வெள்ளி, 3 ஜூலை, 2015

யோகியின் நேர்காணல்

யோகியின் நேர்காணல் 
தினக்குரல் நாளேடு, இலங்கை
நேர்கண்டவர் : பத்தனை வே.தினகரன்



மலேசியாவைச் சேர்ந்த யோகி சுறுசுறுப்பான இளம் ஊடகவியலாளர். எந்தச் சூழலோடும் தன்னைப் பொருத்திக்கொண்டு தனது பணியை செவ்வனே செய்துகொண்டு செல்பவர். கலகலப்பும், சுறுசுறுப்பும் இயல்பாக புதியவர்களிடம் பழகும் பாணியும் அவருக்குறியது. ஊடறு பெண்கள் அமைப்பும் மலையகப்பெண்களும் இணைந்து மலையகத்தில் நடத்திய பெண்ணிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வுக்கு ‘மலேசியப் பெண்களின் இன்றைய சவால்கள்’ எனும் தலைப்பில் உரையாற்ற மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்புக்கிடைத்தது. இவர் ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.

கேள்வி: மலேசியாவில் இளம் தமிழ்ச் சமூகத்தினரின் இன்றைய நிலை, நம்பிக்கையளிக்கிறதா? 

யோகி: இந்தக் கேள்விக்கு எப்படிப் பதிலளித்தாலும் அதிலிருந்து வேறு கேள்விகளை உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்குச் சிக்கலான கேள்வியாகவே இதைப் பார்க்கிறேன். மலேசியாவில் இன்று தமிழ்ச் சமூகத்தின் மக்கள் தொகை விழுக்காடு கணிசமாகக் குறைந்திருக்கிறது. தமிழ் மக்களின் பிறப்பு எண்ணிக்கை குறையும் அதே நேரம் மலாய்க்காரர்களின் பிறப்பு எண்ணிக்கை கூடியிருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
தற்போதைய இந்திய இளைய சமூகத்தினர் எப்படி இருக்கின்றனர் என்று ஆராயும்போது மூன்று வகையான சூழல் நிலவுகிறது.

1. கல்வியில் முன்னேற்றம்
2. குண்டர்க் கும்பலில் முதல் நிலை
3. அரசியலில் ஈடுபடுதல்

இந்த மூன்று விடயத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு நகரமுடியாது. காரணம் மூன்றும் ஒவ்வொரு கோணத்தில் ஆராயும்போது, மிகமுக்கியமான அரசியலைப் பேசுபவையாக இருக்கின்றன.
கல்வியைப் பொறுத்தவரையில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கினாலும், அவர்களுக்கான மேற்கல்வி ஒதுக்கீடு மிகச் சொற்பமாகத்தான் ஒதுக்கப்படுகிறது. பூமிபுத்ராக்களுக்கு (மண்ணின் மைந்தர்கள், நேரடியாகச் சொன்னால் மலாய்க்காரர்கள்) 70 சதவிகிதத்திற்கு மேல் மேற்கல்வி இட ஒதுக்கீடும், சீனர்களுக்கு 10 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடும், இந்தியர்களுக்கு 10-க்கும் குறைவான இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் இன்னும் வேதனையான விஷயம் பலவேளைகளில் தாம் விரும்பித் தேந்தெடுத்த துறையில் படிக்க முடியாமல், அங்கு எஞ்சி இருக்கும் துறையை நிர்பந்தத்தில் தேர்ந்தெடுப்பதுதான். மலேசிய மண்ணில் பிறந்த நாங்களும் பூமிபுத்ராக்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். எங்களின் அடையாள அட்டையில் எங்கள் குடியுரிமை மலேசியர் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.   சீனர்களுக்குச் சீனா என்றும் இந்தியர்களுக்கு இந்தியா என்றும் இன குடியேற்றம் குறித்த வரலாற்று பதிவும் அதில் உள்ளது. இதனால், நாட்டில் எங்களுக்குச் சலுகைகளும் பாகுபாடோடுதான் இன்றுவரை வழங்கப்படுகிறது என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

குண்டர்க் கும்பல் என்று பார்க்கும் போது அதிகமாக இந்திய இளைஞர்கள் இருப்பதாகப் புள்ளிவிவரம் காட்டுகிறது. அதோடு நாட்டில் குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபடும் இனமாக இந்திய இளைஞர்களைத்தான் கைகாட்டப்படுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்தப்பட்ட ‘ஓப்ஸ் சந்தாஸ்’ என்ற நடவடிக்கையில் பல குண்டர்க் கும்பல்களை மலேசிய போலீஸ் படை அடையாளம் கண்டு, கைது நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் மிக அதிகமான இந்திய இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் பள்ளி மாணவர்களையும் பெண்களையும் ஒரு கருவியாக இந்தக் குண்டர்க் கும்பல் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. ஒவ்வொரு ஆண்டும், போலீஸ் தற்காப்புக்காகச் சுட்டு வீழ்த்தியது அல்லது தற்காப்புக்காகச் சுட்டதில் ‘இந்திய இளைஞர்கள் மரணம்’ என்ற செய்தி அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. குண்டர்க் கும்பல்களுக்கிடையே ஏற்படும் மோதலில் ஏற்படும் மரணமும் பழி வாங்கும் எண்ணமும் இன்னும் மோசமான அடையாளத்தையே இந்திய இளைஞர்களுக்குக் கொடுத்துள்ளது. இனி வரும் இளைய தலைமுறையினர் இதனால் இன்னும் மோசமான நெருக்கடியைத்தான் சந்திக்கப் போகிறார்கள் என்பது எனது கணிப்பாகும். அதே வேளையில், இந்தச் சூழ்நிலைக்கு யார் காரணம், எதனால், இந்த நிலை ஏற்பட்டது உள்ளிட்ட விவரங்களை ஆராயத் தொடங்கினால், அது அரசாங்கத்தை நோக்கித் திரும்பக்கூடியதாகத்தான் இருக்கிறது.

மலேசிய இந்தியர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள். அவர்களின் உடலுழைப்பை ஒதுக்கிவைத்து மலேசியாவை வடிவமைக்க முடியாது. துன் வீ.தி.சம்பந்தன் காலத்தில் நாட்டுத் தலைவர்களிடத்தில் இன வேறுபாடு என்பது அப்பட்டமாகத் தெரியவில்லை. அதனால்தான், துன் வீ.தி. சம்பந்தனே ஒரு நாள் பிரதமராகவும் இந்த நாட்டில் இருந்திருக்கிறார். ஆனால், இப்போது நிலை வேறு. இந்தியர்களுக்கு அதிகமான கட்சிகளும், அவை அரசாங்க ஆதரவோடு இருந்தாலும், தேர்தலில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களும், நாடாளுமன்றத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சீட்டுகளும் மிகச் சொர்ப்பமானவை. வாக்குகளுக்காகவே இந்திய இளைஞர்களை இந்த நாடு பயன்படுத்திக்கொள்கிறது என்றுதான் எனக்குச் சொல்ல தோன்றுகிறது.

இந்தப் போராட்டத்திற்கிடையில்தான் நடக்கிறது எங்களின் இருப்புகளும், எங்களின் சாதனைகளும்.

கேள்வி: இளம் ஊடகவியளாளராக பால் நிலை சார்ந்த சவால்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

யோகி: மலேசியவில் ஊடக பெண்களுக்கு பால்நிலை சார்ந்த பிரச்னை வருவது கொஞ்சம் அறிதுதான். காரணம் ஊடகவியளாலர்கள் என்றாலே பொதுவாகவே அரசியல்வாதிகள் உட்பட கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. அது அவர்களின் 'இமேஜ்' குறித்த பயம். ஆனால், ஓர் ஊடக பெண்ணாக, செய்திகளை சேகரிக்கும்போது சில சவால்கள் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக மலேசியாவில் தமிழர்கள் சிறுபாண்மையினராக இருந்தாலும், 7 தமிழ்ப்பத்திரிக்கைகள் வருகின்றன. செய்திகளில் கூடுதல் தகவல் தருவதுதான் பத்திரிக்கை சவாலாகும். நான் புகைப்படக் கலைஞராகவும் இருப்பதால் அதிலே அதிக சவால்களை சந்திக்கிறேன்.

20-க்கும் அதிகமான புகைப்படக்கலைஞர்களும், வீடியோ ஒளிப்பதிவாளர்களும் குழுமியிருக்கும் ஒரு நிகழ்வில்,  குட்டையான உடல்வாகு கொண்ட என்னை மிக இலகுவாக பின்னுக்கு தள்ளுவார்கள் போட்டி பத்திரிக்கையாளர்கள். கேமராவிலேயே என் தலையில் ஒன்றை போட்டு தெரியாதமாதிரி கண்ணாமூச்சி ஆட்டமெல்லாம் நடக்கும். ஓர் அமைச்சரின், நிகழ்ச்சியின் போது, பின்னாடியிருந்து ஒரு கை என்னை இழுத்து பின்னுக்கு போட்ட சம்பவம் எல்லாம் நடந்திருக்கு. யார் இழுத்து போட்டது என்றே எனக்கு தெரியாது. இன்று யோகி, அவர்களுக்கே சவால் விடும் ஒரு பெண்ணாக அவள் துறையில் வளர்ந்து நிற்கிறாள்.

கேள்வி: மலேசியாவில் தமிழ் பெண்கள்,  சிந்தனை ரீதியில் எத்தகைய வளர்ச்சியை  அடைந்துள்ளார்கள்?

யோகி:  சிந்தனை ரீதியான வளர்ச்சி என்ற விடயம் மிகப்பெரிய விடயத்தை பேசுவதாகும். சிந்தனை என்பதற்கு எத்தகைய சிந்தனை என்ற கேள்வியும் எழுகிறது. என் வரையில் எம்மினப் பெண்களின் சிந்தனை வளர்ச்சி இன்னும் மரபு சார்ந்துதான் இருக்கிறது.  ஆனால், இளைய பெண்களிடத்தில் அது கொஞ்சம் மாறுப்பட்டிருப்பது காண முடிகிறது. அதற்காக அவர்கள் மரபை பின்பற்றவில்லை என்று  கூறமுடியாது. இது கணினி யுகம். அதற்கு தகுந்த மாதிரி அவர்கள் தங்களை மேம்படுத்த முனைகிறார்கள்.

ஆனால், தங்கள் பொருளாதாரத்திற்காக இன்னும் பூ-மாலை கட்டுதல், பலகாரம் செய்தல், மணி  பின்னுதல், சிகை அலங்காரம் செய்தல் போன்றவற்றையே கற்றுக்கொண்டிருக்காமல்  இந்த காலத்திற்கு ஏற்றமாதிரியான தொழிற்துறைக்கு அவர்களின் சிந்தனை இன்னும் மாறவில்லை என்பது வருத்தம்தான்.   மலேசிய தமிழ்ப்பெண்கள் பண்பாடு, சமய பற்று மிக்கவர்களாக தங்களை அடையாளப்படுத்தவே விரும்பும்கிறார்கள்.  பட்டப்படிப்பு படிக்கும் மக்களில் பெண்களே அதிகம். ஆயினும் கல்விக்கு வெளியில் அவர்களின் ஆற்றல் வெளிப்படுவது அபூர்வமாகத்தான் இருக்கிறது. அவர்களின் வளர்ச்சி என்பது பொருளாதார சந்தையையும்,  முதலாளியத்தின் தேவையையும் சார்ந்து உள்ளது. உதாரணமாக இன்று மின்னூடக வளர்ச்சியை எல்லா பெண்களும் அறிந்திருந்தாலும் அதை கொண்டு சிந்தனை மாற்றத்திற்கு நகர விரும்புவதில்லை. பொழுது போக்கு கருவியாகவே அது உள்ளது. இலக்கிய ரீதியிலும் சிந்தனை  மாற்றம்  தேங்கி நிற்ப்பது ஒரு படைப்பாளியாக,  எனக்கு வருத்தம் இருக்கிறதுதான்.

கேள்வி: மலேசிய பெருந்தோட்டத் தொழிலாளரின் நிலை பற்றி சொல்லுங்கள்?

யோகி: மலேசிய தோட்டத் தொழிலாளர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு காலத்தில் தமிழர்கள்தான் அங்கு அதிகமாகக் கூலித் தொழிலாளர்களாக இருந்தார்கள். அதற்கு ஏறக்குறைய 200 வருட வரலாறு உண்டு. இன்று தோட்ட பாரம்பரியம் வீழ்ந்ததற்கு இரு காரணங்கள் முக்கியமானதாக இருக்கின்றன. முதலாவதாக தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் பட்டணத்து மோகத்தாலும், கலிவி வளர்ச்சியினாலும் இரண்டாவது தலைமுறையினர் அதிகமாகத் தோட்டத்தில் வேலைச் செய்ய விருப்பவில்லை. இதன் காரணத்தினால் அவர்கள் தோட்டத்தைவிட்டு வெளியேறினர்.

இரண்டாவதாக, நாட்டின் முன்னேற்றத்துக்காக அழிக்கப்பட்ட தோட்டங்களில் பல தொழிலாளர்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்தனர். உதாரணமாக மூன்றிற்கும் அதிகமான தோட்டங்களை அழித்துதான் புத்ராஜெயா எனும் மாபெரும் நகரம் உருவானது. அந்தத் தோட்டங்களில் வேலை செய்தது அதிகமான தமிழர்கள்தான்.

இப்படித்தான் மலேசியத் தமிழர்களின் தோட்ட வாழ்க்கை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இன்னும் சில தோட்டங்களில் தமிழர்கள் வாழத்தான் செய்கிறார்கள். அவர்களின் வருமானம் குறித்துப் பெரிதாகச் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. எல்லாருக்கும் மாதம், குறைந்த சம்பளமாக 900 வெள்ளியையே சமிபத்தில்தான் போராடிப் பெற்றுள்ளனர்.

கேள்வி: தொழில் தேடி மலேசியா செல்ல இருப்போர்க்கு, மலேசியா சொர்க்கபுரியாகக் காட்டப்படுகிறது. உண்மையில் மலேசியா தொழில் தேடிச்செல்வோருக்கு ஒரு சொர்க்கபுரிதானா?

யோகி: மலேசியா சொர்க்கபுரி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை. அதன் காரணத்தினால்தான் நேப்பாளம், மியான்மார், ஆப்பிரிக்கா, இந்தோனேசிய, இலங்கை உள்ளிட்ட ஏழை நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் வேலைக்கு வருகிறார்கள். ஆனால்,

- அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலைதான் கிடைக்கிறதா?
- வேலைக்கு ஏற்ற ஊதியம் பெறுகிறார்களா?
- எம்மாதிரியான சலுகைகள் வழங்கப்படுகின்றன?
- மலேசியத் தொழிலாளர்களிடமிருந்து அவர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள்?

என்பன  கேள்விகளை முன்வைக்கும் போது கிடைக்கும் பதில்கள் மிகவும் ஏமாற்றமானவை. சில நிறுவனத்தில் மலேசியர்கள் 8 மணிநேரம் வேலை செய்து கூலியை பெறும்போது, கூலி வேலைக்கு வரும் சில அந்நிய நாட்டவர்கள் 12 மணிநேரம் வரையிலும் வேலை செய்து அந்த ஊதியத்தைப் பெறுகிறார்கள். இதை நானே சொல்வதைக் காட்டிலும், அங்கு வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் பேசுவதுதான் சரியாக இருக்கும்.

கேள்வி: மலேசிய தமிழ்ப் படைப்புகள் பற்றிக் கூறுங்கள். இவைப்பற்றித் தமிழ்ச்சூழலில் பெரிதாகப் பேசப்படுவதில்லையே… 

யோகி: அண்மையில் மலேசியாவிற்கு வந்த புகழ்பெற்ற தமிழ் நாட்டு எழுத்தாளர்களை நான் நேர்காணல் செய்யும்போது, அவர்களிடம் முன்வைத்த கேள்விகளில் ஒன்று மலேசிய தமிழ் இலக்கியம் குறித்தக் கேள்வியாகும்.
- மலேசியாவில் தமிழ் இலக்கியமே வளரவில்லை,
- சினிமாவையும் ஆன்மிகத்தையும் வளர்த்த அளவுக்கு இலக்கியத்தை வளர்க்கவில்லை.
- மலேசிய தமிழ் இலக்கியம் 50 ஆண்டுகள் பின்நோக்கி இருக்கிறது.

 இப்படியான பதில்கள்தான் அவர்களிடத்திலிருந்து வந்தது. ஆனால், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவை நேர்காணல் செய்யும்போது அவர் இவ்வாறு பதில் கொடுத்தார்.

“மலேசியாவிற்கு வந்த நம் மூத்தோர்கள் இலக்கியம் வளர்ப்பதற்காக இங்கு வரவில்லை. அவர்கள் வேலைச் செய்வதற்காக வந்தார்கள். அதுவும் சஞ்சிக்கூலிகளாக வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் அனைவரும் பெரும் செல்வந்தர்களோ அல்லது கல்விமான்களோ அல்ல. அவர்கள் இங்கிருந்த மற்ற சமூகத்தினரோடு போராடி வாழ்ந்திருக்கிறார்கள். தங்களை முன்னிருத்திக்கொள்ளவும் தனக்கான உரிமைக்காகவும் கல்விக்காகவும் போராடி இருக்கிறார்கள். தங்களுக்கான அடையாளத்தையும் தக்க வைத்துக்கொள்ளப் பல ஆண்டுகள் போராடியிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் தாண்டி மலேசியாவில் இலக்கியம் என்ற ஒன்று மழுங்கடிக்கப்படாமல் மலேசிய இந்தியர்கள் இலக்கியம் படைப்பதே ஒரு சாதனையாகும்.” 

நான் அவரின் பதிலோடு ஒத்துப்போகிறேன். அதே வேளையில் தற்போது சூழல் மாறிவருகிறது. சிறந்த வெளிநாட்டு இலக்கியத்திற்காகக் கொடுக்கப்படும் கரிகாலன் சோழன் விருது, சமீபகாலமாக மலேசிய இலக்கியம் பெற்றுவருவது எங்களின் இலக்கிய முன்னேற்றத்தைதான் காட்டுகிறது என நான் நம்புகிறேன். அதோடு குறிப்பிட்ட சில மலேசிய எழுத்தாளர்களின் எழுத்துகளை வெளிநாட்டுச் சிற்றிதழ்கள் கேட்டுப் பெற்றுப் பிரசுரிக்கும் அளவுக்குத் சூழல் மாறியுள்ளது.

மலேசிய இலக்கியம் பேசும்படி இல்லை என்கிற குற்றச்சாட்டு ஒரு புறம் இருந்தாலும் மலேசிய தமிழர்கள் இலக்கியம் தொடர்பான நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் என்றுமே கைவிட்டதில்லை. ஆனால் மற்றவர்களை முந்தியிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். உதாரணமாக மலேசியாவில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒரு வரலாற்று பதிவாகும். அதேபோல், இங்கு இயங்கி வரும் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் நடத்தும் இலக்கியப் போட்டிக்கு 10 ஆயிரம் டாலர் பரிசை உலக தமிழ் இலக்கியத்துக்கு கொடுப்பது குறிப்பிடத்தக்கது.   இனி, மலேசிய தமிழ் இலக்கியம் பேசப்படுவதில்லையே என்ற கேள்வியைக் கொஞ்சம் மாற்றியமைக்கலாம்.

கேள்வி: இலங்கை பயணம் பற்றி இணையத்திலும் உங்கள் வலைப்பூவிலும் நிறைய எழுதுகிறீர்கள். அதைப்பற்றி எம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

யோகி: இலங்கைப் பயணம் குறித்து ஊடறு இணைய தளத்தின் நிறுவனர் றஞ்சி தொடர்புக்கொண்டு, இலங்கையில்  நடைபெறவிருக்கும் பெண்கள் சந்திப்பில் பங்கு பெறமுடியுமா என்ற செய்தி  என் முகநூலின் உள்பெட்டியில் கேட்டார். எனக்கு அச்செய்தி அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், என்னால் வருவதற்கு சாத்தியம் குறைவு என்று கூறிவிட்டேன். அதற்குச் சில காரணங்களும் உண்டு.

என்னதான் இலங்கையில் போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் அது மகிழ்ச்சியானதாக அமையவில்லை என்பது பொதுவான கருத்தாகும். அதே மகிழ்ச்சியின்மை மலேசியத் தமிழர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்குப் போவதும், அங்கிருக்கும் சுற்றுலாத் தளத்திற்கு ஆதரவு அளிப்பதும், பொருட்களை வாங்கி அந்நாட்டு பொருளாதாரத்திற்கு வளம் சேர்ப்பதும், கூடாத விஷயமாக பலர் கூறுவதையும் இங்கு நான் பார்க்கிறேன். போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தாலும்  இன்னும் ஒரு பதற்றமான சூழல் அங்கு நிலவுவதால் நான் இலங்கை போவதை என் துணைவரும், என் குடும்பத்தாரும் விரும்பவே இல்லை. ஆனால், ஊடறுவிடமிருந்து “நீங்கள் வருவதற்கு முயற்சி செய்யுங்கள், நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கை வார்த்தையில்  கிளம்புவதற்கு முடிவு செய்தேன்.

உண்மையில்,  மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்கள் சந்திப்பு எனக்கு புதிய புரிதல்களை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அதோடு, மலையக மக்களோடு பழகிய அனுபவமும், யாழ்ப்பாண பயண அனுபவமும்  எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான், 20 தொடர்களுக்கும் மேலான அனுபவ பதிவை எழுதுவதற்கு உந்துதலாக அமைந்தது. எனது தொடர்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்திருப்பதுடன் இலங்கை மக்களிடத்தில் நல்ல அறிமுகத்தையும் எனக்கு பெற்றுத்தந்துள்ளது.
ஊடறு இணையத் தளம் இந்த வாய்ப்பை எனக்கு மறுத்திருந்தாலோ அல்லது நான் நிராகரித்திருந்தாலோ, எனக்குதான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது நான் நாடு திரும்பும்போது உணர்ந்தேன்.
 நன்றி.
http://epaper.thinakkural.lk/thinakkural/

(இந்த நேர்காணல் கடந்த ஜூன் 28-ஆம் தேதி (28.6.2015) இலங்கையின் தினசரி பத்திரிக்கையான தினக்குரலில் இடம்பெற்றதாகும் )

இந்த நேர்காணலை http://www.meedchiuk.com/gnayiru-malar/naerkaanalkal/10271-2016-07-31-19-14-12,
http://dantamil.blogspot.my/2015/07/blog-post_5.html , http://www.oodaru.com/?p=9040 ஆகிய                  இணையத்தளங்கள் பகிர்ந்திருந்தன. நன்றி

.







1 கருத்து: