துள்ளன.

சுமார் 14 நாளிலிருந்து 18 நாட்கள் வரை மட்டுமே உயிர்வாழும் மின்மினிப் பூச்சியின் ஆண் இனம் தன் உடலிருந்து அதிகமாக வெளிச்சத்தை வெளிப்படுத்தி பெண் மின்மினி பூச்சிகளை இனவிருத்திக்கு அழைக்கிறது உள்ளிட்ட விவரங்களை வழிகாட்டிகள் தெரிவித்தனர். ஆனால், அந்த வெளிச்சமானது நமது கண்களுக்கு விண்மீன்களாக விரிந்து அந்த இருளிலும் பேரானந்தத்தைக் கொடுக்கிறது. மின்மினிப் பூச்சிகளை ரசித்தபடி, கரம் கடலை உரச படகில் பயணம் செய்வதும், மீனவர்களின் பிடியில் சிக்கும் கடல் உயிரினங்களை அப்போதே பேரம்பேசி வாங்குவதும், அந்த அமாவாசை இரவின் ஈரக் காற்று நம்மைத் தழுவிச் செல்வதும் நம்வாழ்வில் இன்னும் ஒருமுறை நிகழாமலே போகலாம். மலேசியாவில் 8 வகையான மின்மினி பூச்சிகள் காணக்கிடைக்கிறது என்பது கொசுறு தகவல்களாகும்.

Mangrove என்று சொல்லக்கூடிய காட்டு மரங்கள் அதிகம் வளர்ந்திருக்கும் கெர்த்தே நதிக்கரையைச் சுற்றியிருக்கும் வனத்தில் காலை உதயம் மிகவும் இனிமையானது. அதற்குக் காரணம் பறவைகள் எழுப்பும் ஒலிதான். காலையிலேயே Bird Watch போவது நல்ல அனுபவம் . சரியான பெயர்கூடத் தெரியாத பல வண்ணப்பறவைகள் அந்தக் காலை நேரத்தை கலராக்குகின்றன. மரங்கொத்தி, பருந்து, கச்சன் குருவி, மழைக்குருவி என 50க்கும் மேற்பட்ட பறவைகள் நமக்கு அதன் இருப்பைக் காண்பிக்கிறன.

இந்தப் பயணத்தின் முக்கிய அங்கமாக Mangrove மரங்களை நடவு செய்யும் வாய்ப்புப் பயணிகளுக்கு வழங்கப்படுவதுதான். Mangrove மரம் ஆச்சரியமான அதே வேளையில் இயற்கை பேரிடர்களான சுனாமி, வெள்ளம், போன்றவற்றைத் தடுக்கும் வல்லமை உண்டு. சுனாமியின் போது பெரிய உயிர் சேதங்கள் உலகின் பலநாடுகளில் ஏற்பட்ட போது மலேசியாவை அது பெரிதும் பாதிக்காததற்கு இந்த Mangrove மரங்கள்தான் காரணம் என மிகத் தாமதமாகத்தான் மலேசிய மக்கள் தெரிந்துக்கொண்டனர். இந்த மரம் கடல் அலையின் வேகத்தைத் தன் வேர்கள் உதவியுடன் குறைக்கும் தன்மை கொண்டது. அதுவரை Mangrove மரங்களை வருமானத்திற்காகச் சாதாரணமாக வெட்டி விற்றவர்கள், அதன் பலனை அறிந்து மரங்களை உற்பத்தி செய்வதற்கு உதவி செய்யத் தொடங்கினர்.

Mangrove மரங்கள் தன்னைத்தானே மிக எளிதாக உற்பத்தி செய்துகொண்டு சதுப்பு காடுகளாக செழித்து வளரும் கொடைபெற்றது. மற்ற விதைகளைப் போலில்லாமல் ஒரு Mangrove விதை நிலத்தில் விழுந்து அடுத்த நொடியே துளிர் விடத் தொடங்குகிறது.  அது ஒரு அற்புதமான காட்சியாகும். கர்ப்பம் தரித்து குழந்தையை ஈனுவதுபோல, Mangrove விதை தானே நிலத்தில் வீழ்ந்து சேற்றில் சொருகி தன் இடத்தையும் இருப்பையும்  நங்கூரம் போட்டு விடுகிறது.  மண்ணில் இடம் பிடிக்காத அல்லது பிடிக்க முடியாமல் தோற்றும்போகும் விதைகள்  அலையின் உதவியோடு நதியில் பயணித்து கடல் படுகையில் இடம்பிடித்து வேர்களை ஊனிவிடுகின்றன.


Mangrove வேர்கள் பார்ப்பதற்கு இடியாப்பச் சிக்கல்கள் மாதிரி இருந்தாலும், அதன் வேர்களில்தான் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு இயங்குவதாக அண்மையில் National Geography-யில் Mangrove மரங்களைப்பற்றி  பேசுகையில் கேட்டேன். அது எத்தனை உண்மை என்று அதை நேரடியாக உணர்ந்த எங்கள் நாட்டுக்குத் தெரியும்.  கெர்த்தேவிலிருக்கும்  சுற்றுச்சூழல் கல்வி மையத்தைச் சேர்ந்தவர்கள்  Mangrove  விதைகளைச் சேகரித்து அதை  தனித்தனியா பாத்தி பைகளில் விதைத்து முளைவிட்டு வளரத்தொடங்கியதும் சதுப்பு நிலக்காடுகளில்  இடப்பெயர்ப்பு செய்து விடுகின்றனர். இந்த  வேலையில் கெர்த்தேக்கு வரும் சுற்றுப்பயணிகளை ஈடுபடுத்துவதுடன் அவர்களுக்கு நிலத்திலான  மண் சார்ந்த வாழ்கையை சில நிமிடங்களுக்காவது அனுபவிக்க வாய்ப்பு வழங்குகின்றனர்.  பரிசுத்தமான வனாந்திரத்தை இனி பார்க்க முடியுமா என தெரியவில்லை. ஆனால், எங்கோ  யாராவது ஒருவர் இயற்கையை பாதுகாக்க எடுக்கும் முயற்சியில்  ஒத்துழைக்காவிட்டாலும் அதை ஒரு முறை  பார்த்துவிட்டு விமர்சிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.  





ஞாயிறு, 26 ஜூன், 2016

கெர்த்தேவின் மடியில்

 மலேசியாவைப் பொறுத்தவரை எந்த ஓர் இயற்கை அனத்தங்களும் பெரிய பாதிப்பை கொடுத்திவிடுவதில்லை. நிலநடுக்கம், வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகள் பெரிய சேதத்தை ஏற்படுத்தாமல்  முகவும் பாதுகாப்பாக மலேசியா அமைந்திருக்கிறது. அணையாக நிற்கும் அண்டை நாடுகளை அதற்கு காரணமாக சொல்லலாம். வரும் பெரிய  ஆபத்துகளிடமிருந்து  மலேசியாவை தற்காத்து  வடிகட்டி மிச்சத்தையே அனுப்புகின்றன.

மலேசியாவில் இயற்கை அழகுக்குப் பஞ்சமே இல்லை. மலைகளும், நேரத்தையுன் காலத்தையும் கணிக்க முடியாமல் பெய்யும் மழையும், வனங்களும்,  200-க்கும் அதிகமான  பச்சை வர்ணங்களையும் இங்கே காணலாம்.   வேறு எந்த இடத்திலும்பார்க்க தவறிய  இயற்கை அழகை நீங்கள் மலேசியாவில் பார்க்கலாம். தன்னை மறைத்து வைத்து, நாம் எதிர்பார்க்காத நேரத்தில்  வெளிப்படுத்தி அதன் அழகில் மயங்க வைக்காமல்  அது விடாது.

எல்லா இயற்கை அழகையும் ஒரே இடத்தில் பார்க்ககூடிய  தோற்றம் சில இயற்கை வளங்களுக்கு உண்டு. அப்படியான ஓர் இடம்  திரெங்கானு மாநிலத்திலுள்ள கெர்த்தே எனும் இடத்திற்கும் உண்டு. பெட்ரோனாஸ் நிறுவனம் ஒரு முறை பத்திரிக்கை நிமித்தமாக ஏற்பாடு செய்திருந்த அந்தப் பயணத்தில் நான் கலந்துகொண்டேன்.
திரெங்கானு மாநிலத்தில் மேம்பாடு அடைந்து வரும் இடங்களில் கெர்த்தேவும் ஒன்று. மாலை மங்கும் அந்த மஞ்சள் வெயில் படரும் நேரத்தில் கெர்த்தேவை காண வேண்டும். காண்டா மரங்களின் வாசமும், ஈர மண்ணின் வாசமும் கலந்து பறவைகளின் ஒலியோடு நம்மை மயக்கி சாய்க்கிறது.

காடுகளை அழித்து EcoCare எனக் கதைவிட்டுத்திரியும் பெருநிறுவனங்களைக் கண்டால் அத்தனை எரிச்சலாக இருக்கிறது. தொடர்ந்து அதன் கிளைநிறுவனங்கள் நிறுவுகிறோம் எனும் பேர்வழிகள் இயற்கையை அழித்துதான் அதற்கான அலுவலகங்களை அமைத்துக்கொடிருக்கிறார்கள். நான் மீண்டும் கெர்த்தேவுக்கே வந்து விடுகிறேன்.

அதுபோல ஒரு EcoCare திட்டம் பெட்ரோனாஸ் கிமிக்கல் நிறுவனமும் செய்துவருகிறது. இந்தத் திட்டத்திற்கு முன்னதாகவே ஆரம்பித்திலிருந்தே கெர்த்தே வட்டாரத்தில்தான் பெட்ரோனாஸ் கெமிக்கல் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து வெளியாகும் இராசயனங்கள் கெர்த்தே ஆற்றையும் அங்குள்ள சதுப்பு நிலக்காடுகளையும் சேதப்படுத்தி வந்தன. ஒரு கட்டத்தில் இதன் தீவிரம் அறிந்து கொண்ட நிறுவனம், தம்மால் ஏற்படும் இயற்கை சீர்கேட்டை சரிசெய்ய அல்லது அதன் தீவிரத்தை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் EcoCare திட்டத்தைத் தொடங்கியது. இது இயற்கையோடு ஒன்றிச் செயற்படவிருக்கும் திட்டம் என்பதால் பெட்ரோனாஸ் கெமிக்கல் நிறுவனம் இம்முயற்சியை ‘மலேசிய இயற்கையை நேசிப்போர் சங்கத்தையும் (Malaysian Nature Society ) இணைத்துக் கொண்டது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாகக் கடந்த 2005-ஆம் ஆண்டு, கெர்த்தே நதியைச் சுற்றி இருக்கும் சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு ஆற்றின் ஓரத்தில் இருக்கும் வனமரங்கள், இயற்கை வளங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றையும் பாதுகாக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுச் செயற்முறைக்கும் வந்தன.

இந்தப் பயனுள்ள திட்டத்தில் அவ்வட்டாரத்தில் சுற்றியிருக்கும் சிறுசிறு கம்பங்களான கம்போங் தெலாகா பாபான், கம்போங் தெங்ஙா மற்றும் கம்போங் கெலுகோர் ஆகிய கிராமங்களில் வசித்த கிராமத்து மக்களைச் சந்தித்துப் கலந்துப் பேசி இத்திட்டத்தை இன்னும் வலுப்பெறச் செய்ததுடன் தன்னார்வலர் முறையில் ஒரு குழு அமைத்து வனத்தையும் ஆற்றையும் பாதுகாக்கும் திட்டத்தை வெற்றியடையச் செய்துள்ளனர்.


இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாகச் சுற்றுச்சூழல் கல்வி மையம் (EcoCare Environmental Education Centre) தொடங்கப்பட்டது. தீபகற்ப மலேசியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்வி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தை மாநில சுல்தான் திறந்துவைத்து இதன் முக்கியத்துவத்தைக் குறித்த பார்வையை மக்கள் பக்கம் திரும்பினார். சதுப்பு நிலக் காடுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அதனால் இயற்கை சீற்றத்துட்டன் இருந்து மக்கள் எவ்வாறு பாதுகாக்கப் படுகின்றனர் என்பதையும் இந்தக் கல்வி மையம் பரப்புரைச் செய்யத் தொடங்கியது. 

(தொடரும்)

புதன், 22 ஜூன், 2016

சின்ன சின்னதாக



அலைகளோடு சேர்த்து
கடலை
உன் பேனா புட்டிக்குள்
ஊற்றிவைத்தேன்
மூடியை திறக்கும்போதெல்லாம்
அலைகள்
எழுத்துகளை அழித்து
கரையை தேடிக்கொண்டிருக்கின்றன..

ஜூன் 10, 2016

00
இன்றுதான் மரிப்பதற்கு
சரியான வெள்ளி
வலியில்லாமல்
தற்கொலை செய்துக்கொள்ள
விருப்பமுள்ள யாரும்
என்னோடு வரலாம்
நாம் கடலுக்கடியில்
கல்லறை அமைக்க வேண்டும்...

ஜூன் 10, 2016

00

அவன் விஷம்
மரணம் நான்...

ஜூன் 13, 2016


00

என் சுயம் சுடுபடும்போதெல்லாம்
அவனை தேடி சென்று விடுகிறேன்
இன்று அவனையும் தொலைத்த
என் சுயம் வலிமையானது...

ஜூன் 16 2016

00

முதல் முறை தோற்கும்போதே
மரணித்துவிட வேண்டும்..
தொடர் தோல்விகள்
மரணத்தை தோற்கடிக்க
கற்றுகொடுத்துவிடுகிறது..

ஜூன் 19, 2016

00
என்னைக் கொல்வதற்கு
உனக்கு ஏன் அத்தனை சிரமம்
பெண்ணாய் பிறந்தபோதே
கொன்றிருக்கலாம் என யாரோ கூறியது
அப்போதிலிருந்தே இன்னும்
கேட்டுக்கொண்டே இருக்கிறது
நுரையிலான
அழகிய நீர் குமிழியாக
வருகிறேன்
நீ என்னை உடைக்ககூட வேண்டாம்
நான் உடைபடுவதை பார்த்து
சந்தோஷம் கொள்
ஆசிர்வதிக்கப்பட்டவள்தானே பெண்
மரணம் வென்று வாழ்வது
அவளுக்கு கிடைத்த வரம் தோழனே
நான் நீர்குமிழியாகிறேன்
உன் சூரிய பார்வை
என்னை உடைக்கமுடியாதது ஏன்?

வீர பெண்மணியான நிஷா ஆயுப்… அவள் ஒரு திருநங்கை



நிஷா ஆயுப் என்ற பெயர் மலேசிய மண்ணைப் பொறுத்தவரை புதியது இல்லை. ஆனால் பன்னாட்டு ரீதியில் அந்தப் பெயர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பது மலேசியாவிற்கு மட்டுமல்ல உலகத்தில் வாழும் திருநங்கைகளுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய வாழ் திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் இன்னும் அவர்களுக்காகக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் நிஷா ஆயுப்க்கு அமெரிக்க அரசு, 2016-ஆம் ஆண்டிற்கான வீர மங்கை என்னும் வீர பெண்மணிக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த அவ்விருது வழங்கும் நிகழ்வில் மொத்தம் 14 பெண்கள் வீர பெண்மணி விருதை பெற்றனர். அதில் மலேசியாவைச் சேர்ந்த நிஷாவும் ஒருவர். 37 வயதாகும் நிஷா ஆயுப் ஒரு திருநங்கையாவார். இளவயதில் அவர் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் அவரை ஒரு போராட்டவாதியாக மாற்றியது.
2005
ஆண்டு நிஷாவின் வாழ்வில் அந்தக் கறுப்புநாள் வருமென அவர் நினைக்கவே இல்லை. உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகதான் இயற்பாலினத்திற்கு எதிராக அவர் மாற்று உடை அணிந்து வெளியில் வந்தார். இதனால் கடுமையாக விமர்சிக்கவும் பட்டார். மாற்று உடை அணிந்த காரணத்தினால், நிஷாவை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. அங்குதான் நிஷாவிற்குச் சோதனைக்காலம் தொடங்கியது. உண்மையில் திருநங்கைகளின் உரிமைக்கான குரலை எழுப்பும் இடமாகச் சிறைச்சாலையும் மாறியது கொடுமைதான். பொதுவாகத் திருநங்கைகளுக்காகத் தனியொரு பொதுக் கழிப்பறை இல்லை என்ற குற்றச்சாட்டும் விண்ணப்ப பாரத்தில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு இல்லை என்ற குற்றச்சாட்டு மட்டும்தான் உலகளவில் பெரிய விஷயமாக பேசப்படுகிறது. ஆனால், ஆண்-பெண் புழங்கும் ஒவ்வோரு இடத்திலும் திருநங்கைகளுக்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருந்தாலும் அது உரக்க ஒலிக்காமல் இருப்பது திருநங்கைகளுக்கு ஒரு பின்னடைவுதான் என்று தோன்றுகிறது.
மாற்று உடை அணிந்த குற்றத்திற்காக நீதிமன்றம் நிஷாவுக்கு 3 மாத
சிறைதண்டனை கொடுத்தது. அவரை ஆண்கள் சிறையில் அடைத்தார்கள். நிஷா அங்கிருந்த மற்ற கைதிகளால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். சிறை பாதுகாவலர்களும் அவரை விட்டுவைக்கவில்லை. மிகக் கொடூரமான நாட்களைக் கடந்து வந்தார் நிஷா.
தமது வாழ்கையில் சந்தித்த இந்தக் கசப்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திருநங்கைகளின் உரிமைக்காகப் போராட தொடங்கினார். அதன் தொடக்கமாக அரசு சாரா இயக்கம் ஒன்றை தொடங்கினார். அப்படித் தொடங்கியதுதான் Justice For Sisters (JFS) என்ற அமைப்பு. அந்த அமைப்பின் வழியாகத் திருநங்கைகளுக்காகத் தனது குரலை வெளிப்படுத்தினார். அவர்களின் அடிப்படை உரிமைக்காக இன்றும் போராடிக்கொண்டிருக்கிறார்.
கடந்த மார்ச் 29 ஆம் தேதி, ஜான் கெர்ரியிடமிருந்து வீரமங்கைக்கான விருதை நிஷா பெற்றபோது உலகத் திருநங்கைகளுக்குத் தனியொரு நம்பிக்கை ஏற்பட்டது எனத் தாராளமாகக் கூறலாம். ‘வீர மங்கைவிருது வரலாற்றிலும் ஒரு திருநங்கை அவ்விருதை பெறுவது இதுவே முதல்முறையாகும். விருதை பெற்றுக்கொண்டு பேசிய நிஷா இந்த விருது எனக்கானது மட்டுமல்ல எல்லாத் திருநங்கைகளுக்கானது என்று கூறியதுடன் நாம் (திருநங்கைகள்) அங்கிகரிக்கப்பட்டுவிட்டோம் எனப் பெருமிதமடைந்துள்ளார்.
திருநங்கை ஒருவருக்குக் கிடைக்கும் முதல் விருது என்று கூறப்பட்டாலும் மலேசியாவை பொருத்தவரை இது இரண்டாவது முறையாகக் கிடைக்கும் விருதாகும். இதற்கு முன்பு டத்தோ அம்பிகா ஶ்ரீனிவாசனுக்கு அந்த விருது வழங்கப்பட்டது. அம்பிகா ஶ்ரீனிவாசன் முன்னாள் வழக்கறிஞர் தேசியத் தலைவராக இருந்தவர். மேலும் பெர்சே 2.0 அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2007
ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இந்த விருதை வழங்கிவருகிறது. அமைதிக்காகவும்  சமத்துவத்துக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடும் பெண் போராளிகளை அடையாளம் கண்டு அவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


(நன்றி, பரணி இதழ் ஜூன் 2016 இதழ்)