செவ்வாய், 9 ஜூன், 2015

மௌனம் உறைந்த தேசம் 22

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 21

இப்படியான அனுபவங்களோடு நாங்கள் கொழும்பு வந்து சேர்ந்தோம். நீண்டப் பயணம். நாங்கள் ரொம்பவும் களைத்துப் போயிருந்தோம். விடிந்தால் கொழும்பில் கொஞ்சம் நினைவுப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் எனத் திட்டமிருந்தது.

எனக்கு உறக்கம் கொள்ளவில்லை. சுமார் 6 நாட்கள் தோழிகளுடனான நட்பு, சந்திப்புகள், பயணங்கள், அனுபவங்கள் என எல்லாம் ஒரு காட்சிபோல் ஒன்றன்பின் ஒன்றாக ஓடத்தொடங்கியது. அப்படியே உறங்கியும் போனேன்.
இலங்கைப் பயணத்தில் 7-வது நாளாக விடிந்திருக்கும் எனது காலை, எவ்வித அந்நிய உணர்வையும் கொடுக்கவில்லை எனக்கு. பயணத்தின் முதல் நாள், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அத்தனை குழப்பத்தோடு வந்திறங்கினேன். எனக்குத் தெரியாத முகங்களையும், அவர்களின் மொழியையும், பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையையும் எப்படி நான் எதிர்கொள்ளப் போகிறேன் என்ற குழப்பம் அது. ஆனால், இன்று என்னைச் சுற்றிலும் இருக்கும் இலங்கைத் தமிழர்களும், அம்மண்ணும் அந்நியம் என நினைக்க முடியவில்லை.

நாங்கள் திட்டமிட்டதுபோலவே பொருள்களை வாங்கக் கொழும்புப் பட்டணத்திற்குப் போனோம். மலேசியாவில் பெருநகரங்களில் இருக்கும் ‘Black Market’ மாதிரியான வணிகச் சந்தை நடக்கும் இடத்திற்கு றஞ்சி அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் இதுபோல ஒரு Market இருக்கும்தான் போலிருக்கிறது. மலேசியா உட்படத் தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளிலுள்ள இதுபோன்ற Market-களுக்குப் போயிருக்கிறேன். பேரம் பேசுதல் கலாச்சாரம் மட்டும் எல்லா நாடுகளிலும் ஒரே வர்ணத்தைக் கொண்டிருக்கிறது.

பேச்சுத் திறமையுள்ள மற்றும் பொருள்களின் தரம் பிரித்துப் பார்க்கத்தெரிந்த நபர்களுக்கு இதுபோன்ற சந்தைகள் லாபகரமாக அமைகிறது. எங்களுக்கு வழக்கம்போல்தான். நாங்கள் அரைச் சதம் நேரம், பேரம் பேசி, விலைக் குறைத்து, மலிவு என்று டசன் கணக்கில் வாங்கிய பொருள், புன்னகை மாறுவதற்குள் வேறொரு இடத்தில் இன்னும் மலிவாக விற்பனைக்கு இருந்தது. நான் றஞ்சியைப் பார்க்க றஞ்சி என்னைப்பார்க்க வியாபாரி எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார்.

இலங்கை வியாபாரிகள் சிங்களவர்களாக இருந்தாலும் அவர்களுக்குத் தமிழ் தெரிகிறது. ஓரளவுக்குக் கதைக்கவும் செய்கிறார்கள். அதுபோலத் தமிழ் வியாபாரிகளுக்கும் சிங்களம் தெரிகிறது. இது ஒரு வியாபார யுத்திதான் என்றாலும், யார் சிங்களவர் என்று பேதம் பார்க்கச் சற்றுச் சிரமமாகவே இருந்தது.

நாங்கள் இலங்கை வந்ததிலிருந்து தமிழ் உணவு வகைகளைதான் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். சிங்கள உணவு எப்படிதான் இருக்கும் என்ற எண்ணம் வரவே ஒரு சிங்கள உணவுக் கடைக்குப் போனோம். பெரிய வேறுபாடு இல்லை. பருப்பு, பலாக்காய்ப் பிரட்டல், காரம் எனத் தமிழ் உணவுக்கு மிக அருகில்தான் அதன் சுவை இருந்தது.
அன்றைய இரவு, புதிய மாதவிக்கு விமானம் என்ற படியால் நேரத்தோடு திரும்பலாம் என்று முடிவெடுத்த வேளையில் தோழர் முஸ்டின் - ஷாமிளாத் தம்பதியிடமிருந்து இரவு விருந்துக்கு அழைப்பு வந்தது. அவர்கள் கொழும்பில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தனர். அங்கே இரவு செல்லலாம் என றஞ்சிச் சொன்னார்.

றஞ்சியின் மாமாதான் எங்களைத் தோழர் முஸ்டின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் அழைத்துச் சென்ற அந்த மாலை நேரம், மஞ்சள் பூசிக் குளித்தமாதிரி நிறம் மாறியிருந்தது கடற்கரையை ஒட்டிய சாலையில் எங்களின் வாகனம் போய்க்கொண்டிருந்தது. சூரியன் வீரியமிழந்து சிவந்திருந்தது. ஆனால், அதனிடமிருந்து வெளிபட்ட மிச்ச ஒளிக் கடல்நீரில் பட்டுத் தெரித்துக்கொண்டிருந்தது. அங்கே ரயில் போக்குவரத்தும் இருந்தது. அந்த அழகை எப்படி வர்ணிக்க? மனம் இயற்கையோடு காதலில் விழுந்த நேரம். மாமா சொன்னார், இந்தக் கடற்கரையின் ஒரு பகுதியைத்தான் சீனா வாங்கி, நகரம் எழுப்பிக்கொண்டிருந்தது என்று.

அப்போதுதான் செய்தியில் எப்பவோ படித்த ஞாபகம் மெல்ல நினைவுக்கு வந்தது. கடலையே கூறுபோட்டு விற்க முடியுமா என மனதில் பேசியது என்னையும் அறியாமல் வெளியில் கேட்டுவிட்டது. மாமா சொன்னார், என்ன முடியுமா? அதோ பார் என அவர்கள் போட்டு வைத்திருக்கும் அஸ்திவாரத்தை மாமா காட்டினார். இலங்கைக்கும் ராமேஸ்வரத்துக்கும் வானரங்கள் போட்டதாகச் சொல்லப்படும் பாலம் மாதிரி இல்லை. இது கடலுக்கடியில் மண்ணையும் கல்லையும் பாறைகளையும் போட்டு அஸ்திவாரத்தையும், அந்தக் கனவுக் கட்டிடத்தையும் அசைக்க முடியாதவாறு சீனாப் போட்டுவைத்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தற்போது இருக்கும் புதிய அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சீனா, அமைக்கத் திட்டமிட்ட இந்தச் செயற்கைத் தீவு, ‘கொழும்பு போர்ட் சிட்டி'  எனும் பெயரில் பலகோடி ரூபாச் செலவில் போடப்பட்ட மாபெரும் திட்டமாகும். சீனாக்காரனை எப்படிதான் இந்தச் சிங்கள அரசு கண்மூடித்தனமாக நம்புகிறது? இது அறியாமையா அல்லது முட்டாள் தனமா? இந்த அரசியலுக்குள் நுழையாமலும் அதற்கு மேலும் இயற்கையை ரசிக்க முடியாமலும் தோழர் முஸ்டின் வீட்டை அடைந்தோம்.

தோழர் முஸ்டின் – தோழி ஷாமிளா ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீவிரத் தமிழ் இஸ்லாமியப் பாரம்பரியப் பின்னணியைக் கொண்டவர்கள். அதனாலேயே அவர்களால் மனிதர்களோடும் மனிதத்தோடும் இணைந்துச் செயல்படவும் செயலாற்றவும் முடிகிறது. தமிழ் மற்றும் ஹூடூட் சட்டத்தைப் பின்பற்றும் சில இஸ்லாமியப் பிரிவினர் பெண்களின் சுதந்திரத்தையும், அவர்களின் திறமைகளையும் அவர்கள் அணியும் ஃபர்தாவில் மறைத்து வைக்க நினைக்கின்றனர். ஆனால், தோழர் முஸ்டினின் புரிந்துணர்வு, தோழி ஷாமிளாவை மென்மேலும் பரந்த பார்வைக்கு இட்டுச் செல்கிறது. எனது இந்தக் கூற்றுக்கு ஷாமிளாவின் கவிதைகளும் பெண்கள் சந்திப்பில் அவர் படைத்த கட்டுரையும் போதுமானது எனத் தோற்றுகிறது.

அன்றைய இரவு சுவையான விருந்தைத் தோழர் முஸ்டின் – தோழி ஷாமிளாவும் ஏற்பாடுச் செய்திருந்தனர். இருவரும் சேர்ந்தே சமைத்திருந்தனர் என்பது கூடுதல் தகவல். அதன் பிறகு, முஸ்டின் புதிய மாதவியை ஏர்போர்ட்டிற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் அடுக்கு மாடியின் மொட்டை மாடியில் அரட்டை மாநாடுப் போட்டோம். குறிப்பாக இந்தப் பயணம் என்ன நன்மையைச் செய்தது என்ற கேள்வியை முன்வைத்து எங்களின் அரட்டைப் போய்க்கொண்டிருந்தது. வானத்தில் பிறை மெல்லிய ஒளியோடு எங்களின் அரட்டையைக் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த மொட்டை மாடியிலிருந்து முழுக் கொழும்பு நகரத்தையும் பார்க்கலாம் போல இருந்தது.
அது அழகான அமைதியான இரவு. அதோடு,இலங்கை மண்ணின் எனது கடைசி இரவு. இதற்குப் பிறகு நான் இலங்கைக்கு வரலாம் அல்லது வராமலே போகலாம். ஆனால், இந்த இரவு எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது. நான் வரும்போது என் பயணப் பெட்டியையும் அசட்டு நம்பிக்கையையும் தவிர வேறெதையும் கொண்டு வரவில்லை. இப்போது, நான் நிறையச் சம்பாதித்துவிட்டேன். தோழிகளின் அன்பைச் சம்பாதித்தேன். பல நல்ல உள்ளங்களைச் சம்பாதித்தேன். எனக்கான இருப்பைச் சம்பாதித்தேன். இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். என்னை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆச்சரியம் நிம்மதியான நித்திரையைக் கொடுத்தது. நித்திரை என்னைப் புத்துணர்ச்சியாகக் காலையில் விழிக்கவும் செய்தது.
எனது மலேசியாப் போகிறேன்…

இதோ எனது எட்டாவது நாள். விடிந்துவிட்டது. நான் கொழும்பு அனைத்துலக விமான நிலையத்திற்குக் கிளம்பியும் விட்டேன். என்னுடன் விஜயா அம்மாவும் கிளம்பினார். எனக்கும் அவருக்கும் விமானத்திற்கு இரண்டு மணிநேர வித்தியாசம்தான். நாங்கள் ஒன்றாகவே கிளம்பினோம். றஞ்சி உடன் வந்தார். ரஜனி ஒரு விஷயமாக வெளியில் போயிருந்தார். மாமாதான் எங்களை ஏர்போட்டுக்கு அழைத்துப் போனார். மலேசியாக் கிளம்பிவிட்டால் வீடே அமைதியாகிவிடுமே என்று மாமா கூறினார். நான் சிரித்தேன்.
ஏர்போர்ட்டில் போர்டரைக் கடக்கும் வரையில் எனது மனநிலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் வாழ்ந்த அந்தக் கணத்தை எந்த வார்த்தைகளாலும் பேசிட முடியாது. விஜயா(அம்மா)வும் றஞ்சி(மா)யும், நானும் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையைதான் சொல்லிக்கொண்டோம். “போயிட்டு வருகிறேன்”, “பார்த்துப் போயிட்டு வா”.. ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த வார்த்தைகள் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டதாக ஒலித்துக்கொண்டிருந்தன. இந்தப் பிரிவில் கலந்த எங்களின் அன்பின் ஈரம் இன்னும் காயாமலே இருக்கிறது. இதோ தொட்டுப் பார்க்கிறேன். என்விரல் நனைந்திருப்பதை நிரூபிக்க எனக்கு ஆட்கள் தேவையில்லை.
நன்றி
(முற்றும்)

1 கருத்து:

  1. ஒரு சின்னத் திருத்தம்
    கடலைத் தீவாக்கிக் கட்டும் நகரத்துக்குப் பெயர் - கொழும்பு போர்ட் சிட்டி
    லோட்டஸ்ட் டவர் என்பது தென்னாசியாவில் மிக உயர்ந்த கோபுரம்.
    இரண்டும் சீனாவின் முதலீடுதான்.
    லோட்டஸ்ட் டவரை இந்தியா தடுக்க எடுத்த அனைத்து முயற்சிகளையும் தாண்டி இப்போது முடியும் தறுவாயில் இருக்கின்றது.
    -முஸ்டீன்-

    பதிலளிநீக்கு